[1]
தல்ஸ்தோய் பற்றிய கூற்று ஒன்றுண்டு. ‘அவரின் படைப்புலகம் ஏன் அத்தனை யதார்த்தமாக இருக்கிறதென்றால் அது முழுவதும் அவரது கற்பனையால் கட்டமைக்கப்பட்டது.’ சிந்திக்க வைக்கும் வரி இது. ஒரு படைப்பை எப்போது நாம் நிஜ உலகிற்கு இணையாக நம்புகிறோம்? அதில் வரும் மனிதர்களை எந்தக் கணம் நாம் நெருங்கிக் கண்டவர்களாக உணர்கிறோம்.
உதாரணமாகப் போரும் அமைதியும் நாவலில் கோமகன் ராஸ்டாவ் எனும் கதாப்பாத்திரம் வருகிறது. அவரது இயல்பைக் குறிப்பிடுகையில் “நிதி திரட்டி நடத்தப்படும் பொது விருந்துகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எப்போதும் அவருக்கே தரப்படும். ஏனெனில் திரட்டப்படும் நிதியில் பற்றாக்குறை இருந்தால் தன் கைப்பணத்தைப் போட்டு விருந்தை நடத்திவிடுவார்.” எனக் கூறப்படுகிறது. பெரும் சொத்துகள் கொண்டவர். ஆனால் அனைத்தும் விரலிடுக்குகளில் வழிந்து வீணாவதை நினைத்து அவரது மனைவி சலித்துக்கொள்கிறார். பருமனான உடலும் மழித்த முகமும் காது வரை நீண்டிருக்கும் கிருதாவும் கழுத்தில் மடிப்புகளாக இருக்கும் தொங்கு சதையும் கொண்டவர்.
ஒரு கதாப்பாத்திரத்தைப் பற்றி கூறுகையில் இருவகையான சித்தரிப்புகளை தால்ஸ்தோய் தருகிறார். ஒன்று அவரது அக இயல்பு அடுத்து அவரது உருவத்தோற்றம். இரண்டும் ஓரிடத்தில் நம் மனதில் நுட்பமாக இணைந்து ஒரு ஜீவனுள்ள மனிதரை நம்மில் எழுப்புகிறது. உடனே நம் வாசிப்புமனம் அதை ஒரு நிஜ மனிதனாக உணர்ந்துகொள்கிறது. ஆசிரியர் அனைத்து விவரணைகளையும் தருவதில்லை. எது தனித்தன்மையானதோ அதை மட்டுமே சித்தரிக்கிறார். விவரணைகள் எவ்வளவு தனித்தன்மையாக இருக்கின்றனவோ நம் மனதில் உருவாகும் கதாப்பாத்திரமும் அத்தனை உயிரோட்டமாக நிகழ்கிறது.
ஆகவே புனைவில் யதார்த்தம் என நாம் நம்புவது ஒரு ஆளுமையின் அல்லது ஒரு சூழலின் மொத்த இயல்பிலிருந்து ஒரு குறப்பிட்டவற்றை மட்டும் கத்தரித்து எடுத்து தருவது. அதாவது ஒரு ஒழுங்குக்குள் வடிக்கப்பட்ட யதார்த்தம். நீர்ப்பாசி போல ஒரு முனையைத் தொட்டு எடுத்தால் மொத்தமாக இணைந்து வருவது. சரியாக நம்மை கற்பனை செய்ய வைக்கும் தோறும் யதார்தத்தன்மை மேலும் அதிகரிக்கிறது. அதாவது யதார்த்தம் என்பது நம் மனதில் நிகழ்கிறது. அதை நிகழ்த்தும் பொருட்டுத் தேவையான தகவல்களை மட்டும் தருகிறது படைப்பு.
இது வாசகனுக்கு மட்டுமல்ல படைப்பாளிக்கே பொருந்தும். தன் மனதில் புகைமூட்டமாக உள்ள ஒரு கதாப்பாத்திரத்தை அல்லது சூழலைச் சரியான சொற்கள் மூலம் தீண்டி அதை உருவம் கொள்ளச் செய்ய இந்த முறை உதவுகிறது. செவ்விலக்கிய நாவல்களில் யதார்த்தச் சித்தரிப்பு என்பது அரங்கைத் தயார் செய்வதைப் போல. அதன் மேல் தான் ஆடல் நிகழ்கிறது. அனைத்துப் புனைவுத் தருணங்களும் நிலை கொள்ள வலுவான அரங்கு தேவை.
ஆனால் இவ்வகையான யதார்த்தச் சித்தரிப்புக் கொண்ட படைப்புகள் அதன் உச்ச சாத்தியங்களை அடைந்ததும் அடுத்த கட்ட புனைவு வடிவங்களுக்கான தேடலைத் தொடங்கும். புனைவில் யதார்த்தம் என்பது வாசகனும் ஆசிரியரும் சந்திக்கும் புள்ளிக்காகத் தான் என்றால் ஏன் ஆசிரியர் யதார்தத்தை உடைத்து அப்புள்ளியை வேறு வகையில் நிகழ்த்தக் கூடாது என்கிற விவாதம் எழுந்தது. மேலும் புனைவு யதார்த்தம் என்பது வெறும் ஊர்தி தான், செல்லும் தூரமே அதன் வடிவத்தை முடிவு செய்ய வேண்டும் என்கிற தரப்பும் வலுப்பெற்றது. இதன் விளைவாக வெவ்வேறு வகையில் தன்னைப் பாவித்துக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் தோன்றின.
அவ்வகையில் நம் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நாவல் “தனிமையின் நூறாண்டுகள்.” வெளிப்படையாகவே கால இட போதத்தைக் கலைத்து தன் படைப்பை நிகழ்த்தியது. நேரடியாக ஒரு பழங்குடிக் கனவுமனம் தன் அகவெளிப்பாட்டை தனித்துவமான கூறுமுறை வழியாக அடைந்தது. அதன் சூழலில், பாத்திரங்களில், சம்பவங்களில் என அனைத்துக் கூறுகளிலும் அக்கனவுத்தன்மை இருந்தது. அதன் மூலம் நாம் லத்தீன் அமெரிக்க நாட்டின் ஆன்மாவை நெருங்கி அதன் பண்பாட்டு கலாச்சார சிடுக்குகளை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. மேலும் யதார்த்தச் சித்தரிப்பு தரமுடியாத கொண்டாடத்தை, அது மறுதலித்த காவியத்தன்மையை தன் கவித்துவத்தின் மூலம் அடைந்தது.
தமிழில் இரா.முருகன் தன் நாவல்கள் மூலம் அத்தகைய பின்நவீனத்துவ கதைக்கூறல் முறையை முயன்று வருகிறார். அரசூர் வம்சம், விஸ்வரூபம் என அவரது நாவல்களில் யதார்த்தத்தை மீறிய அம்சங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை நம்மால் காணமுடிகிறது.
[2]
மிளகு நாவல் முதன்மையாகப் பதினேழாம் நூற்றாண்டு கொங்கணிப் பகுதியில் ஆட்சி செய்த சென்னபைராதேவி ராணி காலகட்டத்தைத் தன் பிண்ணனியாகக் கொண்டுள்ளது. போர்துகீசுயர்களுடன் கொண்ட மிளகு வணிக உறவு, வாரிசாகச் சுவீகரித்துக் கொண்ட நேமிநாதன் ராணியின் ஆட்சியைக் கைப்பற்ற முயலுதல் என அதன் களம் விரிகிறது.
இரண்டு முக்கிய அம்சங்கள் இந்த நாவலைத் தனித்துவப்படுத்துகிறது. ஒன்று இதன் பின்நவீனத்துவ அணுகுமுறை. இருபதாம் நூற்றாண்டில் வாழும் கதாப்பாத்திரமான பரமன் என்கிற பரமேஸ்வர ஐயர் வரலாற்று காலகட்டத்துக்குள் நுழைந்து அங்குள்ள கதாப்பாத்திரங்களுடன் கொள்ளும் உறவுகள் என ஒரு சரடு நீள்கிறது. அதன் மூலமாக நாவல் நம்முள் ஒன்றை வெளிப்படையாக அறிவிக்கிறது. வழக்கமான நோக்கில் நாம் ‘வரலாற்று’ நாவலை வாசிக்கவில்லை. படைப்பாளி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு புனைவு வெளிக்காக அந்த வரலாற்றுக் காலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எப்படி அறிவியல் புனைகதையில் ஒரு விண்வெளி நகரம் பயன்படுத்தப்படுமோ அப்படி.
அதே சமயம் வரலாற்றைப் பற்றிய நம் புரிதலின் மேல் ஒரு மெல்லிய விமர்சனமும் இந்தப் காலப்பயணம் மூலம் வைக்கப்படுகிறது. வரலாற்று காலகட்டத்தைப் பற்றிய நம்முடைய கருத்தாடல்கள் எல்லாம் நமது அக்காலகட்டத்து மனமுதிர்சியைக் கொண்டே நிகழ்த்தப்படுகிறது. அதன் விடுபடல்களை அல்லது இடைவெளிகளை மறைமுகமாக உணர்த்திக் கொண்டே இருக்கிறது. உதாரணமாகப் பரமன் தன்னுடைய பதினேழாம் நூற்றாண்டு மகனுக்குக் காந்தியின் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைப் பற்றி சொல்கிறான். அதை கேட்கும் மனைவியால் அதை எவ்வகையிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ விந்தையான கதை என நினைத்துக் கொள்கிறாள். அதை வாசிக்கும் நாம் ஒரு சின்ன புன்னகையுடன் கடந்து செல்கிறோம். இன்று வரலாற்று காலகட்டம் சார்ந்து எழுதப்படும் பலவகையான ஊகங்களை நோக்கிய நேரடியான தொடர்பு அதில் இருப்பதை வாசகர் உணார்ந்துகொள்ள முடியும்.
மற்றொரு அம்சம் வரலாற்றைப் புனைவால் நிரப்புவது. பலவகையான சாத்தியங்களில் ஒன்று மட்டும் நிகழ்ந்து வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்பது நிகழாது போன வாய்ப்புகளும் சேர்ந்ததுதான். ஒரு நிகழ்வு எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்குகிறது. அதில் ஒன்று மட்டும் அடுத்த நிகழ்வாக மாறுகிறது. வெறும் சாத்தியங்களாக மட்டுமே இருந்தவற்றைப் புனைவு மூலம் நிகழ்த்திப் பார்க்கிறது இந்த நாவல். சென்னபைராதேவி இறுதிவரை திருமணமாகாமல் இறந்து விடுகறாள் என்பது வரலாறு. ஆனால் தன் இளவயதில் தனக்கான ஆணைக் கண்டு மேற்கொண்டு அவனோடு வாழ்வைத் தொடராமல் போன சாத்தியம் இருக்குமானால் அதை பரமன் என்கிற பாத்திரம் மூலம் நிகழ்த்திப் பார்க்கிறது. பரமனின் பிரதிகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் நுழைந்து வெவ்வேறு வகையான நிகழ்வுகளை உருவாக்குகின்றன. வரலாற்றின் இரக்கமின்மையைப் புனைவால் சமன்செய்யும் தருணங்களை இதில் நாம் காண முடிகிறது. புனைவு என்பதே வாழ்க்கையின் போதாமையை ஈடு செய்யும் வழிதான் எனக் கொண்டால் அதன் சாத்தியத்தை வரலாற்றின் மேலும் போட்டு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது இந்த நாவல்.
மேலே சொன்ன இரு அம்சங்களும் வெறும் இலக்கியக் கொள்கைத் தரப்புகளாக இல்லாமல் கலாபூர்வமாக நாவலில் இயைந்து வருகிறது. அதற்கு சான்று இந்த நாவலில் உள்ள உழைப்பு. சின்ன சின்ன தகவல்கள் மூலம் அந்த சரித்திரக் காலகட்டத்தை உருவாக்கிக் காட்டுகிறார். அதற்கு அவரது அபாரமான வாசிப்புப் பின்புலம் உதவுகிறது. நாவலின் ஆரம்பப் பகுதிகளில் ஒரு அத்தியாயம் முழுவதும் ஹொன்னாவர் மற்றும் ஜெருஸொப்பா நகரங்களில் ஒரு நாளைய நிகழ்வுகள் நுட்பமான விவரணைகளுடன் சித்தரிக்கப்படுகின்றன. அதன் மேல் தான் காலப்பயணமும் மாயயதார்த்தக் கூறுகளும் நிகழ்கின்றன.
இவ்வகையான அணுகுமுறைக்குப் பின்னுள்ள படைப்பாளியின் மனநிலையை நம்மால் நாவலை வாசிக்கையில் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. பழகித் தேய்ந்து போன பாதையில் நடக்க மறுத்து அப்பாதையில் முட்கிளைகளை வெட்டிப் போட்டு புதிய பாதையில் செல்லும் நாட்டம் கொண்டவராக இருக்கிறார். எளிதாக இதை ஒரு செவ்வியல் பாணியிலான வரலாற்று நாவலாக மாற்ற முடிந்திருக்கும். சிக்கவீர ராஜேந்திரன் நாவலைப் போல. அதற்காக ஆய்வுத் தகவல்களும் வாசிப்பும் இருப்பதை இந்த நாவலிலேயே பார்க்க முடிகிறது.
இருந்தும் வேண்டுமென்றே இருவேறு காலவரிசையில் நிகழும் வாழ்க்கையை இணைத்து தன் படைப்பூக்கத்தை நிகழ்த்துகிறார். அதன் மூலம் வரலாற்றை விளையாட்டுவெளியாக மாற்றிக் கையாள்கிறார். வரலாற்றிலிருந்து எந்த சாரத்தையும் எழுதிக் கண்டடையும் பொறுப்பைத் தனக்கு அவர் போட்டுக் கொள்வதில்லை. ஆனால் இந்த மீறல் அம்சம் எங்கும் துருத்தித் தெரியாமல் தன்னுடைய தனித்த அழகியல் மூலம் இயல்பான ஒருமையை நாவலுக்குள் நிகழ்துகிறார்.
[3]
இவ்வாறாக வரலாற்றை சிதறடித்துச் செல்லும் பின்நவீனத்துவ கதைக்கூறல் முறைமூலம் தனக்கேயான படிமங்களை நாவல் உண்டாக்குகிறது. இரண்டை முதன்மையாகக் கூறலாம். முதலாவது பேய்மிளகு எனும் படிமம். மிளகு வாங்குவதற்காக வரும் போர்துகீசிய அதிகாரி அதன் விளைச்சலை அதிகப்படுத்துவதற்காக ஒரு இந்திய விஞ்ஞானி மூலம் செய்யப்படும் பரிசோதனை தவறுதலாக முடிந்து பேய்மிளகாக மாறிவிடுகிறது. ஒரு நாளில் வீட்டையே சுற்றிப் படர்ந்து மூடிவிடுமளவுக்கு அதன் வளர்ச்சி அபயாகரமாகிறது. அந்த பேய்வளர்ச்சிக்கு உணவாக அருகில் வரும் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சி அது வளர்கிறது. நேமினாதனுக்குத் துணையாக வரும் நாயக்கர்களின் சூரையாடலுக்கு பயந்து தங்களின் வீடுகளின் நிலவறைகளில் பதுக்கி வைத்திருக்கும் செல்வங்களைப் பாதுகாக்க அந்தப் பேய்மிளகை விதைத்து விட்டு சென்றுவிடுகிறனர் ஜெருஸொப்பா நகர்மக்கள். காலங்காலமாக அச்செல்வங்கள் மீது எவர் கையும் பட்டுவிடாமல் பேய்மிளகு படர்ந்து கொள்கிறது. ஆம், புதையலைக் காக்கும் பூதத்தைப் போல. எந்த மிளகு அந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்ததோ, அதே மிளகு திரிந்து பேயாகி தன்னால் உருவான செல்வத்தை தீண்டவிடாமல் அதன் கருவறைக்குள் வைத்துக் கொள்கிறது. அனாதிகாலம் வரை. எங்கு நாம் பிறழ்ந்தோம் எப்படி நம் மிளகை திரிய விட்டோம் என பல கேள்விகளுக்கும் கற்பனைகளுக்கும் இட்டுச்செல்கிறது இப்படிமம்.
அடுத்த முக்கியப் படிமமும் மிளகு சார்ந்தது தான். இருபதாம் நூற்றாண்டில் வாழும் பரமனின் உறவினர் பலருக்கும் அவ்வப்போது மிளகு வாடை அடிக்கிறது. கூடவே ஒரு சிறுவனின் அழைப்பும் கேட்கிறது. அவன் பெயர் மஞ்சுநாதன். காலப்பயணம் செய்த பரமனின் மனைவி ரோகிணிக்கு பிறந்தவன். அச்சிறுவனைச் சுற்றிய ஒவ்வொருவரும் தங்களுக்கான திட்டங்களும் இலக்குகளும் இருப்பதை நாவல் விரிவாகக் காட்சிப்படுத்துகிறது. பரமன் தான் தவறி வந்த காலத்திலிருந்து திரும்பி விடுவதில் தான் குறியாக இருக்கிறான். அவன் மனைவியோ இன்னும் பெரிய திட்டத்தில் இருக்கிறாள். நேமினாதனை தூண்டி விட்டு போரின் மூலம் சென்னபைராதேவியின் அரசை முற்றிலும் அழிக்க நினைக்கிறான். அதற்குப் பின்னால் தன் தந்தையின் இறப்பு காரணமாக உள்ளது. இவ்வாறாக நடக்கிற போரின் பின்னே அனைவருக்கும் தங்களுக்கான கணக்குகள் இருக்கின்றன. அதன் நடுவே இழப்புகளை மட்டுமே கண்டு தனியாக விடப்பட்டவன் மஞ்சுநாதன். சுழலும் சமணப் பஸதியில் காலங்காலமாக தன்னைக் கண்டுகொள்ள ஏங்கும் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மஞ்சுனாதன் என்பவன் ஒரு பிரதி நிதி. அவனைப் போல இழப்புகளை மட்டுமே சந்தித்த ஆயிரக்கணக்கான மக்களின் கூக்குரலின் ஒரு துளி. அது குரலாக மட்டும் இல்லாமல் மிளகு மணமாகவும் வருவது நம்மை மேலும் அடுத்த கட்ட உணர்வெழுச்சிக்கு உட்படுத்துகிறது.
இவ்விரண்டு படிமங்களுக்குமான பொதுத்தன்மை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது. இரண்டுமே நாவல் உருவாக்கிய மாயயதார்த்த அழகியலில் இருந்து முளைத்து எழுந்தவை. மேலும் இதிலுள்ள அமானுஷ்யத்தன்மை அளிக்கும் தாக்கம் யதார்த்த படிமத்தை விட பலமடங்கு அதிகமானது. இவ்விரு படிமங்களிலும் உள்ள காலஎல்லைகளைத் தாண்டிய கைவிடப்படுதல் எனும் அம்சம் ஒருவகையான காவியத்தன்மையை இவற்றிற்கு வழங்குகிறது.
இவ்வகையான தாக்கத்தை ஒருபோதும் யதார்த்தவாத அழகியலில் நாம் பெற்றுக் கொள்ள முடியாது. அது தன் ஒவ்வொரு கணுவிற்கும் தர்க்கத்தைத் கோருவது. அந்தத் தர்க்க எல்லையைக் கிழித்துக் கொண்டு வரும் இவ்வகையான படிமங்கள் நேரடியான நம் கனவு மனதைத் தொடுபவை. இது வெளிப்படுத்தும் உண்மை மேலும் ஆழமும் செறிவும் கொண்டது. தன் கவித்துவத்தால் பன்முகத்தன்மை கொண்டது.
[4]
மேற்கூறிய அவதானிப்புகள் எல்லாம் ஒரு நாவலை வாசித்து முடித்து புத்தகத்தை மூடிவைத்தபின் மனதில் ஓட்டிப்பார்த்து நாம் வந்தடைபவை. ஆனால் நாவலை வாசிக்கையில் நம்மை அப்புனைவுலகிற்குள் பிணைத்து வைத்திருப்பது அதன் நுட்பங்கள்தான். கிட்டத்தட்ட 1200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலைச் சோற்வுறாமல் வாசிக்கச் செய்வது இதன் ஒவ்வொரு பக்கங்களில் வெளிப்படும் நுட்பங்கள்.
இரண்டு வகையான நுட்பங்களைக் கூறலாம். முதலாவது இதன் மொழிநடையில் வெளிப்படும் நுட்பம். உண்மையில் இந்த நாவலின் ஆசிரியரை அண்ணாந்து பார்த்து வியக்கச் செய்வது இந்த அம்சம்தான். இருவேறு காலங்கள். ஒவ்வொன்றிலும் பலபத்து கதைமாந்தர்கள். ஒவ்வொருவருக்குமான தனித்த பேச்சு முறை. அந்தந்த சூழலுக்கு ஏற்ற தனித்த மொழிநடை என ஒரு பெரிய மொழிக் கதம்ப வெளியை இந்த நாவலில் உருவாக்கியுள்ளார்.
உதாரணமாகப் போர் ஆரம்பிக்கவுள்ளது. அதைப் பற்றி இரு பிராமணர்கள் அவர்களது அக்ரஹாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். அச்சூழலைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.
“பிறந்த மருத்துவச்சி கையில் விழுந்த சிசுவுக்கு காலுக்கு நடுவே குஞ்சாமணி தட்டுப்பட்டால், சுபஸ்ய சீக்கிரம் என்றபடி, கூடிய சீக்கிரம் சுபமுகூர்த்தத்தில் காது குத்தல், நாமகரணம், சோறூண், அப்புறம் பூணூல் கல்யாணம்.” பிறந்த அடுத்த கணம் முதல் சடங்கு எனும் நீண்ட சங்கிலியால் பிணைக்கப்படுவதன் மெல்லிய கேலியைக் தனக்கேயான துள்ளலுடன் ஆசிரியர் கூறுகிறார்.
அதே போல் மோதக் என்கிற சிறிய கதாப்பாத்திரம் இருபதாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் வருகிறது. அவரைப் பற்றிய விவரணையில் இவ்வாறாக வருகிறது.
“மும்பை பம்பாயாக இருந்த 1960-களில் தொடங்கிய பரிச்சயம் அது. அப்போது மதராஸிகளை வெளியேற்ற நடைபெற்ற போராட்டத்தின்போது மோதக் புத்திளைஞன். பத்து நிமிஷம் முன் வந்த கல்யாண் தாதர் லோக்கல் ரயிலில் இடம் கிடைக்காமல் அடுத்த ஐந்தாவது நிமிடம் அடுத்த லோக்கலில் போகவேண்டி வந்தால் கூட, இது மதராஸி சதி என்று எதிர்த்துப் போராடக் கிளம்பி வந்த மராட்டிய வீரன் மோதக்.”
இப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒவ்வொரு சூழலுக்கும் பேச்சு வழக்கிலும் சித்தரிப்பிலும் அவர் கொண்ட விஸ்தீரணம் தமிழ் நாவலில் நிகழ்ந்துள்ள சாதனை எனக் கூறலாம்.
இவ்வனைத்து மொழி வேறுபாடுகளுக்கு அடியில் ஒற்றைப் பெருமனம் இருப்பதை இதிலுள்ள ஒற்றுமைகள் மூலம் கண்டுகொள்ள முடிகிறது. இரண்டு லௌகீக சக்திகள் இதன் அனைத்து வரலாற்று தருணங்களில் மோதுவதன் மூலம் அவ்வொற்றுமைகளை நாம் காண்கிறோம். ஒன்று உணவு அடுத்தது காமம். இரண்டுமே மனிதனின் ஆதார வேட்கைகள்.
இந்த நாவலில் கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகரான இருப்பு உணவுக்குத் தரப்பட்டுள்ளது. எத்தனை வகையான உணவுகள். விதவிதமான சந்தர்பங்களில் அவை இணைந்து எழுப்பும் உணர்வு நிலைகள் அபாரமானது. திரும்பிப் பார்க்கையில் நாவலில் வரும் ஒவ்வொரு சாதாரண சம்பவமும் உணவின் ஊடாட்டம் மூலம் காலம் கடந்து நிலைக்கிறது. அதைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் அக்காலத் தொடர்ச்சி மூலம் உருவாக்கப்படுகிறது.
அதே போலத்தான் காமமும். அக மற்றும் புறக் காமம். உணவைப் போலவே மனிதர்களுக்கு இடையேயன காமத் தொடர்புகள் மூலமும் எளிய அன்றாட லௌகீக உணர்வு உச்சப்படுத்தப்படுகிறது. எல்லா முக்கிய தருணங்களிலும் காற்றைப் போல் வெளியைப் போல் ஒரு நீங்கா இருப்பாக உணவும் காமமும் கலந்து இருக்கின்றன. வரலாற்று நாவல்களில் நாம் அரசியல் முடிவுகளுக்குத் தரும் அழுத்தம் அவ்வகையான முடிவுகளுக்குத் தள்ளுகிற “சிறிய”வைகளுக்கு தருவதில்லை. அதை இந்த நாவல் தொடர்ச்சியான பல புனைவுத் தருணங்களை உருவாக்கிக் காட்டுவதன் மூலம் நிகழ்த்துகிறது. நம் காலடி நிழல் எப்போது நம்முடனே இருந்து கொண்டிருக்கும் ஆதார உணர்வுகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்குப் பின்புலமாக நிற்பதைப் பார்க்கிறோம்.
இவ்விரு விஷயங்களும்தான் நாவலில் வரும் இருவேறு காலகட்டங்களுக்கு இணைப்பாகச் செயல்படுகிறது. இரு உலகங்களுக்கும் இடையே உணவும் உறவும் எவ்வாறு வேறுபட்டு இயங்கி வருகிறது எனப் பார்ப்பது நாவலின் அடுத்த கட்ட வாசிப்பிற்கு எடுத்துச் செல்கிறது. உறவுகளைப் பொறுத்த வரை ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புகள் என்பவை மனிதனின் அந்திமக்காலத்தில் இயல்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சின்ன சங்கரனுக்கு இரு பெண்களிடம் உறவு இருப்பதும் அதில் ஒருவர் வேறொருவருடன் திருமணமாகி விலகி இன்னொரு புதிய உறவில் இணைவது என உறவுப் பின்னல்கள் பெருகுவது குறிப்பாக லண்டன் போன்ற அயல் நாட்டுச் சூழல்களில் எவ்வளவு இயல்பாகப் பொருந்துகிறது என்கிற சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது நாவல்.
அதேபோல உணவு என்பது நிலவெல்லைகளைத் தாண்டி மனிதர்களுக்கு இடையே ஒரு இணைப்பு விசையாக இருப்பதையும் நாம் காண்கிறோம். மோதக் என்னும் கதாப்பாத்திரம் ஒவ்வொரு வருடமும் ஆலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் ஆலத்தியற்குப் பிரதமனுக்காகவே வருகிறான். அவ்வாறே மிளகு வியாபாரம் எப்படி உலகளாவிய வியாபாரமாகப் பரிணாமமிக்கிறது என்பதை மருது எனும் கதாப்பாத்திரம் மூலம் காணும் போது 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பெத்ரோ கதாப்பாத்திரத்தின் நீட்சியை மனம் வரைந்து கொள்கிறது. இந்த நாவலை உணவின் உலகளாவுதல் என்கிற கோணத்திலும் வாசிக்க முடியும். உணவைப் பற்றிய நுண்தகவல்களுக்காக ஒதுப்பட்ட பக்கங்களைக் கவனித்தால் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்த கொள்ளலாம்.
[5]
ஒரு செவ்வியல் கதைக்கூறல் முறையை உடைத்து மாற்று வழிகளைத் தேர்வு செய்யும் போது முதலில் கைவிட்டுப் போவது அதன் சாதனைகள். செவ்வியல் வடிவம் அடைந்த சாதனை என்பது நேரடியான வாழ்க்கையை ஆராயும் தன்மை. நம் வாழ்க்கையின் சிடுக்குகளை வெற்றிகளை சங்கடங்களை செறிவுபடுத்தி இறுதியாக அதன் பெறுமதி என்ன என்று அளவிட்டுப் பார்ப்பது. அதன் மூலம் நமக்கேயென ஒரு தனிப்பட்ட அறிதலை அந்தப் படைப்பில் கண்டுகொள்வது.
இந்த அறிவார்ந்த தன்மை செவ்வியல்பாணியிலான நாவல்களின் பலம். அது வாழ்க்கையைத் தத்துவப்படுத்திப் பார்க்கிறது. எந்தத் தத்துவப்படுத்தலுக்கும் தர்க்கம் மிக அவசியமான ஒன்று. அதை நிராகரித்துப் புனைவு உத்திகள் மூலம் விளையாட்டாக்கி நிகழ்வுகளைக் கொண்டாட்டப்படுத்துவது மூலம் உணர்வுகளைப் பிரதானப்படுத்துகிறது இவ்வாறான மாற்றுக் கதைக்கூறல் முறைகள்.
இந்த நிலைப்பாட்டுக்குக் காரணமாகச் சொல்லப்படுவது ‘எந்த தத்துவப்படுத்தல்களும் ஒரு அதிகாரத்தை எழுப்புகிறது. எந்த அதிகாரமும் ஒற்றைத்தன்மை கொண்டது. ஆகவே பின் நவீனத்துவ கதைக்கூறல் முறை எதையும் உருவாக்குவதில்லை. அது புனைவு தரும் கொண்டாட்டத்தை மட்டுமே முன்வைக்கிறது.’ என்கிறது வாதம். ஆனால் படைப்பு என்பதே ஒன்றை உருவாக்குவதுதானே. அது ஒற்றைத்தன்மை கொண்டு விடாமல் இருக்க அதற்கு நேரெதிரான தரப்பும் அதே வீரியத்துடன் அப்படைப்பில் செயல்படுமானால் அச்சிக்கல் எழாது. விஷ்ணுபுரம் போன்ற நாவல்கள் வெற்றிகரமாக அதை செய்து காட்டியிருக்கின்றன.
அத்தகைய முயற்சி எதையும் இந்த நாவல் எடுக்கவில்லை. இந்த நாவலின் பிரதானக் கதையோட்டம் முன்வைக்கும் மைய தத்துவச் சிக்கல் என்ன? நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆட்சி செய்யும் சென்னபைராதேவி தன் ஆட்சியைத் தன் வாரிசுக்குக் கொடுக்க மறுக்கிறாள். கிட்டத்தட்ட மக்களனைவரும் அவன் மகன் நேமினாதனுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நாட்டின் வளமனைத்தும் சமண பஸதிகள் கட்டுவதில் வீணாக செலவழிக்கிறார்கள் என்பது அவர்களின் தரப்பு. ஆனால் சென்னாவோ கோவில் கட்டும் பணி பெரும்பாலும் பணக்காரர்களால் நிதி அளித்து செய்யப்படுவதாகக் கூறுகிறாள். ஆனால் அடிப்படை வசதிகளின்றி மக்கள் இறக்கும் காட்சியும் நாவலில் வருகிறது. அதே சமயம் ஓரிடத்தில் மக்கள் போர் வருவதற்குப் பயந்து தங்களின் சொத்துக்களை விற்று தங்கமாக்கி நிலத்தில் பதுக்கி வைக்கிறார்களென்றும் நாட்டின் நிலைமைச் சீர்கெட அதுவே காரணமென்றும் சென்னா கூறுகிறாள்.
நாவலின் மையத்தில் உள்ள தத்துவச் சிக்கல் இது. உண்மையில் எது சென்னபைரா தேவியின் அரசைச் சரித்தது. அவரின் மூர்க்கமான சமயப் பற்றா? நேமிநாதனின் அதிகார ஆசையா? மக்களின் அதீத பதுக்கல் மனப்பான்மையா? அல்லது அனைவருக்குள் இருக்கும் அழிவை நோக்கிய கூட்டு விருப்பமா? நாவலை இன்னும் ஆழம் நோக்கி செல்ல வைக்கும் புள்ளி இது. எந்த செவ்வியல் வடிவ நாவலும் அப்புள்ளி நோக்கி தன் கவனத்தைக் குவித்திருக்கும். அச்சவாலை இந்த நாவல் எதிர்கொள்ளவில்லை. அனைத்துத் தரப்புகளையும் வெறும் தகவல்களாகச் சொல்லிக் கடந்து சென்றுவிடுகிறது. எளிய நாவல் வடிவில் இக்கேள்வியை நாம் எழுப்பியிருக்க மாட்டோம். ஆனால் இது பெரு நாவல் எனத் தன்னை பாவித்துக் கொள்கிறது. அப்படியென்றால் இவ்வளவு பெரிய விடுபடல் நாவலைக் குறையுடையதாக்குகிறது.
மேலும் நாவல் முழுக்க இந்தத் தொட்டுத் தாவும் போக்கைக் காண முடிகிறது. எங்கெல்லாம் ஒரு இக்கட்டு நேர வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லம் நாவல் அதை சிறு எள்ளலுடன் தாவிச் சென்று விடுகிறது.
நாவலின் இன்னொரு முக்கிய போதாமை என்பது இது உண்டாக்கும் மொழிவலையில் மாட்டிக் கொள்வது. உதாரணமாக மனிதர்களுக்கு இடையேயான அதீத பாலியல் ஈர்ப்புகள் என்பது இப்படைப்பு தொடர்ந்து முன்னெடுத்திச் செல்லும் சரடு. இதன் பல்வேறு நிற பேதங்கள் இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கையில் அழகாக வெளிப்படுகிறது. ஆனால் சென்னபைராதேவி அரசுக் காலகட்டத்தில் காட்டப்படும் ஈர்ப்புகள் கலையழகுடன் எழவில்லை. பல இடங்களில் வெறும் அதிர்ச்சி வாக்கியங்களாக அல்லது வெற்று விமர்சனங்களாக அவை உள்ளன. பெத்ரோவும் நேமினாதனும் முறையே கஸாண்ராவாலும் ரோகிணியாலும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்குள் எழும் காம உணார்வுகள் அத்தகையவையாக உள்ளன. இதைச் சின்ன சங்கரன் வாழ்க்கையில் வரும் பெண்களுடன் ஒப்பிட்டால் உணர்ந்து கொள்ளலாம். சாரதா, தெரிசா மற்றும் வசந்தியுடன் அவர் கொள்ளும் உறவில் உள்ள நுட்பம் வரலாற்றுக் காலகட்டத்தில் நிகழும் உறவுகளில் இல்லை. இந்தச் சறுக்கலுக்குக் காரணமென்பது நாவல் அத்தருணங்களில் கொண்டிருக்கும் நையாண்டி மொழியாக இருக்கலாம்.
[6]
நவீனத்துவத்துவத்திற்குப் பின்பு எழுத வந்த படைப்பாளிகளில் புனைவு வடிவத்தைப் பிரக்ஞைபூர்வமாக உடைத்து எழுதியவர்களில் முதன்மை இடம் யுவன் சந்திரசேகருக்கு உண்டு. அவருடைய “குள்ளச் சித்தன் சரித்திரம்” அவ்வாறானது. நாம் காணும் அன்றாட யதார்தத்திற்கு அடியில் மாற்று யதார்த்தம் இருக்கும் வாய்ப்பைத் தன் புனைவின் மூலம் வாழ்க்கையாகச் சித்தரித்துக் காட்டுகிறது. அதை “மாற்று மெய்மை” என்கிற வார்த்தையால் விமர்சகர்கள் சுட்டுகிறார்கள்.
இரா.முருகனின் “மிளகு” நாவல் இதே அணுகுமுறையை வரலாற்றுக்குப் போட்டுப் பார்க்கிறது. சரித்திர நூல்கள் உருவாக்கி நிறுத்தும் வரலாறுக்கு இணையாக இன்னொரு வரலாற்றை எழுதிக் காட்டுகிறது. ஆனால் இதையும் ஒரு சாத்தியம் என்கிற பிரக்ஞையுடன் செய்கிறது. ஆகவே அதை ஒரு வரலாற்று அதிபுனைவு என்கிற ஒரு விளையாட்டு வெளியாக மாற்றிப் பார்க்கிறது.
வாழ்வை ஆராய்தல் எனும் நிலையிலிருந்து விலகி அனைத்தையும் கற்பனைக்கான கச்சாப்பொருளாக மட்டும் எடுத்துக் கொள்ளும் போது இந்த விளையாட்டாக்குதல் நிகழ்கிறது.
சிந்தனை மனிதனின் தனித்தன்மை என்கிறது அறிவுத்தரப்பு. ஆனால் ஒவ்வொரு சிந்தனையும் இருண்மையை நோக்கி நகரும்போது ஒரு புனைவாசிரியன் வந்து கூறவேண்டியிருக்கிறது. “அதைவிட மேலான தனித்தன்மை அவனுக்குத் தரப்படுள்ளது அது கற்பனை.”
அப்படிக் கற்பனையின் மடியில் தஞ்சம் புகும் ஒரு வரலாற்று அதிபுனைவாகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறது மிளகு. கலைத்துப் போடுவதின்(போடுவதன்) மூலம் வாழ்கையின் வரலாற்றின் இருண்மையைக் கடக்கிறது. அதில் சென்னபைராதேவியின் வீழ்ச்சிக்கு இணையாகப் பரமன் புதிதாகக் கண்டுபிடிக்கும் ‘ஜயவிஜயீவ’ எனும் இனிப்பு வகையின் மதுரமும் வைக்கப்படுகிறது.
அவ்வகையில் புதியவகைக் கதைக்கூறலுக்கான வாழ்க்கைப் பார்வைக்கான ஒரு ஜன்னலைத் திறந்துவிட்டிருக்கிறார் இரா.முருகன். அதன் வழியாகத் தெரியும் வானத்தின் வண்ணங்கள் நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வாசகர்களான நம்மைக் கோருகிறார்.
அன்புள்ள பாலாஜி பிருத்விராஜ்
ஆழமும் அடர்த்தியும் விரிவும் கொண்ட மதிப்பீட்டுக் கட்டுரையை மிளகு பெருநாவல் குறித்து எழுதியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் பல நிறைகளுக்கும் நன்றியுடையேன். நிறையல்லாதவற்றை சாவகாசமாக விவாதிப்போம். என் வாழ்த்துகள்
இரா.முருகன் eramurukan@gmail.com
Era.Murukan testing comment entry