வாழ்வது என்பது என்ன என்று யோசித்தால், அது சாவில் இருந்து தப்பிக்கும் கலை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. சாவு என்பது மூப்பின் காரணமாக மட்டுமே வருவதில்லை. அது வாழ்வின் ரகசியம் போல மறைந்திருந்து ஒரு நாள் வெளிப்படுகின்றது. மூப்பில் மரணம் என்பது வாழ்க்கையின் பிடி தளர்ந்து, ஒரு விடைபெருதல் போல நிகழ்கின்றது. மனம் அதை ஏற்றுக் கொள்கிறது. பிறந்தவர் எல்லாரும் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும் என்னும் நிலையான பிரபஞ்ச விதிக்கு நாம் பழகியிருக்கிறோம். தோன்றுவதெல்லாம் அழியும், நிலையில்லா வாழ்க்கை இது என்ற புரிதலின் வழி நம்மைச் சமாதானம் செய்து கொள்கின்றோம்.
ஆனால் நோயின் காரணமாக ஏற்படும் மரணங்களும் இளமையில் ஏற்படும் மரணங்களும் சமாதானங்களுக்கு அப்பாற்பட்டவை. யாரையும் நிலை குழைய வைப்பவை. வாழ்க்கையின் சாரம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புபவை. எழுத்தாளர் இமையம் சிறுநீரக செயலிழப்பின் காரணமாக மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் இளைஞனை ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற நாவலின் வழி நம் முன் பேச வைத்து வாழ்க்கை குறித்தும் மருத்துவம் குறித்தும் சமகால சமூக சிக்கல்கள் குறித்தும் தீவிரமாகச் சிந்திக்க வைத்துள்ளார்.
இமையத்தின் கதை கூறும் முறை என்பது நேரிடையானது. அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து மாவாக்குவது போல, ஒரு மைய கதையை நுணுகி நுணுகி ஆராய்ந்து அதன் எல்லா கோணங்களையும் கதைக்குள் கொண்டுவந்து விடுவார். கிளைக் கதைகளோ, முன் வரலாறுகளோ, தத்துவார்த்த விவாதங்களளோ இல்லாமல் ஒரு எரிமலைக் குழிக்குள் இருந்து புறப்பட்டுக் கிளம்பும் எரிமலை குழம்பு போல பெரும் வெப்பத்துடன் அவரது கதைகள் அமைந்துள்ளன.
‘இப்போது உயிரோடிருக்கிறேன்’, நாவல், திடீரென்று சிறுநீரக செயலிழப்புக்குள்ளான இளைஞனை மையமிட்டது. துடிப்பும் துருதுருப்பும் கொண்ட பதின்ம வயது இளைஞனான பார்வையில், கதை தன்னிலை நோக்கில் சொல்லப்படுகின்றது. எதையும் கூர்ந்து நோக்குவதும் அது பற்றி சிந்திப்பதும் இயல்பாகக் கொண்ட அந்த இளைஞனின் புரிதலுக்கு உட்பட்டே அனைத்க்ச் சிக்கல்களும் விவரிக்கப்படுகின்றன. ஆகவே ஒரு பதினைந்து வயது இளைஞனின் வாக்குமூலமாக, குடும்பம், பெற்றோர், பள்ளிக்கூடம், நோயின் தீவிரம் என அனைத்தும் அவனது பார்வையில் அவனது மொழியிலேயே அமைந்திருக்கின்றது. ஒரு கூடுதல் சொல்லும் இல்லை. ஆடம்பர வர்ணனைகளோ அதீத உவமைகளோ இல்லாதது இந்தக் கதையின் பலம். இமையம் மிகக் கவனமாக மொழியை மட்டுப்படுத்தி ஓர் இளைஞனின் குரலாக முன் வைத்துள்ளார். அதுவே இந்தக் கதையை எளிமையானதாகவும் அதே நேரம் அசல்தன்மையும் வீச்சும் குறையாததாகவும் அமைத்திருக்கின்றது.
வாழ்க்கை நிலையானது இல்லை என்றாலும் வாழும் ஆசை எல்லாருக்கும் பொதுவானது. ஆகவே நோயோடு போராட நாம் தயாராகிக் கொள்கிறோம். நோய்மை என்றதுமே, அதன் தீர்வாக நம் மனம் மருத்துவத்தை நாடுகின்றது. நோயில் இருந்து மீண்டு வர மருத்துவம் பெரும் வெளிச்சமாக நமக்குத் தெரிகின்றது. நவீன தொழில்நுட்பமும் மருத்துவமும் மக்களை நோயில் இருந்து காக்கும் எளிய சாதனமாகச் செயல்பட வேண்டும். ஆனால் அடிப்படையில் ஒரு மானுட சேவையாக இருக்க வேண்டிய மருத்துவம் மெல்ல பணம் ஈட்டும் தொழில்துறையாக மருவிவிட்ட நவீன காலத்தைப் புரிந்து கொள்ள முடியாத சாமானியர்களின் அவதிகள் அலட்சியம் செய்யப்படுகின்றன. அவர்கள் மருத்துவர்களின் முன் தூண்டிலில் சிக்கிய மீன்களைப் போல தத்தளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சிறுநீரக செயலிழப்புக்கு ஆளான இளைஞனை மரணத்திலிருந்து காப்பாற்ற போராடும் ஒரு சாமானிய குடும்பம் நவீன மருத்துவம் என்ற கறாரான கட்டமைப்பில் சிக்கிக் கொண்டு தவிப்பதை வாசகனின் மனதை உழுக்கும் நடைமுறை உண்மைகளுடன் நாவலாக்கியிருக்கிறார் எழுத்தாளர் இமையம். தங்கள் ஒரே மகனின் உயிரை எவ்வளவு செலவு செய்தும் மீட்டு அவனை நடமாட வைத்துவிட வேண்டும் என்று கொந்தளிக்கும் பெற்றோர், இன்னொரு பக்கம் குடும்பத்தையே வீதிக்கு கொண்டுவந்துவிடக்கூடிய கடும் பொருளாதார நெருக்கடியில் வீழ்வதை, முகம் கொடுக்க முடியாமல் தடுமாறும் அவல நிலையை இந்நாவல் பெரும் வலியுடன் சித்தரிக்கிறது. “உசிரோட இருக்க அதிஷ்டம் வேண்டும், சீக்கிரம் செத்துபோக அதைவிட அதிஷ்டம் வேண்டும்” என்று வாழ்க்கை தரும் கசப்பிலிருந்து அருணாச்சலத்திடம் சொற்கள் பிறக்கின்றன.
அருணாச்சலம் ஊரில் அரிசி ஆலை நடத்தும் ஓரளவு வசதி படைத்த குடும்பத் தலைவன். மிடுக்கும் துடுக்கான பேச்சும் கொண்ட ஆண். ஆனால் அவசர அவசரமாகச் சிக்கல்களைத் தீர்த்துவிடும் வேகம் கொண்டவர். மிக வேகமாக முடிவுகள் எடுக்ககூடியவர், அதே சமயம் மிக வேகமாக முயற்சிகளில் சலிப்பு அடைந்துவிடுபவர். மனைவி வள்ளியம்மை கணவன் பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்தும் பெண். குடும்பத்தின் மேல் அதீத பற்றும் கணவன் மேல் அழுத்தமான possessive குணமும் கொண்டவள். அருணாச்சலத்தின் பெற்றோர் சேர்த்து வைத்த விவசாய நிலம் கொஞ்சம் இருக்கிறது. தமிழரசன் மூத்த மகன். பிலாஸ் 1 படிக்கிறான். அவனுக்குப் பத்து வயது தங்கை இருக்கிறாள். பெயர் தமிழரசி. இந்த அளவில் ஒரு நடுத்தர வர்கத்துப் குடும்ப பின்னணியுடன் அமையும் அந்தக் குடும்பத்தில் தமிழரசனுக்குத் தீடீரென்று ஏற்பட்ட காய்ச்சல் முதலில் சாதாரணமாகவே எதிர்கொள்ளப்படுகின்றது. அவனை உள்ளூர் மருத்தக நண்பரிடம் அழைத்துச் சென்று மருந்துவம் பார்க்கிறார் அருணாச்சலம். குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதும் அதை முதல்கட்ட அல்லது சற்று மேலான மருத்துவ சிகிச்சையில் வென்று பழைய நிலைக்குத் திரும்புவதும் எல்லா குடும்பங்களிலும் சாதாராணமானதுதான்.
ஆனால், தமிழரசனுக்கு ஏற்பட்ட காய்ச்சலின் வீரியம் வேறாக இருக்கிறது. அவனுக்கு வலிப்பு வருகிறது. கை காலில் செயல் இழப்பும் பேச்சும் நின்று போகின்றது. குடும்பமே அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் தடுமாறுகிறது. அருணாச்சலம் உடனே சேலம் கிருஷ்ணா மருத்துவமனைக்கு மகனை அழைத்துப் போகிறார். அங்கே பரிசோதனையில் அவனுக்குச் சிறுநீரக பிரச்சனை இருப்பதாக சந்தேகம் எழவே மருத்துவர் ஆலோசனைப்படியும் நண்பர்களின் ஆலோசனையையும் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டு உடனடியாகச் சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள். முதல் பதினைந்து பக்கங்களில் முடிந்துவிடும் இந்த முன் கதைக்குப் பிறகு மொத்த நாவலும் எம் எம் சி தனியார் மருத்துவமனையில் நடக்கும் சிறுநீரக பரிசோதனைகள், மருத்துவம், மருத்துவ நடைமுறைகள், மாற்று சிறுநீரகம் பெருவதில் உள்ள மருத்துவ கட்டுப்பாடுகளும் சிக்கல்களும் என ஒரே களத்தில் சுழல்கிறது.
சிறிய கிராமத்தில் சுதந்திரமாகச் சுற்றி வந்த அந்தக் குடும்பம் பிரமாண்ட மருத்துவமனையில் ஏறக்குறைய நாற்பத்தைந்து நாட்கள் பெரும் குழப்பத்தோடும் ‘நாளை என்ன ஆகுமோ’ என்ற பதற்றத்தோடும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கூடுதலாக, காவல் நிலையம், நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம் என அலைய வேண்டியுள்ளது. மருத்துவ உதவியாளர்களும் மருத்துவர்களும் நோயின் தன்மையையும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் மேலோட்டமாகவே சொல்லி முடிவெடுக்கும் பொறுப்பை நோயாளிகளைச் சார்ந்தோரிடமே விட்டு விடுவதால் அவர்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவ உதவியாளர்களும் தாதிகளும் மருத்துவர்களின் அனுமதியின்றி சிறு தகவலையும் சொல்ல மறுக்கின்றனர். மருத்துவர்கள் கோப்புகளில் எழுதிவிட்டுச் செல்லும் குறிப்புகளை மற்றவர்கள் வாசித்துப் பார்ப்பதைக்கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. இதன் காரணமாகப் பெரும் குழப்பத்துடனும் வாக்குவாதங்களுடனும் அருணாச்சலம் பல முடிவுகளை எடுக்கிறார். மருத்துவமனை தேர்வு, வார்ட் தேர்வு, சிகிச்சை என பல முடிவுகளையும் அவர் தடுமாறி தடுமாறியே ஒரு முடிவுக்கு வருகிறார். அவை சரியானதுதானா என்பதில் அவருக்கே பல நேரங்களில் அவநம்பிக்கை வருகின்றது.
இதனால் அருணாச்சலத்தின் மேல் அவர் மனைவிக்கு முன்பே இருந்த கசப்புகள் மேலும் அதிகமாகி வசவுகளும் வாய்ச்சண்டைகளும் அதிகமாகின்றன. உதாரணமாக அந்த மருத்துவமனையில் ஏ புலோக் பி புலோக் என இரண்டு பிரிவுகள் இயங்குவதும் ஏ புலோக் பணம் கட்டி பார்ப்போருக்கும் பி புலோக் இலவச சிகிச்சை மையமாகச் செயல்படுவதையும் தமிழரசனுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தும் முடிவுக்கு வந்த பின்னர்தான் அவர்களுக்குத் தெரிகின்றது. இத்தகவல் தெரிவதற்கு முன்பே, அவர்கள் பல லட்ச ரூபாய்களை ஏ புலோக் மருத்துவமனை சிகிச்சையில் செலவு செய்துவிட்டனர். அலைச்சலும் குழப்பங்களும் தரும் அழுத்தம் தாங்காமல், ”என்னடா இது சனியனா இருக்கு” என்றும், “சுடுகாட்டுக்குப் போவற வரைக்கும் இது விடாது போலவே” என்று பல முறை உடைந்து பிதற்றுகிறார் அருணாச்சலம். அவர் மனைவியும் அழுது புலம்புகிறார். அவசர அவசரமாக நிலத்தை விற்று பணம் பெருகின்றனர். பலரிடம் வட்டிக்கி கடன் வாங்குகின்றனர். “குடும்பத்தையே வீதிக்குக் கொண்டுவராம விடாது போல இந்தச் சனியன்” என்று புலம்பினாலும் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை
இமையத்தின் செல்லாத பணம் நாவலில் மருத்துவமனை காட்சிகளும் எரிச்சலூட்டும் அதன் நடைமுறைகளும் மக நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். உடல் வெந்து கிடக்கும் பெண்ணைச் சார்ந்தவர்களின் வேதனையை அந்த மருத்துவமனை நடைமுறைகள் மேலும் ரணமாக்கும். ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலிலும் இமையம் விரிவான மருத்துவமனை காட்சிகளைச் சித்தரிக்கின்றார். கூடுதலாகப் பலரும் அறிந்திராக சிறுநீரக சிகிச்சை முறைகளையும் மருத்துவ தகவல்களையும் கொஞ்சமும் கட்டுரைதன்மை இல்லாமல் மிகச் சிறப்பாகப் புனைவாக்கியிருக்கின்றார். மிக எதர்த்தமான உரையாடல்களில் எளிமையாக அவை வாசகனுக்கு விளக்கப்படுகின்றன.
தமிழரசனைச் சிகிச்சைக்கு சேர்த்த பின் அருணாச்சலமும் அவர் மனைவியும் அந்தப் பிரமாண்ட மருத்துவமனையில் மகனுக்கு உதவியாகத் தங்கிக் கொண்டு மருத்துவர்கள் சொல்லும் எல்லா பரிசோதனைகளுக்கும் அவனை அனுப்பிக் கொண்டும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் நிர்வாகம் விதிக்கும் கட்டணங்களைப் பணம் தேடி கட்டிக் கொண்டும் அடையும் அலைச்சல் மிகப்பெரிய சுமையாக வாசகர் மனதில் கனக்கிறது.
மருத்துவர்கள் தமிழரசனுக்கு என்ன நோய் என்பதைத் தெளிவாகச் சொல்லாமலே பல சிகிச்சைகளுக்கு உட்படுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும் “இது ஒன்றும் இல்லை… சாதாரணம்தான்” என்பது போல சொல்லப்படும் விளக்கங்கள் அவர்களை மயக்குகின்றது. ஆனால், ஒவ்வொரு பரிசோதனைக்குப் பிறகும் ஒவ்வொரு சிக்கலாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழரசனுக்கு டயாலிசிஸ் செய்ய முதலில் தொடை வழியும் பிறகு தொண்டை வழியும் குழாய்கள் பொருத்தப்படுகின்றன. அதன் பிறகு இடது கையில் பிஸ்டுலா பொருத்தப்படுகிறது. ஆனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்பதைத் தமிழரசனின் பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாழ்நாள் முழுதும் தங்கள் மகன் மருத்துவமனையும் வீடுமாக அலைவதையும் அதற்குச் செலவாகக் கூடிய பணம், உடல் உபாதைகள் போன்றவற்றையும் நினைத்து அஞ்சுகின்றனர். மருத்துவர்களின் ஆலோசனையின் படி மாற்று சிருநீரகம் பொருத்துவது பற்றி அவர்கள் சிந்திக்கின்றனர். மாற்று சிறுநீரகம் பொருத்தினால் எல்லா சிக்கல்களுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகியில் பணம் செலவு செய்வது பற்றி தயங்காமல் அந்த முயற்சியில் இறங்குகின்றனர். ஆனால் மாற்று சிறுநீரகம் பொருத்துவது அவ்வளவு சுலபமானது அல்ல என்ற உண்மை அவர்களுக்குப் போகப் போகப் புரிகின்றது.
தமிழரசனின் தாயே தன் ஒரு கிறுநீரகத்தை மகனுக்குக் கொடுக்க முன்வருகிறார் ஆனாலும் பல தடைகளையும் சோதனைகளையும் அதற்குக் கடக்க வேண்டியுள்ளது. மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு முன் பதிமூன்று வெவ்வேறு துறை மருத்துவர்களிடம் ஆலோசனையும் அனுமதியும் பெற வேண்டியுள்ளது. சிறுநீரக விற்பனை என்னும் சட்டவிரோத செயல் தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பதால் அரசு பல்வேறு அடுக்குக் கட்டுப்பாடுகளையும் பல அரசு துறை அதிகாரிகளின் அனுமதியையும் பெற வேண்டிய நிர்பந்தத்தை நோயாளிகளுக்கு வித்தித்துள்ளதை அவர்கள் தாமதமாகவே தெரிந்து கொள்கின்றனர்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் எந்த நேரத்திலும் புது சிறுநீரகத்தைத் தமிழரசனின் உடல் நிராகரிக்ககூடிய சாத்தியம் இருப்பதால், அது பற்றிய முழு விழிப்புடனும் பயத்துடனும் முதல் சில நாட்களைக் கடத்துகின்றனர். ஆனால், சில நாட்களில் தமிழரசனின் சிறுநீரில் கிரயட்டீன் அளவு கூடிக் கொண்டு போவது புது குழப்பத்தை உண்டாக்குகின்றது. அதற்குப் பயப்சி சோதனை செய்து பார்த்துதான் காரணம் அறிய வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவெடுத்து அதற்கு அவனை உட்படுத்துகின்றனர். இது தமிழரசனின் உடல் நிலையில் முடிவில்லா நிலையை உண்டுபன்னுகின்றது.
சிறுநீரக நோய் என்பது எவ்வளவு செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும் முற்றான தீர்வு என்பது அறுபது விழுக்காடு பேருக்குத்தான் சாத்தியமாகிறது என்ற உண்மையை அறிந்து அருணாச்சலமும் அவர் மனைவியும் நொந்து போகின்றனர். அதைவிட, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பள்ளி வாழ்க்கைக்கும் பழைய வாழ்க்கைக்கும் திரும்பிவிடலாம் என்று கற்பனையில் மூழ்கிக் கிடந்த தமிழரசன் நிலையில்லாத தன் எதிர்காலம் தரும் குழப்பத்தில் ஆழ்ந்து போகின்றான்.
“பணம்தான் உங்க பிள்ளைக்குக் கடவுள்… அத நெரைய சேத்து வச்சிக்குங்க” என்று ஒரு மருத்துவர் சொல்வது சிறுநீரக சிகிச்சை என்பது சாமானியனுக்கு எட்டாத தூரத்தில் இருப்பதைப் புரியவைக்கிறது.
இந்நாவலில் மிக உச்சமான பல தருணங்களை இமையம் அமைத்திருக்கின்றார். மருத்துவமனையில் சேர்ந்த புதிதில் அருணாச்சலத்தின் மாமியார், “குல தெய்வத்துக்கு வேண்டிகலாம்” என சொல்லும் போது, முகத்தில் அடித்தது போல “குலதெய்வ கோயிலு என்ன ஜெனரல் ஹாஸ்பிட்டலா?” என கேட்கும் அவர், சிறுநீரக மாற்று அறுவை அறைக்ந்த் தமிழரசன் செல்லும் முன்பாகச் சாமி கும்பிட “பாட்டிய கூப்பிடு” என்று சொல்கிறார்.
தன் உடலில் ஏற்பட்ட திடீர் பாதிப்பையும் வலியையும் அச்சத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுக்குள்ளேயே உரையாடிக் கொண்டும் சுற்றி நடப்பவைப் பற்றி யோசித்துக் கொண்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயலும் தமிழரசன், அறுவை சிகிச்சை அறையில் நுழையும் முன் குளியல் அறை கண்ணாடியில் படியும் நீராவியில் தன் பெயரை எழுதிப் பார்க்கிறான். கோடுகள் இழுத்துத் தன் முகம் சின்ன துண்டுகளாகத் தெரிவதை ஆயசத்தோடு பார்க்கிறான். பின் கோடுகளும் பெயரும் மறைவதை மெளனமாகப் பார்க்கிறான். அவன் தனது நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள மனதோடு போராடிக் கொண்டே இருக்கிறான்.
இரண்டு வகையில் இந்நாவல் மிக முக்கியமான படைப்பாக அமைகிறது என்று நான் நினைக்கிறேன். முதலாவதாகச் சமகாலத்தில் சிறுநீரக நோயின் தீவிரமும் அதன் அத்தனைச் சிக்கல்களையும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் இந்த நாவலின் கரு மிக அவசியமானது. நாடு மொழி கடந்து ஒரு உலகலாவிய உடல் ஆரோக்கிய சிக்கலை அது முன்வைத்து பேசுகிறது. தன் பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட சிறுநீரக நோய் குறித்து அறிந்து அது பற்றிய மேலாய்வுகளை செய்து ஒரு ஆவணமாகவே இந்நாவலை இமையம் எழுதியுள்ளார். சிறுநீரக நோயிற்கு முக்கிய காரணம் என ஒன்று இல்லை. புற்றுநோய் போல அதுவும் பல காரணங்களால் ஏற்படலாம். வயது வேறுபாடு இல்லாமல் பலருக்கும் ஏற்படும் இந்தப் பாதிப்பை அரசும் சுகாதார அமைப்புகளும் இன்னமும் சரியாகக் கையாளவில்லை. மாறாகப் பணம் தரும் வழிகளில் ஒன்றாக மருத்துவத் துறை அந்நோயை மாற்றிக் கொண்டிருக்கிறது. இது உடனடி ஆய்வுக்கும் தீர்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டிய சமூக சிக்கலாகும்.
அடுத்து ஒரு கலைப்படைப்பாக இந்நாவல் மிகச் சிறப்பாகவும் கவனமாகவும் எழுதப்பட்டுள்ளது. மிக சிக்கலான அடர்ந்த மருத்துவ தகவல்களைக் கொஞ்சமும் துருத்திக் கொண்டு தெரியாமல், கட்டுரை தன்மையும் இல்லாமல் கதைக்குள் வைக்கப்பட்டுள்ளது. பதைபதைப்போடு நகரும் கதை மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றது. மேலும், ஒரு பதின்ம வயது நோயாளி இளைஞனின் பார்வையில் சொல்லப்படும் கதை அவன் அனுபவத்திற்கு உட்பட்ட வட்டத்திலேயே நகர்வது மிகச் சிறப்பு. அந்தக் குறுகல் வழியிலேயே கதைக்குத் தேவையான முழு விவரிப்பையும் இமையம் தந்துவிடுகின்றார். அதுவே அவரின் புனைவெழுத்து அனுபவத்தைக் காட்டிவிடுகின்றது.
‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்பது இந்த நிமிடத்தின் உண்மை மட்டுமே. அடுத்த நொடியில் அது பொய்யாகிவிடலாம். வாழ்வின் அர்தமின்மையை நோயின் வழி ஆராயும் சிறந்த படைப்பு இந்நாவல்.