அந்தரா தாராவானக் கதை – ஜி.எஸ்.தேவகுமார்

தாராவை ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு பாணியில் அணுக இயலும். ஒவ்வொரு நாவல்களும் அதை அணுகுபவரின் தனிப்பட்டப் புரிதல்களை வைத்தே அளக்கப்படும். நவீனப் படைப்புகளை வாசகன் தனிமையில் தன் உளம் சார்ந்தே அணுகுகின்றான்.

அந்நியத் தொழிலாளர்கள் வருகையின் தொடக்கத்தில் கதை நடக்கும் காலகட்டம். ஆனாலும் காட்சிகள் முன்னும் பின்னுமாகக் காலப்பயணம் செய்ய வைத்ததில் தான் நாவலின் சுவாரசியமே அடங்கியுள்ளது. கிச்சி தாராவை தேடிப் போகும் காட்சிகளில் எதிர்ப்பாராத திருப்பம் வியக்க வைத்தது. தற்காலத்தோடு கடந்த காலத்தையும் அதே பாத்திரத்தைக் கொண்டு பிணைத்து பிரித்த விதம் சிறப்பு. மிக கவனமாக கையால வேண்டிய யுக்திகள் அவை.

நீலத்தாமரை கண்ணகியின் காற்சிலம்பு போல இறுதியில் நீதியை நிலை நாட்டியதும் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது. காந்தாரம்மனையும் , தாராவைவும் தேசத்தாலும் மொழியாழும் பிரிக்கப்பட்டிருந்தாலும் அறத்தை நிலை நாட்டுவதில் ஒன்றாகவே இணைந்து விட்டனர். கதாசிரியர், நவீனின் முந்தைய நாவலில், சிகண்டியும் ஈபுவும் இணையும் காட்சியில் ஏற்பட்ட அதே பிரமிப்பான அதிர்ச்சி உணர்வு, கிச்சி தாராவிடமிருந்து பெற்ற நீலத்தாமரையைக் காந்தாரம்மனிடம் வைத்த போதும் ஏற்பட்டது.

கிச்சியும் தாராவும் பேசி கொள்ளும் காட்சிகள் ஆங்கிலத்தில் என்பதால் கதாசிரியர் தூயத் தமிழைப் பயன் படுத்தியுள்ளார். சனில் பேசும் போதும், முத்தையா பாட்டனின் நினைவில் பஹாங்கில் காட்டில் ஜகூன் பழங்குடிகளின் தலைவனுக்கும் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த மூன்றாவது தலைமுறையின் இனக்குழுவின் தலைவர் பூழியனுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் ரசிக்கும் வகையில் ஈர்த்தன.

‘ …. ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அதுவே அக்குலத்தின் அழிவுக்கும் காரணமாக இருக்கும் என்பதை மறவாதே. உன் குலப் பெண்களின் கண்களைப் பார்க்கிறேன். அதில் நீதியில்லை’ என்று ஜகூன் பழங்குடியினரின் தலைவன் ‘காறி’யாக சாபத்தை உமிழ்ந்தான். கூட்டாகப் பாலியல் வன்புணர்வு செய்தவர்களைக் காப்பாற்ற முற்பட்ட பெண்களின் பால் அவன் உமிழ்ந்த சாபத்தையும், அதே நிலையில் சனில் விட்ட சாபமும் எதிர் நோக்கியவர்களின் முடிவை மாற்றி விட்டது. தாராவின் சிதைந்த உடலைப் பார்த்ததும் அதற்குக் காரணமான, தான் காப்பாற்ற நினைத்த தன் மகன் முத்துவைத்தைத் தாக்கியதில் ராக்காயியின் கண்களில் நீதி தென்பட்டது.

பாலியல் பலாத்காரக் காட்சிகள் நாவலில் எதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. I spit on your grave என்ற ஹாலிவுட் திரைப்படம் வெவ்வேறு காலகட்டங்களில் அதே தலைப்பிலும் கதையையும் கொண்டு வெளிவந்தன. கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பலியான அமைதியான சுபாவமுள்ளப் பெண், அதற்கு காரணமான ஆண்களை மிக கொடுரமாகப் பழிவாங்குவாள். பிரபலமான இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சு நடித்த ‘Irréversible’ திரைப்படத்தில் தவறுதலாகப் பெண் ஒருத்தி ஒருவனிடம் மாட்டிக் கொண்டு மிகக் கொடூரமாக சிதைக்கப்படுவாள். அதற்கு பழிவாங்க ஓடும், அவளின் காதலனும் நண்பனும் அவசரப்பட்டு தவறான ஒருவனைக் கொலை செய்து சிறைக்கும் சென்று விடுவார்கள். மேற்கத்தியப் உலகில் பழிக்கு பழிவாங்கும் மரபையும் அதற்குத் தன்னைத் தானே பலியாக்கிக் கொள்ளும் தர்க்க உலகத்தைக் காட்டி கொள்ளும் . ஆனால், தாராவில் நாம் அவ்வாறு எதிர்ப்பார்க்க இயலாமல் அறத்தை மட்டுமே முன் நிறுத்தி சாபத்தை தலைமுறைக் கடந்தும் கடத்துவது நம் பாணியிலான உலகத்தைக் காணலாம்.

ஆனாலும் , சுனில் , தாரா, திமிலா , ஜகூன் இனக்குழுவின் தலைவனின் மகள் என்று ஏதும் அறியாத உயிர்கள் காரணம் ஏதுமின்றி பலியாகும் துயரத்தின் கண்ணீரை முன் வினைப் பயன் என்ற துணியை வைத்தே துடைத்து கொள்ள முடியும். தர்மத்தை நிலை நாட்ட அப்பாவி உயிர்களை காவு வாங்குவது ஒன்றும் புதிதில்லையே.

அந்நியத் தொழிலாளர்கள் வருகையின் ஆரம்பத்தில் அவர்களின் உளவியல் சரியாக காட்டப்பட்டுள்ளது. அந்நிய மண்ணில் வாழ்க்கையைத் தொடங்குபவர்கள் அடங்கியும் பயந்தும் வாழ்கிறார்கள். எதிர்த்து கேட்டவர் குரலும் குறவலையும் அறுக்கப்பட்டது. இன்றைய அந்நியத் தொழிலாளர்கள் அவ்வாறு இருப்பதில்லை என்பதையும் இங்கே பதிய வேண்டும். அவர்களுக்கு இந்த மண் பழகிவிட்டது.

நேப்பாளிகள் சிலர் சீன முகத்தோடும் இருப்பார்கள். சிலர் இந்திய முகத்தோடு இருப்பார்கள். நாவலில் அதைத் தேடினேன். கதாசிரியர் சிறிய உடலும், சிவந்த தோலுமாக மட்டுமே அவர்களின் புறத்தைக் காட்டியதோடு நிறுத்தி, அவர்களின் அகம் சார்ந்தே அதிகமாகக் காட்டியுள்ளார்.

சனில் ஒரு புத்த மதத்தவன் என்பதாலோ கடைசிவரை போராடி தன்னுள்ளே புத்தனைக் கொண்டு வந்தே இறக்கிறான். அந்தராவும் தாராவோடு மறைந்து விடுகிறாள். மனிதன் தெய்வமாவது இவ்வாறான வழியில் தானோ..?

ஒரு காலத்தில் நம் முன்னோர்களின் வாழ்க்கையை, தாராவோடு சேர்ந்து தரிசிக்க வைத்திருக்கிறார் கதாசிரியர் ம.நவீன். பேச்சி, சிகண்டியைத் தொடர்ந்து மனதில் ஆழமாக ஒரு இடத்தில் தாராவும் வாழ்வாள்.

(Visited 119 times, 1 visits today)