மலேசியத் தமிழ்த்திரைப்படங்கள் குறித்த எதிர்மறையான பார்வைகளே பெரும்பாலும் வருவதுண்டு. ஏதோ மலேசியக் கலைஞர்களுக்கு ஆதரவு தருகிறோம் என்ற ரீதியில் பேசும் ரசிகர்களைப் பார்க்கும்போது எரிச்சலாக வரும். கலைஞர்களும் ‘உள்ளூர் கலைஞர்களுக்கு ஆதரவு தாங்க… ஆதரவு தாங்க…’ என நேர்க்காணலில் கெஞ்சுவதைப் பார்க்கையில் இவ்வளவுதானா இந்தப்படைப்பாளியின் தரம் என வருத்தமாகவே இருக்கும். இதே நிலையைதான் நான் இலக்கிச்சூழலிலும் ஒப்பிட்டுப்பார்க்கிறேன். இவ்விடயத்தை இரண்டு விதமாக அணுக வேண்டியுள்ளது.
இயக்கம் அல்லது அமைப்பு ரீதியான முன்னெடுப்பு – மலேசியாவில் இயங்கும் அமைப்புகள் மலேசியாவில் வெளியிடப்படும் படைப்புகளையே முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். மலேசிய அரசிடம் பணம் பெறும் இயக்கங்கள் அனைத்துமே மலேசிய கலை இலக்கியம் வளரவே தத்தம் பணிகளைச் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். அது எத்தனை எளிய முயற்சியாக இருந்தாலும் வளர்ச்சி என்ற பயணத்தில் அவை அத்தனையும் கடந்து செல்ல வேண்டிய படிநிலைகள்தான். அதேவேளையில் தனிமனித ரசனைகளை மாற்ற முயல்வதும் அவர்கள் மத்தியில் மலேசியப் படைப்புகளை முன்னெடுக்கும் பணியையும் செய்யவேண்டியது இயக்கங்களின் பணிதான்.
படைப்பாளிகளின் முன்னெடுப்பு – இதே பணியை ஒரு மலேசியப்படைப்பாளி தன் படைப்பு மலேசியாவில் உருவாக்கப்பட்டதாலேயே சக ரசிகன் பார்க்க வேண்டும் என்பதும் அப்படி பார்க்காவிட்டால் அவன் மலேசியக் கலை உலகின் துரோகி போல சித்தரிப்பது அபத்தம். படைப்பாளி தன் படைப்பின் மூலமாகவே தன்னை அடையாளப்படுத்த வேண்டுமே தவிர தேசம், இனம், மொழி, ஜாதியால் அல்ல. படைப்பை ஒட்டி நிகழும் வணிகம் குறித்து எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ரசிகன் மேல் சமூக சேவை என்ற சுமையைத் திணித்து அதை வணிகமாக மாற்ற நினைப்பது ஏற்புடையதல்ல.
ஜகாட்
இவ்வாரான சூழலில்தான் ஜகாட் போன்ற திரைப்படங்களை முன்னெடுக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. ஒருவகையில் இப்படம் மலேசியத் திரைப்படச்சூழலில் புதிய தொடக்கமாகவே என்னால் பார்க்க முடிகிறது. இதுவரைக்குமான மலேசியத்திரைப்பட முயற்சிகளை மூன்றாகப் பிரித்துப்பார்க்கிறேன்.
முதலாவது: ஆபத்தான அரசியலைப் பேசும் படங்கள். சமூகத்தின் பொதுபுத்தியில் உள்ளவற்றை இன்னும் பிரமாண்டமாக்கி உருவாகும் திரைப்படங்கள். சுகன் பஞ்சாசரம் போன்றவர்கள் இந்தப்பணியைத்தான் அதிக காலமாகச் செய்து வருகின்றனர். அதிகாரம் சொல்லும் ஒன்றை இவர்கள் வேறொரு வடிவத்தில் தருகின்றனர். அதேபோல கானா. திருநங்கைகளையும் வினோதமான உடல் அமைப்பைக் கொண்டவர்களையும் நகைச்சுவை பொருளாக்குவார்.
இரண்டாவது: ஜனரஞ்சகமான திரைப்படங்கள். பொதுவாக நான் இதுபோன்ற படங்களை ரசிப்பவன்தான். இப்போதுவரை ‘அன்பே வா, கரகாட்டக்காரன்’ போன்ற திரைப்படங்களை ரசிப்பதுண்டு. இவை ஆபத்தானவை அல்ல. ரசிகனை மகிழ்விக்கும் நோக்கில் உருவாக்கப்படுபவை. அந்த வகையில் பிரகாஷின் திரைப்படமான ‘வெண்ணிர இரவுகள்’ , சி குமரேசனின் ‘மைந்தன்’போன்றவற்றை அவ்வகையில் மலேசியாவில் முக்கியமான முயற்சி என்பேன்.
மூன்றாவது: எல்லா சமூகத்திலும் உள்ள பொதுவான சிக்கல்களை திரைப்படமாக்குவது. ‘ஸ்விட் ட்ரீம்ஸ்’, ‘மறவன்’ போன்ற திரைப்படங்களை இதில் சேர்க்கலாம். இதுபோன்ற திரைப்படங்கள் முன்வைக்கும் சமூக சிக்கல்கள் மேலோட்டமானவை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுபவை.
இந்த மூன்று நிலைகளில் இருந்தும் ஜகாட் முழு முற்றாக வேறு படுகிறது. அது மலேசியத்தமிழ் திரைப்படங்களின் புதிய தொடக்கம்.
17.12.2015 மலேசியா முழுவதும் திரையீடு காணப்போகும் ஜகாட் திரைப்படம் குறித்த பார்வை…
நாளை தொடரும்