நான்னா

இன்று எங்கள் நான்னாவிற்கு சாமி கும்பிட்டோம். என் மனைவி உயிரோடு இருந்தவரை, ‘உகாதிக்குமுதல் நாள் கொண்டாடப்படும்நூக்கால்தல்லிதிருநாளுக்கு வருஷம் தவறாமல் எனது பெற்றோருக்கு படையல் வைத்து சாமி கும்பிட்டாள். இவ்வளவுக்கும் அவள், என் பெற்றோரை பார்த்ததுகூட கிடையாது. ஆயினும், ஒரு நல்ல மருமகளாய் வருஷந்தவறாமல் அவர்களை வணங்கி வேண்டினாள். “ஒரு படம் கெடைச்சா நல்லா இருக்கும்எனச் சொல்லிக்கொண்டே இருப்பாள். என்னிடம் என் நான்னாவின் படம் ஒன்றுகூட இல்லை. பத்து வருஷங்களுக்கு முன்னர், ஒரு நோயில் அவள் இறந்தபோது, அவளோடு எல்லா நல்லது கெட்டதுமே எரிந்துப் போயின.

ஏனோ கொஞ்ச நாட்களாகவே என் நான்னா  கனவில் வந்துக்கொண்டிருந்தார். அதுவும் என் அக்காவின்என் பெரியம்மாவின் மகள்இறப்பிற்கு கெர்லிங் போய் வந்த நாளிலிருந்துதான். அங்கே, ஹாலில் என் அக்காவுடன் என் நான்னா இருந்த படத்தைப் பார்த்ததிலிருந்துதான் அந்தக் கனவு

என் பிள்ளைகளை பற்றி எதோ சொல்ல வந்து, சொல்ல முடியாத துக்கத்துடனேயே மறைந்து போவதுபோல் எனக்குத் தோன்றியது. அவர் கண்களில் கண்ணீர். நான்னாவா அழுவது? என்னால் நம்ப முடியவில்லை! அதனாலேயே அவர் அடிக்கடி கனவில் வந்து போனது, எனக்கு மிகுந்த மன சஞ்சலத்தைக் கொடுத்தது.

அவர் உயிரோடு இருந்தவரை அவரை எனக்கு பிடித்ததேயில்லை. அவர்பால் எனக்கிருந்த அவ்வளவு வெறுப்பையும் காலம், ஏக்கமாய் மாற்றிப்போட்டு மாயம் செய்தது. எனது திருமணத்திற்கு முன்பே இறந்துப் போன நான்னா, இப்போது கனவில் வந்துக்கொண்டிருப்பதை புரிந்துக்கொள்ள முடியாமல் அவரை வெறுத்ததை எண்ணி குற்றமாக உணர்ந்தேன். மகளிடம் பகிர்ந்துகொண்டு, அவருக்கு சாமி கும்பிட வேண்டுமென்று தயங்கியபடி நான் கேட்டுக்கொண்டபோது, அப்படி படையல் வைத்து தன் அம்மா சாமி கும்பிட்டதை மகள் நினைவு கூர்ந்தாள். அடுத்தநூக்கால்தல்லி திருநாளுக்கு நீண்ட நாட்களிருந்ததால், அடுத்த மூன்றாவது வாரமே ஒரு சாந்தி பரிகாரத்திற்கு  ஒப்புக்கொண்டு அதன்படி இதோ இன்று, அதற்கு ஏற்பாடு செய்திருந்தாள்.

என் வீட்டு அறையொன்றின் கிழக்கு பார்த்த சுவர். அதையொட்டி மேஜை ஒன்று போடப்பட்டிருக்கிறது. மேஜைமீது நான்னாவின் போட்டோ, சுவரோடு சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது. அங்கும் அவர் சாய்ந்தே இருந்தார்.

போன மாதத்தில் ஒரு நாள், பக்கவாதத்தால் வலது பக்க கையும் காலும் சற்றே செயலிழந்துப்போன அண்ணனைப் பார்க்க ஈப்போ போயிருந்தேன். அவர் தூங்கிக் கொண்டிருந்தார். காத்திருந்த நேரத்தில், ஹாலில் இருந்த மேஜையின் அடித்தட்டில் கண்டெடுத்த ஆல்பத்தைப் புரட்டி கொண்டிருந்தபோதுதான் நான்னாவின் அந்த போட்டோவை பார்த்தேன். ரவாங் சலூன் போட்டோ ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது. கடையின் பெயருக்கு கீழே, 1/11/1960 என்று குறிக்கப்பட்டிருந்தது.

அப்போதெல்லாம் நான் என் அம்மாவின் கைலியைப் பிடித்து, அவளே என் உலகமென்று அவளையே சுற்றிக்கொண்டிருந்த காலம்அந்த வயதிலும் நான் இரவில், அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டிருந்தேன். அவளும் தன் முலைக்காம்புகளில் வேப்பெண்ணை; விளக்கெண்ணை என்று எதையெல்லாமோ தடவிப் பார்த்துவிட்டாள். எதுவும் மாறவில்லை. குடும்பத்தில் நானே கடைசி பிள்ளையாகவும், ஆயாக்கொட்டாயில் விடப்படுகிற வயதிலும் இருந்ததால் பிற உடன்பிறப்புகளின் குறுக்கீடு எனக்கு இருக்கவில்லை.

அண்ணன் கண் விழித்ததும், அருகில் போய் அமர்ந்தேன்.

வாடா எப்படா வந்தே?…” பக்கவாதத்தால் அண்ணனின் பேச்சு குளறியது

இப்பதாண்ணே வந்தேன் இப்ப எப்படிண்ண இருக்கு ஒடம்புக்கு?”

தோ இப்படித்தான் இருக்கு…” என்று செயலிழந்துப்போன வலது கையையும், காலையும்  அண்ணன் வேதனையுடன் காட்டியபோது, எனக்கும் வலித்தது. நெஞ்சம் நிறைந்த வேதனையால் அவரின் பேச்சில் ஒருவித கசப்பே தெரிந்தது.   சம்பிரதாயத்திற்கு ஏதேதோ பேசினோம். இடையில், அடிக்கடி மௌனம் எங்களை பிரித்துப் போட்டது.

பேச்சினூடே கையில் வைத்திருந்த நான்னாவின் போட்டோவை காட்டி,

நான்னாவோட இந்த போட்டோவ நா எடுத்துக்கிட்டுமாண்ண…” என்று கேட்டேன். அப்படி கேட்டிருக்க வேண்டாமோ எனத் தாமதமாகவே தோன்றியது. நன்னாவின் நினைவுடன் தன் கால் இழப்பை ஒப்பிட்டுக்கொண்டிருப்பார் போல. கண்ணோரம் கண்ணீர்.

காட்டிய போட்டோவை நிமிர்ந்து பார்க்கும் சிரத்தையைகூட காட்டாமல் கூரை முகட்டையே பார்த்துக் கிடந்தார். நோயின் அவஸ்தையால் படுத்தே கிடக்கின்ற இயலாமையில், “அப்பா…” என்று  வேதனையில் முனக மட்டுமே அண்ணனுக்கு நான்னா தேவைப்பட்டார்.

அந்த போட்டோவை வைத்துதான் இன்று, நான்னாவிற்கு சாமி கும்பிட்டோம்.

ஆட்டுமார்க் சுருட்டு ஒன்று, சம்சு அரை போத்தல், புளிச்ச கீரை கூட்டு, ஆட்டிறைச்சி ஒரு மங்கு, ஒரு குவியல் சோறு, இரண்டு வாழைப்பழங்கள், வேஷ்டி, சட்டை, தலைப்பாகை என்று மேஜையே அவரின் விருப்ப அணிகலன்களாலும், உணவுவகைகளாலும் நிறைந்து கிடந்தன.

படத்தில் நான்னா தலைப்பாகை, முரட்டு மீசை, ராம நாமம் என்று அவரின் அதிகாரத் தோரணையில் அப்படியே இருந்தார். கண்களில் தெரித்த கூர்மையில், ஊடுருவல் தெரிந்தது. அதனாலேயே யாரும் இலகுவாக அணுக முடியாத முகமும்; முன்கோபமும் அவரின் நிஜங்களாக இருந்தன. மொட்டைத் தலையும், பழுப்பேறிப்போன மீசையும் கொண்டு ஆறடி உயரத்தில் இருந்த அவரைப் பார்க்கவே என் நண்பர்கள் பயந்தனர்.   “உங்க நான்னாவ, அந்த மூஞ்சோடயும் மீசையோடையும் பாக்கவே பயமா இருக்குடா!” என்று கூட்டாளிகள் பதறி நடுங்கினர். 

அப்போதெல்லாம் எனக்கும் என் நான்னாவைப் பார்க்க ஒரே பயந்தான். முடிந்த வரை அவரின் கண்களில் படாமல் நழுவுவதே எனது சுபாவமாய் இருந்தது. காதில் சொருகிய சுருட்டு துண்டுடன், இடையிடையே பற்கள் போன சிறிய சீப்பொன்றால் சதா தன் முரட்டு மீசையை நீவியபடியேஅஞ்ஜடிப் பெரஞ்ஜாவில் உட்கார்ந்துக் கொண்டு,

ஒரேய் எங்கடா போய் தொலைஞ்ச நீ?”

ஒரேய். எவ்வளொ நேரமாடா உன்ன கூப்பிடறது?”

ஒரேய் காடிதி. இங்க வெச்ச நெருப்பெட்டி எங்கடா?“

என்று ஒரே அதட்டல்தான் அவரின் பாஷையாக இருக்கும்.

சுருட்டுப் புகைதான் அவரின் சுவாசம் என்பது போல் சதா நேரமும் மூக்கிலேயே புகையை விட்டுக் கொண்டிருப்பார். குளிர்ந்த இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும் நெருப்பு கனன்று கொண்டிருக்கும் முனையை வாயினுள் வைத்துக்கொண்டு, அவர் சுருட்டு புகைப்பதை பார்க்கும்போது, அவர் ஒரு கொள்ளிக்கட்டை பிசாசுதான். அதற்கேற்றார் போல் யாரும் அவரிடம் அவ்வளவு நெருக்கமும் காட்டுவதில்லை. எஸ்டேட்டில், – ஓடாவி என்பது ஓடாயி ஆகிப்போனபெரிய ஓடாயி, அவர் தம்பி சின்ன ஓடாயி, ‘டோன்கேர் கங்காணி, ரசியா, அருளாந்து என்று வெகு சிலரே அவருக்கு கூட்டாளிகளாக  இருந்தனர்.

மாதத்திற்கு ஒரு முறை, சம்பளம் போட்ட வாரத்தின் சனிக்கிழமை தன் கூட்டாளிகளில் ரசியாவுடன்தான் எங்க நான்னா தவறாமல் செந்தூல் கல்லுக்கடைக்கு போய் வருவார். அப்படிப்பட்ட நாட்களில் நான் மிகவும் பயந்து நடுங்கியிருக்கிறேன். வரும்போதே போதை தலைக்கேறி, நிதானமின்றி, யாரையோ திட்டிக்கொண்டே வருவார். அது எங்க அம்மாவைத்தான் என்பதுபோல், வீட்டினுள் புகுந்த உடனேயே சண்டை தொடங்கி; அம்மாவின் அழுகையில் போய் முடியும். அப்படியான ஒரு இரவில், – என் அம்மாவை அடித்துவிட்டதால்என் பெரிய அண்ணனிடம் ஒரு பேய் அறை வாங்கிய அனுபவமும் அவருக்கு வாய்த்தது. கீழே விழுந்தவரை வலது காலால் ஓங்கி மிதித்தார்.

அண்ணன் அப்படிச் செய்வார் என நான்  எதிர்பார்க்கவேயில்லை. பயந்துப் போய் அம்மாவின் பின்னால் ஒண்டிக்கொண்டேன். அடிப்பட்டு சுருண்டிருந்த அம்மாடேய் வேணாண்டா என அழுதுக்கொண்டே முனகினாள். அந்த அவமதிப்பில் அவர் மிகவும் காயம்பட்டுபோனது போல் தலை குனிந்தே நின்றார்.  எந்த வயதிலும் அவர் அடையாத குனிவு அது. அண்ணன் அசையாமல் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தார். அப்பா குனிந்தபடியே வீட்டை விட்டு வெளியே நடந்தார்.

அதற்கு பிறகு அவரிடம் புதிதாக சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. குடிக்காத நாட்களிலும் வீட்டில் பேசுவது குறைந்துப் போனது. நிறைய வெளியிலேயே சுற்றித் திரிந்தார். அதிலும் அண்ணன் வீட்டிலிருந்தால், ஹமீது கடை பக்கம் போய்விடலானார். அண்ணனும் அப்பாவை பற்றி பேச்செடுப்பதில்லை. அம்மா மன்னிப்பு கேட்கச் சொல்லி எவ்வளவு மன்றாடியும் அண்ணன் இசையவில்லை. குடித்திருந்த நாட்களில், – அண்ணன் வீட்டில் இல்லாவிட்டால்அம்மாதான் வேண்டுமென்றெ அண்ணனை விட்டு அவரை அடித்துவிட்டதாக அடிக்கடி கெட்ட வார்த்தைகளில் திட்டி, அம்மாவை முறைத்தார். ஆனால், அம்மாவை அடிக்க மட்டும் துணியவில்லை. அந்த இயலாமை அவரை மேலும் மேலும் குடிக்க வைத்தது.

ஒரு முறை எதனாலோ முழிப்பு வந்து, படுக்கையைத் தடவினேன். அம்மாவை காணோம். பீதியுடன் அழுதுக்கொண்டே குசினிப் பக்கமாகப் போனேன்.

பாபு பாபு…” என்று கம்மிய குரலில் அம்மா, பதறிக்கொண்டு வருவதற்குள் நான் குசினிக்குப் போயிருந்தேன். நான்னா, தரையில் குப்புறக் கிடந்தது நிலா வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது. அம்மா, மார்போடு உயர்த்திக் கட்டியிருந்த கைலியோடு ஓடி வந்து, என் முகத்தை தன் மடியோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, நாங்கள் படுத்திருந்தவாங்கிற்கு இழுத்துப்போனாள்.

லஞ்ச கொடுக்கா.” என்று நான்னா என்னை திட்டுவது குசினியிலிருந்து கேட்டது. நான் பயந்து நடுங்கியபடியே அம்மாவின் கைகளை என் தலைக்கடியில் வைத்து இறுகப் பற்றி படுத்துக்கொண்டேன்.

அம்மாவை அடித்திருப்பாரா?… அம்மா ஏன் அழுது சத்தம் போடவில்லை? நான்னா ஏன் அவுத்துப்போட்டுபடுத்திருந்தார்?’

நான் ஒரே குழப்பத்துடனே தூங்கிப்போனேன்.

இன்னொரு சம்பள நாளின் போதும் அப்படித்தான். நன்றாக குடித்துவிட்டு, வீட்டிற்கு வர நிதானம் போதாமல்மருந்துகாம்பரா அஞ்ஜடியில் விழுந்துக்கிடந்தார். மீன்கார மணியம் பார்த்து, அம்மாவிடம் வந்து  தகவலை சொல்லிவிட்டு போனார். அம்மா புலம்பிக்கொண்டே அண்ணனை கூப்பிட்டார். அவன் வராமல் முரண்டு பிடிக்கவே என்னை கூட்டிக்கொண்டுமருந்துகாம்பரா போனால் அங்கே நான்னா, பிணத்தைப் போல விறைத்துக் கிடந்தார்.

நான்னா, செத்துப்போயிட்டாரா?’ – நான் பயந்துபோய் அழ ஆரம்பித்துவிட்டேன். அம்மாவால் அவரை உட்கார வைக்கக்கூட முடியவில்லை. பக்கத்து கடையிலிருந்த இருவரை உதவிக்கு அழைத்து, கைத்தாங்கலாக இழுத்துக்கொண்டு வந்து, ‘அஞ்சடிப் பெரஞ்ஜாவில் போட்டனர். வீட்டிற்கு வரும் வரை அம்மாவிற்கு ஒரே புலம்பல்தான். அடிக்கடி காறித் துப்பிக்கொண்டே வந்தார்.

நான்னாவைப் பார்க்க, எனக்கு ஆத்திரமாகவும் அசிங்கமாகவும் இருந்தது. நான் குடியை; குடிக்காரர்களை வெறுத்தேன். ஆனால், எங்கள் எஸ்டேட்டில் அவர்கள் நிறையவே இருந்தனர். அவர்களுக்காகவேவங்சாக் கடை சீனன், கடைக்குப் பின்னால்சம்சு விற்றுக் கொண்டிருந்தான். தினமும் கடனுக்கு சம்சு கொடுத்துவிட்டு, சம்பளத்தன்றுஆயாக்கொட்டாய் வாசலிலேயே நின்று, வசூலித்துக் கொள்வான்.

1969இல் எனக்குக் கொஞ்சம் விபரம் வந்திருந்தது. அண்ணன் அப்போது கோலாலம்பூரில் வேலை பார்த்தார். தேர்தலில், சில மாநிலங்கள் முதன்முறையாக  எதிர்கட்சிகளின் வசம் போனதைத் தொடர்ந்து, கம்யூனிச அச்சுறுத்தல் என்று காரணம் காட்டி, மே 13 இனக்கலவரம் தூண்டிவிடப்பட்டது. கலவரத்தின் பிரதான இலக்கு சீனர்களாகவும், உபரி இலக்கு இந்தியர்களாகவும் நிர்ணயிக்கப்பட்டு, அரசின் துணையுடன் நூற்றுக்கணக்கான சீனர்களும் இந்தியர்களும் இனவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரமெல்லாம் கோலாலம்பூர், பினாங்கு போன்றபெரிய, சீனர்கள் அதிகம் வசித்தபட்டணங்களிலேயே நடந்தது. எங்கள் எஸ்டேட்டிற்கெல்லாம் வெறும் செய்தியாக மட்டுமே வந்து சேர்ந்தது. ஆயினும், இதற்கு மேலும் இந்த நாட்டில் வாழ்வது பாதுகாப்பில்லையென்று கருதி, நூற்றுக் கணக்கில் இந்தியர்கள் இந்தியா திரும்பத்தொடங்கினர். அண்ணனுக்கு என்ன ஆகியிருக்குமோ என அம்மா தினம் தினம் புலம்பத்தொடங்கினாள்.

நன்னா அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அம்மாவையும் என்னையும் கூட்டிக்கொண்டு இந்தியா போக ஆயத்தமானார். அம்மா அண்ணனைப் பார்க்காமல் எங்கும் போவதில்லை எனப் பிடிவாதமாக இருந்தாள். நன்னாவின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்தது. “அவன் எங்காவது கெடந்து சாவுறான் என அண்ணனைச் சபிக்கும்போதெல்லாம் அம்மாவும் மல்லுக்கு நின்றார். அம்மாவின் மறுப்பு நெடுநாள் முடங்கி கிடந்த நன்னா பதுக்கி வைத்த மிருகத்தை உசுப்பியிருக்க வேண்டும். ஒரு விறகுக்கட்டையை எடுத்துக்கொண்டு அம்மாவை அடிக்க வந்தார். எனக்கு எங்கிருந்து தைரியம் வந்ததோ அவர் கையிலிருந்து விறகுக்கட்டையை வாங்கி நன்னாவின் மண்டையில் முதல் அடியும் அவர் சுருண்டு விழுந்தவுடன் கைக்கால்களிலும் அடித்தேன். அம்மா என்னைத் தடுக்காமல் அழுதுக்கொண்டிருந்தார். நெற்றியில் ஒழுகிய ரத்தத்துடன் நன்னா அம்மாவை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த நிலையிலும் அம்மா அண்ணனின் பெயரைச் சொல்லி அழுதது அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். அதுவே நான், நான்னாவை கடைசியாகப் பார்த்தது. முதலில் அம்மாவுக்கு அது கவலையாக இருந்தாலும் அண்ணனை அழைத்துவரவே போயிருக்கிறார் என சமாதானம் சொல்லிக்கொண்டாள். கலவரம் அடங்கியப்பின் அண்ணனிடமிருந்து வந்த தந்தியில் அப்பாவைப் பற்றிய குறிப்பில்லாததால் கலங்கிப்போனாள். அண்ணனைத் தேடப் போன அப்பாவுக்கு ஏதும் ஆகியிருக்குமோ என புலம்பினாள்

பல வருஷங்களுக்கு பின்னர், நான் கோலாலம்பூருக்கு வேலைக்கு வந்துவிட்டிருந்த காலத்தில் ஒரு ஏப்ரல் மாதத்தில், நான்னா இந்தியாவில் இறந்துபோன தகவல் வந்து கிடைத்தது. அதுவும், இறந்து மூன்று வாரங்களுக்குப் பிறகே, இந்தியாவிற்கு போய் வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஓர் உறவினர் மூலம் இறப்பு தெரியவந்தது. எங்கள் குடும்பத்தில் நடந்த முதல் சாவு அதுதான். கடைசியில் நான்னா, ஓர் அனாதையைப் போல் செத்துப் போனது வேதனையை தந்தது. அவர் இறந்து மூன்று வாரங்கள் தாமதமாக வந்த சாவு என்பதாலோ எனக்கு அழுகையே வரவில்லை. ஆனால்.. நான்னா, பாம்பு கொத்திதான் செத்துப்போனார் என்பதை அறிந்தபோது எனக்குசுளீர் என்றது

ஒரு நாள், கூட்டாளி சாமியுடன் பெரிய பாலத்திற்கடியில் ஐஸ்கிரீம் குச்சியை சிகரெட்டாக பாவித்து, புகைப் பிடித்துக் கொண்டிருந்ததை யாரோ பார்த்து, நான்னாவிடம் சொல்லிவிட்டனர். மத்தியானம் அவர் வீட்டிற்கு வந்த கையோடு என்னை கொடிக்கம்பத்தில் கட்டிப்போட்டு, விளக்குமாறு பீய்ந்து சிதற அடித்துக் காயப்படுத்தியும் ஆத்திரம் தீராமல், வாயில் கனன்று புகைந்துக் கொண்டிருந்த சுருட்டால் எனது உள்ளங்கையில் சூடு வைத்தபோது, வலியும் எரிச்சலும் தாங்காமல் நான் திமிரிக் குதித்ததில் கட்டியிருந்தக் கயிறு அறுபட, தலைத்தெறிக்க ஓடிப்போனேன். வலியும் எரிச்சலும் தாங்கமுடியாத ஆத்திரத்தால் வந்த அழுகையினூடே முனியாண்டிச்சாமி கோவிலின் முன் நின்று, பாம்பு கடித்து நான்னா சாக வேண்டுமென்று சாமியிடம் வேண்டிச் சபித்தேன். 

அந்த இரவே அம்மாவைப் பார்க்க எஸ்டேட்டிற்கு ஓடிப் போனேன். முதன்முறையாக, காதுகளிலும்; மூக்கிலும் தொங்கிய மாயத்தினாலான கம்மல் வளையங்கள் இல்லாமல் அம்மாவை மூளியாய் பார்த்தேன். நெற்றியிலும் கைகளிலும் குத்தியிருந்த பச்சையே, எஞ்சிய அணிகலன்களாய் இருந்து, அம்மாவை வெறிச்சோடியே காட்டின. அம்மாவைப் பார்க்க, சகிக்கவில்லை

மறு வருஷமே அம்மாவும் செத்துப்போனாள்.

நான் என் பெற்றோரின் சாவை நினைக்கும் போதெல்லாம் மிகவும் சங்கடத்திற்குள்ளாகிப் போவேன். நான் சிறுபிள்ளைத்தனமாய் வேண்டிய சாபம், அப்படியே பலித்தது; நெஞ்சை பிழிந்தது.

மகள், சாமி கும்பிடுவதற்கான வேலைகளில் மூழ்கியிருந்தாள். வீடே என் பிள்ளைகளாலும் பேரப்பிள்ளைகளாலும் நிரம்பி, இரைந்தது.

மூத்த மகன், வழக்கம்போல் தனித்தே வந்திருந்தான். அவன் அரசாங்க மருத்துவமனையில் வேலை செய்யும்போது, மலாய்க்கார நர்ஸ் ஒருத்தியை காதலித்து, ராமாராவ் என்ற பெயரை இழந்து, ‘ஏதோ பின் அப்துல்லா என்று முஸ்லீமாகி, கல்யாணம் செய்துக்கொண்டான். ஆரம்பத்தில், வீட்டு விசேஷங்களில் தவறாமல் மனைவி மக்கள் சகிதம் வந்து போய்க்கொண்டுதான் இருந்தான். ஆனால் இப்போது சில வருடங்களாக அவன் மனைவி, கண்கள் மட்டுமே தெரிய கருப்பு முக்காடு அணிந்துக்கொள்ள தொடங்கியதிலிருந்து, அதுவும் குறைந்து போனது. அப்படியே சில விசேஷங்களுக்கு அவள் வந்த போது, கையோடு சாப்பாட்டு தட்டுகளையும்; தண்ணீர் குவளைகளையும் கொண்டு வந்தாள். மார்க்கத்தில் இல்லாதவர்களின் பொருட்களை புலங்குவதுஹராம் என்று ஒதுக்கத் தொடங்கினாள். மகனும் அந்தத் தட்டுகளிலேயே சாப்பிடலானான். மாமிச சாப்பாடாயின் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டதா என கேட்கவும் செய்தாள். இது, எனது மற்ற பிள்ளைகளிடையே சலனத்தை ஏற்படுத்தியதால், அவர்கள் அவளிடம் முகத்தைக் காட்ட தொடங்கினர். அதனால் அவள் எங்களுடன் உறவாடுவதை முற்றாக நிறுத்திக்கொண்டாள். பிள்ளைகளையும் அனுப்புவதில்லை.

இரண்டாவது மகனும் சொந்தமாகவே மனைவியை தேடிக்கொண்டான். தமிழ்ப்பெண்தான். நான்னாவின் குடியையும், புகையையும் இளம் வயதிலேயே பழகி அவன், நான்னாவின் பெயரை எடுத்திருந்தான்ஒரு நாள், பள்ளியிலிருந்து வரும்போது அவன் மேல் சிகரெட் நாற்றம் அடிக்க, கண்ணத்தில் ஓங்கி அறையலாம் எனத்தோன்றி அடக்கிக்கொண்டேன். நான் எதுவும் கேட்பதற்கு முன்னர், பள்ளிச்சீருடையை கூட கழட்டாமல் விறுவிறுவென்று வெளியே போனவன், விளக்கு வைத்தப் பிறகுதான் வீட்டிற்கு வந்தான். இப்பொழுது அவன் மேல் சாராய நெடி வேறு வீசியது. நான் அவனிடமிருந்து விலகி நின்று, செய்வதறியாத குழப்பத்தில் கண்களை மூடி, ‘தேவுடா…’ என்று முனகி முகத்தை அழுத்தித் தேய்த்துக்கொண்டேன்

பி.எம்.ஆரோடு அவன் படிப்பு நின்றுப் போய் ஊதாரியாய் திரிந்துக் கொண்டிருந்தான்.. காலையிலேயே வீட்டை விட்டு போகிறவன் இரவிலேயே திரும்பி வந்தான். ஒரு நாள், அவன் வீட்டிற்கு வரவேயில்லை. விடியற்காலை நான்கு மணிக்கு போலீஸ் வந்து, ‘மோட்டார் சைக்கிள் திருட்டு விஷயமாக  அவனைத் தேடுவதாக சொன்னது. அதனை தொடர்ந்து, சில மாதங்களுக்கு அவன் காணாமல் போனான்! திடீரென்று ஒரு நாள் வந்து, சீன நிறுவனமொன்றில் டிரைவராக வேலை செய்வதாகவும், அடிக்கடிஅவுட் ஸ்டேஷன் செல்ல வேண்டியதால், கம்பேனியிலேயே தங்கிக்கொள்வதாகவும் சொன்னான். நான் தலையை மட்டும் ஆட்டி, அவனை பார்த்தேன். கருத்துப் போயிருந்தான். புஜங்கள் புடைத்து; கைகள் திரண்டிருந்தன. இரண்டு கைகள் முழுக்க பச்சை குத்தியிருந்தான். சாமீபத்தில்தான் மொட்டை அடித்திருப்பான் போலமுடி இப்போதுதான் வளர ஆரம்பித்திருந்தது.

லாக்காப்பில் இருந்திருப்பானோ

அடுத்த முறை அவன் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பெண்ணோடு வந்திருந்தான். கல்யாணம் ஆகிவிட்டதாக சொல்லி, மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தான். அவளைப் பார்க்க, ஏற்கனவே கல்யாணமானவள்போல் தோன்றினாள். அவளும் பச்சை குத்தியிருந்தாள். பனியனுக்கு வெளியே தெரிந்த நெஞ்சுப் பகுதியில், அம்பு பாய்ந்த இதயம் பாதி மட்டும் தெரிந்தது. அவர்கள் போனபிறகு, அவளுக்கு ஏற்கனவே ஒரு பையன் இருப்பதை மகள் ஊர்ஜிதப்படுத்தினாள்.

இப்பொழுது அவனுக்கு பிறந்ததையும் சேர்த்து மூன்று பிள்ளைகள். இன்று, அவன் குடுப்பத்தோடு வந்திருந்தான். ஆனால், பிள்ளைகள் மூவரும் எப்போதும் மலாய் மொழியிலும் கொஞ்சமாக ஆங்கிலத்திலுமே பேசிக்கொண்டனர். அவர்கள் யாருக்குமே சொந்த பாஷை தெரியவில்லை. ஆனால், ‘நாம பேசரதெல்லாம் அவுங்களுக்கு வெளங்கும் திரும்பி பேசத்தான் தெரியாது என்று சொல்லி பெற்றவர்கள் பூரித்துப் போயினர்.

மகளின் வாழ்க்கையும் அவ்வளவு சுகமில்லை. அவளாகத் தேடிக்கொண்ட வாழ்க்கைதான். ஒரே வருஷத்தில் புருஷனோடு வாழ முடியாதென்று, கையில் குழந்தையுடன் வீட்டோடு வந்துவிட்டாள். ஒரு ஆறுதல், அவள் நல்ல உத்தியோகத்தில் இருந்தாள். வசதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் இருந்தது. ஆயினும், எனக்குப் பின்னால் மகளின் வாழ்க்கையை நினைக்க கலவரமாய் இருந்தது. உறவுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தும், என் கண்ணெதிரிலேயே எல்லோரும் அந்நியர்களைப்போல் சிதறிக் கிடந்தனர். தனியாளாய் என் பேத்தியை எப்படி வளர்த்தெடுப்பாளோ? பல சமயங்களில் பேத்தி தூங்கிய பின்னர், ஹாலில் உட்கார்ந்து, இரண்டு கைகளிலும் கைப்பேசியை ஏந்திக்கொண்டு, இரண்டு கட்டை விரல்களாலும்கண்களால் பார்த்தால் மட்டுமே நம்பக்கூடிய வேகத்தில்விட்டு விட்டென தட்டிக்கொண்டிருப்பாள். இடையில் தானாகவே சிரித்தும் கொள்வாள்.

 ம்ம்ம் நான், அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துக்கொள்ள முடியாத தலைமுறையில் நின்றுப் போனேன்

 “தோ.. எல்லாம் ரெடியாச்சிப்பா நா, குளிச்சிட்டு வந்த கையோட சாமி கும்பிட்றலாம்…” என்று மகள் குளிக்கப்போனாள்

 நான், நான்னாவிற்கு படைக்கப்படிருந்த பொருட்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக்கொண்டேன்.  

திரும்பி பேரப்பிள்ளைகளை பார்த்தேன்.. இரண்டாவது மருமகளின் பெரிய மகன், சுவரில் சாய்ந்து, இரண்டு கைகளாலும் கைப்பேசியை ஏந்திக்கொண்டுகட்டை விரல்களால் மின்னல் வேகத்தில் கண்ணாடித் திரையை குத்திக்கொண்டிருந்தான். மருமகள், இன்னொரு மூலையில் உட்கார்ந்து கைப்பேசியை தேய்துக்கொண்டிருந்தாள்மகன்கள் இருவரும், சோபாவில் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்து, டெலிவிஷனையும், கைப்பேசியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர். பெரியவர்கள் யாருமே யாருடனும் பேசிக்கொள்ளவே இல்லை. மற்ற பேரப்பிள்ளைகள், மலாய்; ஆங்கிலம் கலந்து ஏதேதோ கத்திப்பேசி, ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இத்தனை வருடங்களுக்கு பின்னர் முதன்முதலாக மொத்த குடும்பமும் என் நான்னாவிற்காக கூடியிருந்தது சந்தோஷத்தை தந்தது. பெரியவனின் மனைவி மக்களை, நான்னாவின் சந்ததியாக யாருமே கருதவில்லை. பெரியவனுக்கும் அது ஒரு பொருட்டாக தோன்றவில்லை. அவன் முற்றாகவே ஒதுங்கிப் போனான். நான் இன்னும் உயிரோடு இருந்ததால் அவன் இன்னும் ரத்த பந்தங்களோடு ஒட்டிக்கொண்டிருப்பதாய் எனக்கு தோன்றியது. நல்ல வேளை, அவர்களின் தாய் இப்போது உயிரோடு இல்லை.

கனவில் வந்த நான்னா, என் பிள்ளைகளைப் பற்றிதான் ஏதோ துக்கப்பட்டதாக எனக்குத் தோன்றியது, உண்மையென்றே பட்டது.

அப்போது மகள் வயிற்றுப் பேத்தி,

தாத்தா, heeelp!…the boy chasing… I am scaaared!…“ என்று கத்திக்கொண்டே ஓடி வந்துஎன் கழுத்தை இறுகப்பற்றி, மடியில் சாய்ந்து, முட்டிக் கால்களுக்கிடையே பாதுகாப்பைத் தேடிபதுங்கிக்கொண்டாள்.

நான் ஆதரவாய் அவளை வாரி அணைத்துக் கொண்டு, கண்கள் கலங்க, ஏக்கத்துடன் பரிதாபமாக என் நான்னாவைப் பார்த்தேன்.

4 comments for “நான்னா

  1. ஆரியபாலன்
    January 5, 2021 at 10:36 am

    சகோதரர் நவின் இந்த கதையை வாசிக்கச் சொல்லியிருந்தார். நல்ல கதை என்ற ரகத்தில் சேர்க்கலாம். ஆனால் இதன் பேசுபொருள் முதுமை கோரம். நாஞ்சில் நாடன் உட்பட பல படைப்பாளிகள் இந்தக் கருவை ஒட்டி இன்னும் நுணுக்கமாக எழுதிவிட்டனர். இக்கதை அது சொல்லும் முறையில் சிறப்படைகிறது. அப்பா இழந்த மதிப்பை வெறுப்புடன் அனுமதிக்கும் மகன் தனக்கு அது நிகழும் பதற்றத்தில் முதுமையில் சுணங்குவது இன்னும் ஒரு பரிணாமம்.முதுமை சொல்லச் சொல்ல தீராத துன்பத்தைக் கொண்டதுதான்.

  2. K.Param
    January 5, 2021 at 8:23 pm

    நல்ல சிறுகதை. முடிந்தால் சிறுகதைகளுக்கான படங்களை வரையச் சொல்லலாம்.

  3. Jeevitra Sree
    January 10, 2021 at 5:55 pm

    தாத்தா, கதை மிகவும் அருமையாக இருந்தது!

Leave a Reply to ஆரியபாலன் Cancel reply