அன்பு நவீன். 2024இல் முதல் கதையென நினைக்கிறேன். வழக்கமான உங்கள் பாணியில் இருந்து மாறுபட்ட கதை. நேரடியாக யதார்த்த பாணியில் எளிமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். ஆனால் அது எளிமையல்ல. புனைவு கைவசம் வந்த கலைஞன் மொழியை கையாளும் லாவகம். தகிக்கும் இடங்களை அசால்டாக கடந்து செல்கிறீர்கள். ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை.
ராம்
சண்முகப்பிரியா சிறுகதையை வாசித்தேன். கதை நேர்த்தியாக இருந்தது. தன் தோற்றத்தினால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மாணவர்கள், சூழல் முன் கனிவின் மூலம் அதில் இணைந்து கொள்ள சண்முகப்பிரியா தொடர்ந்து முயல்கிறாள்.
வகுப்பில் அவள் அமரவைக்கப்படும் மேசைக்கருகில் அவளைப் போலவே தோற்றத்தினால் ஒடுங்கிப் போயிருக்கும் கதைசொல்லியிடம் இணக்கம் காண கூடுதலாகவே முயல்கிறாள். கடலலையின் இழுப்பில் முயற்சியேதுமின்றி அவனைப் போலவே மாறியிருப்பதை எண்ணி மகிழ்கிறாள். கடலலையில் உயரம் குறைந்து நின்றவளைப் பார்த்து அவன் கொடுத்த சிநேகப்பார்வை அவளும் அவர்களில் ஒராளாக மாறிய மகிழ்வைக் கணநேரம் கொடுத்து மீள்கிறது. கதைசொல்லியை இக்கட்டிலிருந்து மீட்க உதவி செய்கிறாள். தண்டிப்பதாகச் சொல்லி ஆசிரியர் காட்டும் கோரமுகம், தோற்றத்தைக் காரணம் காட்டி ஒதுக்கும் மாணவர்களிடம் அதையும் கடந்து வெளிப்படுகிற வன்மம் எல்லாமே அவளின் கனிவைக் குலைத்துப் போடுகிறது. கூடுதலாக அப்பொழுதும் யாரும் கேட்க முடியாத மெல்லியக் குரலிலே தன் மன்னிப்பைச் சொல்கின்ற கதைசொல்லி என மொத்தச் சூழலுமே தன்னைக் கைவிட்டதை உணர்கிறாள்.
கதைசொல்லியின் மகள் தோள் மீதேறி அமர்ந்து மற்றவர்களைப் போல உயரம் பெற்று கடலைக் கண்டு கொள்ளும் தற்காலிக மகிழ்ச்சி சண்முகப்பிரியாவின் மகிழ்ச்சியுடன் ஒத்ததுதான்.
தோற்றம் தாண்டி கனிவைத் தாண்டி தங்களவனாக ஒருவனை எண்ணுவதற்குச் செயற்படும் மனம் விந்தையானது. அதனைக் கனிவால் அணுக முயன்றும் முடியாது போனவளைப் பற்றிய சிறப்பான கதை.
அரவின் குமார்
சண்முகப்பிரியா சிறுகதை நன்றாக வந்திருக்கிறது. சூழலில் ஒருவர் எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் வெளிப்படுத்த முடியாமல் போகிறார்கள் இனக்குழுவில் ஒத்தப்பேரியாக ஒட்டுதலுக்காக எல்லா ஏளனங்களையும் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம். பிளாக் க்யூமர் மனதில் வலியை உண்டாக்குவதாக இருக்கிறது. சண்முகப் பிரியாவிற்கு நடந்த கொடூரம் யூகிக்கும்படி விடப்பட்டிருக்கிறது. ஆசிரியர் கடலுக்குள் இறங்கி கால் ஊன்றமுடியாது திரும்பும் போன்ற சந்தர்பங்களில் நடத்தைப்பற்றி சொல்லுமிடங்களில் வெளிப்படும் நுணுக்கம் கதையை உயிரோட்டம் மிக்கதாக ஆக்குகிறது.
சு. வேணுகோபால்
எப்படி இருக்கிறீர்கள் நவீன். சண்முகப்பிரியா மிக நல்ல கதை. வெகு சரளமாய் இருந்தது. முடிக்கும்போது மனம் பாரமாய் ஆனது. இந்தியாவில்தான் பள்ளிக்குழந்தைகளை மாட்டடி அடிப்பார்கள் என்றும் வெளிநாடுகளில் தங்கமாய் தாங்குவார்கள் என்றும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கும் மேல்தோல் உரியும்படி அடிப்பார்கள் என்பது எனக்குப் புதியதாய் இருந்தது. சுப்பிரமணியம் சார் முதலிலேயே ஒரு நல்ல வார்த்தை சொல்லி அவளை வகுப்பில் சேர்த்திருந்தால் மற்ற பிள்ளைகள் அவளோடு கொஞ்சமாவது சேர்ந்திருக்கும். நான் ஆறாம் வகுப்பில் படிக்கும்போது நாகரத்தினம் என்னும் பெண்ணும் அவள் தங்கை சரஸ்வதியும் எங்களோடு ஒரே வகுப்பில் படித்தார்கள். ஒரு பையன் வைத்திருந்த ஐந்து ரூபாய் நோட்டை நாகரத்தினம் எடுத்து பிடிபட்டவுடன் வகுப்பாசிரியை லில்லி அவளை எல்லோரும் திருடி என்றுதான் இனி கூப்பிடவேண்டும் என்று சொல்லிட்டாங்க. பையன்கள் எல்லோரும் அவளைத் திருடி என்று அழைக்கவும் பொங்கிப்பொங்கி அழுதுவிட்டு பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிட்டாள். சரஸ்வதியும் அடுத்த வருடம் வேறுபள்ளிக்குப் போய்விட்டாள். நிறைய வருடங்களுக்குப்பிறகு எனக்குத் திருமணம் ஆகி ஒருமுறை அம்மா வீட்டிற்குப் போயிருக்கும்போது அம்மாவுக்கு மண்ணெண்ணெய் ரேஷனில் வாங்கிக்கொடுக்க ஒரு மெலிந்த கருத்த பெண் கழுத்தில் அழுக்கு மஞ்சள் கயிறு மட்டும் போட்டுக்கொண்டு வந்திருந்தாள். நாகரத்தினம்தான். அடையாளமே தெரியாமல் போயிருந்தாள். ஒரு வேளை அந்த ஆசிரியர் அவளை அப்படி நடத்தாமல் போயிருந்தால் அவள் இன்னும் கொஞ்சம் படித்து வேறுமாதிரி நிலைக்கு வந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். தி ஜாவின் முள்முடி கதையையும் நினைவுபடுத்தியது. ஆசிரியர்களே வெறுக்கும் பிள்ளைகளை மற்ற மாணவர்கள் எப்படி சேர்த்துக்கொள்வார்கள்? என்ன வார்த்தைகள் சொல்லிச்சென்றாலும் சண்முக்பிரியாவின் அம்மா வணங்கிச் சொல்லிச்சென்ற ‘ஆனா….’ கண்களை நிறைத்துவிட்டது. முழுவதும் நைஜீரிய சாயல் கொண்ட பெண்ணுக்கு சண்முகப்பிரியா என்ற பெயர் வித்தியாசமாய் இருந்தது. ஆனால் எல்லா இன, மொழி மக்களும் கலந்திருக்கின்ற நாட்டில் இருக்கும் உங்களுக்கு இதைவிட அதிகமான வித்தியாசமான அனுபவங்கள் இருந்திருக்கும்.
டெய்ஸி