பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்: ஒரு சாவுக்குப் பின்பான கதை

‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ மயிலன் ஜி சின்னப்பனின் முதல் நாவல். மருத்துவ துறையை பின்புலமாக கொண்ட நாவல். ஆசிரியரும் மருத்துவ துறையை சேர்ந்ததால் அதன் நம்பகத்தன்மைக்காக (Authenticity) கூடுதல் கவனம் பெறுகிறது.

இது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு 200 பக்கங்களில் எழுதப்பட்ட சிறிய நாவல். இதன் வடிவம் ஒரு டைரி குறிப்பு போல உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் வெவ்வேறு மனிதர்களின் பார்வை பற்றிய நினைவு தொகுப்புகளாக உள்ளது.

பீடிகை என்ற ஆரம்பத்தில் வரும் சிறிய பகுதியில் பிரபாகரன் என்ற மருத்துவ மாணவன் தியேட்டரில் விஷ ஊசி செலுத்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.முதல் பாகத்தில் பிரபாகரனின் தற்கொலை, அவனது நண்பனின் (ஆசிரியர்) கண் வழியாக தற்கொலை குறித்த பல்வேறு மனிதர்களின் பார்வைகளையும் தொடர்புகளையும் ஒரு துப்பறியும் நாவல் போல ஆராய்கிறது. இரண்டாம் பாகத்தில், ஏழு வருடம் கழித்து முதல் பாகத்தில் முன்னுக்கு பின் முரணாக சொல்லப்பட்ட அனைத்து மனிதர்களின் நிலைகளும்,புதிர்களும் விளக்கப்படுகிறது. பிரபாகரனின் தற்கொலை மட்டும் காரணம் அறியப்படாமல் தனியே அப்படியே நிற்கிறது.

 பிரபாகரனின் தற்கொலைக்கான காரணம், அதை அறிய முற்படும் போது முன்னுக்கு பின் முரணாக கட்டமைக்கப்படும் பிரபாகரனின் ஆளுமை மற்றும் இதற்கு பின்னணியாக இயங்கும் மருத்துவ உலகம், இவையே நாவலின் பேசு பொருள்.

மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்விற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு “பிரபாகரன் சூஸைட் பண்ணிக்கிட்டான் டா” என்ற செய்தி நண்பர்களை வந்து சேர்கிறது.பிரபாகரன் இவர்களுக்கு முன்பே எம்.எஸ் படிப்பில் சேர்ந்துவிட்ட முதல்தர மருத்துவ மாணவன்.பிரபாகரன் இறந்த அதே கல்லூரியில் சேரும் நண்பன் அங்கு நடந்த நிகழ்வுகளை கொண்டு பிரபாகரனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முற்படுவதே நாவலின் கதை.

பள்ளி நண்பன் சதாசிவம், வார்டு பாய் மணி,செவிலி நாஸியா, செவிலி லிமா, காதலி என சொல்லப்பட்ட ஆர்யா,பிரபாகர் குடும்பம்,துறைத்தலைவர் மயில்சாமி என பல மனிதர்களின் பார்வையில் பிரபாகரனின் ஆளுமை குழப்பமாக சொல்லப்படுகிறது. இருப்பினும் குழப்பங்களை கடந்து பிரபாகரன் பற்றி பெரும்பாலானவர்களின் மனப்பதிவிற்கிடையே உள்ள ஒற்றுமையை வைத்து நாம் ஒரு சித்திரம் வரைய முடியும்.

பிரபாகரன் ஒரு அறிஞன். மற்ற மாணவர்களிலிருந்து  அவனது உயரம் மலைக்கும் மடுவுக்குமான தூரம் உயர்ந்தது. மருத்துவ படிப்பை கடந்து அவனுக்கு வாழ்க்கை சார்ந்த வேறு கேள்விகள் இருந்திருக்க வேண்டும், அறை நண்பன் தூக்கிலிட்டு இறந்த மறுநாளே, மரணத்தின் இருள் அறை முழுதும் வியாபித்திருக்கும் போதே தூக்கிட்ட அதே மின்விசிறிக்கு கீழ் உட்கார்ந்து புத்தகம் படிக்கிறான். அனைவரும் பயபக்தியுடன் கோவிலில் இருக்கையில், இங்கே கழிப்பறை எங்கே இருக்கிறது என கேட்கிறான். சதாசிவம் ஒரு பெண்ணுக்காக சில உதவிகளை செய்யும் போதும் “அவளை நினைத்து ஒரு முறை சுய மைதுனம் செய்துவிட்டு அதற்கு பிறகு இந்த உதவி செய்வது பற்றி யோசித்து பார்” என்கிறான். இவையெல்லாம் மருத்துவ படிப்பை கடந்து அவனுக்கு வேறு ஒரு உலகம் இருப்பதையே காட்டுகிறது.

பிரபாகரன் யாருடனும் அதிகம் சேர்பவன் அல்ல. அவன் உண்டு அவன் வேலை உண்டு என இருப்பவன். அவனுக்கு யாருடைய தேவையும் இருப்பதில்லை.நண்பர்கள் குழு ஒன்றாக பைக்கில் கல்லூரிக்கு செல்வது, சினிமா, மது அருந்துவது என வெளியுலகிற்கு அந்நியோன்மான நண்பர்களாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் போலியாகவே இருக்கிறார்கள். இது போன்ற சாதாரண மாணவர்களுக்கு மத்தியில் பிரபாகரன் போன்ற அசாதாரண இளைஞன் ஒட்டாமல் இருப்பது இயல்பானதே.

ஹாஸ்டலில் ஒருமுறை ஒருவன் திருடியதற்காக அம்மணமாக கட்டி வைத்து மலம் வரும் வரை அடித்திருக்கிறார்கள், அதிலிருந்தே பிரபாகரன் இவர்களிடமிருந்து இன்னும் தூர ஒதுங்கியிருக்கிறான்.

மயிலன் ஜி சின்னப்பன்

பதினைந்து வருட பள்ளி படிப்பிற்கு பிறகு மற்றொரு பதினைந்து வருடம் மருத்துவ மேற்படிப்பிற்காக செலவிடுவது எவ்வாறு மாணவர்களின் இளமையையே விழுங்கி விடுகிறது என்ற தகவல் அத்துறையின் மேல் இருந்த கவர்ச்சியை விளக்கி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதுவும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களை யூனிட் தலைவர்கள் சொந்த எடுபிடி வேலைகளுக்கு அடிமை போல் பயன்படுத்தி கொள்வது, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வீட்டு வேலை செய்யும் கான்ஸ்டபிள்களின் ஒத்த சித்திரத்தைத் தருகிறது.

பிரபாகரனின் மரணத்திற்கு தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, மருத்துவமனையில் இறந்த சிறுமியினால் ஏற்பட்ட குற்றவுணர்வு, குடும்ப பிரச்சினை, மயில்சாமி கொடுத்த அழுத்தம் என பல பார்வைகள் முன் வைக்கப்படுகின்றன.

ஒருவனுடைய தற்கொலைக்கு பிறகு அவன் விட்டுச் செல்லும் பிம்பம் எதிர்வினை அற்றதாக இருப்பதால் எல்லாராலும் அடித்து நொறுக்க படுகிறது. அந்த வகையில் பிராபாகரின் விட்டுச் சென்ற பிம்பத்தை முதலில் அடித்து நொறுக்குவது அவனது நீண்ட கால நண்பனாக சொல்லப்பட்ட சதாசிவம். வாழ்க்கை முழுவதும் இரண்டாம் இடத்தையே கொடுத்த பிரபாகரை, முதன் முதலாக தோற்கடிக்கும் போது சேர்த்து வைத்திருந்த அனைத்து வன்மத்தையும் கொட்டி தீர்க்கிறான். பிரபாகர் ஒரு லூசர்,தேர்வு தோல்வியினாலே வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து தற்கொலை செய்து கொண்டான் என பரப்பிவிடுகிறான்.
 
மணி, நாஸியா போன்ற சாதாரண மனிதர்களின் வாதங்களை பொருட்படுத்தியிருக்க வேண்டியதில்லை. அதை ஆசிரியரே இறுதியில் ஒத்துக் கொள்கிறார்.

பாஸ்கர் பிரபாகர் இறந்த அன்று அவனுக்கு வென்ஃப்லான் போட்டு விட்டதால் குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டவர். இதை தேவையில்லாத மனக்குழப்பம் என்கிறார் ஆசிரியர். அதே எளிமை படுத்துதலையே அன்வருக்கும் ஆசிரியர் செய்கிறார்.

மருத்துவ கல்லூரியின் ப்ளேபாய் அன்வர். கல்லூரியில் எல்லா பிரச்சினைகளிலும் அன்வர் பெயர் இருக்கும்.சவால் விட்டு பெண்கள் விடுதிக்குள் நுழைந்து உள்ளாடையை எடுத்து வந்தது என கல்லூரியையே அதகளம் செய்து கொண்டிருந்தவன் அன்வர்.தான் நினைத்திருந்தால் பிராபகரனை காப்பாற்றி இருக்கலாம், தனது கரத்தை நீட்ட தவறியதை நினைத்து குற்றவுணர்விற்கு ஆட்பட்டவன். நண்பனின் மரணத்திற்கு பிறகு முற்றிலும் மாறி குல்லா தாடி என மதத்திற்குள் தன்னை ஒடுக்கி மௌனமானவன். எளிதாக தன்னை தானே மன்னித்து கொண்டு கடந்து செல்லாமல் மதத்திற்குள் சிக்கிக் கொண்டதை அறிவின்மையாக பார்க்கிறார் ஆசிரியர். வாழ்க்கை அவ்வளவு எளிதா என்ன!?

மயில்சாமிதான் அந்த மருத்துவமனையின் அதிகார பீடத்தில் இருப்பவர். .அவருக்கு கீழ் உள்ள அனைவரும் அவர் வேலிக்குள் மேயும் ஆடுகள். அந்த வேலிக்குள் அவர்கள் சுதந்திரமாக இருந்து கொள்ளலாம்.அதை கடக்கும் ஆடுகள் கசாப்பு கடையில் கட்டி வைக்கப்படும்.அப்படி வேலி கடந்த இரு சம்பவங்கள் நாவலில் வருகின்றன.ஒன்று சாதி ரீதியாக ஒரு பேராசிரியரை தொல்லை கொடுத்து விரட்டியது, இரண்டு லிமாவின் கணவர்.

நாவலில் சில இடங்களில் சாதி ஒரு இழையாக மௌனமாக எட்டிப் பார்க்கிறது.இன்றைக்கு எல்லா துறைகளுக்குள்ளும் சாதி‌ சத்தமில்லாமல் வலுவாக இயங்குகிறது. சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் நடக்க இருந்த சாதி பற்றிய கருத்தரங்கம் நிறுத்தப்பட்டது கவனிக்கபட வேண்டிய ஒன்று.

இங்கு எல்லோருமே நமக்கு மேல் உள்ள ஏதோவொரு அதிகாரத்தால் அச்சுரத்தப்பட்டுதான் வாழ்கிறோம்.குடும்பம் , கிராமம் என சிறிய அமைப்புக்கள் தொட்டு கல்வி,ஆன்மீகம், அரசு என பெரிய அமைப்புக்கள் வரை சொல்லப்படாத ஒரு சவுக்கை கையில் வைத்திருக்கின்றன. கோடு தாண்டப்படும்போது சவுக்கு சுழற்றப்படுகிறது.

நவீன் சங்கு

அதுபோலவே இந்த அமைப்பிலும் மாணவர்களை அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள். உதாரணமாக ஒரு மருத்துவ மேற்படிப்பு மாணவன் அறுவை சிகிச்சைக்கு முன் தடவப்படும் திரவத்தை ஒழுங்காக தடவாததால், மறுநாள் அனைவர் முன்னும் சுவற்றில் தடவ சொல்லி தண்டிக்க‌ப்படுகிறான். இது அவனை உள்ளூர உடைப்பது. உளவியல் ரீதியாக தாக்கி தன்னம்பிக்கையை துளிர் விடமால் அழிப்பது. இதே போல் மற்றொரு மாணவன், பயிற்சியில் வெளி ஆள் ஒருவருக்கு மருத்துவ ஆலோசனை கூறியதற்காக, மயில்சாமி அனைத்து நோயாளிகளின் முன்னும் வைத்து அவமானப்படுத்துகிறார். மயில்சாமியின் அனுமதியின்றி பிரபாகர் கட்டுரை வெளியிட்டதால், அங்கே உரசல் உருவாகிறது. பிரபாகர் அறுவை சிகிச்சை அரங்கிலிருந்து வெளியேற்றப் படுகிறான். ஒதுக்கப்படுகிறான்.ஆனாலும் இந்த நிகழ்வுகளெல்லாம் பிரபாகரை தற்கொலை வரை கொண்டு செல்லும் என நான் நினைக்கவில்லை. அவனுக்கு ஏற்கனவே தற்கொலை பற்றி எண்ணம் இருந்திருக்க வேண்டும். சிறு வயதிலேயே அம்மாவின் தற்கொலை, தீவிர வாசிப்பு பரிச்சயம், அறை நண்பனின் தற்கொலை, சிறுமியின் மரணம் இவற்றின் முன்பு மயில்சாமி போன்ற மனிதர்களின் அழுத்தமோ அல்லது பிற உலகியல் காரணங்களோ பிரபாகரன் தற்கொலைக்கு காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

 பிரபாகரன் தேர்ந்தெடுத்த தற்கொலை முறை கவனிக்க வேண்டிய ஒன்று. மிக எளிமையான முறை. அதுவும் ஏற்கனவே அவன் அந்த மருந்து கலவை பற்றிய புத்தகத்தை வாசித்திருப்பது, அவனுக்கு தற்கொலை பற்றிய எண்ணம் ஏற்கனவே இருந்துள்ளதையே காண்பிக்கிறது. அவன் யாருடைய புற அழுத்தத்தாலும் அந்த முடிவை எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.

 நாவலின் அமைப்பே அதன் குறையாக உள்ளது. ஒரு தற்கொலை, அது பற்றி முடிச்சு, இறுதியில் எல்லா முடிச்சுகளையும் அவிழ்ப்பது, என ஒரு துப்பறியும் சினிமாவிற்கான கச்சிதமான வடிவம். இப்படி புதிராக உள்ளதால் ஒரு மனித சாவின் கனம் இல்லாமல் லேசாக மாறிவிடுகிறது. சிறிய சிறிய அத்தியாயமாக தற்கொலையை கண்டுபிடிக்கும் டிடெக்டிவின் குரல் போல் உள்ளதால், கேளிக்கை எழுத்தின் தரத்தில் அமைந்துவிடுகின்றது. புனைவின் பல்வேறு சாத்தியங்கள் மூலம் வாசகருக்கு பல தரிசனத்தை அளிக்க வாய்ப்பு இருக்கும் போது, எதற்காக சுயசரிதை போன்ற நிஜத்தை மட்டும் சொல்லும், சாத்தியங்கள் குறைவான வடிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்!? இதன் தொடர்ச்சியாக ஒரு நாவல் எழுதப்படுவதன் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. தற்கொலை குறித்து மேலை நாட்டு தத்துவ பார்வையோ அல்லது இந்திய மரபு சார்ந்த பார்வையோ இல்லாமல் இருப்பது அதன் குறையல்ல. ஆனால், ஒரு மரணம் சுற்றியிருப்பவர்களிடம் நிகழ்த்தும் மனோவியல் சிக்கல்களை அழுத்தமாக பேசாமல் அந்த மரணம் பற்றிய காரணங்களை தொகுக்கும் நிலையிலேயே நின்றுவிடுகிறது என்பதே அதன் குறை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...