நினைவில் நிற்கும் தாரா – பா.கங்கா

பா. கங்கா

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பல நூல்களை வாங்கினேன், அவற்றுள் ஒன்று தாரா. வாங்கியப் பிறகு ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் சித்ரா ரமேஷ் ‘சிங்கப்பூர் வாசகர் வட்டம்’ வழியாக ம. நவீன் எழுதிய ‘தாரா’, அ. பாண்டியன் அவர்கள் எழுதிய ‘கரிப்புத் துளிகள்’ ஆகிய நாவல்கள் குறித்தக் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ‘தாரா’ நாவல் கையிலிருந்தும் படிக்காமல் எப்படிச் செல்வது என்று ஒரு தயக்கம். ஏன்றாலும் நவீன் முகநூலில் தாராவுடனான பயணத்தைக் குறித்து எழுதியிருந்த பதிவுகளைப் படித்திருந்ததால் போக முடிவு செய்தேன். கலந்துரையாடலுக்கு ஒருநாள் முன்பு தாரா நாவலை எடுத்துச் சில அத்தியாயங்கள் மட்டுமே படித்தேன். கிச்சி, லிங்கம், கோகிலாவின் அறிமுகம், அஞ்சலையின் சொலவடை, கந்தாரம்மன், லஷ்மி சிலை, குளம், குகனின் மரணம், மருதுவின் செயற்பாடு என நாவல் என்னைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ள தொடங்கியது.

கலந்துரையாடலில் கேட்கப்பட்ட வினாக்களும் அதற்கான நவீனின் பதிலும் மேலும் என் ஆர்வத்தைத் தூண்ட இரண்டு நாள்களில் கிடைத்த ஓய்வுநேரத்தில் நாவலை முழுமையாகப் படித்து முடித்தேன்.

‘தாரா’ என்ற நாவலின் தலைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ராதாவைப் திருப்பிப் படித்தால் தாரா. என் அக்காவின் பெயர் ராதா, நான் அடிக்கடி அப்பெயரைத் திருப்பிப் படித்து எனக்கு ஏன் அப்பா தாரா எனப் பெயர் வைக்கவில்லை என்று மனத்திற்குள் சிறுவயதில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த வகையிலும் தாரா என்னைக் கவர்ந்தாள்.

ஆனால் கதையின் தலைப்பிலுள்ள தாராவைக் குறித்து மேலும் அதிகம் பேசியிருக்கலாமோ என்ற எண்ணமும் என்னுள் ஓடியது. காரணம் கந்தாரம்மாவைக் குறித்து கூறிய அளவிற்குத் தாராவைக் குறித்துக் கூறப்படவில்லை. ஒருவேளை அந்தராவில் தாரா புகுந்திருப்பதாலோ என்றும் எண்ணினேன்.

‘கிச்சி’ நாவல் முடியும்வரை இவளுடனே பயணித்தேன். தனியாகத் தெலுக் கம்பம் நோக்கிச் செல்லும் அவள் துணிவு, நண்பர்களுடன் இணைந்து தாமரை பூ பறிக்கக் குளத்தைத் தேடிச் செல்லும் ஆர்வம், அந்தராவுடனான மனமொத்த நட்பு, அம்மா, பாட்டிமீது கொண்ட அன்பு என அவளுடனே பயணம் செய்தேன்.

குடியேறிகளாக வந்த இரு இன மக்களிடையே எழும் உணர்வு, வலியன் எளியவனை வெல்ல முனையும் பாங்கு என நாவல் அப்போதும் இப்போதும் எப்போதும் நடக்கும் போராட்டத்தை தன்னுடனே எடுத்துச் சொல்கிறது.

தங்கள் பலத்தை நிரூபிக்க மற்றவர்களைப் பயமுறுத்தும் செயல் தங்களைப் பெரிய தலைவனாகவே நினைக்கத் தூண்டுவதைக் குகனின்வழி அறியலாம்.

மருது கதாபாத்திரம் மிகச் சிறந்த சாணக்கியன் என்பதையும் அதிக நாள்கள் நல்லவனாகவே வேடம் தரிக்க முடியாது என்பதையும் கூறிக்கொண்டே இருக்கிறது.

சனில் தாம் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் சுயநலமே என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாகவே கூறுகிறார். இங்கு ஒவ்வொரு போராட்டமும் சுயநலத்தில் முளைத்த பொதுநலம்தானே. அவர் மன்னிப்புக் கேட்கும் இடமும், மன்னிப்பு கேட்ட பின்னர் கரங்கான் மக்கள் செய்த இழிச்செயலும் மனத்தை நெருடுகிறது. மன்னிப்புக் கேட்பது அத்துணை பாவமா என்ன?

சனிலின் மனைவியின் மரணம் மிகவும் கொடிது, அதைச் செய்த குகனுக்குக் கிடைத்த தண்டனை நியாயம் என்றாலும் அதன் பழியைச் சுமக்க வேண்டிய நிலை சனிலுக்கு. என்றாலும் நியாயம் எப்போதும் தோற்காதல்லவா. குகன் மரணம் குறித்த முடிச்சைச் சனில் மிக அழகாக அவிழ்க்கிறார்.

முத்தையன் பாட்டன் ஏன் அமைதியாகவே இருந்தார் என்பதற்கான பதிலும் இறுதியில் கிடைக்கிறது.

அந்தரா சில அத்தியாயங்கள் மட்டுமே வந்தாலும் அவளின் இறப்பை மனம் ஏற்கவில்லை. ஏன் ஏன் என்ற கேள்வி அலைக்கழிக்கிறது.

ஒரு சிறுமியின் வன்புணர்வுக்கான தண்டனையைத் தர மறுக்கும் அதே பெண்களின்வழி வந்த ராக்காயி தம் காலத்தில் அதே தவறு நடக்கும்போது வழங்கும் தண்டனையால் முந்தைய குடியில் ஏற்பட்ட இழுக்கைத் துடைப்பதாகவே முத்தையாவழி நவீன் கூறுகிறார்.

குடியேறிகளாக வந்தாலும் அவர்களிடம் உள்ள பிரிவு, தங்களுக்குப் பதிலாக வரவழைக்கப்படும் மற்ற குடியேறிகளிடம் தோன்றும் பொறாமை உணர்வு என நாவல் விறுவிறுப்பாகவே செல்கிறது.

தாரா என்றும் நினைவில் நிற்பாள்.

(Visited 61 times, 1 visits today)