இச்சா: குரூரங்களில் வெளிப்படும் இச்சை

இச்சாபெற்றோர், சமூகம், கல்வி, அறிவு என தன்னைச் சூழ்ந்துள்ள எதுவுமே தனக்குப் பாதுகாப்பு தரப்போவதில்லை என்பதை கள்ளமற்றவளாக வளரும் ஒரு சிறுமி அறியும் தருணம் அவளுக்கு இந்த வாழ்க்கை என்னவாக அர்த்தப்படும்? அதுவரை அவளுக்குச் சொல்லப்பட்ட விழுமியங்களும் மானுட உச்சங்களும் என்ன பதிலை அவளுக்குக் கொடுக்கும்? பதில்களற்ற திக்குகளில் அர்த்தமற்ற கேள்விகளைச் சுமந்து திரியும் ஆலா மரணத்துடன் ஆடும் பகடையாட்டமே ‘இச்சா’.

ஈழப்போர்ச் சூழலில், கிராமப் பகுதியில் வளர்ந்த வெள்ளிப்பாவை எனும் சிறுமி, சூழ்நிலை காரணமாக புலிகள் இயக்கத்தில் சேர்க்கிறார். திறமையும் ஆர்வமும் துடிப்பும் மன வலிமையும் உடல் வலிமையும் கொண்ட அந்தச் சிறுமி கேப்டன் ஆலாவாக, கரும்புலியாக உருவெடுக்கிறாள். 18வது வயதில் தற்கொலைத் தாக்குதலுக்குத் தேர்வு பெற்று அதற்கான  கடும் பயிற்சிகளிலும் ஆயத்தங்களிலும் ஈடுபடுகிறாள். கடைசி நேரத்தில், யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்படுத்தாமல் ஒரு வெறும் சமிக்ஞையாக அவளது மரணம் நிர்ணயிக்கப்படுகிறது. சாதனையை நிகழ்த்தப்போகும் மனநிலையில் இருந்த ஆலாவால் அதற்கு உடன்பட முடியவில்லை. குண்டை வெடிக்கச் செய்யாமல் கைதாகிறாள்.  இலங்கை வரலாற்றிலேயே ஆக அதிக காலம் சிறைத் தண்டை பெற்ற பெண்ணாக,  300 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறாள்.  மிக குரூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகி, அநாதரவாக தனது 26 வயதில் உயிரிழக்கிறாள். கடந்த ஆண்டு வெளிவந்த இச்சா நாவலின் இந்த மையக் கதை புதிய ஒன்றல்ல. இதுபோன்ற கதைகளை, ஈழப்போரில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு இடங்களிலும்   நடந்த போர்கள் குறித்த செய்திகளிலும் ஆவணப் படங்களிலும் புதினங்களிலும் வாசித்திருக்கலாம். ஆனால், இந்தக் கதையல்ல நாவல். ஷோபாசக்தி காட்சிப்படுத்தும் வாழ்க்கையும், முன்வைக்கும் யதார்த்தங்களும், அவரது சமூக, அரசியல் நோக்குகளும் இவற்றின் வழியாக வாசகர் உணரக்கூடிய ஒரு கண்டடைதலே நாவல்.

“கடவுள் ஆண்களையும் பெண்களையும் படைத்தார். ஆனால் சாமுவெல் கோல்ட் (Samuel Colt)   இருபாலரையும் சமமாக்கினார்” என்பது அமெரிக்காவில் புழங்கும் ஒரு சொல்மொழி. சாமுவெல், 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவி்ல் கைத்துப்பாக்கியை வர்த்தகரீதியாகத் தயாரித்து சந்தைவிற்பனைக்குக் கொண்டு வந்தவர் .

முதியோர், பெண்கள், குழந்தைகள் போன்ற வலிமையற்றவர்களுக்கு அல்லது ஆணாதிக்க சமூகத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு  போரும்  நெருக்கடிநிலைகளும்  மேலும் வேதனைகளையும் வலிகளையும் தந்தாலும், ஏதோ ஒரு வகையில் சமநிலையையும் பலத்தையும் தருகிறது. அது பெரும்பாலும் ஆயுதத்தாலும் அதிகாரத்தாலும் நிகழ்கிறது. அல்லது மேலாதிக்கத்திலிருப்பவர்களின் இயலாமையில் நடக்கிறது.  ஒரு துயரமான யதார்த்தநிலை இது.

“துப்பாக்கியோடு இருக்கும் என்னை எவரும் பணியவைக்கவோ, அவமானப்படுத்தவோ, அழவைக்கவோ முடியாது. வலது கையில் துப்பாக்கியை வைத்திருப்பவள் இடது கையில் சாவை வைத்திருப்பாள் என்பது உண்மைதான். ஆனால், துப்பாக்கி வைத்திருப்பவள் உடலை அவளது அனுமதியின்றி யாரும் தீண்டப்போவதில்லை. துப்பாக்கி வைத்திருப்பவளின் சாவு ஒருபோதும் அவமானகரமானதாக நிகழப்போவதில்லை,” என்பது ஒரு பதின்மவயதினளின் நம்பிக்கையாக வேரூன்றுவதற்கு அவள் வாழும் அந்தத் தருணம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. பெண் வழிச் சமூகம், ஆண் வழிச் சமூகமாக மாற்றப்பட்ட காலத்திலிருந்து சமூக இயங்குநிலையில் பெண்களின்  வளர்ப்புக்கும் வாழ்வுக்கும் அளிக்கப்பட்டு வரும் உணர்வும் அறிவுரீதியான சமநிலையின்மையும் எப்படி பின்னணியாக இருக்கிறது என்பதை இந்நாவலில் வார்த்தைகளாகவும் சம்பவங்களாகவும் கதையாடலுக்குள் விவரிக்கிறார் எழுத்தாளர்.

தன்னைக் கொல்ல வந்தவர்கள் முன் நடுங்கிக்கொண்டிருந்த காட்டுச் சிறுமியான ஆலா, துப்பாக்கியை ஏந்தியதும் அச்சத்தை அறவே துறந்தவளாகிறாள். துப்பாக்கி வெடிக்கும்போது ஏற்படும் மனக்கிளர்ச்சி, அவளுக்குத் தனது இருப்பை உறுதிசெய்கிறது. அவளுள் தைரியத்தையும் அவள் ஆன்மாவிற்கு ஒளியையும் நிம்மதியையும் இறுதி வரையில் அவளுக்கு துப்பாக்கியே கொடுக்கிறது. அவளைவிட வயதிலும் வலிமையிலும் கூடிய ஆடவர்கள் அவளைக் கொடூரமாகக் கொல்ல இருந்த தருணத்தில்,  எல்லா முயற்சிகளும் தோற்றுப்போய் இனி தப்பிக்கவே வழியில்லை என கையறு நிலையில் அவள் நின்றபோது, ஒரு சாதாரண சிறுவனின் துப்பாக்கி அவளைக் காப்பாற்றுகிறது.

தாத்தா கொடுக்கும் பாலியல் துன்புறுத்தலின் அவமானத்துடன், அவரைக் கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டோமோ என்ற பயமும் சேர்ந்து, செய்வதறியாது நடுங்கிக்கொண்டிருந்த அவளுக்கு இரு இளம் போராளிப் பெண்களின் துப்பாக்கி தைரியம் தருகிறது. குடும்பத்தையும் நாட்டையும் வாழ்வையும் சிதைத்த சூழலிலிருந்து விடுபடவும் விடுதலையடையவும்  துப்பாக்கியை அவள் துணையாகக் கொள்கிறாள். அவளுக்குத் துப்பாக்கியும் அதன் வெடிப்பும் புதிய பொருளைக் கொடுக்கின்றன. அந்தப் பொருள்தான் நாவலெங்கும் வெவ்வேறு படிமங்களாகப் படர்ந்து வாசகரை அசைக்கிறது.

வீட்டின், சமூகத்தின், நாட்டின் சூழ்நிலைகளால் பயம், அச்சம், தனிமை, காதல், நிச்சயமின்மை என எதிர்மறையான உணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் தன்னந்தனியாகிவிட்ட ஒருவருக்கு, எந்நேரத்திலும்  பாதுகாப்புத் தேவைப்படுகிறது. சூழலோ, மனிதர்களோ தரமுடியாத பாதுகாப்பை ஆயுதம் தருகிறது.  குளிக்கும்போது, கழிவறைக்குப் போகும் எந்நேரத்திலும் தனக்குப் பெருந்துணையாக துப்பாக்கியைச் சுமந்துகொண்டே இருக்கிறாள் ஆலா. துப்பாக்கி பறிக்கப்பட்ட நிலையிலும், தனக்குப் பாதுகாப்பாக எப்போதும் ஆயுதம் இருப்பதாகவே கற்பனை செய்துகொள்கிறாள். கிழிந்து நைந்த ஓர் எளிய போர்வையை  தன்னைக் காக்கும் ஆயுதமாகக் கொள்கிறாள். எந்நேரமும் அதைப் போத்திக்கொண்டிருக்கிறாள்.  நினைவிலி நிலையில் தனக்கு ஆயுதம் கிடைப்பதாகவும் அதன்மூலம் தான் விடுதலை பெறுவதாகவும் நம்பத் தொடங்குகிறாள்.

இலங்கைப் போரில் ஈடுபட்ட பெண் குழந்தைப் போராளிகளை நேர்காணல் செய்தும், அவர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டும் Yvonne E. Keairns என்பவர் எழுதிய ‘The Voices of Girl Child Soldiers’ எனும் ஆய்வறிக்கையை குவெக்கர் ஐக்கிய நாடுகள் அலுவலகம் 2003ல் வெளியிட்டது. அதில் சொல்லப்பட்ட முடிவுகளில் முக்கியமான மூன்றில் ஒன்றானது: ‘பெண்கள் தங்களை பயன்படுத்தியவர்கள், தவறாக நடந்துகொண்டவர்களை பழிவாங்குவதற்கோ பதிலடி கொடுப்பதற்கோ வழி தேடுவதில்லை. தாங்கள் பங்களிப்பதற்கான வழிகளையே அவர்கள் நாடுகிறார்கள். தங்கள் இழந்ததை ஈடுசெய்யும் வகையில் தங்கள்  வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்ககரமானதாகவும் ஆக்குவதற்கான வழியைத் தேடுகிறார்கள்’ என்பதாகும்.

உலகின் எந்த இடத்திலும் போராளியாகும் பெண்களின் மனநிலை மட்டுமல்ல, வாழ்க்கையின் அவிழ்க்க முடியாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் பெண்களின் மனநிலையும் இவ்வாறாகத்தான் இருக்கிறது.

தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க ஆலா தன் மரணம் அர்த்தமுள்ளதாக, ஏதோ ஒரு வகையில் பங்களிப்பதாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறாள்.  இறுதியறுதியான அந்த ஒற்றை இலக்கும் சாத்தியமில்லாததாகும்போது அவள் செயலற்றுப் போகிறாள். மரணம் எனும் விடுதலையைத் தேர்வு செய்யாமல், எத்தகைய துன்பத்துக்கும் தயாராகத் தன்னை ஒப்புக்கொடுக்கிறாள். உடல், மனம், ஆன்மா என எல்லாவற்றாலும் வேதனையை அனுபவிக்கிறாள். ஆனாலும் தன் வாழ்வும் சாவும் அர்த்தமுள்ளதாகவே அமையும் என்ற நம்பிக்கையை அவள் கடைசி வரையில் இழக்கவில்லை. அந்த நம்பிக்கையே அவளது கற்பனைச் சித்திரத்தில் வெளிப்படுகிறது. போலியான ஒரு மனிதனின் ஏமாற்றுத்தனங்களைத் தோலுரித்து அவனை வெற்றிகொள்வதாக அவள் தனது மரணத்தை அர்த்தமுள்ள ஒன்றாகக் கற்பனை செய்கிறாள்.

மனம், உடல், சிந்தனை

உடல், மன ரீதியான சித்திரவதைகள், அளவுக்கதிகமான போதை மருந்துகள், எல்லாவற்றுக்கும் மேலாக  அர்த்தமற்றுப்போன இலட்சியமும் இலக்கும் மனதைப் பேதலிக்க வைக்கும். மனம் தன்னிச்சையாகத் திரிந்து பிறழ்வதிலிருந்து தப்பிக்க, அதன் கவனத்தை உடல் மீது செலுத்துவது ஓர் உத்தி. அதிகபட்சமான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளத் தயார்ப்படுத்தப்படும் போர்வீரர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கும். உடலை உய்ப்பதன் மூலம் உணர்வுகளை உசுப்பி, உயிருக்கு வலுவூட்டும் ஆலா, அப்போராட்டத்தில் களைத்துப் போகும் தருணத்தில் அதைவிட அதிக வலுவைத் தரக்கூடிய ஒன்றைத் தேடுகிறாள். அது, வரலாற்றில் இதுவரையில்லாத அதிகபட்சமான 300 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண்ணான தனக்கு கிடைக்கக்கூடிய ‘விடுதலை’ என்பதைக் கண்டறிகிறாள். அதற்கான ஓர் எளிய காட்சியை அவளது மனம் உடனடியாக வரையத் தொடங்குகிறது. அவளது அரசாங்கம், அவளது இனம், அவளது மக்கள், அவளது போராட்டம், இயக்கம், அவளைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் என எல்லாருமே அவளைக் கைகழுவிவிட்ட நிலையில், யதார்த்த வாழ்வில் கிடைக்கப்போவதில்லை என முடிவான கௌரவமான, கம்பீரமான ஒரு முடிவை அவளின் மனம் கற்பனை செய்கிறது.  ஒரு போராட்டத்தையே நாடும் அவளின் மனஅழுத்தநிலை, அந்த விடுதலையையும் போராட்டமானதாகக் கற்பனை செய்கிறது. அல்லது அதற்குள்ளும் ஒரு போராட்டத்தை விரும்புகிறது.

சக சிறைவாசியான கேஷாயினி மூலம் அறிந்த வெளிநாட்டு வாழ்க்கையையும் அதன் சிக்கல்களையும் தனது கற்பனையில் மேலும் சவால் மிக்கதாக்கி, அச்சூழலில் தன்னை வைத்துப் பார்க்கிறாள் ஆலா. அதில் அவள் எதிர்கொள்ளும் சவாலும் போராட்டங்களும் அவளின் மன உளைச்சலுக்கு மருந்தாகின்றன. எல்லா மனிதர்கள் மீதும் நம்பிக்கையற்ற, எல்லாவற்றையும் சந்தேகப்படும், போராட்டத்தையே விரும்பும் போராளிகளின் மனநிலையை ஆலாவின் கற்பனை மூலம் காட்சியப்படுத்தியிருப்பது சிறப்பானதொரு உத்தி. போர், இயற்கைப் பேரிடர், தனிப்பட்ட கொடுமைகள் போன்ற மோசமான பாதிப்புகளுக்குள்ளாகும் பெண்ணின் மனநிலையை புலம்பல்கள், விவரிப்புகள் எதுவுமின்றி, அவளது கற்பனைமூலமே விவரிக்க எழுத்தாளுமையுடன் உளவியல் அறிவும் தேவைப்படுகிறது.

சராசரி மனிதர்களின் மனத்தை நினைவு, உபநினைவு, நினைவிலி (consciuous, sub-conscious and un-conscious) ஆகிய மூன்று அடுக்குகளாகப் பிரிக்கிறார்  சிக்மண்ட் ஃப்ராய்ட்.  இதில் நினைவிலி மனதின்  செயல்பாடாக கனவைப் பார்க்கும் அவர், கனவுகளில்தான் மனிதன் உண்மையாக இருக்கிறான் என்கிறார். இந்தக் கனவை, Displacement, Projection,  Symbolization, Condensation Rationalization என ஐந்து வகைகளாகப் பிரிக்கும் ஃப்ராய்டு, இவற்றுக்கு அடிப்படையாக  நிறைவேறாத ஆசைகளையும் பாலியலையும்  சொல்கிறார்.

அவரின் மாணவரான கார்ல் குஸ்தாவ் யுங்  மனித மனம் கூட்டமைப்பின் பாகம் என்கிறார். கூட்டு நினைவு, கூட்டு நினைவிலி (collective consciousness and collective unconsciousness) தன்மைகளில் மனம் இயங்குகிறது என விளக்குகிறார்.

இந்த அடிப்படையில் ஆசைகளும் நிராசைகளும் நிரம்பிய சாராசரிப் பெண்ணான ஆலாவின் நினைவிலி மனமும் அதன் செயல்பாடும் ஒரு கூட்டு நினைவு, நினைவிலியின் வெளிப்பாடாகவே இருக்கிறது. கடும் பயிற்சி பெற்ற கரும்புலியான கேப்டன் ஆலாவை, தனக்குக் கீழே கொண்டு வர வாமன் எனும் தனி மனிதனும் சமூகமும் செயல்படுவதென்பது ஆலாவின் வெறும் கற்பனையல்ல, அத்துணை காலமும் அவள் அறிந்த வாழ்க்கை அது. ஒரு பெண்ணை வீழ்த்த, சிறுமைப்படுத்த முதலில் ஆண்கள் கையெலெடுக்கும் ஆயுதம் உடல். ஆக அதிக தண்டனைபெற்ற, அதிபயங்கரமான  போராளியாக வர்ணிக்கப்பட்ட அவளை, விசாரணைகளும் சிறையும் சித்திரவதைகளும்  வெற்றிகொள்ள முடியாத அவளது உறுதியைக் குலைக்க  முதலில்   கணவன் எனும் உரிமையைப் பெறுகிறான்.  அவள்  உடலைத் தன்னுடைமையாக்கி, வன்புணர்ச்சி செய்து அதன் மூலம் எதிர்க்க முடியாத, வெல்ல முடியாத எதையெல்லாமோ வென்றதாக வெறிக்களிப்பை அடைகிறான். தன்னெஞ்சறித்த அந்தக் களிப்பை தன்னிடம் மறைக்க மீண்டும் மீண்டும் குளித்து குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்வதாக எண்ணிக்கொள்கிறான். தன் மனதின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக வானொலியில் வாழ்வுகொடுத்த கதையை, தன் ‘உயர் சிந்தனையை’ மணிக்கணக்காக விவரிக்கிறான். தன் மனதின் கேள்விகளைப் புறக்கணிக்கப் பழகியதும், அவளது வலி எங்கே என்பதை அறிந்து தாக்குகிறான். பின்னர் மெல்ல மெல்ல அவளது மனதின் அடுக்குகளை வதைத்து, அவளை வெறுமையாக்கும் முயற்சியில் திட்டமிட்டுச் செயல்படுகிறான். தன்னை யார், எப்போது, எப்படியெல்லாம் தாக்க முடியும் என யோசித்து யோசித்து, அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டே இருக்கும் ஆதிமனிதனின் இயல்பான உள்ளுணர்வுடன் அவளின் போர்க்கால அனுபவமும் வெவ்வேறு சாத்தியப்பாடுகளை அவளது இறுதிக்கணம் வரையில் முன்வைத்தபடியே இருக்கின்றன.

ஆலாவைப் பொறுத்தவரையில், அவள் அதுநாள் வரையிலான தனது வாழ்வை இன்னொரு காட்சியாக உருவகித்து, அதில் தனக்கானதொரு வெற்றியையும் வைக்கிறாள்.

நாவல் தன்னிலையில், காப்பாற்றி, கை தூக்கிவிடும் என நம்பியிருந்த வெளிச்சக்திகள் எவ்வாறு நம்பவைத்து புதைகுழிக்குள் தள்ளியது என்பதை விவரிக்கும் ஒரு சிறுபெண்ணின் கனவுச் சித்திரத்தின் படிமங்களைத் தொங்க விடுகிறது.

புனைவுக்குள் ஆலா

இருபத்தியேழு ஆண்டு காலம் வாழ்ந்த ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களும் எண்ணப் போக்குகளும் அவதானிப்புகளும் அகத் தூண்டல்களும் எவ்வளவு இருக்கமுடியுமோ அந்தளவுக்கு மட்டுமே சொல்லையும் பொருளையும் கொண்டிருப்பது இப்புனைவின்  வெற்றி. எடுத்துக்காட்டாக, நன்னித்தம்பியின் பாலியல் துன்புறத்தல்களை ஒரு சிறுமியின் நோக்காகவே, எழுத்தாளரது அறிவின் எந்தக் குறிக்கீடும் இல்லாமல் பதிவு செய்திருப்பது.

அதேபோல சமூகத்தில் ஒத்த வர்க்க நிலையைச் சேர்ந்த மக்களுக்கிடையான நட்பும் கருணையும் உறவும் பொறாமையும் இன, மத பேதங்களைக் கடந்தது என்பதை பிரசார தொனியின்றி, காட்சிகளால் கட்டமைத்திருப்பதையும் குறிப்பிடலாம்.

மற்றது, வெளிநாட்டு, உள்நாட்டு அரசியல், பொருளியல் கொள்கைகளுடன் கேந்திர அரசியல் காய் நகர்த்தல்களால், இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான  உறவுநிலையானது எவ்வாறு நகர்கிறது என்பதன் காட்சிப்படுத்தல். இதை வெகு கவனமாக இயல்பான ஊடாட்டங்களாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிள்ளையார் கோயிலில் 400 தமிழ் மக்களைக் கொண்ட ஊர்க்காவற்படைத் தலைவர் முகமது ரியாஸ் புலிகளால் கொல்லப்படுகிறான். அதேநேரத்தில், சுல்தான் பப்பா, உம்மா என்றும் போராளிகள் பெயர் வைத்துக்கொள்கிறார்கள். 1990களில் யாழ்ப்பாணத்தில்  தமிழாக்கச் சீர்த்திருத்தம் வந்த பின்னரே இயக்கப் பெயர்களும் நல்ல தமிழ்ப் பெயர்களாகின.

சிங்களவனால் மகனின் தலை துண்டாடப்பட்ட தாய்க்கு உறுதுணையாய் உடனிருக்கிறது ஒரு சிங்களக் குடும்பம். கணவன், பிள்ளைகள், ஊர், உறவு என எல்லாவற்றையும் இழந்த நிலையில் அந்தத் தாய்க்குத் துணையாகிறார் மற்றொரு சிங்களவர்.

தேனும் எருமைத்தயிரும் தினையும் குரக்கனும் மான் இறைச்சியும் காட்டுப் பன்றியும் களியாற்று மீனும் தின்று சோம்பேறிகளாகவும் மந்தமாகவும் இருந்த பதுமர்களை சிங்களவர்களின் உழைப்பு உசுப்பி விடுவது ஒரு காலம் என்றால், அந்தத் தமிழ் மக்களின் வீடுகளை எரித்து ஊரைவிட்டுத் துரத்துவது இன்னொரு காலமாக இருக்கிறது. பஞ்சம் பிழைக்க வந்த குடிகள், பழங்குடிகளை விரட்டுவதை சூழலின் தூரிகையாலே வரைந்துவிடுகிறார்.

ஆங்கிலேயர் தங்களது 200 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், ஆசிய நாடுகளில் சாதித்த மிகப் பெரிய விஷயம், ஆங்கில மொழி, கலாசாரம் சார்ந்த உயர்வு மனப்பான்மையை இப்பிரதேச மக்கள் மனங்களின் அடி ஆழத்தில் ஏற்படுத்தியது.  ஆங்கிலத்துடன், ஆளும் இனத்தின் மொழி மீதும்  இத்தகைய உயர்வெண்ணம் இன்றளவும் ஆசிய மக்களிடம் உள்ளது. இலங்கை மக்களும் இதற்கு விலக்கானவர்களல்ல.

சிங்களம் புழங்கும் தமிழ் மக்களிடத்தே, தமிழ் படிக்காததால் சிங்களத்தி என்று கேலி செய்யப்பட்ட ஆலா, சிங்களம் தெரியாத வடக்கு மக்களால் உயர்வோடு பார்க்கப்படுகிறாள். எளிதில் உயர் இடத்துக்குச் செல்கிறாள். நீராமகளிர் பாடல்களைப் பாடி வளர்ந்த ஆலாவிடம் எல்லாரும் சிங்களப் பாடல்களைப் பாடச் சொல்லிக்கேட்கிறார்கள்.

தற்கொலைத் தாக்குதலுக்குக் கிளம்பும் ஆலாவும் செம்பியனும் இறுதி விருந்தில், இடி, காற்றோடு வேகமாக வரும் மழையைப் பார்த்து பயப்படும் சிறுமி பாடுவதாக அமைந்த ‘அக்கே அக்கே அர பலான்னனகோ’ எனும் சிங்களப் பாடலைப் பாடி, புலித்தலைவர் உட்பட எல்லாரையும் நெக்குருக வைக்கின்றனர்.

 இலங்கைத் தமிழர்கள்

யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர், கொழும்புத் தமிழர், கரையோரத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், தமிழ் முஸ்லிம்கள் என இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு பிரிவினரதும் பாரம்பாரியங்களும் மொழியும் வழமைகளும் மாறுபட்டவை, தனித்தன்மையானவை.

இந்நாவலில், முக்கியமாக மட்டக்களப்புத் தமிழ் மக்களின் சமூகவியல் வரலாற்றையும் வாழ்வையும் பதிவு செய்திருக்கிறார் ஷோபாசக்தி.

இலங்கையின் கிழக்குப் பகுதியான மட்டகளப்பு மாந்திரீகத்திற்குப் பேர் பெற்றது. கண்ணனி அம்மன் வழிபாடு அங்கு பரவலானது. விவசாயம், கூத்து, நாட்டார் பாடல்கள், சல தேவதைகள், நாக தம்பிரான்கள் என்று இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கைக்குப் பழகியவர்கள். பாயோடு ஒட்ட வைப்பவர்கள், சோம்பேறிகள் என்று இவர்களை மற்றப் பகுதித் தமிழர்கள் சொல்வதும் உண்டு.

ஈழப் போரில் களத்தில் நின்று போராடியவர்களிலும் உயிரைக் கொடுத்தவர்களிலும் பெருமளவினரான இப்பகுதி மக்களைப் பற்றிய ஓரளவு முழுமையான சித்திரத்தைத் தருகிறது இந்த நாவல்.

எஸ்.பொன்னுதுரைக்குப் பிறகு, தொன்மைச் சிறப்பை இன்னமும் தக்கவைத்திருக்கும் மட்டக்களப்புத் தமிழின் அழகை பரந்த வாசகப் பரப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார் ஷோபாசக்தி. எஸ்.பொவிடம் அந்தத் தமிழ் தன்னியல்பில் உணர்ச்சிவசப்பட்டிருக்கும். ஷோபாவிடம் கட்டுப்பட்டு நிற்கிறது.

குறளி, தூவல், ஆலா என பல நல்ல தமிழ்ச் சொல்லாடல்களும், அனுமான் கொத்திய விறகு, குன்றிமணிக்கும் குண்டியிலே கறுப்பு, உண்மையைச் சொல்வதற்கும் தரையில் உட்காருவதற்கும் தயங்கத் தேவையில்லை, படுத்துக்கொண்டே பிரார்த்தனை செய்தால் கடவுளும் உறங்கிக்கொண்டேதான் கேட்பார், புத்தியுள்ள மூளைக்கு நான்கு கைகள், பேச்சு வெள்ளியென்றான் மௌனம் தங்கத்துக்குச் சமம், வேரில் நின்றால்தான் தல விருட்சம், விழுந்து போனால் விறகு, உருளுகிற கல்லில் பாசி இருக்காது போன்ற பழமொழிகளும் வாசிப்பனுபவத்தை இனிமையாக்குகின்றன.

இதில் ஷோபாசக்தியின் பகடியும் எள்ளலும் நாவலின் புறச் சித்திரிப்புகளை அக உணர்வுகளை அலச வைக்கின்றன.

வேலாயுதம் அம்மாச்சி, ஜப்பான் போகமுடியாமல் ‘ஜப்பான் மருந்து’ குடித்து இறந்து போவது அனுமானிக்க முடியாத விதி என்னும் ஒற்றை வரியில் இலங்கையில் வெளிசக்திகளின் தாக்கமானது அரசியல் நிலைப்பாட்டுக்கும் அப்பால் எவ்வாறு மக்களிடமும் படிந்துள்ளது என்பதை சொல்லிச் செல்கிறார்.

“சம்பூரில் அனல் மின்னிலயம் கட்டும்திட்டம் புலிகள் இருந்தவரையில் சாத்தியமில்லாததால், சம்பூரில் போரை இந்தியா தொடங்கியிருக்கிறது. லட்சுமணன் கோட்டை அவர்கள் இன்னொருமுறை தாண்டமாட்டர்கள். ஆனால் அனுமானை அனுப்புவார்கள்,” என்ற வரிகளும் சட்டம், உலக போர்விதிகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு,  கைதிக்கு போதை ஏற்றி புலன் விசாரணை செய்யும் இந்திய அதிகாரியும் ஈழப் போரின் கத்திப்பிடியை மின்னலாகக் காட்டிச் செல்கின்றன.

புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதியான வாமனும் அவரது ‘உறவு’ தலைப்புகளில் வரிசையாக வரும் நிகழ்ச்சிகள் பற்றிய கிண்டலும் உச்சம்.

நாவலின் வடிவம்

மிகவும் திட்டமிட்டு, செறிவாக்கப்பட்ட வடிவம் சில தருணங்களில் வாசிப்பவரை படைப்புடன் ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது என்றாலும் மேற்கத்திய நவீன படைப்புகளின் வெற்றிக்கு இந்த வடிவ நேர்த்தியும் படைப்பிலக்கியத் தொழில்நுட்பமும் முக்கிய பங்காற்றுகின்றன. எந்த இடத்திலும் இடறிவிடாமல், வாசகருக்குக் கேள்வி எழா வண்ணம் ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்து கோத்துள்ளார் ஷோபா. கருத்துகளையும் பார்வைகளையும் பாத்திரங்கள் வழியாக, வாசகரின் பார்வையில் சட்டென்று தெரியாவண்ணம் திறமையாக அவர் வெளிப்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக, ஈழப் போரில் இந்தியாவின் பங்கு, புலம்பெயர் ஈழ சமூகத்தின் ஈழம், தமிழ் மொழி சார்ந்த செயல்பாடுகள், ஆதரவு நாடுகள்  பற்றி விமர்சனப் பார்வைகளைச் சொல்லலாம்.

கனவுகளில், நாம் அறியாத மொழிகளும் ஊரும் சித்திரமாக வருவதைப்போல, வெளிநாடுகளுக்குச் செல்லாத, வெளிநாட்டு மொழிகளை அறிந்திராத ஒரு பெண், தானே ஒரு புதிய மொழியை உருவாக்கிக்கொள்கிறாள். அந்த மொழியாக்கம் நாவலுக்கு பெரிய அளவில் பங்களிப்புச் செய்யவில்லை என்றாலும், வாசிப்புக்கு எவ்விதத்திலும் இடையூறு செய்யாதவாறு மிகக் கவனமாக அதனைக் கையாண்டு இருக்கிறார். இதில், உயிர்வாழ்வின் நம்பிக்கையனைத்தையும் இழந்த நிலையில் துளிர்க்கும் ஒரு சிறு பற்றுக்கோடான கற்பனைகூட எந்த அளவுக்கு உயிர்சக்தியைத் தரவல்லது என்பதை மிக நுட்பமான உளவியல் அவதானிப்புடன்  பதிவு செய்துள்ளார்.

உச்சபட்சமான அல்லல்களையும் அவதிகளையும் அவமதிப்பையும் இழப்புகளையும் எதிர்கொள்ள கடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட ஓர் இளம் பெண்ணால் என்னதான் செய்ய முடியும்? பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் (Post-traumatic stress disorder, PTSD) எனப்படும் மனப் பாதிப்பை வாசகர்களிடம் கடத்த, சொற்களை விழுங்கிவிட்டு வடிவத்தை கையில் எடுத்து, அதை தேர்ந்த கலைநுட்பத்துடன்  படைப்பாக்கியிருக்கிறார் ஷோபா சக்தி.

 

பெண் எனும் இச்சா சக்தி

இந்திய சிந்தாந்த மரபின்படி இச்சை எனும் ஆசையின் விழைவானது ஒரு சிறு புற காரணியிலிருந்து உயிர்வாழும் பெரும் அக உந்துதலைப் பெற்று, எல்லாத் துயரங்களையும் கடந்து விடுகிறது என்பதை பெண் எனும் படிமமாகச் சொல்லிச் செல்கிறது இந்நாவல்.

பல்வேறுபட்ட பெண்களின் பார்வையிலும் மனநிலையிலும் போர்களும் அடக்குமுறைகளும் உயிர்ப்பிடிப்பை  மேலும் வலுவாக்குவதை நாவலின் நாயகியான ஆலாவில் தொடங்கி, அவள் அம்மா, அப்பச்சிகள், சித்தி, மல்காந்தி ஆச்சா, தாரணி, செந்தூரி உம்மா, லொக்குநோனா, மர்லின் டேமி, றங்கனி, திரேசா அம்மா, கேஷாயினி, சாருலதா என நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களிலும் காணலாம்.

இச்சை அகத்தை உறுதியாக்குகிறது, அது சில நேரங்களில் ஆங்காரமாகவும் சிலShoba_sakthi நேரங்களில் அழுத்தமாகவும் சில நேரங்களில் அசரவைக்கும் திறனாகவும் வெளிப்படுகிறது.  வீட்டிலிருந்தாலும் காட்டில் உழைத்தாலும் போர்களத்தில் நின்றாலும் பாலியல் தொழில் செய்தாலும் காதலிலும் காமத்திலும் மூழ்கிக் கிடந்தாலும் சிறையில் அடைபட்டிருந்தாலும் எப்படியிருந்தாலும் எல்லாப் பெண்களுமே வலிமைகொண்டவர்களாக வலம் வருகிறார்கள். சுல்தான் பப்பா மீதான இச்சை ஆலாவை சிறைக்கொடுமையிலும் சிதைந்துவிடாமல் காக்கிறது என்றால், உயிர்வாழ்தல் மீதான இச்சை அவள் அம்மாவுக்கு எல்லாவற்றையும் இழந்தநிலையிலும், மீண்டும் ஓர் உயிரைப் பிறப்பிக்கும் மனவலுவைத் தருகிறது.  “இந்த உயிர் பேராற்றலுள்ளது. இந்த ஆற்றலை திருட்டு நாய் இருட்டில் கஞ்சி குடிப்பது போல் சாவு குடித்துவிடக்கூடாது” என்று ஆலாவின் வரிகளில் இந்த உறுதிப்பாட்டைச் சொல்லிவிடலாம்.

இப்பெண்கள் உலகில் எந்தப் பகுதியின் போர்ச்சூழலுக்கும் பொருந்தக்கூடியவர்கள்.

ஆனால், இந்தப் பெண் பாத்திரங்களின் உயர்வுநவிற்சித் தன்மை அவர்களை நெருங்கிச் செல்ல முடியாது செய்துவிடுகிறது. தமிழ்ப் பெண்கள், சிங்களப் பெண்கள், சிறையில் இருப்பவர்கள், சிறையதிகாரிகள், போராளிகள் என எல்லாப் பெண்களுமே ஏதோ ஒரு விதத்தில் உறுதி மிகுந்தவர்களாகவும் தியாகிகளாகவும் நியாயப்படுத்தப்படக் கூடியவர்களாகவும் ஒரு வகையில் பரிதாபத்திற்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். வீரம், பரந்துபட்ட சமூகநோக்கு, கீழ்மைகள்- மேன்மைகள் எதிலும் அவர்கள்  ஆண்களுக்கிணையானவர்களாக இல்லை. கொஞ்சம் இயல்பாக இருப்பது வாமனின் அக்கா, கியோமோ நோனா என ஒரிருவர்தான். நாவலில் வரும் பெண்களின் அறியாமையும் ஒரு வகையில் மெல்லிய பரிதாபத்திற்குரியதாகவே காட்டப்படுகிறது. ஆணின் பார்வை, ஆணாதிக்க சிந்தனையின் பிரதிபலிப்பாக இந்தப் பார்வையைக் கொள்ளலாம். பெண்களைப் படையில் சேர்க்க பிரசாரம் செய்பவர்கள் மானத்தையும் கற்பையும் பாதுகாக்க போராட்டத்தில் இணையச் சொல்கிறார்கள். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு பயமேற்படுத்தி, அந்த பயத்தை தங்களுக்கு சாதமாக்கிக்கொள்கிறார்கள். அப்பணியையும் பெண்களே செய்கிறார்கள்.

லட்சியவாதமும் மிகை உணர்ச்சியும் மிக்க ஜனரஞ்சகப் படைப்புகளில் தனியுரிமை, விடுதலை, வீரம், தியாகம் போன்ற கோஷங்கள் காதையடைக்கிறது என்றால், இரக்கத்தையும் கருணையையும் பரிதாபத்தையும் கண்ணுக்குத் தெரியாத திரையாகத் தொங்கவிடும் இத்தகைய பின்நவீனத்துவ சிந்தனை அயர்ச்சியைத் தருகிறது.

தன் மரணத்தை தியாகமாகவோ, வீரமாகவோ மாற்றுவது ஒன்றே கொலைக்களத்தில் நிற்கும் ஓர் எளிய பலி பெறக்கூடிய உச்சபட்ச வெற்றி எனில், தன் தலையை முதலில் வெட்டுமாறு முன்வந்து நின்ற மந்திரிகுமாரி சாமிலிதேவியைப் போலவே, தற்கொலைப் போராளியாக முன்வந்து நிற்கிறாள் ஆலா.

உணர்வுநிலை சார்ந்த சிந்தனையும், சுய பகிடியும், சமூக எள்ளலும் நிறைந்த முற்றும் முழுதான தமிழ் மனத்தின் வெளிப்பாடு ஆலாவும் சாமிலிதேவியும். ஒருத்தி சிங்களத்தி, மற்றவள் தமிழச்சி. ஆனால்,  அந்நியர் அல்லது ஆளும் வர்க்கத்தால் எழுதப்படும் வரலாற்றில் இருவருமே பேரினவாதத்தின் பலிகடாக்கள் என்பதை உணர்வுபூர்வமாகவும் தர்க்கபூர்வமாகவும் நிலைநிறுத்துவதன் மூலமாகவே, அச்சிந்தனையைக் கலைத்துப்போடுகிறார் நாவலாசிரியர்.

மட்டக்களப்பின்  கிராமம் ஒன்றில் வளர்ந்த  பதுமர்குடிப் பெண்ணான ஆலாவுக்கு தனது பிரதிபிம்பமாகத் தெரிவது, தமிழனால் கொல்லப்பட்ட ஒரு சிங்கள மந்திரிகுமாரி என்று சொல்வதன் மூலம் இலங்கையின் பெரும்பான்மை – சிறுபான்மை குறித்து இதுகாலம் வரையில் நிர்மாணிக்கப்பட்டு வந்துள்ள மனப்போக்கை ஐயப்பட வைக்கிறார்.

அதேவேளையில், பெரும் சித்திரங்களாக விரியக்கூடிய பல காட்சிகளின் எல்லைகளைக் குறுக்கி விடும்போது ஒரு குறைபாடாகவும் மாறிவிடுகிறது. ஜப்பானுக்கு கிளம்பி கடைசியில் ஜப்பான் மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ளும் வேலாயுதத்தின் மனநிலை, கஞ்சா போதையுடனும் கைத்திறனுடனும் உலவிய  ஆலாவின் தம்பி விபுலின் பார்வை, விபுல் தலை வெட்டப்பட்டுக் கிடந்ததும் பாட்டனாரே அவனது தலையை உடம்போடு சேர்த்து தைத்து வைத்ததும், மனநிலை பேதலித்த அப்பா, சிங்களக் கணவரோடும் வயிற்றில் கருவோடும் சிறையில் மகளைக் காணும் தாய் என்று பல காட்சிகள் ஓர் அப்பாவிச் சிறுமியின், இளம் பெண்ணின் பார்வைக்கு அப்பாலும் விரிந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

இலங்கை சமூகமும் ஈழப்போரும்

இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் குறித்து வெளியுலகில் பகிரப்படும் கருத்துகள் சூழல்நிலை சார்ந்தவை. சில, பல தருணங்களுக்கு மட்டுமேயானவை. பகமையோடும் நட்போடும் ஒன்றாகவே வாழும் இச்சமூகங்களுக்கிடையிலான உறவுகள், ஊடாட்டங்கள் குறித்த ஒரு முழுமையான பார்வையைத் தருவதில் ஓரளவு இந்நாவல் வெற்றி கண்டுள்ளது.

காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளின் பிரதிநிதிகளாக, தங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய இலங்கை/யாழ்ப்பாணத் தமிழர்களிடத்தில் மலேசிய, சிங்கப்பூர் தொழிலாள வர்க்கத்தினருக்கு நூற்றாண்டு காலமாக ஒருவித விலகலும் வெறுப்புமே உருவாகி இருந்தது. கங்காணிகளாகவும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பதவிகளிலும்  உயர்நிலையில் இருந்த அவர்களை தங்களது தேவைகளுக்காக சந்திக்க வேண்டி இருந்தாலும், தங்கள் கோயில் வட்டாரத்திலும் வசிப்பிடங்களிலும் அண்டவிடாத அவர்களிடம் ஒட்டு உறவு இல்லாமலேயே தமிழகத்தில் இருந்து இங்கு குடியேறிய பெரும்பாலான தமிழர்கள் இருந்து வந்தனர். அதனால் ஈழம், ஈழத் தமிழர்கள் பற்றிய முழுமையான சித்திரமோ அவர்களது போராட்டம் குறித்த ஆழமான புரிதலோ பொதுவாக இங்கு வாழும் மற்ற தமிழர்களிடம் ஏற்படவில்லை. ‘கறுப்புத்துரை’களாக விளங்கிய யாழ்ப்பாணத் தமிழர்களும் மலையாளிகளும்  ஏற்படுத்த ஆறா வடுக்களின் தழும்புகள்  தொழிலாள சமூகத்தில் இன்னும் நினைவுகளாகப் படிந்திருக்கின்றன. ஆனாலும், 1980களுக்குப் பிறகு உக்கிரமடைந்த ஈழப்போரும் விடுதலைப் புலிகளும் தங்கள் பாட்டி, தாத்தாக்களை எட்டி உதைத்த யாழ்ப்பாணத்து தோட்டத்துக்  கங்காணிகள் மீது இருந்த கோபங்களை மறக்கச் செய்தனர்.  உலக அரங்கில் தமிழர்களைப் பற்றிப் பேச வைத்தவராக, தமிழ் மொழிக்கும் தமிழர்களும் உலகில் ஓர் தனி இடத்தைப் பெற்றுத் தரப் போராடிய தலைவராக இன்றுவரையில் பிரபாகரன் கொண்டாடப் படுகிறார்.

இதற்கு, உலகளாவிய நிலையில் அரசியல், பொருளியல், சமூகவியல் சார்ந்த தனித்த அடையாளத்தையும் இடத்தையும் அடைய வேண்டுமென பல்லாண்டு காலமாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினிடம் ஊறிச் செரித்துள்ள எண்ணம் முக்கிய காரணம் எனலாம். இந்த லட்சியவாத எண்ணத்தை மேலும் வலுவாக்க, ஊடகங்களும் கல்வியும் வரலாற்று அறிஞர்களும்  போலவே படைப்பிலக்கியங்களும் பங்காற்றின. இத்தகைய மைய நீரோட்டத்தில் இருந்து விலகித்தான் ஷோபா சக்தி போன்ற நவீன எழுத்தாளர்கள் உருவாகிறார்கள்.

ஈழத் தமிழ் மக்களின் அறமும் அநீதியும் அன்பும் பகைமையும் மகிழ்ச்சியும்  துயரமும் துரோகமும் பொறாமையும் வாதையும் வலியும் சாதிகளும் வர்க்கங்களும் என எல்லாமும் நிறைந்த ஒரு நீண்ட வரலாற்றையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் இதுபோன்ற கலை, இலக்கியங்களே பெருமளவில் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன எனலாம்.

வரலாற்றில் காத்திரமான பகுதியை நவீன எழுத்தாளன் கையில் எடுப்பது ஏன்? அன்றாட செய்திகளை வாசிக்கும் மனிதர்களின் எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் தனது புரிதலை ஒரு விவாதப்பொருளாக்குவதும் ஒரு படைப்பாளியின் பணியாவதில்லை. அல்லது மக்களை ஒத்த மனநிலைக்கு ஒன்று திரட்டுவதும் அவன் கடமையல்ல.

ஷோபா சக்தி ஈழப்போர் சூழலை மட்டுமே தனது புனைவுக்குள் கருவாகக் கொண்டிருக்கிறார் என்றும் அதன் வழி அவர் அந்நிலத்தில் சஞ்சரிக்கிறார் என்றும் கூற்றாகவோ, குற்றச்சாட்டாகவோ சொல்லப்படுவதுண்டு. பூமிக்கு அந்நியமாகப் பறக்கும் கருடனை குறி வைக்க ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த மூங்கிலில் அம்பு செய்வது குற்றமாகாது. ஷோபா சக்தியின் ‘இச்சா’ ஈழ மண்ணில் அவருக்கு அறிமுகமான மனிதர்களிடம் தொடங்கி உலகம் முழுமைக்குமான குரலாக ஒலிப்பதுதான் அவரை நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய ஆளுமையாக்குகிறது.

ஓர் எளிய பெண்ணைத் தற்கொலைப் போராளியாக்கும் சமூக, அரசியல் சூழல், அதற்கான மனவலுவை தரும் சுயமும் புறமும் சார்ந்த அகவேட்கை, சிறு பெண்ணின் அசைக்கமுடியாத அந்த வல்லுறுதியையும் அர்ப்பணிப்பையும் அர்த்தமற்றதாக்கும் நுண்ணரசியல், இதனால் ஒரு தொன்மையான சமூகம் இழந்துவிட்ட மீட்டெடுக்க முடியாத சுயம், இதுவே நாவலின் மையக் கரு. இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கில் 1956ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் மக்களின் மீதான தாக்குதலில் தொடங்கி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஊழிக்காலம் வரையிலான காலகட்டம் நாவலின் பின்புலம்.

இந்தப் பின்புலமும் நிலமும் பின்னுக்குச் சென்று, மானுடன் மெல்ல மெல்ல முன்னிலைக்கு வருவதுதான் ஷோபா சக்தியின் கலைப்படைப்பின் திறம் எனலாம்.

நாட்டார் கதை : ‘கண்டி அரசன்’ கூத்து

இச்சா நாவலெங்கும் அடிநாதமாக அரசியல், உளவியல் படிமமாக வருவது கண்டி அரசன் கூத்துக் கதை.

அந்நியருக்கு எதிர்ப்புக்கொடி தூக்கிய பூலித்தேவன், கட்டபொம்மன், சிவகங்கைச் சகோதரர்கள் உள்ளிட்ட பாளயக்காரர்களையும் பண்டாரவன்னியனையும் கண்டி அரசனையும் ஒரே சமூகமாகப் பார்க்க முடியாமல் செய்ய, திட்டமிட்ட மனத்தடைகள் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப்பட்டு வந்துள்ளதைப்போன்றே, பெரும்பான்மை – சிறுபான்மை பற்றிய கருத்தாங்களும் இலங்கையில் உருவாக்கப்பட்டு வந்துள்ளன.

இலங்கையின் மத்திய பகுதியான கண்டியை ஆண்ட (1780 – ஜனவரி 30, 1832) கடைசித் தமிழ் மன்னனான நாயக்கர் பரம்பரையில் வந்த ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், நாடு பிடிக்க வந்த கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து வெற்றிகொண்டவன். இவனைத் தமிழனென்று தமிழர்களும் சிங்களவன் என்று சிங்களவர்களும் தெலுங்கன் என்று இன்னும் சிலரும் சொல்வார்கள். இதுவரை நிறுவப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் அவன் மதுரை நாயக்கர் பரம்பரையில் வந்த கண்ணுச்சாமி என்ற தமிழன். இந்துவாக இருந்து பௌத்த மதத்தை தழுவியவன்.  கண்டியைக் கட்டியெழுப்பி, மக்களின் வாழ்வை உயர்த்தியவன். இவனது ஆட்சிக் காலம் குழப்பங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்ததாக இருக்கிறது. இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரிட்டிஷ்ஷார், கண்டியை குறிவைக்கிறது. போரில் பிரிட்டிஷ் படை தோற்கிறது. விக்கிரம சிங்கனை அரசனாக்கி, போருக்குத் தூண்டிய பிலிமத்தயாவோ எனும் மந்திரி, மன்னனைக் கவிழ்க்க பலமுறை சதிச்செயலில் ஈடுபட்டதற்காகக்  கொல்லப்படுகிறான். அவனது மருமகனான எஹெலபோல மந்திரியாகிறான்.  அவனும் மன்னனுக்கு எதிராகச் செயல்பட்டு குழப்பங்களைத் தூண்டி விடுகிறான். குழப்பங்கள் அடக்கப்பட அவன் தப்பி ஓடுகிறான். சிங்களவர்கள் அதிகம் வாழ்ந்த கண்டிப் பகுதியில் தமிழ் மன்னன் அவனுக்கு சிங்கள மந்திரி.  பிரிட்டிஷ்  1815ல் கண்டியைக் கைப்பற்றி, ‘கண்டி  ஒப்பந்தத்தின்’ மூலம் கண்டி அரசைத் தன்வசமாக்குகிறது.  தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்  1832ஆம் ஆண்டு அங்கேயே உயிரிழந்தான். தற்காலத்தில் இந்தச் சிறையில் இலங்கைப் போராளிகள் பலரும் இருந்திருக்கிறார்கள் என்பதும் ஒரு வரலாறு.

விக்கிரம ராஜசிங்கன்  வேலூர் சிறையில் இறந்த அந்த காலகட்டத்தில், அவனைக்  காமுகனாகவும், மக்களைக் கொடுமைப்படுத்துபனாகவும் சித்திரித்து ஒரு கூத்துக் கதை எழுதப்படுகிறது. அந்தக்காலகட்டத்தின் மக்களிடம் பிரபலமான சமூக ஊடகம் தெருக்கூத்து. கண்டி அரசன் கொடுங்கோலனாக இருக்கிறான், மக்களைக் கொடுமைப்படுத்துகிறான். மன்னனுக்கு பயந்து மந்திரி எஹெலபோல தப்பியோடுகிறான். மன்னன் அவன் மனைவியையும் மக்களையும் கண்டி அரண்மனையில் கொடுமையான முறையில் கொன்றொழிக்கிறான் என்பது கூத்திக் கதை. ஒரு காலத்திலும் எரிந்த கட்சிக்கு, எரியாத கட்சியைப் பற்றி வேறு மாதிரி  சொல்லத் தைரியம் வந்ததில்லை. தமிழ் – சிங்கள மக்களிடையே வெறுப்புணர்வையும் வரலாற்றுத் திரிபையும் ஏற்படுத்தும் ‘கண்டி ராசன்’ என்ற இந்தக் கூத்து,  மதுரை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என வெவ்வேறு இடங்களிலும் எழுதப்பட்டு கிட்டத்தட்ட இருநூற்றாண்டு காலமாக சிங்கள மக்களிடத்திலும் தமிழர்களிடத்திலும் பிரபலமான கூத்தாக வலம் வந்தது.

இந்தக் கூத்தின் உச்சம், மன்னனின் முதலமைச்சர், எஹெலபோலவின் மனைவி தனது பச்சிளங்குழந்தையை உரலில் போட்டு இடிப்பது.  சிறு வயதினரான அவளது இரு ஆண் பிள்ளைகளின் தலைகள் முதலில் துண்டிக்கப்படுகின்றன. பின்னர் பிறந்து 10 நாளே ஆன பச்சிளங்குழந்தையை, அரண்மனை முற்றத்திலிருந்த உரலில் தானே போட்டு, அதன் தலையை அவளே உலக்கையால் குற்றி நொறுக்க வேண்டுமென ஆணையிடுகிறான் கண்டி அரசன். மந்திரி  மனைவி தனது குழந்தையை உரலில் போட்டு, அழுது புலம்பி, பாடியவாறே உலக்கையால் குற்றுவாள். இந்தக் காட்சியே நாடகத்தின் நாடியாக இருக்கும். இதைப் பார்ப்பதற்காகவே மக்கள்  கூடுவர். (தமிழகத்திலும் மேடையேற்றுப்பட்டு வந்த கொடுமைக்காரனான கண்டி அரசன் கூத்தை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் புதையல் படத்தில் இடம்பெறச் செய்திருப்பார்.)

பொதுவாக, தமிழ் மரபில் எழும் நாட்டார் கதைகள் ஆளும் வர்க்கத்தால்/சமூகத்தால் ஒடுக்கி அழிக்கப்பட்ட அல்லது தானாகவே அழித்துக்கொண்ட தோற்றுப்போனவர்களை, அவர்கள் கொள்ளைக்காரராக, கொலைபாதகராக இருந்தாலும் தெய்வமாக்கிக் கொண்டாடும். ஆனால், இந்த நாட்டார் கதையின் அடிப்படையே மாறுபட்டிருப்பதை, தமிழ்ச் சிந்தனையை மாற்ற விரும்பிய மேற்கத்திய முன்னோட்ட முயற்சியாகப் பார்க்கலாம். இந்த முயற்சி இன்றுவரையிலும் தொடர்கிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.

கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களை எதிர்த்த பாளையக்காரர்களும் கண்டி அரசனும் ஒன்றல்ல என்ற எண்ணத்தை உருவாக்கி, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் மிடையே ஓர்   இடைவெளியும் மேல் கீழ் மனோபாவமும் ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் (இது குறித்து மிக விரிவாகப் பேச வேண்டும்) பங்காளிகளாக, சண்டையும் சமாதானமுமாக வாழ்ந்து வந்த இலங்கை சமூகங்களுக்கிடையே கடக்க முடியாத மனக்கசப்பு வளர்க்கப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தும் அரசியல் படிமமாக இக்கூத்தை நாவலில் பார்க்கலாம். சிங்களத்தாய்க்கும் பிள்ளைகளுக்கும் கொடுமை விளைவிக்கப்பட்ட இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் கண்டி அரண்மனை, கண்டி ஏரி அருகேயுள்ள கண்டிச் சிறைச்சாலையிலிருந்து ஒரு தமிழ் பெண் தன் கதையைச் சொல்லவைத்திருக்கும் ஷோபா சக்தியின் பகடியை, ஒரு குறுகலான தளத்துக்குள் வைத்துப் பார்க்க முடியாது. கதைக் களத்திலிருந்து விலகி,  ஆலாவுக்கும் அவள் வாழ்ந்த காலத்தின் அக உணர்வுகளுக்கு அப்பால், புறச்சூழலில் நடந்த மாற்றங்களையும் உட்படுத்திய ஓர் அகன்ற பார்வையில் பார்க்க வைக்கிறார்.

மந்திரி மனைவி தனது பச்சிளங் குழந்தையை உரலில் போட்டு அழுதுகொண்டே இடிப்பதைப் பார்ப்பதில் ஏற்படும் அவலருசியாலேயே காலங்காலமாக மக்கள் அக்கூத்தைப் பார்த்து ரசிப்பதைப்போல, ஆலா, சிங்களவர்களால் இழுத்துச் செல்லப்படுவதை  ஊர் மக்களும்; அவளின் துடிதுடிக்கும் வலியை விசாரணையாளர்கள், சிறை அதிகாரிகளும்,  அவளின் கொடும் வதையை இயக்கமும்; வன்புணர்தலில் தொடங்கி, தனிமைச் சிறையில் அடைத்தும், மனப் பிறழ்வை ஏற்படுத்தியும் பிள்ளையிடமிருந்து பிரித்தும் களிப்படையும் வாமனனும்; வெளி உலக கூட்டு சக்திகளால் அனுபவித்த வாதைகளுக்கும் மேலே சென்று, கற்பனையாக அந்தரங்கமான உறவுக்குள் தனிமனிதனாலும் எண்ணங்களின் சாத்தியத்துக்கு எட்டும் மட்டும் துன்புறுத்தலை அனுபவிக்கும் ஆலாவும் ரணத்திலும் ரத்தத்திலும் மரணத்திலும்  கிளர்ச்சியும் பரவசமும் அடையும் நம் மனதின் குரூரங்கள்  என்பது, ‘இச்சா’ நாவலில்  வாசகன் தன்னைக் கண்டடையும் இடம்.

நிகழ்வுகளாலும் ஓர்மைகளாலும் மேலும் மேலும் நிரம்பித் ததும்பும் இந்த வாழ்வு,  அப்படியான அகப் பார்வையைகளையும் அழகுணர்வுகளையும்  உள்வாங்கித்தான் இத்தனை வளர்ந்து  கொண்டிருக்கிறது. தனிமனிதர்களும் சமூகமும் சமூகக்குழுமங்களும் அகத்தினால் புறத்திலும்; புறத்தினால் அகத்திலும் பல சிடுக்குகளில் சிக்கி திண்டாடும் இந்த வாழ்வில், ரசிக்கத் தக்கதாக  குரூரங்களே ஆகிவருகின்றன. உடல் புண்ணை நக்கிச் சுவைக்கும் புலியாக, மனத்தின் புண்களுக்குள் உழன்று உழன்று சுகம் காண்பதிலிருந்து விடுபட, சுயவிசாரணைகளும் அக தரிசனங்களும் தேவைப்படுகின்றன. சொற்களினதும் படைப்புகளினதும் தேவை அதிகரிக்க வேண்டியதும், அவை நம்மை தேடலை நோக்கி நகர்த்த வேண்டிய கட்டாயமும் இதனால்தான்.

10 comments for “இச்சா: குரூரங்களில் வெளிப்படும் இச்சை

 1. Pon Sundararasu
  November 1, 2020 at 8:47 am

  நெஞ்சை ஊடுருவிச் செல்லும் அருமையான நாவல் ஆய்வுரை. இவ்வுரையைப் படித்ததும் நாவலைப் படிக்க ஆவல் மேலிடுகிறது.

 2. தங்க.முருகேசன்
  November 1, 2020 at 11:00 am

  ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவல் குறித்து
  விரிவான விமர்சனப் பதிவு, நாவல் குறித்து மட்டும் பேசாமல் வரலாற்று நிகழ்வையும் பதிவு செய்திருக்கிறார்.
  பதிவு வேலூர் வரை வருகிறது. நல்ல நாவல் குறித்து நல்ல விமர்சனம்.இரண்டு படைப்பாளிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
  – தங்க.முருகேசன், கோவை.
  01.11.2020, காலை 08 : 26

 3. November 1, 2020 at 4:19 pm

  லதாவின் கட்டுரை ஒரு பிரதியை முன்வைத்து எவ்வளவு ஆழம், அகலம், தூரம் போகவியலும் என்பதைக் காட்டியுள்ளது. இதைப்போன்று அவ்வப்போது ஒரு கட்டுரை வாசித்தால் போதும் இனம்புரியாத நிறைவும் கால் தரையில் பாவாத பரவசமும் சூழ்ந்துகொள்கிறது. ஏற்கனவே ‘ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்’ என்ற தலைப்பில் இவர் வல்லினத்தில் எழுதிய கட்டுரை ஒன்று நினைவில் ஆழமாக நீடிக்கிறது. அது தகவல் கட்டுரைதான் இருந்தாலும் அதிலும் ஒரு ஆழம், தனித்துவம். சிங்கையின் அழுத்தமான இலக்கிய அடையாளம் லதா. அவரது படைப்புகள் முன்னுதாரணமானவை.

 4. Shana
  November 1, 2020 at 11:29 pm

  கண்டி தான் என்னுடைய சொந்த ஊர். ஆனாலும் இந்தக் கூத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை தடை செய்யப்பட்டோ, அல்லது வழக்கொழிந்ததோ போயிருக்க வேண்டும். எனக்கு முற்றிலும் புதிய தகவல். இனத் துவேஷம் எதனால் ஆரம்பித்தது என்று இப்போது புரிகின்றது.

 5. Shana
  November 1, 2020 at 11:33 pm

  இவ்வளவு ஆழமான ஒரு விமர்சனத்தை முதல் முறை படிக்கிறேன். இவ்வளவு நீண்டிருந்தாலும் அலுக்கவே இல்லை, வாசித்து முடிக்கும் வரை. அது ஊருடனான உறவின் காரணமாகவும் இருக்கலாம் என்ற போதிலும் இனி இச்சா கதையை வாசிக்கும் போது ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மிகவும் அருமை லதா

 6. Arun Ambalavanar
  November 3, 2020 at 9:50 pm

  2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்த போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பைபெற்று பிரபல்யமாகின்றன. இந்த நாவல்களை எழுதியவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் பிரபல்யத்தால் மனங்குமைந்து “ரென்சனான” ஷோபாசக்தி தனக்கு இருக்கும் தெரிவுகளை ஆராய்கிறார். ஷோபாசக்திக்கு தனது சரக்கும் இலக்கிய திறமைகளும் தீர்ந்துபோனது தெரியும். புலி எதிர்ப்பாளன், புலி விமர்சகன் போன்ற தனக்கு எதிராக இருக்கிற வணிக சாபங்களையும் சமரசம் செய்து குத்துக்கரணமடித்து புலியாதரவு நாவலாகவே எழுதுவதைத்தவிர தன்னிடம் திராணி இல்லை என்பதை உணர்ந்த ஷோபாசக்தி தீட்டியதுதான் Box கதைப்புத்தகம். பொக்ஸ் போல மலினமானதுதான் பிறகு வந்த இச்சாவும். இவை இரண்டும் ஷோபாவின் கொரில்லாபோன்ற மகத்தான படைப்புக்கள் அல்ல.
  https://www.jaffnafashion.com/2020/07/blog-post.html

 7. பி.மதியழகன்
  November 4, 2020 at 11:17 am

  ஈழப்போரில் தங்களது ஈடுயிணையற்ற உறவுகளைத் தொலைத்து அனாதையாக்கப்பட்ட சிறுமிகளுக்கும், குமரிகளுக்கும் துப்பாக்கியும், கிழிந்தப் போர்வையும் பாதுகாப்பு ஆயுதங்களாக இருந்ததாகவும், அவர்களின் மனவலிமையையும் போராட்ட எண்ணங்களையும் எடுத்துக்கூறுவம் மற்ற இனவாத கொடுமைகள், பிரிவினைகள், தமிழர்களின் நாட்டார் கூத்து, நாவலின் சொல்கட்டமைப்பு என்று ‘இச்சா’ குரூரங்களில் வெளிப்படும் இச்சைக் குறித்த எழுத்தாளர் லதா அவர்களின் பார்வை மற்றும் இந்த நெடும் விமர்சனம், படிப்பவர்க்கு எந்தச் சலிப்புமில்லாமல் “எழுத்தாளர் ஷோபாசக்தியின் புத்தகத்தை” உடனே புரட்டிப் படிக்கத் தூண்டும் எண்ணம் ஏற்படுத்தியதைப் பார்க்கும் போது, நேர்மறையான விமர்சனத்தை எழுதிய லாதவின் எழுத்தாற்றல் உள்ளபடியே அவரின் திறமைக்கு மகுடம் சூட்டுகிறது என்றுதான் சொல்லவேண்டும். விமர்சனங்கள் எப்படி எழுதவேண்டும் என்பதை மற்றவர்களும், புதியவர்களும் கற்றுக்கொள்ளும் சிறந்த விமர்சனம் இது.
  வாழ்த்துகள் லதா!
  வாழ்த்துகள் வல்லினம்!

  இவண்,
  பி.மதியழகன்
  சிங்கப்பூர்.

 8. sv
  November 5, 2020 at 10:05 pm

  தெருக்கூத்துகள் கொண்டுவருகிற நாடகங்கள் தொடர் அரசியல் பங்களிப்பிற்கு முதன்மை பங்கு வகித்துவருகிறது என்பது காலகாலமாக நடந்து வரும் பெருங்கூத்து. உயிரோட்டம் நிறைந்த கட்டுரை இந்த நூல் விமர்சனம்.

  ஸ்ரீவிஜி

 9. November 7, 2020 at 10:09 am

  அன்பின் லதா

  ஆழமாக எழுதியிருக்கிறீர்கள். ஆலா சிறந்த புத்தகம். ஒரு சிறிய அபிப்பிராயம் என்னிடம் இருந்தது.- அந்தப்பெண் இவ்வளவு காலம் சிறையில் துன்பப்படும்போதும் பின் இயக்கத்தால் அழிவுகள் வரும் போதிலும் ஒரு கணமாவது மனவோடையில் அந்த இயக்கத்தையும் அதன் செயல்களையும் கேள்வி கேட்கவில்லை – இதுவே எனக்கு மனத்தில் முள்ளாக இருந்த விடயம். இதை நான்சோபாவிடம் கேட்டேன் . “நான்கூட இயக்கத்திலிருந்து பல வருடங்களாக இயக்கத்தை எந்த கேள்வியும் கேட்கவில்லை ” எனப்பதிலளித்தார்- உண்மைதான். பலர் அப்படியிருக்கிறாருக்கிறார்கள். சோபா வெளிவந்த காலத்தில் இயக்கம் உச்சமாக இருந்தது ஆனால் ஆலா இறந்தகாலத்தில் ஆவியாகிவிட்டது – எனது கருத்துகூட பலருக்கு இயல்பற்றதாக இருக்கலாம் .
  நடேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *