அல் கொஸாமா: அறியாத நிலப்பயணம்

மனித குலத்தின் தோற்றம் குறித்த பல அபுனைவுக் கட்டுரைகள் உண்டு. ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வது தொடங்கி அவ்வழி இனக்குழு மனப்பான்மை உருவாகிறது. பின் அது எவ்வாறு தற்காலத்தில் பெரிய பிரிவினைகளாக வளர்ந்து விட்டது என்பதும் மறுபக்கம் சிறு சிறு குழுக்கள் எவ்வாறு இணைந்து பெரு மதங்களாக ஆகின்றன என்பதும் தொடர்ச்சியாக விளக்கப்பட்டும் ஆராயப்பட்டும் வருகிறது. வணிகம் தலைதூக்கிய காலம் முதல் தீவிரமான பயணமும் துவங்கிவிட்டது. பயணத்தோடு இணைந்தே கொள்ளைக்காரர்களும் பெருகுகின்றனர். கூடவே காவலர்களும் பெருகினர். ஓரிடத்தில் நில்லாத வணிக சமூகம் போல இன்னொரு சமூகம் உண்டு. அது நிலைபெற்று மண்ணை ஆட்சி செய்தது. பக்கத்துக் குடியைப் போரிட்டு வென்றது. பக்கத்துக் குடியிடம் இருந்து போரிட்டுக் காத்தது. இத்தகைய குழுக்கள் அவர்களின் வீரதீரக் கதைகள் குறித்த படைப்புகள் மிகுதியாகப் பாடப்படுகின்றன. உலகின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அங்கு போர்குணம் குன்றாத ஒரு தலைமுறை இருக்கிறது. அவற்றின் நிலம் குறிஞ்சியாக இருக்கலாம் மருதமாக இருக்கலாம் பாலையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் நெறிகள் ஆநிரைகவர்தல், பெண்களைக் கவர்தல். தன்னிடம் அடைக்கலம் கேட்டவரை தன் உயிர் கொடுத்தேனும் காத்தல் தன்னைக் காத்தவர்க்கு விசுவாசமாக இருத்தல் என பொதுவானதாக இருக்கின்றன.

நவீன காலத்தில் போர் என்பது அர்த்தமிழந்து போகிறது. முகத்தைக் காட்டாமலேயே மறைமுகமாகப் போரிட முடிகிறது. ஆயுதங்களுக்குப் பதிலாகச் சொற்களைக் கிருமிகளை அனுப்ப இயல்கிறது. நேருக்கு நேர் நின்று போரிட்ட வீரம் அர்த்தமிழந்து, மறைந்து போலி முகங்களுடன் செய்யும் சாமர்த்தியமான போர் பாராட்டவும் படுகிறது. இந்தக் காலத்திலும் ஆழ்மனதில் ஊறியிருக்கும் பகையைத் தொடர்வதா அல்லது விட்டு நிகழ்கால வாழ்விற்கு ஈடுகொடுத்து வாழ்வதா என்கிற குழப்பம் போர்ஜாதிகளுக்கு உண்டாகிறது. தனது தேவை அற்றுப் போன உலகில் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. அல்கொஸாமா நாவலில் சுஜாவும் ராஜேந்திரனும் தன்னை அதன் தொடர்ச்சியாக நிலைநிறுத்த முயன்றபடியே இருக்கிறார்கள். ஆனால் உலகம் அவர்களை நடோடியாகவே பார்க்க விரும்புகிறது. தன் மகன் நிலைபெற வேண்டும் என குடும்பம் விரும்புகறது. ஆனால் அவர்களிடம் தொடர்ச்சியாக வந்து படிந்துள்ள இரண்டாயிரமாண்டு ஆழ்மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இங்கே, அருகே அருகே கிராமத்திற்கும் நகரத்திற்கும் கூட சில வேறுபாடுகள் உள்ளன. கிராமத்தில் ஜாதிரீதியாக உள்ள நேரடிப்பிரிவினை நகரத்தில் இல்லை. அதேபோல கிராமத்தில் இருக்கும் நேரடி வெளிப்பாடும் நகரத்தில் இல்லை. பிரிவினை அதிகம் கொண்ட கிராமத்தில்கூட சகஜமாக இருந்தவர்கள் நகரத்தில் தனித்து நிற்கிறார்கள். ஒருவித சுய தர்மம், தனது லட்சியம், தனிமனித சுதந்திரம் போன்ற கருதுகோள்கள் கிராமத்தை விடவும் நகரத்தை அதிகம் ஆட்கொள்கின்றன. இயல்பாகவே ஒரு மனிதன் சக மனிதனைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்பந்தம் கிராமத்தில் இருப்பது போல நகரத்தில் உருவாகவில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்த தீவாக இருப்பதுதான் நகர வாழ்வில் நிகழ்கிறது. அவ்விதத்தில் ஒருவித குழு மனப்பான்மை அல்லது கூட்டு மனநிலைக்கு எதிரானதாக நகரம் இருக்கிறது. ஒரு சிறிய நகரம் பன்மைவயப்படும் பொழுது தன்னை எவ்வாறு முன்னகர்த்திக் கொள்கிறது என்பதை அறியும் பொழுது அதுவே பெரிய அளவில் நிகழும் பொழுது என்னவாக ஆகிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு, உலகளவில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தேசங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மையை ஒப்பிட்டு நோக்கலாம். ஐரோப்பியா ஒருவித பெருமிதத்தைக் கைகொண்டு இருக்கிறது. ஆனால் அத்தகைய எதையும் தூக்கிச் சுமக்காத அமெரிக்கா அதைவிடவும் இன்னும் சுதந்திரமானதாக இருக்கிறது. ஒப்பிட்டு நோக்க பல வருடங்களாக, இவ்விரண்டையும்விட பிற மக்களை அதிகம் தனக்குள் அனுமதித்த நாடாக வளைகுடா நாடுகள் உள்ளன. எண்ணெய் கண்டுபிடிப்பிற்குப் பிறகு உலக அளவில் பன்நாட்டு மக்களை அனுமதித்ததும் ஆனால் அவர்கள் வழி, பண்மைக் கலாசாரத்தை அனுமதிக்காமல் அதற்கான தடையுடனும் இருக்கும் நாடுகளாக வளைகுடா நாடுகள் உள்ளன. அதனாலேயே அது அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானதாகவும் புரிதல் இல்லாததாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது. குழு மனப்பான்மையோடு வளர்ந்த நாடாக இருந்தாலும், பிற்காலத்தில் காஸ்மோபாலிடன் ஆன பிறகும் பிறகும்கூட அது தன்னகத்தே கொண்டுள்ள இறுக்கமான கட்டுப்பாடுகள் அப்படியே நீடிக்கின்றன. அது ஒருபுறமும் அதன்வழியாக அங்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு உருவாகும் உளச்சிக்கல்கள் அனைத்தும் மற்றோரு புறமுமாக உள்ளது. இதை அருகாமையில் காட்டிச் சொல்கிறது அல்கொஸாமா நாவல்.

பதூவி இனக்குழு மக்களின் வாழ்வியல் விவரிக்கப்படும் விதம் அந்த இனக்குழுவிற்கான ஆவணம் போல பதிவாகிறது. தனித்தனி குழுவாக இருக்கும் அவர்கள் இஸ்லாம் என்னும் ஒற்றை மதத்தின் கீழ் திரண்ட பின்னரும் தன் இனக்குழுவின் பழக்கங்களை விடாது தொடர்கின்றனர். அவர்களின் கவிதைப் போட்டிகள் ஒரு போர் சித்திரமாக வெளியாகிறது. அல்ஸோபி, அல்முகாலீம் எனப்படும் இரு குழுக்களுக்கு இடையில் நிகழும் போட்டியில் அல்ஸோபி சார்பாகப் பாடும் ஒரு கவிஞனை எதிர்தரப்பினரே உச்சி முகர்கின்றனர். அங்கு ஒரு வார்த்தைக் கிண்டல் ஒரு உயிர்பலியைக் கேட்கிறது.

கனகராஜ் பாலசுப்பிரமணியம்

அங்கிருந்து மீண்டும் மோதல் தொடர்கிறது. கவிதையும் மோதலும் கொண்ட உலகமாக இருக்கிறது. உலகம் நவீனமயமான பிறகும் சுஜா ஆழ்மனதில் பாலைவனக் காவலனான ஒரு பதூவியாகவே இருக்கிறான். ராஜேந்திரன் தென்தமிழகத்திலிருந்து அங்கு பிழைக்கச் சென்றவன். அங்குள்ள கட்டுப்பாடுகளால் பாலியல் தளங்களை ரகசியமாகப் பார்க்க வேண்டியுள்ளது. தன் கைபேசியில் ஆபாச படங்கள் இருந்தால்கூட கடுமையான தண்டனை என்று அறிந்து அது உருவாக்கும் உணர்வுகளிலும் தன் பங்காளியான சுந்தர் கார்டியனாக இருந்து கொண்டு உருவாக்கும் அடக்குமுறைகள் தரும் மன உளைச்சலாலும் பாதிக்கப் படுகிறான். இவர்கள் இணையும் ஒரு புள்ளியைத் தொட்டே துவங்கும் நாவல் பின்னும் முன்னுமாகப் பயணிக்கிறது.

புதிய நிலப்பரப்பும், களமும் கனகராஜ் பாலசுப்ரமணியம் அதனைச் சித்தரிக்கும் விதமும் நாவலைச் சுவாரசியமாக்குபவை. ஆங்காங்கு வரும் கவிதைகளும் அதன்வழி வரும் குல வரலாறும் அவர்கள் முன்கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகின்றன. ஓர் ஜின்னி மனிதனுக்குள் இறங்கி அவனை ஆட வைக்கிறது. ஒருவனைக் கவிஞனாக்குகிறது. மரங்களையும் மணலையும் மலைகளையும் வணங்கி வந்த மக்கள் அதை இஸ்லாம் ஏற்கவில்லை என்பதற்காக விடமுடியாமல் தனக்குள்ளேயே அதை வைத்துக் கொண்டு பாலைவன நிலவொளியில் கவிதைகளைப் பாடி வெளிப்படுத்திக் கொண்டும் ஜின்னிகளை வாழ்த்திக் கொண்டும் அவையோடு ஆடிக்கொண்டும் இருக்கும் பித்து மனநிலையை ஓர் அத்தியாயத்தில் காண்பித்தபடியே இன்னொரு அத்தியாயத்தில் தன் வீட்டிற்குள் விருந்தில் நடனமாடும் அடிமையை ஒரு பதூவி இளைஞன் கொன்று வீசுவதைச் சித்தரிக்கிறார். ஒட்டகத்துடன் ஓநாய்களுடன் மலைக் கழுகுகளுடன் அவர்கள் கொள்ளும் ஒரு உறவும் அவையோடு இணைந்து மேற்கோள்ளும் வாழ்வும் அந்நிலம் சார்ந்த பல புரிதல்களை வாசகர்களுக்கு அளித்தபடியே செல்கின்றன. நரியைப் பார்த்தால் கொல்வதும் ஓநாயைப் பார்த்தால் அதன் மீது பரிவு கொள்வதும் ஒரு மூத்த பதூவியின் குணமாக வருகிறது. குழுவாக இருப்பது நேரடியாகச் சண்டையிடுவது இறுதி மூச்சு வரை போராடுவது என அவர்களும் அத்தகைய போராட் டகுணம் மிக்கவர்களாகவே வருகிறார்கள்.

நாவலை வாசிப்பவருக்கு முதல் சுவாரசியம் அதில் வரும் குழுக்களும் அவர்களின் பெயர்களும். மிகவும் சிக்கலான ஒன்றை எளிதாகச் சொல்லிச் செல்கிறார். முன் சொன்ன இரு குழுக்களும் (அல்ஸோபி அல்முகாலீம்) அல் சொதாரி குழுவின் குறுங்குழுக்கள். அல்சொதாரி போல அல்பெய்தாணி அல்ஷெக்ராணி என பல குழுக்கள் உள்ளன. அவர்களுக்குள் நிகழும் போரில் அல்சொதாரி சார்பாக இருவரும் இணைந்தே போரிடுகிறார்கள். அதற்கடுத்த சுவாரசியம் என்று அவர்களின் ஆழ்மன தடுமாற்றங்களை வர்ணிக்கும் இடங்களைச் சொல்லலாம். அவை பெரும்பாலும் தன்னை ஆளும் ஜின்னிக்கள் வசம் நிகழ்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஆண்டுவந்த கடவுள்கள் போகும்போது அவர்கள் ஊடாக மனிதர்களின் அக புற உலகைக் காட்டி வந்த கவிஞர்களும் தேவையற்றவர்கள் ஆகிறார்கள். கவிதை அருகுவது மனவேட்கையும் நுண்ணுணர்வும் கொண்ட மனிதர்கள் அருகுவதைக் காட்டுகிறது. ஜின்னியுடனான உரையாடல் வழி உள்ளுணர்வோடு கூடிய கவியுலகிற்கு ஒழுக்கவியலோடு கூடிய தர்க்க உலகு அந்நியமாகிக் கொண்டே போவக்ச் சொல்லிச் செல்கிறார்.

அளவில்லாப் பற்றும் அழியா வன்மங்களும் கலந்து செல்லும் பதூவி இணையான வாழ்க்கையை ராஜேந்திரனும் வாழ்கிறான். ராஜேந்திரனும் கொள்ளும் வன்மம், இங்கும் நிகழும் பங்காளிச் சண்டை என எல்லாம் இருவருக்குமான ஒப்புமையைச் சுட்டியபடியே உள்ளன. பங்காளிகளுடன் போராடாத நிலம்தான் ஏது? அது ஒருவகையில் இரு தொலைதூர நிலங்களின் மக்கள் பல விதங்களில் வேறு பட்டிருந்தாலும் எங்கனம் ஒரே உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள் என காட்டுவதாக உள்ளது. அதுவே ‘சுஜா அல் சொதாரி’ கனவில் ராஜேந்திரனைக் கொண்டுவருகிறது. அங்கு புழங்கும் கவிதைகள் கதைகள் கூட இந்திய நிலத்தின் கதைகளோடு இயைந்து வருகின்றன. உம்ரல் கைஸ் தன் ராஜ்ஜியத்தை விட்டு சாமானியனாக இருக்கிறான். கிருஷ்ணலீலா போல, அவன் தன் காதலி மற்றும் தோழிகளின் ஆடைகளை அவர்கள் குளிக்கும் போது கவர்ந்து கொண்டு நிற்கும் இடம் ஒரு உதாரணம். கவிதையின் இளவரசன் உம்ரல் கைஸ் கதையுமே கிருஷ்ணனின் கதையை ஒத்திருக்கிறது.

காளிப்ரஸாத்

பதூவியின் மண்ணும் மக்களின் வாழ்வியலைக் காட்டுவதும் அவர்களின் பழக்க வழக்கங்களைச் சொல்லுவதும் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியது. அது இங்கு அறிமுகம் செய்கிறது என்பதாலேயே அது ஒரு சுற்றுலாத்துறையின் ஆவணப்படம் போல ஆகிவிடுகிறது. பதூவியின் அடிமைகளும் மனைவிகளும் ஒன்றாகச் சமையலறையில் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சித்தரிப்பு வருகிறது. அது போல உடைமைகளாகப் பெண்கள் இருந்தார்களா அல்லது அவர்களின் தாக்கம் வேறு எந்தளவு பிற பாத்திரங்கள் மீது நிகழ்கிறது அல்லது அவர்களின் உலகம் எத்தகையதாக இருந்தது என்பது போன்ற விவரிப்புகள் இல்லாததால் அவர்கள் வாழ்க்கை சித்தரிப்பு தகவல்கள் என்கிற அளவிலேயே நின்றுவிடுகின்றன. ஜின்னிக்களை விட்டுவிடுவது கவிதைகளை மற்றும் வழிபாட்டை விட்டுவிடுவது போன்ற தத்துவ அல்லது அறிவுத்தள சிக்கல்களும் போர் பகை போன்ற புறச் சிக்கல்களும் விவாதித்துப் போகும் நாவல் இந்த இடங்களையும் சொல்லிப் போகலாம் என்றே தோன்றுகிறது. பிரதியில் இல்லாததைத் தேடுவதோ அல்லது சுட்டுவதோ நோக்கம் அல்ல. நாவலின் இரண்டாம் பாத்திரமான ராஜேந்திரனின் குலதெய்வ வழிபாடும் பிறகு ஓரிடத்தில் அவன் தாய் மற்றும அப்பத்தாவிற்கான வாய் வழக்கும் வரும் இடத்தில் வெளிப்படும் ஒரு சித்தரிப்பு அபாரமானது. ஆனால் அந்தளவிற்கு நாவலின் பேசுபோருளான பதூவிகள் வாழ்வில் அவர்கள் பெண்கள் குறித்த சித்தரிப்பு வருவதில்லை. அவர்களின் முப்பாட்டன் கவர்ந்து வரும் பெண் நினைவில் நின்றாலும் நா துண்டாக்கப்பட்ட பெண்ணாகவே அவரும் வருகிறார். அதை ஆசிரியர் அளிக்கும் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம் என தோன்றுகிறது. மற்றொன்றைக் குறிப்பிட வேண்டும். அது நாவலின் ஆற்றொழுக்கிற்கு இடையூறாக வரும் முழுப் பெயர்கள். அந்த மண்ணின் வழக்கப்படி குழந்தைகளுக்கு நீளப்பெயர்களை வைக்கின்றனர். அதை ஓரிடத்தில் குறிப்பிட்டால் போதுமானது எனத் தோன்றுகிறது. ஃபஹத் இபின் மர்ரா இபின் சொதரி அல் தக்லீஃப் என்று ஒரு இடத்தி்ல் குறிப்பிட்டு விட்டு பிறகு அவன் என்றோ ஃபஹத் என்றோ குறிப்பிடுவது வசதியானது. இதற்கு இணையாகவே நீளமாகவும் உச்சரிக்கையில் உள்நாக்கை சுருட்டும் அபாயமும் கொண்ட ரஷ்ய நாவலின் கதாபாத்திரங்களின் பெயர்களிலும் இந்தச் சிக்கல் இருக்கிறது. ஆனால் துவக்கத்தில் அதை சொல்லிவிட்டு பின்னால் மிஸ்கின் என்றோ வால்யா என்றோ இவான் என்றோ சுருக்கமாகச் சொல்லப்படுவதை ஒரு முன்னுதாரணமாகச் சொல்லலாம். வாசகருக்கு அணுக்கமான சுஜாவின் முழுப்பெயர் “சுஜா இபின் சகர் அல் ஸோபி அல் சொதரி” என்பதை இறுதி அத்தியாயம் வரை நினைவூட்டிச் செல்லத் தேவையிருக்கிறதா என நாவலாசிரியர் யோசிக்கலாம். இறுதியில் வரும் ஜின்னி (அல்லது எதிர் முகாம் ஆள்) அவனைச் சுஜா என்றே அழைக்கிறது. ஆசுவாசமாகவே இருந்தது.

இயல்பாகவே செயற்கையை விட்டுவிட்டு இயற்கையை நாடும் மனங்களைச் சுட்டுகிறது நாவல். செயற்கை என்பது இங்கு மதங்கள் அரசுகள் உருவாக்கி வைத்திருக்கும் சித்தாந்த செயற்கைகளும் கூடத்தான். தான் தேடி அலையும் பாலையை ஒருவன் ஜின்னி உரையாடல் வழி உணர்கிறான். அதன் வழியாக இவை உருவாக்கிய சிறையிலிருந்து வெளியேறுகிறான். மறுபுறம் இன்னொருவன் சுதந்திரத்தில் இருந்து வந்து இந்தச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொள்கிறான். ஆழ்மனதில் பாலையைச் சுமந்து திரியும் மனிதர்களின் குணம் என்பது பாலையின் குணம். வெளித்தோற்றத்தில் பழி மற்றும் வன்மம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் ஈரமும் ஒரு ஒட்டகத்தின் உடலில் நீர்மை இருப்பது போல. அது எப்பொழுது தேவையோ அச்சமயம் எடுத்துக் கொள்ளும். அமைப்புகளின் வழியாக அவன் குணத்தைக் கட்டுப்படுத்த இயலும் என மனிதன் எண்ணியதன் விளைவாகத்தான் இதை வலியுறுத்தி வருகிறானா? மனிதனைக் கட்டுப் படுத்தினால் போதுமா நிலத்தைக் கட்டுப் படுத்த முடியுமா? அல்லது இயற்கையைக் கட்டுப்படுத்த இயலுமா?

பதூவிக்கள் வழியாக அறியப்படாத நிலத்தின் ரகசியங்களைச் சொல்லும் கதையாகக் காட்டிக் கொண்டு அதன் வழியாக அனைத்து நிலத்திற்கும் பொதுவான ஒன்றைச் சுட்டிச் செல்கிறது அல்கொஸாமா நாவல்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...