பிரிதோர் காலத்தின் பதிவுகளாக, ஒரு சமூகத்தின் ஆழ்மன ரணங்களாக துயரோலங்களின் எச்சங்களாக இப்படி பல்வேறு படிமங்களால் படைப்பிலக்கியத்தின் தளம் ஆழம் செல்கிறது. காலம் விழுங்கிவிட்ட பெறும் வரலாற்றை, பெறும் சம்பவங்களை, பண்டைய வாழ்வை, விழுமியங்களைப் புனைவுகள் மீட்டெடுக்கின்றன. நமக்கு மீண்டும் நினைவுப்படுத்துகின்றன. எனவே புனவுகளைக் காலத்தின் பிரதிகள் என வகைப்படுத்தலாம். ஒரு வாழ்வைத் தரிசிக்க முடிகின்ற தருணத்தில் அந்த வாழ்வை நம்மால் வாழ்ந்து பார்க்கவும், அந்த வாழ்வுக்குறித்தான தகவல்களைக் கண்டறியவும் முடியும். இது அவரவர் தேவையைப் பொறுத்தது. அனுபவங்களைத் தேடுபவர்களுக்கு நாவல் கொடுக்கும் நிகர்வாழ்வு போதும். தத்துவத்தைத் தேடுபவர்களுக்குப் புனைவு கொடுக்கும் தரிசனங்கள் போதும். பொன் சுந்தரராஜு அவர்களின் ‘சுண்ணாம்பு அரிசி’ வாசகனுக்குக் கொடுப்பது தகவல்கள் என வாசித்தவுடன் தோன்றியது. இந்நாவல் தான் கொண்டுள்ள நுண்ணிய தகவல்களால் முக்கியமடைகிறது. அவ்வகையில் இரண்டாம் உலகப் போரின் தகவல்களைத் தேடுபவர்களுக்கு இந்நாவல் நிச்சயம் உவப்பானது.

ஜப்பானிய ஆட்சி காலம் என்ற சொல்லும் அதற்குறிய வரலாறும் நம் பாட்டித் தாத்தாவிடம் தொடங்கி, வரலாற்று ஆசிரியர், வாய்மொழிகதைகள், நாவல்கள் என பலரால் நமக்கு நன்கு பரிட்சயபட்டவைதான். இந்தக் கதைகளை நாம் முதன்முதலில் நம் தாத்தா பாட்டியிடமிருந்து கேட்கும்போது இருந்த அதே அளவிலான ஆர்வத்தை இப்போது காட்ட இயலாது. காரணம் நம் மனமும் அறிவும் புதுமைகளைத் தேடுபவை அல்லது எளிதில் பழையதில் சலிப்படையக்கூடியவை. எத்தனை வக்கிரமான சூழலையும், எத்தனை ஆழமான துக்கதையும் இந்த மனம் தனக்குப் பழக்கிக்கொண்ட பிறகு அது எளிதாகக் கடக்கக் கூடிய செய்தியாகவே நம்மில் எஞ்சுகின்றது. அப்படித்தான் ஜப்பானிய ஆட்சி கால மக்களின் துன்பங்களுக்கு நம் மனமும் செவியும் அறிவும் பழகிவிட்டிருக்கிறது. அதில் அறியவும் துயருறவும் புதிய கதைகள் இனி இருக்குமா என்பது சந்தேகமே.
வாசகர் மத்தியில் ஏற்கனவே பல முறை பலரால் சொல்லப்பட்ட இது போன்ற வரலாற்றுப் பின்னணியைப் புனைவின் மையக்கருவாகத் தேர்ந்தெடுப்பது ஓர் எழுத்தாளன் எதிர்க்கொள்ள தயாராகும் சவால். புதிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லாத சூழலிலும் தன் புனைவுக்கான தனித்த இடத்தை அடைய முடியுமானால் அதுவே அந்தப் படைப்புக்கான பெரும் வெற்றி.
ஜப்பானிய ஆட்சி, சயாம் மரண ரயில் பாதை, கம்யூனிச போராட்டங்கள் போன்ற வரலாற்றுத் தருணங்களைப் பல புனைவுகளில் வாசித்துவிட்டமையால் இந்நாவலில் வாசகர்களுக்கு வாசிக்கத் தூண்டும் எந்தப் புதிய செய்திகளோ கதைகளோ இல்லை. எனினும், இந்நாவல் மிகத் துள்ளியமான முழுமையான தகவல்களால் மற்ற நாவல்களில் இருந்து வேறுபட்டு தனக்கான தனித்த இடத்தை வாசகர்கள் மத்தியில் அடைந்துள்ளது.
1942-1945 வரையிலான காலத்துக்குட்பட்டது இந்நாவலின் கதை.
ஜப்பானிய ஆட்சியின் முதல் நாளிலிருந்து இறுதி நாள் வரையிலான வரலாற்றுப் பதிவாகவே இந்நாவல் அமைந்துள்ளது. நிலைக்குழைந்த ஓர் அதிகாலைப் பொழுதில் நிகழ்ந்த குண்டு வீச்சையும் பொது மக்களின் அன்றைய அதிகாலை அலறலோசைகளும் நாவலின் தொடக்கப்பகுதிலேயே காட்டப்பட்டுள்ளன. இந்த அலறல்களும், படபடப்பும் நாவலின் எல்லா பகுதியிலும் படிந்து கிடக்கிறது. அதிகாலை குண்டு வீச்சுடன் தொடங்கி 1945-இல் ஜப்பான் ராணுவ வீரர்கள் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு ஊர் திரும்பும் ஒரு பொழுதுடன் நாவல் முடிகிறது.
நேவல் பேஸும் காத்தோங்கும் கதைக்களங்களாகும். அந்தப் பகுதியில் வாழும் தமிழாசிரியர் தமிழ் மணி அங்குள்ள மக்களுக்குத் தகவல்களை எடுத்துச் சொல்லி அவர்களை வழிகாட்டும் நல்லுள்ளம் கொண்டவராக இருக்கிறார். அவர் அவ்வப்போது மக்களுக்கு உதவ இயலாத தன் இயலாமையை எண்ணி நொந்து கொள்கிறார். அவரது மகள் கண்ணம்மா. கண்ணாம்மாவும் அப்பாவைப் போலவே பொதுநலம் போற்றுபவள். அவளது தோழி வடிவு. வடிவின் பெற்றோர்கள் ஒரு சீனப் பெண்ணுக்குத் தங்கள் வீட்டில் இடம் கொடுத்துப் பாதுகாக்கின்றனர். ஆனால் அவள் ஜப்பானியனின் கண்ணில் படவே அவள் இழுத்துச் செல்லப்பட்டுச் சீரழிக்கப்படுகிறாள். அந்தச் சீனப் பெண்ணை இழுத்துச் செல்வதைப் பார்த்தும் ஒன்று செய்ய இயலாதவளாக இருந்த தன் இயலாமையை எண்ணி எண்ணி வடிவு நிலை குழைகிறாள். அவள் குறிப்பிட்ட அந்த ராணுவ வீரன் கசுமியைப் பழிவாங்க துடிக்கிறாள். இதற்கிடையில் சீனப் பெண்ணுக்கு அடைக்களம் கொடுத்தமையாமல் தண்டிக்கபடுவோம் என்ற உயிர் பயத்தில் வடிவும் அவளின் பெற்றோர்களும் அன்றிரவோடு இரவாகக் காத்தோங்கில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு நடந்தே செல்கின்றனர். கசுமீயின் பூட்ஸ் காலால் உதைப்பட்டு நிலைகுழைந்திருக்கும் வடிவும் அரை உயிராக அங்கே சென்றடைகிறாள். அவளுக்குள் ஜப்பானியர்கள் மேல் வன்மம் உண்டாகிறது. வடிவின் மேல் காதல் கொண்ட முத்து அவளின் பொருட்டே அந்த ஜப்பானியனை எதிர்க்க முயல்கிறான். இறுதியில் அவனது தலை ஜப்பானியர்களால் வெட்டப்பட்டு தெருமுனையில் செருகப்பட்டது. வடிவுக்கு ஆங்கிலமும் ஜப்பான் மொழியும் தெரிவதால் அவள் ஜப்பானியர்களின் முகாமில் பணிக்குச் சேர்க்கப்படுகிறாள். வடிவு இறுதியில் கசூமியைக் கொன்று பழிதீர்க்கிறாள். அவளும் கொல்லப்படுகிறாள். தமிழ் மணியின் மகள் கண்ணமா வழக்கம் போல ஜப்பான் மொழி வகுப்பிற்குச் செல்கிறாள். அங்கே அக்கிடோ எனும் ஜப்பானிய வீரன் அவளை விரும்புகிறான். வெளியே மறுத்தாளும் அவளுக்கும் அவனைப் பிடிக்கவே செய்தது. ராணுவ வீரர்கள் ஆங்கிலேயர்களிடம் தோற்றப்பின் ஊர் திரும்புவதற்கு முன் அக்கீடோ தமிழ் மணியைச் சந்தித்து தன் மனதில் இருப்பதைச் சொல்லி மீண்டும் திரும்பி வருவதாகக் கூறி விடைபெறுகிறான். தமிழ் மணியும் சம்மதிக்கிறார். கதை இப்படியே முடிவுறுகிறது.

இந்தக் கதையில் நாவலாசிரியர் ஜப்பானியர்களின் மீதான நடுநிலையான பார்வையே முன் வைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஜப்பானிய ராணுவ வீரர்களிலும் நல்லவர்கள் இருந்துள்ளார்கள் என்ற அதிகம் பேசப்படாத இது போன்ற முரண் உண்மைகளை இந்த நாவலே முதன் முறையாக பேசுகிறது.
நாவலில் சில இடங்களில் கதையில் நம்பகத் தன்மை குறைவாக உள்ளது. உதாரணமாக முத்து எடுத்தவுடனேயே கம்யூனிஸ்ட்டைச் சென்று சந்திப்பதையும், வடிவு கசூமியைக் கொள்வதையும் சொல்லலாம். ஒரு இக்கட்டான சூழலில் எல்லா மக்களும் நியாய தர்மம் போற்றும் நல்லவர்களாகவே இருக்கின்றனர். எந்த ஒரு நீதி மீறல்களும் இல்லாமல் எல்லா மக்களும் எல்லாருக்குமாக எல்லாருக்குமாகச் சிந்திக்கிறார்கள். இவை ஒரு வேளை சாத்தியமே என்றாலும் அந்தச் சாத்தியப்பாட்டை வாசகர் நம்பக்கூடிய அளவுக்கு அது சார்ந்த சூழல்களை நாவலாசிரியர் நிறுவியிருக்கலாம்.
நாவல் என்பது ஒரு கலை வடிவம். அது கதையை மட்டும் சொல்ல உருவாக்கப்பட்டதென்றால் வரலாறு புத்தகங்களே போதும். வரலாற்று நூல்களும் நமக்குக் கதையையே சொல்கின்றன. ஆனால் நாவல் வரலாற்றைத் தனக்குரிய உத்திகள் மூலம் நிகழ்த்திக்காட்டுகிறது. நாவலாசிரியர் பொன் சுந்தரராஜு நாவலை நிகழ்த்திக்காட்டுவதாக எண்ணி வாசகனிடமிருந்து நாவலைத் தள்ளி வைக்கிறார். 1942 சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்ற ஒரு அதிகாலை பொழுதின் அத்தனை கூச்சல்களும் இந்நாவலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த ஓசைகள் உண்மையில் நமக்குக் கடத்த வேண்டிய ஒரு துயர சூழலைக் கடத்தாமல் வேறும் ஓசையளவிலேயே நின்றுவிட்டிருக்கின்றன. அவை சூழலோடு ஒட்டவில்லை. அல்லது சில இடங்களில் ஓசைகள் அவசியமில்லாமலேயே வருகின்றன. இது ஒரு வாசகன் தன் ஆழ்நிலையில் அரூபமாக அந்தச் சூழலுக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கின்றன. அப்படி அவர் ஓசைகளைக் கொடுக்காமல் இருந்திருந்தால் ஒரு தேர்ந்த வாசகன் அந்தச் சூழலுக்குள் இன்னும் ஆழமாக ஊடுறுவி சென்று அவர் குறிப்பிடாத இன்னும் தத்ரூபமான பல ஓசைகளைக் கேட்டிருக்க முடியும்.
நாவலின் ஆசிரியர் எல்லா காட்சிகளையும் விரித்துக் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த முயற்சி இந்நாவலில் கலையாகக் கூடி வரவில்லை. சில இடங்களில் ஆசிரியரின் ஆழமான விவரிப்பு இந்நாவலின் கலை வடிவைக் குழைத்துள்ளது. வாசகரால் புரிந்துகொள்ளக்கூடிய மிக எளிய சூழலைக்கூட நாவலாசிரியர் விவரப்படுத்திச் செல்கிறார். தமிழ் மணி எனும் தமிழ் வாத்தியார் மூலமும், ஆசிரியர் உருவாக்கியிருக்கும் எல்லா பாத்திரங்களும் தங்களுக்கான கேள்வி பதில் வாயிலாக வாசகர்களுக்கு வரலாற்றுச் சமபவங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டே செல்கின்றனர். அவர்கள் கருத்துப்பிரதிநிதிகள். அக்கருத்தையும் வரலாற்றையும் சொல்லவே நாவலாசிரியரால் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள்.

நாவலாசிரியர் வாசகர்களின் புரிதலைச் சந்தேகம் கொள்வது இந்நாவலை மிக எளிய முயற்சியாக்கிவிடுகிறது. உதாரணமாகப் பதுங்கு குழி வெட்டும் ஒரு கூழித்தொழிலாளி தமிழ் மணி ஐயாவிடம் பாப்பாவைத் தண்ணி கொண்டு வரச் சொல்லுங்கையா என்கிறார். அப்படிச் சொல்லிய பிறகு பாப்பா என்பது தழிழ் ஐயா மகள் என அனுமானிக்க அநேகமாக எல்லா வாசகர்களாலும் முடியும். ஆனால் அதை நம்பாமல் நாவலாசிரியர் பாப்பா என்பது தமிழ் மணியின் மகள் என அவர் அறிவார் என குறிக்கிட்டு எழுதியுள்ளார். இப்படி பல சூழல்களை நாவலாசிரியர் தானே முன் வந்து வாசகனுக்கு விளக்கம் கொடுக்கிறார். இந்த மெனக்கடலின் காரணமாக நாவலில் இயல்பாகக் நிகழக்கூடிய அனுபவங்கள் தடைபடுகின்றன. ஒரு கலை தனக்கான ஊடுபாதைகளைத் தானே நிர்ணயித்துக் கொள்ளும். அது ஒரு போதும் தன் வாசகர்களின் புரிதலை முன் வைத்து உருவாவதில்லை.
முன்பே நான் சொன்னதுபோல, இந்த நாவல் சில நுணுக்கமான தகவல்களால் முக்கியத்துவம் அடைகிறது. உதாரணமாக, பதுங்கு குழி வெட்டப்படும் சூழலைச் சொல்லலாம். அதற்குள் மணிக்கணக்கில் அடைந்து கிடக்கும் மக்கள், அப்படி உள்ளே இடம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள் என ஒரு விரிவான கண்ணோட்டம் கிடைத்தது. இந்த ஆழமான கண்ணோட்டம் இதற்கு முன்னர் இரண்டாம் உலக போரை மையப்படுத்தி எழுதப்பட்ட பிற நாவல்களில் இல்லை. அதுபோல சுண்ணாம்பு கலந்த அரிசி பற்றிய தகவலும் விரிவாகவே காணக்கிடக்கிறது. சுண்ணாம்பு கலந்த அரிசியால் மக்கள் எதிர்நோக்கிய உடல் நலக் கோலாறு, அதனால் உயிரிழந்தோர் பின் அந்தச் சுண்ணாம்பு கலந்த அரிசியைப் பாதிப்பில்லாத வண்ணம் சமைக்க மக்கள் கண்டுபிடித்த வழிமுறைகள் என நாவல் கூர்ந்து விளக்குகிறது.
இரண்டாம் உலகப்போர் என்பது மாபெரும் வரலாற்று இருள் நிகழ்வு. அதற்கு வெவ்வேறு பார்வைக் கோணங்கள் உள்ளன. ஓர் எழுத்தாளர் அதில் எந்தக் கோணத்தில் பார்த்து வாழ்வின் புரியாத தருணங்களை வெளிப்படுத்தப்போகிறார் என்பது அவரவர் ஆளுமையைச் சார்ந்தது. ‘சுண்ணாம்பு அரிசி’ அப்படி எழுத்தாளனின் தனித்த பார்வையில் எழவில்லை. பொதுவான சூழலைப் பொதுவான முறையில் பதிவு செய்துள்ள நாவல் இது. ஆரம்பக்கட்ட வாசகர்களை வாசிப்புக்குள் இழுக்ககூடிய வகையில் கோர்வையான வரலாற்று தகவல்களை ஒரு சுவரஸ்யமான கதையின் வழி முன்வைக்கிறது. எனவே இந்நாவல் தகவல் அடிப்படையில் முக்கியமான நாவல். ஆனால் தகவல்கள் மட்டும் இருப்பதால் அது நாவலாகுமா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.