ஆறுதல்

களைவெட்டி மூன்று நாள் வாடப் போட்டிருந்த வெண்டைச் செடிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கோபால்சாமி, “ஈரத்தில் வெளையாடாத கபிலா, சேத்துப்புண் வரும் தடத்துக்குப் போ, எத்தனவாட்டி சொல்றது” என்றார். நீர்வற்றி சொதசொதவென்று இருந்த வாமடை மண்ணைப் பிசைந்து குதிரை செய்துகொண்டிருந்த கபிலன், “நீயும்தானே சேத்தில நிக்கிற தாத்தா. உனக்கு வரலையன்னா எனக்கு எப்படி வரும்?” என்றான். “என் பாதம் தடிச்சுப்போச்சில்லோ ஒனக்கு மெல்லிசா இருக்கில்லையா விரல்? சந்த மண் அரிக்கும். அப்புறம் நவநவன்னு புடுங்கும். ராத்திரியில தூங்கமுடியாது அழுவ.” “நீயும் எனக்கு சைக்கிள் வாங்கித்தரலையே. நடந்து நடந்து என் பாதமும் தடிச்சுதானே போச்சு, எப்பிடி மெல்லிசாகும்?” எப்போதும் போல “வாங்கலாம்டா வாங்கலாம்டா” என்று தலையை ஆட்டிக்கொண்டார்.

ராமச்சந்திரன் மகனுக்குப் பள்ளியில் தந்த கிளிப்பச்சை சைக்கிள் ஒன்று கொட்டத்தில் இருந்தது. பள்ளிக்கு ராகுல் ஓட்டிப்போன சைக்கிள். அதைக்காட்டினார் கோபால்சாமி. பார்த்ததும் “இந்த சைக்கிள் இல்ல தாத்தா, கீர் சைக்கிள் சின்னதா,” என்று இழுத்துக்கொண்டு வந்துவிட்டான். தோட்டச்சாலையில் குடியிருக்கும் பிள்ளைகள் எல்லாம் விலை உயர்ந்த கீர் சைக்கிளை எடுத்து மாலை வேலையில் சித்திரைச்சாவடி தார்ச்சாலையில் உலாப் போவதைப் பார்க்கும் போதெல்லாம், “தாத்தா, அந்தா அந்த மாதிரி புது சைக்கிள்!” என்பான். கோபால்சாமியும் விசாரித்தார். ஒரு சைக்கிளின் விலை பதிமூன்றாயிரம் என்றார்கள். இன்னொரு சைக்கிளின் விலை பதினைந்தாயிரம் என்றார்கள்.

“இதேபோல வாங்கித்தா!” என்றபோது “அவங்களுக்கெல்லாம் தோட்டக்காடு இருக்கு. நமக்கு என்ன இருக்கு!” என்றார். “நீயும் தோட்டத்திலதானே இருக்கே” “தோட்டத்திலதான் இருக்கேன். கார்ல வர்றாரே பிரகாஷ் மாமா அவரிதில்லையா தோட்டம்” என்றபோது பேசாமல் இருந்துகொண்டான்.

கபிலனுக்கும் கொஞ்சம் தெரிந்துதான் இருந்தது. தாத்தாவும் பாட்டியும் இந்தத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது போகப்போக புரிந்து கொண்டான். பாட்டி “கபிலா குளிச்சிட்டு கொஞ்சம் சுத்தமாத்தான் இருடா. இன்னிக்கி உன் அம்மா வருவா. உன் கோலத்தப் பாத்து என்னைய ஏசுவாடா,” நறுக்கிப்போட்ட சோளத்தட்டை தீவனத்தை சிந்தாமல் சுருட்டி அள்ளியபடி அழைத்தாள். நான்கு பசுக்களைப் பார்க்கவே பாட்டிக்குப் பொழுது சரியாக இருக்கும். கபிலனுக்குப் பாலுக்கு எப்போதும் பஞ்சமில்லை. பிரகாஷ் அதையெல்லாம் கணக்கு வைக்கமாட்டார். தண்ணீர் பாய்ந்த வாய்க்காலில் சேறு விரல்கள் வழி பிதுங்கி மேலே வருவதைப் பார்த்தபடி வந்து நீர்வரும் வாய்க்காலில் கால் வைத்தான்.

“கொடு தாத்தா நான் திருப்புறேன்” மண்வெட்டியை வாங்கினான். “இரு இரு. இன்னும் பாத்தி முழுக்க பாயல” என்றதும் இடுப்பில் கைவைத்து பெரியவன்போல பாத்தியைப் பார்த்தான். “திருப்பட்டுமா தாத்தா” “இரு” நெற்றியில் விழுந்த முடியை ஸ்டைலாக மேலே ஏற்றிவிட்டுக்கொண்டான். களைவெட்டியபின் வெண்டைச்செடிகள் வரிசை வரிசையாக கொஞ்சம் வாட்டத்தோடு நின்றன. கோரையும் தக்கப்பூடு செடியும் வாடி வதங்கிச் சுருண்டு கிடந்தன. நிலமே சுத்தமாக இருந்தது. “தாத்தா இப்ப” “சரி திருப்பு” மண்வெட்டியைத் தூக்கி வாமடைக் கரையில் கொத்தினான். கொத்திய மண்ணை இழுக்க இழுக்க வாமடை அடையாமல் திமுதிமுவென வரும் நீரில் மண் கரைந்துபோனது. “அம்போ அம்போ பாத்து பாத்து” அவனால் கனமான மண்வெட்டியைத் தூக்கிப்போட்டு இழுத்து அணைக்க முடியவில்லை. “விலகுடா கபிலா” தாத்தா மண்வெட்டியை வாங்கினார். “தாத்தா சின்ன மம்பட்டியா இருந்தா அடச்சிடுவேன் தாத்தா” “பின்ன, அடுத்த வருசமெல்லாம் நீயே பாய்ச்சிடுவ” சொல்லியபடி அடைத்தார். வாய்க்கால் நீர் தெறிக்க தொட்டியை நோக்கி ஓடினான். ஆறாம் வகுப்பு போகிறான்.

ஒரு மணி இருக்கும், தாத்தா தங்கையை மார்பில் ஏந்திக்கொண்டு தென்னைமரச் சாலைவழி வருவது தூரத்தில் தெரிந்தது. அப்பாவும் அம்மாவும் தாத்தாவின் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அம்மா போனமுறை வரும்போது சைக்கிள் வாங்கிக்கொண்டு வருவதாகச் சொல்லி இருந்தாள். இப்போதும் ஒரு கையில் கட்டைப் பையைப் பிடித்துக்கொண்டு வெறுங்கையை வீசிக்கொண்டு வருவதைப் பார்த்ததும் வருத்தம் உண்டாகியது. அம்மா வாராவாரம் வரமாட்டாள். ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ, இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோகூட தாழ்த்தி வந்திருக்கிறாள். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது போன அம்மா ரொம்பநாள் கழித்துத்தான் வந்தாள். அம்மாவுடனே இருக்க ரொம்ப ஆசை தோன்றும். சரி சரி என்று கடைசியில் சொல்லிவிட்டுத்தான் போவாள். அம்மா வரும்போது ஓடிப்போய் கட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான். இப்போது கோவம்தான் வருகிறது.

ஆறு மாதத்திற்கு முன் தாத்தா பாட்டியுடன் பெதப்பம்பட்டி போனபோது தங்கை அழகான குட்டி புது சைக்கிளை வாசல்முன் ஓட்டிக்கொண்டிருந்தாள். தாத்தா அவளை ஆசையோடு தூக்கியதும் அந்த சைக்கிளில் அமர்ந்து ஓட்டினான். சைக்கிளை இடப்புறமாகவும் வலப்புறமாகவும் வேகவேகமாகத் திருப்பும்போது பின்சக்கரம் ஒரு பக்கம் தூக்குவதை சாகசத்தோடு புரளாமல் தரைதொட வைத்தான். அது சின்ன முற்றம்தான். ஆசைதீர ஓட்டவேண்டும். போகும்வரை வண்டியை விட்டே இறங்கக்கூடாது என்பதில் தீர்மானம்கொண்டான். வேகமாகச் சென்று பிரேக் அடித்தபோது சட்டென பின் சக்கரங்கள் ராத்தி நின்றன. சந்தோசம் பொங்கியது. என்னென்னமோ விதத்தில் ஓட்டிப்பார்க்க முனைந்தான்.

வாசலில் இருந்து கைலிவேட்டியை மடித்துகட்டிக்கொண்டு வந்த அப்பா “டேய் டேய் வண்டிய ஒடச்சுப் போட்டிருவபோல இருக்கே. போதும் ஓட்டுனது. ஆளும் அவனும் எந்திரி” கடுப்புடன் சொல்ல எழுந்து பரிதாபமாகப் பார்த்தான். சின்ன வயதிலிருந்தே அப்பாவைக் கண்டால் பயம். “உள்ள போடா” என்றவர் வண்டியை விட்டத்தின் இரு கொக்கி கம்பியில் அலாக்காகத் தூக்கிமாட்டித் தொங்கவிட்டார்.

அந்த ஓட்டு வீடு அனலாக இருந்தது.

கபிலன் கொட்டத்தின் பின் இருக்கும் பலா மரத்தின் பின் மறைந்து அமர்ந்துகொண்டான். சாண வாசம் அடித்தது. குப்பை மேட்டில் கோழி கிளறி செறிக்காத தானியத்தைக் கொத்தி குஞ்சுகளுக்கு குக்குக்குக்கென காட்டி எடுத்துப்போட்டது. சோளக் கருதுகளை அறுக்காமலே தட்டையோடு மாட்டுக்குப் போடுவாள் பாட்டி. இன்னும் சின்னவனாக இருக்கும்போது தன்னை ஒரு கோழியாக நினைத்து குஞ்சுகளை தோட்டத்திற்குள் கூட்டிக்கொண்டு போயிருக்கிறான். வானில் வலசாரை வந்தால் அப்படியே குஞ்சுகளை அணைத்துப் படுத்துக்கொள்வதுபோல படுத்துக்கொள்வான். தன் நெஞ்சாங்கூட்டின் அடியில் ஒண்டிக்கொண்ட குஞ்சுகளைப் பார்த்து பயப்படாதே நான் அம்மா இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வான். வலசாரை கண்ணையன் தோட்டத் தோப்பைத் தாண்டி போனதும் க்கூஉய் என கத்தி குடுகுடுவென குஞ்சுகளை அழைத்து வீட்டுக்குள் கொண்டு வந்து விடுவதுபோல விடுவான்.

பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட தாத்தா முயன்றபோது போகமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தான். பவளக்கால் நூலான் கோழி அப்போது அடையில் இருந்தது. மதியம் வாக்கில் திடுக்கென அடையைவிட்டு மெல்ல எழுந்து இறங்கி ஒரு எட்டு வைத்து நிற்கும். பின் படபடவென இறக்கையை அடித்துக்கொண்டே கொக்கரித்தபடி வெளியே ஓடும். அந்த கொக்கரிப்பு சுற்றியிருக்கும் தோட்டங்களில் எல்லாம் எதிரொலிக்கும். தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அடைக்கோழி என்று சொல்வார்கள். அச்சொட்டாக அது தனித்துத் தெரியும். களத்தில் ஓடிவந்து நின்றதும் ஒருநாள் எச்சத்தையோ இரண்டு நாள் எச்சத்தையோ பொதுக்கென இடும். எச்சமிட்டதும் ஹாயாக இறக்கையைப் படபடக்க உதறி அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ இரையெடுத்தபடி உலவும். பின்பு, மெல்ல எட்டுமேல் எட்டு வைத்து வந்து படுக்கும். படுத்ததும் விலகி இருக்கும் முட்டைகளை தன் அலகால் லாவகமாக வளைத்து நகர்த்தி நகர்த்தி நெஞ்சாங்கூட்டின் அடியிலும், இருபுற இறக்கையின் அடியிலும் நகர்த்தி முழுக்க தன் உடலால் வெளியே முட்டைகள் தெரியாதவாறு பதனமாக அணைத்து படுத்து சூட்டைக் கொடுக்கும். முட்டைகளுக்கு தொடர்ந்து சூட்டைக் கொடுத்தால்தான் குஞ்சுகள் உருவாகும் என்று பாட்டி சொன்னது கபிலனுக்குத் தெரியும்.

நூலான் மதியம் எச்சம்கழிக்க வந்ததும் சீனா சட்டியில் அடை வைத்த 13 முட்டைகளைப் பார்த்தான். சூடு இல்லாது போனால் குஞ்சு வராது என்று தோன்றியதால் சட்டியின் மேலே தாய்க்கோழி படுப்பதுபோல இரண்டு கைகளை இறக்கைகளாக வளைத்து நெஞ்சு தோய படுத்தான். நூலான் வரும்வரை படுக்கலாம் என்று நினைத்து இடதுகையைச் சற்று அசைத்தபோது உடல்பாரம் இறங்கி நொறுக்கென்றது. பாட்டி ஒரு கைப்பிடி இரையை அள்ளிப்போட வந்தபோது கபிலன் அடையில் படுத்திருப்பதைப் பார்த்து ஓடி வந்து தூக்கினாள். நெஞ்சுக்கு நேராக இருந்த மூன்று முட்டைகள் நொறுங்கி அவன் நெஞ்சிலும் அடை மண்ணிலும் மஞ்சள் கரு கலைந்து ஜவ்வாக அப்பிக்கொண்டு வந்தது. அடை மண்ணிலும் நொறுங்கிய ஓடுகளுடன் எண்ணையாக படர்ந்து ஒட்டியது. பாட்டி அவன் குண்டியில் ஒரு போடுபோட்டு தொட்டிக்கு இழுத்து வந்து குளிக்க வைத்தாள். வேறு சீனா சட்டியில் புது மண்பரப்பி 10 முட்டைகளை அதே இடத்தில் வைத்தாள். அந்த நூலான் ரொம்ப நேரம் அந்த புதுச்சட்டியை கொர்ர்ரென விநோதமாகப் பார்த்து சுற்றிவந்து வெறித்தது. பின் பழைய வாசம் போனதற்கு சமாதானப்பட்டு சற்று சஞ்சலத்தோடே ஏறிபடுத்தது. தாத்தா தோட்டத்திற்கு வந்து பேசிவிட்டு போவோரிடமெல்லாம் தன் பேரன் அடையில் படுத்த அழகை சிரிக்கச் சிரிக்கச் சொல்வார். அப்படிச் சொல்லும்போது கபிலன் இருந்தால் தாத்தாவின் முதுகில் ஏறி அவரது வாயைப் பொத்துவான். தலையில் கொட்டுவான்.

பள்ளிக்கூடம் கிளம்பும்போதுதான் அம்மா சாப்பிட அமர்ந்தாள். வயிற்றுவலி வந்துவிட்டது. முன்தின நாள் வெங்காயப் பட்டறை போடுவதற்கு தாத்தா அடிபண்டை கூட்ட வேங்கை, நுனா, மூங்கில் தடிகளை அம்மா வயிற்றைத் தள்ளியபடி கொண்டு வந்து உதவிக்கொண்டிருந்தாள். கட்டைகள் திரட்டு மேட்டிலிருந்து சரியாமல் இருக்க பக்கவாட்டில் சதுர கற்களைப் பதித்துவைத்தார். அது முடிய கொட்டத்து ஓரம் அடுக்கி வைத்திருந்த மூங்கில் படல்களை எடுத்து பாட்டியின் தலையில் ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தாள்.

கைப்பிடிச்சுவரில் அமர முடியாமல் தாழ்வாரக் கம்பைப் பிடித்து அனத்தத் தொடங்கினாள் அம்மா. பாட்டி நொச்சி மரத்தின் பக்கம் நின்று பக்கத்துத் தோட்டச்சாலையில் குடியிருக்கும் ராஜாத்தி பெரியம்மாவை அவசரமாக அழைத்தாள். பெரியம்மா எங்கு போனதோ அந்தப் பக்கம் குரல் வரவில்லை. ஐயையோ வலி தாங்க முடியலையே, உயிர்போகுதே என்று அம்மா கத்தியபோது “என்னம்மா செய்யுது?” அம்மாவின் தொடையைத் தொட்டுத் தொட்டுக்கேட்டான். “இப்படியே நான் செத்திட்டா இவன யார் பாப்பா” என்றாள். “அம்மா நானும் உன் கூடவே செத்துக்கிடுறேம்மா” என்றான். அவளோடு அவனும் சேர்ந்து அழுதபடி “பாட்டி வேகமா வா பாட்டி அம்மாவுக்கு வயிறு வெடிக்கப்போகுது” அவசரமாக அழைத்தான். பாட்டி வெங்காயக் காட்டின் குறுக்காக ஓடிவந்தாள்.

வாசல் திண்ணைக்கு அழைத்துப்போக அம்மாவின் கரங்களைப் பற்றிக்கொண்டான். பாட்டி அம்மாவின் சரிந்த சேலையை எடுத்து இடுப்பின் பின்பகுதியில் சொருகினாள். உதடுகள் காய்ந்து போயிருந்தன. அம்மா நடுங்குவது அவன் பிடித்திருந்த கைகளில் தெரிந்தது.

தாத்தாவும் அப்பாவும் ஆட்டோ பிடித்து வந்தார்கள். அவசர அவசரமாக பாட்டி கட்டைப்பையில் துணிகளை எடுத்துக்கொண்டு அம்மாவுடன் ஆட்டோவில் ஏறினாள். கபிலனும் ஏறியபோது தாத்தா அவனைத் தூக்கிக்கொண்டு ‘நாளைக்கு நாம போவோம்’ என்றார். அம்மாவுடனே போக நினைத்தான். வீட்டுக்குள் வரும்போது அம்மா சாப்பிடாமல் வைத்துவிட்ட தட்டில் இரு ஈக்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ஒரு வாய்தான் சாப்பிட்டிருப்பாள். அம்மா இல்லாமல் போய் விட்டதுபோல இருந்தது.

“தாத்தா அம்மா சாப்பிடல தாத்தா. திரும்பி வந்துடுமா தாத்தா?”

“உனக்கு தம்பி பாப்பாவ கொண்டு வருவா செல்லம்,” என்றார்.

சாப்பிட சாப்பிட அம்மாவின் பசி போனால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது. இனி எப்போதும் அம்மாவுடன் சண்டை போடக்கூடாது; அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டேதான் எங்கும் போகவேண்டும் என்ற நினைப்பு ஓடியது.

அன்று கபிலனுக்கு நிறைய பொறுப்பு வந்தது. தாத்தா பசு மாடுகளுக்கு தண்ணீர் காட்டும்முன் தொட்டிகளில் இரண்டு இரண்டுபடி தவிடு கொண்டுவந்து கொட்டினான். ஊரவைத்த புண்ணாக்கு வாளியைத் தூக்கிக்கொண்டு வந்து அவனே கரைத்து ஊற்றினான். ஊறி பொதுபொதுவென நுரைத்தது போக கரையாது தகடு தகடாக இருந்த புண்ணாக்கை வேறொரு சின்ன வாளியில் எடுத்துவைத்தான். காரை மரத்தை ஒட்டி போட்டிருந்த சீமைப்புல்லை தாத்தா அறுத்து அறுத்துப்போட கட்டில் தலைவு மாற்றி மாற்றி எடுத்து வைத்தான். எவ்வளவு பெரிய கட்டையும் தாத்தா ஒத்தையாளாகத் தூக்கிவிடுவார்.

வேலியோரம் இருந்த காரை மரம் இரு கவுளியாக வளர்ந்திருந்தது. அதன் கொப்புகள் வளைந்து வளைந்து கீழிறங்கின. வில்வ இலையைவிட தடிமனாகவும் கரும்பச்சையில் எண்ணெய் தடவியதுபோல பளபளத்தன. ஐம்பதுக்கும் மேலான கொப்புகள் வளைந்து வளைந்து குடைபோல நின்றிருந்தன. கொப்புக்களில் தடிமனான முட்கள் பழங்களையும், இலைகளையும் வெள்ளாட்டின் வாய்களிடமிருந்து பாதுகாத்தன. வருவோர் போவோர், முட்கள்படாமல் கொப்புகளை வளைத்து காரைப் பழங்களைப் பறித்து வாயில் போட்டுக்கொண்டு போவார்கள். தாத்தா அரிவாளை நீட்டி கைக்கு எட்டாது மேலே இருந்த கொப்பை ஒவ்வொன்றாக வளைத்து குட்டி குட்டியான மஞ்சள் பழங்களைப் பறித்துத் தந்தார். துவர்ப்புடன் கூடிய சதைப்பகுதியை நறுச் நறுச் சென்று கடித்துத் தின்றான். அம்மாவுக்கும் பாட்டிக்கும் தர கால்சட்டை பாக்கெட்டில் நிரப்பினான்.

அப்பா கலைந்த தலையோடு பொழுதுசாய வந்தார். தாத்தாவிடம் அம்மாவுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றார். தாத்தா காடி முழுக்க பசு மாடுகளுக்கும் கன்றுகளுக்கும் தீவனத்தை நிரப்பிவிட்டு அவசரமாகக் கிளம்பிப் போனார்.

தாத்தா, பாட்டி இல்லாமல் இரவில் ஒருநாள் கூட தூங்கியதாக நினைவில்லை. தாத்தா சுடுகாட்டில் கழுதைப்புலி பிணக்குழியைப் பறித்து, பிணத்தைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு போனதைச் சொல்லும்போது பயமாக இருக்கும். பயந்தபடியே திரும்ப கழுதைப்புலியைப் பார்த்ததைப் பற்றியே கேட்பான். தாத்தா ஒவ்வொரு முறை சொல்லும்போதும் கழுதைப்புலியின் வேட்டையை இன்னும் பயப்படும்படியாகச் சொல்வார். கோட்டான்களின் இரைச்சல் படப்பிலிருந்தும் தென்னை மரங்களில் இருந்தும் இடைவிடாமல் வந்தன. அழிஞ்சில் மரத்தின் கிளையிலிருந்து ஆந்தை குழறியது. கிச்சு கிச்சுவோக் கிச்சுகிச்சுவோக் என்ற குரல் வரும்போதெல்லாம் பயமாக இருந்தது. அழிஞ்சிப் பழங்கள் கருஞ்சிவப்பில் சின்னச்சின்ன கோலிகுண்டுகளாக காய்த்துத் தொங்கும்போது தோட்டங்களில் குடியிருக்கும் குழந்தைகள் எல்லாம் சைக்கிளில் வந்து தாத்தாவிடம் கேட்பார்கள். நாவல் பழம் தின்பதைப்போல இருக்கும். பரத் அந்த சமயத்தில் அவனது கீர் சைக்கிளை ஓட்டத் தருவான்.

ஓட்டின் மீது, இரண்டு பூனைகள் மாறிமாறிக் கத்தின. திடீரென்று இரண்டும் திடுபுடுவென கிரீச்சிட்டபடி சண்டை இட்டன. தாழ்வார தகரத்தில் பொத்தன விழுந்து ஓடின. யாரும் திரும்பிவராமலே போய் விடுவார்களோ என்று தோன்றியது. அம்மாவை எங்குத் தேடிப் போவது? அம்மா சாகக்கூடாது? தாத்தா, அம்மா இருக்கும் இடம்தெரியாமல் வேறு பக்கம் போயிருப்பாரா? இந்த இருட்டில் எங்கே போய் காணமுடியும்?

வரும் அழுகையை அடக்கிப் பார்த்தான். முடியவில்லை. கட்டிலில் படுத்திருந்த அப்பா, “ஏன்டா அழற. பேசாம தூங்கு” என்றார். போர்வை நுனியை சுருட்டி வாயில் வைத்துக்கொண்டான். அதையும் மீறி விசும்பல் வந்தது. அழுகையை அடக்கத் தெரியவில்லை. வாய்விட்டு அழத்தொடங்கினான். “டேய் அழாத, பேசாம படு” “அம்மா கிட்ட போகணும்பா” “காலையில போகலாம் தூங்கு” “அம்மாவ பாக்கணும்” “இந்த ராத்திரியிலே போகமுடியாதுடா. காலையில போகலாம்” எரிச்சலில் எழுந்து அமர்ந்துகொண்டு அவனைப் பார்த்தார்.

அம்மா, தாத்தா, பாட்டி இல்லாமல் இனி எப்படி இருப்பது என்று தோன்ற வாய்விட்டு அழுதான். மெல்ல எழுந்து கதவு பக்கம் வருவதைப் பார்த்த அப்பா திடுக்கென இறங்கி கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். “என்னடா சண்டித்தனமா பண்ற. மயிராண்டி தூங்குடா” அவனுக்கு ஒன்னுக்கு வருவது போலவும் இருந்தது. தலையணையில் அமர்ந்து ‘தாத்தா’ என்று வாய்விட்டு அழுதான். இரண்டு காலையும் சரட்டென பிடித்து இழுத்து தலைகீழாக நிறுத்தினார். வீடே தலைகீழாக ஆடியது. “அப்படியே சொழட்டி அடிச்சேன்னா செதறிப் போயிடுவ பாத்துக்க. அப்ப இருந்து சொல்லிக்கிட்டிருக்கேன், எதுக்குடா அழுகிற கள்ளநாயே சொன்னேனா இல்லையா அழுவயா ம்ம்…” முதுகில் தன் முட்டியால் ஓங்கி ஓங்கி இடித்தார். வலியெடுத்தது. வலது காலை விட்டுவிட்டு இடதுகாலை மட்டும் பிடித்து தலையைத் தரையில் இடிப்பதுபோல இறக்கித் தூக்கினார். “அழழப்பா அழழப்பா” கைகளை கும்பிட்டான். ஒன்றும் சொல்லாமல் அப்படியே தரையில் போட்டுவிட்டு கட்டிலில் ஏறிப்படுத்தார்.

ஒன்னுக்கு முட்டியது. அழுகையை அடக்கினாலும் தேம்பி தேம்பி வரும் விக்கலை நிறுத்த முடியவில்லை. பக்கத்துத் தோட்டத்து ராஜாத்தி பெரியம்மா வீட்டுக்கு வரப்பு வழியாகப் போகலாம். அங்கிருந்து அம்மா இருக்கும் இடத்திற்குப் போகலாம் என்று தோன்றியதும் மெல்ல எழுந்து கதவைத் திறக்க தாழ்ப்பாளைத் தொட்டான். “என்னடா நெனச்சிருக்க தாயோளி ஆட்டங்காட்றயா, ம்ம்” கன்னத்திலும் முதுகிலும் திடும் திடும் என அடி விழுந்தது. அப்படியே வாயைப் பொத்தியபடி நின்றான். “ஒன்ன அப்பிடியே கிணத்தில தூக்கி வீசுறேன்” மறுபடி இரண்டு காலைப் பற்றினார். “அப்பா அழமாட்டேன்பா. ஒன்னுக்குப்பா,” கைகளைத் தடுத்தான். திரும்பத் திரும்ப தாக்குவதில் அவருக்கு குரூர ஆசை பற்றிக்கொண்டது. அவன் அழுவதை சாக்காக வைத்து உடம்பு கந்திப்போகும்படி அடித்து நொறுக்கவேண்டும் என்று தோன்றியது. அதே சமயம் ரத்தக்காயம் ஏற்பட்டுவிடாதபடி பலமாகத் தாக்கி பயமுறுத்தி வைக்க வேண்டும் என்ற வேகம் கிளர்ந்தது. யாருமற்ற இந்த இரவு ஒரு சரியான சந்தர்ப்பம். இப்படியான சந்தர்ப்பம் வாய்க்க சாத்தியமில்லை. பார்த்தாலே பயப்பட வேண்டும். பெதப்பம்பட்டி வர நினைத்தாலே பயம் வரவேண்டும் என்பதைக் காட்டாமல் விளாச வேண்டும். கால்களைப் பற்றித் தூக்கி கட்டிலில் போட்டார். தலைமுடியைப் பிடித்து சுழற்றி தரையில் வீசினார். தப்பித்து வாழைத்தோப்பிற்குள் நுழைந்துவிடலாம் என எழுந்தான். இடுப்பில் ஒரு பலமான எத்து விழுந்தது. சுவரில் மோதி விழுந்தான். தன்போக்கில் ஒன்னுக்கு வந்துவிட்டது. அப்படியே வாயை நன்றாகப் பொத்தி சுவர் ஓரம் சுருண்டு படுத்துக்கொண்டான். உடம்பு நடுங்கியது. பயம் புகுந்துகொண்டது.

***

“டேய் கபிலா” அம்மாவின் சந்தோசமான குரல் கொட்டத்திலிருந்து வந்தது. கபிலன் இன்னும் கால்களை ஒடுக்கி பலாமரத்தில் மறைத்துக்கொள்ள முயன்றான். சோளக்காட்டிலிருந்து வாலாட்டிக் குருவிகள் மேவரமாக வந்தன. இரண்டும் வாலாட்டியபடி தயங்கி நின்று பார்த்தன. இவன் பார்ப்பதை அவைகளும் தலைதூக்கிப் பார்த்தன. குடுகுடுவென ஓடி பறந்து போயின. அதன் அடிவயிற்று வெண்மையும், மேல் பகுதியின் கருப்பு நிறமும் வித்தியாசமாக இருந்தது. அம்மாவின் குரல் கொட்டத்தின் பின்னாலிருந்து வந்தது. அம்மா நெருங்கி வருகிறாளோ என்று ஓரக்கண்ணால் பார்த்து நன்றாகத் தலையைக் குனிந்துகொண்டான்.

அம்மா அவன் முன் மண்டியிட்டு கன்னத்தைத் தடவி நாடியைப் பிடித்து தூக்கினாள். அவனது கண்கள் நீர்கட்டிய இமைகளில் தத்தளித்தன. அவள் அப்படியே அள்ளி எடுத்து தன் வயிற்றோடு அணைத்துக்கொண்டாள். “என்னடா இங்க வந்திருக்க” தலையைத் தடவினாள். அம்மாவிடமிருந்து விசும்பி விலகி நிற்க முயற்சித்தான். “பாரு தங்கச்சி அண்ணனைப் பாக்கப்போறோமன்னு எவ்வளவு ஆசையா வந்திருக்கா நீ இப்படியிருக்கயே” குனிந்து சொன்னாள். அம்மாவின் இழுப்புக்கு வராமல் சோளக்காட்டு பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். “கபிலா எம் மேல கோவமா” வேறு பக்கமே பார்த்தான்.

கொஞ்சம் நிதானித்துவிட்டு “உங் கல்யாணத்துக்கு முன்னாடி நீதானம்மா சொன்ன. இந்த அப்பா நல்ல அப்பான்னு. தங்கைய கொஞ்சுறது மாதிரி ஒரு நாளாச்சும் என்னத் தூக்கி கொஞ்சிருப்பாரா. செத்துப்போன அப்பா எங்கூட எப்படியெல்லாம் விளையாடுவாரு. என்னென்ன வாங்கித் தருவாரு. சந்தையிலிருந்து வந்தா இப்படி மாத்தி மாத்தி கன்னத்தில முத்தம் தருவாருல்லமா.”

அவளது வயிறு துடுக்துடுக்கென துடிப்பது அணைப்பில் உணர முடிந்தது. இதெல்லாம் சொல்லியா வரவேண்டும் என்று நினைத்திருக்கிறாள். “அம்மா உன்கூடவே இருக்கேம்மா!” உடனடியாக மறுத்துச் சொல்லாமல் “சரிடா” என்று தலையைக் கோதிவிட்டாள். அம்மா இருக்கும்போது பெதப்பம்பட்டி அப்பா புன்னகையோடு அருகில் வா என்பதுபோல தலையாட்டி அழைப்பார். அம்மா இல்லாதபோது கண்களை உருட்டி நாக்கைத் துருத்தி கொன்று விடுவேன் என்பதுபோல மிரட்டுவார். ஆனாலும் அம்மாவுடன் ஒண்டிக்கொண்டு இருக்க ஆசையாக இருக்கும்.

பனை மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் மறைந்துபோன அப்பாவின் ஞாபகம் வரும். அப்போது ஒன்றாம் வகுப்பில்கூட சேரவில்லை. அப்பாவின் கழுத்தைச் சுற்றி கைகளைக் கோர்த்திருக்க அவரின் முதுகோடு பெரிய துண்டால் தன் உடம்பையும் இறுகக்கட்டிக்கொண்டு பனைமரத்தில் அட்டைபோல ஜான்போட்டு ஏறினார். “நல்லா பிடிச்சுக்கோ. பயப்படாம இருக்கணும்”, “ம்ம்” அழுங்காமல் பூமியைவிட்டு வான்நோக்கி கப்கப்பென்று மேலே சுமந்துபோக அப்பா மேகத்திற்குள்கூட நுழைந்து போய்விடுவார் என்றிருந்தது. மரத்தின் அடியிலிருந்து அப்பாவின் நண்பர்கள் விசில் அடிக்கிறார்கள். கை தட்டுகிறார்கள். கைகளை நீட்டி வானத்தை துழாவகூட பயத்தோடு விருப்பம் எழுந்தது. இரண்டு குலைகளை வெட்டி இறக்கிவிட்டு இறங்கியதும் அப்பா தூக்கித் தோளில் வைத்து என் வீர வித்துடா என்று ஜங்ஜங்கென்று குதித்தது ஞாபகம் இருக்கிறது. அது ஒரு போட்டி என்பது தெரிந்தது. தனக்கு ஞாபகம் இல்லாத பல சம்பவங்களை அப்பா அப்படி இப்படி செய்தார். நீ அப்பிடி சிரிப்பே என்று அம்மா சொல்லி இருக்கிறாள். இரவு நேரத்தில் வயிற்றில் உதட்டை வைத்து ப்புர்ர்ர்விட்டு அப்பா விளையாடியதுகூட ஞாபகத்திற்கு வரும்.

“ஏம்மா நம்ம அப்பாபோல இந்த அப்பா இல்ல?” என்றான். இதற்கு என்ன சொல்வது? சட்டென “நான் இருக்கேன்டா கண்ணு வா,” தோளை அணைத்து கூட்டிவந்தாள்.

வாசல் ஏறும்போது தங்கை ‘அண்ணா வந்திருச்சு’ என்று குதித்தது. தாழ்வாரத்தடியில் அப்பா கட்டிலில் அமர்ந்தபடி புன்னகைக்கிறார். தாத்தா “எங்கடா போயிட்ட” என்றார். அவன் வேகமாகச் சென்று தங்கையைத் தூக்கினான். கனமாகத்தான் இருந்தாள். தூக்கித் தூக்கி ஆட்டினான். தங்கைக்கும் மூன்று வயதிற்கும் மேலாகிறது. இறக்கிவிட்டதும் புதிய வளையல்களையும், புதிய கொலுசையும் காட்டினாள். அந்தக் கொலுசு அழகிய பின்னல்களுடன் நிறைந்த மணிகள் இருந்தன. ஜலுங் ஜலுங் ஓசையெழ வீட்டிற்குள் ஓடிக்காட்டினாள். கிளி வளர்க்க அவன் செய்து வைத்திருந்த அட்டைக் கூண்டை பலகை மேலிருந்து எடுத்துக்கொண்டு வந்தான். “இது எனக்காண்ணா” “ஆமா” சந்தோசத்தில் கன்னத்தில் முத்தமிட்டாள். பாட்டி ‘சாப்பாட்டுபோட்டு விளையாடுங்க’ என்றபடி தட்டுக்களை கொண்டுவந்து வைத்தாள். தங்கைக்கு முடிவெட்ட அழைத்துபோனபோது தாத்தாவிடம் கேட்டான். “தாத்தா அம்மாவுக்கு தம்பி பாப்பாதான பிறக்குமன்ன. பின்ன, தங்கச்சிப் பாப்பா எப்படி பிறந்திச்சு” என்னென்னமோ சொல்லிப் பார்த்தார். ‘அதுதான் எப்படி’ என்று கேட்டான். ‘எப்படியோ அது மாரிப்போச்சுடா’ என்று வேறு பேச்சுக்குள் இழுத்துச் சென்றான். இதைபோய் ஞாபகம் வைத்திருக்கானே என்றிருந்தது அவருக்கு.

மேற்கு வேலி ஓரம் இருக்கும் அழிஞ்சில் மரத்தில் பிஞ்சும் காய்களும் சல்லையாகப் பிடித்திருந்தன. இன்னும் பழுக்கும் காலம் வரவில்லை. இதன் இலைகளை ஆடுமாடுகள் ஆசை ஆசையாக சுழற்றிப் பறித்துத் தின்னும். ஏதாவது ஒரே ஒரு பழமேனும் பழுத்திருக்கிறதா என்று குனிந்து சாய்ந்து ஒவ்வொரு கிளையாகப் பார்த்தான். தங்கையும் அதேபோல பார்த்தாள். “பாப்பா அண்ணனோட இங்கேயே இரு. இது பூராம் உனக்குத்தான். பழுத்தப் பின்னாடி தின்னலாம்” என்றான். “சரி” என்று குட்டைப்பாவாடையில் ஒட்டிய மண்ணைத்தட்டிவிட்டு வீட்டுக்களத்திற்கு முன்னால் ஓடினாள்.

தோட்டம் முழுக்க ஓடிக்கொண்டும் எதை எதையோ பார்த்துக்கொண்டும் இருந்தார்கள். பால்காரர் வந்துபோனதும் பாட்டி அழைத்தாள்.

இதமான சூட்டில் இரண்டு தம்ளர்களில் பால் இருந்தது. தங்கை தன் கையில் இருந்த சக்கர முறுக்கை கபிலனிடம் தந்து உடையாமல் பால் தம்ளரில் முக்கித் தரச் சொன்னாள். வட்டமான முறுக்கை படுக்கை வசத்தில் வைத்துப் பார்த்தான். அது தம்ளரின் விளிம்பைவிட பெரிதாக இருந்ததால் உள்ளே போக முடியவில்லை. நெட்டு வசமாக நிறுத்தி இறக்கினான். இரு விளிம்பைத் தொட்டது தவிர உள்ளே அகலம் பத்தாமல் நின்றது. “உடையாம முக்கித்தாண்ணா” என்று தம்பளரின் முன் அமர்ந்து அண்ணனையும் தம்ளரையும் பார்த்தாள். அவன் பார்வைபோகும் பக்கம் மாறி அமர்ந்து கவுனை தொடைகளுக்கிடையில் இழுத்துவிட்டு அண்ணனின் ஆராய்ச்சியை கவனமாகப் பார்த்தாள். உள்ளங்கையால் லேசாகத் தட்டினான். “உடையாம எறக்குண்ணா” ஞாபகப்படுத்தினாள். பெரிய சவாலாக இருந்தது. அழுத்தி தட்ட பொறுக்கென நொறுங்கி வெளியே இரண்டு துண்டுகளும், உள்ளே ஒரு துண்டும் விழுந்தது. “ஐயையோ என் சக்கர முறுக்கு” கால்களை மாற்றி மாற்றி வைத்து கைகளை உதறி அழத்தொடங்கினாள். அம்மா வேறு ஒரு முறுக்கை எடுத்து வந்து தந்தாள். “உடையாம அந்த முறுக்குத்தான் எனக்கு வேணும். அதுதான் நல்ல முறுக்கு” விசும்பி அடம்பிடித்தாள். கபிலன் தன் முறுக்கையும் தங்கைக்குக் கொடுத்து சமாதானம் செய்வதில் ஈடுபட்டான். திரும்ப அதே முறுக்குத்தான் வேணும் என்றதும் கபிலன் தங்கையைப் பரிதாபமாகப் பார்த்தான். “எல்லா முறுக்கும் ஒன்றுதான்” “கபிலா நீ எடுத்துக்குடி. இவ இப்படித்தான் வம்பு பிடிக்கவே பிறந்திருக்கா” அம்மா தம்ளரையும் தங்கையையும் தூக்கிக்கொண்டு வெளியே போனாள்.

***

அம்மா, அப்பா, தங்கை கிளம்பும்போது ஆறுமணி ஆகிவிட்டது. பாட்டி, “வசந்தாவையும் வித்யாகுட்டியையும் விட்டுட்டுப் போங்க. ரெண்டு மூணு நாள் இங்க இருந்திட்டு வரட்டும்” என்றதற்கு, “வேலை அப்படியே கெடக்கு. போகலையன்னா சமாளிக்க முடியாது” என்றார் அப்பா. பாப்பாவின் முதல் பிறந்தநாள் என்று வந்துவிட்டு போன இரவு பாட்டி கருத்தடையான் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது “ஏம்பாட்டி, அப்பா உன்ன கூப்பிடுறதில்ல, என்ன கூப்பிடுறதில்ல, தாத்தாவ கூப்பிடுறதில்ல. அம்மாவ மட்டும் கூட்டிட்டு போறாரு” கேட்டான். “கிறுக்கா… பாப்பாவ யாரு பாக்குறது” என்றாள். அப்பா கூப்பிடுவாரா என்று சிலசமயம் அவனுக்குத் தோன்றியதுண்டு.

கருமேகம் படைபடையாக நகர்ந்து போய்க்கொண்டிருந்தது. வண்டிக்காரன்புதூர் விலக்கிற்கு ஆறரை மணிக்கு அம்பிகாபதி பஸ் வரும். “அம்மா நானும் உன்கூட வர்றேம்மா” என்றான். “அடுத்த வாட்டி வர்றப்போ கூட்டிட்டுப்போறேன். இப்போ நாளஞ்சு வீட்டில வெள்ளையடிக்கிற வேலை. சத்தம் போடுவாங்க. வேலை தரட்டும். கூப்பிட்டுப்போறேன்” “நான் உன் கூட பேசாம இருக்கேன்மா” “அண்ணா வருட்டும்மா” என்றாள் தங்கை. “அண்ணா பள்ளிக்கூடம் போகுதில்லோ. லீவில கூட்டிட்டுப் போகலாம்” என்றாள். அவள் சமாதானம் ஆகவில்லை.

வண்டித்தடத்தில் நடக்கவும், ‘நானும் வருவேன்’ என்று முன்னால் ஓடினான். அப்பா, ‘சரி வரட்டும் ரெண்டு நாள் இருந்துவிட்டு போகட்டும்’ என்றும் சொல்லவில்லை. பேசாமல் நடந்தார். “ஏன்டா ஒவ்வொரு வாட்டி வர்றப்பயும் இப்படி ரவுசு பண்ற” என்றாள். தாத்தாவிற்கும் பாட்டிக்கும் சிக்காமல் முன்னால் தூரமாக ஓடிப்போய் நின்றான். “அப்பா நீங்க இங்கேயே இருங்க நான் பாத்துக்கிடுறேன்” “அதென்ன செல்லம். சொன்னா புரியாதா இவனுக்கு” என்றாள் அம்மா. அப்பாவையும் அம்மாவையும் பார்த்து கையால் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு நடந்தாள்.

அவளுக்கு எரிச்சலாக இருந்தது. கபிலனை அப்பா அம்மாவிடம் விட்டுச் செல்வதில் ஒரு சுகம் இருந்தது. கபிலனின் அப்பா இறந்த சமயத்தில் இனி திருமணமே வேண்டாம் என்றுதான் இருந்தாள். இரண்டே வருடத்தில் அந்த எண்ணம் மெல்ல மங்கிவிட்டது. ஒரு சமயம் உழவடிக்க வந்த ட்ராக்டர் ட்ரைவர் ஜெயராமன் தொட்டியில் கைகாலை கழுவியபடி அவன் காதலித்த பெண்ணின் அழகை சொல்லிக்கொண்டு வந்தான். கேட்கவேண்டாம் என்று நினைத்தாலும் உள்ளூர கேட்கவேண்டும் போல்தான் இருந்தது. ‘அவளைவிட நீ ரொம்ப அழகா கவர்ச்சியா இருக்க. உன்ன கல்யாணம் பண்றவன் கொடுத்து வச்சிருக்கணும்” என்றான். “ச்சீப்போ, அசிங்கமா பேசிக்கிட்டு” என்று வாயளவில் சொன்னாள். தினம் தினம் கொண்டாடி தீர்க்காமலே உடம்பு அவஸ்தையில் பொசுங்கி போகும் காலமாகவே போய்விடும் என்ற அச்சம் முதன்முதல் எழுந்தது. சட்டையில்லாமல் மரம் ஏறுபவர்களில் திடகாத்திரமான இளைஞனைப் பார்க்கும்போதும், வேர்வை வடிய பாத்தி போடும் கட்டுமஸ்தான ஆளைப் பார்க்கும் போதும் வேறு எண்ணங்கள் தோன்றும். இவர் பெண் கேட்டு வரும்போது ராஜாத்தி அக்காதான் ‘இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையா போகட்டும்’ என்று முன் நின்று முடித்தாள்.

இப்போதெல்லாம் கபிலனை கொண்டுவந்து நான்கைந்து நாட்கள் வைத்திருந்துவிட்டு திரும்ப கொண்டுவந்துவிட சில சமயம் தோன்றவும் செய்கிறது. இவர் தன் மேல் இரவில் ரொம்ப ஆசைபடுகிறது இன்னும் குறையாமலும் இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. பெதப்பம்பட்டி மாரியம்மன் விழா சமயத்தில் கபிலன் ஐந்தாறுநாள் வந்து இருந்துவிட்டுச் செல்லட்டும் என்று சொன்னாள். அவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

பாக்குத் தோட்டம் பக்கத்தில் நின்றிருந்தவனிடம் “கபிலா, வீட்டுக்குப்போ பரிச்சை லீவு முழுக்க எங்கூட இருக்கலாம்!” என்றாள். “அப்படித்தான் சொல்வம்மா. நீ கூப்பிட்டு போகமாட்டே”

“சரி இப்ப வந்து என்னடா பண்ணப்போற?”

“உங்கூட இருக்கேம்மா.”

“நான்தான் வேலைக்கு தினம் தினம் ஓடிட்டிருக்கேன்டா.”

“சைக்கிள் எப்பம்மா வாங்கித்தருவ. அங்க வர்றப்ப வாங்கித் தர்றேன்னு போனவாட்டி நீதானே சொன்ன?” என்றான்.

அவளும் அவன் கேட்கும் கீர் சைக்கிளை விசாரித்தாள். விலையைக் கேட்டு வாயை மூடிக்கொண்டாள். கணவனைப் பார்த்தாள். அவர் எதுவும் காதில் விழாததுபோல கிர்ர்ரென்று பாப்பாவைத் தோளில் போட்டுக்கொண்டு முன்னால் நடந்தார்.

தோட்டக்காடுகளைக் கடந்து மாரிமுத்து அண்ணன் மஞ்சள்காடு வரைக்கும் வந்த பின்பும் பிடிவாதமாக வந்துகொண்டே இருந்தான். பேருந்து நிறுத்தம் நெருங்க நெருங்க வாய்விட்டு அழத்தொடங்கினான். எப்படியும் ஒரு சைக்கிளைப் பெற்று விடவேண்டும் என்ற பேராசை அவனை விடாது தள்ளிக்கொண்டே இருந்தது. ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினாள். வாங்காது கைக்கு சிக்காத தூரத்தில் சுற்றிச் சுற்றி வந்தான். வேலியோரம் வெங்காயப் பட்டறை மூங்கில் தடுக்குகள் பிரித்துப் போட்டிருந்தன. ஒரு தப்பையை எடுத்து விரட்டி அடித்தாள். அதுவரை பேசாது வந்த கணவர் “என்ன பழக்கம் பழகியிருக்கான். ஒரு பேச்சு கேட்கிறானா” என்றார். வலப்புறமாக சுற்றி வந்தவனை வீசி அடித்தாள். “இந்த வயதிலேயே இப்பிடி ஒரு அராமையண்ணா. வளந்தா கட்டுப்படுவான இவன்” காதில் விழுந்ததும் விரட்டி முதுகில் அடித்தாள். “அம்மா அண்ணன்ன அடிக்காதம்மா” “நீ சும்மாயிரு செல்லம்” “அண்ணனா” “பெரிய நொண்ணன். அங்கிருந்து கலாட்டா பண்ணிட்டே வர்றானே” என்றபோது அவனின் கையைப் பிடித்து விட்டிருந்தாள். மடமடவென பிடறியிலும் தலையிலும் தோளிலும் அடிவிழுந்தது.

சுளித்து திமிறித் தப்பித்தான். அவனை இப்படி அவள் அடித்ததே இல்லை. அழுதுகொண்டே தள்ளி அப்படியே நின்றான். “டேய் எங்கயாவது கள்ளக் கடன்பட்டாவது வாங்கி வீசுறேன்டா” என்று சொல்ல நினைத்தவள் “இனிமே சைக்கிளன்னு நீ வாயவே தெறக்கக்கூடாது. என் நிம்மதிய செதக்கிறயே” அவர் தோளில் இருந்த குழந்தையை வெடுக்வென பிடுங்கி தோளில் போட்டபடி கண்கள் சிவக்க அவரை முறைத்துப் பார்த்துவிட்டு வேகமாக நடந்தாள். “இந்த உசிற உன் அப்பனோட வேகவச்சிருந்தா நிம்மதியா போயிருக்கும்,” அவள் சொல்லிக்கொண்டு போனது அவனது அழுகையின் ஊடே சரியாக கேட்கவில்லை.

அவர்கள் வேகமாக நடந்து போவதையே நின்று பார்த்தான். தார்ச் சாலையில் கால் வைத்து வலப் பக்கம் திரும்பியதும் மறைந்து விட்டார்கள். அம்மாவிற்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. கடைசி வரை இறங்கி வராமலே போய்விட்டாள். வெறுப்பையும் கோவத்தையும் மாற்றி மாற்றி ஏன் இப்படி தன் மேல் வீசுகிறார்கள் என்று புரியாமல் தவித்தான். தன்னை விரும்பாமல் போவதை நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது. பலமெல்லாம் உதிர்ந்து ஒன்றுமற்றவனாகிவிட்டதுபோல இருந்தது. வேம்பாண்ட சாமியிடம் தன்னை விரும்பும்படி கேட்கலாமா என்று நினைத்தான். நல்லநாள் வந்தால் தாத்தா அந்தக் கோயிலுக்குத்தான் தீபம்போட தூக்கிக்கொண்டு போய் வருவார்.

கபிலனுக்கு எங்காவது போய்விடத் தோன்றியது. இவர்கள் கண்களில்படாமல் அப்படியே மறைந்துவிட்டால் நல்லது என்று பட்டது. அப்பா நீ நெஜமா சாமிகிட்ட இருக்கியாப்பா. எப்படிப்பா நான் உன்ன பாக்குறது. உன்கிட்ட நான் எப்படி வர்றதுன்னு தெரியலையேப்பா. மனதில் அப்பா பற்றியே வந்தது. கிரியிடம் அம்மா சைக்கிள் வாங்கித் தரும் என்று சொல்லியிருந்தான். அவன் முகத்தை எப்படிப் பார்ப்பது என்றிருந்தது. நினைக்க நினைக்க அவமானமாக இருந்தது. சோர்வாகத் திரும்பி நடந்தான்.

மேகங்கள் திரண்டதால் வெளிச்சம் சட்டென மங்கி லேசாக இருட்டியது. வண்டித்தடத்தின் வழி விசும்பலோடு நடந்தான். கன்னத்தில் கண்ணீர் தாரைகள் காய்ந்து முகம் பிசுபிசுப்பென ஆகியது. செல்வராஜ் தோட்ட சனமக்கீரை மஞ்சள் மொட்டுக்களாக பூத்து குலுங்கிக்கொண்டிருக்கிறது. தழையுரத்திற்காக போடப்பட்ட சனமம் தென்றல் அலையலையாக வளைந்து நடனமாடிக்கொண்டிருந்தது. சின்ன நீர்க்குட்டையைச் சுற்றி பசேலென அருகம்புற்கள் வளர்ந்து நிற்கின்றன.

குளிர்காற்று மெல்ல தழுவிச்செல்வது இதமாக இருந்தது. தலைக்குமேல் டுர்ர்ர்ரென வளைந்து வளைந்து பறந்துபோன கொண்டலாத்தி இற்றுப்போய் நிற்கும் தென்னைமரத்தின் பக்கவாட்டில் அமர்ந்து தன் கொண்டையை விசிறிபோல விரித்து முதுகுப்பக்கம் பார்த்தது. கருப்பு இறக்கைகளின் மேல் வெண்ணிறப் பட்டைகள் நெளிந்தபடி இருந்தன. மஞ்சள் கலந்த கழுத்தும் அடிவயிறும் அழகாக இருந்தது. விரித்த மஞ்சள் கொண்டையின் நுனிகளில் கருப்பு தொப்பிகள் அணிந்த வளைவை அதிசயமாகப் பார்த்தான். உபோ உபோ என்று யாரையோ அழைத்தது. விரிந்த கொண்டையை சுருக்கி நீண்டு வளைந்த அலகால் மரத்தில் டொக் டொக் என கொத்தத் தொடங்கும்போது கொண்டையும் அலகும் ஒரு குந்தாலம்போல் மாறியது. மெல்ல உபோ என்றான். கொண்டையை விரித்து திரும்பி பார்த்தது. பின் மாறி அமர்ந்து கொத்தத் தொடங்கியது.

துடுக்கென வெண்முயல் ஒன்று தாவித்தாவிப்போய் நீர்க்குட்டை கரையில் ஏறிநின்று நீளமான இரண்டு காதுகளை நீட்டி தலை தூக்கிப் பார்த்தது. கபிலன் அப்படியே புல் அடர்ந்த வரப்பில் அமர்ந்து கொண்டான். கருப்பும் வெளுப்புமான நிறத்தோடு இன்னொரு முயல் சாமக்காட்டிலிருந்து துள்ளி வந்து கரையேறியது. இரண்டும் முன்னங்கால்களைத் தூக்கி துடைத்துக்கொண்டு நாலாபுறமும் காதுகளை விடைத்துப் பார்த்தன. பின் அவசரமாக தளிரான அருகம்புற்களை பொடுபொடுவென கடித்து மென்றன. அதே அவசரத்தில் தலையைத் தூக்கியும் பார்த்துக்கொண்டன. கபிலன் அப்படியே வரப்பில் படுத்துக்கொண்டான்.

மலுச்சென தவ்வி குட்டைக்குள்போன வெண்முயல் திரும்ப குட்டையின் கரையேறி பார்த்துவிட்டு ஆபத்தில்லை என்று தெரிந்ததும் இறங்கியது. கபிலனுக்கு முயலைப் பார்க்கப் பார்க்க ஆவல் எழுந்தது. பத்துப் பன்னிரெண்டு மயில்கள் வாஜேஜாபாத் ரங்கண்ணா தென்னந்தோப்பிலிருந்து வந்தன. நான்கு ஆண்மயில்கள் இரண்டுபாக கை நீளத்திற்கு தோகையை நீட்டி வைத்திருந்தன. புல்லில் பட்டும் படாமல் தோகை போனது. வரப்பில் ஏறி சனமப்பூக்களை கொத்திக்கொத்தி விழுங்கின. எங்கோ மெல்லிதாக இடி இடிப்பது கேட்டது. கபிலன் படுத்துக்கொண்டே வரப்பில் நகர்ந்தான். ஒரு பெண் மயில் இறக்கையை விரித்து ‘கேர்’ என்று சாவகாசமாக அகவியது. ஆண்மயில் ஆடுமாடுகளுக்காக குறைபோட்ட தோட்ட மேட்டில் ஏறி நின்று இறக்கையை விரிக்க பளபளக்கும் கருஞ்சிவப்பு நிற இறகுகள் விசிறியாக விரிந்தன. ஒரு ராஜாவைப்போல அடிகளை கம்பீரமாக எடுத்து வைத்து தோகையை விரித்தது. கபிலனின் கழுத்து உயரத்திற்கு விரிந்தது. மின்னும் பச்சை இறகுசரிகைகளில் நீலநிறக் கண்கள் ஜொலித்தன. குடுகுடுவென பெண்மயில்கள் இறக்கையடித்து கொறைபூமியில் ஏறின. செவ்வளநிர் மரத்தின் அடியில் பொடுதழை தின்று கொண்டிருந்த இரண்டு இளம் ஆண்மயில்கள் தோப்பின் ஊடே மூன்றாள் உயரத்தில் பறந்து போயின. அதன் நீண்ட தோகை பெண்ணின் அடர்ந்து நீண்ட கூந்தல் போல இருந்தது. மெல்ல இறங்கிய இளம் ஆண்மயில்களும் போட்டிபோட்டுக்கொண்டு தோகையை விரித்தன. ஜரிகையும் கண்களும் பளபளக்க நான்கு புதுவித சூரியன்கள் எழுந்தசைவது போல இருந்தன. ஒவ்வொன்றும் தன்னிடம் அடுக்கிவைத்திருந்த பொக்கிஷத்தை விரித்து காட்டி நடனமாடின. படுத்தபடியே மயிலைப்போல உடலை அசைத்தான்.

 விநோத வண்ணங்களால் ஆன தோகையையே பார்த்தான். விரிந்த தோகையின் மையத்தில் ஒரு மரகதக் குமிழ் சுடரின் நிழல்போல அசையாமல் நின்று ஜொலிக்கிறது. அதைச் சுற்றிச்சுற்றி ஊதாநிற கண்கள் வட்டவரிசையில் தோரணமாய் மின்னுகின்றன. அதற்கும் மேலே பச்சை சரிகைகளாக சின்ன சின்ன இறகுகளிலிருந்து அலைகிறது ஒளி, மயில் மெல்ல அடியெடுத்து திரும்புகிறது. தோகையின் பின்பகுதி வேறொரு கோலம் கொண்டிருப்பது தெரிந்தது. மரகத குமிழுக்குள் ஒளிரும் வெண்ணிற நூல் கீற்றுகள் மேலெழுந்து பூப்போல குவிகிறது. கீற்றுகளின் வேரடியில் வெள்ளொளி பொங்குகிறது. மரகதக்குமிழின் வெளிப்புறம் வெள்ளொளி ரேகைகள் சூரியன் உதயம் போல விசிறி அடிக்கிறது. குமிழைச் சுற்றி எத்தனையோ வெண்ணிற வண்ணங்கள், நெற்றிக் கண் சுடரையோ குமிழான சிவலிங்கத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறது. கடவுளின் அம்சமோ என்று தோன்றியது. வேறொரு உலகிற்குள் அந்த இடம் அவனை அழைத்துப்போய்க் கொண்டு இருந்தது. எல்லாம் மறந்து அவனும் பறவையாகிக் கொண்டிருந்தான். வலியோ வருத்தமோ காயமோ அவனை அறியாமலே கரைந்து கொண்டிருந்தது.

ஒரு பெண்மயில் ‘கொர்ரோவ்’ என்றதும் முயல்கள் கரையேறி குண்டு குண்டாகத்தாவி நின்று புல்லைமென்றபடி இவனிருக்கும் பக்கம் பார்த்தன. இவன் கையைநீட்டி உள்ளங்கையை விரித்து மெல்ல டாட்டா காட்டி சிரித்தான். முயல்கள் பளீரென கண்கள் மினுங்க முன்னங் கைகளைத் தூக்கித் துடைத்தன. மயில்கள் இறக்கைகளைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி மகிழ்ந்தன. மழைத்துளி எங்கோ தென்னை மட்டைகளில் விழுவது கேட்டது. அவன் எழுந்து நின்றான். அத்தனை மயில்களும் அவனைத் தலைதூக்கிப் பார்த்தன. ஒரு ஆண்மயில் விரித்த சக்கரத்தை உள்வடிவாக சுருக்குவதுபோல தோகையை வெகுநேர்த்தியாக சுருக்கி மறுபடி மெல்ல விரித்தது. மேயப்போயிருந்த இரண்டு கௌதாரிகள் செடிபக்கம் குடுகுடுவென ஓடின. முட்டைகள் வைத்திருக்கும். கபிலன் தன் இரண்டு கைகளைத் தோகைபோல விரித்து அசைத்தான். ஒரு மயில் இவனைப் பார்த்து விரித்த தோகையை கிடுகிடுவென அரிவெட்டு ஒரு நடனம் ஆடியது. அவனுக்கு சிரிப்பு வந்தது. குளிர்ந்த காற்றும் விரிந்த பச்சை தோட்டங்களும் அவனது தனிமையோடு பேசின. தூரத்தில் பறவைகளின் கொண்டாட்டத்தை இதற்கு முன் இப்படி பார்த்ததில்லை. ஒரு ஆனந்தம், சொல்லத்தெரியாதபடி அவனுள் பெருகியது.

பெரும் துளிகள் பொட்டுபொட்டுவென விழுந்தன. எல்லா மயில்களும் சட்டென பறக்கத் தொடங்கியபோது சரியாக “கபிலா” என்ற குரல் வந்தது பாட்டியும் தாத்தாவும் அவன் பின்னால் நின்றிருப்பதைப் பார்த்தான். “பாட்டி அங்க பாரு பாட்டி வெள்ளமுயல் எப்படி ஓடுதுன்னு பாரு” மகிழ்ச்சியோடு காட்டினான். “நான் அதோட ப்ரண்டு பாட்டி” என்றவன். ‘தினம் தினம் இங்க வரணும் பாட்டி’ என்றான்.

தாத்தா கையில் ஆறு செல்போடும் நீண்ட கைவிளக்கும், பாட்டியின் கையில் குடையும் இருந்தது. “தாத்தா ஒங்களவிட்டு நான் எப்பயும் போகமாட்டேன்” அவர் தன் வெற்றிலைபோட்ட வாயால் சிரித்தார். பாட்டி பிசுபிசுப்பாக இருக்கும் அவன் கன்னத்தை தன் முந்தானையால் அழுந்த துடைத்தாள். “தாத்தா எனக்கு ராகுல் மாமா சைக்கிள வாங்கித் தர்றையா. அது நல்ல சைக்கிள்தானே.” “பின்னே! வாங்கித் தர்றேன்” குடையில் பொட்டு பொட்டு என மழை விழ பாட்டி கபிலனைத் தன் மாராப்பால் போர்த்தி அணைத்துக்கொண்டு நடந்தாள். இருட்டு கட்டிக்கொண்டு வந்தது. பின்னாலிருந்து தாத்தா பேட்டரியை அடித்தார். மெல்லிதாக கவிழ்ந்துகொண்டிருக்கும் இரவில் வெகுதூரம் வரை வெளிச்சம் புகுந்துபோய் விரிந்தது. அந்த ஒளியினூடே பெரிய வெண்ணிற நரை ஒன்று அவசரமாக மழைத்துளிகளின் ஊடே கடந்துபோனது.

7 comments for “ஆறுதல்

  1. அ.மலைச்சாமி
    January 4, 2021 at 2:52 pm

    காற்றினால் பற்றியெரியும் ஆதித்தழலை பனியினால் அணைக்கிறார் எழுத்தாளர் சு. வேணுகோபால்.
    கனியக் கனியத்தான் மானுடமே அழகாகிறது. அந்தக் கனிவை வணங்குகிறேன்

  2. sv
    January 6, 2021 at 12:51 pm

    சார் கண்கள் குளமாகின இக்கதையை வாசித்து முடித்தபோது. தமது காயத்தை அந்தப்பிஞ்சு மனது நினைத்து வருத்தப்படக்கூடத்தெரியாத பருவத்தில், சுற்றி இருக்கின்ற இயற்கைச் சூழல் அவனுக்கு மாற்றுவழியாக இதமளித்துக்கொண்டிருக்கிறது என்பதை அந்த விளையாட்டுப்பிள்ளை உணரும் தருணமாக காட்சிகளை வாசகப்பார்வைக்கு நீங்கள் கொண்டுவந்து வைத்தாலும், வலியைத்தாண்டி இக்கதையினை உள்வாங்க முடியவில்லை என்னால். அக்கம் பக்கத்தில் பார்த்து கேட்ட உண்மைச்சம்பவங்கள் கண்முன் நிழலாடின.

    என் அப்பா உயிரோடு இருக்கும்வரை அடிக்கடி அழுத்தமாகச் சொன்ன ஒரு விஷயம், “பிள்ளைகள் இருந்து கணவன் இறந்தால், பெண்கள் உணர்ச்சிகளைத் தியாகம் பண்ணியே ஆகவேண்டும், அந்நியன் என்றுமே அப்பா ஆக முடியாது’. இதுதான்.

    இதுபோன்ற கருவினைப் பலர் தொட்டு எழுதியிருப்பினும், இக்கதை உயிரோட்டம் நிறைந்தது.

    ஸ்ரீவிஜி

  3. Maniramu Maniramu
    February 11, 2021 at 9:48 am

    ஆறுதல் என்கிற தலைப்பிட்ட இந்த சிறுகதை வாசகனுக்கு ஆறுதல் அளித்ததா என்றால்… இல்லையென்றே சொல்ல வைக்கிறது. மிதி வண்டியை கபிலனிடமிருந்து பிடுங்குவதற்கு முன்பாகவே அவர் மாற்றான் தந்தையென்பதை யூகிக்க முடிகிறது. பிறகெதற்கு மர்மம் விதைப்பதாய் கதைப் போக்கை இழு இழுவென இழுக்கிறார் என்று தெரியவில்லை. கதைக்கு தொடர்பில்லாத இயற்கையும் அது சார்ந்த உயிரியல் வர்ணணைகளும் போதும் போதும் என்கிற அளவுக்கு நிறைத்து எழுதி கதையில் இருக்க வேண்டிய ஒரு சிறுவனின் வெறுமையை, அதன் அதிர்வுகளை ஆழ பதிக்க முடியாமல் முடிவுவரை தினறுகிறது படைப்பு. இதில் என்ன இருக்கிறது புதுமையென இன்னும் துளாவிக் கொண்டிருக்கிறேன் அந்தகன் போல. ஒரு வேளை ஏதாவது தட்டுப் பட்டால் அது யானையைத் தடவும் குருடனின் பதிலாகவே எதிரொலிக்கும்.

  4. ராஜா
    February 24, 2021 at 2:29 am

    Definitely One of the best short story in Tamil literature. We must celebrate Venugopal Sir and his stories. The rich flora and fauna entwined in his world are mesmerising treasure and research materials for future generations. சிறுவனுக்கு கபிலன் எனும் பெயர் மிகப்பொருத்தம். கடைசி வரியில் “வெண்ணிற நாரை” என்று நினைக்கிறேன். கதை முடிந்தவுடன், மனசு சிறகடித்து பறக்க துவங்கிவிட்டது. நன்றி.

  5. Sai mohan
    March 17, 2021 at 2:37 pm

    Such a wonderful story ☺️…I remember my childhood … thanks sir…

  6. DHANDAPANI M
    May 16, 2021 at 11:08 am

    புறக்கணிக்கப்பட்ட எளிய உள்ளங்களுக்கு பரம்பொருளின் கருணை இயற்கை சூழிடத்தின் பேரழகு. அது அளிக்கும் ஆறுதல் உண்மையானது
    கபிலன் ஒரு முரடனாகவோ நியாய தர்மங்களை பேணாத அயோக்கியனாவோ ஒரு போதும் மாறமாட்டான். அவன் அடைந்த மடி மேன்மையே போதிக்கும்

Leave a Reply to sv Cancel reply