ஓர் அழகியின் கதை

பெயர்: ஜூலி

முகவரி: 16, ஜாலான் மலாக்கா

.அட்டை எண்: (கிறுக்கலான எழுத்தை வாசிக்க முடியவில்லை.) 

வயது: 35

திகதி : மார்ச் 25

அறையின் உள்ளே நுழைந்து என் எதிரில் உள்ள நாற்காலியில் அமரும் முன் ஒரு கணம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். என்னை கணிப்பது போல் இருந்தது அவளது பார்வை. மெல்லிய ஒரு புன் சிரிப்போடு அமர்ந்தவள் “உங்களுக்கு நினைவிருக்காது ரொம்ம்பப காலத்துக்கு முன்னால் நாம சந்தித்திருக்கிறோம். எனக்கு நெனவிருக்கிறது” என்றாள். தெளிவான ஆங்கிலம்.

“நீங்க ரொம்ம்பபன்னு அழுத்தம் கொடுப்பது அது இந்த பிறவியில் இல்லை என்பது மாதிரி அர்த்தம் கொடுக்கிறது” என்றேன். நகைச்சுவையாகப் பேசுவதன் வழிதான் நோயாளிகளிடம் இயல்பாக நெருங்க முடியும் என்பது எனது இருபத்து ஐந்து வருட அனுபவம். 

அவள் புருவங்களை உயர்த்தி; கண்களை விரித்து முகத்தில் ஆச்சரியத்தை  காட்டினாள். 

ஒரு விரலை என் முன் சுட்டுவதுபோல் நீட்டி “யூ ஆர் ரைட்” என்றாள்.

“என் உண்மையான பெயரைக் கொடுத்து பதிவு செய்யவில்லை. உங்களுடைய நர்ஸ் நல்லவள். ஆனால் முட்டாள். நான் எழுதிக்கொடுத்த விபரங்கள் எதையும் சோதிக்கவில்லை. எல்லாமே பொய். என் பெயர், முகவரி, வயது எல்லாமே அந்தரங்கமானவை. அதை வேறு யாருமே தெரிந்துகொள்வதில் எனக்கு சம்மதம் இல்லை. வேடிக்கை என்னவென்றான் என் எல்லா அந்தரங்கங்களையும் ரகசியங்களையும் உங்களிடம் கொட்டித்தீர்க்கத்தான் வந்திருக்கின்றேன். ஆனாலும் அவற்றை ஒரு தாளில் எழுதிவைப்பதில் விருப்பமில்லை.” என்றவள் என்னை கூர்மையாகப் பார்த்தாள். 

இப்படிப் பலரை நான் பார்த்ததுண்டு. தவறான அடையாளங்களை எழுதி ஏமாற்ற முனைவது ஒன்றும் எனக்குப் புதிதில்லை.  

“நீங்கள் எப்படி உங்களின் ஹிப்னோதெராப்பியை செய்வீர்கள் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை. நான் விரும்பும் நேரங்களில்தான் நான் வருவேன். ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ என் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிவிட்டுச் செல்வேன். கேட்டுக்கொள்வது மட்டும்தான் உங்கள் வேலை. இந்த சுய ஹிப்னோஸிஸ் எனக்கானது. என் மனம் சுத்தமாக காலியாகும்வரையில் இது தொடரும். ஃபீஸ் பற்றி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பேன். எனக்கு அது முக்கியமல்ல.”

‘எனக்கு அதுதானே முக்கியம்’ என மனதில் சொல்லி சிரித்துக்கொண்டேன்.

“இன்னிக்கு உங்கள்  முகத்தை பார்த்துவிட்டு போகத்தான் வந்தேன். எத்தனையோ முகங்களைப் பார்த்துவிட்டேன். நான் தேடுகிற அந்த முகம் கிடைக்கவில்லை. அந்த உள நெருக்கம் உருவாகவில்லை. ‘ஐ எம் ஒகே வித் யூ’ என்று அழுத்தமாகச் சொன்னவள் அடுத்த இதே நேரத்துக்கு வருவதாகச் சொல்லிச்சென்றாள்.

திகதி : ஏப்ரல் 1

சொன்ன நேரத்திற்கு வந்திருந்தாள். அதற்கென்று உள்ள சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். கால்களை நீட்டி ஆடைகளைச் சரி செய்துக்கொண்டாள். 

“எனக்கு அந்த மூட் வர வேண்டும். விளக்கின் வெளிச்சத்தை கொஞ்சம் குறைத்துவிடுங்கள். இது முடிந்தபின் எனக்குத் தலை வலிக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரும் ஒரு பெனடோல் மாத்திரையும் வைத்துவிடுங்கள். குறுக்கே என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். என்னை பேச மட்டும் விடுங்கள். ரொம்பவும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டால் மட்டுமே என்னைச் சாந்தப்படுத்துங்கள். எனக்கு அந்த மூட் வர வேண்டும் கொஞ்சம் டைம் கொடுங்கள். 

நான் மௌனமாக இருந்தேன். மெல்ல பேச ஆரம்பித்தாள். அவள் குரலின் தொனியே மாறியிருந்தது. 

“என்னை அலைக்கழிக்கும் அந்தக் கனவின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவிலும் நனவிலும் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நேரம் என்று இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அந்தக் கனவில் நான் இளம் பெண்ணாக ஆடைகளின்று அலங்கோலமாகக் கிடக்கின்றேன். நெஞ்சு அடைக்கிறது. மூச்சு திணறுகிறது. வாய்விட்டு கதறி அழுகின்றேன். என் மேல் ஒவ்வொருவராக கவிழ்கிறார்கள். பாறையின் அடியில் நசுக்கப்பட்டதுபோல இருக்கிறது. இராணுவ உடையில் அந்த நான்கைந்து பேர் அடுத்தடுத்து என்னுள் நுழைகிறார்கள். என் அடிமுதுகில் இருந்து மேல் முதுகு வரையில் சில்லென்று பெருகி ஓடுகிறது என் குருதி. வலியிலும் குளிரிலும் உடல் நடுங்குகிறது. தொடைகளுக்கு இடையில் என் இரு கைகளையும் செருகி முழங்கால்களை முன்னிழுத்து உடலைக் குறுக்கிக்கொண்டு வலியோடு போராடுகிறேன். உடல் முழுவதும் பரவும் வேதனையின் உச்சத்தில் ‘என் பிள்ளை எங்கே? … என் பிள்ளை எங்கே?’ என்று கூச்சலிடுகிறேன்.” அவள் மார்பு ஆவேசமாக ஏறி இறங்கியது. நான் அவளைச் சாந்தப்படுத்த அருகில் சென்று நிதானித்துக்கொண்டேன்.

“நடந்தது கனவுதான் என்று தெரிந்துமே அது தந்த வலியும் பயமும் என்னை விட்டு அகலாது இருக்கிறது. மனதின் தொடமுடியாத ஆழத்தில் இருந்து எங்கோ தூரத்தில் இருந்து அந்த வலி ஒரு பேரலையாகப் புறப்பட்டு வருகிறது. அதில் மூழ்கி தவிக்கின்றேன். இருபத்து ஐந்து வருடங்களாக இதே வேதனைதான் தீப்பிழம்பாக அந்தக் குழம்பு கொதித்து கொப்பளித்து மேலெழுந்து வந்து அடங்குகிறது. இது ஏன்? இப்போது நான் அழப்போகின்றேன். தொண்டை கிழிய கத்தி அழுவேன்.” 

மௌனம். அவள் அழவில்லை. அது அவளுக்குள் கோரமாக நிகழ்ந்து கொண்டிருக்கலாம். வெளியே எந்தச் சத்தமும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து எழுந்து பெனடோலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு தண்ணீரை குடிக்கின்றாள். எந்த வார்த்தையும் பேசாமல் வெளியேறி விடுகின்றாள். 

திகதி : மே 2

குளிர் காய்ச்சலில் இரண்டு வாரங்களாக வேலைக்குப் போகாத அப்பாவுக்கு கஞ்சி வாங்கி வர கையில் காசு இல்லாமல் அந்த உணவகத்தின் முதலாளியின் முன் நிற்கின்றேன். “அங்கிள்… அப்பா வேலைக்குப் போன உடனேயே காசு கொடுத்திடுவாரு.” என்கிறேன். சட்டைப் போடாத மஞ்சள் நிற பெருவயிற்றுக்குக் கீழ் முழங்கால் வரையில் தொங்கும் அரைக்கால் சட்டையை மேல் இழுத்து விட்டுக்கொண்டே “உன் அப்பன் அந்தப் பன்றிப்பன்னையில் வேலை செய்யும்வரை உருப்படவே மாட்டான். எத்தனையோ தடவை சொல்லிட்டேன். அந்த தவுக்கே சம்பளமே கொடுக்க மாட்டான்.” என்று கூறியவாறு பன்றி இறைச்சி, மீன், கஞ்சி இவற்றை ஒரு பொட்டலத்தில் கட்டி என் கைகளில் திணித்தார். 

“ஆமா… நீ ஏன் ஸ்கூலுக்குப் போகல?” என்று கேட்க “அப்பாவை கவனித்துக்கொள்ள பள்ளியில் இருந்து நின்று விட்டேன்.” என்கிறேன்.

“இன்று இரவு வா… கல்லா கட்டின பிறகு காசு தருகிறேன்.” நன்றியோடு தலையாட்டி விட்டு திரும்பி நடக்கின்றேன். “பாவம் தாயில்லா பிள்ளை” என்று அவர் முணுமுணுக்கிறார்.

அன்றிரவு கடைக்கு வந்து சேர்ந்தபோது கதவு சாத்தியிருந்தது. சைக்கிளைப் பிடித்துக்கொண்டு ஒரு இளைஞன் எனக்காக காத்திருப்பதுபோன்று நின்றுக்கொண்டிருந்தான். “உனக்காகத்தான் காத்திருக்கின்றேன். அப்பா கூட்டிட்டு வரச்சொன்னாரு” கோரை முடியும் முன் தள்ளிய கீழ்த்தாடையும் துருத்திகொண்டிருக்கும் பற்களுமாக அவன் சிரித்தபோது சற்று பயமாக இருந்தது. ஏதோ அவசரத்தில் இருப்பதுபோல காட்டிக்கொண்டான். என்னை நிதானிக்கவிடக்கூடாது; விட்டால் எங்கே எனக்கு சந்தேகம் வந்துவிடுமோ என்பதற்காக என்னை அவன் அவசரப்படுத்தியது எனக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் நான் நிதானமாக இருந்தேன். நான் அப்போது செய்ய வேறு ஒன்றும் இருக்கவில்லை. எனவே அவனை நம்புவதாகவே காட்டிக்கொண்டேன்.

சைக்கிளின் பின்னால் என்னை அமரச்செய்து ஓட்டிச்சென்றான். அவன் அந்தக் கடை முதலாளியின் மகன். அவன் அப்பாவிடம் அவன் திட்டு வாங்கிக்கொண்டே இருப்பான். ஒழுங்காக கடையில் எந்த வேலையும் செய்ய மாட்டான். சைக்கிள் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டின் முன் நின்றது. வீட்டின் பின் புறம் கடலலையின் ஓசை கேட்டது. அந்தக் கடலில் யாரும் குளிக்க மாட்டார்கள். எண்ணெய் வீச்சம் அடிக்கும். “உள்ளே வா… அப்பா உள்ளேதான் இருக்கிறார். சும்மா பயப்படாமல் வா” என்றவன் உள்ளே அழைத்துச்சென்றான்.

தயங்கி தயங்கி உள்ளே சென்றேன். ஒரே இருட்டாக இருந்தது. என் வாழ்வின் பின் தொடர்ந்த அத்தனை இருட்டுக்கும் அந்த அன்றைய இருட்டுதான் முதலிருட்டாக இருந்தது. 

திகதி : ஜுன் 5

அப்பாவின் வியாதி தீவிரம் அடைந்தது. அன்றாடம் சாப்பாட்டுக்கே தவிப்பதாக இருந்தது வாழ்க்கை. ஆனால் அந்த முதலாளியின் மகன் அடிக்கடி வந்து போகலானான். என்னைக் கடற்கரை வீட்டுக்கு அழைத்துச்செல்வான். தாராளமாகப் பணம் தருவான். கடையில் இருந்து உணவும் கிடைத்துக்கொண்டிருந்தது. நாளடைவில் எனக்கும் அந்த இருட்டுக்கும் வெளிச்சத்திற்குமான வித்தியாசமே தெரியாமல் போய்விட்டது. 

அவன் ஒருநாள் வந்து “கோலாலம்பூரில் உனக்கு ஒரு தங்கும் விடுதியில் வேலை வாங்கி தருகிறேன். தங்கும்  இடம், சாப்பாடு எல்லாம் அங்கேயே வசதி செய்து தருவார்கள். என் கூட வா ” என்று அழைத்தான். 

அப்பாவிடம் சொன்னேன். “நான் ரொம்ப நாள் இருக்க முடியாது. நீ போவதுதான் சரி” என்றார். அவர் அவ்வளவு சீக்கிரம் அனுமதிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. “எங்க இருந்தாலும் என் மகள் பிழைத்துக்கொள்வாள் என்ற தைரியம் எனக்கு இருக்கு. நீ கெட்டிக்காரி. அப்பாவ மன்னிச்சிடு” எனச்சொல்லி கன்னங்களை வருடி கொடுத்தார். 

திகதி : ஜுன் 27

புடுராயாவில் ஒரு கீழ்நிலை பட்ஜெட் ஹாட்டலில் படுக்கைகளைச் சரி செய்வது கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது என்றுதான் என் வேலையை ஆரம்பித்தேன். அங்கேயே ஒரு அறையில் இரண்டு வியட்நாம், மியன்மார் அகதிப்பெண்களுடன் தங்கியிருந்தேன். அவ்வப்போது அவன் வந்து செல்வான். தீவிரமான உறவுக்குப்பின் காணாமல் போவான். நான் அப்போதெல்லாம் அவன் முகத்தைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்வேன். அவன் முகம் ஒரு ஓநாயைப் போல இருக்கும் என எனக்குத் தோன்றியதால் அப்படிச் செய்தேன்.

ஒருநாள் ஹாட்டல் முதலாளி அம்மா என்னை அழைத்தாள். அவள் நல்ல பருமனான பெண். நான் சீனப்பெண்களில் அவ்வளவு பருமனானவளைப் பார்ப்பது அதுவே முதன்முறை. அவள் கோபக்காரி. கண்டிப்பானவள். என்னை அவள் ஒரு குறுகலான ஆபிஸ் அறைக்கு அழைத்துச்சென்றாள். 

“உன்னை நான் அவனிடமிருந்து வாங்கிவிட்டேன்.” என்றாள். எனக்கு அது புரிய நெடுநேரம் ஆனது. என்னை எப்படி வாங்க முடியும் எனக் குழம்பினேன். “நீ எங்கேயும் ஓடிவிட முடியாது. உன்னை வைத்துதான் நான் சம்பாரிக்கனும். போட்ட பணத்தை எடுக்கனும் இல்லையா?” எப்பொழுதும் சிடுசிடுவென இருப்பவள் அன்று சிரித்து சிரித்து பேசினாள். அந்த முக மாற்றமே எனக்குக் கலக்கத்தை உண்டாக்கியது. தலை சுற்றியது.”

“உன் கண்கள் எவ்வளவு அழகானவை என்று உனக்கு தெரியுமா? அந்த வெளிர் நீலமும் கத்தரிப்பூ வண்ணமும் கலந்த விழிகள் அபூர்வமானவை. நான் இதுவரை யாரிடமும் பார்த்திராதது. வசீகரமானவை. உன் அம்மா சத்தியமாக ஒரு சீனத்தியா இருக்க மாட்டாள்.” என்றாள். நான் பதறிக்கொண்டு சீனத்திதான் என்றேன். 

அதைக்கேட்ட அவள் வேகமாகச் சிரித்தாள். “நீ பிறந்தது மலாக்காவில்தானே?  அப்படியானால் ஒரு போர்த்துகீசியனுக்கோ ஒரு ஞோஞ்ஞாவுக்கோ பிறந்திருப்ப. அப்ப சரியான இடத்துக்குதான் வந்து சேர்ந்துள்ளாய். உன் நிறத்தைப் பார். சீன மஞ்சள் இல்லை இது. மஞ்சளுடன் பழுப்பு கலந்துள்ளது. இந்தத் தொழிலுக்கு கண்களும் தோலும்தான் முதல். இதை வச்சே நிறைய சம்பாரிக்கலாம். நீயும் நானும் வசதியா இருக்கலாம்” என் உடன் மெல்ல நடுங்கியது. இவள் என்ன சொல்கிறாள் எனப் புரிய ஆரம்பித்தது.

“வேண்டாம் மேடம். என்னை விட்டுடுங்க.” கெஞ்சலும் கண்ணீரும் கண்டு இரங்க வேண்டிய மனம் அங்கில்லை. அது கல்லாபெட்டியில் இருந்தது. அவளின் குழைவான குரலின் தொனி மெல்ல மெல்ல குரூரமாக மாறியது. 

“கை நிறைய சம்பாதிக்க வழி சொல்லிக்கொடுத்தால், நீ அசடு மாதிரி அழுகிறாய். உன் அறையில் இருக்கின்றார்களே இந்த வியட்னாம் அழகிகள். சந்தோசமாகத்தானே இருக்கிறார்கள். நானுன்னை நிறைய பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். ஒழுங்காக சொல்வதை செய். அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள். பிழைக்கத் தெரிந்த பெண்கள். இந்தப் பன்றிகளுக்குதான் என்ன சொன்னாலும் புரியாது. உனக்கு இருக்கின்ற அந்த அழகு அவர்களுக்கு இல்ல. இந்த பிலிப்பினோ காரிளைப் பார். நல்ல ஆங்கிலம் பேசுவார்கள். வெள்ளக்கார டூரிஸ்டுகளை மயக்கி எவ்வளவு சம்பாதிக்கிறார்கள். புக்கிட் பிந்தாங் ஐந்து நட்சத்திர விடுதிகளில் அவர்களது ராஜியம்தான். அமெரிக்க டூரிஸ்டுகளும் அராப் ஷேக்குகளும் கூட அவர்களைத்தான் விரும்புகிறார்கள். முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். அப்புறம் பழகிவிடும். தப்பி ஓட மட்டும் நினைக்காத. என் கையில் அடியாட்கள் மட்டுமல்ல; போலிஸும் இருக்கு. முரண்டு செய்தால் விபச்சாரம் செய்வதாக உள்ளே தள்ளிவிடுவேன். அரசாங்கம் காஜாங்கில பெண்களுக்குன்னு தனி ஜெயில வச்சிருக்கு. தனி கவனிப்பு இருக்கு. பெண்களை மதிக்கிற நாடு இது” சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தாள். குரூரமாக இருந்தது அவளது முகம். 

அவள் எச்சரிக்கையாக மட்டுமே அதை சொல்லவில்லை என ஒரு முறை ஒரு இந்திய டாக்சி டிரைவர் உடனான தப்பி ஓடலில் தெரிந்துகொண்டேன். நீலாய்க்கு அருகில் அவளுடைய அடியாட்களால் தடுத்து நிறுத்தி கொண்டுவரப்பட்டேன். கன்னங்களும் கண்களும் அடிப்பட்டு வீங்கி அருகில் உள்ள மெடிக்கல் சென்டரில் மோட்டாரில் இருந்து கீழே விழுந்ததாகச் சொல்லி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றாள் முதலாளி அம்மாள். 

எல்லா அடிகளும் நாளடைவில் பழகிவிட்டது.

திகதி : ஜூலை 5

தொடைவரை பிளந்து கிடக்கும் கவுனில் நான் அழகாக இருப்பதெல்லாம் எனக்குத் தாமதமாகத்தான் தெரியவந்தது. புகையை பலவிதமாக ஊத வியட்நாம் பெண்கள் சொல்லிக்கொடுத்தார்கள். விஸ்கியை விழுங்கும்போதெல்லாம் ஜொலிக்கும் தங்கத்தை கரைத்துக்குடிப்பதாகவே நினைத்துக்கொள்வேன்.

ஆம்! வேறு கதியில்லை எனத் தெளிந்த பின்னர் ஒரு நிம்மதி வந்தது. வெட்கம் மானம் என எந்த உணர்ச்சியும் இல்லாமல் போவது ஒரு விடுதலை கிடைத்த மாதிரி இருந்தது. இந்த உடம்பில் இருந்து, உயிரில் இருந்து வாழ்க்கையில் இருந்தே விடுதலை கிடைத்த மாதிரி இருந்தது. எந்த உணர்ச்சியுமே இல்லாமல் மரத்துப்போவது என்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது. எங்களுடன் ஒரே ஒரு தாய்லாந்து பெண் இருந்தாள். கொஞ்சம் வயதானவள். இதுதான் புத்தன் சொன்ன ஞான நிலை எனச்சொல்லி சிரிப்பாள். இதுவும் ஒருவித துறவுதான் என்பாள்.  அப்பா இறந்துபோன தகவல் வந்ததுகூட எனக்கு எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை. உணர்ச்சிகள் செத்துப்போய்விட்டிருந்தன. ஆனால் அன்று தங்க பானத்தை அதிகமாகக் குடித்தேன். 

ஒருநாள் ஒரு அதியசம் நடந்தது. நகரில் அரசியல் மாநாடு நடந்தால் பெரிய பெரிய தலைவர்களைச் சந்திக்க ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்த மனிதருக்கு ஒரு ஐம்பது வயது இருக்கும். அவரும் எல்லோரையும்  போலவே என் கண்களைத்தான் கவனித்தார். இந்த மாதிரியான கண்களை வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்றுப்புகழ்ந்தார். கிட்டப்பார்வை என்பதால் கண்ணாடியைக் கழட்டிவிட்டு  முகத்தருகே நெருங்கி வந்து என் கண்களை ஊடுருவி பார்த்தார். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. நானும் அவர் கண்களைக் கூர்ந்து பார்த்தேன். 

அவரது கண்களின் பாவை விரிந்தது. உள்ளே காட்சிகள் விரிந்தன. அந்தக் காட்சிகளில் அவர் இன்னும் வயதானவராக இருக்கின்றார். இந்தோனேசியாவில் இருப்பதுபோல தெரிகிறது. அவர் பேசுகிற பாஷையை வைத்து அது இந்தோனேசியாவாகத்தான் இருக்கும் என ஊகித்துக்கொண்டேன். ஒரு கூட்டத்தில் முஷ்டியை மடக்கி மேலே உயர்த்தி மிகவும் கோபமாகப் பேசுகிறார். எல்லோரும் ஓடுகிறார்கள். இராணுவம் சுற்றி வளைக்கிறது. துப்பாக்கி சூட்டுச்சத்தம் எங்கும் கேட்கிறது. அவர் குண்டடி பட்டு செத்து விடுகிறார். 

நிதர்சனத்தில் என் உடல் இயங்குகிறது. அவரும் இயக்குகிறார். ஆனால் நான் அங்கு இல்லை. இன்னொரு காட்சி தோன்றுகிறது. 

ஏதோ ஒரு மலைமேலே அவர் மெல்ல மெல்ல பறக்கிறார். நான் அவரை கையசைத்து வழியனுப்புகிறேன். திடீரென அவர் இறக்கைகள் அறுந்து விழுகின்றன. அவரும் விழுகிறார்.

விழித்தபோது அவர் பக்கத்தில் சத்தமாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்கள் கழித்து கெந்திங் மலையில் அவர் விபத்தொன்றில் இறந்ததாக நாளிதழில் செய்தி வந்தது.

அவள் புறப்பட்டு போனபிறகு எனக்கு அவள் நோய்மையின் பிடி கிடைத்தது. கான்ஃபலேஷன் கண்டவர்கள் இப்படி சுயமாக காலத்தை நகர்த்திப்பார்ப்பது உண்டு. நடந்து முடிந்த எதையும் முன்னமே தங்கள் கனவுகளில் கண்டதாகக் கூறுவர். அதில் உறுதியாக இருப்பது. அவர்களது கற்பனைக்கு முன் எவ்வித தர்க்கமும் சாத்தியப்படாது. அதுவும் இவள் மூர்க்கமாக இருக்கிறாள். சமகாலம் மட்டுமல்லாமல் முற்பிறவி குறித்த அனுமானங்களை சொல்கிறாள். எனவே மேலும் அவளைப் பேசவிட்டப்பிறகே எந்த முடிவுக்கும் வரவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

திகதி : ஜூலை 31

அதற்குப்பின் வந்த ஒவ்வொரு நாட்களும் எனக்கு சுவாரசியமாகவே கழிந்தன. என் மீது பரவும் ஒவ்வொருவரின் கண்களுக்குள்ளும் பல காட்சிகளைப் பார்க்க முடிந்தது. ஒரு வினாடி போதும் ஊடுருவ. பின்னர் கண்களை மூடிகொள்வேன். அதன் பின்னர் வேறு உலகம்தான். உடல் இயக்கத்தை சுத்தமாக மறந்திருப்பேன். மனதினுள் காட்சி காட்சிகளாக வந்துபோகும். எவ்வளவு நேரம் என்றுக்கூட தெரியாது. எப்பொழுது விழிக்கிறேன் என்பதும் தெரியாது. இதையெல்லாம் யாரிடமும் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. இவற்றில் சில காட்சிகள் நினைவில் இருக்கும். சில காட்சிகள் மறந்துபோய்விடும். இதற்காகவே நான் பகல் நேர வேலையை தேர்ந்தெடுத்துக்கொண்டேன். 

ஒரு தடவை ஒரு பேராசிரியர் வந்தார். மனைவியை இழந்தவர். நல்ல மனிதர். வந்தவுடன் மண்டியிட்டு தொழுதார். போகும்போதும் தொழுதார். இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். கண்களினுள்ளே பார்வை விரிந்தபோது நான் ஒரு திராட்சை தோட்டத்தில் இருந்தேன். நிறைய திராட்சைகள் கொத்துக்கொத்தாக தொங்கிக்கொண்டிருந்தன. நான் அவற்றை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவற்றில் ஒன்று மட்டும் காலிபிளவர் போல பெரிதாக இருந்தது. கனவில் இருந்து வெளியேறியபோதுதான் அவ்வளவு நேரம் அவர் குடலிளுள் இருந்ததை உணர்ந்தேன். மிகவும் தயங்கி அவரிடம் குடலைச் சோதிக்கச் சொன்னேன். அவர் என்னை வினோதமாகப் பார்த்தார், சில மாதங்களில் என்னை வந்து சந்தித்து நிறைய பணம் கொடுத்தார். என் கைகளைப் பிடித்து கண்களில் வைத்து நன்றி சொன்னார். “எனக்கு குடலில் கேன்சர். நீ சொல்லிதான் தெரிந்து கொண்டேன். ஆப்பரேஷன் செய்துக்கொண்டேன். குணமாகி பிழைத்துக்கொண்டேன்.” என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

திகதி : ஆகஸ்டு 12

இந்த வாழ்க்கை எனக்கு பிடித்துப்போய்விட்டது. ஒவ்வொரு கண்ணும் ஒவ்வொரு விதமான வாழ்க்கையை எனக்குக் காட்டியது. அந்தக் காட்சிகள் எத்தனையோ காலங்களைக் கடந்து பின்னோக்கி கொண்டுப்போகிறது. எனக்குப் பெரும்பாலான கனவுகள் புரிவதில்லை. அவை படிமங்களாலும் குறியீடுகளாலும் ஆனவை. அதனைக் கொண்டு கதையை மனதில் உருவாக்குவதுதான் என் சவால். அது எனக்குப் பிடித்திருந்தது. 

இதெல்லாம் கனவா? கற்பனையா? ஏனிந்த காட்சிகள் எனக்குத் தெரிகின்றன. ஒன்றுமே புரியவில்லை. ஆனால் மிக நுட்பமான குறியீடுகளைப் பிடித்துக்கொண்டு என் மனம் உருவாக்கும் விவரணைகள் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தன. எனக்கு இதனால் மகிழ்ச்சிதானே. அப்போதுதான் என் கண்களை நான் பார்க்க விரும்பினேன். கண்ணாடியில் அது விலகியிருந்தது. உயிரற்ற இரு விழிகள் அசைவது மட்டுமே தெரிந்தது. ஆனால் ஏதோ ஒரு கண்களுக்குள் என்றைக்காவது ஒருநாள் என்னையே பார்த்துவிடுவேன் என்றுத்தோன்றியது. அந்த எண்ணமே என்னை உற்சாகம் கொள்ளச் செய்தது. என்னுடைய அந்தக் கனவு… அந்த அலறல்… என் பிள்ளை… ஏனென்று ஒரு நாள் தெரிந்துகொள்வேன். ஆனால் பார்க்கும் கண்களிலெல்லாம் அவனவன்  வாழ்க்கைதான் தெரிகிறது. என் வாழ்க்கை தெரியவில்லை. ஒருநாள் தெரியும். நம்பிக்கை இருந்தது. 

திகதி : ஆகஸ்டு 30

முதலாளி அம்மா சொன்னது உண்மைதான். எவ்வளவு பெரிய உண்மை. வாழ்க்கையில் முதல் முதலாக செய்கிற எல்லாமே கஷ்டமாகத்தான் இருக்கும். முதல் கொலை கூட அப்படித்தான் இருக்குமாம். அப்புறம் போகப்போக பழகிப்போய்விடுமாம். சொரணை கெட்டுப்போய்விட்டது என்றால் அப்புறம் வேறென்ன கெட வேண்டி இருக்கிறது. இப்படித்தான் ஒருவன் பெருத்த உடலோடு வந்தான். பெண்டாட்டியை ஊருக்கு அனுப்பியிருப்பதாகச் சொன்னான். முதல் அணைப்பில் அவன் கண்களை ஊடுறுவி பார்த்தேன். செக்கச்சிவந்த வினோத மிருகம் ஒன்று உடல் அதிர முழக்கமிட்டது. சிவந்த தரையில் நுழைய ஆக்ரோஷமாகத் துளையிட்டது.  

நான் அவனை தள்ளிவிட்டு தப்பித்து ஓடப்பார்த்தேன். அவன் ஒரு முரடன். என்னை பிடித்து இழுத்து முகத்தில் குத்தினான். பல் உடைந்து ரத்தம் வடிந்தது. ஆனால் வழியே இல்லை. நான் பதிலுக்கு அவனைத் தாக்கினேன். ஓரமாகக் கிடந்த என் காலணியை எடுத்து அதன் உறுதியான அடிப்பாகத்தால் அவன் மண்டையில் அடித்தேன். முதலாளி அம்மா அடியாட்களோடு வந்து என்னைக் காப்பாற்றினாள். கிழிந்த உதட்டில் டாக்டர் நான்கு தையல் போட்டார். அப்போது கூட வலியே இல்லை. உன்னை போலீஸில் புகார் செய்கிறேன் என மிரட்டினான். என்னால் சிக்கல் வந்துவிட்டதாக முதலாளி அம்மா கடிந்துகொண்டாள். சில மாதங்கள் கழித்து அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியைப் படித்துக்காட்டி அவளே சந்தோசமும் பட்டாள். அவனுக்கு எச்.ஐ.வி இருந்துள்ளது.

திகதி : செப்டம்பர் 12

நான் இருந்த விடுதியில் ஒருநாள் ரெய்ட் நடந்தது. வட்டார போலீஸ் தலைமை அதிகாரி புதிதாக மாற்றப்பட்டு வந்திருந்ததால் அது நிகழ்ந்திருக்கக் கூடும். என்னையும் என்னுடன் இருந்த வியட்னாம், மியன்மார் பெண் அகதிகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வரிசையாக உட்கார வைத்திருந்தார்கள். அங்கு ஏற்கனவே பத்து பெண்கள் முகங்களை மறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். நான் முகத்தை மறைக்கவில்லை. ஏன் மறைக்க வேண்டும். எங்களைப் போன்றவர்களைப் பத்திரிகைகள் ‘அழகிகள்’ என்றுதான் குறிப்பிடுகின்றன. உலகம் என் அழகைப் பார்த்துவிட்டுப்போகட்டும். இனிமேல் மறைக்க என்ன இருக்கிறது.

அப்பொழுதுதான் டத்தோ ஶ்ரீயின் பார்வை என்மீது பட்டது. எதற்காகவோ காவல்நிலையத்திற்குள் நுழைந்த அவர் என்னைப் பார்த்துவிட்டார். அவருக்கு அங்கு ஏகப்பட்ட மரியாதை தரப்பட்டது. திரும்பும் பொழுது என்னைப் பார்த்து உன் பெயர் என்ன என்று ஹக்காவில் கேட்டார். நானும் ஹக்காவில் பதில் சொன்னேன். நாங்கள் ஓரினம் எனக் கண்டுக்கொண்டார். 

தன்னுடைய மேலாளரை அழைத்தார். 

“இவளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு என்னுடைய கென்னி ஹில்ஸ் வீட்டில் விட்டுவிடுங்கள்” என்றார். முதலாளி அம்மாளுக்கு ஏகப்பட்ட சந்தோசம். “உன்னை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்களாக சம்பாதிக்கப் போவதை ஒரே நாளில் டத்தோ ஶ்ரீ மூலம் சம்பாதித்துவிட்டேன். எல்லாம் உன் கண்களின் அதிஷ்டம். அப்பவே சொன்னேன் உன்னிடம். நீ பிழைத்துக்கொள்வாய் என்று” என்றாள். 

ஒரே இரவில் எனது உலகம் புரட்டிப்போடப்பட்டது. அந்தப் பெரிய வீட்டில் என் ஏவலுக்கு பல வேலைக்காரர்கள் இருந்தாலும் நான் தனியாக இருப்பதாகவே உணர்ந்தேன். எனக்கு இது புதிது. இருந்தாலும் அந்தக் கனவு தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. 

பணக்காரியாக வாழ்வது சிரமமாக இருந்தது.

“என் பிள்ளை எங்கே… என் பிள்ளை எங்கே” என்ற கதறல் அவ்வப்போது காதில் ஒலித்துக்கொண்டேதான் இருந்தது. 

திகதி : செப்டம்பர் 30

டத்தோ ஶ்ரீ, சீன சமூகத்தில் ஒரு பெரிய மனிதர். கோடீஸ்வரர். ஏராளமான சூதாட்ட மையங்கள். கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர். வார இறுதி நாட்களில் மட்டுமே என்னோடு கழிப்பார். ஹாங்காங், மக்காவ் செல்லும்போதெல்லாம் என்னை அழைத்துச்செல்வார். அங்கேயும் அவருக்கு முதலீடுகள் இருந்தன. என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார். அவர் என் கடந்த காலங்கள் குறித்து ஒரு வார்த்தைகூட கேட்காத கனவான். என்னை கண்ணியமாக நடத்தினார். அவரிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. மதுவருந்தாமல் என்னை நெருங்குவதில்லை. என்னை நெருங்கும்போதெல்லாம் கண்களை மூடிக்கொள்வார். ஆனால் ஒரு பகல் வேலையில் அவரது கண்களை கண்டேன்.

மங்கோலியாவில் குதிரைப்படை வீரராக அவர் தோற்றம் அளித்தார். சீன எல்லைகளில் அவர் வீரர்களோடு குதிரையில் செல்வதாக காட்சிகள் தெரிந்தன. அவ்வளவுதான் அதற்குமேல் வேறொன்றும் காணமுடியவில்லை. எப்போதாவதுதான் அவர் என் வீட்டுக்கு வருவார். அதற்காகக் காத்திருந்தேன். அடுத்த சந்திப்பில் ஒருநாள் அவர் வியட்னாம் துறைமுகத்தில் இருப்பதாக காட்சி கிடைத்தது. பல கப்பல்களின் சொந்தக்காரராக காட்சியளித்தார். 

எல்லாமே சுவாரசியம் இல்லாத காட்சிகள். நான் எதையும் அவரிடம் சொல்லவில்லை. நான் குடித்திருந்தேன் என்றால் எனக்குக் காட்சிகள் கிடைக்காததை தாமதமாகவே உணர்ந்தேன். அவருடன் நான் இருக்கும் நேரங்களில் எல்லாம் மது அருந்த வற்புறுத்துவார். இதுபற்றி அவரிடம் சொன்னால் என்னை பைத்தியம் என நிராகரிப்பாரோ என்ற பயம் இருந்தது. சில மாதங்கள் கூட வராமல் இருப்பார். தனிமையில் நான் தவித்துக்கொண்டிருந்தேன். எனக்குக் கண்கள் வேண்டும். கண்கள் வழியாக காட்சிகள் வேண்டும். அப்போதுதான் நான் என்னைக் கண்டுப்பிடிக்க முடியும். அந்த நான்கு சுவர்களால் ஆன தங்க கூண்டில் எனக்கான விடுதலை இல்லை. பித்துப்பிடித்ததுபோல இருந்தது.

வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த விடுதிக்குச் சென்றேன். ஒன்றிரண்டு இரவுகள் அங்கு தங்கியிருப்பேன். முதலாளி அம்மாள் என்னை வியப்போடு வரவேற்பாள். காசுக்காக அல்ல; கண்களுக்காக நான் அங்கே சென்றேன். பென்ஷன் கிடைக்கிற நாட்களில் மனைவியை இழந்த சில வயதான முதியவர்கள் வருவார்கள். அந்தப் பாவப்பட்ட ஜென்மங்களிடம் காசு வாங்க மாட்டேன். ஒவ்வொரு கண்கள் வழியாகவும் வெவ்வேறு காட்சிகள் விரியும். இதில் ஏதாவது ஒரு கண்ணில் என்னை நான் பார்க்க மாட்டேனா எனக்காத்திருந்தேன். 

திகதி : அக்டோபர் 5

எட்டு வருட உறவில் அவர் என்னிடம் கடுமையாக நடந்துகொண்டதே இல்லை. மிகவும் மென்மையானவர். மெல்ல மெல்ல அவர் என்னை காதலிக்க ஆரம்பித்தார். சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். நான்தான் வேண்டாம் என்றேன். அவரது அன்பு என்னை பயமுறுத்தியது. “அன்பிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்பு காட்டுகிற அக்கறையும் கனிவும் எனக்கு மூச்சு முட்டுகிறது. வேண்டாம் வேண்டாம். என்னை இப்படியே விட்டுவிடுங்கள். என் பாட்டுக்கு நான் இருக்கின்றேன்; உங்கள் பாட்டுக்கு நீங்க இருங்க. இந்தக் காசு பணமெல்லாம் நாளைக்கே இல்லை என்றாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை. நாடோடியாகத் திரியவும் தயார். எனக்கு என் சுதந்திரம்தான் முக்கியம்.” என்றேன். 

அவர் சிரித்தார். ஒருவேலை அதைத்தான் அவர் என்னிடம் எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ தெரியவில்லை.  அன்று அவருடன் ஏற்பட்ட நெருக்கம் முற்றிலும் வித்தியாசமானது. அவரும் நானும் மது அருந்தியிருக்கவில்லை. என்னைத் திடீரென தள்ளிவிட்டார். நான் ஏராளமான மடிப்புகள் கொண்ட பிரமாண்ட மெத்தையில் தனியாகக் கிடந்தேன். மடிப்புகளின் இடைவெளியில் சிவப்பு நதி. அவை எங்கிருந்து வருகிறது எனத் தேடினேன். மெத்தையில் ஆங்காங்கு குன்றுகள் இருந்தன. அவை குன்றுகள் உள்ள மெத்தை.

திகதி : செப்டம்பர் 30

நான் கண் திறந்தபோதே என் அன்னை கண்களை மூடிவிட்டாளாம். நோயாளியான என் அப்பாவுக்கு வலியும் வேதனையும்தான் வாழ்க்கை. அன்புக்காட்டத் தெரியாது. ஐந்து காசு சம்பாதிக்கவும் தெரியாது. அம்மா இருந்திருந்தால் வினோதமான கண்களை யார் கொடுத்தது எனக்கேட்டிருக்கலாம். சிறுமியாக இருந்தபோது எல்லோரும் கேலி செய்வதும் அதை வைத்துதான். என்னை அது நோகடித்தது. பள்ளியில் குழந்தைகள் பிசாசு கண்கள் எனச்சொல்லி ஏளனம் செய்வார்கள். பயந்து ஓடுவதுபோல நடிப்பார்கள். நான் நொந்ததுதான் அதிகம். அன்பு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அன்பு என்பதுகூட ஒரு தேவைக்குத்தான் போல. அது எனக்குக் கிடைத்ததே இல்லை. யாரும் எனக்கு அதை கொடுத்ததும் இல்லை. எனக்குள் இருந்தால்தானே நான் கொடுப்பதற்கு. எங்கேயாவது ஓடிப்போய்விடலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த வாழ்வும் வசதியும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. தாய்லாந்துக்குப் போய் அங்கே யாருக்கும் தெரியாமல் இதே தொழிலில் செட்டில் ஆகிவிடலாம். ஆனால் வயது தடையாக இருப்பதை நினைத்ததுண்டு.

திகதி : அக்டோபர் 3

ஒருநாள் டத்தோ ஶ்ரீயின் மேனஜர் வந்தார். “போஸ் கூட்டி வரச்சொன்னார்” என்றார். அவர் டத்தோ ஶ்ரீயின் நெருக்கமான மேனஜர். எப்போதும் கண்களில் தவிப்பு இருக்கும். 

மேனஜர் டத்தோ ஶ்ரீயின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். முதன் முறையாக அவர் வீட்டிற்குச் செல்கின்றேன். கோட்டைச் சுவர்கள், காவலாளிகள் எல்லாம் கடந்து உள்ளே போகவேண்டியிருந்தது. அது ஒரு மாளிகை. ஆங்காங்கே சிறு சிறு கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். காரிலிருந்து இறங்கிய என்னை சிலர் வியப்புடன் பார்த்தார்கள். ஏதோ சொல்ல முடியாத அமைதி அங்கே நிலவியது. சில புத்த பிக்குகள் பிரார்த்தனைக்காக காத்துக்கொண்டிருப்பது மாதிரி இருந்தது.

மிகுந்த மரியாதையோடு என்னை அழைத்துச் சென்றார்கள். மிக அகலமாக வளைந்து செல்லும் படிகளில் மேலேறி செல்கிறேன். ஆங்காங்கே நிற்கும் அவரது மெய்க்காப்பாளர்களின் பார்வை என்னை மொய்க்கிறது. போலியான மரியாதையுடன் தலையைக் குனிந்து பின்னால் நகர்கின்றார்கள். சுவர்களில் பிரமாண்டமான சீன தேசத்து ஓவியங்கள். அலைகளில் மிதக்கும் பாய்மரக் களங்கள் அசைந்தவண்ணம் பயணித்துக்கொண்டிருந்தன. 

ஆளுயரப்படச்சட்டகங்களில் அவரது மூதாதையர்கள். ஆண்கள் சடைகளுடனும் பெண்கள் கையில் விசிறிகளுடனுமாக. வெள்ளை பளிங்கிலான குதிரைகள் முன்னங்கால்களை தூக்கி கனைத்துக்கொண்டிருந்தன. படிகளை ஒட்டிய தரையில் ஒரு நீர்த்தொட்டி. சிவப்பும் வெள்ளையும் கலந்த ‘கொய்’ மீன்கள் செடிகளுக்கிடையில் நீந்திக்கொண்டிருந்தன. மிக உயரத்தில் இருந்து தொங்கும் புராதன அழகுடன் கூடிய திரைச்சீலைகள். அவரது படுக்கையறை கதவுகளை மெல்ல சப்தமில்லாமல் திறந்துவிடுகிறார்கள். 

இவ்வளவு பெரிய படுக்கையறையை நான் பார்த்ததில்லை. வெளிறிய முகமும் மெலிந்த உடலுமாக அவர் படுத்திருந்தார். கருப்பு கோர்ட் அணிந்திருந்த ஒருவரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். சற்று எட்டத்தில் இரண்டு பிலிப்பினோ தாதியர்கள் அங்கிருக்கும் மருத்துவ கருவியின் மானிட்டரை சரி செய்துக்கொண்டிருந்தார்கள். அவரது வலது கை செயலிழந்து சிறுத்திருந்தது.

“முதல் தடவையாக நீ இங்கு வருகிறாய் இல்லையா? இவர் என் வக்கீல். கேன்சர் ரொம்ப தீவிரமாகிவிட்டது. இப்போது ஒரு பக்க கை கால் அசைவில்லை. விரைவில் முழுக்கவே நினைவிழப்பேன். போவதற்குள் உனக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் அல்லவா? உனக்கு நீ இப்ப இருக்கிற பங்களா கெப்போங்கில் இரண்டு வீடுகள், சன்வேயில் இருக்கிற என் கடைகள், ஜே.பியில் இருக்கின்ற எஸ்டேட் எழுதி வைத்திருக்கின்றேன். வேறு ஏதும் உதவி தேவைப்பட்டால் மேனஜரிடம் கேட்டு வாங்கிக்கொள்.” பலவீனமான குரலில் பேசினார். கம்பீரமான அந்த மனிதரை காலமும் நோயும் கரைத்துக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

வழக்கறிஞர் நீட்டிய பத்திரங்களில் அவர் சுட்டிக்காட்டிய இடங்களிலும் கையெழுத்திட்டேன். சுற்றி இருந்தவர்களை அவர் பார்த்தார். “தனியாக இவளிடம் பேச வேண்டும்” என்ற பார்வையில் இருந்த உத்தரவை புரிந்துகொண்ட தாதியர்கள் மேலாளர்கள் வழக்கறிஞர் எல்லோருமே அமைதியாக அந்த அறையின்  பிரமாண்டமான நெடிய கதவினைத் திறந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். காலடிச்சத்தம் கூட கேட்டுவிடக்கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருந்தனர் போலிருந்தது. 

அவரது கட்டிலின் அருகில் சென்று அமர்ந்தேன். எழுந்து சாய்ந்து அமர்ந்துகொண்டார். அவரது நெற்றியிலும் இதழ்களின் மீதும் முத்தமிட்டேன். மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டார். “எதுவும் சொல்லவேண்டுமென நினைக்கிறாயா?” மிருதுவான குரலில் அவர் கேட்க அவர் அணைப்பில் இருந்து விடுவித்துக்கொண்டேன். “நன்றி சொல்ல வந்தேன்” என்றேன். சிரித்துக்கொண்டார். அவரது கண்களைப் பார்த்தேன். மரணத்தின் வாசல் திறப்பது தெரிந்தது. “உன் கண்கள்தான் என்னைக் கவர்ந்தது. நம்மை சேர்த்து வைத்ததும் உன் கண்கள்தான். முதலில் அதன் அழகுதான் என்னை ஈர்த்தது. அதன் பின் அதில் தெரிந்த அப்பாவித்தனம் என்னைக் கட்டிப்போட்டது. உனக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்” சட்டென பேச்சை நிறுத்தினார். அழுகின்ற மாதிரி இருந்தது. மௌனம். 

நாசி விடைத்தது.

“நான் உன்னை உண்மையிலேயே காதலித்தேன். நீ என்னை காதலித்திருக்கிறாயா?” 

“இல்லையே” தயக்கமே இல்லாமல் வந்த என் பதில் கண்டு திகைத்துப்போனார் ஒரு கணம். கண்களை விரித்து புருவத்தை உயர்த்தி ஒரு வினாடி என்னையே பார்த்தார். மீண்டும் அவரது சோகம் கலந்த மென் சிரிப்பு வந்து சேர்ந்தது. தலையை மேலும் கீழுமாக அசைத்தார். அந்த உண்மையை உள்வாங்கிக்கொள்ள முயற்சிக்கிறார்போல இருந்தது. அவரது கைவிரல்கள் மார்பில் தொங்கிய சங்கிலியின் புத்தர் டாலரை உருட்டிக்கொண்டிருந்தது. 

“உங்கள் மீது என்றில்லை. எனக்கு யார் மீதும் காதல் என்பது ஏற்பட்டதேயில்லை. உங்கள் மேல் எனக்கிருந்தது நன்றி உணர்வு. உங்களுக்கு புரியாது. காதல் குறையும். கூடும். மங்கும். மறையும். மறுபடியும் வரும். எனக்கு அந்த அனுபவம் இல்லை. நன்றி அப்படி இல்லை. எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். நினைவிருக்கும் வரையில் அது என்னுடன் இருக்கும். நீங்கள் இருந்தாலும் இல்லை என்றாலும் அந்த உணர்வு எப்போதுமே இந்த நாய்க்கு இருக்கும். அது போதும்” எனச் சொன்னேன்.

என்னை இழுத்து அணைத்து முத்தமிட்டார். அவர் தந்த கடைசி முத்தமது. 

திகதி : நவம்பர் 3

என்னிடம் ரொம்பவும் மரியாதையுடன் நடந்துகொள்கிற மனிதர்களில் இந்த முதியவர் முக்கியமானவர். டத்தோ ஶ்ரீயின் மேனஜர்களில் ஒருவர். டத்தோ ஶ்ரீ மறைந்து நீண்ட நாள் கழித்து வந்தார். மற்றவர்களின் பார்வையில் ஒரு ஏளனம் இருக்கும். இவரிடம் அது இருந்ததில்லை. வாஞ்சையான மனிதர். ஒரு உதவிக்கேட்டு வந்திருக்கின்றேன் என்றார். கண்களில் எப்போதும் உள்ள தவிப்பு. 

“சொல்லுங்க செய்கிறேன்” என்றேன்.

“டத்தோ ஶ்ரீ எனக்கு நல்லாதான் செய்துவிட்டுப்போனார். ஆனால் என் கஷ்டகாலம் எல்லா காசும் என் மனைவி வைத்தியத்திற்கே செலவாகிவிட்டது. அவளுக்கு முடக்கு வாதம். படுத்தப்படுக்கையாக பல வருடம் இருக்கின்றாள். ஒரே பையன். கெட்டிக்காரப் பையன். பத்து ஏ எடுத்தான். கெட்ட சகவாசம். மோசமான நண்பர்களோடு சேர்ந்து கெட்டுப்போய்விட்டான். கஞ்சா அடித்துக்கொண்டு திரிகின்றான். போய்த்தொலை என்று விட்டுவிட்டேன். மெடிக்கல் சென்டர் பில் பாக்கி கொஞ்சம் இருக்கின்றது. கொடுத்து உதவினீர்கள் என்றால் கொஞ்சம் கஷ்டம் தீரும்”

கண்ணாடி பீரோவைத் திறந்து அதிலிருந்த புத்தர் சிலைக்குக் கீழாக வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொடுத்தேன். “இது போதுமா? வேண்டுமென்றால் திரும்ப வாருங்கள். தருகிறேன் என்றேன்.”

அந்தச் சொல் அவரை நெகிழ வைத்திருக்க வேண்டும். குலுங்கி அழத்தொடங்கினார். நான் அவரை அணைத்து ஆறுதல் சொன்னபோது அவர் கண்களைப் பார்த்தேன். ஒரே புகைமூட்டம் சூழ்ந்த வெளியில் ஒரு பிரமாண்ட கதவு திறந்தது. என் முகத்தைக் கண்ட அவர் வினோதமாகப் பார்த்தார்.  சுதாகரித்துக்கொண்டு “நீங்கள் நன்றாக இருப்பீர்கள். என்று வாழ்த்தினார்.”

விடைபெறும் முன்பாக “பணத்தை இப்படி வெளியே வைத்திருக்காதீர்கள். பாதுகாப்பு இல்லையே” என்றார்.

“புத்தர் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்.” என்றுச்சொன்னேன். சிரித்துக்கொண்டார். என்னால் சிரிக்க முடியவில்லை.

திகதி : நவம்பர் 30

அன்று மாலை 6 மணி இருக்கும். தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தேன். நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன். வெளி கேட்டை திறந்துகொண்டு ஒரு இளைஞன் வேகமாக வீட்டுக்குள் வந்தான். கூடவே வந்த காவலாளி “எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வந்துவிட்டான்” என்றான் பணிவாக. நான் காவலாளியைப் போகச்சொன்னேன்.

“மேடம் உங்களோட பேசனும்” என வேகமாக வீட்டுக்குள் நுழைந்தான். பின் தொடர்ந்து சென்றேன். கதவை அடைத்துவிட்டான்.

“பணம் வேண்டும் மேடம். ப்ளீஸ்” எனக்கெஞ்சினான். கலையான முகம்; மெலிந்த தேகம். பதினாறு வயது இருக்கும். பல நாட்கள் சாப்பிடாதவன் போல இருந்தான். கலைந்த தலைமுடி முகத்தில் கிடந்தது. சட்டையும் ஜீன்சும் அழுக்காக இருந்தது. பேச்சுத் தடுமாறியது. “பணம்தானே தருகிறேன். நிதானமாகு என்றேன். “போதைப்பித்தனா?” என்றேன். கைகளைக் கூப்பி ஆமாம் மேடம் ஆமாம் மேடம் என்றான். 

பிறகு திடீரென “போலீஸை கூப்பிடாதீர்கள்” என பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்தான். “கத்தி வைத்திருக்கிறேன்” என்றான்.

“ஏ சிறுவனே… நீயே கியான்ல இருக்கிறாய். மூக்கு ஒழுகுகிறது. கை நடுங்குகிறது. நேராக நிற்ககூட முடியவில்லை. ஏன் கத்தி துப்பாக்கி என பயமுறுத்துகிறாய். பயப்படாதே… கொஞ்சம் உட்காரு.” என்றேன்.

இரு கைகளையும் கூப்பினான். “சாரி மேடம்… ஐம்பது ரிங்கிட் போதும். போயிடுறேன்.” நாசி வழியாக சளியும் கண்களின் வழியாக வடியும் நீரையும் புறங்கையால் துடைத்துக்கொண்டான். அவன் சட்டைக்காலரைப் பிடித்துக்கொண்டு இழுத்துக்கொண்டு குளியல் அறையில் நிறுத்தினேன். தள்ளாடியவாறு நின்றான். 

“இந்தா தண்ணீருல முகத்தைக் கழுவு கியான் குறையும். காப்பி கொண்டு வரேன். இங்கயே நில்லு.”

குளிக்காததினால் அவன் உடலில் இருந்து ஏதோ துர்வாடை வீசியது. சுவற்றைப் பிடித்தபடி முகத்தைக் கழுவிக்கொண்டிருந்தான். நான் சமையல் அறைக்குச் சென்றேன். சூடாகக் காப்பியைக் கலந்துகொண்டு திரும்பினேன். நான் திரும்பும் பொழுது அவன் அலமாரியைத் திறந்து புத்தர் சிலையைத் தூக்கி அடியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டிருந்தான்.

“மை டியர் சன். நான் காசு வச்சிருக்கிற இடம் உனக்கு எப்படி தெரிந்தது” என்றேன். திரும்பினான். முகமெல்லாம் வியர்வை. கண்களில் பீதி. கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. 

“சாரி மேடம்…. சாரி மேடம்…” என ஒரு கையை கூப்பினான். அவனால் நிற்கக்கூட முடியவில்லை. “அப்பா அம்மாகிட்ட புத்தர் சிலைக்குக் கீழே நீங்க காசு வைத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதனால்தான் வந்தேன்.  அப்பா செத்தப்பிறகு காசு இல்லை மேடம். என்னால் தாங்க முடியவில்லை மேடம்.” கீழே சரிந்து விழுந்தான். நினைவிழந்தான்.

நான் அவனை என் மடியில் தூக்கி கிடத்தினேன். முகத்தில் தண்ணீர் தெளித்தேன். இதழ்கள் வரண்டு போயிருந்தன. உதடுகளை விரித்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக காப்பியை ஊற்றினேன். அவன் தலையை மார்போடு அணைத்துக்கொண்டேன். 

இப்போது கண்களைத் திறந்தான். விழி உயர்த்தி என்னைப் பார்த்தான். அந்த ஏக்கமான பார்வை என்னை என்னவோ செய்தது. அவன் கண்களில் பாவை விரிந்தது. நான் பயணித்தேன். உள்ளே காட்சிகள் தோன்றின. ஆளுயர அலையடிக்கும் கடலில் மிதக்கின்ற நான்கைந்து படகுகள். பிள்ளையும் குட்டியுமாகப் பெண்கள். எங்கும் அழுகுரல். வியடனாமில் இருந்து அகதிகளாக படகில் தப்பித்து வரும் கூட்டம். மலேசிய கரைகளில் இராணுவ உடையில் கைகளில் துப்பாக்கிகளோடு மனிதர்கள். படகை விட்டு இறங்கி இடுப்பளவு தண்ணீரில் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு நகர்கின்றார்கள் பெண்கள். அவர்களுள் நானும் ஒருத்தியாக கையில் குழந்தையுடன் கரைகளை நோக்கி வருகின்றேன். பிள்ளைகளைப் பிடுங்கி வேறு யாரிடமோ கொடுத்துவிட்டு பெண்களின் கைகளைப் பிடித்து இழுத்து லாரிகளில் ஏற்றுகிறார்கள். எந்தக் கெஞ்சலும் அழுகையும் அவர்களின் மனங்களைத் தொடவில்லை. மூர்க்கமாக நடந்துகொள்கிறார்கள். சற்று தூரத்தில் இருக்கும் முகாம்களில் பெண்களை அடைக்கிறார்கள். 

கூடாரம் ஒன்றில் நான் கிடக்கின்றேன். என் பிள்ளை எங்கே என் பிள்ளை எங்கே என்று கதறுகிறேன். என் மீது ஒவ்வொருவராக விழுகிறார்கள். சிதைக்கிறார்கள். என் பிள்ளை எங்கே எனக்கத்துகிறேன்.

ஒரு குழந்தை இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு என்னை நோக்கி ஓடி வருகின்றான். 

‘ம்மா ம்மா’ என்று மடியில் கிடந்தவன் என்னைப் பார்த்து அழுகின்றான். நினைவு திரும்பினேன். மார்போடு சேர்த்து அவனைக் கட்டி அணைத்துக்கொண்டேன். நெற்றியில் முத்தமிட்டேன். இதுவரையிலான இந்த ஜென்மத்து மொத்த அழுகையையும் அழுது தீர்த்தேன். 

தேவைப்பட்டால் மீண்டும் வருவேன் என்று சொல்லிச்சென்றாள். இன்றுவரை வரவில்லை. 

12 comments for “ஓர் அழகியின் கதை

  1. Mathan
    January 4, 2021 at 8:32 am

    டாக்டர் சண்முகசிவாவின் பெரும்பாலான சிறுகதைகளை வாசித்துள்ளேன். இக்கதை அவர் எழுதிய கதைகளில் இருந்து மாறுபட்டுள்ளது. முடிவு வரை வாசகனை கட்டி வைத்துள்ளது. முடிவு கொடுக்கும் திருப்பத்தில் கண்ணீர் வந்தது.

  2. ஆரியபாலன்
    January 5, 2021 at 10:42 am

    இது மிகச்சிறந்த கதையாக இருக்குமென முதல் பத்தியிலேயே தெரிந்துவிட்டது. இவர் சிறுகதை தொகுப்பு கிடைக்குமா?

  3. January 6, 2021 at 3:41 pm

    அற்புதமான கதை. தங்கள் பணி அனுபவமும் வாழ்க்கை அனுபவமும், இணைந்து அழகானதொரு புதிய நடையில் வந்திருக்கிறது.

  4. Jegan -Canada
    January 7, 2021 at 11:24 pm

    அருமை, மிக அருமை! கருத்துக் செறிவும், கதை சொல்லும் நேர்த்தியும் மனத்தைக் கவர்ந்து விட்டன. முதல் பந்தியிலேயே வாசகனைக் கதைக்குள் இழுத்துவிட்டது – ஒரு சுழல்போல ..!

  5. Hema
    February 1, 2021 at 9:09 pm

    வித்தியாசமான சிறுகதை. Nice.

  6. கங்கா
    February 4, 2021 at 3:09 am

    டாக்டர் சண்முகசிவாவின் பெரும்பாலான சிறுகதைகளை வாசித்துள்ளேன் மாறுபட்ட கதை.அருமை, மிக அருமை!

  7. முனியாண்டி ராஜு ,சுங்கைப்பட்டாணி
    September 24, 2021 at 9:53 pm

    வாழ்த்துகள் …பதிவு மனதை தொட்டது..சபாஷ்

  8. முனியாண்டி ராஜு ,சுங்கைப்பட்டாணி
    September 25, 2021 at 12:11 am

    தரமான கதை

  9. S V Raman
    March 13, 2023 at 2:57 pm

    மிக அருமை நெஞ்சத்தைத்தொடும், வித்தியாசமான கதை வாழ்துக்கள் எஸ் வி ராமன்

  10. S V Raman
    March 13, 2023 at 3:17 pm

    மிக அருமை நெஞ்சத்தைத்தொடும், வித்தியாசமான கதை. வாழ்துக்கள் எஸ் வி ராமன்

Leave a Reply to ஆரியபாலன் Cancel reply