பேய்ச்சி எனும் பேரொளி (ம.சுந்தரி)

பேய்ச்சி நாவல் தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்களின்வாழ்க்கை முறையை அப்பட்டமாகப் படம் பிடித்து காட்டும் நாவல். என் தாத்தா, பாட்டி, அப்பா,அம்மா அனைவரும் தோட்டப் புறங்களின்பின்னணியைக் கொண்டிருந்ததால் கதையினுள் என்னைச் சுலபமாகப் புகுத்திக் கொள்ள முடிந்தது. நானும் சிறு பிள்ளை பருவத்தில் தோட்டப்புறத்தை மகாராணி போல்சுற்றி வலம்வந்துள்ளேன். எனினும் நாவல் என்னை மீண்டும் ஒரு முறை தோட்டப்புறத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்து சென்றுவந்துள்ளது.

நாவலில் முற்பகுதியில் வரும்வளையல் சடங்கு என்னைச் சற்று தடுமாற வைத்தது. குழந்தை பெறும் கருவியாக மட்டுமே பாவிக்கப்படும் பெண்களின் நிலைக் கண்டுமனம் சிறிது வருத்தமடைந்தது. காத்தாயியின்  உருவில் முதல் அவதாரம் எடுக்கும் பேய்ச்சி தன் தாய்மை உணர்வை மிகத் தெளிவாக காட்டியுள்ளாள். ஆயினும் அந்தத் தாய்மை உணர்விடம் இருந்து தன் ஆறாவது குழந்தையையாவது காப்பாற்றி கொள்ள வேண்டும் எனும் கோப்பேரனின் மனநிலையில் இருந்து நாவல் தமிழகத்தில் இருந்து மலேசியா நோக்கி நகர்கிறது. அவ்வகையில் பேய்ச்சி தன்னை யாரோ ஒருவர் மூலமாக தனது எல்லைகளை விஸ்தாரமாக்கிக்கொண்டாள் எனவும் எண்ண நாவல் இடம் தருகிறது.

பொதுவாகவே தைப்பூசம் என்றால் நாம் அந்நாளில் மட்டுமே கோயிலுக்குச் சென்று நம் நேர்த்திக்கடனை  நிறைவேற்றிவிட்டுவருவோம். ஆனால், நாவலாசிரியர் மூன்று நாள் நம்மை தைப்பூசத்திற்கு அழைத்துச் சென்று திருவிழா கோலம்பூண்டிருக்கும்பினாங்கு தண்ணீர்மலை கோயிலை நம் கண்களுக்குப் படம் போட்டு காட்டியுள்ளார். இதுவரை அக்கோவிலுக்குச் சென்றிறாத எனக்கு அடுத்த தைப்பூசத்திற்குக் கண்டிப்பாக அங்கு சென்றே ஆக வேண்டும் எனும் பேராவலைத்தூண்டியுள்ளது. இத்தைப்பூசத் திருவிழாவின் காலகட்டத்தைப் படிப்படியாக விவரித்திருக்கும் விதம் உண்மையிலேயே நம் மக்களின் பக்தியை மனக்கண்முன் நிழலாட செய்துள்ளது. மேலும் செட்டிபூசம் உள்ளிட்ட நுண்தகவல்கள் கவனிக்கத்தக்கவை. தோட்டப்புறங்களில் வாழும்மக்களும் சரி நகர்ப்புறங்களில்வாழும்மக்களும் சரி பேய்ச்சி, முனியாண்டி போன்ற சிறுதெய்வங்கள் வழியும் முருகன் போன்ற பெருதெய்வங்கள் மூலமும் நம் கலாச்சாரம் அழிந்து போகாமல் வாழையடி வாழையாக நிலைத்து நிற்க எப்படியெல்லாம்பாடுப்பட்டுள்ளனர் என்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. கடவுளை மையப்படுத்திய சடங்குகள் மக்களை இணைத்துக்கட்டும் சக்திவாய்ந்த கருவிதான்.

“ இது கேவலமான ஒரு தொழில்தான். எனக்கு ஒரு புள்ளஇருக்கே. டவுனுல படிக்கிற. வளக்கணும்.” இது சின்னுயின்குரல். தன் ஒரு பிள்ளையைவளர்க்க, தோட்டத்தில் உள்ள பல பிள்ளைகளை அனாதைகளாக்கிய சின்னியை நினைக்கையில் சற்று கோபம்தான் வருகிறது. சாராயம் காய்ச்சுவதில் இவ்வளவு நுட்பங்கள் உள்ளதை சின்னியின் சீன மூலை எவ்வளவு தெளிவாக அறிந்துள்ளது. என்னதான்  தொடை தெரிய ஆடை அணிந்திருந்தாளும் குடிகாரர்களிடமிருந்து தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதில் அவள்இன்னொரு பேய்ச்சியாகத் தெரிகிறாள். மணியத்திடமும் அப்படியே இருந்திருக்கலாம்.

இந்நாவலில்வரும் மேலும் ஒரு கதாபாத்திரம் கோப்பேரன் காப்பாற்றி கொடுத்த ராமசாமி. அதிக நாணமும் தனிமையைத் தேடி செல்பவருமான ராமசாமி தன் தந்தையின் மருத்துவத் தொழிலைத் தொடர்ந்து செய்பவராவார். தன்னுள் இருக்கும் பெண்மையை உணர்ந்து அதற்கேற்றார்போல் தன்னை மாற்றிக் கொண்டு, தந்தையிடமிருந்துமூலிகை மருத்துவங்களை நன்கு கற்றுக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ஒவ்வொரு இலைக்கும் ஒரு மருத்துவ தன்மை இருக்கும் என்பதை நாவலாசிரியர் மிக நுட்பமாக விளக்கியுள்ளதைப் படிக்கும் போது அவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

முன்பெல்லாம் நான் வீட்டின் தோட்டத்தில் செடி நடும் போது என் அம்மா எனக்குப் பல அறிவுரைகள் கூறுவார். செடி நட்டால் மட்டும் போதாது; அதற்கு முறையாக நீர் ஊற்ற வேண்டும்: உரம் போட வேண்டுமென்று அடுக்கி கொண்டே போவார். ஆனால் அதையும் தாண்டி அந்தச் செடியோடு பேச வேண்டும்; அதன் இலைகளைத் தடவி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது செழிப்பாக வளர்ந்துபூத்துகுலுங்கும் என்பார். அது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. அதுபோல் ராமசாமி தன் தோட்டத்தில் உள்ளமூலிகைச் செடிகளோடு வாழ்ந்திருப்பதை நினைக்கும் போது மனம்முழுவதும்மூலிகை வாசம் வீசுகிறது. ஆயினும் செடிகளைக் கூட தன் உயிராக கருதிய ராமசாமி ஒரு சிறுவனின் உயிரைக் கொல்ல துணை நின்றார் என அறியும் போது ஓலம்மா சின்னியின் முதுகில் இறக்கிய கல் என் நெஞ்சில் ஏற்றியது போல் இருந்தது. இறுதியில் எப்போதுமே இறக்கி வைக்க முடியாத குற்ற உணர்வில் தன் முடிவைத் தானே தேடிக் கொள்கையில் அவர் உடலை நீர் எப்படி அடித்து சென்றதோ அதோடு அவர் செய்த பாவமும் அடித்து சென்றுவிட்டதாகவே கருதத் தோன்றுகிறது.

கதை நம் கணிப்பையும் தாண்டிநகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அப்போயையும் கருப்பனையும் மறக்க முடியாது. ஓலம்மாவிற்குத் துணையாக அப்போயும் அப்போயிக்குத் துணையாகக் கருப்பனும் கதையின் சுவாரசயத்தை அதிகமாக்குகின்றனர். அப்போயின் குழந்தை தனமும் ராமசாமியோடு சேர்ந்துமூலிகைகளை அறியும் தன்மையும் நம்மைவியப்படையச் செய்கிறது.

இந்நாவலில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் ஓலம்மா. கதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓலம்மா உயிரோடு வாழ்ந்திருக்கிறாள். ஓலம்மா யாரவள்? கதையின் ஒரு பகுதியில் கப்பலில் நிகழ்ந்த அவலங்களை நாவலாசிரியர் விவரிக்கும் போது என்னையும் அறியாமல் என் கன்னங்கள் நனைந்திருந்தன. மலாயாவில்வந்து எப்படியும்முன்னேறி விடலாம் என நினைத்திருந்த ஓலம்மாவின் அப்பாவின் கனவு அவர் இறந்த பிறகு கடலில் வீசப்பட்ட அவர் உடலோடு கடல் நீரில் கலந்து போனது. அன்று தன்னைப் பிடித்திருந்த சிலரைத் தள்ளி விட்டு ஒரு மிருகம் போல்பாய்ந்து வந்தபோது ஓலம்மா முதல் முறையாகப் பேய்ச்சியாக அவதாரம் எடுக்கிறாள். மகளுக்காக ஆசையாக வளர்த்த தன் முடியைக் காணிக்கையாக்கியவள்; தன் பேரனைக் கொண்டாடியவள்; தன் கணவனின் விருப்பத்திற்கேற்ப இசைந்து கொடுத்தவள். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவள். வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டு, அதோடு தனக்குப் பிடித்த வளர்ப்பு பிராணிகளை வளர்த்து அவற்றோடு வாழ்ந்தவள். ஆனால் தன் கம்பத்துமக்கள் சாராயத்தால் அழிந்த போது , சின்னியின் மேல்சினம் கொண்டு பேய்ச்சியாக உருவெடுத்தாள். தன் கணவன் தனக்குத் துரோகம் செய்ததை அறிந்த போது அவனை அழிக்க பேய்ச்சியானாள். எவ்வளவுதான் ராமசாமி தனக்கு உதவி இருந்தாலும் தன் மகன் சாவிற்குத் துணை போனது தெரிந்த போது மீண்டும் ஒரு முறை பேய்ச்சியானாள். தோட்டத்தை விட்டு வெளியேர மறுத்து தன் வளர்ப்பு பிராணிகளையும் பார்த்து பார்த்து வளர்த்த மரங்களையும் அழித்தாள். இறுதியாக பேய்ச்சியின்முன்னே தன்னைத் தானே அழித்துக் கொண்டாள்.

அன்று ஓலம்மா அழிந்தாலும் மீண்டும் அப்போயின் மனைவி மாலதியின் உருவில் பேய்ச்சி மறுபிறவி எடுக்கிறாள். பேய்ச்சி என்பது பற்றிப்படரும் ஒளி. அது ஒவ்வொரு தலைமுறை பெண்ணுக்கும் சிறு திரியின் மூலம் தொற்று நோய்போல பரவுகிறது. பின்னர் அதுவே பேரொளியாகவும் மாறுகிறது.

(Visited 70 times, 2 visits today)