கபடவேடதாரி: நீல நகரமும் நல்லா இருந்த நாடும்

கேட்பதற்குச் சற்று விசித்திரமாகக் கூடத் தோன்றலாம், ஆனால் இணை தேடும் நவீன செயலிகள் அத்தனையிலும் இந்திய நாட்டு பெண்கள் தங்கள் எதிர்பார்ப்பாகக் பொதுவாகக் குறிப்பிடுவது, தன் இணை ஒரு ‘சங்கி’யாக இருக்கக்கூடாது என்பது. இது அவ்வளவு பொருட்படுத்தத்தக்க ஒரு சமூகக் கவலையா என்ற கேள்வி எழலாம். ஆனால் இதற்குப் பின்னால் பிரதிபலிக்கும், கடந்த பத்தாண்டுகளில் உருவாகி வந்திருக்கும் ஒரு மனநிலை மிகவும் கவனிக்கத்தக்கது. ஒரு பழமைவாதியாக, பிற்போக்காளனாகத் தன் ஆண் துணை இருக்கக்கூடாது என்பது இந்திய நாட்டு பெண்களின் அடிப்படையான எதிர்பார்ப்புதான். ஆனால் ‘சங்கி’ என்ற அடைமொழிக்கு அறுதியான குண வரையறைகளை வகுத்துவிடமுடியாதபடி அவ்வார்த்தை ஒரு வசைச் சொல்லாக உருமாறி இன்றைய பயன்பாட்டில் வந்து நின்றிருக்கிறது. நெற்றியில் திருநீறு அணியும்போதே தான் ஒரு சங்கியாக மாறிவிட்டோமோ என்று ஒரு இந்திய நாட்டு ஆண் பயம் கொள்ளச் செய்யுமளவிற்கு இந்த அடைமொழி சமூக வலைத்தளங்களில் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பெண்ணைச் சங்கி என யாரும் அழைப்பதாக அறியப்படவில்லை. எக்காரணம் கொண்டும் ஒரு பெண்ணை ஆண் நிராகரிக்கமுடியாத, எண்ணிக்கை சமநிலையற்ற சமூக காரணி இதற்குக் கூடுதல் துணை.

ஆண் பாவம்!

சமீபத்தில் ஒரு நாளேட்டில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை சமூக வலைத்தளங்கள் பெண்களின் மனநிலையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைக் குறித்துப் பேசியிருந்தது. தொழில்நுட்ப உதவியைப் பற்றிக் கொண்டு சிட்டெனத் தன் தளைகளை உதிர்த்து மேலெழும்பியிருப்பவர்கள் பெண்கள். இத்தனை விரைவாக இவர்கள் அடைந்திருக்கும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள, குறைந்தபட்சம் புரிந்துகொள்ளக்கூட முடியாதவர்களாகத் தவிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள் ஆண்கள். மெய்நிகர் உலகம் அளிக்கக்கூடிய விடுதலையை, பாதுகாப்பை முற்றிலுமாகத் தனதாக்கிக்கொண்டவர்களிடம் சரிநிகர் சிம்மாசனத்தை அடைவதற்கு எவ்வேடம் சரியாக இருக்குமென நாளுக்கு ஒன்றாகக் கலைத்து மாற்றியபடியே ஆண்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்கிறார்கள். போராளி, கவிஞன், அரசியலாளன், அறிஞன், ஹிப்பி… என அவன் தன்னை உருமாற்றியபடியே இருக்கிறான். அவ்வாய்வு குறிப்பிடும் மற்றொரு முக்கியமான அவதானிப்பு, பெரும்பாலான பெண்கள், நேரடியாக அரசியல் கட்சிகளைச் சாராதவர்களும் கூட, தங்களை முற்போக்குவாதிகளாக, தீர்க்கமான அரசியல் கருத்துடையவர்களாக, ஒரு ‘லிபரலாக’ தங்களை முன்வைக்கிறார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்கதும் சமூக மாற்றத்திற்கு அவசியமானதும்கூட என்றாலும் அவர்களில் பெருவாரியானவர்கள் இந்த ‘பட்டங்களின்’ அர்த்தத்தை முழுமையாக அறிந்தவர்கள் அல்ல. தங்களுடையதாக அவர்கள் முன்வைக்கும் எந்தக் கோட்பாட்டையும் இதே சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிந்தவர்கள்தானே தவிர இதற்காகப் புத்தகங்களை வாசிப்பதோ அவ்வழி வந்த முன்னோர்களை உள்ளார்ந்து பின்பற்றி கற்றவர்களோ அல்ல. தனக்கான அன்றைய சிறந்த முகப்புப் படத்தைத் தேர்ந்தெடுக்கும் அளவில்தான் ‘தான் யார்’ என்று குறிக்கும் இந்தப் பட்டங்களின் தேர்வும் அமைந்துவிடுகிறது. பார்ப்பதற்குப் பளிச்சென்றும் இருக்க வேண்டும், ஆராயும் அளவிற்கு ஆழமாகவும் இருக்க வேண்டும். இதற்கும் அவர்களின் மெய் உலக வாழ்விற்கும் அநேகமாகச் சம்பந்தம் இருப்பதில்லை. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஒரு ‘லிபரல்’ தனக்கு மிகக் குறைவான சவரன் போட்டு அனுப்பியதற்காகத் தன் பெற்றோரிடம் சண்டையிட்டுப் பேசுவதை நிறுத்திவிட்டார். இது இப்படியிருக்க, வரிசையில் வந்து பெண் ‘ஐடி’க்களின் முன் முகம் காட்டக் காத்திருக்கும் ஆண்கள், இவர்களின் விழி நகர்விற்கு ஏற்றபடி சுற்றியோடும் தலையறுந்த பித்தர்களாகியிருக்கிறார்கள். தான் ஆண்கள் யாராக வெளிப்படவேண்டும் என்பதை டிஜிட்டல் உலகின் பெண் ‘ஐடி’க்களே இன்று முடிவு செய்யும் நிலை.

நிற்க, முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக செயலிகளிலோ அல்லது டிண்டர், ஐல், பம்பிள், அன்பே போன்ற இணை தேடும் ‘டேட்டிங்’ செயலிகளிலோ இல்லாதவர்களுக்கு இக்கட்டுரையின் முதல் இரண்டு பத்திகளுக்கும் தன் இல்லற, சமூக, இலக்கிய வாழ்விற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைக்கலாம். அல்லது, இவற்றில் சஞ்சரிக்கும் இருபாலரும் தாங்கள் அப்படியல்ல என்று சூடமேற்றி சத்தியம் செய்யலாம்.

எப்படியாயினும், மெய்நிகர் உலகு தொடர்ந்து எதிரீடுகளை மட்டுமே நிலைக்கச் செய்யும் ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது. எல்லையற்ற சுதந்திரம் சிந்தனைகளைப் பரவலாக்கி விரித்தெடுப்பதற்குப் பதிலாக எல்லைகளை வகுத்து அவற்றின் மீது ஒற்றைப் படையான கருத்துகளைக் குவித்துக் கொட்டி தேக்கி வருகிறது. இது சிந்திக்கும் மனங்களின் திறனை நேரடியாக மட்டுப்படுத்திவிடுகிறது. குறுகிய எல்லைக்குள் கண்ட சுகத்தில் திளைக்கச் செய்துவிடுகிறது. இரண்டாவதாக, இளவயதினரை எந்நேரமும் பதற்றத்திலேயே இந்தச் சமூக வலைத்தளச் சூழல் வைத்திருக்கிறது. பதிவிடலும், பதிவுகளுக்கான எதிர்வினைகளும், அவற்றுக்கெதிரான மறுவினைகள் என இவற்றை மட்டுமே எதிர் நோக்கியிருக்கிறது இம்மனங்கள். பெருங்கவனச்சிதறலுற்ற ஒரு மாபெரும் மனிதத்திரள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இளம் தலைமுறையினரின் செயல் திறனும் புதியனவற்றை உருவாக்கும், விவாதிக்கும் ஆற்றலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுக் கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. நாம் பெரிதாக ஏதேனும் ஒன்று நிகழாததினாலேயே மூர்க்கமான சமூக வலைத்தள பயன்பாட்டை வெறும் பொழுதுபோக்காக எண்ணி கடந்து வருகிறோம். இன்னும் பத்து வருடங்களில், இன்றைய பதின்ம பருவத்தினர் சமூகப் பங்களிப்பாற்றும் வளையத்திற்குள் நுழையும்போதுதான் அதன் உண்மையான பாதிப்புகளை உணரக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகம் முழுவதும் சமூகக் கட்டமைப்பில், பொருளாதாரத்தில், வாழ்வியல் மேம்பாட்டில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கிறார்கள். சற்று உற்று நோக்கினால் பாதிப்புகளை இன்றே ஒவ்வொரு நாளும் தினத்தந்தி பார்த்தே தெரிந்துகொள்ளலாம். முகநூல் கருத்துகளுக்காகவும் திரிபடைந்த பற்றுகளினாலும் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. மூளை முடமான ஒரு சமூகத்தை நாம் எதிர் நோக்கியிருக்கிறோம் என்று எச்சரிக்கிறார்கள். பருவநிலை மாற்றங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்கு நிகரானது இது. அனுதினமும் நாமறியாமல் விளைவுகளைக் கூர் தீட்டிக் கொண்டே அதைக் கண்டுணராமல் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

                                                     ***

தீவிர நவீனத் தமிழிலக்கிய உலகிற்குள் இந்த மெய்நிகர் வாழ்க்கை இன்னும் பெருமளவு வந்து சேரவில்லை. ஒருவனின் சமூக வலைத்தள இருப்பு அவனின் அன்றாடத்தில் உருவாக்கும் சிடுக்குகளையும், அது பரந்து சமூகப் பிளவுக்கான காரணியாக மாறுவதும் நவீனப் புனைவுகளில் இன்னும் தீவிரமாக வெளிப்படத் துவங்கவில்லை. ஒரு பதிப்பாள நண்பரிடம் சமீபத்திய புனைவுகளில் நகர வாழ்விலிருந்து வெகு அப்பால் நடக்கும் கதைகளே தொடர்ந்து வெளிவருவது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். கணினித்துறையில் பெரு நகரத்தின் மையத்தில் வாழும் இளம் எழுத்தாளர்கள்கூட தன் புனைவுகளில் கிராமங்களையும் தொன்மங்களையும் மீட்டெடுக்கவே விழைகிறார்கள். தங்களின் கதை சொல்லலில் உள்ள போதாமையை இக்கதைகளின் இயல்பிலேயே அமைந்திருக்கும் தீவிர பாவனைக் காப்பாற்றிவிடுவதுகூட காரணமாக இருக்கலாம். ஆனால் தான் வாழும் சுசூழலில் தனக்கு மிக அண்மையில் நிகழும் மன வறுமைகளையும் பொங்கி வழியும் வாழ்வை உள்ளங்கையில் கொண்டு செய்வதறியாதவர்களின் தவிப்புகளும் புனைவின் வழி காணுவதைத் தவிர்க்கிறார்கள்.

போர்ச் சூழல் மிக்க அரபு நாடுகளிலிருந்து வெளிவரும் இன்றைய புனைவுகளில் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துகளின் விளைவால் சிறு போரே வெடிக்கும் சாத்தியங்களைக் காட்சிப்படுத்துகிறார்கள். ஹஸான் பிளாஸிம் அவ்வகையான ஒரு எழுத்தாளர். இச்சூழலை விமர்சிக்கும் அவரின் படைப்புகளுக்காக அரசாலும் பல்வேறு குழுக்களாலும் சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு இப்போது வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார். குண்டு வெடிப்புகளுக்கு நிகராக அந்நாடுகளில் முகநூலில் கருத்துப் போர்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன. அரசுகள் அவற்றை முடக்க பெரும் கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் முடுக்கி இருக்கிறார்கள். பெயர் தெரியாத ஒரு முகநூல் கணக்கு வெளியிடும் ஒரு கருத்துப் பொதுவெளியில் ஒரு பதற்றத்தை உருவாக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. பல அரசுகளுக்கு மெய்நிகர் உலகில் வெடித்து நிஜ வாழ்விற்குள் சிதறும் வன்முறைகளைத் தடுப்பதே பெரும் சவாலாகவும் மாறியுள்ளது.

கணினித் திரைக்குள் தான் வேறொரு ஆளாக வெளிப்பட்டுப் பிளவுண்ட ஆளுமைகளாகப் பிறழ்ந்து திரியும் மனிதர்களின் உறவுச் சிக்கல்களும், விழுமியங்களின் சிதறல்களும் இன்று வெளிவரும் பெரும்பாலான அமெரிக்கப் புனைவுகளிலும் வெளிப்படத் துவங்கியுள்ளன. அறிபுனைவு சாத்தியங்களையும் மீறி யதார்த்தப் புனைவுகள் இப்பிளவு வாழ்க்கையின் விளைவுகளை ஆராய்கின்றன. உதாரணமாக, ஒருவன் ஒரு குறிப்பிட்ட விதமான விடியோக்களை மட்டுமே முகநூலிலும் யூடியுபிலும் தேடித் தேடிப் பார்க்கும் ஒரு சிறுகதை விவாதத்தை எழுப்பியிருந்தது. அவன் காண விரும்புவதெல்லாம் சறுக்கியோ எதிலேனும் தட்டுத் தடுமாறியோ பொத்தென யாரோ ஒருவர் கீழே விழும் வீடியோக்களை மட்டுமே. அச்சிறுகதை அவன் காணும் வெவ்வேறு வீடியோக்களை மட்டுமே விவரிக்கிறது. அவனின் தனிப்பட்ட அம்மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் தன்மை அச்சிறுகதையின் ஆழத்தில் இருக்கிறது.

மெய்நிகர் வாழ்வில் தனது ஒரு நாளின் பெரும் பகுதி நேரத்தைச் செலவிடும் சூழலை இரண்டு தளங்களில் வைத்து இன்றைய உலக இலக்கியம் விவாதிக்கிறது. ஒன்று, சமூகம் மற்றும் அரசியல் தளங்களில். மக்கள் தங்களைத் தீவிரமானவர்களாகக் காட்டிக்கொள்ளும் பொருட்டு முகநூலில் ஒரு எல்லையைப் பிடித்துக் கொண்டு கண்மூடித்தனமாக விரல்வழி சொற்போர் புரிகிறார்கள். எதையும் விவாதிக்கும் எண்ணமோ ஆய்ந்து அறியும் நிதானமோ அற்றவர்களாக, தான் பிடித்திருக்கும் எல்லைக் கொடியைக் காக்க எவ்வளவு மூர்க்கமாகவேனும் மாறும் மனிதர்களின் வாழ்வு புனைவுகளில் பிரதிபலிக்கிறது. இரண்டாவது, முகமூடியிட்டு வாழும் நிகர் வாழ்வில் தன் சுயத்தைத் தொலைப்பதினால் உருவாகும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்ட கதைகள். இவையே இன்று அதிகமாகப் புனைவுகளில் வெளிப்படும் தளமாக இருக்கிறது. புறவுலகில் தன் உறவுச் சிக்கல்களைத் தீர்க்கும் புத்துலகமாக முகநூலைப் பற்றிக்கொள்கிறார்கள். அல்லது மெய்நிகர் உலகின் வழியே தங்கள் மெய்யுலக வாழ்வை மாற்றியமைக்க எத்தனிக்கிறார்கள். இவ்விரு உலகிற்குமான கொடுக்கல் வாங்கல் அசாதாரணமானது. பல பரிணாமங்களை உருவாக்கும் சாத்தியங்கள் கொண்டது.

இவ்விரு தளங்களுமே இரு அழகியல் வெளிப்பாடுகளில்தான் அதிகம் புனையப்பட்டுள்ளன. ஒன்று, நேரடியான தீவிர பாவம் கொண்ட யதார்த்தவாதக் கதைகள். இரண்டாவதாக மிகுபுனைவாகவோ அல்லது மாயயதார்த்தக் கதைகளாகவோ மின்னுலகு உருவாக்கும் சிக்கல்களைப் பகடி செய்யும் படைப்புகள். தீவிரமான எதையுமே மெலிதான அசைவில் தலைகீழாகத் திருப்பி பகடி செய்துவிட முடியும். அரசியல், குடும்ப, உறவுச் சிக்கல்களை மிகைபுனைவாக்கி போலி செய்யும் படைப்புகள் உலக இலக்கியத்தில் ஏராளம். மின்னுலகில் ஒருவனின் போலித்தனங்களை, பாவனைகளைப் பகடி செய்து முதுகின் பின்னால் அவன் மறைத்திருக்கும் வேறொரு முகத்தின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டியபடி இருக்கின்றன இன்றைய நவீன புனைவுகள்.

மிகுபுனைவுகளும் பகடிக் கதைகளும் ஒப்புநோக்கக் குறைவாகவே வெளிப்படும் தமிழிலக்கியத்தில், அதுவும் 2010க்குப் பிறகு முளைத்திருக்கும் மாய உலகைப் பகடி செய்யும் நாவல் என்ற வகையில் பா. ராகவனின் ‘கபடவேடதாரி’ முன் வரிசையில் பெயர் பெறுகிறது. நிகழ்கால அரசியல் மற்றும் ஆண்-பெண் உறவின் மெல்லிய சலனங்களை மட்டுமே முன் வைத்து எழுதப்பட்டிருக்கும் ஒரு அங்கதப் படைப்பு.

                                                    ***
பா. ராகவன்

90களின் இறுதியில் தமிழிலக்கிய வாசிப்பிற்குள் நுழைந்த எவருக்கும் ஆசான்களில் ஒருவராகப் பா. ராகவன் திகழ்ந்திருப்பார். சென்னையில் அவ்வப்போது இலக்கியப் பட்டறைகளை ஒருங்கிணைத்திருக்கிறார். பா.ரா. வின் அபுனைவு எழுத்துக்கள் பலருக்கும் வாசிப்பின் வாசல்களைத் திறந்துவிட்டிருக்கின்றன. இன்றும்கூட புனைவு மற்றும் அபுனைவு எழுத்துக்களுக்கான பயிற்சி வகுப்புகளைத் தொழில்முறையில் நடத்துகிறார். எழுத்துக்களில் புதுமையைப் பரிசோதித்துப் பார்க்கும் பெரும் முனைப்பு கொண்டவர் என்பதாலேயே அவரை வாசிக்கையில் பெரும்பாலும் சிறு புன்னகையை உதிர்த்துவிடச் செய்துவிடுவார். கதையோட்டத்தில் எதிர்பாராத தருணங்களை அல்லது சொற்பிரயோகங்களைத் தோற்றுவிப்பது இவரது பாணி. பெரும் வரலாற்று அபுனைவை வாசிக்கையில்கூட வாசகனின் கவனத்தைச் சிதறடிக்காமல் அது காக்கிறது. தொடக்கக்காலங்களிலிருந்தே சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்குபவர் என்பதாலும் முகநூலிலும் டிவிட்டரிலும் அடிக்கடி ‘டிரெண்டிங்’கை உருவாக்கியவர் என்பதாலும் ‘கபடவேடதாரி’யை அவர் உத்தேசித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நாவல் தொடங்கும் முன்னரே கதைச் சுருக்கத்தைக் கொடுத்துவிடுகிறார். நாவலிலிருந்து கதையை முதலில் நீக்கிவிடுகிறார். கதை அவசியமற்றது என்பதை அவரே சொல்லியும் விடுகிறார். இப்போது, இந்நாவல் நாவலாக எழுதப்படவில்லை என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. ‘Bynge’ செயலியில் தொடராக எழுதப்பட்டது, தற்போது நாவலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

அங்கதப் படைப்புகளின் முக்கிய கூறான மிகைப்படுத்தலை இந்நாவலில் தான் உருவாக்கும் இரு மாய உலகங்களின் மூலமாகவே அடைந்துவிடுகிறார் பா.ரா. ஒரு படைப்பாளி மிகுபுனைவுகளில் கட்டியெழுப்பும் ஒரு புத்துலகம் மிகவும் விசித்திரமாகவும் கற்பனைக்குச் சவால் விடுவதாகவும் அமையும்போது அப்புனைவு ஒரு வாசகனின் மனதில் முதல் நிலையை எட்டிவிடுகிறது. கதையின் போக்கில் அவ்வுலகில் புதிதாக இயற்றப்பட்டிருக்கும் பிரதான பொருளோ அல்லது விந்தையான ஒரு செயல்பாடோ வாசகனின் ஆழ் மனதில் உறைந்திருக்கும் நிஜ வாழ்வின் ஏதோவொன்றுடன் அது தொடர்பு கொள்ளும்போது புது மாய உலகத்தைத் தனதாக்கிக் கொண்டுவிடுகிறான். மிகப் பிரபலமான மிகுபுனைவுகளில் காட்டப்படும் மிகவும் அந்நியமான ஒரு வாழ்வின் மேல் உறையைக் கழற்றிப் பார்த்தால் ஆழத்தில் அது நாம் மிக நன்குணர்ந்த ஒன்றாகவே இருக்கும்.

கபடவேடதாரியில் இரண்டு மாய உலகங்கள் – ஒன்று சூனியனின் உலகம் மற்றொன்று மிதக்கும் நீல நகரம். சூனியனின் உலகம் வெகு விசித்திரமானது. அங்கிருப்பவர்கள் ஒலிகளால் மட்டுமே ஆனவர்கள். கிருமியைப் போல மனிதர்களுக்குள் நுழைந்து அவர்களை ஆட்டுவிக்கும் சாத்தியம் உள்ளவர்கள். நீல நகரம் எதன் போலி என்பதைப் புரிந்துகொள்வது சிரமமில்லை. வெண்பலகை, போலிப் பெயர்கள்/கணக்குகள், பதிவுகள், கவிதைகள் என அது முகநூலின் கேலிப் பிரதி.

சூனியமற்ற பூரணம் என ஒன்று இருக்க முடியாது என்பதால்தான் எங்கும் வியாபித்திருப்பதாகப் பிரகடனம் செய்தபடி அறிமுகமாகும் சூனியன்தான் மையக் கதை சொல்லி, முக்கிய பாத்திரம் மற்றும் வில்லன்.

குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படும் வேர்கடலை ஓடுகள், எலும்புக் கூடுகளால் செய்யப்பட்ட கப்பல், வெடிகுண்டைப் போல பயன்படுத்தப்படும் பூகம்பச் சங்கு என யூதாஸை தலைமைக் கோமானாகக் கொண்ட ஒரு உலகிலிருந்து மரண தண்டனைக் கைதியான சூனியன் தூக்கி வீசப்படுகிறான். சூனியன், மிதக்கும் நீலநகரத்தினுள் விழுந்து அங்கு குடிபுகுகிறான்.

இந்நாவலில் கோவிந்தசாமி – சாகரிகாவின் உறவும் பிரிவும்தான் மையப் புள்ளி. சூனியன் சந்திக்கும் முதல் மனிதனான கோவிந்தசாமி மனைவியின் பிரிவுத் துயரால் வாடுபவன். நீல நகரத்தின் பிரஜையாகிவிட்ட தன் மனைவியைத் தேடி அவனும் அங்கு நுழைகிறான். கோவிந்தசாமிக்கு உதவுவதாகக் கூறி பல்வேறு பாத்திரங்களைப் படைத்து நீல நகரத்தினுள் உலவ விடுகிறான் சூனியன். அவை உருவாக்கும் குழப்பங்களும் விளையாட்டுகளுமென இந்நாவல் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் சுற்றித் திரிகிறது. இந்நாவலின் பிரதான நோக்கம் முகநூலின் சல்லியாட்டங்களையும், போலி பிம்பங்களையும், பாவணை உறவுகளையும் கிண்டல் செய்வதுதான் என்பதால் கோவிந்தசாமி-சாகரிகாவைச் சுற்றி மட்டும்தான் மொத்த நாவலும் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வகையில் ஆசிரியருக்கு உதவியாகவும் அமைந்துவிடுகிறது. நாவலில் தோன்றக்கூடிய எவருக்கும் முறையான பாத்திர வார்ப்பென எதுவும் தேவைப்படவில்லை. கோவிந்தசாமி ஒரு முட்டாள், சங்கி என்றும் சாகரிகா அரைவேக்காட்டுத்தனமான திராவிட தாரகை என்பது மட்டும் பல வேடிக்கையான சம்பவங்களால் நிறுவப்படுகிறது.

ஐந்நூறு பக்கக்களை நோக்கி சற்றும் தளராமல் நீளும் இந்நாவலில் சிறப்பாக அமைந்திருப்பது அரசியல் கொள்கைகளையும், காதல் கவிபாடல்களையும் பகடி செய்யும் பகுதிகள்தான். தீவிரமான இந்துத்துவர்கள் இன்று மேற்கொள்ளும் பாவனைகள் அத்தனையின் பிரதிநிதியாகக் கோவிந்தசாமி இருக்கிறான். ஆயினும் அவன் அப்பாவி. சிந்திக்கும் திறனற்றவர்களிடம் புதைந்திருக்கும் ஆபத்து, அவர்கள் எதையேனும் மூர்க்கத்தனமாகப் பிடித்துக் கொண்டு அதற்காகப் பெரும் போர்களையும் நிகழ்த்தக் காத்திருப்பவர்கள் என்பதுதான். சாகரிகா இன்றைய ‘லிபரல்’, ஒரு பத்திரிக்கையாளராகத்தானே இருக்க முடியும். கோவிந்தசாமி ஐந்து வருடம் ஒருதலையாகக் காதலித்துக், கல்யாணம் செய்து, பதினேழு நாட்களுக்குள் பிரிந்தும் விடுகிறான். ‘போடா சங்கி’ என்று அவள் திட்டியதுதான் கடைசி அச்சு முறிந்ததற்கு காரணம். தான் ஒரு இந்துத்துவன், கரசேவகன்தான் ஆனால் ‘சங்கி’ அல்ல என்பதை எவ்வாறு புரியவைத்து அவளுடன் மீண்டும் சேர்வது என்பதை அறியாமல் தவிக்கிறான்.

நீல நகரத்தின் பிரஜைகள் மிகவும் தீவிரமானவர்கள். தீவிர பாவம் கொண்டே எதையும் நோக்க முடியும், விவாதிக்க முடியும். இந்நகரத்திற்குள் நுழைந்த உடனேயே பெண்களுக்கு நெற்றியிலும் ஆண்களுக்கு இரு கரங்களிலும் குறி முளைத்துவிடும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் முகநூல் விவாதங்கள் எப்படியாவது காமத்திலோ, உடல் நோக்கிய வசைகளிலோ, அல்லது சத்தமற்று உள்ளூர படரும் உறவுக்கான அழைப்பாகவோதான் அதிகமும் முடிவடைகிறது. எந்நேரமும் காமம் கொப்பளித்துக் கொண்டிருக்கும் முகநூல் கணக்குகள் உண்டு. அதன் மேல் தனிமை போன்ற கழிவிரக்கப் போர்வையோ, ஏமாற்றப்பட்டவன் என்ற கண்ணீர் துளிர்க்கும் முகமூடியோ மூடியிருக்கும். நீல நகரப் பிரஜைகளும் குறிகளின் மூலமாக வெளிப்படுபவர்களாகவே இருக்கிறார்கள்.

கோவிந்தசாமி தன்னுடைய சந்தேகங்களைப் பல அறிஞர்கள் மூலம் தீர்த்து ஒரு முழு இந்துத்துவனாக மாற்றம் பெறும் இடங்கள் சில வெடிச்சிரிப்புகளைக் கிளப்புகின்றன. அதே நேரத்தில் அவை தீவிர இந்துத்துவ சிந்தனைகளைக் கிண்டலடிக்கவும் செய்கின்றன. சாகரிகாவின் மீது அப்பழுக்கற்ற காதலைச் சுமந்துகொண்டிருந்த காலங்களில் அவன் தன் தலைவனின் வழிகாட்டுதலின்படி காதலர் தினத்தை எதிர்த்துக் கவிதை எழுத வேண்டியிருக்கிறது. அதுவுமில்லாமல் ‘மைனர் குஞ்சு’வைப் போல வாழ்ந்த கிருஷ்ணனை வணங்கிக் கொண்டே காதலர் தினத்தை எதிர்ப்பது எப்படி என்று தெரியாமல் மேற்கு மாம்பல அறிஞர் ஒருவரிடம் தன் சந்தேகத்தைக் கேட்கிறான். அவர், “பொண்ணுன்னா நிஜப் பொண்ணில்லே. கோபியர் எல்லோருமே ஆளுக்கொரு தத்துவம். பகவான் சொல்ல நினைச்ச ஒவ்வொரு தத்துவத்தையும் ஒவ்வொரு பொண்ணா உருவகப்படுத்தியிருக்கா பெரியவா” என்று சொல்ல, கோவிந்தசாமியும் உண்மை உணர்ந்துகொள்வதில் பரவசமாகி அப்பாவியாக, ”ஏதாவது ஒரு பொண்ணை உரிச்சுக் காட்டுங்க சார்!” என்கிறான். நீல நகர வாசிகள் யாருக்கும் வாசிப்பில் ஆர்வமில்லை. ஆனால் சலனப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விமர்சனம் எழுதுவதுதான் அவர்களின் முதன்மையான நேரக்கழிப்பு. நீல நகரத்தின் நூலகரிடம் சூனியன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது அவரும் பெருத்த ஆர்வத்துடன், “சூனியர்களின் வல்லமையைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் இலக்கியங்களின் பி.டி.எஃப். கிடைக்குமா?” என்று வினவுகிறார்.

சாகரிகா, நீல நகரத்தில் ஜென்னினும் மேம்பட்ட வாழ்க்கைத் தரம் இருப்பதாக நினைக்கிறாள். பெருவாழ்வு முடிவுறும்போதுகூட வெறும் ‘ரிப்’ என்று சொல்லி நகர்ந்துவிட்டால் போதும். இந்நகரத்தின் கலாச்சார தலைவியாகத் தனக்கென ஒரு தனித்த சமஸ்தானத்தை நிறுவும் குறிக்கோள் கொண்டிருப்பவள் சாகரிகா. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கோவிந்தசாமியும் அவனின் நிழலும் திரிகிறார்கள். ஆம், நிழல்தான். இந்நகரத்தில் உலவும் எல்லோரும் எவருடைய நிழலாகவோதான் திரிகிறார்கள். நீல நகரவாசிகள் அத்தனை பேரும் யாரையாவது நிறுத்தி சமையல் குறிப்போ அல்லது மருத்துவ குறிப்போ பகிர்ந்தபடி இருக்கிறார்கள். மற்றொருபக்கம் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது பற்றியும் வரி கட்டாமல் வாழ்வதெப்படி என்றும் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொப்புள் கொடி சுற்றிய ரூபாய் நோட்டுகளைப் பிட் காயின்களாக மாற்றித் தரும் எக்ஸ்சேஞ்சுகளும் உள்ளன.

சமகால தமிழ் இலக்கியமும் இலக்கியவாதிகளும் இந்நாவலின் எள்ளலில் உண்டு. நீல நகர நூலகத்தில் ஒரு முள்ளம்பன்றி வெண்முரசு சாப்பிடுகிறது. மனுஷ்யபுத்திரன் பாத்திரமாகவே வந்து போகிறார். கலைஞரின் வசனத்தையும் மனுஷ்யபுத்திரனின் கவிதையையும் குழப்பிக்கொள்கிறான் கோவிந்தசாமி. சாகரிகாவிற்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் இருக்கும் ரகசியத் தொடர்பு பற்றி நிஜ பா.ராகவன் நிஜ முகநூலில் சமீபத்தில் பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தார். ஒரு கணத்தில் பாரதியைத் தன் ஞானாசிரியனாக ஏற்றுக்கொள்ளும் கோவிந்தசாமி, இந்துத்துவர்கள் ஏன் இப்போதெல்லாம் கவிதைகள் எழுதுவதில்லை என்று ஒரு ‘தமிழகஜி’யிடம் கேட்க, அவர் அப்துல் கலாமிடமிருந்து தொடங்கு என்று அறிவுறுத்துகிறார்.

                                                      ***

நரேன்

இன்றைய தமிழ் எழுத்துலகில் ‘2K’ கிட்ஸ் என வரையறுக்கப்படும் புதியவர்களின் சிக்கல்களையும் அசட்டுத்தனங்களையும் அனேகமாக எவரும் கதைகளாக்குவதில்லை. முப்பதாண்டுகளில் மூன்று தலைமுறைக்காலத்தின் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்று இருபது வயதை எட்டியிருக்கும் ஒருவருக்குச் செல்பேசி இல்லாத காலத்தைக் கற்பனை செய்வதுகூட சாத்தியமில்லை. 90கள் வரை வியாபித்திருந்த வாழ்வியல் நோக்குகள் கடந்த பத்தாண்டுகளில் பல நூறு துண்டுகளாக உடைத்துப் பார்க்கப்பட்டுவிட்டன. நெறிகளும் மதிப்பீடுகளும் பெரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க, மானுட தரிசனம் மட்டும் கதிரவனைப் போல இன்னும் கைக்கு எட்டாத அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் புதிய மனிதப் பெருக்கின் சாரத்தைச் சமூக வலைத்தளங்களிலேயே கண்டுகொள்ள முடிகிறது. அதை அங்கதத்தின் மூலம் தொட்டுப் பார்க்கும் பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறது ‘கபடவேடதாரி’.

முக்கியமான மூன்று காரணிகளால் மட்டுமே இந்நாவல் வாசிப்பிற்கான ஒரு இடத்தைக் கோருகிறது. முழுக்க முழுக்க எள்ளல் நடையில் முகநூலைப் பிரதியெடுக்கும் ஒரு கற்பனை உலகை நிர்மாணித்து இன்றைய தலைமுறையினரின் உறவுச் சிக்கல்களையும் கோட்பாட்டுக் குழப்பங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மின்னுலக வாழ்க்கையே பிரதானமாகிவிட மெய்யுலகில் தன்னைப் பற்றிய பிம்பத்தை மறைத்துப் போலியாக அர்த்தமற்ற இருப்பைத் தக்க வைக்க வேண்டியிருக்கிறது. இணையத்திரைக்குப் பின்னாலுள்ள வாழ்க்கை பாதுகாப்பானது, சுகமானதும்கூட. கோவிந்தசாமி சாகரிகா தொடங்கி அத்தனை பேரும் தன் வாழ்விலிருந்து தப்பி வந்து தஞ்சமடையும் இடமாகிறது நீல நகரம். இனி இங்கிருந்து திரும்புவதற்கில்லை. சூனியன் ஒருவன் மனித மூளைக்குள் புகுந்து ஆட்டுவிக்கிறான் என்பது பல்வேறு அர்த்தங்களை அளிக்கக்கூடியது. சூனிய மனது செய்யக்கூடிய செயல்கள் பயங்கரமானதும்கூட. இறுதியில் இந்தக் கற்பனை உலகை அழிப்பது ஒன்றே அத்தனை குழப்பங்களுக்கும் தீர்வாகிறது. நீல நகரத்தில் ஒவ்வொருத்தரும் பல்வேறு கற்பனை பிரதிகளை உருவாக்கி உலவவிட ஒரு கட்டத்தில் யார் போலி யார் நிஜமென்ற சண்டை மூள்கிறது. போலிப் பிரதிகள் தான்தான் நிஜமென்று கோரத் தொடங்கினால் உருவாக்கியவனாலும் அதை மறுக்க முடியாது.

இரண்டாவதாக இந்நாவல் கிண்டலுக்குட்படுத்தும் இரண்டு அரசியல் முனைகள். இன்று இணையத்தில் எந்த அரசியல் விவாதமும், அது எவ்வளவு தீவிரமான பேசு பொருளைக் கொண்டிருந்தாலும் இறுதியில் நீ ஒரு ‘சங்கி’ என்றோ ‘திருட்டு திராவிடன்’ என்றோதான் முடிகிறது. இந்த அர்த்தமற்ற சண்டைகள் நனவிலியில் இரு துருவங்களை வலுவாக நிறுவிக்கொண்டே இருக்கிறது. எந்தப் பின்புல அறிவுமில்லாமல் இரண்டில் ஒரு துருவத்தை நோக்கி அத்தனை பேரும் நகர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வெற்றுப் பார்வையில்கூட ஒருவனை இந்த இரு புள்ளிகளுக்குள் அடைக்கப்படும் முயற்சிகள்தான் இன்று நடப்பது. இந்நாவலின் மையப் பாத்திரங்கள் இந்தப் புள்ளிகளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களாக வரும் பின்னணிக் கதைகள் சுவையான கற்பனைகள். சங்கியும் திராவிடத் தாரகையும் என்றுமே இணைய முடியாது. இன்றைய இளம் ஆணும் பெண்ணும் இந்த அடையாளத்தை அறிந்துகொள்ளாமல் பழக எத்தனிப்பதில்லை. மகாமகக் குளம், திராவிட படிப்பறைகள், காங்கிரஸ் வேடங்கள், பகவத் கீத பாராயணங்கள், ஜீ மயமாக்கப்படும் தமிழ்ப் பேச்சுகள் என்று அத்தனையும் இந்நாவலில் பகடி செய்யப்பட்டிருக்கின்றன.

மூன்றாவதாக, எந்த யுகப் புரட்சியும் எப்படி ஒரு சமூகவலைத்தளத்தில் நெருப்பூதி வளர்த்தெடுத்துப் பெரும் தழலாக்கி, பர பர வென படரிப் படர்ந்து பின் ஒன்றுமில்லாமல் அடங்கியும் போகும் என்பது இந்நாவலில் அமைதியாக எழும் அடிநாதம். ஒவ்வொருவரும் தங்கள் இலக்கை அடைவதற்காகப் போலிக் கணக்குகளைத் துவங்கி ஒரு கட்டத்தில் ஆயிரக் கணக்கான போர் வீரர்கள் அத்தனை பேரும் ஒருவரே என்றாகிவிடும் சூழல். பின் யாரை வைத்து யாருடன் போர் புரிவது. ஆனால் ‘ஹாய்’ சொன்னது முதல் அனைவரின் மனங்களிலும் போர் முனைப்புதான். பிரத்தியேகம் என்பதே இல்லாத ஓர் உலகம். நீல நகரத்தின் மொத்த மக்கள் தொகை என்பதே ஒன்றுதான்.

                                                     ***

‘கபடவேடதாரி’யை நாவல் என்ற வகைமைக்குள் வைக்கும்போது எழும் தயக்கத்திற்கான காரணிதான் இதன் பிரதான பிரச்சினை. ஒரு தொடராக வெளிவந்த ஐம்பது அத்தியாயங்களின் தொகுப்பு என்பதாலேயோ அல்லது மனதிற்குள் உருதிரளாத ஒன்றை நேரடியாக எழுதத் தொடங்கிவிட்டதாலோ இந்நாவலின் ஒருமை சிதறுண்டுகிடக்கிறது. சின்னத்திரை நீள் தொடர்களைப் போல அத்தியாயத்திற்கு அத்தியாயம் தன் இஷ்டப்படி குனிந்து வளைந்து நிமிர்ந்து ஓடுகிறது. தனித்த அத்தியாயங்களாக வாசிக்கையில் இவற்றில் சில சுவராசியமாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு நாவல், புத்தகத்தின் நடுபிடிப்பு போல ஒற்றை விவாதமோ ஒரு குறிப்பிட்ட பார்வையையோ நோக்கி விரிவதாக இருக்க வேண்டும். பகடி செய்வது மட்டுமே பிரதான நோக்கம் என்பதால் எந்தப் பாத்திரப் பின்புலத்தைப் பற்றியும், பெரிய கேள்விகள் என எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மேலோட்டமாகச் சிரிப்பைத் தருவிக்கும் முயற்சியை மட்டுமே மேற்கொள்கிறது. அதுவும் ஐந்நூறு பக்கங்களுக்கு விரியும் இப்பெருநாவலின் ‘ஒன்றுமில்லாததனம்’ பெரும் அயற்சியையே அளிக்கிறது.

கோவிந்தசாமி – சாகரிகா உறவின் பிரிவை முன்வைத்துத் தொடங்கும் இந்நாவல் முழுவதும் கோவிந்தசாமி அவளை எப்படியாவது அடைய நினைப்பதும் அவள் அவனுக்கெதிராக எதையாவது செய்து விலகி ஓடுவதுமாகவே இருக்கிறது. என்ன செய்தாலும் இணைந்து வாழவே முடியாத இருவரின் இணைவு பற்றிய எந்த அக்கறையும் வாசகனுக்கு எழுவதில்லை. அவர்களின் பின்புல அரசியல் கதைகளால் மட்டுமே அவ்விருவரின் மீதும் லேசான கவனம் விழுகிறது. இல்லையேல் இதுவும் முகநூலில் எவரோ போடும் வழக்கமான சல்லிச் சண்டையென்றே கடந்து போகச் செய்திருக்கும். பல அத்தியாயங்கள் முகநூல் பதிவாகவே போட்டிருந்தால் பலரின் அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அங்கதப் படைப்புதான் என்றாலும் உள்ளூர ஒரு தீவிரம் நிலைகொண்டிருக்க வேண்டும். அத்தீவிரத்தைப் பற்றிக்கொண்டுதான் எந்தப் பகடியும் அர்த்தம் பெறும். எந்த ஒட்டுதலும் இல்லாத நகைச்சுவை, முகமில்லாதவனின் மேற்பூச்சுதான் அல்லது ‘கபடவேடதாரியின்’ யாரும் பின்பற்றாத போலி முகநூல் கணக்கைப் போலத்தான்.

இந்நாவலின் அடிப்படையிலேயே அமைந்துவிட்ட ‘முரண்’ ஒரு அங்கதப் படைப்பிற்குப் பெரும் சத்து. ஆனால், எந்த முரண்பாடும் அதன் விளைவாக நிகழும் செயல்களும் இந்நாவலில் ஆழமாக அடிக்கோடிடப்படவில்லை. பெரும் பாய்ச்சலோடு நிகழாதவரைப் பகடி முயற்சிகள் அத்தனையும் வெறும் நமட்டுச் சிரிப்புக்கு மட்டுமே வாய்ப்பளிக்கின்றன. குற்றமும் தண்டனையும் மட்டுமே பிரதானமாக இருக்கும் நீல நகரத்தில் கற்பனையாகப் பல சம்பவங்களை உருவாக்கி தினசரி நிகழ்வுகளை விளையாட்டாகப் போலி செய்திருக்க முடியும். நீல நகரத்திற்குள் நுழைந்தவுடன் இரண்டு கைகளில் ஆண்களுக்குக் குறி முளைப்பதும் பெண்களுக்கு நெற்றியில் பெண்குறி முளைப்பதும் ஒரு விசித்திரமான படிமத்தை உருவாக்குகிறது. ஆனால் அதை மேலும் விரித்தெடுக்காமல் வெறும் அதிர்ச்சிக்கான உத்தியாகவே உருவாக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தையே தருகிறது. நீல நகரத்தின் தன்மைகள் பெரும்பாலும் ஒற்றை வரி விவரிப்பாகவே முடிந்திருக்கிறது, சம்பவங்கள் நிகழ்த்திக் காட்டப்படவில்லை. அதனால் இம்மாய உலகின் பல விவரிப்புகளை அர்த்தமில்லாமல்தான் வாசிக்க நேர்கிறது.

பா.ரா. வின் வழக்கமான சொல்லாடல்களும் தேய் வழக்குகளும் இந்நாவலிலிருந்து வாசகனை வெளியே தள்ளுபவை. சமீபத்திய படைப்புகளில் பா.ரா. ஒரு பாத்திரமாகவே வந்து போகிறார். அதை ஒரு கட்டுடைப்பாகச் செய்பவராக இருக்கலாம். ஆனால் அது அந்நாவலின் கதையோட்டத்திற்கோ உணர்வு நிலைக்கோ எந்தப் பங்களிப்பும் செய்வதில்லை. அதிலும் தன்னைத்தானே ஒரு சிறு எழுத்தாளன் என்று கதைகளில் கிண்டல் செய்துகொள்ளும்போது பெரும் விலக்கமே ஏற்படுகிறது. ஒரு எழுத்தாளன் தான் ஒரு மாபெரும் எழுத்தாளன் என்று தொடர்ந்து சொல்லும்போது ஏற்படாத சலிப்பு ஒருவன் தன்னைத் தொடர்ந்து சுமாரான எழுத்தாளன் என்று தானே சொல்லிக்கொள்ளும்போது ஏற்படுவது ஏன் என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று. மிகப் பழக்கமான பா.ரா. வின் ‘டெம்ப்ளேட் ஜோக்குகள்’ பெரிய நாவலை வாசிக்கும் ஒருவனுக்குப் படு பாதகமானது. ‘ஏக பத்தினி விரதனாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவன்’ என்று சொல்லும் கோவிந்தசாமியைப் பார்த்து, ‘நீ ஏகப்பட்ட பத்தினி விரதன்’ என்று முல்லைக் கொடி சிரிக்கிறாள். ‘நீல நகரத்தில் திறந்த வெளிகளில் முத்தமிட்டால் தவறில்லை மூச்சா போவது தவறு’ என்பன போன்ற உரையாடல்கள் முன் ஜென்மத்திலேயே மென்று விழுங்கி மறந்துவிட்ட விகடன் காலத்திய ஜோக்குகள். மேலும், அம்மாஞ்சியான ஒரு பாத்திரத்திற்குக் கோவிந்தசாமி என்று பெயர் வைப்பதெல்லாம் பா.ரா. வே கிண்டலடிப்பதுபோல மேற்கு மாம்பல பால்கனிப் பார்வை, என்னதான் அவன் அத்தனை பேரையும் தீர்த்துக்கட்டுகிறான் என்று கடைசியில் சமாளித்தாலும்.

அங்கதப் படைப்புகள் வெற்றி பெறுவதின் நுணுக்கம், அது போலி செய்யும் சம்பவமோ, பாத்திரமோ, நூலோ எதுவாயினும் அது வாசகனுக்கு நன்கு அறிந்த ஒன்றாக இருக்க வேண்டும். இங்கு நீல நகரத்தில் உலவும் பல பாத்திரங்கள் உண்மையில் முகநூலில் களமாடிக் கொண்டிருக்கும் எவருடைய நிழலாகவோ இருக்கலாம். ஆனால் முகநூல் வாசமே இல்லாத ஒருவனுக்கு இந்த நாவல் கொடுப்பது என்ன என்ற கேள்வி எழும்புகிறது. நாளைக்கே முகநூல் தன் பெயரை மாற்றிக்கொண்டதைப் போல தன் வண்ணத்தையும் மாற்றிக் கொண்டுவிடலாம். ஒலியும் ஒளியையும் மட்டுமே அனுமதிக்கும் ஒரு செயலி உருவாகி முகநூலே இல்லாமலே போகலாம். அப்போது இந்த நீல நகரத்தின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது தொக்கி நிற்கும் வினா. அப்படி ஒரு பரந்துபட்ட பார்வையை இந்நாவல் உத்தேசிக்கவில்லை. ஒரு சின்ன குறுகுறுப்பையும் வேகச் சிரிப்பு ஒன்றையும் உதிக்கச் செய்யும் முகநூல் பதிவு அளவிற்குத்தான் இருக்கிறது இந்நாவலின் எடையும்.

பா.ரா.வின் புனைவுகளில் சமீபத்திய சாதனை ‘பூனைக்கதை’. அதுவும் ஒரு மாயயதார்த்த பாணியில் தொடங்கும் கதையாயினும், அதிலும் நான்காம் சுவரை உடைத்து அல்லது முன்பக்க அட்டையைக் கிழித்து பா.ரா.வே ஒரு பாத்திரமாக வருகிறார் என்றாலும், அந்நாவலில் கலையின் ஆதியும் அந்தத்தையும் பால் பருகும் பூனையைப் போல உறிஞ்சப் பார்க்கிறார். மயில்சாமியின் வாழ்க்கை நவீன நாவல்களில் காட்டப்படாதவை. அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்களு’க்கு இணையாக ஒப்பு நோக்கக் கூடிய படைப்பு. சின்னத்திரை உலகில் சில காலம் பணியாற்றியவர் என்பதால் அவ்வுலகை மிக அண்மையில் நின்று பதியச் செய்கிறார். சின்னத்திரையில் உச்ச நட்சத்திரம் என ஒருவர் எழமுடியாததின் விளைவாக உருவாகும் சூழல்-வறுமை வாசிப்பிற்குப் புதியது. அது போலவே ஏற்கனவே பிரபலமான அவரின் ‘அலகிலா விளையாட்டு’, ‘கொசு’ போன்ற நாவல்களும் மிகச் சீரிய படைப்புகளே. வெகுஜன வாசிப்பிலிருந்து திவீர இலக்கியத்திற்குள் வருவதற்கு இந்நாவல்கள் பாலமாக அமைகின்றன. இடைநிலை எழுத்தாளர்கள் தற்போது அரிது. வாசிப்பின் மீது ஆர்வம் கொள்ளும் எவரும் நேரடியாகவே தீவிர இலக்கியத்தை நோக்கி வரவேண்டியிருக்கிறது. அப்படி வருபவர்கள் ஏதேனும் ஒரு எழுத்தாளரின் மீது தனிப்பட்ட பிடித்தம் கொண்டு தங்கிவிடுகிறார்கள். பலதரப்பட்ட படைப்புகள் நோக்கிச் செல்லும் முனைப்பு அற்றவர்களாகிவிடுகிறார்கள். இப்புதிய வாசகர்கள் நடுநிலை படைப்புகளை வாசித்து நுழையும்போது இலக்கியத்தின் படிநிலைகளையும் அதன் பல்வேறு வண்ணங்களையும் அறிந்தவர்களாகிறார்கள். அது பா.ராகவன் போன்ற தனித்துவமான எழுத்தாளர்களால் மட்டுமே சாத்தியமாகும். அவ்வகையில் அவருடைய முந்தைய புனைவுகள் முக்கியம் பெறுகின்றன. ஆனால், தற்போது பரீட்சார்த்த முயற்சிகளின் மீதுள்ள ஆர்வத்தாலோ அல்லது கட்டுடைப்புகளின் மீதுள்ள பிரியத்தாலோ தானே கபடவேடமிட்டுதான் இத்தொடரை எழுதியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது!

2 comments for “கபடவேடதாரி: நீல நகரமும் நல்லா இருந்த நாடும்

  1. July 2, 2022 at 7:32 pm

    நிறைய பேர் சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பற்றி பேசியிருந்தாலும், இக்கட்டுரையின் முதலிரண்டு பத்திகளில் உள்ள சொற்தேர்வு அப்பிரச்சினையை ஆழமாக கவனப்படுத்துகிறது.

    முகநூலில் இல்லாதவர்களுக்கு ‘கபட வேடதாரி’ ஒரு informative பிரதியாக உதவும் என்று தோன்றுகிறது. ஆனால், முகநூலில் தொடர்ந்து புலங்குபவர்களுக்கு இந்தத் தொடர் என்ன கொடுக்கும் என்பது கேள்விக்குறி தான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...