மண்ணின் கதை சொல்லி – சௌந்தர்

சௌந்தர்

வனவிலகுங்களோ, வளர்ப்பு விலங்குகளோ, தங்கள் எல்லைகளை வகுப்பதை ஒரு மூர்க்கமான கலையாக தங்கள் மரபணுவில் கொண்டுள்ளது, நம் தெருவில் வாலாட்டிக்கிடக்கும் ‘சாந்தமான’ என நாம் பெயரிட்ட நாய் கூட, தன் குழுவில் இல்லாத நாயை தன் எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. கூர் பற்களைக்காட்டி வெறியுடன் மாற்றானை துரத்துவதும் மாற்றான் பின்னங்கால்களுக்கு நடுவே வாலை சுருட்டியபடி பயந்து ஓடுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சி.  மனிதனோ வேறு சில கொடுக்கல் வாங்கல்களில் மூலமாக இந்த மூர்க்கக்கலையை, சமூகம் எனும் சட்டகத்திற்குள் வைத்து, நெறி படுத்திய பின்னரும், பூமி முழுவதும் அவனுடைய ‘மூர்க்கக்கலை ‘ வெளிப்பட்ட வண்ணமே இருக்கிறது. 

‘தாரா’ நாவலின் மையம், நிலத்தில், எல்லைகளை வகுப்பதில் தொடங்கி, இயற்கையின் எல்லையற்ற கருணையும் கருணையின்மையும் என்கிற துலாக்கோளில் முடிகிறது. 


ஒரு நாவலுக்குள் குழந்தைகள் உலகம் முன்வைக்கப்பட்டு, தெய்வங்களை அறிமுகம் செய்வது என்பது, சந்தேகத்திற்கு இடமின்றி சிலவற்றை சுட்டிக்காட்டிவிட முடியும். உதாரணமாக இந்த நாவலில் வரும் கிச்சி, கோகி, லிங்கம் எனும் சிறுவர்களும் அந்தரா எனும் பதின்பருவ பெண்ணும் தெய்வங்களை வைத்து விளையாடுகின்றனர் அல்லது தெய்வங்களோடு விளையாடுகின்றனர்.

மலேசிய நாவல்களின் மூலம் நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும், ‘கம்பங்கள்’ எனப்படும் புறநகர் குடியிருப்புகள்தான் கதையின் நிலம் என்பதால், சீ .முத்துசாமி அவர்களின் கதைகளில் தொடங்கி, நவீனின் முந்தைய இரண்டு நாவல்களும் நினைவில் வந்து செல்கிறது. தனித்துவமாக இதில் நேபாளிகளின் கம்பம் வருகையும் அதனால் தமிழர்களில் திரளும் அச்சமும் அதனை தொடர்ந்து வஞ்சமும் பலியும் என கதையை சொல்லிச்செல்கிறார் நவீன். இதை  கதை மாந்தரும் நேபாள மக்களின் தலைவருமான சனிலின் வார்த்தைகளில்
‘அவர்கள் {தமிழர்கள் } இந்நாட்டில் தங்களை பலவீனமாக உணர்கிறார்கள், பலவீனமானவர்கள் அச்சத்தை வன்மமாகத்தான் காட்டுவார்கள் ‘ என முடிக்கிறார். நாவலும் அப்படியே அமைகிறது. 

கம்பத்துவாசிகள்  தங்கள் கடமையை பொறுப்பை உணராமல் ‘கேங்ஸ்டர்’ என்பதை  பெருமிதம்  சார்ந்த ஒன்றாக வன்முறையை வீரமென, சோம்பலை மகிழ்ச்சியென, பொறுப்பின்மையை தலைமைபண்பென, நினைக்கத்தொடங்கிய போது, அவர்களுக்கு முன்னர்  ஆதரவு கொடுத்துவந்த அரசும் முதலாளிகளும் படிப்படியாக விலக்கத்தொடங்குகின்றனர். அது முதல் சரிவு. அவர்ளுக்கு அமுதூட்டிய, அரவணைத்த, துயில் தந்த,  நிலத்திற்கு செய்யும் அறப்பிழை. கம்பங்களில் வேற்று இனத்தார் வேலைக்கு வரத்தொடங்கிய பொழுதாவது தங்கள் தாமஸகுணத்தை உணர்ந்தறிந்து, தங்களை மீட்டிருக்கலாம். அதற்கு பதிலாக புதிய குடிகள் மேல் வஞ்சமும் காழ்ப்பும் கொண்டு அவர்களை முற்றழிக்க எல்லாவகை சூழ்ச்சிகளையும் செய்யத்தொடங்குகையில், பெண்களாவது வெகுண்டெழுந்து தடுத்திருக்க வேண்டும். அதுவும் நிகழவில்லை என்கிற போது, குல தெய்வங்களும் மன்னிக்க முடியாத குலப்பிழை என்றாகிறது. 

இவ்விரு பிழைகளும் குலநாசம் நோக்கி இட்டுச்செல்கிறது. தெய்வங்கள் தங்களுக்கான ஆடலை ஆடிமுடிக்கின்றன. சூறைக்காற்றை ஏவுகின்றன. காட்டாற்றை கட்டவிழ்த்து காட்டுகின்றன.  ஊழி தாண்டவம் காட்டி, முற்றழித்து, எங்கோ ஒரு ஓரத்தில் அன்னையின் கனிவால் அமைதி கொள்கின்றன.  அப்படி அமையும் தெய்வங்கள், சில விதைகளை மறு உற்பத்திக்கான விதை நெல்மணியென விட்டுவைக்கின்றன. நீண்ட அமங்களங்களின் முடிவில் மங்களமான விதைமணிகள் அடுத்த சுழற்சியை தொடங்குகின்றன.

நேபாளத்தின் வஜ்ராயன புத்த பிரிவின் சம்பிரதாய நடனமான ‘ஷர்யா நிருத்திய ‘ பற்றிய குறிப்புகளும், நடனத்தில் இறை நிலையை அடைதல் எனும் அவர்களுடைய முறைமைகள் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த பகுதியும் , தாரா பற்றிய குறிப்புகளும் ‘அந்தரா ‘ பெண் கதாபாத்திரத்தை வைத்து விலாவரியாக பேசப்படுகிறது. அதற்கு இணையாகவே நம்மவர்கள் எங்கு சென்றாலும் எடுத்துச்செல்லும் காவல்தெய்வம் அல்லது குலதெய்வம் பற்றியும் அதன் உக்கிரங்களும் அறம் பிழைத்தோருக்கு கூற்றாகும் தன்மையும் பேசப்படுகிறது.

அப்படி உச்சக்கட்ட உக்கிரம் கொள்ளும் நமது தெய்வமான கந்தாரம்மனும் அனைத்தயும் அழித்து முடித்து சாந்தம் கொள்ளும் தாரா தேவியும் ஒன்றென திகழும் இறுதி அத்தியாயத்தில் நாவல் முழுமை கொள்கிறது. 

அவலோகிதேஸ்வரர் எனும் புத்தர், உலக மக்களின் துன்பத்தை கண்டு, கருணைக்கண்ணீர் விட அது குளமாக மாறி அதில் இருபத்தியோரு தாமரைகள் பூக்க அதில் தோன்றியவர்களே இருபத்தியோரு   தாராக்கள் என  நாம் கேள்விப்பட்ட கதைகளில் இருந்து ‘பச்சை நிறத்தாரா’ எனும் ஒருத்தியை வைத்து, கதையை அமைத்திருக்கிறார்.  “பச்சைத்தாரா உயர்ந்த குணங்களின் அதிபதி. நீயும் அப்படி இருக்க வேண்டும்” என சிறுமி அந்தராவிடம் அவளுடைய அப்பா சொல்லும்பொழுது. “உயர்ந்த குணமென்றால் என்ன அப்பா?” என கேட்கிறாள் அந்தரா.

 
“நிபந்தனையற்ற மன்னித்தல்” என்கிறார். “அவ்வளவுதானா?” இது அந்தரா 


“ஆம் , அன்பும் , கருணையும் இருந்தால் மட்டுமே அது நிகழும். வளமான மண்ணும், மரமும் இருக்கும் இடத்தில் பிறக்கும் இனிப்பான கனிபோல”  என்கிற இவர்களுடைய இந்த உரையாடல்  அவர்கள் சொல்போலவே வாழ்ந்து முடிந்தவர்கள் என காட்டுகிறது.

நேபாள மக்களின் தெய்வங்கள், சடங்குகள், நடனங்கள், இசை என அனைத்து விசயங்களையும் முழுமையாக தொகுத்து இந்த நாவலில் சரியான இடத்தில் பயன்படுத்திக்கொண்ட உத்தியும் நவீனின் உழைப்பும் பல இடங்களில் நாவலை முன்நகர்த்திச்செல்கிறது. கம்பங்களின் வாழ்க்கையை சொல்வதில் இருக்கும் துல்லியத்தன்மையும் அதில் முக்கியமான எந்த விடுபடல்களும் இல்லாத தன்மையும் நவீனை ஒரு ‘மண்ணின் கதை சொல்லி ‘ நிலைக்கு கொண்டு சேர்க்கிறது. அவ்வளவு லாவகம் அவருக்கு தன் நிலத்தை குறித்து எழுதுகையில். 

முக்கியமாக, தமிழர் நேபாளர் போன்ற பாகுபாடின்றி மனிதகுணத்தின் மேன்மை , கீழ்மை பற்றியே பெரும்பாலும் பேசப்படுகிறது என்பது, நவீனின் ஒருபக்க சார்பின்மையை காட்டுகிறது. மலேசிய எழுத்தின் முக்கியமான நாவலாக ‘தாரா ‘ என்றும் இருக்கும்.

நவீனுக்கு வாழ்த்துக்கள்.  

(Visited 82 times, 1 visits today)