(அண்மையில் பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் உள்ளத் தமிழ்ப்பள்ளிகள் மத்தியில் கவிதை தொடர்பான ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். கவிதை குறித்து பேச என்னை அழைத்திருந்தனர். அங்கு நான் பேசிய உரை இது. கொஞ்சம் செரிவு செய்து பதிவிடுகிறேன்.)
நண்பர்களே,
நவீன கவிதை குறித்து பேசுவதற்கு முன்பாக நான் உங்களிடம் இருக்கும் சில முன்முடிவுகளை களைத்துப்போட விரும்புகிறேன். அதன் மூலமே நீங்கள் என்னையும் கவிதை குறித்த என் கருத்துகளையும் எதிர்க்கொள்ள தயாராக முடியும் என நம்புகிறேன். காரணம் நாம் அனைவருமே நமது கடந்த காலங்களில் ‘கவிதை’ எனும் கலை வடிவம் குறித்து ஏதோ ஒரு வகையில் அறிந்து வைத்திருப்போம். நமது கல்லூரி காலங்களில் கவிதை நமக்கு அறிமுகமானவிதம் மிக அபத்தமானது.
கவிதை குறித்து நமக்கு போதிப்பவர்கள் பாரதியாரில் தொடங்குவார்கள். பாரதியின் வசன கவிதை முயற்சியை தமிழில் புதுக்கவிதை இயக்கத்திற்கான விதை என இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு பாரதிதாசன் . திராவிட அரசியலின் கவிக்குரல் அவரது. அதன் பிறகு கண்ணதாசனுக்கு வருவார்கள் நமது விரிவுரையாளர்கள். கண்ணதாசனின் கவிதைகள் குறித்து அக்கறை இல்லாமல் அவரது பாடல்களை கவிதையென நமக்கு போதிப்பார்கள். அடுத்ததாக வைரமுத்துவை இன்றைய கவிதை உலகில் முக்கியமானவர் என நிறுவுவார்கள். ஆனால் 1958 ம் ஆண்டு சி. சு. செல்லப்பா தொடக்கிவைத்த ‘எழுத்து’ எனும் சிற்றிதழிலிருந்து உருவான நவீன கவிதைக்கான போக்கு குறித்தும் அதன் பின் தீவிரமாகத் தொடங்கிய இலக்கியப் போக்கு குறித்தும் நமக்கு அறிமுகமாகியிருக்காது.
விளைவாக, வானொலிகளில் இனிய இசையுடன் எளிதாக கேட்கமுடிகிற பாடல்களின் வரிகளை உடைத்துப்பார்த்து, அந்த வரிகளில் இருக்கின்ற எதுகை மோனையில் கிரங்கி, அதில் புதைந்துள்ள உவமையை எண்ணி வியந்து நாம் வைரமுத்து, பா.விஜய், சினேகன் , நா.முத்துகுமார் போன்ற திறமையான பாடலாசிரியர்களை கவிஞர்களாக உயர்த்திப்பிடிக்கத் தொடங்கிவிடுகிறோம். மாணவர்களுக்கு இலக்கியம் சொல்லித்தரும் நமக்கு இந்த பேதம் அவசியம் புரியவேண்டும் என நினைக்கிறேன்.
நான் பேசுவதற்கு முன் பாடலாசிரியர் வாலி குறித்த ஆவணப்படத்தைத் திரையிட்டீர்கள். வாலி நவீன கவிஞர் எனக் கூறினீர்கள். அவ்வாறு சொல்வது நவீன கவிதைக்குதான் அவமானம் என உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நான் நவீன கவிதைகள் குறித்து பேசி முடிக்கும் போது நான் சொல்வதற்கான காரணம் உங்களுக்குத் தெரியவரும். எனவே தயவு செய்து என் சொற்களில் கவனம் வையுங்கள்.
இந்தச் சிக்கம் ஒருபுறம் இருக்க, யாப்பிலக்கணத்தின் அடிப்படையில்தான் கவிதை எழுத வேண்டும் என மரபு கவிஞர்களால் இன்னமும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் சுமை ஏற்றப்பட்டே வருகிறது. கவிதையின் மைய நீரோட்டத்தில் இன்று மரபுக்கவிதையை வாசிப்பவர்களும் எழுதுபவர்களும் அருகிபோய்விட்டனர் என்ற உண்மையை நாம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். இலக்கியத்தினால்தான் இலக்கணங்கள் உருவானதே தவிர இலக்கணத்தினால் இலக்கிய உருவாவதில்லை எனும் வரலாற்று உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது எல்லாவற்றையும் மீறி படைப்பாளி சுதந்திரமானவன். ‘கவிதை’ எனும் வடிவம்தான் படைப்பிலக்கியத்தில் அதிக வீச்சு கொண்டதாகவும் அதிக நுட்பமானதாகவும் உள்ளது. மனதிலிருந்து பீறிடும் உணர்வின் வடிவான சொற்களுக்கு இலக்கணம் போட்டு தடுப்பதென்பது படைப்பிலக்கியச் சுதந்திரத்தில் கை வைப்பதாகவே கருதுகிறேன்.
புதுக்கவிதை மலேசியாவில் செல்வாக்குப் பெற்ற 70களிலும் உவமை, உருவகம், அங்கதம், படிமம் என அதில் ஏதாவது ஒரு முறை இருக்க வேண்டும் என அதை முன்னெடுத்தவர்களால் போதிக்கப்பட்டது. கவிதை என்பது எப்படியும் ஏதோ ஒரு இலக்கணத்துக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற மரபுவாதிகளின் தணியாத தாகத்திலிருந்து நவீன கவிதை மலேசியாவில் இன்று சுதந்திரமாக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது.
நவீனத்துவம்
நவீன இலக்கியம், நவீன கவிதை என்ற சொல்லாடல்களில் உள்ள நவீனத்துவம் என்பது எதைக்குறிக்கிறது என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். 15ஆம் நூற்றாண்டின் பிந்திய காலகட்டத் தத்துவத்தை நவீனத்துவம் என்பார் என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.மேலைத் தத்துவத்திலிருந்து மதம் தன்னை விடுவித்துக்கொண்ட காலக்கட்டமது. மத நிறுவனங்களுக்கும், மத மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான விஞ்ஞான மனப்பாங்கு, தனிமனித சுதந்திரம், அரசியலில் ஜனநாயகக் கோட்பாடு , மக்களிடையே சமத்துவம் , பெண்களுக்கு சம உரிமை, கலை இலக்கியத்தில் சமய சார்பின்மை , புதிய கலை இலக்கிய வடிவங்களின் தோற்றம் என்பவை நவீனத்துவம் சார்ந்த அம்சங்களாகக் கருதப்படுகிறது என்கிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்.
ஆக, கோட்பாட்டாளர்களின் குறிப்பின் படி ஆட்சிலிருந்து, கலையிலிருந்து, இலக்கியத்திலிருந்து, தத்துவத்திலிருந்து எப்போது மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ அப்போது நவீன காலமென்று நாம் புரிந்துகொள்ளலாம். இந்தப் புரிதலுடன் படைக்கப்படும் இலக்கியமோ அல்லது எந்தக் கலை வடிவமோ நவீன இலக்கியம் / கலை என கருதப்படுகிறது.
இந்த அடிப்படையில் வைத்து மீண்டும் வாலியை யோசித்துப்பாருங்கள். அவர் வாழ்க்கை முழுவதும் ஒரு பார்ப்பனராக வாழ முயன்றவர். கடல் தாண்டுவது பார்ப்பானுக்கு தவறு என்பதால் வெளிநாடுகள் எங்கும் போகாதவர். மதத்தை வலுவாகப் பற்றிக்கொண்டதோடு அதன் அடிப்படையில் எழுதியவர். இப்படிப்பட்ட முற்றும் பிற்போக்குவாதியான ஒருவரை நவீன கவிஞராக நாம் வர்ணிப்பது முறையா என யோசிக்க வேண்டும்.
கவிதை மரபு
ஆனால், அத்தனை எளிதாக நாம் தமிழின் நீண்ட நெடிய கவிதை போக்கை துண்டித்துக்கொண்டு சுருங்கிய கண்கொண்டு மட்டுமே நவீன கவிதைகளைப் பார்க்க முடியாது என நினைக்கிறேன். அத்தனை செரிவான , ஆழமான கவிதை மரபு 2000 ஆண்டுகளாகத் தமிழில் இருந்து வருகிறது. இது உண்மையில் நமக்கான கொடைதான். இவ்விடத்தில் ஆரியர்களின் பழம் இலக்கியமான ரிக் வேதத்தையும் ஒரு ஒப்பீடு செய்து பார்க்கலாம் என நினைக்கிறேன்.
சில ரிக் வேதப் பாடல்களை பார்க்கலாம்,
இந்திரா! “மரங்களில் தங்கி, இன்பமாகி, இரையை நாடிப் பறந்து செல்லும் பறவைகளைப்போல், ஆரியர்களாகிய நாங்கள் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் போகும் போது எங்கள் தேர்களைக் காப்பாற்றவும்.
மண்டலம் 2, அதிகாரம் (சூக்தம்) 31, பாடல் (சுலோகம்) 1
இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களை நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22
சோமக்கள்ளைக் குடிப்பவனே! எங்கள் யாகத்திற்கு (கால்நடைகளைக் கொன்று நடத்தும் விருந்துக்கு) வருக; கள்ளை அருந்துக, செல்வங்களைத் தரும் – பசுக்களைத் தரும் உனது செயல் திருப்தி அளிக்கிறது.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 2
இந்திரனே! தெய்வமற்ற – வேள்வி செய்யாத தாசர்கள் செல்வத்தை இழப்பார்களாக. அந்தத் தாசர்களைக் கண் காணாத இடத்திற்கு அனுப்பவும். (ரிக். 7594)
நண்பர்களே, இங்கு ‘தஸ்யூக்கள்’ எனும் சொல் திராவிடர்களைக் குறிக்கிறது என்பதை தகவல்களுக்காகச் சொல்லிக்கொள்கிறேன். இது ஆரியர்களின் பழமையான பாடல். அல்லது அவர்கள் இலக்கியம். இவை அனைத்தையும் ரசனை விமர்சகரான ஜெயமோகன் ‘எளிய உணர்ச்சி வெளிப்பாடுகள்’ என்கிறார். ரிக் வேதம், ஆரியர்களின் முதிராத பழங்குடித் தன்மையை மட்டுமே நமக்குக் காட்டுகிறது. ஆனால், தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் பிரதியான புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவை செவ்வியல் ஆக்கங்களாக உள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆக, தமிழர் வாழ்வு ஒரு உச்சமான நாகரீக, பண்பாடு கொண்ட பின்புலத்தில் இயங்கியதையும் செரிவான பாடல்கள் மூலம் நம்மால் கற்பனை செய்ய முடிகிறது.
செரிவு என்பதற்கு புறநானூறு பாடல் ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம்.
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த வெமக்கு மருளி
வியன்மல ரகன்பொழி லீமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே.
இதன் பொருள் இவ்வாறு சொல்லப்படுகிறது : தாழி செய்பவனே, அச்சில் சுழலும் வண்டிச்சக்கரத்தில் ஒட்டியிருக்கும் சிறிய வெளிறிய பல்லிபோல இவனுடன் பலவித பாதைகளை தாண்டிவந்த என்னிடமும் கனிவு காட்டுவாயாக. மண்ணில் இறக்கப்படும் உறுதியான பெரிய தாழியை இன்னும் பெரிதாக வனைவாயாக.
பெரிய மண்பானைகளில் மலர்களும், வாசனைத் திரவியங்களுமாக வீரர்களைப் புதைக்கும் பழக்கம் பழந்தமிழகத்தில் இருந்தது. முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் இதற்குப் பெயர். தன்னையும் உள்ளே அடக்குவதாக அத்தாழியைப் பெரிதாக வனையும்படி கூறுகிறாள் பெயர் தெரியாத அப்பெண்கவி. இதில் அவள் தன்னை வண்டிச்சக்கரத்தில் ஒட்டியுள்ள பல்லியாகத் தன்னை உருவகிக்கிறாள். சக்கரம் சுழலும் …ஊர் முழுக்க ஓடும்… அந்த சக்கரத்துடன் பல்லியும் பயணம் செய்கிறது. ஆனால் பல்லிக்கு பயணக்களைப்பே இருப்பதில்லை. அது சக்கரத்தைச் சார்ந்துள்ளது. அதுபோல அவனைச் சார்ந்திருந்த அவளும் தனக்கும் சேர்த்து பெரிதாக இறந்த அவனுடன் இணைய தாழி செய்யச் சொல்கிறாள்.
நண்பர்களே, கவனித்தீர்களா இந்தப் பாடலில் எந்த இடத்திலும் அந்தப்பெண் தனது சோகத்தை நேரடியாகச் சொல்லவில்லை. நான் என் காதலனுடன் சாவிலும் இணையப் போகிறேன் என சினிமா வசனமெல்லாம் பேசவில்லை. மிக அந்தரங்கமான குரலில் தன் சோகத்தைச் சொல்கிறாள். அவள் துயரம் நம் மனதையும் அப்பிச் செல்கிறது. இரவில் கேட்கும் ஒரு சோகமான பறவையில் குரல் போல மனதை உறுக்குகிறது. ஒரு நல்ல கவிதையின் தன்மையாக இதைச் சொல்லலாம். கவிதை எதையும் சொல்வதில்லை. மாறாக குறிப்பால் உணர்த்துகிறது.
திருக்குறளும் ஒருவகையில் செரிவான கவிதைகள்தான். இன்னும் சொல்லப்போனால் பல திருக்குறள்கள் நவீன கவிதைகளுடன் ஒத்துப்போகவும் செய்கின்றன. நவீன கவிதைகள் அறிவுறுத்தும் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டுள்ளன. நவீன கவிதைகள் மக்களுக்கு எந்த மேன்மையையும் உண்மையையும் சொல்ல முயலவில்லை. கவிஞன் என்பவன் ஞானி இல்லை . அவன் சக மனிதனுடன் உரையாடுகிறான் அவ்வளவே. திருவள்ளுவருக்கும் ஒரு கவிஞனிடம் உள்ள எல்லா குணங்களும் உள்ளன.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். என்கிறார் வள்ளுவர். என்ன ஒரு கோவம் அவருக்கு. ஒரு கவியின் கோபம் இது. உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் பிச்சையெடுத்துதான் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் பிச்சையெடுப்பவனைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக எனக்கூற கவிஞனின் சுதந்திரத்துக்கு மட்டும்தான் சாத்தியப்பட்டுள்ளது. ஒரு பயிற்சிக்காக நீங்கள் திருக்குறளில் அறநெறியைத் தேடாமல் அதன் கவித்துவத்தை அறிய மட்டுமே வாசித்துப்பார்ப்பதை இங்கே பரிந்துரை செய்கிறேன்.
நவீன கவிஞன்
நண்பர்களே இங்கு நாம் ஒரு கேள்வியை முன்வைத்து யோசிப்போம். சங்க இலக்கியப் பாடல்கள் அக்காலத்தில் எல்லோரும் வாசித்துப் புரிந்துகொள்ளும் வகையில்தான் இருந்தனவா? நிச்சயம் இருக்க முடியாது. கற்றறிந்தவர்கள் மட்டுமே உள்வாங்கி கொள்ளும் நிலையில்தான் அவை இருந்திருக்க வேண்டும். படைப்பாளி என்பவன் சக மனிதனிலிருந்து உயர்ந்தவன் என்பது போன்ற தோற்றத்தை இந்தப் புனைவுகள் கொடுக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் படைத்தல் என்பது கடவுளின் தொழில் என்றும் படைப்பாளி கடவுளுக்கு நிகரானவன் என்றெல்லாம் கதைவிடப்பட்டது. படைப்பாளி என்பவன் தனது மொழியின் புலமையால் சராசரி மனிதனைக் காட்டிலும் உயர்வானவனாகக் கருதப்பட்டான். நவீன இலக்கியம் இந்த பம்மாத்துகளையெல்லாம் களைத்துப்போட்டது. படைப்பாளி எவ்விதத்திலும் சராசரி மனிதனைவிட உயர்ந்தவன் இல்லை என்றும் சராசரி மனிதனின் அத்தனை தவறுகளோடும் நவீன கவிஞன் வாசகன் முன் வந்து நிர்க்கிறான்.
ஆக, நவீன எழுத்தாளன் முதலில் எவ்விதத்திலும் தன்னை சக மனிதனிடமிருந்து விலகி நின்று வாழ்வைப் பார்க்க மாட்டான். தன்னை உயர்ந்தவனாகவும் வெற்றியாளனாகவும் காட்டிக்கொள்ள மேடை சடங்குகளை ஏற்க ஓடமாட்டான். நிஜத்தில் இல்லாத ஏதோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்க மாட்டான். தன்னை இருபத்து நான்கு மணிநேரமும் கவிஞனாகக் காட்டிக்கொள்ள வெள்ளை ஜிப்பா அணிந்து திரிய மாட்டான். ‘ஏ..மனிதனே’ என உச்சக்குரலில் அடுத்தவருக்கு அறிவுரைச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டான். எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கியம் என்பது மிக உயரிய சேவை என்ற எண்ணம் எல்லாம் அவனிடம் இருக்கப்போவதில்லை. இலக்கியம் என்பது ஒரு தீராத உரையாடல் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் இருக்கும். நவீன கவிஞன் சதா இந்தச் சமூகத்திடம் உரையாடிக்கொண்டே இருக்கிறான். அவன் உரையாடியே தீர வேண்டும். அவன் தன் தவறுகளையும் உரையாடுகிறான். தன் தடுமாற்றங்களையும் உரையாடுகிறான். நுணுக்கமான சிக்கல் நிறைந்த இந்த வாழ்வில் அவனிடம் திட்டவட்டமான முடிவுகள் இல்லை. திட்ட வட்டமான தீர்வுகள் இல்லை. உரையாடுதலும் உரையாடுதல் மூலம் சமூகத்துடன் ஒன்றி வாழுதலும் , வாழ்வதின் மூலமாக சமூகத்தை விமர்சித்தலும் விவாதித்ததும் என்பதே அவன் பணியாகிவிடுகின்றது. கவிஞனாக அல்லாதவன் ஓவியம் மூலமாக, நாடகம் மூலமாக, கதைகள் மூலமாக சமூகத்திடம் உரையாடுகிறான். அவன் குறிப்பிட்ட ஒரு தரப்பை நாடி பேசவில்லை. ஆனால் அவனது பேச்சு குறிப்பிட்ட சிலரை மட்டுமே அடைகிறது என்ற உண்மையையும் ஏற்க வேண்டியுள்ளது. அதுதான் நவீன கவிதைகளின் சவாலாகவும் உள்ளது.
நவீன கவிதைகளின் சவால்கள்
நிறைய தமிழ் ஆசிரியர்கள் என்னிடம் இப்படிக்கூறுவதுண்டு. “நீங்களெல்லாம் நவீன கவிதை என்று எழுதும் ஒன்று எனக்கு சுத்தமாகப் புரிவதில்லை. அதை எப்படி கவிதை என ஏற்றுக்கொள்வது?”. உண்மையில் இந்தக் குரலுக்கு அடியில் இருப்பது கவிதை புரியவில்லை என்ற கவலையெல்லாம் இல்லை. ‘நான் தமிழ் படித்த ஆசிரியன். பல காலமாக தமிழில்தான் இயங்கி கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் தமிழில் எழுதப்பட்ட ஒன்றை புரிந்துகொள்ள முடியவில்லை என்ற அதிர்ச்சியும் தன்னால் ஏற்கனவே புரிந்துகொள்ளப்பட்ட கவிதையுமே காரணம். உண்மையில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிவதற்கும் கவிதையைப் புரிந்துகொள்வதற்கும் சம்பந்தமே இல்லை என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
கவிதையை உணர தொடர்ச்சியான கவிதை வாசிப்பு மட்டுமே உதவும். கவிதை என்பது மொழியைக் கொண்டு இயங்கினாலும் அது சொற்கள் கொண்டுள்ள நேரடி அர்த்தத்தை வழங்கவில்லை. அவை சொற்களின் மூலமாக மிக நுண்ணிய உணர்வைச் சொல்ல முயல்கிறது. உணர்வைச் சொல்ல நேரடி சொற்கள் இருப்பதாக நீங்கள் நம்பலாம். இல்லை என்பதே என் அணுமானம். உதாரணமாக ‘கவலை’ என்ற உணர்வை எடுத்துக்கொள்ளலாம்.
ஒருவன் சாலை விபத்தில் தன் மனைவியைப் பறிக்கொடுக்கிறான். அவன் ஆசையாக வாங்கிய காரும் முற்றிலும் சேதமடைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவனது வலது கரமும் துண்டிக்கப்படுகிறது. இப்போது அவன் சந்தித்துள்ள மூன்று இழப்புகளுக்கும் அவன் அடையும் உணர்வு கவலை என நீங்கள் சொல்லலாம். ஒரு செய்தி எழுத அந்தச் சொல் போதுமானதுதான். ஆனால், மனைவியை இழந்ததில் காதல் சார்ந்த கவலையும், காரை இழந்ததில் பொருள் சார்ந்த கவலையும், கரம் இழந்ததில் ஊனம் சார்ந்த கவலையும் அவனை தொற்றிக்கொள்கிறது. இந்த மாறுபட்ட கவலையை எப்படி நாம் பிரித்துக்காட்டப்போகிறோம். அது கவிதையின் மூலம் மட்டுமே சாத்தியம் என நம்புகிறேன்.
தலித் இலக்கியம் / பெண்ணிய இலக்கியம்
ஆனால் தமிழில் கவிதை போக்கு ஒன்றாக மட்டும் இல்லை. அது பலவாக உள்ளது. காரணம் பலவிதமான மனிதர்கள் நம்மைச் சுற்றி உள்ளனர். அவர்கள் பலவிதமான மனநிலையில் இயங்குகின்றனர். அவரவர் சிந்தனைக்கும் மொழிக்கும் வசப்பட்ட நிலையில் இலக்கியமும் மாறுபடுகிறது. தமிழ்க்கவிதை எப்போதும் நாசுக்காக மறுத்துப்போகும் பகுதி ஒன்று உண்டு.
கவிஞர்கள் பொதுவாக மக்கள் தேவையைப் பேசுவார்கள், பொதுவான அன்பை, கருணையை எல்லாம் பேசுவார்கள். ஆனால் எல்லோருக்குமான தேவை ஒன்றல்ல. அது பண்முகப்பட்டுள்ளது. நவீன இலக்கியம் மேட்டுக்குடி மக்கள் கைகளில் மட்டுமே சுழன்று கொண்டிருந்த காலத்தில் இலக்கியம் என்பது தலித் மக்களின் வாழ்வியல் சிக்கல்களையும் பெண்களின் குரல்களையும் பதிவு செய்யத் தவறியிருந்தன. அவை பார்ப்பனர்களின் குரலாக அதிகம் இருந்தது. அவர்கள் கண் கொண்டே தமிழ் வாழ்வைப் பார்க்க வேண்டியிருந்தது. இந்த இலக்கியத்தின் மேலாதிக்கத்தை உடைத்துக்கொண்டு வந்தது தலித் இலக்கியம்.
தலித்துகள் தங்கள் வாழ்வை, தங்கள் தேவையை புனிதமாக்கப்பட்ட மொழியில் எழுத வேண்டும் என்ற கட்டமைப்பையெல்லாம் தாண்டி நேரடியான தங்கள் மொழியில் கவிதை புனையத் தொடங்கினர். இது பலர் வயிற்றில் புளியைக் கரைத்தது. இலக்கியம் புனிதத்தை இழந்துவிட்டதாக புலம்பல்கள் ஆங்காங்கு கேட்டன. ஆனால் தமிழ்க் கவிதையிம் உண்மையான இலக்கியப் போக்கின் தீவிரம் அங்கிருந்துதான் தொடங்குவதாக நான் கருதுகிறேன்.
இது போலவே பெண்ணிய கவிதைகள் எழுந்தபோதும் பெரும் கூச்சல் சனாதனிகளிடம் இருந்து கேட்டது. தமிழ் மாண்பு கெட்டுவிட்டதாகப் புலம்பினார்கள். அதற்குக் காரணம் பெண் கவிஞர்கள் தங்கள் காதலையும் காமத்தையும் உடல் தேவைகளையும் பேசத்தொடங்கியதுதான். அதுவரை ஆண் கவிஞர்கள் தங்களின் போகப் பொருளாக நினைத்து வர்ணித்த பெண்ணின் அவயங்கள் அவர்கள் கவிதைகளில் மறு உருவம் எடுத்து ஆண்களின் முகத்தில் அரைந்தது. இவை எனது அவையங்கள். எனக்கு மட்டுமான அவையங்கள் என அவை அரசியல் பேசின. ஒருவகையில் உங்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் தமிழில் இது புதிதில்லை என்பதே உண்மை.
ஔவையும் ஆண்டாளும்
‘முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ வொல்லெனக் கூவு வென்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே’ – உடல் சார்ந்த ஆற்றாமைகளை வலிமையுடையனும் தாபத்துடனும் வெளிப்படுத்தியுள்ள ஔவையின் பாடல் இது.
இதே போல ஆண்டாளும் :
‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’
‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’
மிக எளிதாகவே விளக்கம் புரியும் ஆண்டாளின் இப்பாடல்களுக்கு. ஆண்டால் வைணவ மரபை சேர்ந்தவள் என்பதால் அவள் பாடல்கள் விமர்சிக்கப்படுவதில்லை என்பதே உண்மை. கடவுளைப் பார்த்து பேசப்படும் காமம் புனிதமாகிவிடுகிறது நம்மத்தியில்.
இங்கு நான் உங்களிடம் ஒரு விடயத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அ.மங்கை எனும் நாடக ஆசிரியர் ‘ஔவை’ எனும் தலைப்பில் அவர் இயக்கிய நாடகத்தை மலாயாப் பல்கலைக்கழகத்தில் சில காட்சிகளை ஒளிபரப்பினார். நான் ஔவை குறித்து சில புதிய தகவல்களை அறிந்துகொள்ள அந்த நாடகம் உதவியாக இருந்தது. எனக்கு ஔவை குறித்து அறிய ஆவல் மேலிட்டது. ஔவையின் அதுவரை நம்பிக்கொண்டிருந்த ஆளுமையை அந்த நாடகம் அசைத்துக்காட்டியது.
ஒரு உண்மையான எழுத்தாளன் எப்போதுமே தேடல் உள்ளவனாக இருக்க வேண்டும். நான் உங்களுக்கு மிக அழுத்தமாகச் சொல்லிவிட்டு செல்லும் விடயம் இதுதான். தேடல் இல்லாமல் யாரோ சொன்னார்கள் என எதையுமே முழுமையாக நம்புவதோ எதிர்ப்பதோ மடத்தனம்.
அ.மங்கை இயக்கிய ஔவை எனும் நாடகம் கவிஞர் இன்குலாப் அவர்களால் எழுதப்பட்டது. இன்குலாப் எழுதிய அந்த நூலைத் தேடிப்பிடித்தேன். அகரம் பதிப்பில் வந்திருந்தது. இன்குலாம் ஔவை குறித்து ஆய்வு செய்தே அந்த நாடக நூலை எழுதியிருந்தார். அவரது ஆய்வின் முடிவுபடி குறைந்தபட்சம் மூன்று ஔவைகள் வாழ்ந்துள்ளனர் என்கிறார்.
முதல் ஔவை அதியமானிடம் நட்பு கொண்ட சங்கத்து ஔவை. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் , நல்வழி பாடிய இரண்டாவது ஔவை. விநாயகரகவல், ஞானக்கோவை போன்றவற்றை கொடுத்த சைவத் தமிழ் ஔவை.
இன்குலாப் ஆய்வின்படி சங்கத்து ஔவை இளமைத் துள்ளலுடன் இருக்கிறாள். தன் நண்பன் அதியமானுடன் கள் குடித்து தன் அன்பை கொண்டாடுகிறாள். ஆணாதிக்கப்பிடியிலிருந்து சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறாள். ஆனால், ஔவை நமக்கு ஔவையாராகி, கூன் வளைந்து, ஒரு பக்திப்பழமாகவே நம் மனக்கண்ணில் காட்சியளிப்பதுதான் கொடுமை.
முழுமையாக சங்கத்து ஔவையின் பாடல்களைத் திரட்டி உருவாகியுள்ள அந்த நாடகத்தில் இவ்வாறு ஒரு ஔவை பாடல் வரும்.
‘சிறிய கள் பெறின் எமக்கு ஈயும் மன்னே!
பெரிய கள் பெறின்
யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே’
பாடல் புரியுமென நினைக்கிறேன். குவாட்டர் கிடைத்தால் எனக்குக் கொடுப்பான் அதியமான. ஃபுல் போட்டல் கிடைத்தால் நான் பாடி இருவருமாகச் சேர்ந்து கள் குடிப்போம் என அ.மார்க்ஸ் ஏதோ ஒரு நூலில் வேடிக்கையாக அர்த்தம் சொன்னதாக நினைவு. ஆனால் உள்ளபடியே அதுதான் அந்தப் பாடலின் சாரமும். ஆக, பெண்கள் சுந்ததிரமாகவே வாழ்ந்துள்ளனர். ஆணாதிக்கத்தில் பிடிப்பட்டு இன்று தங்கள் இலக்கிய அரசியல் செயல்பாடுகள் மூலம் தங்கள் உரிமை குறித்து பேசும் அவர்கள் கவிதைகளை நீங்கள் வாசிக்க வேண்டும்.
கிடைத்த இந்த ஒரு மணி நேரத்தில் என்னால் முடிந்தவரை சில விடயங்களைப் பகிர்ந்துகொண்டேன். இலக்கியத்தை சந்தேகத்துடன் வாசியுங்கள். எல்லா இலக்கியப் பிரதிகளிலும் அரசியல் உண்டு. எல்லா சொல்லிலும் அரசியல் உண்டு. கவனித்து வாசியுங்கள். அது பக்தி இலக்கியமாக இருந்தாலும் சரி.
திருஞானசம்பந்தர்,
‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக’ என்கிறார்.
இங்கு அந்தணர் என்பது பார்ப்பனரைக் குறிக்கிறது. ஞானசம்பந்தர் பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பார்ப்பனரையும் மன்னனையும் வாழ்கவென வாழ்த்துவதை வெறும் பக்தியாக மட்டும் பார்ப்பது இலக்கியப் போக்குக்கு சரியாகாது.
நண்பர்களே, நான் ஆய்வாளன் அல்ல. ஆய்வாளர்களின் கருத்துகளை வாசிக்கும் வாசகன். அதன் அடிப்படையில்தான் கவிதை குறித்த எனது சில எண்ணங்களையும் அதன் அடிப்படையில் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டேன். சங்கப்பாடலில் பார்த்த சிறு வெண் பல்லி போலதான் நானும். அறிஞர்கள் பலர் சக்கரமாக சுழன்று பயணித்த அனுபவத்தை ஒரு பல்லிபோல ஒட்டிக்கொண்டு பயண களைப்பில்லாமல் நானும் அறிந்துகொள்கிறேன். இந்தக் கருத்துகள் எல்லாமே விவாதத்துக்குறியவைதான் . என் கருத்துகளையும் சந்தேகப்படுங்கள். நான் முழுமையற்றவன். இலக்கியம் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனவே சந்தேகப் படுவதோடு நிர்க்காமல் அது குறித்து தேடுங்கள். கண்டடையுங்கள். என்னுடன் விவாதியுங்கள்.
வாய்ப்புக்கு நன்றி
மறுபிரசுரம்
முதல் பிரசுரம் – 2013
நேரமெடுத்து நிதானமாக நிறுத்து நிறுத்தி உள்வாங்கி வாசித்து பரவசம் கொண்டேன். முடிக்கின்றபோது, முடிந்துவிட்டதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்திய ஓர் அற்புத ஆய்வுப்பெட்டகம் இந்த உரை. இன்றைய பொழுதில் நான் வாசித்த நல்ல விடயம் இது. வாழ்த்துகள் நவீன்.
இறுதியில்.. தொடரும் – என்று போடுங்கள். இன்னும் வேணும், வரணும்..