1
வடக்கு வேல்ஸிலிருந்து லண்டன் வரையிலான ரயில் பயணத்தில் அவரைச் சந்தித்தேன். பர்மிங்ஹாமில் ஏறினார். என் வலதுபக்க இருக்கையில் வந்து அமர்ந்தார். இடப்புற ஜன்னல்வழி, எதிர்ப்புறம் விரையும் வெட்டவெளியில் லயிக்க முயன்றேன். ரயிலேறிய நிமிடத்திலிருந்து இதே முயற்சிதான். முடியவில்லை. காட்சிகளும் ஒலிகளும் வாசகங்களும் எனக்குள் அலைபாய்ந்துகொண்டிருந்த விதம் அப்படி. அடம் பிடிக்கும் குழந்தைபோல, புறக் காட்சியுடன் ஒன்ற மறுத்து தனக்குள்ளேயே அமிழ முற்படும் மனத்துடன் போராடுகிறவனுக்கு, புதியவரின் வருகையும் அருகாமையும் இடையூறு என்றே பட்டது. ஆனால், மிகப் பெரிய ஆறுதலாக வந்து சேர்ந்திருக்கிறார் அவர் என்று அப்போது எனக்குத் தெரியாது.
ஏனோ, நிமிடத்துக்கொருதடவை வலதுபுறம் திரும்பிப் பார்க்கத் தோன்றியது. இப்போது யோசித்தால், அவரிடமிருந்து அழுத்தமான ஜவ்வாது வாசனை தாக்கியது முதல் காரணம். ஐரோப்பிய அருகாமைகளின் ரசாயன நறுமணத்துக்கே பழகிய நாசியல்லவா, கீழைத்தன்மை கொண்ட இந்த மணம் என்னை வெகுவாக ஈர்த்தது. திரு. ஆடியபாதத்திடமிருந்து எந்நேரமும் வீசும் நெடி அது. வாசனைப்பிரியர் அவர்.
இரண்டாவது காரணம், திரு. ஆடியபாதமேதான். என் சொந்த மைத்துனர். உடன்பிறந்த சகோதரனைவிடப் பரிவும், பாசமும் காட்டிய மனிதர். இன்றுவரை யிலான என் வாழ்க்கை ஓட்டத்தை உரிய இடங்களில் திசைதிருப்பி, வேகத்தைக் கட்டுப்படுத்தி, வண்டி மிகச் சரியான இலக்கை நோக்கிச் செல்ல உதவியவர். வேணி குடும்பத்தின் தலைமகன். மிகப்பொருத்தமாக, கான்வெண்ட் ஒன்றின் தலைமை யாசிரியராகப் பணிபுரிந்தவர். ஓய்வுபெற்ற பிறகும் ஆசிரியராகவே தொடர்கிறார் என்று தோன்றும்.
பதினேழு வயது இளையவளான தங்கையை மகள்போல நடத்துவார். கிருஷ்ணவேணி எட்டாவது குழந்தை – அதனால்தான் அந்தப்பெயரே. மூத்த சகோதரனை, ‘அப்பா’ என்று அழைக்காத குறையாக நடத்துவாள்…
முதல் வெளிநாட்டுப் பயணத்தின்போது, பர்ஸை எடுக்கும்போதெல்லாம், உள்ளூர் நாணயத்துக்கும் இந்திய நாணயத்துக்குமான செலாவணி வேறுபாட்டைத் தன்னிச்சையாய் பெருக்கிப் பார்க்க முனையும் என் மனம். மைத்துனரின் வாசகம் உடனே எழுந்து அதன் தலையில் தட்டும்.
“அம்மண நாட்லெ கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்யா!”
உண்மையில், இந்தப் பழமொழிக்கும் பொருளாதார விசனத்துக்கும் நேரடி சம்பந்தம் ஏதும் இருக்கிறதா என்பது இப்போதுவரை தெரியவில்லை. ஆனால், அந்நிய மண்ணில் இருக்க நேரும்போதெல்லாம் எனக்கு வழிகாட்டும் வாசகம். தவிர, ஒரு ஞாபகம் ஏன் மேலெழுகிறது, எந்தவிதமான மன அழுத்தத்தை விளைவிக்கிறது என்பதற்கெலாம் நேரடிக் காரணங்கள் புலப்படும் சந்தர்ப்பங்கள் குறைவுதானே…
பொருத்தமற்ற வாசகம் அடிக்கடி எனக்குள் எதிரொலிக்கும் என்றால், மிகப் பொருத்தமான இன்னொரு வாசகமும் அவ்வப்போது மேலெழுவது உண்டு. இதுவும் என் பிரிய மைத்துனர் அடிக்கடி சொல்வதுதான்.
“இறைக்கிற கிணறுதானய்யா ஊறும்.”
இது பணத்தை உத்தேசித்து அவர் சொல்வதுதான்; ஆனால், ஞாபகங்களுக்கும் செல்லுபடியாகும் போலிருக்கிறது. காலையிலிருந்து அடிமனத்திலிருந்து சம்பவங்க ளும் தருணங்களும் பீறிக் கிளம்பி அலைபுரளும் வேகத்தைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது.
அது கிடக்கட்டும். திரு.ஆடியபாதம் பழமொழி வித்தகர் என்பதைச் சொல்லத்தான் முற்பட்டேன். ஆனால், அவர் என் நினைவுகளில் பின்னிப் பிணைந்தி ருப்பது வேறொரு காரணத்துக்காக…
தொழில்ரீதியாக, பத்துப் பனிரெண்டு முறை வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கையில் எடுத்துப் போகவேண்டிய அந்நியச்செலாவணியை திரு. ஆடியபாதம்தான் மாற்றித் தருவார். ஆசிகூறி, திருநீறு பூசி, விமானநிலையம்வரை வந்து வழியனுப்புவார்.
ஊர்திரும்பியதும் கணக்கை நேர்செய்வேன். காசு அட்டைகளும் கடன் அட்டைகளும் பெருகிவிட்ட இந்த நாட்களிலும் அதே நடைமுறைதான். ஒவ்வொரு முறையும் மனம் ததும்ப நன்றி சொல்வேன். அவர் சாதாரணமாய்ச் சொல்வார்:
“அட, நீர் வேறே. மனுசங்க கூட்டமா வாளணும்னு விதி உண்டாக்குனதே, ஒர்த்தருக்கொருத்தர் அனுசரணையா இருக்கணும்ன்றதுக்காகத்தானேய்யா?”
செயலிலும் காட்டியவர். என்போன்ற நெருங்கிய உறவினர்கள், நாலைந்து சுற்றுத் தொலைதூர உறவுகாரர்கள், குடும்ப நண்பர்கள், சக ஆசிரியர்கள், தெருக்காரர்கள், அவருடைய வகுப்புத்தோழர்கள், சபரிமலைக்குப் போகும் சக சாமிகள் என்று அவரைச் சார்ந்திருந்தவர்களின் பட்டாளம் மிகப் பெரியது. முகம் சுளிக்காமல் அத்தனைபேருக்கும் நிழல்தரும் ஆலமரம் அது…
இன்னொரு சிறப்பம்சத்தையும் சொல்லவேண்டும் – சுபாவமாகவே திரு. ஆடியபாதம் கம்பீரமான மனிதர். முகத்தில் நிரந்தரமாக ஒரு பெருமிதம் இருக்கும். பிரச்சினையோ, நெருக்கடியோ முற்றி அவரிடம் சென்று அடைக்கல மாகும்போது, பொருத்தத்தோடோ, பொருத்தமின்றியோ ஒரு கதை அல்லது சம்பவத் தை விரிவாக விவரிப்பார். அதன் புதுமையும், விவரிக்கும் குரலில் இருக்கும் ஆதுர மும் நம்மைக் குளிர்வித்து, என்ன காரணத்துக்காக வந்தோம் என்பதே கிட்டத்தட்ட மறந்துபோயிருக்கும்! அப்புறம், தாமே நினைவூட்டி, நமக்கான உதவியைச் செய்தும் முடித்தபிறகு, அந்த முகத்தின் நிரந்தரப் பெருமிதம் அத்தனை அழகாகத் தென்படும்!
என் சகபயணிக்கு, திரு. ஆடியபாதத்தின் முகச்சாயல் தத்ரூபமாக இருந்தது என்பதுதான் நான் சொல்ல முனைந்த இரண்டாவது காரணம். நிறம்தான் வேறு. இப்போது வேறுமாதிரித் தோன்றுகிறது – தோற்றத்தில் தெரிந்த மிக மெல்லிய ஒற்றுமைகளை பூதாகாரமாக்கி நான் புரிந்துகொண்டிருக்கவும் கூடும். அன்றைக்கு இருந்த மனநிலை அப்படி. ஆனால், முகஜாடையை விட்டுத்தள்ளுங்கள்; திரு. ஆடிய பாதத்தின் பெருமிதத்தில் இருந்தது ஒரு புலியின் சாயல் என்கிற மாதிரி நான் உணர்ந்தபோது கிடைத்த விசித்திர உணர்வு இருக்கிறதே, அப்பப்பா, இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது…
மூன்றாவது காரணத்தை நெஞ்சடைக்காமல் சொல்ல முடியாது; ஆமாம், இனி அடுத்தடுத்த பயணங்களில், நானேதான் அந்நியச் செலாவணி மாற்றிக்கொள்ள வேண்டும். என் அன்பு மைத்துனர், முந்தின நாள் நள்ளிரவில் தாக்கிய மார்வலியால் காலமாகிவிட்டார்.
நான் ரயிலேறுவதற்கு இரண்டு மணிநேரத்துக்குமுன் தொலைபேசியில் அழைத்துக் கதறிய வேணியின் குரல் என்னை விடாமல் சுற்றிச்சுற்றி வருகிறது – சாவகாசமான காலைநடையின் நிம்மதியைக் குலைக்கும்விதமாக, எவ்வளவு துரத்தியும் காதருகே வந்து ஙொய்யென்று ஒலியெழுப்பும் பிடிவாதமான ஈ போல.
நல்லவேளை, ஆங்கிலேய ஆடியபாதம் பேச்சுக்கொடுத்தார். இல்லையோ, துக்கத்தால் மறுகிக் குமைந்திருப்பேன் – உடனடியாய் ஊருக்குத் திரும்ப முடியாதபடி, சமுத்திரங்கள் அல்லவா பிரித்துவைத்திருக்கின்றன…
“பிரமாதமான காலைப்பொழுது, இல்லை!”
குளிர்பதனம் செய்யப்பட்ட பெட்டிக்குள், இளங்காலை வெயிலின் பூஞ்சையான மஞ்சள்நிறம் மட்டும்தானே தெரிகிறது, இதில் என்ன பிரமாதத்தைக் கண்டார் இந்த ஆசாமி என்று எனக்குத் தோன்றும்போதே, அச்சு அசல் ஆடியபாதம் போலவே புருவத்தைச் சுருக்கிப் புன்னகைத்தார்… அரை மனத்துடன் சொன்னேன்:
“ஆமாம்.”
“இந்தியரோ!”
“ஆமாம்.”
“எனக்கு மிகவும் பிடித்த நிலவெளிகள் அங்கேதான் இருக்கின்றன… குப்பையும் கூச்சலும் புழுதியும் தூசியும் இல்லாத இந்தியாவை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அதுதானே இயற்கையான சூழல்?! இங்கே பாருங்கள், தூசிதும்பு இல்லாத புல்வெளிகள். ஏக்கர் கணக்காய்ப் பரந்திருக்கும் இவற்றின் ஏதோ ஒரு ஓரத்தில் மேயும் நாலைந்து செம்மறிகள்… இந்த ஏற்பாடு எத்தனை செயற்கையாய் இருக்கிறது, இல்லை?…”
சிரித்தார். நானும் சிரித்துவைத்தேன். அவருடைய ஒப்பீட்டில் ரகசியமான கிண்டல் எதுவும் இருக்கிறதோ என்ற சந்தேம் நிரடியது – என் முகத்தில் தெரியவில்லை போல. இயல்பாய்த் தொடர்ந்தார்:
“…முதுமைக்காலத்தில் இந்தியாவில் வந்து குடியமர்ந்துவிட வேண்டும் என்று ஒரு தீர்மானம் இருக்கிறது. நைனிடாலுக்கு அருகே என்று முடிவெடுத்திருக்கி றேன். நான் தொடர்ந்து பேசுவது உங்களுக்குத் தொந்தரவாக இல்லையே!”
“அடடே. அப்படியெல்லாம் இல்லை.”
பின்னே, அந்தக் கேள்விக்கு ‘ஆமாம்’ என்றா சொல்ல முடியும்!
“எதனால் அப்படியொரு தீர்மானம் என்று கேட்கவில்லையே…”
“சொல்லுங்கள்.”
“ஒரு புலிக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன். இது அந்த ஜென்ட்டில்மேனுக்குத் தெரியாதுதான்… என்றாலும், எனக்குத் தெரியுமே!”
இதுவரை இருந்த குழைவான முகபாவம் சட்டென்று தீவிரமடைந்தது. என்னைத் தாண்டி, ஜன்னல்வழி தெரிந்த வெட்டவெளியை வெறித்தார். முதல்முறையாக, அவர் தொடர்ந்து பேசவேண்டுமே என்று ஆவல் எழுந்தது எனக்கு. ஆமாம், இந்தியப் புலியுடன் இவருக்கு என்ன சம்பந்தம் இருந்திருக்கும்?!
ஆங்கிலத்தில் ‘அவர்’ என்பதற்கும் ‘அவன்’ என்பதற்கும் ஒரே சொல்தானே இருக்கிறது. உரையாடல் முழுவதுமே, ‘அந்த ஜென்ட்டில்மேன்’ என்றே குறிப்பிட்டார் என்பதால், முழுக்க முழுக்க ‘அர்’ விகுதி போட்டே சொல்கிறேன்…
“…அப்படி நான் போகும்போது, அவர் இருப்பாரா என்பதற்குக்கூட உத்தரவாத மில்லை. இருபது வருடங்களுக்கு முன் நாங்கள் சந்தித்தபோதே நன்கு விளைந்திருந்தார். தவிர, அந்த முறை, எங்கள் ஜீப்பைத்தாண்டி நாலைந்து ஜீப்கள் போயின. என்னுடைய ஓட்டுநர் மிகுந்த உவகையுடன் சொன்னார் – மிகப் பிரபலமான திரைநட்சத்திரம் தன் சகாக்களுடன் போகிறாராம். வேட்டையாடத் தடைசெய்யப்பட்டவை, அழிந்து வரும் இனம் என்றெல்லாம் எந்தக் கணக்கும் கிடையாது. இரண்டு மூன்று நாட்கள் ஆசைதீர வேட்டுத் தீர்த்துவிட்டு, பேருக்கு ஓரிரு மான்களின் சடலத்தை எடுத்துக்கொண்டு திரும்புவார்களாம்… வனத்துறை அதிகாரிகளுக்கென்ன, நடிகருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட பாக்கியம் போதாதா!…”
பெருமூச்சு விட்டார். முதல்முறையாக, சொந்த வாழ்க்கைக்கு வெளியிலும் துக்கம் கொண்டாட முடியும் என்பதை நேரடியாய்ப் பார்த்தேன்.
“…வெறியைத் தணித்துக்கொள்ள வேட்டையாடுவார்கள் போல. என்னுடைய பள்ளி ஆசிரியர் ஒருவர் இருந்தார். இந்தியா பற்றிக் குறிப்பிடும்போ தெல்லாம், ‘மஹாராஜாக்களின் தேசம்’ என்பார். பழைய மஹாராஜாக்கள் போய், தற்போது புதிய மஹாராஜாக்களின் காலம் நடக்கிறதல்லவா அங்கே!”
கசப்போடு சிரித்தார். ‘நடிகர்கள் மட்டுமில்லை, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பணமுதலைகளுக்கு உங்களிடமிருந்து கிடைத்த சுதந்திரமும், எங்களை மாதிரி சாதாரணர்களுக்குக் கிடைத்த சுதந்திரமும் ஒரேமாதிரியானவை அல்ல நண்பரே’ என்று சொல்ல நினைத்து, மொத்தத்தையும் விழுங்கிவைத்தேன்.
“உண்மையில், இந்தியாவின்மீது எனக்கு உண்டான பெருவிருப்பத்துக்கு திரு. ட்ரெவர்தான் காரணம் – நான் சற்றுமுன் குறிப்பிட்ட ஆசிரியர்…”
என்றவர்,
“…நாம் அறிமுகப்படுத்திக்கொள்ளவேயில்லையே! நான் ஜேக்கப் வில்லியம்ஸ்.”
என்று கைநீட்டினார்.
“சங்கரமூர்த்தி.”
என்று பெயர்சொல்லிக் குலுக்கும்போதே, மடியில் வைத்திருந்த தோல்பையின் பக்கவாட்டிலிருந்து மறுகையால் ஒரு விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார். ஒரு கணம் அதிர்ந்தேன். தத்ரூபமான, துல்லியமான புலியின் முகம் – நேருக்குநேராக முறைத்துக்கொண்டு நின்றது. பக்கவாட்டில், ‘ஜேக்கப் வில்லியம்ஸ், கானுயிர்ப் புகைப்படக்காரர்’ என்ற வரிகளுக்குக் கீழே ஒரு ஈமெய்ல் முகவரி, இரண்டு தொலைபேசி எண்கள் இருந்தன.
“இன்னும் ஐந்தாறு ஆண்டுகள்… இப்போதே ‘போதும்’ என்றுதான் தோன்றுகிறது; ஆனாலும், மனத்தின் இன்னொரு பகுதியில், காட்டுக்குள் திரிவதற்கான வேட்கை அடங்காமலே இருக்கிறது. தவிர, கென்யா, வியத்நாம், லிபியா என்று வெவ்வேறு நாட்டு நண்பர்கள் அழைக்கும்போது மனத்தை அடக்க முடியவில்லை. இந்தியாவுக்கே நாலைந்துதடவை வந்திருக்கிறேன் – ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சரணாலயத்துக்குப் போவோம். ஆஸாம், மாத்ய ப்ரடெஸ் என்று எனது வங்காள நண்பர் அஞ்சன் ஸென்னுடன் சேர்ந்து தென்கோடிவரை போயிருக்கிறேன். மூண்டான் துரை, மூடுமலா என்று பல இடங்கள்…”
நெடில்களும் குறில்களும் இடம் மாறி, விநோதமான மழலை உச்சரிப்பும் சேர்ந்துகொள்ள, அந்தப் பெயர்களைத் தமிழ்ப்படுத்திக்கொள்ள சிரமப்பட்டேன். ஆனால், இன்ன இடத்தைச் சொல்கிறார் என்று புரிந்த மாத்திரத்தில், குழந்தை மாதிரிக் கிளுகிளுத்தது மனம்!
“நானே அங்கெல்லாம் போனதில்லை…”
என்றேன்.
“அதில் தவறில்லை, நான் மட்டும் இங்கிலாந்தை முழுக்கப் பார்த்துவிட்டேனா என்ன!…உங்கள் பெயர் என்ன என்று சொன்னீர்கள்?”
சொன்னேன். வாய்விட்டு உச்சரித்துப் பார்த்தார். கடினமாய் உணர்ந்திருக்க வேண்டும். முகம் சிவந்ததுக்குக் காரணம் வெட்கமா, அவமான உணர்வா என்று நிதானிக்க முடியவில்லை. இதமாய்ச் சொன்னேன்:
“நீங்கள் என்னை ஷாங்க் என்று கூப்பிடலாம். எனது பிரிட்டிஷ் நண்பர்கள் அப்படித்தான் அழைப்பார்கள்…”
“தாங்க் யூ ஷாங்க். தாங்க் யூ வெரிமச். பெயர் சொல்லி அழைக்காமல் என்ன நட்பு வேண்டிக்கிடக்கிறது! நீங்கள் என்னை ‘வில்லி’ என்று அழைக்கலாம். ஒதியாம்போ உள்ளிட்ட அயல்நண்பர்கள் அப்படித்தான் அழைப்பார்கள்!!”
இருவரும் புன்னகை பரிமாறிக்கொண்டோம். கன்றிய சிவப்பு முழுக்க வடிந்து, இயல்பாகியது அவர் முகம்.
2
திரு ட்ரெவர் எனக்கு மிக விசித்திரமான முறையில் இந்தியாவை அறிமுகப்படுத்தினார். ஜிம் கார்பெட்டின் நூல்கள் சிலவற்றை நூலகத்தி லிருந்து எடுத்துத் தந்தார். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் புகைப்படக் கலையின்மீது எனக்கு நாட்டம் விழுந்திருந்தது. ஜிம்மின் விவரிப்பில் உயிர்கொண்டு எழுந்த பொவால்காட் பிரம்மச்சாரி போன்ற மகத்தான புலிகளை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆவல் பிறந்தது. ஆனால், என்னுடைய உத்தேசமே வேறு. அவரைப்போலப் பரண் அமைத்துக் காத்திருந்து, துப்பாக்கியால் சுட்டு அவர்கள் கதையை முடிப்பதல்ல – நுட்பமான, நேர்த்தியான புகைப்படங்கள் மூலம் அவர்களுடைய ஆயுளை நிரந்தரப்படுத்துவது…
கொஞ்சநேரம் மௌனமாய் இருந்தார். இன்னொருதடவை அந்த விஸிட்டிங் கார்டைப் பார்த்தேன். ஆவலாய்க் கேட்டேன்:
“இந்தப் படம் நீங்கள் எடுத்ததா! அற்புதமாய் இருக்கிறது. முப்பரிமாண ஓவியம் மாதிரி…!”
“நன்றி ஷாங்க். இதே பாராட்டை ஆண்டுமுழுவதும் கேட்டுவருகிறேன்; அதனால்தான், இத்தனை ஆண்டுகளாக, எழுத்துருக்களை, தகவல்களை மாற்றியபோதும், படத்தை மட்டும் மாற்றாமல் வைத்திருக்கிறேன். பாராட்டுகளை ,உரியவரிடம் அவ்வப்போது சேர்த்ததும் உண்டு!…”
என்று சிரித்தார்.
“…ஆமாம். இது நான் எடுத்த படம் அல்ல. என் கென்ய நண்பர்; கறுப்பு-வெள்ளைக் காலம் தொடங்கி, பலவண்ணக் காலம்வரை கானுயிர்ப் புகைப்படக் கலையில் பிரசித்திபெற்றுத் திகழ்ந்த என் குருநாதர், ஒதியாம்போ கிப்ரோட்டிச் எடுத்தது. ஜிம் கார்பெட் எனக்குள் விதைத்ததை பிரம்மாண்ட மரமாக்கியவர் அவர்தான். எனக்கு ஒரு நடைமுறை இருக்கிறது; ஆண்டில் ஆறுமாதம் காமிராவும் கையுமாய்க் காடுகளுக்குள் திரிவேன். மீதிக் காலம், நான் எடுத்த புகைப்படங்களை வைத்து உலகின் பல்வேறு பகுதிகளில் கண்காட்சி நடத்துவேன்… பிழைப்பு நடக்க வேண்டுமே!”
அது ஒரு முழுநேரத் தொழில் என்பதே எனக்குப் புதிதாய் இருந்தது. அவ்வளவு வருமானம் தரக்கூடியது என்பது பேராச்சரியமாய் இருந்தது. அவர் தொடர்ந்தார்:
“….ஒதியாம்போ அப்படியல்ல. கோடி கொடுத்தாலும் கானகத்தைவிட்டு வெளியே வரச் சம்மதிக்க மாட்டார். தான்ஸானியாவில், ஸெரெங்கெட்டி தேசியப் பூங்காவின் உள்விளிம்பிலிருந்து ஓரிரு கிலோமீட்டர்கள் உட்புறம் தள்ளி வசித்தவர். வன இலாகாவிடம் அதற்கான சிறப்பு அனுமதியைப் பெற்றிருந்தார். ஒரு மாத ரேஷனை வாங்க எல்லையில் உள்ள டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோருக்கு வந்தபோது அறிமுகமானார். வரிக்குதிரைகளைப் படமெடுக்கும் என் ஆசையைத் தெரிவித்தேன். உடனே சம்மதித்துத் தன் வண்டியில் அழைத்துப் போனார். பருத்த இரண்டு மரங்களின் தோள்பகுதியை இணைத்துக் கட்டப்பட்ட தமது மரவீட்டில் இரண்டு முழு நாட்கள் தங்கவைத்து உபசரித்தார். நூலேணியில் ஏறி அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, கிழப்பறவையின் கூட்டுக்குள் புகுந்தது போலவே உணர்ந்தேன்! இருவரும் ஏறியபின், ஏணியை மேலே தூக்கிச் சுருட்டிவைத்தார் – ஒட்டுமொத்த உலகத்திலும் நாங்கள் இருவர் மட்டுமே இருந்த மாதிரி உணர்வு தட்டியது! காடு முழுவதும் நிரம்பியிருந்த பச்சை வாசனை கிறங்கடித்தது…”
“அந்த இரண்டு இரவுகளையும் என்னால் ஆயுளுக்கும் மறக்க முடியாது. முதல்நாள் இரவில் கொஞ்சம்கூட உறங்க முடியவில்லை. சமவெளியின் இரவும் கானக இருளும் ஒன்றல்ல, ஷாங்க். காட்டின் ஆழத்துக்குள்ளிருந்து திடீரென்று ஒரு உறுமல் கேட்கும். தொடர்ந்து ஒரு ஊளை, ஒரு பிளிறல், ஒரு கூவல், ஒரு ஓலம், ஒரு க்ரீச்சொலி என்று மாறிமாறிக் கேட்கும். ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு அடர்த்தியில், ஒவ்வொரு திக்கிலிருந்து கேட்குமா, வனம் நிஜமாகவே எல்லாப்புறமும் திறந்திருக்கிறது என்று உணர முடியும். உச்சமாக, ஒரு பலத்த கர்ஜனையும் அதன் எதிரொலியும் கேட்ட மாத்திரத்தில், காடு தனது பழைய அமைதிக்குத் திரும்பிவிடும். மீண்டும் அந்த ஒலிகள் கேட்க ஓரிரு மணிநேரம் பிடிக்கும். இடைப்பட்ட வேளையின் அமைதிக்குள் அலாதியான பீதி ஒளிந்திருக்கும்!”
“அதன்பிறகு, தான்ஸானியா செல்லும்போதெல்லாம் அவருடன்தான் தங்குவேன். ஒதியாம்போ எனக்குக் கற்றுக்கொடுத்தது ஏராளம். அவரைப் பார்த்து நானாகக் கற்றுக்கொண்டதும் அநேகம் – உதாரணமாய், என்னுடையது போன்ற தொழில் வாய்த்தவர்கள் மணவாழ்க்கைக்குள் போய்ச் சிக்குவது அத்தனை உசிதமல்ல என்பது!…”
தான் ஒரு தனியர் என்பதைப் பூடகமாய்த் தெரிவித்ததனாலோ என்னவோ, வில்லியம்ஸின் முகத்தில் பெருமிதம் ஒளிர்ந்தது.
“… சாதாரண உரையாடலையே கானுயிர்கள் பற்றிய அபாரமான உரையாக மாற்றிவிடுவார் ஒதியாம்போ. பார்க்கப்போனால், புலிகள் பற்றிப் புதிய திறப்பு எனக்குக் கிடைத்தற்கே, அவருடைய நட்பு வாய்த்ததுதான் காரணம்…”
ஓரிரு கணங்கள் மௌனமாய் இருந்தார். ‘இந்தியப் புலியைப் பற்றிச் சொல்லப்போகிறார் என்று காத்திருந்தால் ஆப்பிரிக்காவுக்குப் போய்விட்டாரே’ என்று குழம்பத்தான் செய்தேன். ஆனாலும், ஒலிப்புத்தகம் கேட்கிற மாதிரி சுவாரசியமாய்ப் போய்க்கொண்டிருந்தது பேச்சு என்பதால், ஆர்வம் குறையாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்; குறுக்கிடாமலும்தான்…
3
“வரிக்குதிரை நெருப்புக்கோழி ஒட்டகச்சிவிங்கி போன்ற சாகபட்சிணிகளைப் படமெடுப்பதில் பெரிய சாகசம் இல்லை நண்பா. சிங்கம் புலி சிறுத்தை என்று எடுக்க முனையவேண்டும். அந்தப் படங்களுக்கு விலையும் அதிகம் கிடைக்கும்!”
என்று கேலிக்குரலில் சொல்லி, என் வாழ்க்கைப்போக்கையே திசைமாற்றியவர் ஒதியாம்போதான்.
“எல்லாரும் நினைத்துக்கொள்கிறார்கள் – வனத்தின் அரசன் சிங்கம்தான் என்று. பிடரிமயிரின் தோரணை, முகத்தில் எந்நேரமும் தெரியும் தூக்கக் கலக்கம், வேட்டையாடும் ஆர்வம் கொஞ்சமும் புலப்படாத மந்தமான அசைவுகள், எண்ணிக்கையின் மிகக் குறைவான விகிதம் என்பதையெல்லாம் முன்னிட்டு யாரோ புனைந்த கதை அது. வனத்தின் நிஜமான அரசன் வேங்கைப் புலி. வனத்துக்குள் உயிர்ச்சமநிலையைப் பேணுவது யாருடைய பொறுப்பு என்கிறாய்? வேங்கைப்புலி வசம்தான் அது இருக்கிறது. கவனமான மேற்பார்வையாளன்போல ஓய்வில்லாமல் வனத்துக்குள் நடமாடித் திரியும் ஜீவன் அது…வரிக்குதிரையின் கோடுகளைப் பற்றி வியக்கிறாயே – அது வெறும் கறுப்புவெள்ளைதானே வில்லீ. புலியின் உடற்கோடுகளுடைய வசீகரம் வருமா! அது கிடக்கட்டும், அழுக்குப் பிடித்த சருமம் உள்ள புலியைப் பார்க்கவே முடியாது தெரியுமா?…”
என்று சிறு இடைவெளி விட்டார். நான் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“…அத்தனை சுத்தமாக்கும் அது.”
என்றார் ஒதியாம்போ. சற்று அடங்கிய குரலில் கேட்டேன்:
“பூனைக்குடும்பப் பிராணிதானே. தன் நாவால் உடம்பு முழுவதையும் நக்கி சுத்தப்படுத்திக்கொள்ளும் பூனைகளைப் பார்த்திருக்கிறேனே.”
“நீ சொல்வது சரிதான். ஆனால், தன்னுடைய புறங்கழுத்தையும் நெற்றியையும்கூட புலி தானே நக்கி சுத்தப்படுத்திக்கொள்ளுமோ?!”
என்று கேட்டுச் சிரித்தார். அப்புறம் சொன்னார்:
“நானாக ஒரு விஷயம் யூகித்து வைத்திருக்கிறேன். சிலவகைத் தாவரங்களின் இலைகளில் நீர் ஒட்டுவதில்லை அல்லவா – அதைப்போல, புலியின் சருமத்திலும் அழுக்குப் படிவதில்லையோ என்று தோன்றுகிறது…”
என்று சொல்லிவிட்டு மௌனமானார். சில நிமிடங்கள் கழித்துக் கேட்டேன்:
“இவ்வளவு சொல்கிறீர்கள், ஜிம் கார்பெட்டானால் ஆட்கொல்லிப் புலிகளின் பெரும் பட்டியலையே தருகிறாரே! புலி என்ற சொல்லே ‘மானுட விரோதி’ என்று பொருள்படுகிறமாதிரி?”
“அவர் யார் ஜிம் கார்பெட்?”
குரலில் தெரிந்தது ஆர்வமா கேலியா என்று புரியவில்லை – ஆனாலும், எனக்குத் தெரிந்த அளவில் சொன்னேன்.
“நான் அப்படி ஒரு பெயரைக் கேள்வியே பட்டதில்லை. ஆனால் ஒன்று சொல்வேன். புலிகளின் அடிப்படை இயல்பு, மனிதர்களைத் தாக்குவதல்ல. விசையாய் வேட்டையாட முடியாத அளவு முதுமையை எட்டியதாலோ; சாப்பாட்டில் இருக்கும் எலும்பு குத்தி, ஈறுகளில் சீழ்பிடித்து இயலாமையை எட்டிவிடும்போதோ; விடாய்க் கசிவின் காலத்தில், அறியாமல் நெருங்கி வந்துவிடும் பெண்மணிகளின் வாசத்தால் தூண்டுதலுற்றோ மனிதர்களைத் தாக்கினால் உண்டு. மற்றபடி, புலிகள் மனித விரோதிகள் அல்ல என்று உறுதியாய்ச் சொல்வேன்…”
இன்னும் ஏகப்பட்ட தகவல்கள் சொல்லியிருக்கிறார். அத்தனையையும் சொல்வதென்றால், இந்த ஒரு பயணம் போதாது. தவிர, உங்களுக்கும் எந்த அளவு சுவாரசியமாய் இருக்கும் என்று தெரியவில்லை… அப்புறம், அவர் கூறிய தகவல்கள் பலவும் புத்தகங்களிலும் இணையத்திலும் கிடைக்கக்கூடியவைதாம் – உண்மையில் ஆட்கொல்லிப் புலிகள் உருவாகும் விதம் பற்றி ஜிம் கார்பெட்டின் எழுத்திலேயே வாசித்திருக்கிறேன் – எந்த நூலில் என்று நினைவில்லை. ஆனால், ஒதியாம்போவுக்கு வாசிக்கும் பழக்கமே கிடையாது. அத்தனையும் அனுபவ ஞானம். ரஷ்யாவிலும், இந்தியாவிலும், பர்மாவிலும் பல வருடங்கள் இருந்து புலிகளைத் தேடி அலைந்தவர்.
ஒதியாம்போவின் புலிக்காதலை நூறு சதவீதம் தெரிவிக்கும் செய்தி ஒன்றும் உண்டு. கானகத்துக்குள் கரடி தாக்கி, நாலைந்து மாதம் படுக்கையில் கிடந்து உயிரிழந்தார் அவர். தற்செயலாக அந்த வழியே வந்த வேட்டைக்காரர்களின் ஜீப் ஓசை கேட்டதும் இவரை விட்டுவிட்டு ஓடியதாம் கரடி. அதற்குள்ளாக, போதுமான சேதத்தை விளைவித்திருந்தது. குற்றுயிராய்க் கிடந்தவரைத் தூக்கிவந்து, சிகிச்சைக்குச் சேர்த்திருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட மனிதர்! தகவலறிந்து, உடனடியாக விமானமேறிப் பறந்தேன். மருத்துவமனைப் படுக்கையில் கிடந்தவர் என்னைப் பார்த்துச்சொல்கிறார்:
“என்ன இருந்து என்ன வில்லீ, ஒரு புலியின் கையால் இறக்க நேர்ந்திருந்தால் எவ்வளவு பெருமையாய் இருந்திருக்கும்? என்னைத் தாக்கிய கரடியின் நினைவு வரும்போதெல்லாம் அதனிடமிருந்து வீசிய துர்நாற்றம்தான் மனம் முழுக்க நிரம்புகிறது!”
அந்த முறைதான், என்னை ஆற்றுப்படுத்திய ஆப்த வாக்கியத்தைச் சொன்னார்:
“நீ போகவேண்டிய தேசம் இந்தியா. எண்ணற்ற வேட்டைகளுக்குப் பிறகும், எண்ணற்ற புலிகள் உள்ள தேசம் அது. நானே அங்கே சென்று குடியமரத்தான் விரும்பினேன். அனுமதி கிடைக்கவில்லை. ஒருவேளை கிடைத்திருந்தால், புலியிடம் சிக்கி இறக்கும் அதிர்ஷ்டம்கூட வாய்த்திருக்கலாம்!”
என்று சிரித்தபடி மூச்சு வாங்கினார். என் கண்கள் கலங்கின. நான் அவரைக் கடைசியாய்ப் பார்த்த சந்தர்ப்பம் அது.
4
இந்த நினைவுகளோடுதான் இந்தியா வந்து சேர்ந்தேன். அங்கே எனக்குக் கிடைத்த நண்பர் அஞ்சன் ஸென் வேறுமாதிரியான ஆசாமி. இருவரும் சேர்ந்து பயணம் செய்த நாட்கள் முழுக்க, இந்தியத் தொன்மங்களிலும் புராணங்களிலும் செவிவழிக் கதைகளிலும் எங்கெல்லாம் வனவிலங்குகள் இடம்பெற்றிருக்கின்றன என்று சொல்லிக்கொண்டே வருவார். உங்கள் கடவுள்களில் ஒருவர் புலியின்மீது சவாரி செய்வாராமே! (இந்த இடத்தில், என் மைத்துனர் ‘வன்புலி வாகனனே’ என்று உரத்த குரலில் தொடங்குவதும், சிஷ்யக்கூட்டம் அதைவிட உரத்தும் ஒருமித்தும் பின்தொடர்வதும் நினைவில் வந்தது. மிகமிகச் சிரமப்பட்டு, வாய்திறக்காமல் இருந்தேன்.)
அது பெரிதில்லை, மனித மனத்தின் கற்பனைகளுக்கு எல்லையுண்டா என்ன! ஆனால், தானே கடவுளாக இருந்த ஒரு புலியைப் பற்றிச் சொல்ல முற்பட்டுத்தான் இத்தனைதூரம் போய்விட்டேன்!…
கடைசியாக நான் மேற்கொண்ட இந்தியப் பயணத்தில் அஞ்சன் ஸென் என்னுடன் இணைய முடியாமல் போனது. முன்னரே தாம் ஒரு வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டு, ஏற்பாடுகள் செய்திருந்தார்.
எனக்கு விநோதமான ஆசை எழுந்தது. அடுத்த ஒரு மாத காலத்துக்கு ஜிம் கார்பெட் போலவே வாழ்ந்து பார்த்தால் என்ன! அதாவது, ஜிம் நடந்து திரிந்த இமாலயப் பகுதிகளை, அவர் நூல்களில் குறிப்பிட்டிருக்கும் இடங்களை, நேரில் சென்று பார்ப்பது என்
ஆனால், அவருக்கு ஒருபோதும் வாய்த்திராத ஒரு அனுபவம் எனக்கு வாய்த்தது…
ரீஷிகெஷ் தாண்டி, மேலே கங்கையின் உபநதி ஒன்றின் படுகைக்கருகே இருந்த சுற்றுலா விடுதியில் தங்கிக்கொண்டு, கால்நடையாகவே மலையேறி நடப்பேன். இரண்டு மூன்று நாட்களுக்கான உணவும் தண்ணீரும், காமிராப் பையுமாய் நானே ஒரு வனவிலங்காகிவிட்டதுபோல சுதந்திரமாய்த் திரிவேன். தற்காப்புக்காகக் கைத்துப்பாக்கி வைத்திருப்பேன் – ஆனால், அதைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் என்றுமே வாய்த்ததே இல்லை, ஷாங்க்! மனிதர்களைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் மற்றவர்களை அநாவசியமாய்த் தாக்குவதில்லை – இதை என் அறுதி வாக்கியமாகவே எடுத்துக்கொள்ளலாம். எந்தப் பிராணிக்குமே மனிதன் இயற்கையான உணவு இல்லை… ஆமாம், மனிதர்களைத் தவிர வேறு யாருமே உகக்காத உயிரினம் மனிதன்!!
அன்று காலையிலிருந்தே, இனம்புரியாத பரபரப்பு எனக்குள் ஊறியவாறிருந்தது. சாதாரணமாகவே, சமவெளியில் நடமாடுவதுபோல விரைவாகவும், அழுத்தமாகவும் வனத்துக்குள் நடக்கக்கூடாது என்று ஆரம்ப காலத்திலேயே ஒதியாம்போ எனக்குச் சொல்லித் தந்திருந்தார். அன்று ஏனோ, வழக்கத்தைவிடவும் மிருதுவாகப் பாதம் பதித்து நடந்தேன். பகல்பொழுதின் வெயிலும் பஞ்சுப்பொதிபோன்று மிருதுவாகத் தென்பட்டது. ஆனாலும், முன்னமே சொன்ன பரபரப்பின் காரணமாகவோ என்னவோ, சீக்கிரமே முழங்கால்கள் சோர்ந்துவிட்டன.
உச்சிவேளை. எங்காவது ஒரு மரத்தடியிலோ, பாறையிலோ அமர்ந்து இரண்டு ப்ரட் துண்டுகளை உண்ணலாமா என்ற சிறு தயக்கம் வயிற்றில் எழுந்தது. சாய்ந்து அமர்வதற்கு வாகாக, அகலமான தண்டு உடைய தேவதாரு மரம் ஒன்று கண்ணில் பட்டது.
விச்ராந்தியாய் அமர்ந்தேன். பொருளேற்காத ஒலிகளையும் தோற்றங்களையும் வேற்றுக்கிரக ஆள்போல அவதானித்தபடி, இலக்கற்றுக் கவனித்துக்கொண்டிருந்தது சிந்தை. சிலபல நிமிடங்கள் போயிருக்கலாம்
சூழலில் விசித்திரமான ஏதோ நடப்பது உணர்வில் தட்டியது. குரங்குகள் நிம்மதியற்றுத் தாவின. அந்த வேளையில் அத்தனை பறவைகள் ஒன்றுசேர்ந்து பறப்பது வழக்கமில்லை; அவை ஒரே திசையில் பறந்து கடந்தன என்பதும் விநோதமாய்ப் பட்டது. ஆட்காட்டிப் பறவையின் குரல் சற்று அருகிலிருந்து அவ்வப்போது ஒலித்தது. மிக முக்கியமான காட்சி எதுவோ சமீபித்திருக்கிறது என்று என் உள்ளுணர்வுக்குப் பட்டது. சுமைகளை இறக்கிவைத்தேன். அச்சம் காரணமாகவா அசட்டுத்தனம் காரணமாகவா தெரியவில்ல,, காமிராப் பையையும் அவற்றுடன் வைத்தேன் – முட்டாள்தனம்கூடக் காரணமாய் இருந்திருக்கலாம். இடுப்பில் செருகிய துப்பாக்கி பத்திரமாய் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.
எந்தத் திக்கில் முன்னேறுவது என்று சற்றுக் குழம்பினேன். உடனடித் தீர்வாக, கிட்டத்தட்ட என்னை உரசிக்கொண்டு நாலைந்து மான்கள் தலைதெறிக்க எதிர்த்திசையில் ஓடின. அவை வந்த திசையில், நுனிக்கால் ஊன்றிப் பூனைபோல மெத்துமெத்தென்று நடந்தேன். அதிக தூரம் போக வேண்டியிருக்கவில்லை. நூதனமான மணமொன்றை என் நாசி உணர்ந்தது என்னுடைய பிரமையாகவேகூட இருக்கலாம். ஆனால், எதிர்ப்பட்ட காட்சி நிஜமேதான்.
ஒரு பெண்மணி நின்றிருந்தாள். தெய்வசந்நிதியில் நிற்பவள் மாதிரிக் கைகூப்பி நின்றவளின் பார்வையைத் தொடர்ந்து, வலது பக்கம் பார்த்தேன். ஆஹா, அத்தனை பெரிய புலியை நான் பார்த்ததேயில்லை – அதற்குப் பின்னும்கூடத்தான். சுமார் பத்தடி நீளம் இருக்கும். சாதாரணமாய் நின்றபோதே அதன் பாவனையில் ஒரு கம்பீரம் இருக்கத்தான் செய்தது.
இருவரும் நேருக்குநேர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அவள் காலடியில், கனத்த சுள்ளிக்கட்டு ஒன்று கிடந்தது. புலி நேர்ப்பார்வையாய் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றது. சன்னமான குரலில் அவள் தொடர்ந்து ஏதோ பேசினாள். எனக்கு அந்தப் பிரதேசத்தில் புழங்கும் மொழி கொஞ்சமும் புரியாது. ‘பக்வான், பக்வான்’ என்ற சொல் அடிக்கடி வந்து விழுவதும், புலியிடம் மனிதமொழியில் ஏதோ இறைஞ்சுகிறாள் அந்த அபலை என்பதும் மட்டும் புரிந்தது.
ஆனால், எனக்குள் திடீரென்று ஒதியாம்போவின் முகமும், அஞ்சன் ஸென்னின் முகமும் எழுந்ததன் காரணமென்ன என்பது மட்டும் இன்றுவரை புரியவில்லை. ஸென் வார்த்தைக்கு வார்த்தை இந்தியாவை ‘புண்ணியபூமி’ என்று சொல்வது நினைவில் வந்தது. நான் என்னுடைய மானசீகப் பிரார்த்தனையைத் தொடங்கினேன் – அந்தப் புலியிடம்தான்…
“…இதோ பார், இந்தப் பெண்மணி உனக்கான இரை இல்லை. இவள் உன்னிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடக்கூட முனையவில்லை. ஒருவேளை இவளைப் புசிப்பது என்று முடிவு செய்தாலும் வெறும் எலும்பாக நிற்கும் இவள் உன் பசிக்குப் போதமாட்டாள். அதற்காக, ‘நன்கு உருண்டு திரண்டு நிற்கிறேனே; என்னை எடுத்துக்கொள்’ என்று விண்ணப்பிக்குமளவு நான் புராணப் பாத்திரம் அல்ல; புண்ணியாத்மாவும் அல்ல. மனிதர்களைவிடவும் நல்லெண்ணம் அதிகம் கொண்டது புலி என்று ஒதியாம்போ அடிக்கடி சொல்வாரே – அதை நிரூபிக்கும் சந்தர்ப்பம் உனக்குக் கிடைத்திருக்கிறது. செய்து காட்டு. நீ இவளைத் தாக்காமல் விட்டுவிட்டால், நான் ஒரு வாக்குறுதி தருகிறேன். என் இறுதிநாட்களில், இந்தப் பிரதேசத்தில் வந்து குடியமர்கிறேன். அஞ்சன் சொல்கிறபடி இது புண்ணியபூமி என்பதால் அல்ல – நீ நடமாடிய இடத்தின் பவித்திரத்தை சுவாசிப்பதற்காக…”
சொல்வதற்குத்தான் இவ்வளவு நேரம் எடுக்கிறதே தவிர, மின்னல்வேகத்தில் எனக்குள் ஓடிக்கடந்த வாக்கியங்களின் சாராம்சம் இதுதான். ஊசலாடும் மனத்தின் திகைப்பும் பதற்றமும்; அது எத்தனை விசையுடன் பறக்கும் என்பதும், யாருக்கும் தெரிந்ததுதானே…
சில நிமிடங்கள் போயிருக்கலாம். சில மணிநேரம் போயிருக்கலாம். சில யுகங்கள்கூடக் கடந்திருக்கலாம். எங்கள் மூவரையும் இணைத்த முக்கோணத்தின் விஸ்தீரணம் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதே பின்னர்தான் எனக்கு உறைத்தது – எல்லாம் நடந்து முடிந்த பிறகு.
அவளுடைய பேச்சு நின்றுவிட்டது. இருவரும் கண்ணிமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். அவள் கண்ணை மூடிக்கொண்டாள். இதுவரை கேட்ட சன்ன ஒலிகூட அடங்கி, உதடுகள் மட்டும் நடுங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. இல்லை, அது நடுக்கமில்லை; ஏதோ உச்சாடனம்
காதுமடல்களை மட்டும் ஓரிரு தடவை அசைத்த புலி, திடீரென்று உறுமியது. என் முதுகுத்தண்டு கூசியது. அவள் கண் திறந்தாள். புலி முன்னால் ஓரடி எடுத்துவைத்தது.
“அதற்குப் பிறகுதான் அந்த விந்தை நிகழ்ந்தது.”
சாவகாசமாகத் திரும்பி, தன் வழியே நடந்தது புலி. இவள் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து, புலிபோன திக்கை வணங்கினாள். அவ்வளவு நேரம் நான் அங்கே இருந்ததையோ, அவள் வீழ்ந்து வணங்கிய அதே நொடியில் நானும் முழந்தாளிட்டுப் பிரார்த்தனை செய்தேன் என்பதையோ கவனித்திருக்க மாட்டாள் – கீழே கிடந்த சுள்ளிக்கட்டை எடுத்துத் தலையில் கிடத்திக்கொண்டு, சர்வ சாதாரணமாக எதிர்த்திக்கில் நடந்து போனாள். வழக்கமான, சரளமான, துரிதமற்ற நடை…
பொருட்களை வைத்திருந்த மரத்தடிக்குத் திரும்பினேன். இயல்பாக நடக்கமுடியாத அளவு கால்கள் நடுங்கின. அஞ்சன் ஸென் ஒருமுறை, அவர்கள் மாநில விஞ்ஞானி ஒருவரின் கண்டுபிடிப்பை வியந்து கூறிக்கொண்டிருந்தது நினைவு வந்தது – ‘மனிதர்கள் போலவே தாவரங்களுக்கும் உயிரும் உணர்வும் இருக்கிறது’ என்று கண்டறிந்து சொன்னாராம் அவர். ‘அவர் காலத்திய நிறவெறியின் காரணமாக நோபல் பரிசு மறுக்கப்பட்டவர்’ என்றும் சொன்னார்…
‘புலிகளுக்கும் நுட்பமான உணர்வோட்டம் இருக்கிறது போல’ என்று சேர்த்துக்கொண்டேன் நான். ஆமாம், திரும்பிப்போன புலியின் நடையில் அபூர்வமான சாந்தமும், அலாதியான பெருமிதமும் இருந்த மாதிரிப் பட்டது எனக்கு. வரமளிக்கிற யாருக்குமே உள்ளூர அப்படி இருக்கத்தானே செய்யும்!
5
“லண்டன் நெருங்குகிறது.”
என்றார். ‘அடடா, அதற்குள் வந்துவிட்டதே’ என்று தோன்றியது எனக்கு. ஆனால், அவர் இன்னும் இரண்டு வாக்கியங்கள் வைத்திருந்தார்:
“யதேச்சையான ஒரு ஒற்றுமையைச் சொல்லாமல் விட முடியாது, ஷாங்க்.. மேற்சொன்ன சம்பவம் நிகழ்ந்த தினமும் இதே பிப்ரவரி பத்தாம் தேதிதான். அதைவிட, மிஸ்டர். ஒதியாம்போ கிப்ரோட்டிச்சின் நினைவு தினம் இன்று..”
என்று சொல்லிவிட்டு, திரு.ஆடியபாதம் போலவே வயிறு குலுங்கச் சிரித்தார். ஒரு நாளில்தான் எவ்வளவு தற்செயல்கள் என்று விம்மியது என் மனம். அடக்கிக்கொண்டு,
“அடடே.”
என்றேன்
லண்டன் நிலையத்தில் வந்து நின்றது ரயில். அழுத்தமாய்க் கைகுலுக்கிவிட்டு இரண்டு கைகளிலும் முதுகிலும் பெட்டிகளும் சாமான் பைகளுமாக இறங்கி நடந்தார் ஜேக்கப் வில்லியம்ஸ்.
திடீரென்று என் முதுகில் சொடுக்கியது. இந்த நேரத்துக்கு இந்தியாவில் தகனம் நடந்து முடிந்திருக்கும். மைத்துனரின் மரணத்தை மறக்கடிக்கும் விதமாக இவ்வளவு நேரமும் உடன் இருந்துவிட்டு இறங்கிப்போகிறவரைப் பார்த்துக்கொண்டே நின்றேன்.
காரணம் தெரியாத கண்ணீர் பெருகி என் பார்வையை மறைக்கும் தறுவாயில், ஒரு கனவுபோலக் கூட்டத்தில் கரைந்து போனார் அவர்.
***
அருமை தம்பி
Very fist time I read a short story written Mr.Yuvan Chandrasekar.I got the experience of living in the dense forest of Thansania and made a trip to Himalayas. What a narration and style.I came to know the real king of forest is tiger not lion.
இவர் எழுதியவற்றில் என் முதல் வாசிப்பு இக் கதை.புலி விலங்கு மீதான புரிதல் என்னவென்று மனம் விரிகிற து.நன்று.
யுவனின் முதல் கதை வாசிப்பு, மிகச் சரளமாக அற்புதமாக எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை ஞாபகப்படுத்தியது, இங்கு யானைக்கு பதிலாக புலி ஆனால் கதைக்களம் முற்றிலும் வேறு. கதைப் போக்கில் வாழ்வானுபவங்களை பகிர்ந்திருக்கிறார், இலகுவாக நம்மை கதைக்குள் இட்டுச் செல்கிறார். உதாரணமாக ஜவ்வாது மணத்திலிருந்து, தன் மைத்துனர் ஆடியபாதத்தின் நினைவு வரும் இடம், என் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. உணவு மற்றும் மணம் நம் உணர்வுகளைத் தூண்டி மனதில் பலகாலமாய் உறங்கிக் கொண்டிருக்கும் நினைவுகளை தட்டி எழுப்பி, நம் அனுபவங்கள் அசை போடும், அது இந்தக் கதையிலும் நிகழ்ந்தது. இன்று காலை எழுந்ததிலிருந்து நண்பர்கள் பகின்ற புலியை ஒரு மூதாட்டி வரையும் காணொளி கண்ணில் வந்தபடி இருந்தது. காலையில் தேநீர் அருந்துகையில் படிப்பது வழக்கம், இன்று புதிதாக ஒன்றை படிப்போம் என்று வல்லினம் இணையதளத்தை சொடுக்கினேன். முதலில் கண்ணில் பட்டது யுவனின் கதை, ஒரு நல்ல அனுபவத்தை படித்த உணர்வு. ஒரு சில நிகழ்வுகள் விசித்திரமாக தான் இருக்கிறது புலியின் காணொளி பிறகு புலியின் கதை படித்தது.. எப்படி நிகழ்கிறது இவையெல்லாம். நம் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளும் முடிவில்லா சங்கிலித் தொடர்(பு)கள் தானோ !?
இவர் எழுதியவற்றில் என் முதல் வாசிப்பு இது . புலி விலங்கின் புரிதல் தேடி மனம் விரிகிறது. நன்று.
கதைக்காக கூட வில்லி, புலியிடம், “இவள் உனக்கான இரை இல்லை, என்னை எடுத்துக்கொள்” என்று இறைஞ்சுவது போலல்லாமல் எழுதிய அந்த நொடியிலேயே இக்கதை வேறு ஒரு தளத்திற்குச் சென்றுவிட்டது. பவித்திரமான தளத்திற்கு………..
அதிலும் கதையில் உள்ள அந்த எண்ணிலடங்கா தற்செயல்கள் எல்லாம், அனுபவித்தவர்களுக்கே உரித்தானவை.
கதைக்காக கூட வில்லி, புலியிடம், “இவள் உனக்கான இரை இல்லை, என்னை எடுத்துக்கொள்” என்று இறைஞ்சுவது போலல்லாமல் எழுதிய அந்த நொடியிலேயே இக்கதை வேறு ஒரு தளத்திற்குச் சென்றுவிட்டது. பவித்திரமான தளத்திற்கு………..
அதிலும் கதையில் உள்ள அந்த எண்ணிலடங்கா தற்செயல்கள் எல்லாம், அனுபவித்தவர்களுக்கே உரித்தானவை.