அன்னை ஆடும் கூத்து

peyciஅறுவாள் வகைமைகள் பல. தென் தமிழக அடியாட்கள்  வசம் புழக்கத்தில் இருப்பது இரண்டு. ஒன்று வீச்சறுவாள் மற்றது வெட்டறுவாள். வீச்சறுவாளுக்கு படை மிரட்டி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. குறிப்பிட்ட வகையில் வீச்சறுவாள் கொண்டு வீசி எதிரியை ரத்தம் தெறிக்க (உயிருக்கு ஆபத்து இன்றி) விட்டு, அப்படித் தெறிக்கும் ரத்தம் கொண்டு, அந்த எதிரிக்கு பின்னால் நிற்கும் சிறு படையை மிரட்டலாம். வீச்சறுவாள் பிடி முதல், பிறை போல் வளைந்த நுனி வரை ஒரே சீரான வடிவம் கொண்டு மூன்றடி நீளத்தில் இருக்கும்.

வெட்டறுவாள், வளையம் போல வளைந்த, எடை கொண்ட பிடியுடன், அடியில் மெலிந்து, பிறை போல முடியும் முனையில் பிடியின் அதே எடையுடன் இருக்கும். வீசினால் பிறை வளைவு எங்கே சென்று தொடுமோ அந்த இடம் துண்டிக்கப்பட்டு விடும். எதிரி தோளில் வெட்டறுவாள் இறங்கினால் கை தனியே துண்டிக்கப்பட்டு விடும். கழுத்து எனில் தலை. இப்படி அறுவாள் வகைகள், அதைப் பிடிக்கும் நிலைகள், வீசும் முறைகள் எல்லாவற்றையும் எனக்குச் செய்து காட்டியவன் ஒருவன் உண்டு.

பதின்ம வயதின் இறுதியிலேயே  தாதாக்கள் உலகில் அவன்  நுழைந்து சீக்கிரத்திலேயே செத்தும்  போனான்.

அவனது முதல் அனுபவத்தை ஒருமுறை சொல்லி இருக்கிறான். எதிரியின் இடது புஜத்தை நோக்கி  வீசிய வெட்டறுவாள், எதிரி உடல் தன்னிச்சை கொண்டு துள்ளி இலக்கின்றி நகர, அரிவாள் முனை நெஞ்சுச் கூட்டு எலும்பில் புதைந்து சிக்கிக்கொள்கிறது.

கீழே சரியும் உடலிலிருந்து அதே கணம் விசை கொண்டு அறுவாளைப் பிடுங்க, வெற்றிலை எச்சிலை முகத்தில் துப்பியதைப் போல, கொத்து  ரத்தம் வந்து சத் என முகத்தில் அறைகிறது. அந்த நொடி, அந்த ரத்த உஷ்ணம், ரத்த வாடை… அதன் பிறகு அவன் வாழ்வு முற்றிலும் மாறிப்போனது. முதல் ரத்த வாசம் கண்ட நொடியைச் சொன்னபோது அவனது கண்களில் எழுந்த பித்து வெறி, முதுகுத்தண்டைச் சொடுக்கியது. இந்தத் தருணத்துக்கு முன்பிருத்தவன் செத்து, இந்த தருணத்துக்குப் பிறகு பிறந்து வந்தவன் யார்? இத்தகு தருணம் ஒன்றில்தான் நிறைகிறது நவீன் எழுதிய பேய்ச்சி நாவல்.

மாலதிக்குள் பிறந்து எழுந்த, அதுவரை அவளது கணவன் அறியாத, அவன் காண விரும்பாத, அந்த ஆற்றலின் ஆடல் களமே அவன் தாத்தாவும் பாட்டியும். தமிழ் நிலத்திலிருந்து ஏதிலிகளாக ஒரு விதை போல  வந்து இறங்கி, வேர் விட்டுக் கிளை பரப்பி வாழ்ந்த மலேயாவின், லூனார் அருகிலுள்ள, ஆயேர் தோட்டம் எனும் ரப்பர் காட்டுக் குடியிருப்பு. அந்த ஆற்றல் தன்னை வெளிக்காட்ட, அதனால்  தேர்வு செய்யப்பட்டவர்களே ஓலம்மாவும் சின்னியும். ஓலம்மா மற்றும் சின்னியைக் கொண்டு வெளிப்படும் அந்த ஆற்றல், மொத்த ஆயேர் தோட்ட மக்களில் சரி பாதியை, அழித்து முடித்து, மாலதியின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

பேய்ச்சி என வணங்கப்படும் முகம் எழுதிய கல்லில் துவங்கி, அதிலேயே முடியும் இந்த நாவலின் மைய விசை ஓலம்மா. வட தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்து, ஆரேன் தோட்டத்தில் அமைகிறாள். மன வளர்ச்சி குறைந்த, (ஏமாற்று உறவில் பிறந்த) முதல் மகன் குமரன். ஓலம்மாவை  காதலித்து மணக்கும் எதிலி மணியம். அவர்களுக்குப் பிறக்கும் மகள் முனியம்மா.  தன்னை மையமாகக் கொண்டு, அளவற்ற உழைப்பில் தனதே ஆன உலகம் ஒன்றை, அந்தத் தோட்டத்து மக்கள், செடிகள், உயிர்களுடனும் பிணைந்த ஒரு உலகத்தை உருவாக்குகிறாள் ஓலம்மா.

அந்த உலகத்தில் நுழைந்து, உயிர்களைப் பறிக்கிறாள் சின்னி. சின்னியையும், அவளுடன் முறையற்ற உறவு கொண்ட தனது கணவன் மணியத்தையும் கொல்கிறாள் ஓலம்மா. மூத்த மகன் முதல், கணவன் வரை இழந்த ஓலம்மா பற்று வைத்திருக்கும் ஒரே உறவான பேரன் அப்போயையும், மகள் முனியம்மா அவளிடமிருந்து பிரித்துச் சென்று விடுகிறாள். ஓலம்மா வீடும் அவளிடமிருந்து பறிபோகிறது. தான் உருவாக்கி, பரிபாலித்து, காத்த அனைத்தையும் அவளே அழித்து விட்டு, பேய்ச்சியின் முன் உயிர் விடுகிறாள் ஓலம்மா. இந்த அடிப்படைக் கதைச் சட்டகத்தின் மேல் நிகழும் வாழ்வை, விரிவான பகைப்புலத்தில் சித்தரித்து, அந்த வாழ்வில் நிகழும் மானுட நாடகத்தை, அந்த நாடகத்தை நிகழ்த்தும் அடிப்படை விசைகளை, அணுகிப் பரிசீலித்து, அவற்றின் ஆழம் அருகே  ன்று, அந்த அடியற்ற ஆழத்தின் முன் வாசகனைத் திகைத்து நிற்க வைத்து விட்டு விலகி விடுகிறது பேய்ச்சி நாவல்.

***

1981- 1999- 2019 என அடுத்தடுத்த இருபது ஆண்டு இடைவெளிகளில் வரும், தைப்பூசத்தில் நிகழும் சில சம்பவங்களில் மையம் கொள்கிறது நாவல். அதிகபட்சம் ஏழு நாள். நாவல் பேசும் சம்பவங்கள் இதற்குள் மட்டுமே நிகழ்கிறது. இதற்குள் அந்த ஆயேர் தோட்டத்தை கவியும் ஒரு நூற்றாண்டு மலேயா அரசியல், சமூக, கலாச்சார மாற்றங்களின் குறுக்கு வெட்டுச் சித்திரம் வெகு செறிவாக, கலாபூர்வமாக சொல்லப்பட்டு விடுகிறது.

வெள்ளையர் ஆட்சி துவங்கி, ஜப்பானியர் முற்றுகை தொடர்ந்து இன்றைய ஆட்சி வரை, அந்த தோட்டத்தில் நிகழ்த்தும் தாக்கம், தென்னை போய், ரப்பர் வந்து, ரப்பர் போய், செம்பனை வந்து அந்த தோட்டத்தில் நிகழ்த்தும் தாக்கம், வெள்ளையன், செட்டியார், சீனன் என மாறும் தோட்ட முதலாளிகள் வழியே தோட்டத்தில் நிகழும் தாக்கம், கம்யூனிஸ்ட் முதல் தி க வரை அந்த தோட்டத்தில் நிகழ்த்தும் தாக்கம், அனைத்துக்கும் மேல் செட்டியார்கள் வழியே வந்த முருகன் எனும் பெருந்தெய்வமும், சாதி நிலையில் தாழ்ந்த மக்கள் கொண்டு வரும் முனி சாமி, பேய்ச்சி போன்ற சிறு தெய்வங்களும், பூனியான் போன்ற காட்டுச் சக்திகளும், ராஜ நாகம் போன்ற காட்டு உயிர்களும் தோட்டத்தில் செலுத்தும் தாக்கம் என  இத்தனையும் அதற்கே உரிய நுண் விவரணைகளுடன், இந்த வாழ்வுக் களத்தின் பகைப்புலத்தை வலிமையாகக் கட்டி எழுப்புகிறது.

அப்படிக் கட்டி எழுப்பப்படும் பகைப்புலத்துக்கு, இந்த நாவலின் இலங்கும் மொழி நடை உயிர் நாடி என விளங்குகிறது, ஓலம்மா முதலில் வளர்க்கும் கோணக்கழுத்து சேவல் முதல், முதல் மகன் குமரன் தொடங்கி, ஆங்சாக்கள், ரம்புத்தான் மரம், பட்டாம்பூச்சி, முனிபன்றி, முனி கோவில், பள்ளிக்கூடம், காடு, அருவி என இந்த நாவலின் முழுக் களத்தையும்,  அதன் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என அதன் மாற்றம் உட்பட அனைத்தையும் இந்த நாவலின் மொழி வாசக மனதில் முப்பரிமாணம் கொண்டு இயங்க வைக்கிறது. சூழலை வர்ணிக்க, உணர்ச்சிகளை வெளிப்படுத்த, பேச்சு வழக்குகளின் பேதங்கள் வழியே, அம்மக்களின் நிலப் பின்னணியை கொண்டு வர, என இந்த நாவல் களத்தின் அனைத்து தேவைகளுக்கும் தக்க வகையில் மொழி தன்னை இலகுவாக உருக்கி ஓடவிடுகிறது, கொள்ளும் பாத்திரம் எதுவோ அதன் வடிவம் எடுக்கும் நீர் போல.

‘ குடத்துக்குள்ள தலையை விட்டு பேசுவது போல இருந்தது அவன் குரல்’

‘அவன் முகம் தொப்பைபோல இருந்தது’

இப்படி சிறிய தனித்துவம் கொண்ட வர்ணனைகள் வழியே அத்தனை நுண் விவரணைகளும் நாவலுக்குள் உயிர் கொள்கிறது.

இவை அத்தனையும் நாவலுக்குள் எங்கெங்கோ தெறித்து வெளிப்படும் நிலையில் இல்லாமல், நாவலின் முதல் சொல்லில் துவங்கி இறுதிச் சொல் வரை, ஒரு கண்ணியில் பிணைத்த அடுத்த கண்ணி வரிசை நீண்டு சங்கிலி உருவாவது போல திகழ்கிறது.

அம்பின் வடிவம், நேர்த்தி, கூர்மை, வில்லின் வளைவு, நாண் இழுத்து எழும் ஆற்றல், குறி வைக்கும் பிந்து எல்லாமே craft தான். இத்தனை craft உம், எது இலக்கோ அதை துளைத்து அதன் ஆழம் செல்லும் art ஆகவே. அந்த art அதில் உன்னதம் கொள்வதே வில்லாளியின் முன் நிற்கும் சவால். அந்த சவாலை இந்த நாவல் வழியே just like that வென்று நிற்கிறார் நவீன்.

***

இந்த நாவல் குறித்து எழுதுகையில், தனிப்பட்ட முறையில் இப்போது சில மனத்தடைகளை உணர்கிறேன். முதல் தடை இந்த நாவலை உணர்ச்சிகரமாக அன்றி வேறு எவ்வகையிலும் என்னால் அணுக முடியாதது. இரண்டாவது தடை இந்த உணர்ச்சிகரம் காரணமாக புற வயமாக அன்றி, அக வயமாக மட்டுமே சொல்ல முடியும் என்ற வகையிலான இந்த நாவல் சார்ந்த வாசிப்பு அனுபவம்.

புறவயமாக ஒன்றை சொல்வதன் வழியாகவே, ஒரு நாவல் அளிக்கும் மேலதிக கற்பனைகள் சாத்தியங்கள் வழியே நிகழும் புதிய வாசிப்பை, ஒரு சூழலில் நிகழும் கூட்டு வாசிப்பின் ஒரு பகுதி என்றாக்க முடியும். அந்தரங்கமான வாசிப்பு அனுபவத்தை முன் வைக்கையில், பல சமயம் அதைக் கேட்கும் ஒருவருமே அக்கணம் இல்லாமல் போகலாம். ஒரே ஒரு விதி விலக்கு அந்த நாவலின் ஆசிரியன். ஒரு நாவல் வழியே அதன் வாசகன் எந்த ஆழம் செல்கிறானோ, எந்த உயரம் செல்கிறானோ அங்கே அவனுக்கு முன்பாக அந்த நாவலின் ஆசிரியன் நின்றிருப்பான். ஒரு ஆழ்த்த பொருளில் அந்த வாசகனுக்கு அந்த எழுத்தாளன் மட்டுமே போதும், அதே ஆழ்ந்த பொருளில் அந்த எழுத்தாளனுக்கு அந்த வாசகன் மட்டுமே போதும்.

இந்த நாவலின் ஆசிரியர் இந்த நாவலின் மாலதி வழியே, என்னை அந்தரங்கமான ஒரு புள்ளியில் வந்து தீண்டினார். ஆம் என் தங்கையின் பெயர் மாலதி. எங்கள் குலதெய்வம் பெயர் மாலையம்மன். எங்கள் குல தெய்வத்தின் தாய்வழி மக்கள் வீடுகளில் எல்லாம், ஒரே பெண் குழந்தைக்கு மாலா என்றோ, மாலதி என்றோதான் பெயரிடுவர். என் குலதெய்வமே என்றுதான் என் தந்தை என் தங்கையை அள்ளிக் கொஞ்சுவார். எங்கள் குலத்தில் பலருக்கு மாலதியின் வாழ்வு சுகப்பட்டதில்லை. வருட கோவில் கொடையின் பொது, உம் மக வாழ்க்கையை பாத்தியா என்று குலதெய்வம் முன்பு கதறிக் கண்ணீர் விடும் ஐந்து தகப்பனையாவது பார்க்க முடியும்.

அடுத்த முக்கிய வலிமையான காரணம் ஓலம்மா. என் அம்மாவின் மற்றொரு பகுதிதான் அவள். ஒருமுறை அம்மாவுடன் நடந்து கொண்டிருந்தேன். சாலை முனையில், அங்கே வந்து முடியும் தெருக்கள் மொத்தத்தின் சாக்கடையின் சந்திப்பு. உள்ளே ஒரு குட்டி ஆடு விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. தாய் ஆடும் அதன் பிற இரண்டு குட்டிகளும் தவித்துக் குரல் எழுப்பிக்கொண்டு இருந்தன. ஆடு மேய்க்கும் கிழவி அந்தக் குட்டியைக் காப்பாற்றச் சொல்லி போவோர் வருவோரைக் கெஞ்ச, அந்தக் கூட்டமும் சுற்றி நின்று (செய்த முயற்சிகள் வீண் போக) வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.

அம்மாவின் கண்ணில் இது பட்டது. பட்ட கணமே மறு யோசனையே இன்றி, சேலையை வழித்துக்கொண்டு இடையளவு சாக்கடையில் இறங்கி, குட்டியைத் தூக்கி வெளியே போட்டார். வெளியே வந்த அம்மாவைப் பைத்தியம்போலப் பார்த்தவர்களை அவர் கேட்டார், “நீ பெத்து இப்போ கைல எடுக்குற குழந்தை அந்த சாக்கடைல விழுந்தா நீ இப்போ இப்டி நிக்கிற மாதிரிதான் நிப்பியா?” (சில நாளில் குழம்பில் கொதிக்கப்போகும் குட்டி. என் அம்மா மட்டன் சாப்ஸ் நன்கு சமைப்பார்). ஒருமுறை அம்மா, சிறுமியான என் தங்கையைத் தவறாகத் தொட்டனை சாலையில் போட்டு துவைத்து அள்ளினார். விரையைப் பொத்தியபடி சுருண்டு கிடந்த அவனிடமிருந்து அம்மாவைப் பிரிக்க நான்கு பேர் வேண்டியிருந்தது.

ஆக எத்தனை முயன்றும் இந்தப் புள்ளியில் தைத்த இந்த நாவலை, புறவயமாக அன்றி, உணர்ச்சிகரமாகவே இரண்டாம் வாசிப்பிலும் அணுக முடிந்தது. இந்த உணர்ச்சிகரத்தில் முதலில் பதிந்து அலைக்கழித்தவன் சின்னியின் மகள். அவள் யார்? எங்கிருக்கிறாள்? இனி எப்படி இருப்பாள்? அவன் அம்மா எப்படி கொல்லப்பட்டாள் என்பதை என்றேனும் அவன் அறிவாளா?

அதேபோல கண்ணன் வாத்தியாரின் இன்னும் பிறக்காத அந்தக் குழந்தை. அது தந்தையை எவ்வாறு உணரும்? எவருக்குமே தெரியக்கூடாது என்று நினைத்த வாத்தியாரின் சாவு ரகசியம், அவனை என்னவாக வந்து தொடும்?

சாராய பலிகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறை செல்லும் அவன் யார்? அவன் ஏன் இதில் பலியாகிறான்? அவன் குடும்பம் என்னாகும்? எம் புள்ள என்று கதறும் சின்னியின் தவிப்புக்கும், எம் புள்ள என்று தவிக்கும் கொப்பேரனின் தவிப்புக்கும்  பேதம் உண்டா என்ன?

கொப்பேரனின் கையால் பலியாகாமல் தப்பிய அந்த ஆறாம் ஆடுதான் ராமசாமியா? தந்தை என்பதன் துயர் என்ன என்பதன் ஸ்தூல வடிவம் கொப்பேரன். அந்தத் துயரின் தீவிரத்தைப் பல மடங்கு அனுபவிப்பவர் ராமசாமி. குமரனையும், மணியத்தையும் கொல்ல நஞ்சு அளிக்கும் போதும், தன் கால்களில் விழுந்து சின்னி உயிருக்கு மன்றாடியபடியே சாகும் போதும். ராமசாமி கடந்து வரும் இடர்கள், அந்த இடர்களின் துயரைத் தாள இயலாமல் அவர் செய்துக்கொள்ளும் தற்கொலை என, நாவலின் பிற பாத்திரங்கள் அளவே தனித்துவம் கொண்ட பாத்திரமாக உயர்ந்து நிற்கிறார் ராமசாமி.

சுடுகாட்டு வாழ்வினை உதறி எழ, மணியத்துக்குப் பெரியாரின் சொற்கள் துணை நிற்கின்றன. அவர் கையில் உள்ள பிணம் சூடு தடி, ஆசிரியர் ஒருவர் தொட, சிலம்பம் என்று மாறுகிறது. அந்த ஆற்றலும் திறமையும் மணியத்தை வழிநடத்துகிறது. கூடவே வழி தவறவும் வைக்கிறது. குருவின் கட்டளை மட்டும் அவருடன் துணை நிற்கிறது. அவரது வலிமையும் வழித்துணையும் அது மட்டுமே. போதை என்பது சாராயம் மட்டும் அல்ல என்பதை அவர் உணரும் கணம் அவர் உயிர் பிரிகிறது.

சாராயம் படைக்கப்பட்ட பேய்ச்சியில் துவங்கி வெளியேறும் அப்போய், குமரனாக மாலதியுடன் திரும்பி வரும்போது, பேய்ச்சிக்குக் கொலைவாள் கிடைத்திருக்கிறது. அவன் பாட்டி ஓலம்மாவின் சத்தகம் அது. சிறு  பறவையைத் தெரியாமல் கொல்லும் அப்போய் அனுபவிக்கும் வலி, அங்கே துவங்கும் அவன் பயணம், அவன் நிழல் போன்ற கருப்பன், ராமசாமி, ஓலம்மா என அவனது பால்யத்தைக் கட்டமைத்த அனைத்து ஆளுமைகளின் மரணத்துடன் துவங்கி, ஒரு கணத்தில் குணம் மாறி, சேவலை மிதித்துப் பிடித்து அதன் கழுத்தை அறுக்கும் மாலதி முன்பு வரை வந்து திகைத்து நிற்கிறது.

இவர்கள் இழந்தும் பெற்றும் வளரும் இந்தப் பயணத்தின் பாதை நெடுக, மாயமும்images யதார்த்தமும் பிரித்தறிய இயலா வகையில் முயங்கி நிற்கிறது. கொப்பேரன் கழுகு மலையில் உணரும் பேய்ச்சி உண்மையில் அங்கே அவர் கண்டவள்தானா? காத்தாயி உருவில் வந்தது பேய்ச்சி தானா? மணியம் துரத்திச் செல்லும் முனிப்பன்றியும், அப்போய் துரத்திச் செல்லும் பட்டாம்பூச்சியும் நேர் பொருளில் அவைகள்தாமா அல்லது, காட்டருவி நோக்கி கவர்ந்திழுக்கும் மாய சக்திகளா? ஒரு முனையில் மாயமும், மறுமுனையில் யதார்த்தமும் கொண்ட கழியைப் படுக்கை வசத்தில் பிடித்தபடி, சமன் கண்ட உடலுடன் கயிற்றில் நடக்கும் வித்தைக்காரன்போல, இந்த நாவலின் பல தருணங்கள் சித்தரிக்கப் படுகிறது. அதே சமயம் தோக் குரு வரும் இடங்களும், ஓலம்மா தலைக்கு மேலாக பாறாங்கல்லை தூக்கும் தருணங்களும் நேரடியாகவே தயங்காமல் மாயத்துக்குள் நகர்கிறது.

நாவலின் மையமான சாராயச் சாவுகள், நாமே விஷச் சாராயம் அருந்தி, கண்கள் இருண்டு, உயிருக்கு தவிக்கும் நிமிடத்தில் இருப்பதுபோல ஓர் உணர்வை அளிக்கிறது. குறிப்பாக வாத்தியாரின் சாவு. இந்த யதார்த்தம் அளிக்கும் உணர்வுகள், மாயம் அளிக்கும் திகில், இவற்றின் வழியே வந்து வாசகன் மோதும் நாடகீயத் தருணங்கள், இந்த நாவலை செவ்வியல் நாவல் வரிசைக்கு உயர்த்துகிறது. குறிப்பாக ராமசாமி முன்னால் சின்னி உயிர்விடும் சித்திரம். மூத்த மகன் மரணத்துக்கு பிறகு மூன்று நாள் கழித்து ஊருக்குள் வரும் ராமசாமியை ஓலம்மா சந்திக்கும் சித்திரம்.

***

நாவலுக்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அத்மீக வீழ்ச்சிகளில் சரிகிறார்கள். தோக் குரு வழி காட்டிய பாதையில் செல்ல முடியாமல் ராமசாமி அருவியில் சென்று விழுகிறார், மணியம் தனது குருவின் சொல் விரிவு அறியாமல் சரிகிறார். அப்போய் தோட்டம் விட்டு மட்டுமல்ல பால்யத்தையும் விட்டு வெளியேறுகிறான். எவரும் அடையும் முதல் ஆத்மீக சரிவு என இந்த பால்யத்தின் இழப்பை சொல்லலாம். இந்தச் சரிவுகள் எல்லாமே தவிர்க்கவே இயலாத ஆற்றலின் கைப்பாவையாக அவர்கள் இயங்கி அடைவது. நாவல் பேசும் இத்தகு ஆத்மீக சரிவுகளிலேயே தலையாயது ஓலம்மாவின் சரிவு.

மலையாளத்தில் தட்டகம் என்றொரு சொல் உண்டு. பகவதியின் சக்திக்கு உட்பட்ட எல்லைக்கு அந்தப் பெயர். அந்த தட்டகத்துக்குள் பிற தெய்வங்களை அந்த பகவதி அனுமதிக்கமாட்டாள். அப்படிப்பட்ட பகவதி போன்றவள் ஓலம்மா. அந்த தோட்டம் முழுமையும் அவளது தட்டகம். அங்குள்ளவை உள்ளவை அனைத்துக்கும் அவளே அன்னை. அவளது தட்டகத்துக்குள் நுழைகிறாள் சின்னி.

யதார்த்தத்தில் ஓலம்மா என்னவாக இருக்கிறாள் என்பதை, அவளது மகளுடனான உறவும் பிணக்கும் சித்தரிக்கிறது. இறுதியாக முனியம்மா ஓலம்மாவை கைவிட்டு செல்லும் வரை, ஓலம்மாவுடன் பிணக்கு கொண்டவளாக மட்டுமே இருக்கிறாள் . இறுதி நாளில் அவளை அவளது பிறப்பைச் சாதி சொல்லி இழிவு செய்பவளாக ஓலம்மா இருக்கிறாள். ஓலம்மாவின் இந்த ஆழ்மனம் அதுவே ஓலம்மாவை மையம் கொண்ட அவளது குடும்ப உறவுகளின் உணர்வைத் தீர்மானிக்கிறது.

மகள் கையைத் தட்டி விடும்போது தடுமாறுபவளாகத்தான் ஓலம்மா இருக்கிறாள் எனில், தலைக்கு மேல் கல்லை ஓங்கி சின்னியை கொல்லும் ஆங்காரம் அவளுள் எங்கிருந்து முளைத்தது? கலவியின் போது குமரனை அடிக்க முனையும் மணியத்தின் சங்கை நெறிக்கும் போது ஓலம்மாவில் விழுந்த விதை அது. மகன் இறந்த பிறகு, இந்தத் தோட்டத்தை, அதன் மனிதர்களை, அதில் தான் உருவாக்கிய ரம்புத்தான் மரம், பண்ணை உள்ளிட்ட தனது வீட்டை, அன்னை என்றே நின்று பரிபாலிக்கிறாள். மணியமோ, ராமசாமியோ ஓலம்மாவின் ஒற்றைச் சொல் அவர்களின் கீழ்மையிலிருந்து அவர்களை மீட்கிறது. அனைத்தையும் படைத்துக் காக்கும் அன்னையான அவளின் தட்டகத்துக்குள் சின்னி நுழைகிறாள்.

ஆசோவும் சாராயம் விற்பவன்தான். அவனை விடுத்து சின்னி மேல் ஏன் இத்தனை ஆங்காரம்? சின்னி தவிர்க்க இயலாத சூழலில்தான் உடலை விற்கிறாளே அன்றி, எப்போதுமே  அவளைத் தொடும் ஆண்களை ‘கையாள்பவளாக’ மட்டுமே இருக்கிறாள். ஆக அவள் காமத்தால் அங்குள்ளோரை சீரழிப்பவள் அல்ல. அசோ அவள் காய்ச்சும் சாராயத்தில் விஷம் கலந்திருக்க எல்லா சாத்தியமும் இருக்க, அந்த சந்தேகத்தின் பலன் ஏன் அவளுக்கு அளிக்கப்படவே இல்லை? ஓலம்மா கொண்ட எல்லா நியாயங்களுக்கும் கீழே அமைத்த காரணம், சின்னி அவள் கணவன் மணியத்தை திருடியது. அவளது தட்டகத்துக்குள் நுழைந்ததோடன்றி, அவளது துணையையே கவர்ந்துவிட்டாள். (அதில் என் பொறுப்பு எதுவும் இல்லை என்று சின்னி சாகும் முன் கதறுகிறாள்). அனைத்தும் கூடி சின்னி கொலையில் முடிகிறது. தனது தட்டகத்துக்குள் நுழைந்த மற்றொரு சக்தியை பகவதி முற்றிலும் அழித்துவிட்டாள்.

சின்னி அனைத்தையும் தனது பிள்ளையின் பொருட்டு செய்கிறாள். சின்னிக்கும் ஓலம்மாவுக்கும் உள்ள வித்யாசம் அதுதான். சின்னிக்கு தனது பிள்ளை மட்டுமே பிள்ளை. வேறு எது குறித்தும் கவலை இல்லை. ஓலம்மாவுக்கு எல்லோரும் தன் பிள்ளை. எல்லோரது கவலையும் அவளது கவலை.

தான் படைத்துக் காத்த அனைத்தையும் அழித்துவிட்டு ஓலம்மா பேய்ச்சி முன்பு வந்து நிற்கிறாள். இப்போது சின்னியின் தட்டகத்துக்குள் ஓலம்மா நுழைந்துவிட்டாள். அவளை சின்னி பலி எடுக்கிறாள். பேய்ச்சிக் கல்லில் தலை மோதிய பிறகே ஓலம்மா தரைக்கு வருகிறாள், அவள் பேசும் இறுதி சொல், ‘எம் புள்ளய நானே கொன்னுட்டேனே’ என்பதே. இப்போது அவள் எல்லோரையும் தனது பிள்ளையாகக்கண்ட அன்னை இல்லை. தனது பிள்ளை மட்டுமே கருத்தில் நிறைந்த அம்மா. இப்போது அவள் ஓலம்மா இல்லை சின்னி. கழுத்தை அறுத்துக்கொண்டு செத்துப் போகிறாள்.

இந்த நாவலின் முதல் காட்சி துவங்கி, இறுதிக் காட்சி வரை அது பரிசீலித்து, அதில் துலங்கி வரும் இந்த மரணங்கள், அதைக் கொண்டு மனிதனுக்கும் மேலான ஆற்றல்கள் மனிதர்களை தனது பாவைகளாக்கி ஆடும் ஆட்டம் அதுவே இந்த நாவலின் தரிசனம் என்று சொல்வேன். என்னளவில் அதை அனைத்தையும் படைத்து, காத்து, அழித்து ஆடும் அந்த அன்னையின் சக்திக்கூத்து என்று வரையறை செய்வேன்.

முதல் காட்சியில் பேய்ச்சி முன் எரியும் காமாட்சி விளக்கின்  சுடரில் விழுந்து வெடிக்கும் பூச்சிகள் முதல், ராமசாமி, மணியம், வாத்தியார், தோட்டத்து சாமானியர்கள், ஓலம்மா வளர்க்கும் பறவைகள், தோட்டம், மரம், சின்னி இறுதியில் கழுத்து அறுபடும் கோழி என இந்த நாவலில், அதன் வழியே இந்த வாழ்வில் நாம் காணும் மரணங்கள் எல்லாம் அந்த சக்திக்கூத்தின் எளிய அடவு மட்டுமே.

***

கொண்ட வடிவ, தர்க்கத்தின், மொழியின்  புதுமையால், விரியும் கற்பனைச் சாத்தியங்களின் அழகால், சென்று தீண்டும் உள்ளுணர்வின் ஆழத்தால், நவிலும் வாழ்வில் உள்ள உண்மையின் தீவிரத்தால், அனைத்தும் கொண்டு திரண்டு வரும் தரிசனத்தால், முழுமை கொள்ளும் இந்த நாவல், நவீனத் தமிழ்ப் புனைகதை மரபின் தவிர்க்க இயலா ஒரு ஆக்கம். எனினும் அத்தகு ஆக்கங்களின் வரிசையில் பேய்ச்சியின் தனித்தன்மை என்னவாக இருக்கிறது?

இப்பதிவை எழுதி இங்கே நிறுத்தி, பின்னால் சென்று பேய்ச்சிக்கான விமர்சனக் கட்டுரைகளை தேடி வாசித்தேன். பெரும்பாலான கட்டுரைகள் பெண்கள் வசமிருந்து  என்பது ஆச்சர்யம். தமிழ் நிலத்தில் ஒரு புதிய நாவல் வெளியாகி, அந்த சூழலிலேயே உடனடியாக வாசித்த பெண்களின் பத்துப் பதினைந்து கட்டுரைகள் எல்லாம் வாசிக்கக் கிடைப்பது அபூர்வம். மலேசியாவில் இப்படி ஒரு சூழல் இருப்பது, அந்த சூழல் எழுத்தாளர் நவீனை கவனித்துக்கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது.

தலையாயது இரண்டு பதிவுகள். ஒன்று அருண்மொழி நங்கை அவர்களின் பதிவு. இரண்டாவது லதா அவர்களின் பதிவு. நங்கை முற்றிலும் ரசனை அடிப்படையில் புனைவை தன்னுள் வாங்கி, அது முன்வைக்கும் அனைத்துக் (விடுபடலே இன்றி) கூறுகளையும்  உணர்ச்சிகரமாக அணுகிப் பரிசீலித்தார். லதா அந்தப் புனைவை புறவயமாக வைத்து, சமூகச் சூழலில் பொருத்தி, இந்திய இலக்கியங்களின் வரிசையில் பொருத்தி, மலேசிய இலக்கியச் சூழலின் பின்புலத்தில் பொருத்தி தனது மதிப்பீட்டை முன்வைத்திருந்தார். குறிப்பாக கொப்பேரன் பேய்ச்சிக்கு சிலை வைக்காதே என்று சொன்ன பிறகும், ராமசாமி வழியே பேய்ச்சி எனும் தெய்வம் படையல், சாராயம், சத்தகம், ராமசாமி உருவாக்கிய சடங்குகள் எல்லாம் கொண்டு திரண்டு எழும் சித்திரத்தில் உள்ள சமூக மனதின் அசைவின் கூறுகளை அவர் அணுகிய விதம். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல அமைந்த அந்த உரையும், கட்டுரையும் பேய்ச்சி நாவலுக்கான சிறந்த மதிப்பீடுகள்.

இதற்கெல்லாம் மேலும் இந்த நாவலுக்கு ஓர் இடம் உண்டு. தனிப்பட்ட முறையில் இந்த நாவல் ஜெயமோகனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அது போதம். அந்த போதம் உருவாக்கிய வரிசை போகன் எழுதிய கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை, அனோஜன் பாலகிருஷ்ணனின் பச்சை நரம்பு, மேலும் சில. இவை அனைத்துமே கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த முக்கிய வரவு. காலத்தை உதறி முன்செல்லக்கூடிய சில சிறுகதைகள் இந்த ஒவ்வொரு தொகுப்பிலும் உண்டு. இந்த வரிசையில் வருகிறாள் பேய்ச்சி. நாவல் என்பதால் அதன் போதத்திற்கு சவாலின் கடுமை இன்னமும் கூடுதல்.

வெண்முரசு சார்ந்த உரையாடல் ஒன்றினில் ஜெயமோகன் சொன்னார், வியாசரின் ‘ஜெய’ தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டால், அதில் தெரிவது எதுவோ அதுவே வெண்முரசு. அதுவே இது. ஆனால் ஒரு தலைகீழாக்கம் இங்கே உண்டு. காரணம் இது நாவல். காவியம் தொகுத்துச் சொல்வது. வலியுறுத்துவது. நாவல் உடைத்துப் பார்ப்பது. பரிசீலிப்பது. ஜெய வில் இருந்து வந்ததுதான் வெண்முரசு, எனில் இந்த இரண்டாயிரத்து இருபதின் தமிழ் நாவலுக்கு சவால் இதுதான். அதைக் கண்ணாடி முன் நிறுத்தினால் தெரிவது எது?  பேய்ச்சியை நிறுத்தினால் தெரிவது எது?

ஜெயகாந்தன் சொல்வார். ஒரு எழுத்தாளன் எந்த உயரத்திலிருந்து ஒரு படைப்பை வழங்குகிறானோ, அதே உயரத்தில் நின்றே வாசகனும் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த உயரத்தில் நின்று படைப்பைப் பெற முயலும் வாசகனாக, அதை நோக்கித் தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கும் வாசகனாக நின்று இந்த 2020 இன் பேய்ச்சி நாவல், அது பேசும் உணர்வு நிலை உள்ளிட்ட அதன் கூறுகளின் சாரமும், சிலப்பதிகாரத்தில் வேர்கொண்டு நிற்கிறது என ஐயமின்றிச் சொல்வேன்.

பற்றி எரிந்து அழியும் மதுரையும், பேய் மழையின் கீழ் அழியும் ஆயேர் தோட்டத்து உயிர்களும் பரஸ்பரம் ஒன்றன் பிரதி பிம்பங்களே. கோவலனும் மாதவியும் கிபி இரண்டின் ஆடியில்  தங்களைக் கண்டால் அதில் தெரிவது, 2020 இன்  இந்த மணியமும் சின்னியாகவும் இருக்கும். சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதையில் வரும் மாயப் பொய்கையின் பிம்பமே பேய்ச்சி நாவலின் காட்டருவி. மண்ணும் மனிதரும், சூழலும் சமூகமும் ஆழுள்ளமும், அழகியலும் என பேய்ச்சி பேசும் அனைத்தையும் கொண்டு ஒருவன் சிலப்பதிகாரம் நோக்கிச் சென்றுவிட முடியும். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் வரும் அரங்கமும், இங்கே தோட்டத்தில் திரை கட்டி நிகழ்த்தும் எம்ஜியார் சினிமாவும் வேறு வேறா என்ன? இளங்கோ சிலப்பதிகாரம் வழியாகவும், ஜெயமோகன் கொற்றவை வழியாகவும், நவீன் பேய்ச்சி வழியாகவும் கண்டுசொல்வது இங்கே இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் என்றென்றைக்குமான அந்த வாழ்வைத்தான். இளங்கோ கண்ணகியின் கால்  சிலம்பின் அருகே, நவீன் பேய்ச்சியின் கைவளையல் அருகே. இடையறாத இந்த வரிசையில் துலங்கி வரும் தரிசனம். அதுவே இது.

4 comments for “அன்னை ஆடும் கூத்து

 1. கிருபாகரன்
  November 6, 2020 at 7:26 pm

  சீனு அவர்களின் கட்டுரையை பேய்ச்சி 👿 நாவலை உடனே வாசிக்க ஊக்கப்படுத்துகிறது. நாவலை வாசித்த உணர்வை அப்படியே கடத்தியுள்ளார்.

 2. அ. புனிதவதி அர்ஜுனன் .
  November 9, 2020 at 3:08 pm

  பேய்ச்சி நாவலைலில் நான் காணத்தவறிய பல தரிசனக்களையும் மிக நுணுக்கமான உள்ளுணர்வு காட்சிகளை எழுதியுள்ளார்.
  அணுவைப் பிளந்து பல கடல்களை நேர்த்தியாக அடுக்கி உள்ளார் கடலூர் சீனு அவர்கள்.
  உங்கள் தாயார் கன்றுக்குட்டியைக் காப்பாற்றிய காட்சியை ,என் அறையின் திரைப்படமாக பார்த்துக்கொண்டிருந்தேன் அகக்கண்ணால் பேரன்னையை வணங்குகின்றேன் .

 3. Bawani
  December 31, 2020 at 9:11 am

  Interested to read the story..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *