கார்மலின் (கொங்கணி நாவல்): ஒரு பார்வை

kaarmalinஇந்திய நிலப்பரப்பின் அறிமுகம் கிடைத்தவர்களுக்கு கோவா காணவேண்டிய இடமென மனதின்  ஆழ்கனவுகளுள் ஒன்றாய் அமைந்திருக்கும். கோவா என்றதும் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் எழுவது கடற்கரையும் மதுவகைகளும் கொண்டாட்டங்களுமாக இருக்கும். பண்பாடு அறிதலுள்ளோர் போர்ச்சுகீசிய வழித்தடங்களைக் காண விருப்பப்படுவர். ஆனால் அந்நிலம் தனக்கென ஒரு தனிமொழியை கொண்டுள்ளது என்பதை அங்கு சென்று வந்த பெரும்பாலானோர் அறிந்திருக்கமாட்டார்கள். வடக்கே குஜராத்தியும் கிழக்கே மராத்தியும் தெற்கே கன்னடமும் மலையாளமும் சூழ்ந்திட நடுவே பதினெட்டு இலட்சம் மக்கள் பேசக்கூடிய மொழியாக கொங்கணி உள்ளது.

பொதுவாக எழுத்துரு அற்ற மொழிகள் தங்களைக் காத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்படும். இராவணன் தன்னைக் கவர்ந்து சென்றபோது சீதை தன் அணிகளை ஒவ்வொன்றாக வீசிச் சென்றது போலத் தம் சொல்வளத்தைக் கைவிட்டபடி யார் நாவிலேனும் கொச்சையாகக்கூட தம்மைக் குறுக்கிக்கொண்டு  மீள ஆசைப்படும். கொங்கணியும் அவ்வாறான நிலையில் இருந்தது. மொழியே தொய்வடைந்தநிலையில் இலக்கியம் எவ்வாறு எழும்? நடுவே ஐந்து நூற்றாண்டுகள் போர்ச்சுகீசிய பிடியிலும் அதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுகள் சுல்தான்கள் ஆட்சியிலும் இருந்த இப்பிரதேசம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தனக்கான பண்பாட்டை மொழி வழியே தேடிக்கொள்ள விழைந்தது.

ஷெனாய் கோயம்பாப் நவீன கொங்கணி இலக்கியத்துக்கு முதன்முதலாகச் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் பயணக் குறிப்புகளையும் தேவநாகரி மற்றும் லத்தீன் எழுத்துருக்களில் அளித்தார். ஷேக்ஸ்பியருடைய ஒத்தல்லோ, பகவத்கீதை போன்றவற்றை கொங்கணியில் மொழிபெயர்த்தார். இவருடைய சிறுகதைகள் உபநிஷத்துகள், குர் ஆன், விவிலியம் மற்றும் தல்மூத் முதலியவற்றில் இருக்கின்ற தத்துவங்களை விவாதிக்கும்வண்ணம் மேன்மை பொருந்திய இலக்கிய முயற்சியாக அமைந்துள்ளன. கொங்கணி நவீன இலக்கியத்தின் தந்தையென ஷெனாய் கோயம்பாப்  அழைக்கப்படுகின்றார். ஷெனாயுடைய நினைவு தினம் உலக கொங்கணி மொழி தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அவருக்குப் பின் ரவீந்திர கேலேகார் நூறு புத்தகங்கள் வரை கொங்கணியில் எழுதியுள்ளார்.

அழகியல் தன்மை பெற்றிருக்கும் நிலங்களிலிருந்து நல்ல இலக்கியங்கள் பிறக்குமென ஒரு கூற்று உண்டு. கோவாவும் அக்கூற்றுக்கு உடன்பட்டு ஏராளமான எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கியது. கோவா போர்ச்சுக்கல் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தபின் 1975இல் சாகித்ய அகாடெமி கொங்கணியை சுதந்திர மொழியாக அறிவித்து கொங்கணியின் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு விருது வழங்கியது. ரவீந்திர கேலேகார் 1977இல் ஹிமாலயந்த் எனும் பயணநூலுக்காக அம்மொழிக்கான முதல் சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றார். பிறகு ஆர்.வி. பண்டிட், மனோகர் ராய் சர்தேசாய் உள்ளிட்ட கவிஞர்கள் விருதுகள் பெற்றனர்.

கொங்கணி பைசாசிக பிராக்ருதத்திலிருந்து தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. வரலாற்றில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களால் இம்மொழி தனக்கான சொல்வளத்திலிருந்து மாறி கன்னடம், குஜராத்தி, மராத்தி, பார்சி, போர்ச்சுகீசு உள்ளிட்ட மொழிகளின் சொற்களையும் வழக்குகளையும் பெற்றிருக்கின்றது. கொங்கணியின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துருக்களாக தேவநாகரி, ரோமன், கன்னட லிபி  ஆகியவை அமைந்திருக்கின்றன. கோவாவிற்கும் போர்ச்சுகலுக்கும் இருக்கின்ற நான்கரை நூற்றாண்டு காலத் தொடர்பால் ஏராளமான கொங்கணி இலக்கியப்படைப்புகள் போர்ச்சுகீசில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாக்கிபாப் கொங்கணி கவிஞர்களின் முன்னோடியாக இருந்துள்ளார். மராத்தி, கொங்கணி மொழிகளில் கவிதைகள், உரைநடைகளை இவர் படைத்துள்ளார். கோவாவில் பாக்கிபாபுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கொங்கணிக் கவிதைகள் எளிமையான மொழிநடையில் சிக்கலான படிமங்கள் ஏதுமின்றி நடக்கின்றபோது சாலையின் ஓரத்தில் பூத்திருக்கும் பெயரறியாத பூக்களின் அழகை ஒத்ததாக இருக்கின்றன. கொங்கணியோ போர்ச்சுகீசோ தெரிந்தால் கடைநிலை வாசகனும் அக்கவிதைகளை வாசித்துப் புன்முறுவல் கொள்ளமுடியும்.

உதாரணமாக ஆர்.வி. பண்டிட்டுடைய கவிதை,

சுரங்கங்கள் இம்மண்ணால் உருவாகின

அவை என்னவென்று எனக்குத் தெரியாது

இக்கற்கள்

மாற்றுரு கொண்ட பொன்னோ?

தெரியாது!

எனினும் ஒன்றறிவேன்,

மானுடர்களே,

பல காலங்களுக்கு முன் பொன்னாக இருந்தவை

இன்று கற்களாகி இருக்கலாம்

அகலிகையைப் போல

ராமனுக்காக காத்துக்கொண்டு

மேற்காணும் கவிதை கோவாவில் தொழிலாளர்களைச் சுரண்டும் சுரங்கத்தொழில் குறித்து ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. கவிஞர் மண்ணைப் பொன்னுடன் உருவகப்படுத்தி பின் அகலிகையை ஒப்பிட்டு என்றேனும் ராமனால் இந்நிலத்துக்கு விடுதலை கிடைக்கலாம் என ஓர் தொல்கதைப் படிமத்தை மெல்லிய இழையாகக் கவிதையினுள் பின்னியுள்ளார். கோவாவில் இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுக்களுக்காக போர்ச்சுகீசிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட சுரங்கங்கள் இன்றும் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன.

கார்மலின் நாவலில் வரும் கார்மலினின் கணவன் ஜோஸ் சுரங்கப் பணியாளர்.

கோவா இந்தியாவுடன் இணைந்தபின்பு எழுபதுகளில் எழுத வந்தவர் தாமோதர் மௌசோ. எளிய கௌட சாரஸ்வத  பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்து மாமாவால் வளர்க்கப்பட்டவர். மும்பை சென்று பொருளாதாரம் படித்துப் பின் எழுதத் தொடங்கினார். இவரது ஆக்கங்கள் கொங்கணி ரோமன் கத்தோலிக்கர்களது வாழ்வியலை மிக விரிவாகச் சித்தரிக்கின்றன. போர்ச்சுகீசிய ஆட்சியில் மதக் கொலைகளுக்கு அஞ்சி பெரும்பாலான பிராமணக் குடும்பங்கள் பதினாறாம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்கத்திற்கு மாறின. இன்றும் கோவா கத்தோலிக்கர்கள் கொங்கண இந்துக்களுக்கான சடங்குகளைக் கத்தோலிக்கத்தின் வழியே பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய வாழ்க்கைமுறை இந்தோ -போர்ச்சுகீசிய பண்பாடைப் பின்பற்றியதாக இருக்கிறது.

தாமோதர் மௌசோவுடைய கார்மலின் நாவல் கொங்கணி கத்தோலிக்கர்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் மிக விரிவாகக் கூறும் புனைவுகளில் முக்கியமானதாகும். இந்நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்துள்ளது. நாவலின் முதன்மை கதாபாத்திரமாக கார்மலின் இருக்கின்றாள். எளிய கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து தன் வாழ்க்கை முழுக்க துன்பங்களினால் அலைக்கழிக்கப்படுகிறாள். அதேசமயம் மகிழ்வான தருணங்களையும் அதற்குரிய மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்றாள். ஒரு பெண்ணுக்கான அறமென்னவென வாசகனிடம் கேள்வியெழுப்புகின்றாள். அவள் ஒழுக்கத்தின்கண் அவளே விவாதங்களையும் நிகழ்த்தி எவ்வித போலியான மிகையுணர்வுகளுமின்றி சந்தர்ப்பங்களைக் கோர்த்துத் தனக்கானதாக வாழக் கற்கின்றாள்.

ஆர். வி. பண்டிட்டிய் கவிதைகளில் ஒன்று, ‘சுவர்களுக்குச் செவிகள் உண்டு’. மிகச் சிறிய கவிதையாக இருப்பினும் அக்கவிதை பேசும் பொருளுக்கும் கார்மலின் நாவலுக்கும் இடையே காணமுடியாத ஆனால் உணரக்கூடிய சரடொன்று உண்டு.

அக்கவிதை,

‘சுவர்களுக்குச் செவிகள் உண்டோ?

கண்டுகொள்ள வேண்டியதில்லை

போதும்,

அதற்கு நாம் கொண்டுள்ள எளியவழி

அவற்றின் வாய்களைக் கட்டுவது’

மிக எளிமையான  கவிதையாகவும் குறுகுறுப்பான காதல் கவிதை போலவும் இருக்கின்றது. இதைக் காதலர்கள் கூடல்நிமித்தம் ரகசியமாகச் சந்திக்கையில் அஞ்சும் காதலியிடம் காதலன் சொல்வதாக பொருள்கொள்ளலாம். மற்றொரு வாசிப்பில் சமூகம் கட்டமைத்திருக்கும் விழுமியச் சுவர்களுக்கு எதிர்ப்புறம் நின்று வாழ்வதற்குச் சுவர்களை உடைக்காமலேயே எளியவழி ஒன்றுண்டு என உரைப்பதாகக் கொள்ளலாம். கார்மலின் நாவலில்  நாயகி கார்மலின் தன் பதின்ம வயதில் முதற்பொருளையும் வாழ்க்கையின் மீதான அறிதல் வரும்போது இரண்டாவது பொருளையும் கொள்கின்றாள்.

கார்மலின் நான்கு முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது; கத்தோலிக்க ஜாதிப் படிநிலை, கொங்கணிய வாழ்வியல், பாலியல் சுதந்திரம், அரபுநாட்டு பணிப்பெண் சூழல். இந்நாவல் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தின் பெரும்பகுதியினை உளவியல ரீதியாகவும் சூழல் சார்ந்தும் காட்சிப்படுத்துகிறது. நல்ல இலக்கியத்திற்கு உரித்தான விவரணைகள் கையாளப்பட்டுள்ளன.

பொதுவாக இந்தியர்களுக்குள் இருக்கின்ற ஜாதிப் படிநிலைகள், ஏற்றதாழ்வினை கிறிஸ்தவdamodar-mauzo மதமாற்றம் அழித்ததாக ஒரு மாயை உண்டு. இன்றுவரை தாழ்த்தப்பட்டவர்களாக அறியப்படுபவர்களை கிறிஸ்தவ மதம்  ஏற்றுக்கொள்வதாகப் பிரச்சாரம் மேற்கொண்டு கிறிஸ்தவரான பின்பு அந்த ஜாதி கிறிஸ்தவருடன் இந்த ஜாதி கிறிஸ்தவர்கள் மணம் பேசுவதில்லை; அந்த ஜாதி கிறிஸ்தவர்களது தேவாலயம் வேறு; அவர்கள் இங்கே நுழையமுடியாது போன்ற நடைமுறையில் ஜாதிய ஏற்றதாழ்வுகள் கடைப்பிடிக்கப்படுவதை எந்த இந்தியக் கிறிஸ்தவராலும் மறுக்கமுடியாது. கார்மலின் ஓர் உயர்குடி கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று குறிப்பிட்டு எழுத்தாளர், கோவா கத்தோலிக்கர்களுக்கு இடையே இருக்கின்ற ஜாதிப் படிநிலைகளை நாவலில் வெளிப்படையாகப் பேசுகிறார். கதை நகர்கின்ற காலம் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் நடப்பதாக இருக்கின்றது. கார்மலினுடைய மாமா தன் மருமகளுக்கு கத்தோலிக்க நிலப்பிரபுவின் மகனான ஜோஸை மணமகனாகத் தேர்ந்தெடுக்கின்றார். இத்தனைக்கும் அந்த நிலப்பிரபு குடித்தும் சூதாடியும் நிலங்களை அழித்து வறுமையில் இறந்தவர். ஜோஸுடைய சகோதரன் போஸ்தியான் பிறப்பின்படி மீனவக் குடும்பத்தைச் சார்ந்த இசபெல்லைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதற்காக பக்கத்துவீடாக இருப்பினும் ஜோஸுடைய தாயார் தன் மகனைப் புறக்கணித்துத் தள்ளிவைக்கின்றார். இசபெல்லுடைய குடும்பம் பொருளாதார அளவில் ஜோஸ் குடும்பத்தைக் காட்டிலும் உயர்ந்ததெனினும் ஜாதியமைப்பின் காரணமாக அங்கே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது.

அடுத்து கார்மெலின் சூழலுக்குத் தக்கவாறு காமத்தைக் கையாளும் தருணங்களை எவ்வித விரசமோ புனிதப்படுத்தலோ இல்லாமல் மௌசோ குறிப்பிடுகின்றார். கார்மலின் தன் உடல்மேல் முழுதும் உரிமை கொண்டவளாக இருக்கிறாள். அவள் இரண்டாவது முறை கருவுறுவதைத் தவிர எந்த இடத்திலும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகவில்லை. பதின்மப் பருவத்தில் முறைப்பையன் ஏக்னலுடனான உறவு, கணவனுடனான உறவு, மிகுந்த மனவுளைச்சலில் கணவனின் நண்பன் ரொசாரியோ தன்னை பயன்படுத்திக்கொண்டாலும் மனதளவில் ஆறுதலுற்ற காமம், இறுதியாகக் குவைத்தில் தன் முதலாளி நிஸாருடன் கொள்கிற உறவு என எதிலும் அவள் நியாயம் கற்பிக்க முயலவில்லை. அந்தந்த சூழலில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள எது வழியோ அதைப் பிரயோகிக்கின்றாள். முறைப்பையன் ஏக்னலுடன் அவள் கொள்ளும் அப்பாவித்தனமான காதலால் அவனை நம்பி உறவுகொண்டு ஒரு கட்டத்தில் அவளது மாமி அவனுக்கு வேறு சம்பந்தம் பார்க்கின்றா எனத் தெரியவர இறுதிவரை அவனை நம்பி திருமணம் உறுதிசெய்யப்பட ஏமாறுகின்றாள். மாமாவுக்காகச் சகித்துக்கொண்டு உள்ளத்தால் அழுது இறுதியில் ஏக்னல் திருமணம் செய்கிற பெண்ணைக் கண்டு “இனி வருத்தப்பட வேண்டியது நானில்லை, அவன்தான்” என ஆறுதல் கொள்கிறாள். ஏமாற்றிய துணை அழகற்ற துணையைத் திருமணம் செய்வதைக்காட்டிலும் பெரிய ஆறுதல் ஏமாற்றப்பட்ட காதலர்களுக்கு என்னவாக இருந்துவிட முடியும்?

அடுத்து தன் மாமா பார்த்த மாப்பிள்ளையான ஜோஸுடனான வாழ்க்கை; வீட்டில் தேர்ந்தெடுக்கும் மணமகன்/ள் முதலில் மிகச் சாதாரண தோற்றத்தில் ஒவ்வாதவர்களாகத் தெரிந்து பிறகு முகம், குணம் மற்றும் உரையாடல் முதலியவை பழகி அவர்களை அழகானவர்களாக நம் மனது உருமாற்றும். இந்நாவலில் கார்மலின்- ஜோஸ் இருவருடைய திருமணத்துக்கு முந்தைய உரையாடல்களில், எண்ணங்களில் மற்றும் சந்திப்புகளில் மௌசோ இந்த மாறுதலை அழகாக எழுதியுள்ளார். பிறகு ரொசாரியோ- கார்மலின் இடையேயான காமத்தில், போதையில் வீழ்ந்து கிடக்கும் ஜோஸின் மீது அருவருப்பு கொண்டாலும் தன் கிளர்ச்சியூட்டுகின்ற உடல்மேல் பெருமைகொள்கிறாள். ஜோஸால் ஏற்படுகின்ற மனஉளைச்சல்களில் இருந்து விடுவித்துக்கொள்ள ரொசாரியோவின் அத்துமீறலின் உச்சத்தில் தற்காலிகமாக மகிழ்கிறாள்.

ரொசாரியோவுடனான கலவியினாலோ அல்லது ஜோஸ் தினமும் போதையில் புணர்வதாலோ இரண்டாவது முறை கர்ப்பமாகும்போதுதான் கத்தோலிக்கப் பெண்ணாகத் தான் மிகப்பெரிய தவறு செய்ததாக உணர்கின்றாள். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகும் அதைப் பாவமாகக் கருதி அன்னை என்கிற நிலையிலிருந்து பிறழ்ந்து வெறுக்கிறாள். அக்குழந்தை இறக்கும்போதுதான் அக்குற்றவுணர்விலிருந்து முற்றிலும் விடுபட்டு நிம்மதியடைகிறாள். தாயாக அக்குழந்தையின் இறப்பை அக்குழந்தையின் விடுதலையாகக் கருதி சமரசம் கொள்கிறாள். சமகாலத்தில் தகாத காமம் குறித்து ஏராளமான படைப்புகள் வந்திருந்தாலும் தகாத காமத்தின்கண் விளைந்த குழந்தையை வறுமையில் இருக்கின்ற ஓர் அன்னையின் மனநிலை எவ்வாறு கையாளும் என்கிற சித்தரிப்பு இத்தனை வெளிப்படையாக எங்கும் புனையப்பட்டதில்லை. அன்னை என்கிற புனிதத்தை குழந்தையின் இறப்பின் வழியாக மிக இலகுவாக உடைக்கிறாள் கார்மலின்.

பிறகு மகள் பெலிண்டாவின் எதிர்காலத்திற்காக குவைத் சென்று அங்கே நிஸ்ஸார் வீட்டில் பணிப்பெண்ணாகி நிஸ்ஸாருடனான உறவில் அவளுக்கு இரண்டு லாபங்கள் கிட்டுகின்றன. ஒன்று முதலில் பயத்தையும் அசூயையும் ஏற்படுத்தினாலும் பின்னர் தான் கடந்துவந்த மூன்று ஆண்களையும் நிஸ்ஸாரோடு ஒப்பிட்டு பின் அவள் அவரிடம் கொள்கிற இன்பம்; இரண்டாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அக்கூடலுக்காக அவர் அளிக்கும் கூடுதல் தினார்கள்; குவைத் வாழ்க்கையில் பிற பணிப்பெண்களுடன் தன்னை ஒப்பிடுகையில் அவளது நிலை சிறப்பாகவே இருக்கிறது. சுராவல்லியிலிருந்து குவைத் வரையான வாழ்க்கையில் குவைத் வாழ்க்கை கார்மலினுக்கு சற்று நிம்மதியளிப்பதாக இருக்கிறது.

கார்மெலின்- இசபெலுடைய நட்பு இந்நாவலில் தொடக்கம் தொட்டு இறுதிவரை விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாகவும் ஆறுதல் அளிக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர். குவைத் செல்லும் கார்மலின் பெலிண்டாவை முழுவதுமாக நம்பி இசபெல்லிடம் விட்டுச் செல்கிறாள். நான் அறிந்தவரையில் ஓரகத்திகளுக்கிடையேயான நெருக்கத்தையும் அன்பையும் வேறு ஏதேனும் இலக்கியங்கள் இவ்வளவு தெளிவாக விவரித்துள்ளதாகத் தெரியவில்லை.

அன்னையாகத் தான் அடைந்த கஷ்டங்களும் கறைகளும் பெலிண்டா மேல் துளியும் படியக்கூடாது என்பதில் கார்மலின் கவனமாக இருக்கிறாள். நிஸ்ஸாருடைய மகனிடமிருந்து புகைப்படத்தைப் பிடுங்கும் தருணத்திலும் இறுதியில் பெலிண்டா குவைத் சென்று சம்பாதிப்பேனென சொல்லும்போது அறைகிற தருணத்திலும் கார்மலின் முழுமைகொண்ட அன்னையென நிற்கின்றாள்.

ஓர் நல்ல இலக்கியத்திற்கான உருவகங்கள், அழகியல் மற்றும் நிலப்பரப்பு உள்ளிட்ட அனைத்தையும் கார்மலின் பெற்றிருந்தாலும் நாவலின் குறை கார்மலின் மட்டுமே மொத்த நாவலையும் தாங்கிப்பிடித்திருப்பதாக ஒரு தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. உபகதாப்பாத்திரங்களின் சுபாவம் ஓர் இலக்கியத்தில் அவற்றுக்கான தனிப்பட்ட தருணங்களில் மட்டுமே வெளிப்படும். ஆனால் இந்நாவலில் உபகதாப்பாத்திரங்களின் தன்மையை கார்மலின் வழியே நின்று மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

கவிஞர் புவியரசுடைய மொழிபெயர்ப்பு நாவலுக்கு ஓர் பெரிய பலமாகும். மொழிபெயர்ப்பில் வேறொரு பண்பாட்டின் விழாக்கள், சடங்குகள், பிரத்யேகப் பழக்கங்கள், பிராந்தியத் தன்மை உள்ளிட்டவை பெரும் உழைப்பைக் கேட்கும். நுண்ணுணர்வின்றி மொழிபெயர்த்தால் படைப்பானது தட்டையாக மாறிவிடும். ஆனால் புவியரசு தமிழ்மொழியில் கொங்கணி வாசனையைச் சரிவரக் கலந்திருக்கின்றார். உதாரணமாக தன் மாமாவையும் மாமியையும் அம்மா அப்பா என கார்மலின் அழைக்கும் இடம் அம்மாவென்றும் அப்பாவென்றும் இருப்பின் கடக்கக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் புவியரசு அவ்விடங்களில் மாய், பாய் எனக் கொங்கணியிலேயே குறிப்பிட்டு அச்சொற்களின் அழுத்தத்தை வெளிப்படுத்தி கொங்கணியுடன் தொடர்புபடுத்த முயன்று அதில் வெல்கின்றார்.

மிகக் குறைந்த அளவில் பேசப்படும் மொழியாக இருப்பினும் கொங்கணி தன்னை இலக்கியத்தில் தனித்து அடையாளப்படுத்திக்கொள்ளும் விதமான படைப்புகளை தன்னிடத்தே கொண்டுள்ளது. கொங்கணி இலக்கியம் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகளென தம் பண்பாட்டின் அடையாளங்களையும் மதிப்பீடுகளையும் தொடர்ச்சியாக வளர்த்திட விழைகின்றது. நவீன தமிழ் இலக்கியவாதிகள் ரஷ்யா, லத்தீன் அமெரிக்கா, பிரெஞ்சு என கண்டங்கள் தாண்டிய இலக்கியங்களை மட்டும் நோக்காமல் மிகச்சிறிய பிராந்தியத்திலிருந்து எழும் கொங்கணி மாதிரியான மொழிகளின் இலக்கியவளத்தையும் வளர்ச்சியையும் தமிழிலக்கியச் சூழலுடன் பொருத்திப் பார்க்கலாம். உள்ளங்கையளவு நாகலிங்க மலர்களும் அறைமுழுக்கவும் மணத்தை நிரப்புபவைதான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...