தாரா: ஒரு நாட்டார் கவிதை – மணிமாறன்

தாரா நாவல் 80களில் மலேசியாவின் கம்பப் பின்புலத்துடன் குகன் கொலையிலிருந்து தொடங்குகிறது. கம்பம் என்பது தமிழ் சொல்லானாலும் மலாய் மொழியில் கம்போங் என்றால் (கிராமம்) என்றே அறியப்படுகிறது. கூலி வேலைக்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியர்கள் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட வரலாற்றில் மருவி கம்பத்தை அடைந்தவர்களின் படிமத்தை முன்வைக்கிறார் நாவலாசிரியர்.

பெரும்பாலான தமிழர்கள் நாட்டில் கம்பங்களை விட தோட்டங்களில்தான் அதிகமாக குடியமர்த்தப்பட்டனர். தோட்ட வாழ்க்கைக்கும் கம்பத்து வாழ்க்கைக்கும் சிலபல வேறுபாடுகள் இருந்தாலும் பொதுவாக இரு நிலப்பரப்புக்களுமே வேளாண்மையை முன்னிறுத்தியதுதான். தோட்டம் பெருந்திரளாக ஒரு பயிரை/விளைச்சலை பேணுவது. தோட்ட மக்கள் அனைவரையும் ஒரு நிருவாகத்தின் கீழ் நிர்வகிப்பது. கம்பத்திலோ அம்மக்களே அவரவர் நிலத்தில் பயிர்வளர்ப்பிலோ, கால்நடை வளர்ப்பிலோ அல்லது மீன்பிடித்தலிலோ ஈடுபடுவர்.

அப்படி கம்பத்தில் வாழும் மக்கள் கூட்டத்தில் ஒருவந்தான் குகன். நாவலில் ரௌடியாக வரும் குகன் தன் இனத்திற்காகவும் உரிமை இழப்புக்களுக்காகவும் வேலைக்கார நேபாளிகளை எதிர்க்கும் வேளையில் தன் மக்களாலேயே வெறுக்கப்படுகிறான். பின்பு ராக்காயி அவன் உதவியை நாடி தன் மகளை நேபாளியிடமிருந்து மீட்க வேண்டுவதும் அதற்காக தன்னை காவல் தெய்வமாக எண்ணியவன் சனிலின் மனைவியை கொல்லத்துணிவதும் யதார்த்தம்.

ஒரு கொலை, கம்பம் வாழ் மக்களை அசாதாரண சூழலுக்குள் தள்ளி விட்டு அவர்களின் பதபதப்பை வாசகனுக்குள்ளும் கடத்திவிடும் புனைவு உயிர்ப்பிக்கிறது. குகனின் பார்வையில் தெலுக் கம்பத்தின் மர ஆலைக்கு வேலைக்கு வந்த நேபாளிகள் அவனுக்கும் அவன் சமூகத்திற்கும் ஒரு அச்சுறுத்தலே. வேலையும் குறைந்த ஊதியமும் அவர்களின் நோக்கமாக இருந்தாலும் அவர்களால் உள்ளூர் வாசிகளுக்கு ஏற்பட்ட சம்பளம், சலுகைகளுக்கான விவகாரம் குகனை ஆத்திரமடையச்செய்திருந்தது. தன்னை ரௌவுடியாக காட்டிக்கொள்பவனுக்குள் தன் சமூகத்தைப் பேணும் அக்கறை உள்ளதையும் ஆசிரியர் படம் பிடிக்கிறார்.

ஒரு நிலப்பரப்பில் வாழும் சமூகம் தனக்கென உருவாக்கிக்கொண்ட கலை, பண்பாடு, கலாச்சாரம் நம்பிக்கை பழக்கவழக்கங்கள் கட்டுப்பாடுகளை வெளியாட்கள் கெடுத்துவிடக் கூடாதென்பதில் அவர்கள் காட்டும் அக்கறை ஒவ்வொருவரின் உரையாடலிலும் பதிவாகிறது. ஒரு சமூகத்தில் பிற இனத்தவரின் வருகை எப்போதும் ஒரு எதிர்வலையை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் விவசாயத்தை நம்பியிருந்த நாடு மெல்ல மெல்ல உற்பத்தி பொருளாதாரத்தில் நுழையும் காலக்கட்டத்தை நாவல் கொண்டுள்ளது. கம்பவாசிகளும் தோட்டத்தை நம்பியிருந்தவர்களும் நகரங்களை நோக்கி நகரத்தொடங்கியதும் அப்போதுதான். புதுப்புது தொழிற்சாலைகளும் வேலைவாய்ப்புக்களும் அதனில் ஈட்டும் வருமானத்தால் தனிமனித பொருளாதார வளர்ச்சியும் அதனுள் அடங்கும். இது அக்காலத்திற்கான சூழியல் மாற்றம் மட்டுமல்ல மாறாக அத்தகைய புதிய சூழல் கல்வியறிவற்ற கம்பத்து மக்களுக்கு ஏற்படும் சமூக சிக்கல்களை நாவல் சுட்டிக்காட்டுகின்றது.

இந்நாவலை தற்காலத்திற்கும் பொருந்தும் ஒரு எச்சரிக்கையாகவே நான் கருதுகிறேன். தற்போது நம் நாட்டிலும் அன்னிய தொழிலாளர்கள் பிரச்சனைகளை ஊடகங்களில் காண்கிறோம். நம்மில் பலருக்கு நேரடி அனுபவங்களும் நேர்ந்திருக்கலாம். பிழைப்புத்தேடி வருகிறவர்கள் எல்லை மீறாதவரை சிக்கலில்லை. மண்ணின் மக்களின் வாழ்வாதாரம் அசைக்கப்படும்போது மனவெளியில் சத்தமில்லாதொரு சலசலப்புத் தோன்றுகிறது. அது ஒரு வளையமாக வளர்ந்து விரிந்து மக்களை இணைத்து அவரவர் இருப்புக்களை தற்காக்க வைக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களின் வருகை ஆதிகுடியினருக்கு ஒரு எச்சரிக்கை. நூறு ஆண்டுகளுக்கு முன் பூழியன் வருகை ஜகூன் இனத்தவருக்கு ஒரு எச்சரிக்கை. எழுபது ஆண்டுகளுக்கு முன் சப்பானியர்களின் வருகை ஆங்கிலேயருக்கு ஓர் எச்சரிக்கை. இப்படி பழங்காலம் முதல் கடந்த நூற்றாண்டு வரை புதியவர்களின் வருகை எப்போதும் எந்நில மாந்தருக்கும் ஒரு சவாலே.

கிச்சியின் கண்கள் கம்பத்து மனிதர்களையும் தாமரைக்குளத்தையும் கம்பத்து வாழ்வியலையும் வேளாண்மை நிலத்தை ஆளும் பூச்சிகளையும் வண்டுகளையும் வாசிக்கும் விழிகளுக்குள் அள்ளிக்கொண்டு வந்து கொட்டி விரித்துப் பரப்புகிறது. அங்கிருக்கும் நிலப்பயிர்களும், மக்களும், குளமும், மரங்களும், ஆறும், ஆற்றுப்பாலமும், கால்நடைகளும், வளர்ப்புப் பிராணிகளும் நகரத்திலிருக்கும் நம்மை மீண்டும் ஒரு முறையேனும் நம்மை கம்பத்து வாழ்வை சுவைத்திட பின்னிழுக்கிறது. தோட்டப்பின்னனியையோ அல்லது கிராமப்பின்னனியை கொண்ட எவருமே அந்த வாழ்க்கையை வாசிப்பில் அவ்வளவு எளிதாக கடந்துவிடாத வண்ணம் இழுத்துப் பிடித்து நிறுத்துகிறது நாவல். கரங்கான் – சுங்கை, தெலுக் கம்பங்களின் நிலங்கள் மீது ஆசிரியரின் கூர் அவதானிப்பின் வழியே இது நாவலில் சாத்தியபட்டிருக்கிறது.

குகன் கொலைக்குப்பின் கம்பத்து இளைஞர்களுக்குள் ஏற்படும் கொதிப்பும் அவற்றை தடுக்க நினைக்கும் கம்பத்துவாசிகளின் தவிப்பையும் அசிரியர் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். அதே வேளை பிழைப்புத்தேடி இங்கே வந்த நேபாளர்களுக்காக பேசும் சனிலின் குடும்பத்திற்குள் ஒரு சோகமான பின்னனி நாவலுக்குள் இழையோடுகிறது. அது சனிலின் மகள் அந்தராவையும் அவள் ஆடும் ஷர்யா நிர்த்யா நடனத்தையும் பற்றியதாகும். மேல் சாதியினர் (பஜ்ராச்சார்யா) ஆடும் நடனத்தை தாழ்ந்த குலத்தைச்சேர்ந்த சனிலின் மகள் (அந்தரா) ஆடியதால் வந்த எதிர்வினை. நேபாளின் தாரா எனும் பெண் தெய்வத்தையும் அந்த தெய்வத்தை ஷர்யா நிர்த்யா நடனம் மூலம் அடையும் நிலையையும் இந் நாவலில் நமக்கு அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.

ஆசிரியரின் நேபாள் பயணக்கட்டுரைக்கு எழுதிய பதிலில் தாரா பற்றிய எனது கருத்துக்களை பகிர்ந்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். கரங்கானில் காந்தாரம்மனை காட்டியது போல் நேபாளத்தில் தாரா அம்மன். இரு வேறு நிலங்கள். வெவ்வேறு மொழி பேசும் மக்கள். இந்த இரு தெய்வங்களும் இவர்களை காக்கப்போகிறதா? தண்டிக்கப்போகிறதா? என்ற மர்மம்தான் கதையின் முடிச்சு. அந்த முடிச்சை வாசகர்களும் அவிழ்க்க முயலலாம். தாராவில் நிறைய கதைமாந்தர்கள். அவர்களில் எனக்கு நெருக்கமான பாத்திரமாக முத்தையா பாட்டனை எண்ணுகிறேன்.

முக்தியை யாசிக்கும் ஒரு சன்யாசி போல். முத்தையா பாட்டன் போல் யாரிடமும் பேசாமல் முகத்தில் உணர்ச்சியேதுமில்லாமல் அந்திமத்தை கடத்தும் பெருசுகளை சந்தித்தால் என்ன தோன்றும்? அவர்களிடம் வத்திப்போன உடலும், சுருங்கியத்தோலும் தான் மிச்சமிருக்குமா? அவர்களுக்குள் உறைந்திருக்கும் அனுபவமும் அவர்கள் கடந்த வாழ்க்கைப் போராட்டங்களும், பார்த்த காட்சிகளும், பட்ட அடிகளும் நம் கண்ணில் படுவதில்லைதானே? பேசியென்ன பயனென்று அவர்கள் யாரிடமும் ஏதுவும் பேசுவதில்லையோ? நெடுஞ்சாலையோரம் காணக்கிடைக்கும் மைல் கல்போல் அவர்கள் இருக்கிறார்கள். அடுத்த மைலை நமக்கு சத்தமில்லாமல் சொல்கிறார்கள். கடந்த மைல்கல்லில் தொடர்ந்து வாழ்கிறார்கள்.

முத்தையனின் மெளனமும் அப்படித்தான்.

அவர் பேசநினைத்தபோது எல்லாம் நடந்து முடிந்திருந்தது. இதுநாள் வரை அவர் காத்திருந்த பேசாமை அவருக்கும் காந்தாரம்மனுக்குமான மோனயுத்தம். தாய் குளிர்வாளா? தன் பிள்ளைகளை மன்னிப்பாளா? என்ற எதிர்பார்ப்பின் மையப்புள்ளியில் உழல்பவர்தான் முத்தையன். ஒரு நீண்ட நெடிய வரலாற்றை-மிகை வலியை தன்னுள் சுமந்து வந்த அந்தப் பாத்திரம் என்னுள் தங்கிவிட்டது எனலாம். அந்தரா-தாரா, கிச்சி- கந்தாரம்மன். பேரன்பும் பெருவலிமையும் இந்தச்சிறுமிகளுக்குள் இறங்கி சங்கமித்தது அந்த நீலத்தாமரையுள்தான். இயற்கை ஒர் பிரளயமாக மாறி அதர்மத்தை ஆக்குபவர்களையும் ஏற்பவர்களையும் நிர்மூலமாக்குகிறது.

தாராவுக்குள் இன்னும் நிறைய இருக்கிறது. என்னை எப்போதும் ஈர்க்கும் கதைக்குள்ளே ஒரு கவிதை. இம்முறை நல்ல நாட்டார்கவிதை. பாட்டிக்கும் பேத்திக்குமான அஞ்சலை-கிச்சி உறவும் தாய் மகள் அஞ்சலை-அமிர்தவள்ளி உரசலும். கள்ளமற்ற சிறுவர்-சிறுமியரின் கம்பத்து ஊர்வலமும் எந்த நிர்பந்தமுமில்லாத அவர்கள் விரும்பும் எதிர்காலமும் என நிறைய நிறைய. ஆசிரியருக்குள்தான் எத்தனை சிறுவர்-சிறுமியர் ஒளிந்துள்ளனர்.

தாராவை வாசிப்பவர்களுக்கு ஒரு பரிந்துரை. வல்லினத்தில் கோகிலவாணியின் ‘பச்சை நாயகி’, ‘மண்டலா’ வை வாசித்திருந்தால் தாரா உங்கள் வசப்படுவாள் அல்லது நீங்கள் தாராவை உணரக்கூடும்.

(Visited 57 times, 1 visits today)