எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘குமரித்துறைவி’ குறுநாவல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி, அவரது ஐம்பத்தொன்பதாவது பிறந்தநாள் அன்று அவரது இணையதளத்தில் வெளியானது. கிட்டத்தட்ட நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட இக்குறுநாவலை வெளியான அன்றே வாசித்து முடித்தேன். வாசிக்கையில் மறைந்த என் அப்பாவின் நினைவும் எனது திருமணக்காட்சிகளும் வந்து, வந்து போயின. வாசிப்பின் சில இடங்களில் என்னை அறியாமல் அழுதேன்.வாசித்து முடித்தவுடன் மகிழ்வும் நெகிழ்வும் பொங்கி வழிய மனம் நிறைந்து இருந்தது. மதுரை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை ஒருமுறை கூட நேரில் பார்த்திராத நான் எழுத்தாளர் ஜெயமோகனின் சொற்கள்வழி மாமங்கலையை மணக்கோலத்தில் காணும் பாக்கியத்தைப் பெற்றேன். மங்கலம் மட்டுமே கொண்ட இப்படைப்பைப் பற்றி எழுதுவதன் வழியாக என்னுள்ளும் மங்கலத்தை நிறைத்துக்கொள்கிறேன்.
‘வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் பண்ணிப்பார்!’ எனச் சொல்வது பொருளாதாரச் சிக்கலை முன்னிறுத்தி மட்டும் சொல்லப்பட்டது அல்ல. இந்த இரண்டு பெரும் செயல்களிலும் பலரது பங்களிப்பு அவசியமாகிறது. இப்படி மனிதர்கள் ஒன்று கூடி ஒரு செயலைச் செய்கையில் கருத்து முரண்பாடுகள், ஆணவ மோதல்கள், வீண் சச்சரவுகள், வாக்குவாதங்கள், சில்லறைத்தனமான உராய்வுகள் எழுந்து வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் செயல்முழுமையே பிரதானம் என்ற குறிக்கோளுடனும் முழு ஈடுபாட்டுடனும் மனிதர்கள் ஒன்றுகூடி காரியத்தில் இறங்கும்போது தெய்வங்கள் மண்ணுக்கு இறங்கி வருகின்றன. ‘முழுமை’ என்ற ஆடுகளத்தில் வெற்றி பெற ‘ஒருங்கிணைவு’ என்ற பகடையை மனிதர்கள் உருட்ட ‘தடங்கல்’ என்ற பகடையைத் தெய்வங்கள் உருட்ட மனிதர்களுக்கும் தெய்வங்களுக்குமிடையே விளையாட்டு ஆரம்பமாகிறது.
என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும். சிங்கப்பூரில் நாங்கள் புது வீடு வாங்கி குடிபுகுந்த அன்று பூஜைகலசத்தில் மாவிலைகளை வைத்திருந்தோம். சிங்கப்பூரில் பண்டிகை நாட்களில் மட்டுமே மாவிலைகள் கடையில் கிடைக்கும். மற்ற நாட்களில் வீடருகிலிருக்கும் மாமரத்தைத் தேடி இலை பறித்து வருவது வழக்கம். அன்றும் வீட்டிற்கு அருகிலிருந்த மரத்திலிருந்து இலைகளைப் பறித்து வைத்திருந்தோம். பூஜை நல்லபடியாக முடிந்து குருக்களுக்குக் காணிக்கை வைத்துக் கொடுக்கையில் அவர் “மாவிலை கிடைக்கவில்லையா?” என்று கேட்டபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. மாவிலை மாதிரியே இருந்த ஏதோ ஒரு காட்டு மரத்தின் இலையைப் பறித்துக் கலசத்தில் வைத்திருக்கிறோமென்பது அவர் சொல்லித்தான் தெரியவந்தது.
“பூஜையில் பிழை நடந்துவிட்டது” என்று நான் புலம்ப குருக்கள் புன்னகைத்துக்கொண்டே “எல்லாம் சரியா நடந்துருச்சுன்னா பெறகு சாமி எதுக்கும்மா?” என்று கேட்டார். அன்று அவர் சொன்னதன் பொருள் எனக்குத் தெளிவாகப் புரியவில்லை. ‘மனிதனால் இயல்வதெல்லாம் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். ஆனால் அதையும் மீறி தன் செயல் முழுமை அடைய வேண்டுமென நினைக்கிறான். பிழை நிகழும். அப்பிழைக்குப் பொறுப்பேற்கவும் வரலாம். ஆனால் பிழை தன் பிழையல்ல என்று எண்ணுமளவுக்கு அகம் கனிந்திருப்பதே விடுதலை’ என்ற குமரித்துறைவியின் வரிகள் வழியாகத்தான் மாவிலை மாறியதற்கான பிழை என் பிழையல்ல என்ற விடுதலையையும் காட்டு மரத்தின் இலை வழியாக முகம் காட்டிய தெய்வத்தையும் உணர்ந்தேன்.
குமரித்துறைவியில் ‘அன்னையின் திருமணம்’ என்ற செயலில் முழுமையை எட்ட அன்னையையே சவாலுக்கு அழைக்கிறான் உதயன் செண்பகராமன். முதல் அடி எடுத்து வைத்தவுடன் ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டது போல் கர்வத்தோடு பார்க்கும் குழந்தையைக் கண்டு மகிழும் தாயைப் போல உதயனைக் கனிவோடு பார்த்துப் புன்னகைக்கிறாள் மீனாட்சி அன்னை. ஆரல்வாய்மொழியிலிருந்து மதுரைக்குக் கிளம்புவதற்கான மாபெரும் விளையாட்டை ஆரம்பிக்கிறாள் கிளிக்காரி. தன்னைத் தாரை வார்த்துக் கொடுக்க தந்தை நிலையில் நிற்கப்போகிறவன் ஒரு முடிதாங்கி, ஒரு கோலேந்திய முடிமன்னனாக இருக்கவேண்டுமென முன்னுதித்த நங்கை வழியாக முதல் செய்தியை அனுப்புகிறாள். பெண்டு குழந்தைகளின் கண்ணீரைக் காண விரும்பாத தர்மவனான ‘சொல் விளங்கும் பெருமாளை’ அரியணையில் அமர்த்தி தந்தையாக்கிக்கொள்கிறாள். “என் வீட்டுக்கு நான் போவதெப்போ?” என்று கங்கம்மாவிடம் கேட்டுப் புகுந்த வீட்டிலிருந்து அழைப்பு விடச் செய்கிறாள். “ஒரே ஒரு ஸ்திரீ கிளம்பிப் போறது மட்டும் மகாமங்களம்” என்று சிவீந்திரம் சிறமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு மூலம் சொல்ல வைக்கிறாள். இப்படிப் படிப்படியாக அவள் நிகழ்த்தும் திருமண திருவிளையாட்டில் தான் வெறும் பகடைக்காய் என்பதை உணராத உதயனும் அவனைப் பின்தொடரும் வாசகனும் பதைபதைத்து நிற்கிறார்கள். இறுதியில் அன்னையை வெல்லத் தரணியில் யாருமில்லை என்றுணர்ந்து “சக்தீ! தேவீ! மகாமாயே!” என்று இருகரம் கூப்பி தலை வணங்குகிறார்கள்.
“காற்றுக்குச் சக்தி உண்டு, ஆனா அது ஒற்றைச் சக்தியாக்கும். அதை நாங்க மூங்கிலிலே வாங்கி பதினாயிரம், பத்து லெச்சம் சக்திகளாக உடைச்சிருதோம்” என்று மணப்பந்தல் போடும் அனந்த கிருஷ்ணன் நாடார் சொல்கிறார். “மலை மேலே ஒரு ஓடை இருக்கு. அதை அங்கேருந்து திசை திருப்பி கொண்டு வாறதுக்கு ஏற்பாடாயிருக்கு” என்று கைக் கழுவத் தேவைப்படும் தண்ணீருக்கான ஏற்பாடு குறித்து அழகிய நம்பி குன்றுடையார் சொல்கிறார். பஞ்ச பூதங்களின் சக்தியை உடைத்தும், திசை திருப்பியும் செயலாற்ற முனையும் மனிதர்களின் முன்னால்‘ஒரு குதிரையின் தும்மல் போதும் எனக்கு’ என்று சொல்லாமல் சொல்லி ஒற்றைப் பெரும் சக்தியாக விளையாட்டு காட்டுகிறாள் அன்னை.
அன்னையின் புகழையும் பெருமையையும் போற்றினாலும் அதற்கு இணையாகத் தந்தையரின் உணர்வுகளையும் மிகத் துல்லியமாகப் காட்சிப்படுத்தியிருப்பது குமரித்துறைவியின் சிறப்பம்சமாகும். ஒவ்வொரு ஆணும் பெற்ற மகளிடம் தனது அன்னையைக் காண்கிறான். தனது அம்மைதான் செல்ல மகளாக, அடங்காப்பிடாரி மகளாகப் பிறக்கிறாளென்று ஆணித்தரமாக நம்புகிறான். தாயைச் சுடலைக்காரனிடம் பறிகொடுத்த பிறகு அந்த இழப்பை ஈடுகட்ட மகள் இருக்கிறாள், இருப்பாளென்று நம்புகையில் மகளையும் அழைத்துச் செல்ல சுந்தரன் ஒருவன் வந்தால் எந்த ஆணால்தான் தாங்கிக்கொள்ள இயலும்? அந்த இடத்தில் தந்தையர்கள் நிலை குலைகிறார்கள். பதறுகிறார்கள். தங்கள் நிலை மறந்து கண்ணீர் சிந்துகிறார்கள். கையில் ஏந்தி, தோளில் சுமந்து, மார்பில் போட்டுச் சீராட்டிய மகளெனும் அன்னை இனிமேல் தனக்கில்லை என்ற இடத்தில்தான் ஓர் ஆண் அதுவரை தனக்குள் உறங்கிக்கிடந்த தாய்மையை உணர்கிறான்; பெண்மையை உணர்கிறான். அன்னையில் தொடங்கி மகளில் முடியும் அந்த உணர்வுப் பயணத்தில் அவன் கனிகிறான், வளைகிறான், நெகிழ்கிறான், உருகுகிறான்.
‘மீனாட்சி அன்னையைச் சுந்தரேசர் பாண்டிநாட்டு பல்லக்கில் ஏறும்படிச் சொன்னார். அவள் தயங்கி தலைகுனிந்து நின்றாள். மும்முறை பல்லக்கில் ஏறும்படி சுந்தரேசர் சொன்னார். அன்னை முதல் அடி எடுத்து வைத்து, தயங்கி பின்னால் திரும்பி மகாராஜாவைப் பார்த்தாள்’ என்ற குமரித்துறைவி காட்சியின் வழியாக மகளாய் பிறந்த அத்தனை பெண்களும் கணவன் கைப்பிடித்து புகுந்த வீடு நோக்கி புறப்படுகையில் கண்களில் கண்ணீர்வழிய தந்தைக்கு விடைகொடுக்கும் பார்வையின் மகத்துவத்தையும் அப்பார்வை தரும் வலியின் வீரியத்தையும் உணரும் வாசகன் அழாமல் இருக்கவே இயலாது.
“மனசிலே சட்டுன்னு ஒரு சூன்யம் வந்து நிறைஞ்சிட்டுது அவருக்கு. அந்த மூதேவி பிரசன்னத்தை தாளவே முடியலை. தீயிலே குளிக்கப்போனார்” என்று உலகளந்த அம்மையை மகளாக மடியில் இருத்தி கட்டிக் கொடுக்கும் மகாராஜாவின் மனநிலையை நாவலில் வாசித்தபோது மறைந்த என் அப்பாதான் கண் முன் வந்து நின்றார். என் திருமணம் முடிந்த மறுநாள் வரவேற்பு நிகழ்ச்சியில் சாராயம் அருந்திவிட்டு வந்த அப்பாவிடம் கோபப்பட்டுப் நான் பயங்கரமாகக் கத்தியது நினைவுக்கு வந்தது. தனது வீட்டு மகாலெட்சுமியை வழியனுப்பும் தைரியம் இல்லாமல், மனதில் பிரசன்னமான மூதேவியின் பிரசன்னத்தைத் தாள முடியாமல்,தீயில் குளிக்கவும் தைரியம் இல்லாமல் போதையில் குளித்திருக்கிறார் என்பதை ‘குமரித்துறைவி’ வழியாகப் புரிந்துகொண்டபோது அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு வாய்விட்டுக் கதறி அழுதேன்.
‘இதன் மெய்ப்பொருள் என்ன என்று எனக்கு இன்னமும் தெளிவு இல்லை. ஆனால் இந்தத் தருணத்துடன் எவ்வகையிலோ தொடர்புகொண்டுள்ளது என்று நினைக்கிறேன்’ என்று இந்த நாவல் குறித்து ‘அறுபதும் அன்னையும்’ என்ற கட்டுரையில் (59 ஆவது பிறந்தநாள் அன்று எழுதியது) எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குறிப்புதான் குமரித்துறைவியை வாசித்து முடித்தவுடன் என் மனதுக்குள் சுற்றிக்கொண்டே இருந்தது.
அன்னையின் மரணத்தை ‘நதி’ என்ற தனது முதல் சிறுகதையில் எழுதியவர்தான் அன்னையின் பல்வேறு முகங்களை, பல்வேறு அன்னைகளைத் தனது படைப்புகளில் எழுதிக்குவித்து ‘குமரித்துறைவி’ குறுநாவலில் அன்னையின் திருமணமென்ற மங்கலத்தால் வாசகனை நிறைத்திருக்கிறார். ‘திரும்பிப் பார்க்க வேண்டாம், திரும்பிப் பார்த்தவன் வாழ்ந்ததில்லை’ என்று ‘நதி’ சிறுகதையில் ஒரு வரி உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் அன்னையின் மரணத்தை எழுதிக் கடந்த பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. எழுத்தாளர் ஆக வேண்டுமென்ற அன்னையின் கனவை உயிர்ப்பித்ததன் வழியாக அன்னையை உயிர்ப்பித்திருக்கிறார். ‘நதி’ சிறுகதையில் சிவப்பு ஜாக்கெட்டும், வெள்ளை முண்டும், விரிந்து பளபளக்கும் விழிகளுமாக நின்ற அன்னைதான் குமரித்துறைவியில் கனிக்கறுப்பு நிறத்தில் கையில் பச்சைக்கிளியுடன் பச்சைப்பட்டுச் சிற்றாடை கட்டி கையிலும் காலிலும் பொன்னும் வைரமும் மின்னுற நகை போட்டு மூன்று வயது சிறுமியாக மாறி பால் வெள்ளைப் பல் வரிசை மின்னச் சிரிக்கிறாள்.
‘நதி’ சிறுகதையில் அன்னைக்குக் காரியத்தை முடித்து நதியில் மூழ்கி எழுந்தவுடன் பசித்தது என்று எழுதியிருப்பார். அந்தப் பசி தீர்க்க சொல்லெனும் அமிழ்தம் அளித்த அன்னை குமரித்துறைவியில் வைர வளையல் அனுப்பி அவரை வெடித்துச் சிரிக்க வைத்திருக்கிறாள். விசாலாட்சியம்மாவின் கனவுக்கும் சைதன்யாவுக்குச் சமர்ப்பணமென்ற மகிழ்வுக்கும் இடையேயான மகன்-தந்தை என்ற நீண்ட பயணத்தில் ஜெயமோகன் என்ற மாபெரும் படைப்பாளி அளித்த அத்தனைச் சொற்களும் மங்கலமான சொற்கள்தான். அவற்றை மனதில் ஏந்திக்கொண்ட ஒவ்வொரு வாசகனும் அதிபாக்கியசாலி.
‘காதலன், கணவன் எல்லாமே பின்னால்தான். பெண் அழியாமல் வாழ்வது மகனின் உள்ளத்தில்தான். காளி வளாகத்து வீட்டு பத்மாவதியம்மா விசாலாட்சியம்மா ஒருநாளும் ஒருகணமும் இல்லாமலிருந்ததில்லை. அவள் மகன் மொழியை ஆளத்தெரிந்தவன், அழிவின்மையை கைகளால் ஆக்கத்தெரிந்தவன், எனவே அவனே அழிந்தாலும் அவள் அழியமாட்டாள்’ என்று அவர் எழுதியிருக்கிறார். ஆமாம். அவரது அனைத்துச் சொற்களிலும் உறைந்திருப்பது அன்னையும் அவளது கனவும்தான்.‘அம்மை இங்கே இருக்குமிடம் ஆருக்கும் தெரியாது. அம்மை இருக்கான்னு தெரியாதவங்களும் இல்லை’ என்று குமரித்துறைவியில் வரும் வரி போல அவரது எழுத்துக்களில் அன்னை குடியிருக்கிறாள் என்பதை அறியாத வாசகர்களும் இல்லை.
ஆரல்வாய்மொழியில் ஐம்பத்தொன்பது ஆண்டுகள் ரகசியமாகக் கோயில் கொண்டிருந்த மீனாட்சிக்குச் சொற்களால் மணம் முடித்ததன் வழியாகத் தனது ஐம்பத்தொன்பதாவது வயதில் மனக்கோயிலில் குடி வைத்திருந்த அன்னையை மாமங்கலையாகக் காணும் பாக்கியத்தை அவர் அடைந்து நமக்கும் அளித்தது உண்மையில் போற்றுதலுக்குரிய மகத்துவமாகும்.
குமரித்துறைவியை வாசிக்கும் தருணத்தில் உங்கள் தந்தையின் பாசம் நினைவுக்கு வந்து கண்ணீர்விட்டு அழுதிருக்கிறீர்கள். ஒருவர் எழுத்திலிருந்து நம் வாழ்வனுபவம் நம்மை மீட்டெடுக்கிறது என்றால் அந்த எழுத்தின் வலைமையை என்னவென்று சொல்ல? நான் குமரித்துறைவியை முதல் முறை வாசித்தபோது சந்நதம் வந்துவிட்டது மாதிரி இருந்தது.