நவீனத்துவ தமிழ் இலக்கியத்தில் புனைவாக்கச் செயல்பாடு என்பது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. நவீனத்துவ புனைவுகள் நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதன்வழியே வாசகனுக்குப் புனைவின் நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளிக்கின்றன. சிறுகதைகள் குறைந்த அளவு சம்பவங்களைக் கொண்டு வாசகனுக்கு அவ்வனுபவத்தைச் சாத்தியப்படுத்த முயலுகையில், நாவல்களோ பல்வேறு சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்து உருவாக்கும் விரிவான வாழ்க்கைச் சித்திரத்தின் வழியே வாசகனை அவ்வனுபவத்தை நோக்கி அழைத்துச் செல்ல முயல்கின்றன. இத்தகைய நிகழ்வுகளின் அடிப்படையிலான அழகியலுக்கு மாற்றாகவே பின்நவீனத்துவ நாவல்கள் நிகழ்வுகளின் பன்முகத்தன்மையை முன்வைக்கின்றன. இத்தகைய மாற்று அழகியல் படைப்புகளுள் பிரதானமானவை எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புகள். அவரது நாவல்கள் நிகழ்வுகளால் நிறைக்கப்படுபவை அல்ல. அவை நிகழ்வுகளை அவற்றின் பல்வேறு கோணங்களில் இருந்து அணுக முயலுபவை. ஒரு சிறு வைரத்தின் பல முகங்களைக் காண்பது போன்ற அனுபவத்தை அளிப்பவை எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புகள்.
அவரது சமீபத்திய நாவலான எண்கோண மனிதன் இத்தகைய நிகழ்வுகளின் பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே தனது மாற்று மெய்மை சார்ந்த கேள்விகளைச் ஒரு சுவாரசியமான துப்பறியும் விளையாட்டின் தன்மையோடு அணுகுகிறது. எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் பிற படைப்புகளைப் போலவே இந்நாவலின் கதைக்கருவையும் எளிமையாக விளக்குவது சாத்தியமற்றது. தன் வாழ்வின் உச்சத்தை நோக்கிய பயணத்தில் மர்மமான முறையில் காணாமல் போன சோமன் என்ற இசை/நாடகக்கலைஞரின் வாழ்வை அவரது வாழ்வோடு தொடர்புடைய பலரின் அனுபவங்களின் வழியே அறிய முற்படும் சம்பந்த மூர்த்தியின் பயணமே எண்கோண மனிதன் என்று வேண்டுமானால் கட்டுரையின் வசதிக்காகப் புரிந்துகொள்ளலாம்.
தான் பிறந்த அதே நாளில் அதே நேரத்தில் அதே இடத்தில் பிறந்த தன்னைப் போன்ற உருவம் கொண்ட சோமனைப் பற்றிய சம்பந்த மூர்த்தியின் தேடல் ஒரு துப்பறியும் கதையின் சுவாரசியத்தோடு மனித மனத்தின் ஆழங்களை நோக்கி விரிகிறது. அத்தேடலின் வழியே சம்பந்த மூர்த்தி சந்திக்கும் மனிதர்கள் விவரிக்கும் சோமன் ஒரு தனியாளுமையாக இன்றி பிளவுபட்ட மனங்களின் கூட்டுத் தொகையாகவே நாவலில் வெளிப்படுகிறார்.
சோமனின் ஆளுமையில் வெளிப்படும் முரண்களையும் பிளவுபட்ட தன்மையையும் கட்டமைக்க நாவல் கையாளும் கூறுமுறை சுவாரசியமானது. பல்வேறு கதைசொல்லிகளின் அனுபவங்களின் வழியே முரண்கள் நிறைந்த கதையாடல்களைக் கட்டமைத்து அதன் வழியே மையக்கதாபாத்திரத்தின் ஆளுமையைப் பிளவுண்டதாகவும் முரண்கள் நிறைந்ததாகவும் கட்டமைக்கும் யுக்தி (Rashomon effect) தமிழ் நாவல்களில் ஜே. ஜே. சில குறிப்புகளில் தொடங்கி பல முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எண்கோண மனிதனின் கதையாடல்களில் நிகழும் முரண்களை உருவாக்குவதில் அவற்றை முன்வைக்கும் கதாபாத்திரங்களின் ஆளுமைகள் மட்டுமின்றி காலமும் முக்கியப் பங்காற்றுகிறது. சோமனின் வாழ்க்கையை நினைவுகூரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் சோமனின் மறைவுக்குப் பிறகு குறைந்தது கால் நூற்றாண்டுகளைக் கடந்து விட்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் முதியவர்களாகவும், நினைவுகளை மீட்டெடுப்பதில் சிரமம் உடையவர்களாகவும், ஒன்றிலிருந்து மற்றொன்றாக எண்ணங்களின் போக்கில் அவர்களின் நினைவுகளைக் கூறுபவர்களாகவும் இருக்கிறார்கள். சிலர் நேரடியாகவே தங்களது நினைவாற்றலை நம்பவியலாது என்ற ஒப்புதலோடுதான் அவர்களது அனுபவங்களைக் கூற முற்படுகிறார்கள்.
நாவலில் கையாளப்படும் நேரியல்பற்ற கதையாடால் முறையும் (non-linear narration) கதாபாத்திரங்களின் நினைவுகளில் நிகழும் காலக்குழப்பங்களும் அவ்வகையில் நாவலின் புனைவு வெளிக்கு பொருத்தமானதாகவே உள்ளது. புறவயமான பௌதீக காலத்தின் விதிகளுக்குள் கட்டுண்டுவிடாத அகவயமான காலமே இந்த நாவலில் வெளிப்படுகிறது. சோமனின் வாழ்க்கையை நினைவுகூரும் கதாபாத்திரங்கள் நாவலின் புறவயமான காலத்தின்படி 1960களில் அவர்களது முதுமையிலும், அவர்கள் நினைவுகூரும் நிகழ்வுகளின் காலத்தில் 1930களில் சோமனைச் சந்தித்த அவர்களது இளமையிலும், அவர்களது நினைவுகள் கிருஷ்ணனை அடைகையில் 2000த்தின் பிற்பகுதிகளிலும், வாசகனை அடைகையில் அவை நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்து 2020களிலுமாக ஒரே தருணத்தில் பல காலங்களில் வெளிப்படுகிறார்கள். இத்தகைய புனைவு வெளியில் அவர்களது காலம் முழுக்க அகவயமானதாகவே மாறிவிடுகிறது. எனவே புறவயமான கால வரையறையின் (chronology) ஒழுங்குகளும் வரலாற்று மைய வாதங்களும் (historicity) இந்நாவலில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
இத்தகைய காலத்தால் சிதைவுண்ட கதாபாத்திரங்களின் நம்பகத் தன்மையற்ற நினைவுகள் இக்கதாபாத்திரங்களால் வாசகனிடம் நேரடியாக முன்வைக்கப்படுவதில்லை. அவை சம்பந்த மூர்த்தியால் பதிவு செய்யப்பட்டு அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு சம்பந்த மூர்த்தியின் முதுமையில் நேரடியாகவும், குறிப்புகளாகவும், ஒளிப்பதிவுகளாகவும் அவரது மருமகனான கிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டு அவர் வழியாகவே வாசகனை வந்தடைகின்றன. இந்த நினைவுப் பாதையில் வாசகனை வந்தடையும் சோமனின் வாழ்வைப் பற்றிய தகவல்களில் விடுபட்டவையும் கதாபாத்திரங்களால் இணைக்கப்பட்டவையும் உண்மையும் கற்பனையும் பிரித்தறிய முடியாதபடி கலந்துவிட்டிருக்கின்றன. ஒரு விமர்சனத்தின் பகுதியாக வாசிக்கையில் குழப்பமான புனைவு யுக்தியாக தோன்றக்கூடிய இக்கூறுமுறைகள் யாவும் நாவலில் அதன் சுவாரசியத்தைப் பன்மடங்காக்கவே உதவுகின்றன. கதாபாத்திரங்களின் கூற்றுக்களை வாசகன் நேரடியாக நம்பும்படி வற்புறுத்தாமல் அவற்றை ஆராய்ந்து தன் சிந்தனையின் அடிப்படையிலேயே அவற்றை அணுக நாவல் இடமளிக்கிறது. அவ்வாறான அணுகுமுறையில் நாம் நாவலோடு நேரடியாக உரையாட முடிகிறது. அது வாசகனை நாவலின் சக படைப்பாளியாகவும், சக கதாபாத்திரமாகவும் மாற்றுகிறது.
எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் புனைவுலகின் பிரதான கதாபாத்திரங்களுள் ஒருவரான கிருஷ்ணனே இந்நாவலின் முதன்மை கதைசொல்லி. கிருஷ்ணனின் கதாபாத்திரம் தான் இடம்பெறும் புனைவு வெளியின் தன்மைக்கு ஏற்ப மாறக்கூடியது. கிருஷ்ணன் பெரும்பாலும் புனைவாசிரியரின் meta வெளிப்பாடாகவே நாவலில் வெளிப்பட்டாலும் இந்த நாவலின் புனைவு வெளியில் நாம் சந்திக்கும் கிருஷ்ணன் ஆசிரியரின் முந்தைய புனைவுகளில் இடம்பெற்ற கிருஷ்ணனின் நினைவுகளைக் கொண்ட புதிய ஆளுமையே. ஒவ்வொரு படைப்பிலும் கிருஷ்ணன் அடையும் மாற்றங்களைப் படைப்புகள் வழியே புனைவாசிரியர் அடையும் மாற்றங்களின் பிரதிபலிப்பாகவும் காணலாம். இந்த நாவலின் புனைவு வெளியில் நாம் சந்திக்கும் கிருஷ்ணன் நாவலின் தன்மைக்கு ஏற்ப பிளவுபட்ட ஆளுமையாகவே உள்ளார். நாவலின் சம்பவங்களும் சோமனைப் பற்றிய கதாபாத்திரங்களின் கதையாடல்களும் கிருஷ்ணனின் பார்வைக் கோணத்தின் வழியாகவே வாசகனை வந்தடைகின்றன. அவ்வாறான ஒரு பிரதான கதாபாத்திரம் பிளவுபட்ட தன்மையைக் கொண்டிருப்பது நாவலை மேலும் சுவாரசியமாக்குகிறது. நாம் கிருஷ்ணனின் வழியே அடையும் தகவல்களில் கிருஷ்ணனின் ஆளுமையும் கலந்தே இருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்குள் வாழ்ந்து மறைந்த சம்பந்தமூர்த்தியின் வாழ்வையும், அதன் வழியே அவரால் பின்தொடரப்பட்ட சோமனின் வாழ்வையும் பற்றி நாம் கிருஷ்ணனின் வழியே அடையும் தகவல்களில் தென்படும் முரண்களுக்கும், சிதறுண்ட தன்மைக்கும் அத்தகவல்களை அளிக்கும் கதாப்பாத்திரங்களின் ஆளுமைகளின் அளவுக்கே கிருஷ்ணனின் ஆளுமையும் காரணமாக இருப்பதற்கான சாத்தியங்களை இந்நாவல் வழங்குகிறது. நாவலின் தகவல்களை வாசகனுக்கு நேரடியாக அளிக்கும் கதாபாத்திரத்தின் ஆளுமையை இவ்வாறு வடிவமைப்பதன் வழியே நாவல் புதிய சாத்தியங்களை அடைகிறது.
நாவலின் புனைவு எல்லைகளை வரையறுக்கும் ஆசிரியரின் குறுக்கீடு எனும் அளவில் முன்னுரையோ முடிவுரையோ எழுதப்படவில்லை. இதனால் நாவலின் புனைவு வெளியில் புனைவாசிரியனாக வெளிப்படும் கதாபாத்திரமான கிருஷ்ணனே புனைவு வெளிக்கு அப்பால் வாசகன் வாசித்துக் கொண்டிருக்கும் நாவலைப் பற்றிய மேலதிக புரிதல்களையும் வாசகனுக்கு அளிக்கிறார். பிரதியை அணுக பிரதியின் புனைவு வெளியில் உள்ள கதாபாத்திரத்தின் உதவியை வாசகன் நாடுகையில் வாசகனின் உலகிற்கும் புனைவின் உலகிற்கும் இடையில் உள்ள இடைவெளி மறைந்துவிடுகிறது. இத்தகைய புனைவு யுக்தி வாசகன் புனைவு வெளியில் வாழ்வது போன்ற நிகர் வாழ்க்கை அனுபவத்தையும் அல்லது இப்புனைவு வாசகனின் உலகில் நிகழ்வது போன்ற மயக்கத்தையும் ஒருசேர உருவாக்குகிறது. ஆனால் புனைவு அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் வாசித்துக் கொண்டிருக்கும் நாவலை முழுவதுமாக அணுக முயற்சிக்கும் வாசகன், தான் வாசித்துக்கொண்டிருப்பது எழுத்தாளர் கிருஷ்ணனால் எழுதப்பட்ட எண்கோண மனிதன் எனும் சம்பந்தமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்று நூல் எனும் முடிவை அடையக்கூடும். இத்தகைய முரண்கள் கொண்ட கிருஷ்ணனின் ஆளுமையைக் கட்டமைப்பதன் வழியாகவே நாவல் அதன் புனைவு சாத்தியங்களின் உச்சத்தை நாவலின் முடிவில் அடைகிறது. அவ்வாறு அடைகையில் கிருஷ்ணனின் பாத்திரப்படைப்பு நாவலைச் சுவாரஸ்யமாக்கும் புனைவு யுக்தியாக மட்டுமின்றி நாவலின் ஆதாரமான கேள்விகளுக்கும் நெருக்கமானதாகிவிடுகிறது.
நாவலில் கையாளப்படும் வடிவச் சோதனைகளுள் மற்றொரு சுவாரசியமான சோதனையாக அமைவது நாவலில் இடம்பெறும் அடிக்குறிப்புகளின் பயன்பாடு. நாவலின் மையக் கதையோட்டத்திற்கு இணையாகவே ஒவ்வொரு அத்தியாத்திலும் இக்குறிப்புகள் இடம்பெறுகின்றன. இக்குறிப்புகள் நாவலின் மையக் கதையாடலுக்குத் தேவையான மேலதிக தகவல்களை அளிப்பதோடு மட்டும் நில்லாமல் மையக் கதையாடலுக்கு நிகரான மாற்று கதையாடல்களையும் பல தருணங்களில் அளிக்கின்றன. மையக் கதையாடலில் இடம்பெறும் தகவல்களின் நம்பகத்தன்மையையும் சில இடங்களில் கேள்விக்குள்ளாக்குகின்றன. அனைத்திற்கும் மேலாக அவை ஆசிரியனின் (கிருஷ்ணனின்) இருப்பை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. நாம் நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கு பெறுவதில்லை என்பதையும் அவை பல்வேறு கதைசொல்லிகளின் வழியே நம்மை வந்தடைகின்றன என்பதையும் உணர்த்துகின்றன. அவ்வாறு அவை நம்மை வந்தடைகையில் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது என்பதையும் அவற்றுள் பிழைகளுக்கான சாத்தியங்கள் மிகுந்திருக்கின்றன என்பதையும் அக்குறிப்புகள் நமக்கு தொடர்ந்து உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. இதனால் வாசகன் நாவலின் எந்தப் பகுதியிலும் இந்நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து அடைய வேண்டிய நிகர் வாழ்க்கை அனுபவம் தடைபடுவதில்லை. ஆனால் அவ்வாறான நிகர் வாழ்க்கை அனுபவத்திற்குப் பிறகும் அவ்வனுபவத்தை வாசகன் தன் அகத்தில் மீள் ஆய்வு செய்து பார்க்க இக்குறிப்புகள் வாசகனைத் தூண்டுகின்றன.
நாவலின் முதல் அத்தியாயத்தில் கிருஷ்ணன் அளிக்கும் தன் குறுநாவலைப் பற்றிய குறிப்புகளில் தொடங்கி நாவலில் முழுவதும் ஊடுபிரதித் தன்மை (intertextuality) வெளிப்படுகிறது. அது வெறும் புனைவு யுக்தியாக மட்டுமின்றி நாவலின் சம்பவங்களுக்கு மேலும் பொருள் சேர்க்கிறது. நவீன திரைப்படங்களிலும் மெய்நிகர் விளையாட்டுகளிலும் அத்திரைப்பட/ மெய்நிகர் விளையாட்டு வரிசையின் முந்தைய அத்தியாயங்களின் ரசிகர்கள் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய easter eggs எனும் நுண்தகவல்களைக் காட்சியினுள் மறைத்து வைத்து அவற்றை ரசிகர்கள் கண்டுபிடிப்பது அத்தொடர்களின் சுவாரசியத்தைக் கூட்டவும் அவை பார்வையாளர்களோடு பிரத்தியேகமாக உரையாடலை நிகழ்த்தவும் உதவக்கூடிய ஒரு திரை யுக்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இலக்கியத்தின் ஊடு பிரதித் தன்மை என்பது வெறும் புனைவு யுக்தியாக மட்டுமின்றி பிரதிக்கு மேலும் ஆழமும், நுட்பமும், பொருளும் சேர்க்கவே பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஊடுபிரதித்தன்மையின் புதிய சாத்தியங்களை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் இந்த நாவலில் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார். நாவலின் முதல் அத்தியாயத்தில் கிருஷ்ணன் தான் முன்னர் எழுதிய குறுநாவலைப் பற்றி அளிக்கும் சில குறிப்புகளையே நாவலின் மேற்கூறப்பட்ட ஊடுபிரதித் தன்மைக்கான சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அக்குறிப்புகள் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புகளை அறிந்தவர்களுக்கு காணாமல் போனவர்களின் கடிதங்கள் எனும் அவரது குறுநாவலை நினைவுபடுத்துவதன் வழியே இந்த நாவலை அணுக தேவையான சில அவசியமான புரிதல்களை அளிக்கின்றன. அதே நேரத்தில் அவ்வாறு பரிட்சயம் இல்லாத வாசகனுக்கு அக்குறிப்புகள் மேலும் சுவாரசியமான ஒரு அனுபவத்தை அளிக்கின்றன. முதல் வாசிப்பில் பொருள்படாத அக்குறிப்புகளின் உட்பொருளை நாவலின் முடிவில் வாசகன் உணர்கையில் நாவல் வாசகனுள் மேலும் பன்மடங்காக வளரத் தொடங்குகிறது.
இவ்வாறு நாவல் முழுவதும் விரவியிருக்கும் வடிவம் சார்ந்த புதுமைகளும் கூறுமுறை சார்ந்த சோதனைகளும் நாவலை வாசகனோடு நேரடியாக உரையாடக்கூடிய பிரதியாக (interactive text) மாற்றுகிறது. இத்தகைய உரையாடல்களின் வழியே நாவல் வாசகனின் அகத்தில் தன்னிச்சையாக வளர்கிறது. நாவலை உரையாடலுக்கு இடமற்ற இறுக்கமான பிரதியாக இல்லாமல் வாசகனுடைய அகத்திலேயே உருவாகி வருவது போன்ற உணர்வை அளிக்கக் கூடிய பிரதியாக இப்புதுமைகள் மாற்றுகின்றன. ஆனால் இக்கூறுமுறைகளில் மயங்கி வாசகன் நாவலின் ஆதாரமான மெய்மை சார்ந்த கேள்விகளைத் தவறவிடக்கூடிய ஆபத்தும் நாவலில் உள்ளது. அவ்வாறு தவறவிடும் வாசகன் நாவலின் அசலான கலை வெற்றியையும் ஆழத்தையும் முழுமையாக அடைவதிலிருந்து தடைபட்டுவிடக்கூடும்.
நாவலில் சோமனைப் பற்றிய சம்பந்த மூர்த்தியின் தேடலும் அதை பின்தொடரும் கிருஷ்ணனின் தேடலும் ஒரு கட்டத்தில் கால எல்லைகளைக் கடந்து சந்திக்கையில் சம்பந்த மூர்த்தியையும் சோமனையும் கிருஷ்ணனையும் பிரிக்கும் தனி ஆளுமைகளின் எல்லைக் கோடுகள் கரையத் தொடங்குகின்றன. அவ்வாறு நிகழ்கையில் சோமனுக்கான தேடல் என்பது அது வரையில் இருந்த புறத்தேடல் எனும் தளத்தைக் கடந்து அகத்தேடலாகவே மாறுகிறது. இவ்வாறு கதாபாத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து அவை ஒரு கதாபாத்திரத்தின் அகத்தின் பல வெளிப்பாடுகளாகவோ அல்லது பல கதாபாத்திரங்களின் கூட்டு நனவிலியின் ஒற்றை வெளிப்பாடாகவோ மாறுகின்றன. இவ்வாறு சோமன் ஒரு புறவயமான தனி மனிதனாக மட்டுமின்றி ஒரு சாத்தியமாக (possibility) மாறுகிறார். இவ்வாறான வாசிப்பு நிகழ்கையில் அதுவரையில் வெறும் புனைவு யுக்தியாகவும் வடிவச் சோதனைகளாகவும் மட்டுமே வெளிப்பட்ட நாவலின் முயற்சிகள் அதன் ஆழ்ந்த உளவியல் மற்றும் மாற்று மெய்மை சார்ந்த தளங்களை நோக்கி வாசகனை அழைத்துச் செல்ல உதவும் கருவிகளாக மாறுகின்றன. இந்நாவலின் கலை வெற்றி என்பது அத்தகைய தளங்களிலேயே வெளிப்படுகிறது.
நாவலில் சோமன் ஒரு கதாபாத்திரமாகத் தொடங்கி நாவலின் ஆதாரமான கேள்விகளின் குறியீடாக மாறுகிறார். சோமன் எனும் ஆளுமை முரண்களாகவும் புதிர்களாகவும் அதுவரையில் கதாபாத்திரங்களால் சித்தரிக்கப்பட்ட அனைத்தும் ஒன்றாக இணைந்து நாவலின் ஆதாரமான கேள்விகளாக வாசகனின் அகத்தில் உருப்பெறுகிறது. இக்கேள்விகளே சோமனைப் பற்றிய மர்மங்களுக்கான விடைகளாகவும் சம்பந்தமூர்த்தியின் தேடல்களுக்கான விளக்கங்களாகவும் அமைவது இந்த நாவலை ஒரு சுவாரசியமான கலை அனுபவமாக மாற்றுகிறது. முதல் பார்வைக்கு எளிய பாலியல் மற்றும் உளவியல் சார்ந்த கேள்விகளாகத் தோன்றக்கூடிய இக்கேள்விகள் நாவலின் போக்கில் மனிதனின் அகம் சார்ந்த ஆதாரமான கேள்விகளாக உருமாறுவதும் அவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலேயே நாவலின் வடிவமும் கூறுமுறையும் அமைந்திருப்பதும் வாசகனுக்குப் புலப்படுகின்றன. வாசகன் அதுவரை புனைவு யுக்திகளாகவும் சுவாரசியமான வடிவ விளையாட்டுகளாகவும் கடந்து வந்த அனைத்தும், அவ்வாதாரமான கேள்விகளை உணர்கையில் முற்றிலும் வேறு கோணங்களில் விரிந்து பொருள்கொள்கின்றன.
சங்கப் பாடல்களில் தொடங்கி நவீன இலக்கியம் வரை மனித மனத்திற்கும் புறவுலகிற்குமான உறவு காலம்தோரும் ஆராயப்பட்டு வருகிறது. இவ்விருமைகளுக்கு இடையிலான உறவின் உளவியல் மற்றும் மெய்யியல் வெளிப்பாடான உடலுக்கும் மனதிற்குமான உறவையே நாவல் தனது ஆதாரமான தேடலாகக் கொண்டிருக்கிறது. அவ்விருமைகளின் தன்மையும் அவற்றிற்கு இடையிலான உறவும் சோமனின் வழியே கேள்விக்குள்ளாக்கப்பட்டு சம்பந்தமூர்த்தியின் வழியே அதன் உச்சத்தை அடைகிறது. இக்கேள்விகளின் அடிப்படையில் நாவலின் முடிவைப் பொருள்கொள்கையில் நாவல் நம்முள் மேலும் பன்மடங்காக வளரத் தொடங்குகிறது. இத்தகைய ஆதாரமான கேள்விகளை உள்ளடக்கிய நாவல் அதற்கான விடைகளை வாசகனிடமே விட்டுவிடுகிறது. புனைவாசிரியர் இக்கேள்விகளுக்கான எவ்விதமான அறுதியான பதில்களையோ அவற்றை அறிவதற்கான வழிகளைப் பற்றிய பிரகடனங்களையோ முன்வைப்பதில்லை. இக்கேள்விகளுக்கான விடைகளை அறிய உதவக்கூடிய உளவியல் விளக்கங்களும் மெய்யியல் விளக்கங்களும் நாவலில் இடம்பெற்றாலும் அவை நாவலின் போக்கில் ஒரு பகுதியாகவே வெளிப்படுகின்றன. இக்கேள்விகளுக்கான அறுதியான விடைகளை அளிக்கக் கூடிய மார்க்கங்களாக ஆசிரியர் முன்வைப்பதில்லை. மாறாக விடைகளை விடவும் புனைவின் வழியே ஏற்படும் நிகர் வாழ்க்கை அனுபவமும் அதிலிருந்து பெறப்படும் கேள்விகளுமே நாவலில் பிரதானப்படுத்தப்படுகின்றன.
முன்னுரையும் முடிவுரையும் அற்ற நாவலில் புனைவு வெளியின் புனைவுகளும் நிஜங்களும் மட்டுமின்றி நம் உலகின் நிஜங்களும் புனைவுகளும் கலந்தே இருக்கின்றன. புத்தகங்கள், இசை/நாடகக் கலைஞர்களைப் பற்றிய குறிப்புகள், வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை/தரவுகளை அளிக்கையில் மிகத் துல்லியமான சில உண்மை தகவல்களின்/தரவுகளின் மத்தியில் நாவலின் புனைவுகளும் மிக இயல்பாகக் கலக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நம் உலகின் தகவல்கள்/தரவுகளோடு கலந்துவிட்ட புனைவு வாசகனுக்கு இரண்டு விதமான புரிதல்களை அளிக்கிறது. அவற்றுள் நாம் வாழும் உலகின் தகவல்களிலும்/தரவுகளிலும் உண்மைகளும் புனைவுகளும் கலந்தே இருக்கின்றன, அவை அனைத்தையும் பிரித்தறிவது சாத்தியமற்றது என்ற புரிதல் அடிப்படையானது. ஆனால் நாவலின் தத்துவார்த்த புரிதல் என்பது உண்மை, புனைவு எனும் எதிரீடுகளின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்குவதே. அப்பிரிவினை நாவலில் கேள்விக்குள்ளாக்கப்படுகையில் அதன் அடிப்படையில் கட்டமைக்கப்படும் வரலாறும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஒரு நாவலின் புனைவு வெளியில் ஒரு நூற்றாண்டுக்குள் வாழ்ந்த இரு ஆளுமைகளின் வாழ்வைப் பற்றிய உண்மைகளை அறிவது இத்தனை சிக்கலானதாகவும் புனைவுத் தன்மை கொண்டதாகவும் இருக்கும் பொழுது நூற்றாண்டுகளாகக் கட்டமைக்கப்படும் நம்பகமான வரலாறுகளும் அவற்றுக்கு எதிரான மாற்று வரலாறுகளும் அவற்றின் அடிப்படையில் நிகழும் எண்ணிலடங்கா மோதல்களும் எத்தனை அபத்தமானவை என்ற வரலாற்றின் அபத்தத்தை நாவல் உணர்த்தி விடுகிறது.
நாவலின் வடிவச் சோதனைகளும் புனைவு யுக்திகளும் அதன் கதைக்களத்திற்கும் ஆதாரமான கேள்விகளுக்கும் அணுக்கமானதாகவே இருந்தபோதிலும், அவை சில பகுதிகளில் நாவலின் தீவிரத் தன்மையைச் சிறிது குறைக்கவே செய்கின்றன. நாவலில் நிகழும் காலக்குழப்பங்கள் தெளிவான காரணங்களுக்காகவே நிகழ்கின்றன என்பதை வாசகன் அறியக்கூடிய அளவிலேயே அவை நிகழ்ந்தாலும் அவற்றைப் பற்றிய விளக்கங்களும் நாவலுக்குள்ளேயே விளையாட்டாக வழங்கப்படுகின்றன. அவ்வாறு விளக்கப்படுகையில் அக்காலக் குழப்பங்கள் உருவாக்கும் சாத்தியங்கள் சிறிது குறைந்துவிடவே செய்கிறது. எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புகளில் பரிட்சயமற்ற வாசககர்களும் நாவலைச் சரியாக அணுகுவதற்கு இவை உதவினாலும் அத்தகைய வாசகனுக்கான வழிகாட்டல்கள் நாவலின் யுக்தியில் வழிதவறிய வாசிப்பு உருவாக்கக்கூடிய புதிய சாத்தியங்களைச் சற்று குறைக்கக்கூடும்.
இவ்வாறு ஒரு படைப்பு பல வாசிப்புகளைச் சாத்தியப்படுத்துவது நாவல் எனும் கலை வடிவத்தின் பொதுப் பண்பாக இருப்பினும் அவை பெரும்பாலும் பன்முனை வாசிப்புகளாகவே நிகழ்கின்றன. அத்தகைய பன்முனை வாசிப்புகள் நாவலின் வெவ்வேறு முனைகளில் இருந்து அப்படைப்பை அணுகினாலும் அவை நாவலின் ஒட்டுமொத்த வடிவத்தையும் ஆசிரியர் முன்வைக்கும் ஒருமையையும் மாற்றி அமைப்பதில்லை. ஆனால் எண்கோண மனிதனின் பன்முகத்தன்மை அதன் ஆதாரமான கட்டுமானத்திலேயே அமைந்திருப்பதால் அதை ஒட்டுமொத்தமாகவே வாசகனால் கலைத்து அடுக்கி மாற்று வாசிப்புகளை நிகழ்த்த முடியும். அவ்வாறு நிகழ்த்தும் ஒவ்வொரு மாற்று வாசிப்பிலும் நாவலின் பல்வேறு தளங்கள் திறக்கின்றன. நவீனத்துவ நாவல்களின் முழுமைக்கும் நம்பகத்தன்மை மிகுந்த கதையாடல்களுக்கும் வாசகர்கள் பழகிவிட்டிருந்த முந்தைய காலகட்டத்தில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புகள் பெருமளவு கவனம் பெறாமலே இருந்தன. ஆனால் உரையாடல் தன்மை மிகுந்த பின்நவீனத்துவ புனைவுகள் போன்ற கலை வடிவங்களுக்கும் மெய்நிகர் விளையாட்டுகள் போன்ற கேளிக்கைகளுக்கும் பழக்கப்பட்ட இன்றைய தலைமுறை வாசகர்களுக்கான மிகச் சிறந்த படைப்புகளை எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் புனைவுலகம் அளிக்கிறது. நேரடியான போதனைகளும் பிரகடனங்களும் இல்லாமல் துளியும் சுவாரசியம் குறையாத ஒரு விளையாட்டைப் போல் மிக ஆழமான கேள்விகளை நோக்கி வாசகனை அழைத்துச் செல்பவை அவரது புனைவுகள். அத்தகைய எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலகிற்குள் நுழையும் வாசகனுக்கு அதன் நுட்பத்தையும் தனித்தன்மையையும் உணர்த்தும் மிகச் சிறந்த படைப்பாக அமையக்கூடிய நாவல் எண்கோண மனிதன்.
பிரமாதம். ஒரு படைப்பின் பலகோண சாத்தியங்களை முன்னிருத்தும் மிகசுவாரஸ்யமான சிறப்பான வாசிப்பனுபவம்.விக்னேஷின்மொழிச்செழுமை வியப்பூட்டுகிறது.