மலேசிய சமகால கவிதைகள்: ஒரு பார்வை

கவிதைவல்லின இலக்கியக் குழுவும் கூலிம் நவீன இலக்கியக் களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நவீன இலக்கிய முகாம்’ பலவகையிலும் பெருந்திறப்பாக இருக்கும் என்றே ஆவலோடு கலந்துகொண்டேன். நவீனத் தமிழிலக்கிய ஆளுமைகளான ஜெயமோகன், சு.வேணுகோபால், சாம்ராஜ் ஆகியோரது படைப்புகள் முன்னமே சிறிது வாசித்திருப்பதால், அவர்களை நேரடியாகக் காணும் மகிழ்ச்சியும் அச்சமும் ஒருசேரத் தொற்றியிருந்தது. முகாம் நடந்த மூன்று நாட்களுமே அவ்வுணர்வுகள் மேலும் விரிந்து இலக்கிய வாசிப்பின் புதிய சாத்தியங்களையும் இலக்கியத்தையொட்டிய புதிய திறப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது.

என்னுடைய இலக்கிய வாசிப்பில் கவிதை வாசிப்பு என்பது மிகக்குறைந்த அளவே. எதையும் நேர்கோட்டு முறையில் வாசித்துப் புரிந்து கொள்ள முயலும் எனது பயிலா வாசிப்பு முறை கவிதை அனுபவத்தை உட்கிடத்திக் கொள்வதில் சிக்கலாகவே அமைந்திருக்கிறது. இலக்கிய முகாமின் இறுதி நாளின் முதல் அமர்வாக சாம்ராஜ் சமகால மலேசியத் தமிழ்க் கவிதைத் தொகுதிகள் குறித்த தம் பார்வையை முன்வைத்தார். எனக்கு அது பிடித்த அமர்வாய் இருந்தது. ஒருவகையில் மலேசியக் கவிதைகள் குறித்து அறியவும் கவிதை என்றால் என்ன என்று அறியவும் அவர் உரை உதவியது.

அவ்வுரையின் சாரமாய் அமைந்திருந்த 19 கவிதைத் தொகுதிகளும் மூன்று வாரங்களுக்கு முன்னரே அவருக்குக் கொடுக்கப்பட்டு, விரிவான வாசிப்பு செய்யப்பட்டே அன்றைய உரையை அமைத்திருந்தார். தமிழ் நவீனக்கவிதைப் பரப்பில் எவ்விதக் கருத்தியல் சார்பும் அற்று வாழ்வை உளவிளக்கத்துடன் அணுகும் படைப்பாளர்களில் முதன்மையானவராகச் சாம்ராஜை எழுத்தாளர் ஜெயமோகன் முன்னிறுத்துவது குறிப்பிடத்தக்கது. நிறைய எழுதியவரல்ல என்றாலும் பல கூரிய உணர்ச்சியனுபவங்களைத் தம் கவிதைகளின் வாயிலாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். அவரது ‘என்றுதானே சொன்னார்கள்’ எனும் கவிதைத்தொகுதி வெளிவந்து பரவலாகப் பேசப்பட்டது. சாம்ராஜின் உரைகளிலும் படைப்புகளிலும் கூட அங்கதத்தொனி எப்பொழுதுமே ஒலித்துக் கொண்டே இருப்பதைக் கவனித்திருக்கிறேன். “ஷேம் ஷேம் பப்பி ஷேம்” என்று தொடங்கும் அவரது கவிதை ஒன்றின் வாயிலாகவே அவரின் கவிதை பரிட்சயமானது.

சின்ன வயதில் ஓடியவள்….
எட்டு வயதில்
முழங்காலுக்கு மேலான காயத்தை
அப்பாவுக்கு காட்ட மறுத்தவள்…
உடை மாற்றும் அறைக்குள்
அம்மாவைக் கூட‍ அனுமதியாதவள்…
எக்ஸ்ரே அறையிலிருந்து ஓடிவந்தவள்…
அருவிகளில் ஒருபொழுதும் குளிக்காதவள்…
வெளிச்சத்தில் கணவனுடன் கூட சம்மதியாதவள்…
மரித்தலுக்கு பின்
அம்மணமாய்க் கிடக்கிறாள் மார்ச்சுவரியில்!
ஈக்களும் கண்களும் ‘அங்கேயே’ மொய்க்க
இப்படியாகுமெனில்
அன்புலட்சுமி தற்கொலையே
செய்திருக்க மாட்டாள்!

இவ்வாறாகத் தம் காத்திரமான கவிதைகளால் அறியப்பட்டுவரும் சாம்ராஜ், மலேசியவின் சமகாலக் கவிதைத் தொகுதிகளில் இருக்கும் கவிதைகளின் தன்மைக்கேற்ப நான்கு வகைமாதிரிகளாகப் பிரித்து அவற்றை தம் பார்வையில் அணுகினார்.

முதல் வகைமையில்,

அந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது – ஏ.தேவராஜன், கணங்களின் சந்திப்பு- கருணாகரன், மீட்பு- அகிலன், திசைகள் தொலைத்த வெளி – ந.பச்சைபாலன், என் கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும் – ந.பச்சைபாலன், இன்னும் மிச்சமிருக்கிறது – ந.பச்சைபாலன், இலக்கியப்பயணத்தில் ஹைக்கூ பாடகன்- ந.பச்சைபாலன்,  இரணங்கள் – ஜமுனா வேலாயுதம், அன்று போல அன்று – ஜமுனா வேலாயுதம் ஆகிய 9 தொகுப்புகளைப் பட்டியலிட்டார்.

இந்த முதல் வகைமாதிரிக்குள் அடங்கும் கவிதைகள் பாடுபொருள் அளவில் மிக தட்டையானதாகவும் எதையும் சொற்களின் கூட்டினால் கவிதையாக்கலாம் என்ற பொதுத்தன்மையில் அமைந்திருக்கிறது என்றார்.

பொதுவாக வழவழப்பான காகிதங்களும் பிரமுகர்களின் வாழ்த்துரைகளும் பக்கங்களை நிறைக்கும் நன்றி மலர்களுமாகவே மிகுந்து இருக்கும் கவிதை தொகுப்புகள் எவ்வாறான மனவிலகலை உருவாக்குகின்றன எனக்கூறியவர் ஒன்றின் கீழ் ஒன்றாகச் சொல் அடுக்கு முறையே கவிதையென்றும் அத்தன்மையினாலே கவிதை எழுதுதல் மிக எளிமையானது என நம்பப்படும் சூழலை இக்கவிதை தொகுப்புகளின் வாயிலாக முன்வைத்தார்.

இந்த 9 கவிதைத் தொகுதிகளும் காண்கின்ற எதையும் கவிதையாக்கலாம் எனும் அபத்த முயற்சியே நிறைந்திருப்பதைக் கூறியவர் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். கவிஞர் இசையிடம் கவிதைகள் எழுதத் தனி இடம் உண்டா எனக் கேள்வி எழுப்பியப்போது ‘’ஒரு கவிஞனாகத் தனி அறை எனக்கு இல்லை. எனக்கான கவிதைகள் மனத்திற்குள்ளாகவே எடிட் செய்யப்படுகின்றன. ஆனால் ஒரு சிறுகதையாசிரியனாக எனக்கு ஒரு மேசையும் நாற்காலியும் தேவைப்படும்’’ என மேற்கோளைச் சுட்டுகிறார். மனத்திற்குள் ‘எடிட்’ செய்யப்படும் கவிதைகள் தொடர்ச்சியாக எண்ணி உருப்பெற்று வரும் திரண்ட வடிவமாகவே இருக்கக்கூடும். ஆகவே, கவிதை எளிது, உழைப்பு அற்றது எனும் பார்வையை மேற்கண்ட தொகுப்புகளில் இருப்பதை கடுமையாக விமர்சித்தார்.

‘விண்வெளியில் மலேசியா… குடிசையில் குமாரசாமி’ போன்ற முரண் வரிகளே சமூகக் கோபக்கவிதைகளாக முன்னிறுத்தப்படுகின்றன. இத்தகைய கவிதைகள் கோபக்கவிதைகளன்று. இக்கவிதைகள் சமூகத்தில் நேரடியான ஆற்றல்மிக்க விளைவை ஒருபோதும் ஏற்படுத்தப்போவதில்லை. தமிழகத்திலும் கவிதை அறியாத பலரால் இதுபோன்ற கவிதைகள் எழுதப்படுவதுண்டு. அதுபோன்றவர்களின் கவிதைகளைப் பிரதியெடுக்கும் முயற்சியாகவே அமையும் இக்கவிதைகள் எவ்விதத்திலும் பெரியளவிலான பயன் தராது. இக்கவிதைத் தொகுதிகள் மலேசியாவின் தனித்துவமான பார்வையை முன்வைக்கவோ மேலெடுத்துச் செல்வதற்கான எந்தவிதமான சாத்தியத்தையும் தம் வாசிப்பில் ஏற்படுத்தவில்லை என்றார்.

அடுத்த வகைமையில் நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – பூங்குழலி வீரன், பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம் – பூங்குழலி வீரன் ஆகிய இரு கவிதைத் தொகுதிகளை முன்வைத்தார். இந்த இரண்டு கவிதைத்தொகுதிகளும் குழந்தைகள் குறித்த கவிதைகள் மிகுந்திருக்கிறது என்றவர் தமிழ்ச்சூழலில் குழந்தைகள் குறித்த கவிதைகளின் வாயிலாக அறியப்படும் முகுந்த் நாகராஜன் கவிதைகளோடு நெருங்கியவையாகப் பூங்குழலி வீரனின் கவிதைகள் இருக்கின்றன எனப் பாராட்டினார். 90 வரையிலான நவீனத் தமிழ்க்கவிதையுலகில் வரும் குழந்தைகள் வளர்ந்தவர்களாகவே இருந்த சூழலில் முகுந்த் நாகராஜன் குழந்தைகளைக் குழந்தைகளாகவே கவிதையில் கொண்டுவந்த காத்திரமான கவிஞர். அத்தகைய கவிதைகளை நினைவுபடுத்துபவையாகப் பூங்குழலி வீரனின் கவிதைகள் அமைந்திருக்கின்றன என்றார். பொம்மைகளுடன் பேசிக்கொண்டிருக்கலாம் எனும் கவிதைத் தொகுதிகளில் குழந்தையுலகு தவிர வரும் காதல் கவிதைகள் வாசகனை அலுப்பூட்டுபவையாக அமைந்திருப்பதையும் குறிப்பிடுகிறார். பூங்குழலி வீரன் குழந்தைகள் குறித்த கவிதைகளைத் தொடர்ந்தால் காத்திரமான குழந்தைக்கவிதைகள் எழுதக்கூடுமென்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மூன்றாவது வகைமையொற்றிய கவிதைகளாக சூரியக்கைகள்- கோ.புண்ணியவான், உனது பெயர் நான் – பா.அ.சிவம், என்னை நாயென்று கூப்பிடுங்கள்-ரேணுகா, தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் – கே.பாலமுருகன், கடவுள் அலையும் நகரம் – கே.பாலமுருகன் ஆகிய கவிதைத் தொகுதிகள் அமைகின்றன என்றார்.

இந்தக் கவிதைத் தொகுதியின் ஒற்றுமைப்புள்ளிகளாகசாம்ராஜ் உள்ளுறைந்த அரசியல் கோபமும், பிரகடனங்கள் நிறைந்ததாக அமைந்திருப்பதைக் குறிப்பிட்டார். தமிழகத்திலும் கோஷங்களும், பிரகடனங்களும் நிறைந்த கவிதைகள் தொடர்ந்து வெளிவரச் செய்கின்றன. இக்கவிதைத் தொகுதிகள் கோபத்தை மொழியாகக் கொண்டிருப்பதோடு வாசகனையும் கோபப்படச் சொல்கின்றன.  ஒரு சிறந்த கோபக் கவிதையின் பணியென்பது வாசகனைக் கோபப்படச் செய்வது. வாசகன் அடைய வேண்டிய உணர்ச்சியைக் கவிஞனே வெளிப்படுத்துவது பின்னணி குரல் கொடுப்பதற்கு சற்றும் குறைவில்லாதது. தேர்ந்த கவிஞன் கவிதையின் வாயிலாக ஒன்றை உருவாக்கி வாசகனை உள்வாங்கச் செய்து அவ்வுணர்ச்சியை அடையச் செய்ய வேண்டும். பொம்மையின் வாயை அசைத்துக் குரல் கொடுக்கும் பொம்மைக்கலைஞனைப் போல தான் வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சியைக் கவிதையை ஊடகமாகக் கொண்டு கவிஞன் வெளிப்படுத்த வேண்டும். மேற்கண்ட கவிதைகளின் வாயிலாகத் தானும் பேசி பொம்மையையும் பேசச் செய்து வெற்று அனுபவம் ஒன்றைக் கவிதையாக வாசகனுக்குக் கடத்தும் முயற்சியே நிகழ்ந்திருக்கிறதென்கிறார்.

கவிஞர் ஸ்ரீ நேசனின் ‘நன்றி வணக்கம்’ என்ற கவிதையொன்றை ஓர் உதாரணமாகக் கூறினார் கவிஞர் சாம்ராஜ்.

கடைசியாக நாங்கள் முடிவு செய்தோம்

ஒரு மினி பால் வாங்கி டீ போட்டு குடித்தோம்

பிறகு அவனைத் தூக்கிக் கடை வீதிக்குப் போனோம்

என்றைக்குமில்லாமற் கடை வீதி மிக மிகப் பரபரப்பாக இருந்தது

குழந்தை ஒரு நிமிடம் கூட எங்களிடமிருந்து இறங்க மறுத்தான்

இருவரும் அவனை மாற்றி மாற்றித் தூக்கிக் கொண்டோம்

ஒரு ஐஸ்கீரிம் வாங்கி குழந்தைக்குக் கொடுத்தோம்

அவன் கடைவீதியிலிருந்து வரும்வழியிலே தூங்கி விட்டான்

குழந்தை எங்கள் கைகளிருந்து இறங்கவேயில்லை

வீட்டிற்கு வந்தவுடன் அவனுக்கு ஒரு கதை சொன்னோம்

பிறகு கயிறுகளை அறுத்துத் தூக்கிலிட்டுக் கொண்டோம்

ஒருவேளை நாங்கள் ஏன் இறந்தோமென்ற காரணம் தெரிய வேண்டுமென்றால்

தூங்கி கொண்டிருக்கும் அவனை எழுப்பிக் கேளுங்கள்

அவனுக்குச் சொன்ன கதையிலிருக்கிறது

இக்கவிதை எந்தவகையிலும் இன்ன உணர்ச்சியை வாசகனை அடையச் சொல்லவில்லை. தான் கூறும் விதத்தினாலே கோஷங்களும் பிரகடனங்களும் அற்று வாசகன் தானாகவே உள்வாங்கிய உணர்ச்சியை அடையச் செய்கிறது என்கிறார்.

நான்காவது வகைமாதிரியை ஒட்டியவையாக சந்ததிகளும் இரப்பர் உறைகளும் – சை.பீர் முகம்மது, யட்சி – யோகி, மகாராணியின் Check mate – ம.நவீன், ஆகியவற்றை வகைப்படுத்தினார். தமிழகத்தின் கவிதைகளுக்கு நெருக்கமானவையாக இத்தொகுப்பு கவிதைகள் திகழ்கின்றன என்றவர் மகாராணியின் Check mate கவிதைத் தொகுதிக்கு எழுதியிருக்கும் முன்னுரையின் அடிப்படையில் இந்தக் கவிஞர்களுக்குக் கேள்வியொன்றை முன்வைத்தார். அதாவது, தமிழகத்தைக் காட்டிலும் பெரிதான ஆறுவழிச்சாலைகள் மலேசியாவில் இருக்கின்றன. அத்தகைய சாலை உருவாக்கத்தில் அன்பும் அறமும் அடிபட்டுப் போகின்றன. இத்தகைய மலேசியாவின் தனித்துவமான சிக்கல்கள் ஏன் மலேசியக் கவிதைகளில் முன்வைக்கப்படுவதில்லை என்ற கேள்வியை தனது உரையின் மையமாக முன்வைத்தார். அவர் பட்டியலிட்ட முதல் தரப்பினரைத் தவிர ஏனைய மூன்று குழுவுக்கும் இக்கேள்வி பொதுவானது என்றவர் மலேசியத் தமிழ்க்கவிதை மலேசியாவுக்கே உரிய தனித்த அடையாளத்துடன் ஏன் வெளிவருவதில்லை என்ற கேள்வியை எழுப்பினார். தமிழகத்தின் மகத்தான படைப்பாளிகளுடன் உரையாடல் மிக எளிதாகச் சாத்தியப்பட்டிருக்கும் சூழலில் இன்னும் ஏன் மலேசியாவுக்கான தனித்த அடையாளத்தைக் கொண்டு கவிதைகள் வெளிவருவதில்லை என்ற கேள்வியை சாம்ராஜ் முன்வைத்தார்.

சாம்ராஜின் உரை முடிந்தபிறகு ம.நவீன் இலங்கை கவிஞர்கள் எவ்வாறு நிலத்தை அடையாளப்படுத்துகின்றனர் எனும் கேள்வியை முன்வைத்தார்.

போர்ச்சூழல், கடுமையான வாழ்வியல் நெருக்கடிகளைத் தங்கள் நிலத்துடன் பிணைந்திட்ட இயல்பாக இலங்கைக் கவிஞர்கள் சுட்டுவதைக் குறிப்பிட்டார் சாம்ராஜ். ஈழத்தில் போர்ச்சூழலில் நெருக்கடி மிகுந்த வாழ்வில் கோசங்களற்று பிரகடனங்கற்று வாசகர்களுக்குக் கவிதையனுபவத்தை அளிக்கும் படைப்பாளிகள் இருக்கின்றனர். இலங்கையில் தமிழ்க்கவிஞர்களான சேரன், எம்.ஏ.நுஃமான், புனைவிலக்கியத்தில் ஷோபாசக்தி, அ.முத்துலிங்கம், கருணாகரன் ஆகியோர் செயற்படுகின்றனர் என்பதையும் சுட்டினார். இலக்கியப்படைப்பு தான் முன்வைக்க விரும்பும் உணர்ச்சிகளுக்கு அப்பால் கலை நியாயத்துடனும் உண்மையுடனும் இயங்க வேண்டுமென்கிறார். கலைக்கான நியாயத்தை நிறுவ இயலாப் படைப்புகள் காலத்தால் எவ்வித பயன்மதிப்பும் அற்றதாகவே எஞ்சும். போராளி இயக்கத்தில் சேர விரும்பும் இளைஞனைப் பற்றிய ஈழத்துக் கவிதையொன்றில் மீசை அரும்பும் வயதில் நாட்டுப்பற்று வந்ததா உனக்கு, சரி, போ வீரனாய் இருந்து வீடுதிரும்பு என முடிகிறது. இவ்வாறாக ஈழக்கவிதைகள் கணிசமான அளவு கலைக்கான நியாயத்தை நிறுவுவதாக அமைகிறது என சொல்லி முடித்தார் சாம்ராஜ்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய நவீன், போர்ச்சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுந்த முந்தைய தலைமுறைக் கவிஞர்களிடமிருந்து வேறுபட்டு மலேசியச் சூழலை ஒத்தவையாகவே தற்கால ஈழக்கவிதைகள் அமைந்திருக்கின்றன எனச் சுட்டிக்காட்டினார்.

சாம்ராஜ் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், அழித்தொழிப்பு போன்றவை நிகழ்ந்துவந்த சூழலிலும் காத்திரமாக எழுதிவந்தவர்கள் கலைக்காக மெனக்கெட்டு இருப்பதையே சுட்டினார். அதற்குப் பிந்தையத் தலைமுறையினர் எழுதியவை மலேசிய சூழலுடன் ஒத்துப்போகுபவையாக இருப்பினும் போர்ச்சூழலில் எழுதப்பட்டுவந்த கவிதைகளும் தம்முள் கலைக்கான நியாயத்தை உருவாக்கிக் கொண்டவையாகவே அமைகின்றன என்றார்.

சாம்ராஜ் முற்றும் முழுதாக நிராகரித்த முதல் பட்டியலில் ந.பச்சைபாலன் உள்ளிட்டோர் கவிதை தொகுதிகள் இருப்பதற்கான காரணத்தை விரிவுரைஞர் குமாரசாமி கேள்வியாக எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாம்ராஜ் கவிதை என்பது விளையாட்டுப் போன்று எளிய செயற்பாடு என்று, தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதற்கான ஊடகமாகக் காணும் அபத்தப் போக்கு அக்கவிதைத் தொகுதிகளில் மிகுந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். பல்லாயிரம் ஆண்டுகள் அறுபடாத கவிதை மரபும் கவிஞர்களின் நிரையும் இருக்கும் சூழலில் எதையும் பயிலாமல் எழுதுவதையும் அக்கவிதைகளை நிராகரிப்பதற்கான காரணமாக அமைகிறது. அத்தகைய மாபெரும் சாதனையாளர்கள் புழங்கிய மொழியில் நாமும் கவிதை எழுதுகிறோம் என்ற பொறுப்புணர்ச்சியே கவிதை செறிவடைவதைற்கான வழியாக இருக்கக்கூடும். அப்பொறுப்புணர்ச்சியின்றி காண்கின்ற அனைத்தையும் பயிலாக் கவிதை மொழியாக்க முனையும் அபத்த முயற்சியாகவே அவை வெளிப்படுகின்றன என்றார் சாம்ராஜ்.

ம.நவீன் ‘தான் எழுதுவது ஹைக்கூ என்பதால் இந்த வரையறைக்குட்பட்டதாக அவற்றை வைக்க முடியாது’ என பச்சைபாலன் வாதிட்டால் உங்கள் பதில் என்ன என்று கேட்டார்.

பச்சைபாலன் எழுதுவது ஹைக்கூ அன்று; பொய்க்கூ என்பதே சரியாக இருக்கும் என்றார் சாம்ராஜ். மாபெரும் தியானம் வழியாக ஏற்படும் ஞானத்திறப்பே ஹைக்கூ எழும் களம். ஜென் துறவிகள் வாழ்நாளிலே மாபெரும் தியானங்களில் ஒரிரண்டு கவிதைகளே எழுதியிருக்கின்றனர். காமிராவுக்குள் அடங்கவில்லை தஞ்சைப் பெரியக் கோயில் முதலிய வரிகள் கொண்டவை நம்பிக்கையின் மிகுதியால் எழுதப்படுபவையே அன்றி ஹைக்கூ வகைமையன்று என்றார். எவ்விதப் படிமங்கள் மற்றவை அன்றி வெறும் வெற்றனுபவமாகவே விரியும் இக்கவிதைகளால் மலேசியக்கவிதையுலகு முன்னெடுப்பு எவ்விதத்திலும் சாத்தியமற்றது என்கிறார்.

சாம்ராஜின் கருத்துகளை விரிவுரைஞர் தமிழ்மாறன் வரவேற்பதாகக் கூறினார். பச்சைபாலன் பல ஆண்டுகள் எழுதினாலும் அவர் கவிதை முயற்சிகளில் அகப்படாத கவித்துவம் குறித்து தன் எண்ணத்தைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து பேசிய சாம்ராஜ், இந்தக் கவிதை வகைமைகளுக்கு அப்பால், மலேசியத் தமிழ்க் கவிதை வாசகர்களும் கவிதை எழுத முன்வருபவர்களும் தமிழ்ச்சூழலில் மகத்தானப் படைப்பாளர்களாக அறியப்படும் பிரமிள், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், சுகுமாறன், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், தேவத்தச்சன், கலாப்பிரியா, போகன் சங்கர், ஸ்ரீ நேசன், சபரிநாதன், யவனிகா ஸ்ரீராம், இசை போன்ற முக்கியமான  கவிஞர்களின் கவிதைகள் வாசித்துத் தங்கள் இரசனையைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்றார். தங்களின் உன்னதமான கவிதைகளின் வாயிலாக அறியப்படும் தமிழ்க்கவிஞர்களின் பட்டியல் ஒன்றைத் தம் நினைவிலிருந்தே தந்தார்.

இத்தகைய கவிஞர் பட்டியலுக்கு மாற்றாக உருவாகியிருக்கும் வணிகக் கவிஞர்களின் ஆதிக்கத்திலிருந்தும் அவர்களை பிரதியெடுக்கும் முயற்சியை மலேசியத்தமிழ்க் கவிஞர்கள் கைவிடவேண்டும் என்றார். மலேசிய நிலத்திற்கே உரிய தனித்த அடையாளங்களையும் சிக்கல்களையும் குறித்து மலேசியத் தமிழ்க்கவிதைகள் உருமாற வேண்டும் என வலியுறுத்தினார். நம்முடைய மரபிலிருந்து மிகச்சிறந்த கவிதைகளாக முன்வைக்கப்பட்டு வரும் சங்கக்காலப் பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகள், பல இயற்கை பேரழிவுகளைக் கடந்து முன்னிற்பது போல மலேசியக் கவிதைகளும் ஊழிகாலத்தில் வரும் நோவா கப்பலில் காக்கப்படவேண்டியது எழுந்துவரும் மலேசியக் கவிஞர்களின் கைகளில் உள்ளது என வலியுறுத்தினார்.

சாம்ராஜின் உரையைக் கூர்ந்து அவதானிக்கும் போது மலேசியாவில் கவிதையனுபவம் என்பது சொற்களின் கூட்டினால் எளிய வித்தையாகவே உருக்கொண்ட ஒன்றாக இருப்பது புரிகிறது. தங்களை நன்கு அடையாளப்படுத்தவும் சந்தைப்படுத்திக் கொள்ளவும் தெரியும் தமிழகத்து வணிகக் கவிஞர்களின் கவிதைகளைப் பிரதியெடுக்கும் முயற்சியும் இவர்களிடம் மேலோங்கியிருக்கிறது. இந்தப் போக்குகள் அகல்வதற்கான முதற்திறப்பாகச் சாம்ராஜின் உரையும் அவதானிப்பும் அமைந்திருந்தன என்றே கூறலாம். தமிழ்மொழியின் மாபெரும் கவிதை சரடையும் கவிஞர் நிரையையும்  வாசிப்பதிலிருந்தும் தங்களது தனித்த வாழ்வனுபவத்தைக் கவிதையாக்க முனைவதுமே மலேசியத் தமிழ்க்கவிதையுலகுக்கான எளிய முன்னகர்வாக இருக்கக்கூடும்.

அதற்கு வழியமைத்த சாம்ராஜுக்கு நன்றி.

சாம்ராஜ் உரை காணொலி

1 comment for “மலேசிய சமகால கவிதைகள்: ஒரு பார்வை

  1. ஸ்ரீவிஜி
    January 9, 2020 at 1:18 pm

    சாம்ராஜின் உரையை நானும் நன்கு ரசித்தேன். அந்த உரையைவிட, நீங்கள் உள்வாங்கி அதை அழகிய தமிழ்மொழி ஆளுமையால் எழுத்துவடிவமாக்கிக் கட்டுரைவடிவில் வழங்கியிருப்பது மிக மிக அருமை. அவர் குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் ஒன்றுசேர தொகுத்து வழங்கியிருக்கின்றீர்கள். உரையினை பதிவின் வழி கேட்கிற இரைச்சல் இடையூறுகளை தாண்டி மிகநேர்த்தியாக எழுதப்பட்டுள்ள இக் கட்டுரை, வாசிப்பிற்கு மனநிறைவைத் தந்தது. பதிவின் வழி புரிந்துகொள்ளமுடியாத பலவிவரங்களை இந்த எழுத்தின் மூலம் புரியவைத்தமைக்கு நன்றி சகோ. வாழ்த்துகள்.

Leave a Reply to ஸ்ரீவிஜி Cancel reply