ஒரு கலைஞன் தன் சமூகத்தை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறான் என்பது முக்கியமானது. அதுவும் யாராக இருந்து தன் சமூகத்தைப் பார்க்கிறான் என்பதும் சமூகத்தில் எந்தத் தரப்போடு தன்னை இணைத்துக்கொள்கிறான் என்பது அவசியமானது. ‘ஜகாட்’ மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் ‘லும்பன்’ குழுவின் மீது தன் கவனத்தை வைக்கிறது.
கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியச் சொல்லான Lumpenproletariat என்பதை அறிமுகப்படுத்துகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட உழைப்புடன் தொடர்பற்ற, வர்க்க உணர்வை நோக்கி நகராத உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளை ஆரம்பத்தில் அவர் அவ்வாறு அழைத்தார். ரௌடிகளும் அதில் அடக்கம்தான். இந்த ரௌடி கலாச்சாரத்தையே ‘ஜகாட்’ முன்வைத்துப்பேசுவதால் இதை முதல் மலேசிய லும்பன் திரைப்படம் எனலாம். அதாவது ஒரு திரைப்படத்தில் ரௌடிகள் வந்துபோவதும் ரௌடிகள் உருவாவதன் அரசியலைப் பேசுவதையும் இங்கு வித்தியாசம் காணவேண்டியுள்ளது.
இவ்வாறு ரௌடிகள் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாறுதல்களையும் அது பணம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாறும்போது தங்களுக்காக வகுக்கப்பட்ட ‘நெறி’களை எவ்வாறு மீறி அழிவுச்சக்தியாக உருமாற்றம் கொள்கிறது என்பதையும் ‘ஜகாட்’ மலேசியச்சூழலில் முதன் முதலாகப் பேசுகிறது.
பொதுவாக இலக்கியத்திலும் திரைப்படத்திலும் அவசியமில்லாத அல்லது தனித்துவம் இல்லாத கதாபாத்திரங்கள் வந்துப்போவதுண்டு. சஞ்சை இப்படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் மிக நுட்பமாக உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்குச் சிங்கை இளங்கோவன் நடிப்புப் பயிற்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது. மூர்க்கமான இளைஞன், உல்லாசத்தை மட்டுமே எதிர்ப்பார்க்கும் அவன் தோழன், தன் அடையாளத்தை தேடிக்கொண்டிருக்கும் சிறுவன் என பாத்திர வார்ப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அச்சு அசலாக 90களில் தொழிற்சாலையில் அமுக்கப்படுவதால் வீடுகளில் முழு அதிகார உணர்வுடன் உலாவும் அப்பாவையும் தன் அடையாளம் எங்குமே தெரியக்கூடாது என இருளுள் மறைந்துள்ள அம்மாவும் நிஜ வாழ்வில் பார்ப்பது போலவே வந்துபோகிறார்கள்.
சஞ்சை அந்தக் கதாப்பாத்திரங்களில் தலையிடவில்லை. அவர் நோக்கம் அதனுள் நுழைந்து பிரச்சாரம் செய்வதல்ல. ஆனால், மொத்தத் திரைக்கதையுமே மையமாக விமர்சனம் செய்வது வேறொரு தளத்தை.
அது நாளை…
நல்லது. நவீன், லும்பன் குறித்து இன்னும் எழுத வேண்டும். ஜகாட் மலேசியாவின் முதல் லும்பன் படமென்றால் அதனை புரிந்துக் கொள்ள லும்பன் குறித்து அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
உங்களின் இத்தொடர் மேலும் பலவாறு திறப்புகளை ஏற்படுத்தட்டும்…
புதிய பார்வை – இது நமக்குத் தேவை!