மனசை ஆய்ந்த மனசிலாயோ!

பயணங்கள் மிகச் சுவாரசியமானவை. அவ்வப்போது நம்மை  எதார்த்தத்திலிருந்து தப்பிக்கச் செய்து, நமக்கே நம்மை யாரென்று அடையாளங்காட்டி மீட்டெடுப்பன. இந்தச் சுழற்சி இப்படியே தொடர்ந்துகொண்டிருப்பதால்தான் மனிதனால் தன்னியல்பில் செயல்பட முடிகின்றது. பயணங்கள் நின்று போனால், மனம் இறுக்கமுறும். அதன் நீட்சியாகச் செயல்பாடுகளில் சிக்கல் நேரும். உளவியல் சார்ந்த எதிர்பாரா சம்பவங்கள் நிகழும். இவையெல்லாம் நாம் கடந்த ஓராண்டு காலமாய்க் கோரணியின் கோரத்தாண்டவத்தால் வீட்டில் முடங்கிக் கிடப்பதன் விளைவுகளாய்ப் பார்க்கின்ற விடயங்கள்தான். 

வாழ்தலின் அர்த்தத்தை நமக்கு மெய்ப்பித்துக் காட்டக் கூடிய பயணங்கள்  நம்மைத் தகவைக்கும் தந்திரத்தைத் தம்முள் கொண்டுள்ளன. பெரும்பாலானோரால், தம் பயண அனுபவத்தையெல்லாம்  படம் பிடித்துப், பார்ப்போரெல்லாம்  இரசிப்பதற்கும் தான் மட்டும் புரிந்து கொள்ளும்படி மட்டுமே ஆவணப் படுத்த முடிகின்றது. ஆனால், எழுத்தாளனுக்கோ  அவற்றையெல்லாம் எழுத்தால் ஆவணப்படுத்திப் படிப்போரையும் இரசித்துப் புரிந்து கொள்ள வைக்க முடிகின்றது.  

நவீனின் மனசிலாயோ நாம் இரசித்துப் புரிந்து உள்வாங்கி பயணித்துக் கொள்ள வேண்டிய பயணக் கட்டுரை நூல். இந்நூலை வாசிக்கத் திறந்த சமயத்தில் மனம் பல்வேறு காரணங்களுக்காய்ச் சற்றே இறுகித்தான் இருந்தது. படித்து முடித்ததும் ஒரு கேரள மசாஜுக்கு மனம் போய் வந்தார்ப்போல இலகி விட்டது. இதுதான், எழுத்து நம்முள் நிகழ்த்தும் ஏகாந்தம். ஆக, நவீனின் கழுத்து வலியைக் குறைத்த அப்பயணம், நமக்கும் சிகிச்சை தரும்படியாய் இந்நூலில் எழுதப்பட்டுள்ளதைப் பாராட்டுகிறேன். 

இந்நூலில் மொத்தம் 11 அத்தியாயங்கள்  இடம்பெற்றுள்ளன. பயணக்கோர்வைக்கு ஏற்ப அத்தியாயங்கள் அடுக்கப்பட்டுள்ளதால் வாசிப்பில் தடையேதுமில்லாமல் படித்ததை நேர்த்தியாக எண்ணத்துள் நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது. ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் நவீன் இட்டிருக்கும் தலைப்புகளால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அவை, வெறும் தலைப்புகளாக நில்லாமல், அவ்வத்தியாயத்தைப் பூடகமாகக் காட்டுகின்றன. எடுத்துக் காட்டாக,  தென்னங்கடல், சேமமுற வேண்டுமெனில் போன்றவற்றைச் சொல்லலாம். இந்தக் கவித்துவமான வரியின் விவரிப்புதான் அந்த அத்தியாயமே. இப்படியாய் ஒவ்வொரு தலைப்பும் நமது சிந்தனைப் பொறியைக் கிளப்பி விடுகின்றன. இஃது ஒரு தலைப்புத் தேர்வில் இருக்க வேண்டிய கவனத்தைக் காட்டுகின்றது. 

கற்பனித்து ஒரு கதையை எழுதுவதற்கும் கடந்து வந்த ஒரு கதையை எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.  முதலாவது வகைமையில் படைக்கப்படும் கதாபாத்திரங்கள் குறித்த அக புற புரிதலினை உருவாக்கிக் கொள்ள படைப்பாளி போதிய நேரத்தை அவரவர் இஷ்டம்போல் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டாம் வகைமையில் வரும் பாத்திரங்கள் குறித்தப் புரிதலுக்கு அத்துணைக் கால அவகாசம் கிடையாது.  அவர்களுடனான நேரடித் தொடர்பு முடிவதற்குள் அவர்களைப் புரிந்து கொண்டாலேயொழிய தவறின்றி அப்பாத்திரத்தை எழுத்தில் வடிக்க இயலாது.  நவீன் தனது பயணத்தில் சந்தித்த மனிதர்களை மிக நுட்பமாகக் கவனித்திருக்கிறார். அந்த நுட்பத்தன்மையால் சாரா, டெய்ஸி, பிரான்ஸ், லில்லி, போன்றவர்களெல்லாம் நம்முள் ஆழ உள்சென்று பேரலைகளை எழுப்புகின்றனர். 

அதென்ன விசித்திரமான நிலமா? அங்கென்ன மானிடத்தன்மை வேறா? என்றுகேட்கிறீர்களா! அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் குணங்கள்தான் அவர்களுக்கும். ஆனாலும், இந்த அன்றாடத் தொடர்பு நமக்கு அவர்கள் சார்ந்த பல விடயங்களைக் காண்பித்து அவர்களை அத்துணைக் கவனப்படுத்தலுக்கு உட்படுத்துவதிலிருந்து தடுக்கிறது. அந்நிய நிலத்திலும், அந்நிய மனிதர்களிடத்திலும் நமக்கு முன் அனுமானித்துக்கொள்ள ஏதுமில்லை. ஆதலால், அவர்களை நாம் அதிகம் கவனிக்கிறோம். அந்த கவனிப்பு நம்முள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாராவின் நிலையற்ற உணர்ச்சியலையும் அவளுள் இருக்கும் அறிவாற்றலும், லில்லியும் டெய்ஸியும் கொண்டுள்ள சோகமான தன்கதையும் சந்தர்ப்பவாதமில்லாத் தாய்மையுணர்வும் என அந்நியர் தரும் அனுபவ அறிவு நமக்கு நாம் கடந்த வழி குறித்த பிரக்ஞையை உண்டாக்குகிறது. யோசிக்கிறோம்; தொடர்புப்படுத்துகிறோம்; தெளிவடைகிறோம்.

பல இடங்களுக்கு நவீன் பயணிக்கிறார். அவ்விடங்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகளையும்  சிறப்பம்சங்களையும் கட்டுரையில் கச்சிதமாய்ப் பதிவு செய்கிறார். அதனூடே அவ்வப்போது இலக்கியம் சார்ந்த பதிவுகள் இடம்பெறுகின்றன. நல்ல சிலநூல்கள் குறித்துப்பேசுகிறார். குறிப்பாக, பயணம் முழுக்கவும் அவர் வாசிப்பதை விடுவதில்லை. எழுதுவதையும்தான். மனசிலாயே, அந்தப் பயணத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது. கண்களுக்குப் பட்டவை குறித்த தேவையான அளவு விமர்சனம், நாசூக்காய்ச் சில நகைச்சுவை. இப்படியாய் இந்த எண்பத்து நான்கு பக்கத்துள் எவ்வளவோ செய்திகள்.

“வழியும் கருமை” என்ற அத்தியாயத்தின் நிறைவுப் பகுதி பிற அத்தியாயங்களைக் காட்டிலும் என்னை நெடுநேரம் தன்னுள் வைத்துக்கொண்டது. நான், அதைக்கடந்து அடுத்த அத்தியாயத்திற்குச் செல்ல நிறைய நேரம் எடுத்துக்கொண்டேன். மனத்துள் எண்ணற்ற கேள்விகள் எழுந்தன. சுயமாக விடைகாண எத்தனித்தேன். அந்த அத்தியாயம் தந்த தெளிவு, என்னுள் விடையையும் கொப்பளித்துத்தள்ளச் செய்தது. நவீனுக்கான சூழல்வேறு. அதை நம்மோடு நாம் தொடர்புபடுத்தும்போது நமக்கான சூழல்வேறு. நான், நவீனின் பாத்திரத்தில் என்னைப் பொருத்தி இந்நூலின் பல இடங்களை வாசித்ததாலோ என்னவோ ஆங்காங்கே சலனப்பட்டேன்.

இவ்வாறான சுயம்சார்ந்த ஒன்றைக் கண்டடையவும் இந்த இயற்கை நம்முள் ஒன்றைக்கடத்தவும் நாம் தன்னந்தனியாய் இருத்தல் தேவைப்படுகிறது. பெரிதும் மலையேற்றத்தை இரசித்து அதில் ஈடுபடும் நான் என்னுடைய பலதனிப்பயணங்களில் காடுகள் தரும் கல்வியினைக் கற்றுக் கொண்டுள்ளேன். நவீனின் இந்தத் தன்னந்தனி பயணம் அவரை அவருக்காக ஒவ்வொரு வினாடியையும் வாழச்செய்திருக்கிறது. நண்பர்களோடு பயணிக்கும்போது நமக்கான நேரம் அங்கே வாய்க்குமா என்று அறியேன். மிகநிச்சயமாய்ச் சுற்றுலா அமர்க்களமாய் இருக்கும். ஆனாலும், தன் அறிதலுக்குத்தளம் இருக்குமா என்பது கேள்விதான். 

இந்நூல் இயற்கையை, இறையை, இன்னலை, இன்பத்தை, இன்மையை, இலக்கியத்தை, என பல்வேறு கோணங்களை மிகநிதானமாய்ச் சித்தரிக்கிறது. ஒரு சாமானியனின் கண்களுக்கு இவற்றுள் பல தெரிந்திருக்காது. இந்த நுண்கவனிப்பெல்லாம் தேர்ந்த எழுத்தாளனுக்குள் இயல்பாய் வந்துவிடும் ஒன்று. முழுநூலையும் வாசித்தவுடன் நான் இதுவரைப் போயிறாத புதிய நிலமொன்றில் புரண்டு புத்துயிர்கொண்டதாக உணர்ந்தேன். இதில், நவீனோடு நாமும் பயணித்து, நன்நிலம் ஒன்றை அறிகிறோம், நவீனை இன்னும் கூடதலாய் அறிகின்றோம், நமக்கே தெரியாத / அறியாத நம்மையும் அறிகிறோம். மொத்தத்தில் மனதை இந்நூல் மீள் ஆய்வுசெய்கிறது. நவீன் பயணித்த இடங்கள், பார்த்த விடயங்கள், பழகிய மனிதர்கள், பயணத்தின்  நிறைவில் அவருள் இருக்கும் இன்னோர் அவரைக் கண்டு கொள்ளச் செய்திருக்கிறது. அதைத்தான் நானும் நுகர்ந்தறிந்தேன். அதைக்கலை நேர்த்தியுடன் நவீன் படைத்திருக்கிறார்.

1 comment for “மனசை ஆய்ந்த மனசிலாயோ!

  1. மஹேஸ்வரன் பெரியசாமி
    March 2, 2021 at 6:32 pm

    மனசிலாயோ நூலை நானும் வாசித்தேன். அவ்வகையில் என் மன உணர்வை இக்கட்டுரை வெளிப்படுத்தியது. எழுத்தாளருக்கும் கட்டுரையாளருக்கும் வாழ்த்துகள்

Leave a Reply to மஹேஸ்வரன் பெரியசாமி Cancel reply