சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிவந்த பல நூல்களில் பொன். சுந்தரராசுவின் சுண்ணாம்பு அரிசி, இந்திரஜித்தின் ரயில், ரமா சுரேஷின் அம்பரம் ஆகிய மூன்று நாவல்களும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைக் களமாகக்கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற இந்த மூன்று நாவல்களுமே நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் முதல் நாவல்கள்.
சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆதிக்க காலம் குறித்து ஆங்கிலத்தில் பல படைப்புகளும் மற்ற மொழிகளில் சற்று குறைவாகவும் எழுதப்பட்டுள்ளன. மீரா சாந்த், சதிஷ்வரன் கலாசேகரன் போன்றோரின் ஆங்கில நாவல்களில் இந்தியர்கள் பற்றிய சித்திரமும் தமிழ் புனைவுகளில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் குறித்த சித்திரமும் மாறுபட்டது. மீரா சாந்த் போர்காலத்திலும் அதன் பின்னரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களை உயர்த்திக் கொண்ட இந்தியர்களைப் பற்றிய சித்திரங்களை அளிக்கிறார். சதிஷ்வரன் கலாசேகனின் புனைவு மேலும் நுணுக்கமாக ஜப்பானியர்களிடம் வந்த சிறுவனின் ஊடாகவும் இந்தியக் குடும்பத்தில் வளர்ந்த சீனப் பெண்ணின் வழியாகவும் அடையாளச் சிக்கல்களைப் பேசுகின்றன.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளும் கவிதைகளும் நாடகங்களும் அதிகமாகவே போர் நிகழ்வுகள், தமிழர்கள் எதிர்கொண்ட சிரமங்கள், சீனர்களுக்கு நிகழ்ந்த கொடூரங்கள், இந்திய தேசிய ராணுவம் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றன.
என் வாசிப்புக்குக் கிடைத்த வரையில், ஜப்பானிய ஆக்கிரமிப்பு குறித்துச் சிங்கப்பூரில் வெளிவந்த முதல் படைப்பு ந.பழநிவேலுவின் ‘மனிதாபிமானம்’ சிறுகதை. போர் முடிந்த மறு ஆண்டான, 1946ஆம் ஆண்டு தமிழ் முரசு ஆண்டு மலரில் வெளிவந்தது இச்சிறுகதை. வேறு கதைகளும் இருக்கலாம். ஜப்பானிய ஆதிக்கத்தைப் பின்னணியாகக் கொண்டு பி. கிருஷ்ணன் சிறுகதையும் நாடகமும் எழுதியுள்ளார். மு.தங்கராசன், கா.சங்கையா, ஜெயந்தி சங்கர், சூரிய ரத்னா, சித்துராஜ் பொன்ராஜ் ஹேமா முதலியோரும் சிறுகதைகளை எழுதியுள்ளனர். ஹேமா சிங்கப்பூரில் ஜப்பானியப் படையெடுப்பை ‘வாழைமர நோட்டு’ என்ற தலைப்பில் கட்டுரையாகவும் எழுதியுள்ளார்.
ஜப்பானிய ஆதிக்க காலம் குறித்துச் சிங்கப்பூரில் வெளிவந்த முதல் நாவலான மா. இளங்கண்ணனின் வைகறைப் பூக்கள் 1970களில் தமிழ் முரசில் தொடர் கதையாக வந்தது. பின்னர் 1990ல் நூல் வடிவம் பெற்ற இந்நாவல், இன்றளவிலும் சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க தமிழ்ப் படைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
***
சுண்ணாம்பு அரிசி
மூத்த எழுத்தாளர் பொன்.சுந்தரராசுவின் ‘சுண்ணாம்பு அரிசி’ தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் கிரிம்சன் எர்த் பதிப்பகத்தின் வெளியீடாக 2021ல் வெளிவந்த நாவல்.
குண்டு வீச்சுகளும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் ஒருபுறம் விவரிக்கப்பட, மறுபக்கம் போர்க்காலத்தில் இயல்பாக ஏற்படும் நம்பகமின்மையும் துரோகமும் பிணைந்து செல்கின்றன. ஒரு போரின் சூழலை எழுத்தில் நிகழ்த்திக்காட்டுவது சாதாரணமானதல்ல.
சுண்ணாம்பு அரிசியின் பலம், நம்பகத்தன்மைகொண்ட தரவுகள் எனலாம்.
அவசரகாலநிலையில் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்த சீன, மலாய், இந்திய மக்கள் பிழைத்திருக்க ஒருவருக்கொருவர் உதவ வேண்டிய சூழலைக் காட்டுகிறது நாவல். அதேநேரத்தில், எல்லா இனங்களும் எல்லா நேரங்களிலும் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதாகப் பெரும்பாலான உள்ளூர் புனைவுகள் உருவாக்கி வரும் மாயச் சித்திரத்தைச் சிதைத்து, போர்க்காலத்தில் இயல்பாக ஏற்படக்கூடிய அவநம்பிக்கைகளையும் இனப் பாகுபாடுகயும் நாவல் பேசுகிறது. இதுவரை சிங்கப்பூர் தமிழ்ப் புனைவுலகம் பேசாத சில விஷயங்களை இந்நாவல் பேசுகிறது. நாட்டின் வறுமை நிலையைச் சமாளிக்க மக்கள் இனவாரியாக வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்த்தப்படுகின்றனர். பிந்தாங் தீவுக்கு அனுப்படும் மலாய்க்காரர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நிலவிய கசப்பும் காட்டப்பட்ட பாரபட்சங்களும் ஒரு தனி நாவலாகக்கூடியது. இனங்களின் பண்பாட்டு வெளிப்பாடுகளுடன்; வேறுபாடுகள், வெறுப்பைக் காட்டும் மொழி என ஆழமான சமூகவியல் பிரச்சினைகளைக் கோடிகாட்டி, அன்றைய சிங்கப்பூர் சமூகத்தைப் பெரும்பாலும் தகவல்களாகப் பதிவு செய்கிறார் பொன்.சுந்தரராசு.
ராஃபிள்ஸ் உருவாக்கிய நவீன சிங்கப்பூரின் 200 ஆண்டு கால வரலாற்றில், 1942 பிப்ரவரி முதல் 1945 செம்படம்பர் வரையிலான ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்காலம் ஒரு முக்கியமான காலகட்டம். இந்த மூன்றரை ஆண்டு காலத்தில், கடும் வறுமை, மக்களின் சிந்தனையிலும் கொள்கைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள், அடையாளச் சிக்கல்கள் – தேடல்கள் என்று சிங்கப்பூரைப் புரட்டிப்போட்ட பலவற்றையும் ஆசிரியர் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறார். பிரிட்டிஷ் காலனித்துவ மக்களாக இருந்தவர்களில், முதல் தலைமுறையினர் இந்தியர்களாகவும் சீனர்களாகவும் மலாய்க்காரர்களாகவும் உணரத்தலைப்பட்டனர். அதேநேரத்தில், சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தலைமுறையினர் இந்த மண்ணின் மக்களாக, இந்நாட்டை தங்கள் நாடாக உணரத் தொடங்கினர் என்பதை முனுசாமி, தமிழ்மணி, பிந்தாங் மலாய்க்காரர்கள், முத்து, அவன் நண்பர்கள், ஆ லொங், சொங் யாவ், கண்ணம்மா, வடிவு போன்ற பாத்திரங்கள் வழி வெளிப்படுத்துகிறார். இந்தச் சமூக சிந்தனை மாற்றம் மின்னலாக வாசகர் சிந்தனையில் தெறிக்க, இப்பாத்திரங்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டியுள்ளது.
முதல் வெடிகுண்டுத் தாக்குதலின்போது, மூன்று இனத்தவர்களும் ஒன்றாகப் பரிதவிக்கிறார்கள். தொடரும் நிச்சயமற்ற நிலைமை மக்களிடையே அவநம்பிக்கையையும் தற்காப்பு மனநிலையையும் அதிகரிக்கிறது. சீனப்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தால் தங்களுக்கு ஆபத்து வருமோ என்ற அச்சத்துடனேயே வடிவின் குடும்பம் ச்சூ மெய்யை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ளும்போது மனித மன உணர்வுகளைச் சூழல் கையெலெடுத்துக் கொள்வதை ஓரிரு வார்த்தைகளில் காட்டிவிடுகிறார் ஆசிரியர். அதன்பிறகு ச்சூ மெய்யைச் சீரழித்த ஜப்பானிய அதிகாரியை வடிவு பழிவாங்குவது என்று லட்சியவாதப் போக்கில் நாவல் சென்றுவிடுகிறது.
கம்யூனிஸ்ட் போராளிகளுடன் இணையும் தமிழர், நேதாஜியின் போக்கை விரும்பாத காந்தியவாதி, கணிவான ஜப்பானிய ஆசிரியர் என்று சிங்கப்பூர் தமிழ் நாவல்களில் காணக்கிடைக்காத பாத்திரங்களைக் கண்டெடுத்துள்ள பொன்.சுந்தரராசு, சிங்கப்பூர் – மலேசியாவில் வாழ்ந்த இந்தியர்கள் எல்லாருமே ஐஎன்ஏ-வை ஆதரித்தவர்களாகவும் இந்தியத் தேசியவாத சிந்தனையைக் கொண்டிருந்ததாகவும் கட்டமைக்கப்படும் கற்பனையை உடைத்துள்ளார். அதே நேரத்தில், கையில் கிடைத்த இவர்களைச் சக்கரத்தில், உருட்டி உருட்டி கலைப்பொருளாக்கும் வித்தையைக் கைக்கொள்ளாமலும் விட்டுவிட்டார்.
நாவலுக்கு வலுவூட்டுவது பொன்.சுந்தரராசுவின் மொழிநடை. சிங்கப்பூரின் இடங்கள், சாலைகள், உணவுகள், மக்கள் பெயர் என்று இங்கு புழங்கும் தமிழ்- பிறமொழி பெயர், வினைச்சொற்களையும் வட்டார வழக்குகளையும் அதே ஒலிப்பில் வாசிக்கும்போது கிடைக்கும் சுகமே தனிதான், குறிப்பாக, பல படைப்புகளில் கடித்துக்குதறப்படும் சூழலில். மலாயும் சில சீனச் சொற்களும் கலந்த 1940களின் சிங்கப்பூர்த் தமிழ் அன்றைய வாழ்வின் ஒரு பதிவு.
இந்நாவல், தான் கொண்டுள்ள வரலாற்றுப் பின்புல பலத்துடன் மேலே செல்லாமல் இருக்க புனைவுக்தியே முதன்மை காரணமாக உள்ளது. கதாசிரியர், தமிழ்மணி, மற்ற கதைமாந்தர்கள் என எல்லாருமே தகவல்களையும் அதற்கு விளக்கங்களையும் சொல்வதைவிடுத்து, சம்பவங்களாக, உரையாடல்களாகக் காலத்தையும் அதன் காட்சிகளையும் நகர்த்தியிருந்தால் புனைவுத்தன்மையும் செறிவும் கூடியிருக்கும். பொன்.சுந்தரராசு தாம் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதை மறந்துவிட்டு, புனைவு ஆசிரியராக நாவலிடம் தன்னை முழுமையாக ஒப்படைந்திருந்தால் நாவல் வேறோர் உயரத்தை எட்டியிருக்கும்.
நேர்கோட்டுக் கதை சொல்லல் முறையில், நேரடியான எளிமையான வசனங்களில் சொல்லப்படும் நாவல். உணர்வுகளும் தேடலும் நாவலுக்கு வெளியே நிற்கின்றன. மிகை நாடகீயமான தருணங்கள், லட்சியவாத உணர்வுத்தேய்வழக்கு என இந்நாவல் தன் காலத்தை வெகுபின்னால் கொண்டு சென்றுவிட்டது.
சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தரவுகளையும் துல்லியத்துடன் தெரிந்துகொள்ள வரலாற்று நூல்களும் ஆவணங்களும் ஏராளமாக உள்ளன. தரவுகள் தெரிந்தபோதும், ஜப்பான்காரன் ஏன் அத்தனை பேரைக் கொன்றான்? அவனை அதை நிகழ்த்தச் செய்தது எது என்ற உணர்வையும் அர்த்தத்தையும் மனித மனம் தேடிக்கொண்டே இருக்கும். அதுவே மனிதநேயத்தின் சாராம்சம். ஜப்பான்காரன் தலையை வெட்டினான் என்பது தரவு. வாளை எடுக்கும் முன்னர் அவன் எப்படி ஒரு தாயின் மகனாக, காதலனாக இருந்திருப்பான், வெட்டிய பின்னர் அவன் மனம் என்னவாகியிருக்கும் போன்ற கற்பனைகளை விரிப்பது புனைவு. வரலாற்று நிகழ்வுகளின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் அசைத்துப் பார்ப்பதே வரலாற்றுப் புனைவின் பணி. இது, இடங்கள், காலங்கள் ஊடாகப் பயணம் செய்து, மக்களின் உள்மனதை வெளிப்படுத்துவதன் மூலம் சொல்லப்படாத கதைகளைச் சொல்கிறது, மிகவும் சிக்கலான உண்மையை உணரும் வாய்ப்பைத் தருகிறது.
அதேவேளையில், நோக்கத்தை வரையறுத்து எழுதப்படும் புனைவு எல்லைகளைச் சுருக்கி விடுகிறது. எனவே, இந்நாவலில் எழுத்தின் வழி எழுத்தாளர் கண்டடைந்த வாழ்வு குறித்த தனித்த அபிப்பிராயங்கள் என எதுவும் இல்லை.
ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ் நாவல் இலக்கியம், கிளைகள் விரிந்த பெருமரம். புதிதாக எழுதப்படும் ஒவ்வொரு படைப்பும் இன்றைய ரசனைக்கு ஏற்ற சத்தைப் பெற்றிருக்க வேண்டியுள்ளது.
ரயில்
தங்கமீன் பதிப்பகத்தின் வெளியீடாக, தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் 2021ஆம் ஆண்டு வெளிவந்தது இந்திரஜித்தின் ரயில் நாவல். எழுத்தாளரின் ‘வீட்டுக்கு வந்தார்’ சிறுகதையின் விரிவாக்கமாக இந்நாவலைக் கொள்ளலாம். சிக்கலில்லாத மொழி, எளிமையான நடை, சின்ன சின்ன வாக்கியங்கள். ஒரே மூச்சில் வாசித்துவிடலாம்.
கதையின் காலம், இரண்டாம் உலகப் போர், களம், சயாம் மரண ரயில். ரயில் பாதை அமைக்கும் பணியில் தமிழர்கள் அனுபவித்த துன்பம் உட் கரு.
“நேத்தாஜி இருக்கும்போது இதெல்லாம் எப்படி நடந்துச்சு?” என்று கொதிக்கிறான் சுபாஷ் சந்திரபோஸ் மீது மிகுந்த கோபத்தில் இருந்த முத்து. “தண்டவாளம் இருக்கும். ஜப்பான்காரன் இருப்பான். நாம இருக்கமாட்டோம். இங்கிருந்து தப்பிச்சு போனாதான் உண்டு,” என்று ஒருமுறை தப்பியோடி, பிடிபட்டு பல்லுடைந்தவன் இரண்டாம் முறையும் தப்பியோடுகிறான். ஒரு வேகத்தோடும் எதிர்பார்ப்போடும் தொடங்குகிறது நாவல். அடுத்து, வலுக்கட்டாயமாக ஜீப்பிலும் புகைவண்டியிலும் அடைத்துக்கொண்டுவரப்பட்டது என்ன வேலைக்கென்று தெரியாமலே சோர்வில் படுத்திருந்த 18 வயது செல்வராஜ் செத்துப் போகிறான். தொடர்ந்து சாம்பா, முத்து, ராகவன், கிருஷ்ணன். செல்லையா, குருக்கள் நாராயணன், சந்திரன், கன்னியப்பன், ராஜேந்திரன், மாணிக்கம், லிங்கம், ஸ்ரீதரன், முனிரத்தினம், முனுசாமி – மாரிமுத்து சகோதரர்கள். முருகேசு, ஆசீர்வாதம், அண்ணாமலை, விசுவலிங்கம், வாசு, கண்ணையா அண்ணன், ராம்குமார், சின்னையா, குணாளன், அன்பழகன், சேகர், கண்ணன், கோபாலு, முனுசாமி என்று வரிசையாக 30க்கும் மேற்பட்டவர்களின் கதைகள். பணக்காரன், படித்தவன், கோயில் வேலை பார்த்தவன், ரப்பர் பால் கீறிக்கொண்டிருந்தவன், தூங்கிக்கொண்டிருந்தவன், ஆள்பிடித்து வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தவன், சகோதரனைத் தேடி வந்தவன், நல்ல வேலை என்று நம்பி வந்தவன் என்று ஒவ்வொருவரும் பல்வேறுபட்டவர்கள்.
திக்குத்தெரியாத காட்டில், கோழிக்கூண்டைவிட மோசமான மூங்கில் கொட்டகைகளில் உறங்கி, கிடைத்த நீரைப் பருகி, வாயில் வைக்க முடியாத கிழங்குக் கஞ்சியைக் குடித்துப் பசியோடும் நோயோடும் போராடும் இந்தக் கூலிகளின் உயிரைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குகின்றனர் ஜப்பானியச் சிப்பாய்கள். பசி, நோய், விபத்துகள், தண்டனைகள், சித்ரவதைகள், பைத்தியக்காரனின் துப்பாக்கியாலும்கூட வகைதொகையின்றி அன்றாடம் கூலிகள் மடிகின்றனர். சிலர் பிணமாக நடமாடுகின்றனர். வேறு சிலர் தப்பி ஓடுகின்றனர். அதில் சிலர் பிடிபட்டு உயிர்விடுகின்றனர். இவர்களோடு, கதையின் நாயகனான துரை, கூலிகள் சிலரது குடும்பத்தினர், மண்டோர்கள், ஜப்பானியர்கள், மலாய்க்காரர்கள் என 152 பக்க நாவலில் ஏராளமான பாத்திரங்கள். பல சம்பவங்களையும் கதைகளையும் ரயில் பாதை அமைத்தல் என்ற ஒரு புள்ளியில் இணைக்கிறார் ஆசிரியர். இத்தனை பேர் வந்து போனாலும், கிட்டத்தட்ட எல்லாருமே ஒரே மாதிரியாகக் கேலியும் குத்தலுமாகப் பேசுவதால் யார் பேசுகிறார்கள் என்ற குழப்பமில்லை. காரணம், அதற்கான தேவை நாவலில் ஏற்படாமல் போகிறது.
ரயில் பாதை போட இழுத்துச் செல்லப்பட்ட துரை வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் எளிமையான, முரட்டு இளைஞன். மனைவி, மகன் நினைவில் துன்பங்களைத் தாங்கி உயர் வாழ்கிறான். தன்மீது ஆசைகொள்ளும் பெண்ணையும் நிராகரிக்கிறான். எப்படியோ அங்கிருந்து தப்பியும் விடுகிறான். சயாம் ரயில் பாதை வேலைக்குப் போனவர்கள் எல்லாரும் இறந்துவிட்டதாகச் செய்திவர, அவனது மனைவி ரப்பேச்சாவுக்கு மறுமணம் செய்து வைக்கிறார் பணக்கார மாமனார். சிங்கப்பூர் திரும்பி வரும் துரை, எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் வீட்டிலிருந்து வெளியேறுகிறான். “ஜப்பான்காரன் யாரையோ அடிக்கிறான் நமக்கென்ன என்று இருந்தது தப்பாப் போச்சு,” என்று எண்ணியவனாக கடற்கரையில் பைத்தியக்காரன் போல குர்ர்ரா என்று கத்த, அங்கிருந்தவர்கள் பயந்து ஓடுகிறார்கள். விரக்தியில் இருக்கும் அவன் அதை ரசிக்கத் தொடங்குகிறான். ரயில் பாதை போடும் இறுதிக்கட்டத்தில், ஜப்பானிய சிப்பாய்களிடம் காணப்பட்ட பைத்தியக்காரத்தனம் இது. வரிக்கு வரி வரும் கிண்டலுக்குள் சிக்கிவிடாமல் கூர்ந்து வாசித்தால், பழக்கமில்லாத வெயிலும் மழையுமான காட்டுச் சூழலும் கடும் வேலையும் நிச்சயமின்மையும் கூலிகள், ஜப்பானியர் எல்லாரிடமும் மெல்ல மெல்ல இந்தப் பைத்தியக்காரத்தனத்தை ஏற்படுத்துவதைக் காணலாம்.
தாய்லாந்து — பர்மாவை இணைக்கும் 415 கிலோ மீட்டர் சயாம் ரயில் பாதை ஜப்பானியரின் வரலாற்றில் மாற்ற முடியாத கொடுங்கறை. ஆசியத் தொழிலாளிகள், போர்க்கைதிகளின் ஆறாத பெருந்துயர். காடு திருத்தி பாதை போடும் இந்தக் கடுமையான உடல் உழைப்பு வேலைக்குக் கிட்டத்தட்ட 240,000 பேர், பல்வேறு பொய்களால் ஏமாற்றப்பட்டுக் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டனர். போர்க் காலத்தின் வறுமை, நோய், கேள்வியற்ற தண்டனை என மக்கள் பல வேதனைகளை அனுபவித்த நிலையில், சாலைகளில் நடந்துகொண்டிருந்தவர்களும் பசியில் துடித்துக்கொண்டிருந்தவர்களும் பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த மரணப் பாதையில் கிட்டத்தட்ட 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கை மா.இளங்கண்ணன், மலேசியாவின் ஆர்.சண்முகம், அ. ரெங்கசாமி, சா. அ. அன்பானந்தன், கோ.புண்ணியவான் போன்றோர் எழுதியுள்ள இரண்டாம் உலகப் போரின் மிகக் கொடூரமான மனித அவலத்தின் கோரத்தைத் தன் நையாண்டி மொழியில் எழுதியுள்ளார் இந்திரஜித். நையாண்டி என்பது ஒரு வலுவான வாள்தான். அதை நுட்பம் அறிந்து வீசாதபோது கத்தரிக்காய் நறுக்கக்கூட உதவுவதில்லை.
ஜப்பானிய ஆட்சியில், பொருளியல் நலிவு, வலுக்கட்டாயமாகக் கட்டுமானப் பணித்திட்டங்களில் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டது என்று மற்ற இனத்தவருடன் இந்தியர்களும் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியதையும் அதை எதிர்த்து துணிந்துநிற்கும் எண்ணமும் உடல் பலமும் இருந்தபோதும் அதைச் செயலாக்கும் மனபலம் தமிழ் சமூகத்துக்கு இல்லாதிருந்ததையும் சொல்லும் நாவல் அதை கேலியோடு விமர்சிக்க முயன்றுள்ளது.
இடம், சாப்பாடு, மனநிலை எதுவும் சரியில்லை, காலராவும் மலேரியாவும் உயிர்களைப் பறிக்கின்றன. சிலர் தப்பித்து ஓடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு கணமும் வலி. மனம் பேதலிக்கும் நிலையில் வாழ்கிறார்கள். இந்தக் கொடுமைகளைத் தாங்கி வாழும் இந்நிலைக்கு இந்த மக்களது வறுமையும்; அந்த நிலையிலிருந்து மீள முடியாத அவர்களது கையாலாகாத்தனம் போன்றவையும் காரணம் என்பதாக இந்தக் கேலிகள் அமைந்துள்ளன.
ஒவ்வொருவரும் ஜப்பான்காரனை எதிர்க்க நினைக்கிறார்கள். எல்லாருமே ஒன்று சேர்ந்து அடித்தால் அவனை விரட்டிவிடலாம் என நாவல் முழுக்க சொல்லி சொல்லி மாய்கிறார்கள். ஆனால், ‘அடிச்சானா பேசாம வாங்கிக்குவோம். நாம கொடுக்கிற நேரம் வரும். அவசரப்பட்டிராத’ என்றே பயந்திருக்கிறார்கள். தமிழர்களின் மனப்போக்குகள், அறியாமைகள் குறித்த விமர்சனங்கள் நாவலெங்கும் நிறைந்திருக்கின்றன. ஆனால், அதை எடுத்துக்காட்டும் காட்சி நாவலில் இல்லை.
ஆசிரியர் எள்ளல் வசனங்கள் வழி அன்றைய அரசியல் சூழலை விமர்சிக்க முயற்சி செய்கிறார் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாவல் முழுவதும் வியாபித்துள்ள நையாண்டி, பத்தி எழுத்துக்கான தன்மையுடன் வெளிப்படுகிறது. அதனால் நாவல் எனும் பேரனுபவம் இதில் நிகழாமல் போகிறது.
கொடும் நிகழ்வில் நமது அறியாமையையும் அபத்தங்களையும் நாமே பகடி செய்யலாமா என்றால் செய்யலாம். புனைவுக்கு அத்தனை சுதந்திரமும் உண்டு.
பாரதியாரிலிருந்து புதுமைப்பித்தன், நாஞ்சில் நாடன், ஷோபாசக்தி, ஜெயமோகன் என முக்கிய தமிழ் எழுத்தாளர்கள் பலரும் பகடி செய்யும் அங்கதப் படைப்புகளை எழுதியுள்ளனர். இவர்கள் கதைகளில் சம்பவங்களும் செயல்களும் உச்சபட்சமாக ஒரு கருத்தையோ அல்லது செயல்பாட்டையோ மறைமுகமாக விமர்ச்சிக்கும். ஆனால், கதை சொல்லலிலோ, பாத்திரங்களின் உரையாடலிலோ நையாண்டி இருக்காது. இத்தகைய அங்கத எழுத்துகளில் நிகழ்வு பகடியை வெளிப்படுத்தும். பகடி செய்வதற்கான நியாயங்களும் தர்க்கங்களும் கூடவே கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அத்தகைய நியாயங்களையோ தர்க்கங்களையோ ரயில் கட்டமைக்கவில்லை. வாசிப்பவரைக் காட்டிலும் அறிவார்ந்த தர்க்கங்களைக்கொண்டிருக்காத படைப்பு ஆழமாகக் கவர்வதில்லை.
மோசமாகத் திட்டிய ஒருவரிடம், “நன்றி” என்பது கிண்டல், ஆங்கிலத்தில் sarcasm. நகைச்சுவை, நக்கல், மிகைப்படுத்தல் மூலம் ஒரு கருத்தாக்கத்தை, செயலை அல்லது மனிதரைக் கேலி செய்யும் படைப்பு அங்கதப் படைப்பு (Satire).
அங்கதச் சுவை என்பது கேலி, கிண்டல் பேச்சிலிருந்து சற்று மேம்பட்டு, விமர்சிக்கும் பாங்கு. பாரதியாரின் காக்கா பார்லிமெண்ட் கதையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். தாக்குதலும் நகைச்சுவையும் இணைந்தே இருக்கும். இது சற்றுக் கடுமையான தொனிப் பொருளைக் கொண்டிருக்கும். இதன் ஆழம் மெல்ல மெல்ல உணரத்தக்கதாக இருக்கும். அல்லாதவற்றை நேர்படுத்தும் கண்டனக் குரலும் அங்கதமாகின்றது. குறைகளையும், தவறுகளையும் சுட்டிக் காட்ட சிறந்த வழிமுறைகளுள் ஒன்றாக அங்கதம் இருக்கிறது. மற்றொன்று, அங்கதபாணி எழுத்துகளில் உள்ளிருந்து எழுதுவதற்கும் வெளியில் நின்று எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு.
எனினும் சமூகம் சந்திக்கும் சிக்கல்கள், இடர்பாடுகளில் இருந்து மீள அங்கதத்தைத் தேர்வு செய்வது என்பது அச்சமூகம் எதிர்கொள்ளும் சிக்கலின் அளவு, அதன் தீவிரத்தன்மையைப் பொருத்தே அமைய வேண்டும். மேலும், சிக்கல்களைக் கடப்பதோடு, அவற்றைக் களைவதற்கான சரியான தீர்வுகளையும் காண வேண்டும்.
சோவின் ‘முகமது பின் துக்ளக்’ போன்ற நாடகங்கள் அங்கதச்சுவை நிறைந்தவை. ஆனால், அவற்றை அரசியல் விமர்சனங்களாகப் பார்க்க முடியுமே அன்றி அதற்கப்பால் நம்மை இட்டுச்செல்லும் இலக்கியமாகப் பார்க்கமுடியாது. இந்திரஜித்தின் நாவல் மொழியின் தேர்வு அத்தகையது எனலாம்.
நாவல் சில தனித்த அனுபவங்களையும் வழங்கத் தவறவில்லை.
“அடிக்க ஆவலாக வரும் சிப்பாய், கிழிந்த கூடை மலாய்க்காரர் கையில் இருப்பதைப் பார்த்துவிட்டுப் பேசாமல் போய்விடுகிறான்,” என்ற வரி, மலாய்க்காரர்களும் கட்டுமானம் உள்ளிட்ட கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதையும், ஆனால் அவர்களை ஜப்பானியர் துன்புறுத்தவில்லை என்பதையும் காட்டுகிறது. பெரிதாக அறியப்பட்டிராத ஒரு முக்கிய செய்தி இந்நாவலில் ஒற்றைவரியில் கடந்து போகிறது.
ராகவனின் அப்பா ஒரு சீனர். லீ ஹொக் ஹியன். அம்மா ருக்குமணி சிறு வயது முதல் ராகவனைக் கையில் பிடித்துக்கொண்டு தினமும் கோயிலுக்குப் போகிறார். ராகவன் தமிழ் பேசுகிறான். தமிழனாக மாற்றப்படாமல், மௌன மொழி பேசும் சீனர், தமிழ் எழுத்துகளில் அதிகம் காணப்படாதது.
சேற்றில் புதைந்து உயிரிழந்ததில் மழைக்குப் பயப்படும் ஜப்பானியர்கள், தூக்கு மாட்டப்படும் சிப்பாய்கள், அடியைத் தடுக்கும் ஒரு சிறு எதிர்ப்புக்கும் உரத்த குரலுக்கும் திகைத்து நிற்கும் ஜப்பானியர் என்று போரின் யதார்த்தமான சூழலலைக் காட்ட முயல்கிறது நாவல்.
காடு, அதன் சூழல், சிவன் கோயில், நூற்றுக்கணக்கில் அநாதரவாக இறந்தும் இறந்துகொண்டும் இருக்கும் தொழிலாளிகளின் பிணக்கிடங்கு, மக்கள், சிப்பாய்கள், யானைகள் என எல்லாமே கதைமாந்தரின் செயல்கள் வழியாகக் காட்சிகளாக விவரித்திருந்தால் இந்நாவலின் தளம் மேலும் விரிந்திருக்கும்.
***
அம்பரம்
ரமா சுரேஷின் ‘அம்பரம்’ நாவல் மோக்லி வெளியீடாக 2021ல் வெளிவந்தது.
“உம்மாவின் பின்னால் சுற்றியது போதுமென முடிவெடுத்தவன் புத்தரின் முன்னால் குத்துக்காலிட்டு அமர்ந்தான்,” என்று தொடங்குகிறது அம்பரம் நாவல். கதை நாயகனான யூசுப்பால் தன் வாழ்வில் யோசித்து எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போவதும், எடுக்கும் முடிவுகளும் நிலைக்காமல் போவதுமே நாவலின் கதை.
யூசுப், பர்மியத் தந்தைக்கும் இந்திய முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்தவன். சொல்லிக்கொள்ளாமல் ஞானப்பாதையில் சென்றுவிட்ட தந்தையைத் தேடி தாயுடன் அலைந்தவன் பூகம்பத்தில் தாயையும் இழக்கிறான். 11 வயதில் அநாதையான அவனை தமிழகத்திலிருந்து பர்மாவில் குடியேறிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளியான சிவராமன் மகனாக ஏற்கிறான். ஐந்து பெண்களைக் கொண்ட சிவராமனின் குடும்பம் தங்களின் ஆண் வாரிசாக அவனைக் கொண்டாடுகிறது. தன் அடையாளத்தைத் தேடியலையும் யூசுப் குத்துச்சண்டையே தன்னைக் கண்டவதற்கான வழி என அறிகிறான். அது திரண்டு வரும் வேளையில், குருவாக இருந்த நண்பன் குத்துச்சண்டை மேடையிலேயே மரணிக்கிறான். குற்றவுணர்ச்சியில் தன்னைத் தொலைத்தவனை மீட்டெடுக்கிறாள் காதலி காஜியா. பிறகு மனைவியான காஜியாவோடும் மகனோடும் வேலை நிமித்தமாகச் சிங்கப்பூர் வருபவன் போர்ச் சூழலில் சிக்கிக் கொள்கிறான். மனைவி, குடும்பம், பிள்ளைகள், உறவுகள் எல்லாவற்றையும் இழந்து வெறுமை நிறைந்த மனதோடு இலக்கற்ற பயணத்தில் பர்மாவுக்குக் கப்பல் ஏறுகிறான்.
போர்க்காலச் சுழலில் சிக்குண்டு அதன் போக்கில் சுழலும் எளிய மக்களின் வாழ்க்கை எனும் பெரிய கருப்பொருள். பர்மாவிலிருந்து (இன்றைய மியன்மார்), இந்தியா, சிங்கப்பூர் என்று விரியும் பெரும் நிலப்பரப்பு. பல இன மக்கள். அத்தனையையும் ஒன்றுசேர்த்த ஆடலை வானமான, கடலான, வெளியான, திசையான அனைத்துமான ஒரு பேரம்பரத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற உள்ளார்ந்த பெருங்கனவுடன் எழுதப்பட்டிருக்கும் நாவல் அம்பரம். முதலாவது, இப்படி ஒரு கனவுடன், தெரியாத களத்துக்குள் காலடி எடுத்துவைப்பது என்பது சாதாரணமானதல்ல. இந்தப் புனைவூக்கத்திற்கு ரமாவைப் பாராட்ட வேண்டும்.
அடுத்தது, அவர் நாவலில் தொட்டுள்ள வரலாற்றுக் காலம். சாதி, வர்க்கம், நிதியாதாரம் என எல்லா அடுக்குகளிலும் அடிமட்டத்திலிருந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த முக்கியமான காலகட்டம் இது. இந்த வரலாற்றின் முக்கியமான தருணங்களைக் கண்டடைந்து அவற்றைத் தரவுகளின் துணைகொண்டு புனைவாக்குவதென்பது மிகச் சவாலான முயற்சி.
எனினும் மொழியின் கலைவடிவமாகத் திகழ்வது படைப்பிலக்கியம். அந்தக் கலைக்குள் படைப்பாளரது உழைப்பு எவ்வளவு தீவிரமாக இயங்கி, புனைவை ஆழப்படுத்தியுள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
யூசுப்பின் பெரும்பயணத்தில் அவனை நகர்த்திச் செல்பவர்களாகவும் அவனைச் செதுக்குபவர்களாகவும் உள்ள பெண்களால் நாவலைக் கோத்தெடுக்க முனைகிறார் ரமா சுரேஷ். அறிவாளிகளாக, அனுபவசாலிகளாக, வாயாடிகளாக, பேசாமடந்தைகளாக, ஓவியமாகக்கூட வரும் அந்தப் பெண்கள் எல்லாருமே தாய்மை ததும்ப ததும்ப அவனுக்கு வாழ்வைக் காட்டுகிறார்கள்.
கணவனைத் தேடித்திரியும் அம்மா ஆயிஷா அவனுக்குத் தேடலைச் சொல்லித் தருகிறாள். மதம், மொழி, சமூக அமைப்பு என பல கட்டுகளைக் கடந்த ஒரு வாழ்க்கைக்கு அவனைப் பழக்குகிறாள். சவுடானில் அவனோடு அதிகமாக உரையாடுபவராகவும் அவனைப் பற்றி அதிகம் யோசிப்பவராகவும் சிவராமன் இருந்தாலும், அவர் குடும்பத்துப் பெண்களே அவனை அசைக்கிறார்கள். அப்பாயி காத்தாயியும் இரு அக்காள்களும் அவனுள் பாசத்தையும் பொறுப்பையும் விதைக்கிறார்கள். கணவரும் மாமியாரும் இறந்து, குடும்பப் பொறுப்பை ஏற்கும்வரையில் நாவலில் ஒரு வார்த்தைகூடப் பேசாத ஆராயி, மீண்டுவரும் யூசுப்பிடம் எதுவும் பேசாமலேயே குடும்பச் சுமையை ஏற்க வேண்டிய கடமையை உணர்த்துகிறாள். ஓவியமாக இருக்கும் ஊ துன் ஃபேயின் அம்மா அவன் மனதை அமைதிப்படுத்தி, அவன் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறாள். வயதுக்கு மீறிய அறிவுத் தேடலுடனும் வெறுமையுடனும் அலைந்துகொண்டிருந்தவனை தரையிறக்குபவள் காஜியா. காஜியாவின் தாய்மை வெளிப்படும் சில இடங்கள் தொடுகின்றன. காதலில் உறுதிப்பாட்டோடு குற்றவுணர்ச்சியிலிருந்து அவனை மீட்கும் அவள், பின்னர் புயலடிக்கும் திசையிலெல்லாம் அலைபாயும் தனது உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் அவனை அலைக்கழிக்கிறாள். அல்லாடும் அவனை நோனா, சீனத்தி, மொய்தீனின் மனைவி என்று சிங்கப்பூரில் அவன் சந்திக்கும் பல பெண்களும் தாங்கிப் பிடித்தும், மறுமுனைக்குத் தள்ளியும் அந்த ஆட்டத்தில் பங்குகொள்கிறார்கள். நாவலுக்குள் அவனைக் கையைப் பிடித்து ஆயிஷா அழைத்து வருவதைப்போல, கடைசியில் அவன் கையை விடுவித்து அவனைப் பயணம் அனுப்புகிறாள் ஆலி. இந்தப் பெண்கள் எல்லாருமே முழுமை பெற்றும் முழுமையடையாமலும்; காரியத்தோடும் காரணமில்லாமலும் தம் போக்கில் நாவலெங்கும் நடமாடுகிறார்கள். ஆயிஷாவின் முதலாளியான ஷி டோவின் ஆளுமையை விவரிக்க ஓர் அத்தியாயத்தை எழுதியிருக்கும் ஆசிரியர், அந்த ஆளுமை யூசுப்பை என்ன செய்தது என்பதைச் சொல்லவில்லை. 26 வயதுக்குள் வாழ்வின் அதி உயரங்களையும் வீழ்ச்சிகளையும் அனுபவித்து, முற்றிப் பழுத்த யூசுப்பின் மனவெறுமையை அல்லது ஞானத்தை ஆலி எப்படித் துலக்கினாள் என்பதையும் காட்டவில்லை.
துயரத்தைக் கடத்த பாத்திரங்களே அழுது அழுது வாசகர் துயரடையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். மிகை நாடகீயம் கொஞ்சம் எட்டியே நிற்க வைத்து விடுகிறது.
நாவலின் கதாபாத்திரங்கள் எல்லாருமே எல்லா நேரங்களிலும் (ஒருசில ஜப்பானிய வீரர்களைத் தவிர) நல்லவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்கின்றனர். எத்தகைய துன்பத்தையும் ஏற்று வாழ்கிறார்கள். இயல்பான தயக்கமோ, அச்சமோ இன்றி ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். இப்படி மாந்தர்கள் அனைவருமே நல்லவர்களாக இருக்கலாம்தான். ஆனால், அப்படி அவர்கள் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்குமான சூழல் தேவையாகிறது. தாத்தா வணக்கம் வைக்காததற்காக அவர் கையிலிருந்த சிறுகுழந்தையை ஜப்பான்காரன் கொன்று திரிந்துகொண்டிருக்கும் சூழலில், தன் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு ஒரு சீனத் தாய் கேட்கும்போது, இதிலென்ன சிரமம் இருக்கிறது, என்று வெகு சாதாரணமாகக் கேட்கிறாள் காஜியா.
நாவலில் உணர்வுபூர்வமாகவும் தர்க்கபூர்வமாகவும் ஒன்றை நிலைநாட்டும்போதே, அதன் அடுத்த பக்கத்தையும் எழுத்தாளர் உணர வேண்டும். உதாரணமாக, உயர்குடிகளில் இருந்து வந்த ஆஸிரும் நாயரும் சுயதொழிலில் ஈடுபட, சிவராமன் ஆயுசுக்கும் செட்டியாரிடம் கூலியாக இருப்பது நன்றிக்கடனா அல்லது நூற்றாண்டுகளாக ஊறிவிட்ட அடிமை மனதின் தாழ்வு மனப்பான்மையா என்ற ஐயம் எழுந்தால் உடனே நாவல் அடுத்த நிலைக்குத் தாவும். யூசுப்பை படிக்க வைத்து பெரியவனாக்குவதன் மூலம், தன்னுடைய கீழ்நிலையை மாற்ற நினைக்கிறார் சிவராமன். அவர் யூசுப்பை மகனாக ஏற்றுக் கொண்டது மனிதாபிமானத்தால் மட்டும்தானா, தன் சுமையை அவன் மீது ஏற்றிவைக்கும் சுயநலமும் இருக்கிறதா, கணவனின் இறப்பு வரையில் ஆராயி மௌனமாக இருந்தது, அன்றைய குடும்பக் கட்டமைப்பில் தன் பேச்சு எடுபடாது என்ற கழிவிரக்கத்திலா அல்லது தன் முறைக்கான காத்திருப்பா என்று பல இடங்களில் மறுபக்கத்தைப் பார்க்கும்போது நாவல் ஊடாக ஆசிரியர் கண்டடையும் வாழ்வின் உண்மைகள் புதிதொன்றாக இருக்கும்.
இந்த நாவலின் அடிப்படையான சிக்கல் அத்தியாயம், பக்கத் தொடர்ச்சிகளில் காணப்படும் ஒழுங்கின்மை, முடிவுறாத பக்கங்கள். உரையாடல்களில் பேச்சுமொழிக்கிடையே எழுத்துமொழியும் ஆசிரியர் – தன்கூற்றில் எழுத்துமொழிக்கிடையே பேச்சுமொழியும் இடம்பெறுவது. இதை ரமா அறிந்திருக்கக்கூடும். இதுபோன்ற மேலும் சிலவற்றையும் அவர் தெளிவாக்க வேண்டும். அடுத்த பதிப்பில் செம்மையாக்கப்பட வேண்டிய முக்கியமானவற்றை அக்கறையினால் இங்கே குறிப்பிடுகிறேன்.
1. அம்பரம் நாவலில் செம்பவாங் பகுதியிலிருந்த வாக் ஹசான் மலாய் கிராமத்திற்கு (கம்போங்) வந்த யூசுப்பை அங்கிருப்பவர் “உங்காளுங்க கடை தேக்கா பக்கம் இருக்கு, அங்க உங்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கிடலாம்,” என்கிறார் (பக்கம் 364). கதை நடைபெறும் காலகட்டமான 1940களில் தமிழ்ப் பள்ளிகள், தமிழ் அமைப்புகள், வழிபாட்டு இடங்கள், இந்தியக் கடைகளுமாக தமிழர்களும் மலையாளிகளும் மற்ற இந்தியர்களும் அதிகமாக வாழ்ந்த பகுதிகளில் ஒன்று செம்பவாங். இந்தியர்களுக்குத் தேவையான எல்லாமே அங்கேயே கிடைத்தன. மற்றது சிலிகி ரோடிலிருந்து கிட்டத்தட்ட கிச்சனர் ரோடு வரையில் அந்தக் காலத்தில் சிராங்கம் என்றே அழைக்கப்பட்டுள்ளது. இன்று தேக்கா மார்க்கெட் இருக்கும் இடத்தில் முன்னர் பெரிய தேக்கா சந்தை இருந்துள்ளது. அந்த இடத்தை தேக்கா சந்தை என்பார்கள். சிராங்கம், தேக்கா என்ற சொல் வழக்கானது எண்பதுகளில். அது லிட்டில் இந்தியாவானது வெளிநாட்டினர் வரத்து அதிகரித்து, எம்ஆர்டி வந்த பிறகு. அதாவது 1990களுக்குப் பிறகு. ஒரு காலத்தில் சிராங்கத்தைவிட அதிகமான இந்திய, தமிழ்க் கடைகள் இருந்த இடம் மார்க்கெட் ஸ்திரீட், சிசில் ஸ்திரீட், ராபிள்ஸ் பிளேஸை உள்ளடக்கிய வட்டாரம். இடங்களை மெனக்கெட்டு குறிப்பிடும்போது, தகவல் துல்லியம் முக்கியமாகிறது.
2. இளவயதில் ஹேரி (Harry) லீ என்ற ஆங்கிலப் பெயரிலேயே லீ குவான் இயூ அறியப்பட்டுள்ளார். 1950ல் சிங்கப்பூர் திரும்பிய பின்னரே ஆங்கிலப் பெயரை அவர் நீக்கியுள்ளார். இது குறித்து தனது சுயசரிதையில் (The Singapore Story) திரு லீ எழுதியுள்ளார். அதோடு, மரியாதை நிமித்தமே சீனர்களில் குடும்பப் பெயரையும் சேர்த்து முழுப் பெயராகச் சொல்வார்கள். அவரது சீனப் பெயர் குவான் இயூ. லீ என்பது குடும்பப் பெயர். முக்கியமான வரலாற்று பிரபலங்களைப் புனைவுப் பாத்திரங்கள் ஆக்குவதற்கோ அவர்களை மாற்றி கட்டமைப்பதற்கோ புனைவாசிரியருக்கு உரிமை உண்டு. ஒரு கிளர்ச்சியூட்டும் உணர்வுக்காகப் பெயரையோ, சம்பவங்களையோ, அவர்கள் சார்ந்த கருத்தாக்கங்களையோ குறிப்பிடும்போது அது சரியாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
3. 1930களுக்கு முன்பான காலப்பகுதியில் பாகிஸ்தானிய குடும்பம் (பக்கம் 43,) வங்கதேசத்தவர் என்றெல்லாம் நாவலில் வருகிறது. 1947ல் தான் இந்தியா பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவானது.
4. முன்னுக்குப் பின் முரணான காட்சியமைப்பு. உதாரணமாக, பூகம்பம் நடந்து முடிந்து இடிபாடுகளில் உறவுகளை ஒருவரை ஒருவர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாகக் கட்டிய உறவினரின் (சிவராமனின்) வீடு தரையோடு தரையாகக் கிடந்தது என்ற வரிகளுக்குப் பிறகு (பக்.34) “ஆத்தா வீடு ஆடுது” என்று சிவராமன் சொல்வதும் தொடர்ந்து காத்தாயி தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளைக் தூக்கிக்கொண்டு ஓடுவதும் இடம்பெறுகிறது. இரண்டாவது அதிர்வா, எப்போது எப்படி நெருப்பு வந்தது, எப்படி ஆயிஷா கரிக்கட்டையானாள் எதுவும் தெரியவில்லை.
இது போன்ற குழப்பங்கள் நம்பகமின்மையை ஏற்படுத்தி, வாசகரை வெளித்தள்ளி விடுகின்றன.
ஒரு நாவலை வடிவமைப்பதில் நாவல் அமைப்பு, சொல்முறை, காட்சிகள் எல்லாமே பங்கு வகிக்கின்றன. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செதுக்கவேண்டியுள்ளது. வலுவூட்டும் சிறிதான ஒரு சாத்தியத்தையும் தவறவிடாத நாவல்கள், நல்ல வாசகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்படுகின்றன. வடிவத்தை மேலும் மேலும் மெருகூட்டும்போது அது பரிணாமம் அடைகிறது.
ஆங்காங்கே கவித்துவமான வரிகளாலும் தத்துவார்த்தமான சிந்தனைகளாலும் வாசிப்பை ரசனையோடு நகர்த்தும் ரமா, உணர்வெழுச்சிகளால் அலைக்கழியும் காஜியாவாக இல்லாமல், பேசாப் பொருளைப் பேசும் ஊ துன் ஃபேயின் ஓவியமாக இருந்தால் இந்தப் புனைவும் அதுபோலவே திரண்டு வந்திருக்கும்.
வரலாற்றைத் தகவல்களாகச் சொல்லிச்செல்லாமல் சம்பவங்களாகவும் உரையாடல்களாகவும் கடத்தும்போதே புனைவுத்தன்மை அதிகரிக்கிறது. போர், ஒரு மாபெரும் மானுடத்துயரம். அத்துயரத்தைப் புள்ளிவிவரங்களாலான தகவல்கள், விவரிப்புகளைக் காட்டிலும், அந்தத் துயரத்தைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் ஒற்றைப் படம், ஒரு சொல் புகைப்படலமாகக் கடத்திவிடும்.
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில், எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.
எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் படிக்கும் போதெல்லாம் சமகாலத்தின் துயரோடு பொருந்தி நின்று வலிக்கிறது. கண்ணீர் பெருகிறது.
***
வரலாற்றுப் புனைவுகள் நிகர் அனுபவத்திற்கான உந்துதலிலிருந்து எழுதப்படுகின்றன. பேரார்வம் எழுத்தாளரை உந்தி செல்கிறது. நிகழ் காலத்திலிருந்து, வாழும் இடத்திலிருந்து வெகுதூரத்துக்கு, திசைகாட்டிக்கு அப்பால் அழைத்துச் செல்கிறது.
இத்தகைய புனைவுகள் அசாதாரணமான காலங்களில் வாழும் சாதாரண மனிதர்களின் கதைகளையும், சாதாரண காலங்களில் வாழும் அசாதாரண மனிதர்களின் கதைகளையும் சொல்பவையாக அமைகின்றன. வரலாறு நாம் வாழும் உலகத்தை வடிவமைத்தவர்களின் சிந்தனைக்குள் நுழையவும் அத்தனை மனிதர்களதும் அனைத்து முகங்களையும் கற்பனை செய்யவும் அனுமதிக்கிறது.
ஒரு காலகட்டத்தில் ஒரு நிலப்பரப்பில் நடைபெற்ற மாற்றங்களை வாழ்க்கையூடாகக் காட்டுவது வரலாற்று நாவல். பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும், அரு ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி போன்றவை வரலாற்று நாவலுக்கு நல்ல உதாரணங்கள். வரலாற்றின் அத்தனை அம்சங்களையும் உள்வாங்கிக்கொண்ட நவீனத்துவ நாவல் புயலிலே ஒரு தோணி. வெள்ளையானை வரலாற்றுக்காலப் பின்னணியில் சொல்லப்படும் சமூகவியல் நாவல்.
வரலாற்றுத் தகவல்கள் இடம்பெறுவதால் மட்டும் ஒரு நாவல் வரலாற்று நாவல் ஆகிவிடுவதில்லை. வரலாற்றில் அந்தப் புனைவு மேற்கொள்ளும் ஆய்வு முறையே அது வரலாற்று நாவலா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. வரலாறு, தத்துவம் ஊடாக, வாழ்வு குறித்த தேடலை நிகழ்த்தும் இலக்கிய வடிவமாக நாவல் இருக்க வேண்டும் என ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான்காரன் கொடியவன், சீனர்களைக் கொன்றான், இந்தியர்கள் ஐஎன்ஏ படையில் சேர்ந்து போருக்குப் போனார்கள், தண்டவாளம் போடப் போய் செத்து மடிந்தார்கள் என்ற ஒன்றேபோன்ற கதைகள் சலிப்பை ஏற்படுத்தும். ஜப்பான்காரன் அரிசி கொடுக்கவில்லை என்று ஒரு தரப்பான குறை சொல்லலுக்கு அப்பால், அரசி கிடைக்காததற்கான அன்றைய சூழ்நிலைக் காரணத்தையும் அறிந்து கொள்வது மாற்றி யோசிக்கவும் கற்பனையை வளர்த்தெடுக்கவும் உதவும். இதுவரையில் எத்தனையோ தலைகளை வெட்டிவிட்டாலும் என் வாசிப்பில் ப.சிங்காரம் அளவுக்கு உயிர்ப்போடு இன்னும் எவராலும் தலைவெட்ட முடியவில்லை.
தமிழில் இதுவரையில் எழுதப்பட்டுள்ள, எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் நாவல்கள் புதிதாக எழுதப்படும் ஒவ்வொரு தமிழ் நாவல்மீதும் சுமையை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. எதிர்பார்ப்புகளைக் கூட்டிக்கொண்டே போகின்றன. இந்நிலையில் பதிப்பாளர்கள், எடிட்டர்கள், எழுத்தாளர்களின் பரஸ்பர வழிகாட்டலும் உதவியும் இல்லாதபோது, கூடுதல் பொறுப்புடன் எழுத்தாளர் செயல்படும் தேவையுள்ளது. காலத்தை வெல்லும் படைப்பிலக்கியம் என்பது நெடியதொரு வேள்வி.
லதா,
வணக்கம்.எனது படைப்பான ‘சுண்ணாம்பு அரிசி’ பற்றிய உங்களது அருமையான விமரிசனத்திற்கு நன்றி. உங்கள் கருத்துகள் அடுத்த நாவலைச் செம்மையாக எழுத நிச்சயமாக உதவும்.
சிங்கப்பூரில் பல்லாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் தங்கள் முயற்சிக்கு எனது பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
மூன்று நாவல்களின் விமர்சனங்கள் முழுவதும் வாசித்தேன். லதா அவர்களின் ஆழமான வாசிப்பும் அறிவார்ந்த பார்வையில்
நடுநிலையான விமர்சனம் உண்மையில்
பாராட்டுக்குரியது.
புதிய வாசகர்களை வாசிக்க தூண்டும் விதமாகவும் விமர்சனம் இருந்தது, லதாவின் எழுத்தாளுமையை காட்டுகிறது. நாவல் ஆசிரியரிகளுக்கும் லதாவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இவண்,
இசைக்கவி பி.மதியழகன்
சிங்கப்பூர்