அமானுஷ்ய எழுத்து

ஒரு சினிமா அல்லது இசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தால் வந்த மறுநொடி அந்த நிகழ்வைப் பற்றிய நமது அபிப்பிராயங்களை அல்லது அங்கு நாம் சிலாகித்த சில விஷயங்களை உடனே நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பகிர்ந்து மகிழ்வோம். காரணம் அவை காட்சிகளோடு ஒலி ஒளி வடிவில் நமக்குள் புகுந்து நம்மை ரசிக்க வைக்கிறது.
ஆனால் ஓர் இலக்கிய நிகழ்வுக்குச் சென்று வந்தால்; நிகழ்வில் பேசப்பட்ட விவரங்களை மனம் உள்வாங்கி அசைபோட்டு அதைச் சொற்களாக்கி எப்படி அதை நம்மில் இருந்து பிரித்து நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பகிரலாம் என்று மனம் சதா யோசித்த வண்ணம் இருக்கும். அதுவும் நாம் சென்று வந்த நிகழ்வு பயனான நிகழ்வாக அமைந்துவிட்டால், அந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களைப் பகிராமல் மௌனம் சாதிப்பது ஏதோ ஒரு குற்றவுணர்வில் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதுவும் பொருளாதாரம் மற்றும் இன்ன பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்து அதை இலவசமாக நமக்குக் கொடுத்த நல்லுள்ளங்களின் உழைப்பைப் போற்றாமல் விலகி இருப்பது மனசாட்சிக்கு விரோதமான செய்கை போலவும் தோன்றுகிறது.
மிக அண்மையில் நான் சென்று பயன் பெற்ற நிகழ்வு வல்லின ஏற்பட்டில் தலைநகர் கிரண்ட் பசிப்பிக் ஹோட்டலில் நடைபெற்ற எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் படைப்புலகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி. சிறிய வாசகப்பரப்பின் ஆதரவில் அமைதியாக சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வு.
யுவன் எனக்கு அவ்வளவாக அறிமுகமாகாத ஒரு படைப்பாளி. நான் அடிக்கடி யூடியூப்பில் கேட்கும் பவா அவர்களின் கதையாடல் நிகழ்ச்சியில் கூட யுவன் பெயர் வந்ததில்லை (நான் கேட்ட வரையில்). வல்லினம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் எனக்கு அவரைப் பற்றிய அறிமுகத்திற்கு பாலமாக அமைந்தது.
நிகழ்ச்சியில் யுவனின் படைப்புகள் குறித்து எழுத்தாளர் அரவிந்த், எழுத்தாளர் பாண்டியன் மற்றும் வல்லின ஆசிரியர் எழுத்தாளர் ம.நவீன் ஆகியோர்கள் உரை நிகழ்த்தினார்கள். மூவரின் உரையைக் கேட்ட பின் யுவன் படைப்புகளில் பொதிந்திருக்கும் மர்மம் குறித்த சிந்தனை எனக்குள் படர ஆரம்பித்தது. நாட்டில் பேர் சொல்லும் படைப்பாளிகள் என முத்திரை பதித்த இவர்கள் மூவருமே யுவன் படைப்புகளில் பொதிந்திருக்கும் கதையின் மூலக் கருவை விளக்கமாகச் சொல்ல இயலாமல் நம்மைக் குழப்பிய படியே தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
யுவனின் உரை மற்றும் கேள்வி பதில் அங்கம் நடைபெற்றது. நான் கேட்ட இலக்கியவாதிகளின் உரைகளில் யுவனின் உரை சற்று வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. அதாவது, “நீ வாசி. வாசிக்காமல் போ. உனக்கும் நட்டமில்லை. என் எழுத்திற்கும் நட்டமில்லை” என்பதுபோல் அவரின் உரை இருந்தது.
அவரின் தோற்றம் நாம் அவரிடம் மானசீகமாக வெகு சீக்கிரம் நெருங்குவதற்கு துணையாக அமைகிறது. கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவன் ஆசிரியர் சொல்வதை உள்வாங்கிக்கொள்ள முடியாத மந்த நிலையில் ‘தக்காபுக்கா’ என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, அவனை அன்பாக கனிவாக அணுகி அவனிடம் உள்ள குறைபாடுகளை நீக்கி தன்பால் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் நிறைந்த நல்ல குருவின் தன்மை யுவன் அவர்களிடம் எனக்குத் தென்பட்டது. அவ்வளவு வசீகரம். யதார்த்தம்.
“நான் எழுதுவது எழுத்தல்ல. எதையோ கிறுக்கி உங்களையெல்லாம் ஏமாற்றுகிறேன். எனக்கு எதுவும் தெரியாது. விளங்காத, புரியாத, தெரியாத ஐரோப்பிய ரஷ்ய நாட்டு எழுத்தாளர்களைப் பற்றி எல்லாம் பேசி நான் உங்களை கலவரப்படுத்த மாட்டேன். இயல்பாக இருங்கள். அன்பாக இருங்கள். பிடித்திருந்தால் வாசியுங்கள். வாசிக்காமலும் போங்கள்”. என்கிறார் தமது உரையில்.
பொதுவாக பிரபல இலக்கியவாதிகள் என்றால் அவர்களின் அருகில் செல்வதற்கு மனம் அஞ்சும். கடுமையான தோற்றம், தெளிவான பேச்சு, அறிவுபூர்வமான பகிர்தல், கம்பீரமான குரல், உலக இலக்கிய ஞானம், பிறரை மிரட்டுகிற பாவனையில் பார்வை என ஞானச் செருக்குடன் நம்மை பயமுறுத்துவார்கள். ஆனால் யுவன் அதற்கு எதிர்மறையானவர். சாந்தசொரூபி.
‘இலக்கியவாதிகள் அன்பானவர்கள் கருணையளர்கள் அழகானவர்கள் என்கிற பேச்சு எல்லாம் வேஸ்ட், அவர்களின் படைப்புகள் என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம், எழுத்தாளரை வாசிக்காமல் அவரைப்பற்றிய வெட்டிப்பேச்சில் மூழ்குபவர்கள் மூடர்கள்’ என்பார் சாரு.
யுவன் சந்திரசேகரை வாசிக்காமல் அவரைப் பற்றிச் சொல்லக் கூடாது என்பதால், அவரின் எழுத்துகளை இணையத்தின் வழி தேடி வாசித்தேன். நான்கு சிறுகதைகளை வாசித்தபின் யுவன் சாதாரண எழுத்தாளர் கிடையாது என்பதனை அறிந்து கொண்டேன். அவரிடம் அமானுஷ்ய சக்தி ஒன்று இருப்பதைப் போன்ற உணர்வு அவரின் எழுத்துகளை உள்வாங்கிய போது உணரமுடிந்தது.
இலக்கியம் கதை சொல்லும். மாய உலகிற்கு நம்மை எடுத்துச் செல்லும். நெறி படுத்தும். நெகிழவைக்கும். மனித வாழ்வைப் பேசும். மண் மணம் சொல்லும். தடைகளைத் தகர்த்தெறியும். அக இருளை அகற்றும். மனிதனை இயற்கை நேசியாக மாற்றும். உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது என்று உணர்த்தும். எதைச் செய்ய வேண்டும் என்பதைவிட எதைச் செய்யக்கூடாது என்பதை ஆழமாக போதிக்கும். நல்ல ரசனை உணர்வைக் காட்டும். யுவனின் எழுத்து இவை அனைத்தையும் சொல்வதோடல்லாமல் இலக்கியத்தில் தெய்வீக ஆற்றல் மற்றும் தீய சக்திகளின் சித்து வேலைகளையும் நம் கண் முன் நிறுத்துகிறது.
//ஞாபகத்தின் ஆழ் பரப்பில் புதையுண்டு கிடக்கும் எந்த ஒரு சம்பவமாவது தனியாகக் கிடக்கிறதா, சொல்லுங்கள்? வியர்த்த உடம்புடன் மணல்தரையில் புரண்டு எழுந்த மாதிரி, மேற்பரப்புக்கு எழுந்துயரும் எந்தவொரு நிகழ்ச்சி, தனிநபர், அல்லது நாளுடனும் பல்வேறு உபரி நினைவுத் துகள்கள் ஒட்டிக்கொண்டு வரத்தானே செய்கின்றன.//
சுவர்ப்பேய் என்ற சிறுகதையில் வரும் ஒரு பகுதி இது. நான் வாசித்த யுவனின் கதைகள் பெரும்பாலும் இதன் அடிப்படையில் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஶ்ரீவிஜி
நல்வாய்ப்பு
கடந்த வெள்ளி (10/6/2022) மற்றும் சனிக்கிழமையில் (11/6/2022), கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் வல்லினம் ஏற்பாட்டில் யுவன் சந்தரசேகரின் நவீன கவிதை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. தற்செயலாக இம்முகாமில் பங்கெடுத்த நான், இதை எனக்கு கிட்டிய இலக்கிய வரம் என்றே கூறுவேன். நவீன கவிதை என்றால் என்ன, எப்படி வாசிப்பது, எப்படி புரிந்து கொள்வது எனும் பல நுணுக்கங்களை யுவன் அவர்கள் விளக்கினார். இந்த அருமையான முகாம் ஏற்பாடு செய்த வல்லினம் குழுவுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். இது மாதிரியான முகாம்கள் பள்ளி மாணவர்கள் அளவிலும் இளைஞர்கள் அளவிலும் ஏற்று நடத்தினால் சிறுவயதிலிருந்தே நவீன கவிதைகள் மற்றும் நவீன இலக்கியங்களின் பற்றிய புரிந்துணர்வு அடுத்த தலைமுறையினருக்கு இருக்கும். எதிர்காலத்தில் இது போன்ற முகாமிற்கு ஆவலுடன் எதிர்பார்த்து வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
குகன்
கவிதையும் புரிதலும்

10/6/2022 தொடங்கி 11/6/2022 திகதி வரை வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட நவீன கவிதை முகாமில் கலந்துகொண்டேன். யுவன் சந்திரசேகர் அவர்களால் இம்முகாம் வழிநடத்தப்பட்டது. கவிதைகள் குறித்துப் பல பட்டறைகளில் கலந்துகொண்டிருந்தாலும், இந்த முகாம் ஒரு புதிய அனுபவமாக எனக்கு அமைந்தது. தொடக்கத்திலிருந்து கவிதைகளை வாசிக்க பிடித்திருந்தாலும், கவிதையைப் புரிந்துகொள்வது கடினம் என எண்ணம் எனக்கு இருந்துகொண்டேதான் இருந்தது. ‘இந்தக் கவிதையிலிருந்து உங்களுக்குப் புரிந்ததைச் சொல்லுங்கள்?’ என்ற கேள்வியை யாரேனும் கேட்டால், அந்தக் கவிதையில் கவிஞர் மறைமுகமாகச் சொல்ல வரும் கருத்துகளின் அடிப்படையிலே எனது புரிதலை முன்வைப்பேன். ஆனால், கவிதையை அதன் போக்கில் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதனையும் அதனைக் காட்சிப்படுத்தி அனுகிட வேண்டும் என்பதனையும் யுவன் அவர்கள் உணர்த்தினார்.
அதோடு, முகாமில் கலந்துரையாடுவதற்காகச் சில கவிதைத் தொகுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. அக்கவிதைகள் குறித்த கலந்துரையாடலில் சக பங்கேற்பாளர்கள் அவர்கள் பார்வையை முன் வைக்கும் பொழுது, அந்தக் கவிதையை மேலும் எளிதாக அனுகிட முடிந்தது. கவிதை வாசிப்பதும் அதனை அனுகுவதுமான தொடர் பயிற்சிகள் முகாமை மேலும் பயனாக்கியது.
பிறகு, 11/6/2022 மதியம் யுவன் சந்திரசேகர் படைப்புலகம் நிகழ்ச்சி நடந்தேறியது. அந்நிகழ்ச்சியில் அறிவிப்பாளராக இருக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் யுவன் அவர்களின் படைப்புகள் குறித்து விரிவான பார்வை சக எழுத்தாளர்களான அரவின் குமார், அ.பாண்டியன், ம.நவீன் அவர்களால் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரின் உரைளின் மூலமும் யுவன் அவர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அவற்றில் குறிப்பாக, யுவன் அவர்களின் ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’ நாவல்.
தொடர்ந்து, தமது புனைவுலகத்தைப் பற்றி யுவன் அவர்களே பகிரும் பொழுது, அவரின் புனைவுலகத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இரண்டு நாட்கள் நல்லதொரு அனுபவமாக இருந்தது. வாய்ப்பு வழங்கிய ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றி.
ஷாலினி
வயலினிலின் தந்திகளில் கவிதை

வல்லினத்தின் ஏற்பாட்டில் 10 ஜூன் தொடங்கி 11 வரையில் நவீன கவிதை முகாம் கோலாலம்பூரில் நடைபெற்றது. எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் வழிகாட்டுதலில் முகாம் நடைபெற்றது. முகாம் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே யுவனால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் கவிதைகள், ஆங்கில, ஹிந்தி மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஆகியவற்றை முகாம் ஒருங்கிணைப்பாளர் நவீன் புலனத்தில் பகிர்ந்திருந்தார். அவ்வப்போது கவிதைகளை அவசியம் வாசித்து வரும்படி நினைவுறுத்திக் கொண்டிருந்தார். எல்லா கவிதைகளையும் வாசித்து அதனருகிலே சிறிய குறிப்புகளையும் முக்கிய வரிகளை அடிக்கோடிட்டும் வைத்திருந்தேன். கவிதை முகாம் தொடங்குவதற்கு முன்னால் கவிதையை முதலில் அணுகுவது எப்படி என யுவன் சொல்லத் தொடங்கினார். அந்த முதல் அமர்விலே கவிதைகள் அடங்கிய தாளைக் கீழே வைக்க வேண்டியாதாகிருந்தது.
கவிதை வாசிப்பைத் தொடங்குவதற்கு முன்னால்
பார்த்துக் கொண்டிருந்த கண்ணாடி
தவறி கீழே விழுந்து
உடைந்து சிதறி போனதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன் நான்
(நினைவிலிருந்து எழுதப்படுவதால் சாரத்தை மட்டுமே பகிர்கிறேன்)
என்ற கவிதையை வாசித்து அதனை அணுகுவதைப் பயிற்சியாகச் செய்ய சொன்னார்.
அந்தக் கவிதைக்கு வாழ்க்கை சிதைந்து போவதைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டு ஏதும் செய்ய முடியாமல் இருக்கும் கையறு நிலை என்ற பொருள் சொன்னேன். இந்தக் கவிதையில் வாழ்க்கை என்பதற்கான குறிப்பு எங்கிருந்து வந்தது என அடுத்த கேள்வி கேட்டார். அடுத்தடுத்து, நண்பர்கள் முன்வைத்த கருத்துகள் அத்தனைக்கும் அப்படியான எதிர்கேள்வி கேட்டார். வெளியிலிருந்து கவிதை மேல் சுமத்தப்படும் பொருள், தத்துவம் கவிதை மேல் சுமத்தப்படும் எடை என்ற இடத்துக்கு வர அந்தப் பயிற்சி உதவியது. அடுத்தடுத்த கவிதைகள் மேல் எந்த எடையுமில்லாமல் காட்சிப்படுத்திப் பார்க்கும் பயிற்சி தொடங்கியது. அந்தப் பயிற்சிக்குப் பழக்கப்பட்டவுடன் தான் படிமக்கவிதைகள் வாசிக்கும் முறை குறித்த பார்வையை முன்வைத்தார். இப்படியாக கவிதையை வாசிக்கும் முறை, அதனை அணுகும் விதம் என இரண்டு நாட்களாகத் தொடர்ந்தாற் போன்று பல கவிதைகளை ஒட்டியப் பயிற்சியைக் கூட்டாகச் செய்து பார்த்தோம். அவர் பட்டறையில் சொன்னதைப் போல வயலின் தந்திகளில் முன்பின்னாக இசை மீட்டி சுரம் தேடும் முயற்சியாகவே கவிதைகள் ஒவ்வொன்றையும் அணுகும் பயிற்சிக்கு இட்டுச் சென்றார்.
இந்த இரண்டு நாள் கவிதை முகாம் மிகச்சிறந்த கற்றலனுபவமாக இருந்தது. அதன் பின்னர், அவரின் படைப்புலகம் குறித்த கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் குள்ளச்சித்தன் சரித்திரம் நாவல் குறித்த வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். எழுத்தாளர் ம.நவீன் யுவனின் சிறுகதைகளையும் எழுத்தாளர் அ.பாண்டியன் மணற்கேணி குறுங்கதைகள் தொகுப்பையும் ஒட்டி மிக விரிவான அறிமுகத்தை அளித்தனர். அதன் பின், அவருடனான கேள்வி பதில் அங்கம் இடம்பெற்றது. ஒவ்வொரு கேள்விக்கும் மிக உற்சாகமாகப் பதிலளித்தார். அறுதியான பார்வைக் கோணத்தை உருவாக்கிக் கொள்ளாமல் படைப்பை அணுகுவதும் மாற்று தரப்பின் இருப்பை நிராகரிக்காமல் இருக்கும் சுதந்திர மனநிலையையே பதில்களின் சாரமாக இருந்தது. தேர்ந்த எழுத்தாளுமையின் அணுக்கத்தில் கவிதை, இலக்கிய வாசிப்பையொட்டிய மேலதிகப் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக முகாம் அமைந்தது. இதனைச் சாத்தியப்படுத்திய வல்லினம் நண்பர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அரவின் குமார்
கவிதைகள் சொல்ல வருவது…

இரு நாள் தலைநகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நவீன கவிதை முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. வல்லின குழுவினர் தலைமையில் 10.6.2022 மற்றும் 11.6.2022 கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் கவிதை முகாம் நடைபெற்றது. கவிதை முகாமை வழிநடத்த யுவன் சந்திரசேகர் அவர்கள் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார். சில கவிதைகளை வாசித்து வர வேண்டிய நிபந்தனை அடிப்படையில் ‘சோதிமிகு நவ கவிதை’, ‘ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை’ தொகுப்புகளைப் புலனத்தில் பகிரப்பட்டது. இக்கவிதைகளை வாசித்தேன். என்னுள் பல கேள்விகள் எழுந்தது.
இந்தக் கவிதைகள் என்ன சொல்ல வருகின்றன? நான் கவிதையை முறையாக வாசிக்கின்றேனா? இந்தக் கவிதைகள் ஏதேனும் மறைமுகமான கருத்துக்களை முன் நிறுத்துகின்றனவா? இவ்வாறு என் சிந்தனையைச் சிதைத்த வண்ணமாகவே இக்கேள்விகள் இருந்தது. முகாமில் கலந்துகொண்டு கேள்வி கேட்கும் தருணமும் அமைந்தது. அதே நேரத்தில் ‘எல்லை’ என்ற கவிதையை வாசிக்கும் வாய்ப்பும் எட்டியது.
கவிதையை வாசித்த பிறகு யுவன் அவர்கள் ‘கொசு நெருப்பில்’ என்ற சொல்லை நிறுத்தி வாசிக்க செய்தார். ஒரு கவிதையை வாசிக்கும் முறையையும் அதனை அணுகும் முறையையும் அறிய முடிந்தது. அதே வேளையில் கவிதையை வாசித்த பிறகு அதனைக் காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும் என்றார். தேவையில்லாத கருத்துக்களைப் புகுத்தி பார்க்க வேண்டாம் என்பதையும் அறிந்தேன். அதிகமான கவிதைகளை வாசிப்பதனால் மட்டுமே அதனை புரிந்துகொள்ளும் தன்மை ஏற்படும். இதனை தொடர்ந்து 11 ஜூன் நடைபெற்ற யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் அரவின் குமார் (குள்ளச்சித்திரன் நாவல்), எழுத்தாளர் அ.பாண்டின் (மணற்கேணி குறுங்கதைகள் தொகுப்பு) மற்றும் எழுத்தாளர் ம.நவீன் (சிறுகதைகள்) அவரின் படைப்புகளை விவரித்து தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
யுவன் சந்திரசேகரன் அவருடன் கேள்வி பதில் அங்கமும் நிறைவேறியது. அவரின் விருவிருப்பான பேச்சும் ஆங்காங்கு எழும் நகைச்சுவையும் நிகழ்ச்சியை மேலும் சிறப்புற செய்தது. வாய்ப்பு வழங்கிய ஏற்பாட்டு குழுவினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புஸ்பவள்ளி
1 comment for “யுவன் கவிதை முகாமில் கலந்துகொண்டவர்களின் பதிவு”