“யார்தான் சாக முடியும்? உடம்பு மண்ணுக்குப் போறது, சாவா? நினைவுகளுள்ள மனுஷர் என்னைக்குமே ஜீவிக்க முடியுமே… அதுதான் அமரத்துவம்.” – பிரபஞ்சன் (அமரத்துவம் சிறுகதையில்)
ஓர் எழுத்தாளர் இறந்தவுடன் ஏற்படும் வெறுமையின் தவிப்பில் அவரது வாசகர்கள் பல சமயங்களில் மிக அதிகமாகவே அவ்வாளுமையைக் கொண்டாடித் தீர்த்துவிடுவதுண்டு. படைப்புகளின் எண்ணிக்கை, அந்த எழுத்தாளர் என்னவாக வாழ்ந்தார், நட்பில் அவர் காட்டிய நெருக்கம், இலக்கியத்தில் நேர்மை, சமரசமற்ற போக்கு, எளிமை என அனைத்துமே கலந்த நினைவுகள் உருவாக்கும் சமநிலையற்ற மனம், மிதமிஞ்சிய சொற்களால் அவரைப் போற்றத் துடிக்கும். இலக்கியவாதி கொண்டாடப்பட வேண்டியவன்தான். அதுவும் கடைசிக் காலம் வரை இலக்கியத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த பிரபஞ்சன் போன்ற ஆளுமைகள், இளம் தலைமுறையினருக்கு என்றுமே நல்லுதாரணங்கள். ஆனால் ஓர் இலக்கிய வாசகனின் கவனம் இலக்கியவாதியின் மரணத்திற்குப் பின்பும் அவரது படைப்பில்தான் குவிந்திருக்கும். அதன் வழியாக மட்டுமே அவன் அவரது ஆளுமையைத் தனக்குள் சமநிலையுடன் கட்டமைப்பவனாக இருக்கிறான்.