வரலாறு முழுவதும் மனிதர்கள் தங்கள் இயல்பைக் கல்வி, தொழில், அரசியல் போன்ற அமைப்புகளின் ஒழுங்குக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்து வந்திருக்கின்றது. அவ்வாறு குறிப்பிட்ட ஒழுங்கு முறைக்குள் பழகும்போது மனித இயல்புகள் அடையும் மாற்றங்களை இலக்கியங்கள் நிகர் வாழ்க்கையனுபவமாகப் பதிவு செய்து வந்திருக்கின்றன. கார்த்திக் பாலசுப்ரமணியனின் நட்சத்திரவாசிகள் நாவலும் ஒருவகையில் தொழில் சார்ந்த அமைப்பின் மதிப்பீடுகளுக்கும் வாழ்க்கையின் அகவுண்மைக்குமான முரணைச் சொல்கின்ற படைப்பாக அமைகின்றது. நட்சத்திரவாசிகள் நாவலுக்காக கார்த்திக் பாலசுப்ரமணியன் 2021-ஆம் ஆண்டு சாகித்தியஅகாதாமியின் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றார்.
நாவலின் களம்
தகவல் தொழிற்நுட்பத்துறை (ஐ.டி) நிறுவனங்களில் நிலவும் பணிச்சூழலும் அவை வாழ்க்கைக்குள் நிகழ்த்தும் தாக்கமும்தான் நட்சத்திரவாசிகள் நாவல் பேசும் களம். நியு சொலுசன் எனும் தகவல் தொழிற்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளே கதையாக்கப்பட்டிருக்கின்றது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் நித்திலன் புதிதாகத் திருமணம் புரிந்து கொண்டவன். அவனுக்கும் அவன் மனைவியான மீராவுக்கும் இடையிலான உறவில் இருக்கும் மெல்லிய பாதுகாப்பின்மை, தாழ்வுணர்வு, பின்னணி வேறுபாடுகள் சேர்ந்து எப்பொழுதும் உரசல்களைத் தோற்றுவிக்கிறது. இதற்கு முன் மீராவைக் காதலித்த ராகுலைப் பற்றி அறிந்து கொண்டதும் நித்திலன் உள்ளூரப் பதற்றமடைகின்றான். தன்னுடைய பதற்றத்தை வலிந்து உருவாக்கிக் கொள்ளும் பெருந்தன்மையால் மறைக்க முடியாமல் தடுமாற்றமடைந்து கணவன் மனைவிக்கிடையிலான உறவை விரிசல்படுத்திக் கொள்கிறான். தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களில் வேலை புரியும் பலருக்கும் வெளிநாட்டுக்குச் சென்று வேலை புரியும் வாய்ப்புத்தான் உச்சமான கனவாக இருக்கின்றது. அவர்களின் குடும்பத் தேவைகளை விரைவாக நிறைவு செய்து கொள்வதற்குச் சில ஆண்டுகளாவது வெளிநாட்டில் வேலை புரிவது அவசியமாகின்றது. பணி உயர்வு, சம்பள உயர்வு, ஆண்டு தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை என அனைத்தும் நிறுவனத்தின் லாபச் சரிவைக் காட்டி அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுகின்றது. அதைப் போல தொழிற்நுட்ப நிறுவனங்களின் பெருக்கத்தால் உண்டாகும் போட்டிச் சூழலினால், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய இக்கட்டான நிலைகளும் நிறுவனங்களுக்கு ஏற்படுகின்றன. அந்தச் சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதீதக் கண்காணிப்பு வழிமுறைகளைக் கொண்டு வருகின்றனர். இப்படியாக அழுத்தம் மிகுந்த சூழலில் பணியாற்றும் நித்திலன், சஞ்சிவ், வேணு, அர்ச்சனா, சத்தியமூர்த்தி என ஒவ்வொருவரின் பணியையும் தனிவாழ்க்கைச் சிக்கலையும் ஒட்டி நாவல் நகர்கின்றது.
பொதுச்சூழலில் ஐ.டி நிறுவனங்களின் பணிச்சூழல் மிகுந்த சுமையானதாகவும் அல்லது கொண்டாட்டங்கள் நிறைந்தவையாக இருக்கும் என்றே அணுகப்படுகிறது. இந்த நாவல் தகவல் தொழிற்நுட்பத் துறையில் இயங்கும் பணிச்சூழலை மிக நுணுக்கமாகக் காட்டுகிறது. தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களில் ஒருவகையான உறுதியில்லாத வேலைச்சூழலே நிலவுகிறது. இந்தச் சூழலை அங்கு வேலை செய்யும் அனைவரும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். இந்தச் சூழலைப் பயன்படுத்தி நிறுவன மேலாண்மை, பணியாளர்களிடம் அதீதமான கண்காணிப்புச் சூழலை உருவாக்குகிறது. உதாரணமாக, கணினியில் வேலை நேரத்தைக் கணக்கீடும் செயலிகள் நிறுவப்படுகின்றன. ஒவ்வொருவருக்கான தனித்தனி கேபின்கள் பிரிக்கப்பட்டு ஒரே நீண்ட நிரையில் அமர வைக்கப்படுகின்றனர். அத்துடன் மேலதிகாரிகளும், மற்ற பணியாளர்களுடன் ஒரே இடத்தில் அமர வைக்கப்படுவதற்கான பின்னணியில் ஊழியர்களைத் தொடர்ந்து தங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கவே நிறுவனங்கள் முற்படுகின்றன.
அதைப் போல, தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களில் கிடைக்கும் வேலை வாய்ப்பு நடுத்தரப் பொருளியல் வாழ்க்கைக்கான உறுதியாகக் கருதப்படுகிறது. தன் தந்தையின் கடனை அடைத்து மளமளவென பணி உயர்வு பெற்று சொந்த வீட்டைக் கட்டி முடிக்கும் வேணுவையும் வீடு கட்டும் தந்தையின் 20 ஆண்டுகால கனவை வெளிநாட்டில் சில ஆண்டுகள் வேலை செய்தே தீர்க்கும் விவேக்கும் அதற்கான உதாரணங்களே.
நுண் அதிகார மையங்கள்
தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் இயங்கும் நுட்பமான அதிகாரத்தையும் நாவலில் காட்டுகிறார் ஆசிரியர். புதிதாக வேலைக்குச் சேர்ந்த நித்திலனைப், பிராமணராகச் சித்திரிக்கப்படும் வேணு எனும் உயரதிகாரி ஆங்கிலத் தேர்ச்சியின்மைக்காகக் கடிந்து கொள்கிறார். அதன் பின்னர், அவனைச் சமாதானம் செய்யும் பொருட்டு நம்பிக்கையான சொற்களையும் குறிப்பிடுகிறார். இந்த உரையாடல் நிகழும்போது, அவன் நிற்க வைக்கப்பட்டே உரையாட அனுமதிக்கப்படுகிறான். அதைப் போல, விவேக் ஏற்பாடு செய்யும் விருந்தில் சைவ உணவை உண்கின்றவர்கள் அசைவ உணவை உண்கின்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்வதையும் சித்திரிக்கிறார். வேலை அனுபவம் மிக்கவருடன் இயல்பாகப் பேச முடிந்தளவு அவர்களின் வேலையைக் குறை சொல்ல இயலாது. நவீன மனநிலை ஏற்படுத்தும் புதிய பணிச்சூழலும் இங்கு முன்னரே நிலைபெற்றிருக்கும் மரபான மனநிலையும் கொள்ளும் ஊடாட்டங்களாக இவற்றைக் காண முடிகிறது.
இந்த மாதிரியான நிறுவனங்களில் பணியாளர்கள் தங்களுக்குள் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி பெயரிட்டே அனைவரையும் அழைத்துக் கொள்கின்றனர். வேலையனுபவம், பணி மூப்பு ஆகிய தகுதிகள் கருத்திற் கொள்ளாமல் மாறிவரும் தகவல் தொழிற்நுட்பத் திறன்களை உள்வாங்கியவர்கள் சீக்கிரமே பணி உயர்வு பெறுகின்றனர். குறிப்பிட்ட நபரின் மீதான தகுதி, பணித்தேவையின் அடிப்படையில் பணித்தொடர்ச்சி உறுதிப்படுத்தப்படுகின்றது. மற்றவர்களின் பார்வையில் பணியில் கறாரும் தீவிரமும் மிகுந்தவராகக் கருதப்படும் வேணு எனும் உயரதிகாரியும்கூட லாபச்சரிவு, பணித் தகுதியின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். இந்த மாதிரியான அழுத்தமான பணிச்சூழல், ஊதியக் குறைவு ஆகியவற்றை மறைக்க குடும்ப விழா, ஊழியர்களின் பிறந்தநாள் விழா, உரையாடலில் பயன்படுத்தப்படும் சொற்களின் தெரிவில் கவனம் என உளவியல் அடிப்படையில் பணியாளர்களை மகிழ்விக்கவும் செய்கின்றனர்.
வேலைக்குச் சேர்ந்த புதிதில் நித்திலனுக்கான வேலை நிரல்களை அமெரிக்காவிலிருக்கும் டெய்சி சொல்லித் தருகிறாள். நித்திலனின் ஆங்கிலத் தேர்ச்சியின்மைக்கும் அனுபவக் குறைவுக்கும் அவனை டெய்சி கடிந்து கொள்கிறாள். இவற்றைக் கடந்து அவனது ஆங்கிலத் தேர்ச்சியும் பணியனுபவமும் மேம்பட்டு இருவருக்கும் பொதுவாக இருந்த நாய் வளர்ப்பில் அணுக்கமாகின்றனர். நித்திலனின் பணியனுபவம் மேம்பட்டபின், டெய்சியின் வேலை பறிக்கப்பட்டு நித்திலனுக்கு வழங்கப்படுகிறது. அர்ச்சனாவுக்கும் வேணுவுக்கும் பனிப்போராக அதிகாரப் போட்டி நீடித்து வருகிறது. வேணுவின் திட்டக்குழு வாடிக்கையாளர் மதிப்பீட்டில் குறைந்த புள்ளிகளைப் பெற்றதால் அவரது வேலை பறிக்கப்பட்டு அர்ச்சனாவுக்குக் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கின்றன. அதைப் போல, பணியனுபவம் மிக்கவருக்கு அளிக்கப்படும் கூடுதல் சம்பளத்தைக் குறைக்க பணியிலிருந்து நிறுத்தி அவ்விடத்தில் புதியவர்களை நியமிக்கின்றனர். இவ்வாறாக, தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்களுக்கிடையிலான உறவு என்பது வேலை சார்ந்த உறவைத் தாண்டி நீடித்த உறவுகள் அமையாத வண்ணம் சிக்கலானவையாக இருக்கின்றன. ஐ.டி நிறுவனங்களில் நிலவும் தற்காலிகத் தன்மையே தொழிற்சங்கங்கள், குழுக்கள் என ஒன்றுதிரண்டு தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுப்பதையும் மட்டுப்படுத்துகிறது. //லட்சம் பேருக்கு மேல் வேலை பார்த்தாலும் இங்கு எல்லாரும் தனியானவர்கள், தனித்தனியானவர்கள், உதிரிகள், எதிர்த்துப் பேசவோ ஏனென்று கேட்கவோ திராணியற்ற உறவுகள்// எனத் தனக்குத் தானே புழுங்கி கொண்டு கண்காணிப்பு, அடக்குமுறைகளைத் தாண்டும் மனநிலையை நாவலாசிரியர் காட்டுகின்றார்.
உறவுச்சிக்கல்கள்
இந்தச் சிக்கலான நவீன வாழ்வில் ஆண் — பெண் உறவுகளுக்கும், குடும்பங்களுக்குள்ளும் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் நாவல் காட்டுகிறது. மீராவின் முந்தைய காதலை அறிந்து கொண்ட பின் நித்திலன் உள்ளூர அடையும் பாதுகாப்பின்மையும் பதற்றமும் உரையாடல்கள் வழி காட்டப்படுகிறது. மரபான குடும்பப் பின்னணியிலிருந்து வரும் நித்திலன், நவீன வாழ்வு முறைக்குள் மாறிப் போயிருக்கும் பெண்களின் இடத்தை உள்ளூரப் புரிந்து கொள்ள முடியாதவனாகிறான். தாமதமாகக் குழந்தை பெறுதல், ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்தல் என பெண்களின் வெளியை விசாலமாக்கும் நடைமுறைகளை ஏற்க மறுக்கின்றான். நவீன வாழ்வின் நடைமுறைகளைத் தர்க்கப்பூர்வமாக நித்திலனுடன் விவாதித்து அவனை ஏற்கச் செய்ய முடியாததால் மீராவும் தற்காலிகப் பிரிவை நாடுகிறாள். அதைப் போல வெளிநாட்டுக்குச் சென்று உழைக்க வேண்டிய கட்டாயத்தால், தன் காதலை இழந்து விடுகின்ற விவேக் வேதனையடைகின்றான்.
வெளிநாட்டுக்குச் சென்று பணியாற்றும் விசா வாய்ப்பு தனக்கு வழங்கப்படாததால் வேலை நிறுத்தக் கடிதம் (டிக்கெட்) வழங்கி தன்னுடைய தேவையை நிறுவனத்துக்குப் புரிய வைக்க முயல்கிறார் சாஜு எனப்படும் சஞ்சிவ். இதற்கிடையில் அவரது மனைவி கருவுற்றிருப்பது கூடுதலான சுமையைக் கொண்டு வரும் என எண்ணுகிறார். கருவைக் கலைப்பதால் அவரது மனைவிக்குக் கடுமையான உடல் நலச் சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தால் அந்த முடிவைக் கைவிட வேண்டியதாகிறது. அவரின் வேலை நிறுத்தக் கடிதத்தைப் பேரமாக எண்ணித் தன் தேவையை நிறுவனத்தில் நிறுவும் முயற்சி அவரைப் போன்றே நிறுவனத்தில் வலுவாக ஊன்றியிருக்கும் இன்னொரு பணியாளரான வேணுவிடம் எடுபடாமல் போகிறது. வேலை நிறுத்தம் உறுதியானப்பின் அடுத்த வேலை தேடுவதிலும் சிக்கல் ஏற்பட மனச்சிதைவுக்குள்ளாகிறார். அதைப் போல வேணுவும் எந்தவித முன்னறிவிப்புமின்றி ஸ்டிபனிடம் கவுன்சிலிங்கிற்காக அனுப்பப்பட்டு உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். பணியில் தாங்கள் காட்டும் தீவிரத்துக்குப் பின்னால் இருக்கும் நிறுவனத்தின் லாபநோக்குக்கேற்ப ஆட்டுவிக்கப்படும் கண்ணிகளாகவே பணியாளர்களின் நிலை அமைகின்றது
வேலை மாற்றத்துக்காகப் பல மாதங்கள் காத்திருந்தும் தொடர்ந்து அலைகழிக்கப்படுகிறாள் பார்வதி. தன்னுடைய வேலை மாற்றத்துக்காகக் கறாராகக் கேள்வி எழுப்பும் போது அவளது மன உறுதியை மிகை வேலை, கேலிகள் ஆகியவற்றால் நிர்வாகம் சிதைக்க முயல்கிறது. அதன் வாயிலாகப் பணியிலிருந்து தானே விலகவும் செய்கிறது.
இந்த அழுத்தத்தால் சுற்றிலும் இருப்பவர்களைத் தாக்குகின்ற அளவிற்கு மனநலம் பாதிக்கப்படுகின்றாள். இவ்வாறாகத் தனிவாழ்க்கையின் நெருக்கடிகளுக்கும் பணிச்சூழலின் அழுத்தத்துக்கும் இடையில் அடைப்பட்டு மனச்சிதைவுக்குப் பணியாளர்கள் உள்ளாகின்றனர்.
புனைவும் மொழியும்
நாவல் தத்துவத்தின் கலைவடிவம் எனப்படுகிறது. நாவலில் ஆசிரியர் கடத்த முயலும் வாழ்வனுபவங்களைத் தர்க்கப்பூர்வமாகத் தொகுக்கும்போது அதற்குள் தத்துவப் பார்வை உருவாகிறது. நவீன வாழ்க்கைக்குப் பழகிய மனம் அடையக்கூடிய வாழ்வு மீதான முரணையே இந்நாவல் முன்வைக்கும் தத்துவமாகத் தொகுத்துப் பார்த்துக் கொள்ள முடிகின்றது. அத்தகைய தருணமொன்றை நாவலின் மையக்கதைமாந்தரான நித்திலன் அடைகிறான்.
பணியழுத்தமும் உறவுச்சிக்கல்களும் சேர்ந்து அவனது அகச்சமநிலையைக் குலைக்கிறது. இதனை நிறுவனக் கட்டுப்பாடுகள் இல்லாத ஸ்விகி பணியாளரின் புன்னகையின் வாயிலாகப் பொருள்படுத்திக் கொள்ள முயல்கிறான். ஆனால், அந்தப் பணியும் கூட வேறொரு ஒழுங்குமுறை கொண்ட பணியாகவே இருக்கிறது. ஒரு வகையில், அத்தருணத்தில் மனத்தை அழுத்துகின்ற உணர்வு அலைக்கழிவுகளைக் கடப்பதற்கு அவனுக்கு அது அவசியமானதாக இருக்கிறது. அந்தத் தருணத்தைச் செயற்கை ஒளிகளுக்குப் பார்வையைப் பழக்கப்படுத்தியப்பின் நட்சத்திரத்திரங்கள் உமிழும் அசல் ஒளிக்கு முன்னால் கண் அடையும் கண நேர கூச்சமாகவே சொல்ல முடிகின்றது. அதைப் போல விவேக் வெளிநாட்டில் வேலை செய்யும் போது பணத்தைச் சேமிக்க செயற்படுத்தும் கட்டுப்பாடும் சொந்த கிராமத்தில் உணரும் சுதந்திரம் என இரண்டுக்குமான முரணையும் நாவல் காட்டுகிறது. இவ்வாறாக, மனத்தின் இயல்பு வேறொன்றாகவும் அதற்கு நேர்மாறான ஒன்றைச் செய்யவும் வாய்க்கப் பெற்ற வாழ்வுக்குள் அடையும் அகவுண்மையே இந்நாவல் வெவ்வேறு மனிதர்களின் வாழ்வனுபவங்களின் வாயிலாகச் சொல்கிறது.
இந்த நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் முழுமையான சிறுகதையொன்றில் பொருந்திப் போகக் கூடியதாக அமைகின்றது. ஒரு கதைமாந்தரின் அறிமுகமும் அவரின் சிக்கலையும் சொல்லி இறுதியில் ஏதேனும் தருணத்தோடு அத்தியாயங்கள் முடிவதாக அமைந்திருந்தன. உதாரணமாக, வேணுவை வேலையிலிருந்து நீக்கும் பணியைக் கவுன்சிலிங் என்ற போர்வையில் செய்யப் போகும் ஸ்டிபன் மனச்சஞ்சலம் அடைகின்றான். அவரை வேலையிலிருந்து நீக்கியப்பின் காலையில் பார்த்த ஏசுவின் கைகளை நக்கிக் கொடுக்கும் ஆட்டுக்குட்டியுடனான ஓவியத்தை நினைவில் மீட்டிப் பார்த்துக் கொள்கிறான் என அவனது மனச்சஞ்சலத்தை மட்டுமே காட்டும் வகையில் பாத்திர வார்ப்பு அமைகின்றது. அவ்வாறே, விவேக், சஞ்சிவ், பார்கவி எனக் கதைமாந்தர்களில் நிகழும் மாற்றங்களைச் சிறுகதைக்கே உரிய தன்மையில் அமைத்து நாவலில் சேர்த்திருக்கிறார் எனலாம். இந்த நாவலில் வரும் உரையாடல்கள் மிக யதார்த்தமானதாகவும் நம்பகமானதாகவும் அமைந்திருந்தன. நித்திலனும் அவன் மனைவி மீராவுக்கும் இடையிலான உரையாடல் பகுதி வெவ்வேறு பின்னணி கொண்ட இருவர் இணைந்து வாழும் போது உணரக்கூடிய வேறுபாடுகள் ஏற்படுத்தக்கூடிய பிணக்குகளை மிக இயல்பாகக் காட்டியது. உரையாடல் தீவிரமடையும் போது அனிச்சையாக வரும் //திரும்ப திரும்ப முட்டாள்ன்னு நிருபிக்கிற// செல்பிஸுன்னு உனக்கு தெரியுதா// என மற்றவர்களின் எதிர்மறை இயல்பை நிறுவும் உளவியலைக் காட்டுகிறார்.
இந்த நாவல் ஆசிரியரே கதை சொல்வதாய் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்தையும் பார்வையாளர் கோணத்தில் விவரிக்கின்ற நாவல் சில இடங்களில் கதைமாந்தர்களின் உணர்வையும் நேரடியாகச் சொல்லிவிடுகின்றது. தன்னுடைய இயலாமையைக் காட்டிக் கொள்ளாமல் புதிய வீட்டில் வேலை செய்யும் விவேக்கின் தந்தையின் நிலையைச் சொல்லும்போது மறதிதான் எத்தனை பெரிய வரம் என சித்திரிக்கின்றது.
நவீன வாழ்வு மீதான விமர்சனத்தைப் புதுமைப்பித்தனின் பொன்னகரம் முதலாக தமிழ் இலக்கியம் தொடர்ந்து முன்வைத்து வருகின்றது. அதே குரலை மீண்டும் எதிரொலிக்காமல் அந்த வாழ்வு அளித்ததையும் எடுத்துக் கொண்டதையும் சிறு தருணமொன்றின் வாயிலாகப் பரிசீலிக்க இந்நாவல் முயன்றிருக்கின்றது. நட்சத்திரவாசிகள் நாவல் தகவல் தொழிற்நுட்பத்துறை நிறுவனச் சூழலை உயிர்ப்புடன் அணுகியிருப்பதில் தமிழில் மிக முக்கியமான நாவலாக அமைகின்றது.