1
நம் வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட்டது /எழுதப்பட்டது 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. ஜெ.ஹெக்.நெல்சனின் மதுரை கண்ட்ரி மானுவல் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் ஒரு தொடக்க சாதனை. ஜெ.ஹெக். நெல்சனில் இருந்து ஒரு வரலாற்று எழுத்து நிரை எழுந்தது. ராபர்ட் கால்டுவெல், டபிள்யூ. ப்ரான்சிஸ், ஹெக்.ஆர். பேட் என ஜெ.ஹெக். நெல்சன் வழி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பின் இந்திய வரலாற்று எழுத்தாளர்களுக்கான ஒரு நிரை உருவாகியது. தமிழ்நாட்டில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அதன் தொடக்கமாக உள்ளார். நீலகண்ட சாஸ்திரியிடமிருந்து எஸ். வையாபுரிப்பிள்ளை, கே. கே. பிள்ளை, அ.கி. பரந்தாமனார், டி.வி. சதாசிவ பண்டாரத்தார், கா. அப்பாதுரை எனப் பட்டியலிடலாம்.
மேலே குறிபிட்டவர்கள் அனைவரும் சரியான ஆதாரங்களைக் கல்வெட்டு, செப்பேடு, இலக்கிய சான்றுகள் என பல மூலங்களில் தேடி வரலாற்றை எழுதி நிறுவியவர்கள் . இவர்களுக்கு நேர் எதிர்புறம் நாட்டாரியல் வரலாற்று எழுத்து இருந்தது. தமிழில் அதனைத் தொகுக்கத் தொடங்கியது மு. அருணாச்சலம், கி. வா. ஜெகன்னாதன், ஆறுமுகபெருமாள் நாடார் போன்ற நாட்டார் ஆய்வாளர்கள். இவர்களிடமிருந்து தொடங்கி 1986-ல் நாட்டாரியல் தனி துறையானதும் அதனை முறையாகப் பயின்று கள ஆய்வு செய்து முறையாகத் தொகுத்த முன்னோடியாக அ.கா. பெருமாள் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஒரு நிரை சொல்லலாம்.
2000 வரை தமிழக வரலாற்று எழுத்து மேலே சொன்ன இரண்டு சாத்தியமான வழிகளில் நிகழ்ந்து தன்னைத் தொகுத்துக் கொண்டது. இரண்டாயிரத்திற்குப் பின் இந்திய வரலாற்றில் மேலும் நுண்ணிய வரலாற்றை நோக்கி செல்லும் தேவை உருவானது. நுண் வரலாறு ஜெ.ஹெக். நெல்சனின் செவ்வியல் வரலாற்றையும், அ.கா. பெருமாளின் நாட்டார் வரலாற்றையும் தன்னுள் இழுத்து ஒரு முழுமை நோக்கைக் கோரத் தொடங்கியது. ராய் மாக்ஸாம் எழுதிய உப்புவேலி அத்தகைய வரலாற்று எழுத்தின் சிறந்த உதாரணம். ராய் மாக்ஸாம் லண்டன் லைப்ரரியில் இருந்து பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டு வரலாற்றில் உள்ள இடைவெளிகளை/மேலும் நுண்ணிய வரலாற்றை எழுதினார்.
2
தமிழ் நாவல்களில் இந்த வரலாற்றிலிருந்து வரலாறு எழுதும் தாக்கம் ஏற்பட்டது. 90களுக்குப் பிறகு எழுதப்பட்ட நாவல்களில் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் இந்த வகை நாவல்களில் முதல் முயற்சி. ஜெயமோகனின் வெள்ளையானை, சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் இந்த வகையில் எழுதப்பட்ட தமிழின் சிறந்த நாவல்கள்.
சோ. தர்மனின் வௌவால் தேசம் நாவலைப் படித்து முடித்தபோது மேலே சொன்ன வரிசையில் வைத்துப் பார்க்கும் சிறந்த நாவல் என்ற எண்ணமே முதலில் தோன்றியது. மேலே குறிப்பிட்ட நாவலாசிரியர்களிடமிருந்து சோ. தர்மன் வேறுபடுமிடமும் உண்டு அதனையும் இக்கட்டுரையில் சொல்ல முயற்சிக்கிறேன்.
வௌவால் தேசம் வேல்ஸ் துரைக்கும், கட்டபொம்மனுக்கும் இடையேயான போரில் தொடங்குகிறது. ஆனால் பாளையக்கார்கள், பிரிட்டிஷ் ராஜியத்திற்கு இடையேயான வரலாறாக நாவல் விரியவில்லை. சோ. தர்மன் பேச நினைப்பது மேலும் நுண்ணிய வரலாறு. அந்த நுண்ணிய வரலாறு அவர் வளர்ந்த உருளைக்குடி கிராமத்திலிருந்து தொடங்குகிறது. அக்கிராமத்திலேயே முழுமைக் கொள்கிறது. இளமை காலத்தில் உளுளைக்குடியில் தமக்குக் கிடைத்த அனுபவங்களே சோ. தர்மனின் வரலாற்றுப் பார்வையாக அமைகின்றது. அங்கிருந்தே சோ. தர்மனின் அனைத்து நாவல்களும் எழுகின்றன.
சோ. தர்மனின் அனைத்து நாவல்களிலும் ஒன்றே பேசுபொருள். அவர் வீழ்ந்த நாகரீகத்தின் பிரதிநிதியாகத் தன்னை நிறுத்திக்கொண்டு நம் முன் கேள்வி கேட்கிறார். 1996-ல் எழுதிய தூர்வை நாவல் முதல் வௌவால் தேசம் வரை ஒரே கேள்வியை முன்வைக்கிறார் தர்மன். அவரின் இளமை காலத்தில் பார்த்து வளர்ந்த செழுமையான கரிசல் நிலத்தின் வீழ்ச்சி. அவ்வீழ்ச்சிக்கான காரணிகளை ஒவ்வொரு நாவலிலும் ஆராய்கிறார். அவ்வீழ்ச்சியிலிருந்து ஒட்டுமொத்த மானுடத்தின் மீது அறக் கேள்வியை எழுவதாலே அவை தலைசிறந்த நாவல்கள் ஆகின்றன.
1800-ல் தொடங்கிய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் வீழ்ச்சி, அதன் அழிவின் முழுமையைக் கண்டது 1960, 70களில். சோ. தர்மனின் பேசும் களம் இந்த நூற்றியெழுபது வருடங்களே. இந்த நூற்றியெழுபது வருடங்களில் உருளைக்குடி கிராமத்தில் இருந்த கண்மாய் நீர் பாசனம் எப்படி காணாமல் போனது. கரிசல் நிலத்தின் வேளாண்மை மறைந்து பருத்தி மற்றும் பிற பயிர்களின் விளைச்சல் எப்படி மொத்தமாக மறைந்தன. குடும்பன் என்ற கண்மாயின் காவல்நாயகம் எப்படி வரலாற்றில் காணாமல் மறைந்தான் என்ற கேள்வியை வெவ்வேறு களத்தில் வெவ்வேறு வடிவில் கேட்டுப் பார்க்கிறார் தர்மன்.
3
என்னைப் பொருத்த வரை சோ. தர்மனின் நாவல்கள் மூன்று முறை வாசிப்பைக் கோருபவை. அவர் நாவலில் வரும் பறவைகள், மரங்கள், நீர்நிலைகள், மிருகங்களின் சித்தரிப்பு எனப் போகிற போக்கில் வரும் ஒரு காட்சிக்கூட கதையோடு பொருந்தி யோசிக்கும்போது ஆழமான பார்வையை முன்வைப்பவை.
வௌவால் தேசத்தில் வரும் ஒரு பகுதியில், ஆதிவாசி ஆட்டைக் களவாடிய குற்றத்திற்காக ஆட்டுக்காரன் வேஸ்ல் துரையிடம் விசாரணைக்காக அழைத்து வருகிறான். துபாஷி கிட்டுப்பிள்ளை வேல்ஸ் துரையின் சார்பில் ஆட்டுக்காரனிடம் விசாரிக்கிறார். ஆட்டுக்காரன் தன் ஆடு தவறுதலாக மலைப்பாதிக்குச் சென்றதையும், அதனை எடுத்த ஆதிவாசி கறி சமைத்து உண்டதையும் சொல்லி பிராது கொடுக்கிறான். பிள்ளை ஆதிவாசியை விசாரிக்கிறார். ஆதிவாசி, “எங்களோட ஆட்டைத்தான் நான் சமைத்துச் சாப்பிட்டேன்” என்கிறான். பிள்ளைக்குப் பிடிபவில்லை. வேல்ஸ் துரையும் குழம்பிப் போகிறார். ஆட்டுக்காரனின் ஆடு எப்படி உன்னுடைய ஆடாகும் என வினவுகிறார் துரை. அதற்கு ஆதிவாசி பதில் சொல்கிறான். “இது எங்களுடைய மலை எங்களுடைய மலையில் உள்ள எல்லா பொருளும் எங்களுடையதே” என்கிறான்.
அது ஒரு பழங்குடி மனத்திலிருந்து எழும் பதில். விசாரிப்பது நவீன மனம். பிராது கொடுத்து நிற்பது இரண்டிற்கும் இடைப்பட்ட நிலப்பிரபுத்துவ மனம். மூன்றும் ஒன்றொடு ஒன்றாக முட்டிக் கொள்ளும் தருணம். கிட்டுப்பிள்ளைக்குப் பழங்குடி பண்பாட்டின் ஒரு பகுதியாக ஆதிவாசியின் பதில் படுகிறது. வேல்ஸ் துரை அப்பதிலைக் கேட்டுப் புரியாமல் திகைத்து நிற்கிறார். பிள்ளை வேல்ஸ் துரைக்கு விளக்கும்போது துரை திகைத்துப் போகிறார்.
எனக்கு நாவல் இந்தப் பகுதியிலிருந்துதான் விரிகிறது. பிரிட்டிஷ் ஆட்சியை நம் மண்ணில் மூன்று பகுதியாகப் பிரிக்கலாம். இங்கே அரசியல் களமாட வந்தவர்கள் ஒரு சாரார். அவர்கள் வணிக ரீதியாக இந்தியாவினுள் வந்து இங்கே அரசியல் அதிகாரத்திலும், இராணுவத்திலும் முதன்மை பங்காற்றியவர்கள். இரண்டாம் தரப்பு இங்கு மதமாற்றம் வேண்டி வந்தவர்கள். மூன்றாம் தரப்பு இங்கு பண்பாட்டு பங்களிப்பாற்றியவர்கள்.
வேல்ஸ் துரை போன்ற பிரபுகள் இங்குள்ள ஆதிவாசியையும், அவனது பதிலையும் கேட்டுத் துணுக்குறவே முடியும். அவர்கள் வளர்ந்த இராணுவக் கட்டுபாடுக் கொண்ட நவீன வாழ்க்கையில் அவர்கள் இத்தனை பெரிய சுதந்திரத்தை யோசித்ததே இல்லை.
இரண்டாம் மற்றும் மூன்றாம் தரப்பில் இந்நிலத்திற்காகப் பெரும்பங்காற்றியவர்கள் சிலர் உள்ளனர். அதன் தொடக்கமாக வீரமாமுனிவர் உள்ளார். தமிழ்மொழி வளர்ச்சியில் அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. அவர் உருவாக்கிய காமநாயக்கன்பட்டி பற்றிய குறிப்பு இந்நாவலில் வருகிறது. சவரிமுத்து என்னும் கதாப்பாத்திரம் கான்ஸ்டண்டைன் ஜோசஃப் பெஸ்கி(வீரமாமுனிவர்)யிடம் ஆங்கிலம் கற்ற ஒரு குழுவின் மூன்றாம் தலைமுறை மாணவனாக வருகிறான். அவன் துபாஷி கிட்டுப்பிள்ளையின் உதவியாளராகிறான்.
நான் மேலே சொன்ன மூன்றாம் தரப்பில் பெரும்பகுதியினர் இரண்டாம் தரப்பினரே. சில விதிவிலக்குகள் உள்ளன. வீரமாமுனிவரில் தொடங்கி, இரேனியஸ் ஐயர், கால்டுவெல் என ஒரு பட்டியல் போடலாம். மதமாற்றம் பொருட்டு இந்திய நிலத்தில் உள்ள சடங்குகளைத் தங்கள் மதத்தில் உள்ளிழுத்துக் கொண்டனர். அதனால் கலாச்சார மாற்றமின்றி மதமாற்றம் செய்ய முடிந்தது. சவரிமுத்து போன்றவர்கள் துபாஷியாகும் வாய்ப்பின் முதல் சாத்தியத்தை வழிகாட்டியவர்கள் இவர்கள். சவரிமுத்து துபாஷியாகப் பாளையங்கோட்டைக்கு வந்தபின் மாதா கோவில் திருவிழாவிற்காகக் காமநாயக்கன்பட்டி திரும்பும்போது அவனிடம் ஒரு நம்பிக்கையையும் அதே நேரத்தில் விலக்கத்தையும் கொள்கின்றனர் மக்கள். துரைகள் அனுப்பிய குதிரை வீரர்கள் சவரிமுத்துவிற்குச் சல்யூட் செய்து அவனிடம் ஆங்கிலத்தில் உரையாடுவதைப் பார்த்து வண்டி ஓட்டி வந்த யாக்கோபு பிரமித்துப் போகிறான். அத்தனை நாள் அடிமைப்பட்டிருந்த மக்களின் நம்பிக்கையாகவும் அதே நேரத்தில் அவர்கள் கண்டு தயக்கமும் அதிர்ச்சியும் கொள்ளும் ஒன்றாகவும் மாறுகிறது ஆங்கிலம்.
மேலே சொன்ன இரு தரப்பும் உருவாக்கிய அடுத்த இருநூறு ஆண்டுகள் பற்றிய சித்திரம் முழுமையாக நாவலில் வருகிறது. இரு தரப்பில் அதன் வீழ்ச்சிக்கும், வளர்ச்சிக்குமான காரணிகள் வருகின்றன. இராணுவத் தரப்பிலிருந்து வரும் வேல்ஸ் துரையிடம் கிட்டுப்பிள்ளை, கட்டபொம்மனின் அருள் பெற்ற கந்தசாமிப் புலவரை சித்தர் எனச் சொல்லும் போது வேல்ஸ் துரை அதிர்ச்சி கொள்கிறார்.
சித்தர் என்பவர் யார் என பிள்ளை துரைக்கு விளக்குகிறார். துரைக்குப் பிள்ளையின் விளக்கத்தின் மேல் நம்பிக்கை வரவில்லை. கந்தசாமிப் புலவர் மாஞ்சோலை வனப்பகுதியில் கொண்டு விடச் சொல்கிறார். அன்று மாலை வேல்ஸ் துரை தலைமையில் ஊமைத்துரையைப் பிடிக்க வல்லநாடு வனப்பகுதிக்குள் ராணுவம் நுழைகிறது. அவர்களால் ஊமைத்துரையைப் பிடிக்க முடியவில்லை மாறாக, அவ்வனப்பகுதியில் சுற்றித் திரிந்த கிறுக்கனை வேல்ஸ் துரையிடம் அழைத்து வருகின்றனர். துரை கிறுக்கனாக வந்த கந்தசாமிப் புலவரைக் கண்டதும் அரண்டு போகிறார். நாவலில் வேறொரு இடம் வருகிறது, ஊமைத்துரையைக் கைது செய்ய பாஞ்சாலஞ்குறிச்சி செல்லும் வேல்ஸ் துரை குலவைச் சத்தத்தைக் கேட்டுத் தன் இராணுவத்தைப் பின்வாங்கச் செய்கிறார். கிட்டுப்பிள்ளை பல முறை விளக்கியும் அவரால் குலவையைப் புரியவைக்க முடியவில்லை. துரை அதனை புதிய பீரங்கி ஒன்றின் சத்தமென்றே எடுத்துக் கொள்கிறார். வயலுக்குத் துரையை அழைத்துச் சென்று பெண்களைத் துரை முன் குலவையிடும்படிச் சொல்கிறார் பிள்ளை. வேல்ஸ் துரை அதனை முதன்முறையாகக் கேட்டு அதிர்ச்சியாகிறார். அங்கிருந்து இந்நிலத்தைப் பற்றிய பிரக்ஞை வேல்ஸ் துரைக்கு வருகிறது. அறிய முடியாத புதிய நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள தமிழ் கற்கிறார். கிட்டுப்பிள்ளையுடன் பாளையங்கோட்டை சுற்றியுள்ள நிலப்பகுதிகளுக்குச் சென்று புதிது புதிதாக அறிந்துக் கொள்கிறார்.
தமிழ் கற்று புலமைப் பெற்ற வேல்ஸ் துரையால் இந்நிலப்பரப்பினை அணுகி அறிந்தபின் இம்மண்ணில் இராணுவ தளபதியாக இருக்க முடியவில்லை. நான் மேலே சொன்ன இராணுவ நோக்கிலிருந்து பண்பாட்டு நோக்கில் இந்நிலத்தை அணுகிய பின் அவருக்கு இராணுவ ரீதியாக இந்நிலத்தில் செய்ய வேண்டிய கடமைகள் யாவும் அறமீறல்கள் ஆகின்றன. தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பினாங்கிற்குச் செல்கிறார். அவர் பணியை ஈடு செய்ய அடுத்து நான்கு துரைகள் வருகின்றனர்.
பிரிட்டிஷ் அரசு இங்கு உருவாக்க நினைத்தது ஒரு பண்பாட்டு மாற்றத்தை. மேற்குக் கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் இந்தியாவை. அதே சமயம் அவர்களால் இங்குள்ள பண்பாட்டுக் கலாசாரத்தைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இவ்விரண்டிற்குமான ஊடாட்டத்திலிருந்தே வௌவால் தேசத்தின் களம் எழுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு தொல்லையாய் இருந்த பாளையக்காரர்கள் ஆட்சி முற்றிலுமாக ஒழிக்கப்படுகிறது. அதன் பின் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை விடுதலை போராட்டம் தென் தமிழகத்தில் சொல்லுக்குக் கூட நிகழவில்லை. இந்த நூற்றாண்டில் பிரிட்டிஷ் இராணுவம் இந்நிலத்தில் சில சீர்திருத்த மாற்றங்களைக் கொண்டு வர நினைக்கிறது. அச்செயல்களில் இருந்து வேல்ஸ் துரை போல் கண்காணாமல் மறைந்தவர்கள் ஒரு நிரையென்றால், அதனை தலைமேற் கடமையாகக் கொண்டு வினையாற்றியவர்கள் ஒரு நிரை.
4
வௌவால் தேசம் நாவலில் சோ. தர்மன் பேசுவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தென் தமிழகத்தின் வீழ்ச்சி அரசியலை. ஆனால் அதிலிருந்து சமகாலத்திற்கு ஒரு கோடு இழுக்கிறார். சோ. தர்மன் கேள்விக்குள்ளாக்குவது சமகால நவீன மனத்தினை அதனுள் இருக்கும் சுருங்கிப் போன அறத்தினை. தன்னலமான ஒரு சமூகத்தின் முன் நின்று அவர் இளமையில் கண்ட வீழ்ச்சியின் சித்திரத்தை முன் வைக்கிறார். அந்த வீழ்ச்சிக்குக் காரணமான ஒவ்வொருவரையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
இந்தச் சமகால தன்மைக்கு அவர் கையாண்ட இயல்புவாத அழகியல் போதவில்லை. எனவே அதனைப் பேச கந்தசாமிப் புலவர் சித்தர் வடிவில் வருகிறார். ஆண்டிக்குடும்பனும் சொரிமுத்தையனும் பட்டவராயனும் அவருக்குத் தேவைப்படுகின்றனர். வௌவால்களுக்கான திருவிழாவை பழங்குடிகள் கொண்டாடுவதில் இருந்து வௌவால் ஆக்கிரமிக்கும் தேசமாக மாறும் வீழ்ச்சியைச் சுட்ட இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் தேவைப்படுகின்றன.
வௌவால் தேசம் புத்தகத்தைத் தூக்கி சுமக்கும் ராமசாமியின் கதாப்பாத்திரத்தைப் பற்றி புரிந்துகொள்ளும் போது சோ. தர்மனின் அழகியல் நம்முள் விரிகிறது. நாவலாசிரியனுக்கு அரசியல் பிரதானமில்லை. ஆனால் நாவலாசிரியன் பேசும் அரசியல் எக்காலத்திற்குமானது என்பதால், அவை நம்முள் உள்ள அறத்தை சீண்டுவதால் முதன்மைக் கொள்கின்றன.
5
நான் மேலே சொன்ன வீழ்ச்சியின் சித்திரம், வரலாற்றை நுணுகி அறியும் பார்வைக் கொண்ட நாவல், வரலாற்றின் அனைத்துத் தரப்பையும் அலசி அதிலிருந்து உருவாக்கும் முழுமையின் சித்திரம் என எல்லாவற்றிற்கும் மேலாக சோ. தர்மனின் வௌவால் தேசத்தை நான் படிக்க வேறொரு காரணமிருக்கிறது.
சோ. தர்மன் ஒரு சலிக்காத கதை சொல்லி. அவர் உருவாக்கும் கதாப்பாத்திரத்தைப் பகுத்து ஆராயாமல் கதாப்பாத்திரங்களுக்காகவும், கதையோட்டத்திற்காக மட்டுமே நாவலைப் படிக்கலாம்.
மேலும் சோ. தர்மன் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களை வரலாற்று நாயகர்களாகப் பாவிக்கும் மனநிலையும் புரிகிறது. அது ஒரு நாட்டார் மனநிலையிலிருந்து எழுவது. அங்கிருந்தே முதலில் கட்டபொம்மன் வீரக் கதைப்பாடல்கள் எழுதப்பட்டன. அங்கிருந்தே கட்டபொம்மு கூத்துக்கள் எழுந்தன.
சோ. தர்மன் கி.ரா என்னும் கதைச் சொல்லியின் வாரிசாக எழுத வந்தவர். அவர்களுக்கு முன் திருநெல்வேலி நிலத்தில் நாட்டார் பாடல்கள் இயற்றிய கதை சொல்லி வரிசையில் நவீன நாவலாசிரியராக நிற்பவர். அவரது நாவல்கள் இப்படி ஒரு வீரவணக்கத்தில் இருந்துதான் எழ முடியும். அத்தகைய ஒருவரிடமிருந்துதான் சலிக்காத விதவிதமான கதாப்பாத்திரங்கள் எழுந்து வரும்.
வௌவால் தேசத்தில் வரும் வீரபத்திரபிள்ளை வரிக்கு நடுவே கெட்டவார்த்தை சொல்லும் பண்புடையவர். வேல்ஸ் துரைக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வருகிறார். ஒரு நாள் வேல்ஸ் துரை கிட்டுப்பிள்ளையிடம், ”பிள்ளாய் வாட் இஸ் மீன் பை பேய்புண்டை“ எனக் கேட்கிறார். பிள்ளையின் மனதில் எவ்வித தயக்கமும் இல்லாமல் வீரபத்திரப்பிள்ளை வருகிறார். அவரை சென்று எச்சரிக்கிறார். ஆண்டிக்குடும்பன் கதாப்பாத்திரம் சோ. தர்மனின் நாவல்களில் வரும் குடும்பன் கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சி. குடும்பன் அவனுக்கே உரிய இயல்புடன் வரும் எல்லா பிரச்சனையையும் தீர்த்துவைக்கிறான். கிட்டுப்பிள்ளைக்கு பட்டவராயன், சொரிமுத்து அய்யனை அறிமுகம் செய்கிறான்.
பனையேறியான யாக்கோபின் கதாப்பாத்திரம், அவன் பனையில் கள் திருடிக் குடிப்பவர்களுக்காகப் பிரத்யேக பேதி மருந்தைத் தயாரித்துக் கொடுக்கும் செட்டியார், சவரிமுத்துவின் பெரியம்மாவான புஷ்பம், பாரஸ்ட் ஆபிஸருக்குக் கடிதம் எழுதும் சித்தம்மாள், கிட்டுப்பிள்ளைக்கு உதவியாய் வரும் மருதன் என சிறு சிறு கதாப்பாத்திரங்கள் கூட அதன் இயல்புகளால் நினைவில் எழுந்துக் கொண்டேயிருக்கின்றனர்.
சோ. தர்மனின் நடை கதாபாத்திரங்களின் இயல்புகளை சுவாரஸ்யத்துடன் சொல்லும் கதைச் சொல்லிக்கானது. அந்தக் கதைச் சொல்லிக்காக மட்டுமே சோ. தர்மனின் நாவல்களை வாசிக்கலாம்.
இந்நாவலில் கடிதம் மட்டுமே எழுதும் சித்தம்மாள் கதாப்பாத்திரம் வருகிறது. பாரஸ்ட் ஆபிசருக்குப் புகார் கடிதம் மட்டுமே எழுதுகிறாள். வனவிலாக்கா ஆபிசருக்குப் புகார் கடிதம் கொடுத்ததால் ஆத்திரத்தில் வனவிலாக்காவில் வேலை செய்யும் மாரிசாமியின் மகன் சிவனாண்டி அவளைக் கெடுத்துவிடுகிறான்.
பாரஸ்டில் இருக்கும் ஹேன்ஸன் விசாரிக்கும்போது நிலைமை கையை மீறி சென்றிருக்கிறது. அவர் அதற்குப் பிராயசித்தமாகச் சிவனாண்டியைச் சித்தம்மாளுக்குத் திருமணம் செய்து கொடுத்து தன் வேலையில் கவனமாக இல்லாததால் வேலையை ராஜினாமா செய்கிறார். ஹேன்ஸனின் இந்த வினையாற்றும் மனநிலை இராணுவத்திற்கானது. வேல்ஸ் துரை சென்ற பாதையையே ஹேன்ஸனும் செல்கிறான். ஹேன்ஸன் தன் கடமையிலிருந்து தவறும் காரணத்திற்காக. ஆனால் அதற்கு முன் காட்டில் நிகழும் அமானுஷ்யங்களை ஹேன்ஸன் துரையால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. குறிப்பாகக் கந்தசாமிப் புலவரைப் பற்றி அறிய முயற்சிக்கிறான். அதிலிருந்தே அவனுக்கான பாதை மாற்றம் ஏற்படுகிறது.
சோ. தர்மனுக்கு இயற்கையென்னும் இந்நிலம் ஒரு யோகம். தவமிருந்து இந்நிலத்தை அறிந்து விடுபேறு கொண்டவர்களின் சித்திரம் அவர் நாவலில் வந்து கொண்டே இருக்கிறது. கூகை நாவலில் வரும் அய்யர் கதாபாத்திரம் அத்தகையது. அவர் நிலத்திலேயே தவமிருந்தவர். அதனால் அவை முழுவதையும் பள்ளக்குடிக்கு எழுதி வைத்து அந்நிலத்தை நீங்குகிறார். சூல் நாவலில் வரும் கொப்புளாயியின் கதாப்பாத்திரம் அத்தகையது. அவளால் காசு கொடுத்து உணவுண்ணும் ஹோட்டல் கலாச்சாரத்தைக் கற்பனைக்கூட செய்துபார்க்க முடியவில்லை. உணவுக்காகக் காசு வாங்குபவர்கள் மேல் சாபமிடுகிறாள். கருப்பன் என்னும் குடும்பன் கதாப்பாத்திரம் சூல் நாவலில் வருகிறது. மடையின் வெள்ளைத்தைக் காக்கும் பொருட்டுத் தன் உயிரைவிட்டு கடவுளாக மடையின் முன் அமர்கிறான்.
மாறாக இந்நிலத்தை அறிய முடியாமல் விலகி மறைப்பவர்களின் சித்திரமும் உண்டு. சூல் நாவலில் வெற்றிலையின் காரத்தைச் சூது செய்து அறியும் கொடிக்கால் பிள்ளையால் அதற்கு மேல் வாழ முடியாமல் கிணற்றில் குதித்து இறப்பார். ஹேன்ஸனின் ராஜினாமாவும் அத்தகையதே.
வௌவால் தேசத்தில் வேல்ஸ் துரையும், கிட்டுப்பிள்ளையும் மேலே சொன்ன இரண்டாவது தரப்பிலிருந்து முதல் தரப்பை நோக்கிச் செல்லும் பயணமே வருகிறது. வேல்ஸ் துரை ராஜனாமா செய்து பினாங்கு சென்றதும், கிட்டுப்பிள்ளை சாமியாராகச் சொரிமுத்து அய்யனார் கோவில், பாபநாசம் சென்றதும் கொப்புளாயி, கருப்பன், கூகை நாவலில் வரும் அய்யரை நோக்கிய பயணமாகவே நான் பார்க்கிறேன். இதற்கு நேர் எதிர் மனத்திலிருந்து சோ.தர்மன் கண்ட வீழ்ச்சியின் சித்திரம் வருகிறது. அவர்கள் இயற்கையை தனதாக்க நினைக்கின்றனர். இயற்கையின் மேல் தங்கள் ஒரு காலை வைக்கின்றனர். அதில் மூழ்கி காணாமல் போகின்றனர் அல்லது அதன் அழிவிற்கு காரணமாகின்றனர். நான் மேலே சொன்ன கொடிக்கால் பிள்ளை அதில் ஓர் உதாரணம். வௌவால் தேசத்தில் பின்னால் வரும் துரைகள் மற்றொரு உதாரணம்.
சோ. தர்மனின் மனம் இயற்கையின் செழுமையும், அரசியல் வீழ்ச்சியும் ஒருங்கே கண்ட இளைஞனின் மனம். அங்கே இயற்கை தவமியற்றுகிறது, அதே நேரம் அதற்கு எதிராகத் தன்னலம் நிரம்பிய மனிதனின் அரசியல் சூழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எழுத்தாளனின் அறம் அதற்கு எதிராகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது.
மாறா நேர்விசையுடன் சோ. தர்மனின் நாவல்கள் ஒரே கேள்வியை நோக்கிச் செல்கின்றன. இளமையில் அவர் கண்ட கம்மாவும், குடும்பனும், பருத்தியும், விவசாயமும் நோக்கி அவர் கனவுகள் விரிகின்றன.
சோ. தர்மனின் நாவல்களில் நாவலாசிரியனின் தலையீடு இருப்பதில்லை. இந்நாவல் நிலப்பிரபுத்துவ வீழ்ச்சியின் முதல் விதை பாளையங்கோட்டையில் தொடங்கியதைப் பற்றி பேசுகிறது. ஆனால் சோ. தர்மனின் நாவலை வாசித்து முடித்த பின்பு அவரது இளமை காலத்தின் செழுமையான உருளைக்குடியிலிருந்து தீப்பெட்டி தொழிற்சாலையாக மாறிப்போன உருளைக்குடியின் வீழ்ச்சியை ஒட்டி இந்நாவலைச் சிந்திக்காமல் தவிர்க்க முடியவில்லை.
பெருவெள்ளம் சலனமில்லாமல் செல்லும் நீர்த்துளியில் தான் தோன்றும் போல. பெரும் நாவலாசிரியர் பெருவீழ்ச்சியின் தாக்கத்தை எவ்வித ஆடம்பரமும் இன்றி யதார்த்தமாக நம்முள் கடத்திச் செல்கின்றார்.
வரலாற்று பார்வையுடன் கூடிய விரிவான வாசிப்பு!
அருமையான கட்டுரை. சோ.தர்மன் அவர்களின் உலகை மிக நுட்பமாக விரித்தெடுத்திருக்கிறது.
இது ஓர் சிறப்பான கட்டுரை . ஆழமான அர்த்தத்தில் எழுதப்பட்ட ஒன்று. மூன்று வகைகளில் இந்த கட்டுரை மிக முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன்
அ) ஐயா சோ.தருமன் அவர்களின் படைப்புலகத்தை சீராக அறிமுகப்படுத்தி , அவரின் நிபுணத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.
ஆ) இந்திய வரலாறை வெகு ஜனதிலிருந்து எழுதும் முறையை அடிப்படையாகக் கொண்ட மரபை அறிய செய்யும் தகவல் நிறைந்துள்ளது. வரலாற்று பார்வையை விரிவுசெய்ய மிகவும் உதவும் குறிப்புகள் இதில் உள்ளது
இ) இந்த கட்டுரையை நாவல் வாசிப்பு பதிவு அல்லது ஒரு வாசிப்பு அனுபவம் என்று எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. மிக மிக நுட்பமான அவதனிபுகளுடன் இது எழுதப்பட்டுள்ளது. வாசகரின் கண்டடைதல், மெய்மையை நோக்கிய உணர்தல் என பல தளங்களில் இது விரிந்து, வசிப்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றது . நாவலை பற்றி தான் முன்வைக்கும் பார்வையை பிற வாசகர் எடுத்துகொண்டு மேலும் சிந்திப்பதற்க்கு இந்த கட்டுரை உதவும்.
சோ.தர்மனின் படைப்புகளை வாசிக்கும் முன்பு நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது என்பதை ஐயம் இல்லாமல் சொல்லலாம்.