எம். பி. குடு குடு (மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை )

A Samad Said

ஏ.சாமாட் சாயிட்

எம். பி. குடுகுடு மூன்று தடவை கொட்டாவி விட்டுக் கொண்டே ஆக்ரோஷமாக நெளிந்தார். அவரது முரட்டு கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி கொட்டாவி விட்டபோது, காற்றில் மெதுவாக அசைந்த தொலைபேசி கம்பிகளில் உல்லாசமாக குதித்துக்கொண்டிருந்த சில சிட்டுக்குருவிகள் பயந்தன. அந்தப் பறவைகள், அப்பாராளுமன்ற உறுப்பினர்  தங்கியிருந்த விடுதிக்கு எதிரில் உள்ள விடுதியின் கூரைக்கு விருட்டென பறப்பதைப் பார்த்தார். அதன் பிறகு அந்தப் பறவைகள் ஒரு  கிழட்டு ஆலமரத்தை நோக்கி பறந்தன. அதன் இலைகள் எப்போதும் மெதுவாக அசைந்து மூன்று சக்கர ரிக்‌ஷா மீதும், சில வாடகை கார்கள் மீதும் உதிர்ந்து கொண்டேயிருந்தன.

எம். பி. குடு குடு மீண்டும் கொட்டாவி விட்டுக் கொண்டே திரும்பினார். கட்டிலில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். நீல நிறப் போர்வை அவள் உடலிலிருந்து கொஞ்சம் விலகி அவளது அழகான முதுகை காட்டியது. அவளது கறுப்பு நிற மார்கச்சையின் கயிறு நழுவி கைப்பகுதிக்கு சென்று விட்டிருந்தது. எம். பி. குடு குடு கட்டிலை நெருங்கி, அலை அலையான கூந்தல் அவளது நெற்றியில் குவிந்து கிடந்ததை இரசித்தார். அவளது வெளிறிய இதழ்கள் இயல்பாக புன்னகைத்தபடி இருந்தன. எம். பி. குடு குடு அவளைக் கண்டு அகம் மகிழ்ந்தார். அவர் கீழே குனிந்து கார்ப்பேட் மீது கிடந்த வார பத்திரிக்கைகளை எடுத்துக்கொண்டு கட்டில் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

ஞாயிறு பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பலவித தலைப்புச் செய்திகள் கொட்டை எழுத்துக்களில் சுடச்சுட புத்தம் புதியதாக காணப்பட்டன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் நடக்கும் சூழ்ச்சியும், கிளர்ச்சியும், கவலையையும் படபடப்பையும் உண்டாக்கின. கிழக்கு ஆப்ரிக்காவின் பொருட்களின் புறக்கணிப்பு, கொங்கோவின் சுதந்திரமும் கலவரமும், க்யூபாவில் அமெரிக்காவின்  சொத்துகள் பறிமுதல்,  இந்தியாவின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஆபத்துக்கள், சீனா – இந்தோனேசியா உறவில் பிளவு,  பேரண்ட்ஸ் சீ வான்வெளியில்(BARENTS SEA) ஆர் பி-47 ரக விமானம் சுட்டு வீழ்த்தல்,  அடுத்த அமெரிக்கத் தலைவர் பதவிக்காக ஜனநாயக கட்சி வேட்பாளர்களான கென்னடி-ஜோன்சன் போட்டி, ஹோங் லிம்மின் 16 தீர்மானங்கள் அறைகூவல் மற்றும் மலாய் – இந்தோனேசியா மொழிக்குழு நியமனத்தின் தொடக்கவிழா பற்றிய சர்ச்சை. ஆனால் எம். பி. குடு குடுவின் கண்கள், நாளிதழின் ஒரு மூலையில், ஒரு சிறுமி தன்னை விட பல மடங்கு வயதில் மூத்த ஒருவனுக்கு பலியான செய்தியை நோக்கி விரைவாக நகர்ந்தன. விரைவில் ஈர்த்தது.

அவரது கண்களில் வேட்கை உச்சத்தில் இருந்தது, உதடுகள் அசைந்தன. சிறிது நேரம் புன்னகைத்தார், பிறகு அந்த ஆங்கில பத்திரிக்கையை போட்டு விட்டு, மலாய் பத்திரிக்கையை புரட்டினார். அதில் நிறைய மொழி மற்றும் இலக்கிய கட்டுரைகள் நிரம்பி இருந்தன. மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான செய்திகளில் அவருக்கு பெரிய ஈர்ப்பு இருப்பதில்லை.  என்னதான் அவர் “பஹாசா ஜீவா பங்சா”, மொழி உயர்ந்தால் இனம் உயரும் என்று பிரச்சார மேடைகளில் கோஷம் போட்டாலும்,  மொழி மற்றும் இலக்கியம் பற்றிய கருத்துக்கள் அவரைக் கவர்வதில்லை.

மின்னும் அவரது கண்கள், ஓரத்தில் சிறியதாக இருக்கும் சினிமா விளம்பரம், ரேடியோகிராம், மின் விசறி, டேப் ரொக்கோர்டர், குளிர் சாதனப்பெட்டி, ஸ்கூட்டர், மோட்டார், மருந்துவகைகள் மற்றும் “ஹேய் அப்ப பாசால்?” (Hei Apa Pasal) விளம்பரங்களை நோக்கின. அரை நிர்வாண அழகியப் பெண் படத்தைப் பார்த்த போது அவரது கண்களை பெரிதாக்கினார்,  பின் அவரது காமக் கண்கள் கட்டிலில் படுத்திருக்கும் பெண்ணை நோக்கியது. அவர் புன்னகைத்தார்.

எம். பி. குடு குடு எழுந்தார், கையிலிருந்த பத்திரிக்கைகளை கீழே போட்டார். பத்திரிக்கையின் சில ஏடுகள் காற்றில் பறந்து கதவின் கீழ் போய் விழுந்தன. அதை தன் சோம்பிக் கிடக்கும் கண்களால் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். கீழ் தளத்தில், இசைப் பெட்டியிலிருந்து “ஓ சாயாங் சாமா நோனா, நோனா சாயாங் சாமா சாயா” பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. பிறகு மீண்டும் ஜன்னல் பக்கம் சென்றார். கீழே கருப்பு எறும்புகள் போன்று போக்குவரத்து சுறுசுறுப்பாகி இருந்தது.  “நகரம், நகரம்,” மனதில் சொல்லிக் கொண்டார். “என்ன அழகு!” பிறகு அவரது கட்டிலில் படுத்துக்கிடக்கும் அழகியைப் பார்த்தார். மீண்டும் “என்ன அழகு!” என்றார்.

அவரது உடல் இன்னும் களைப்பாகவே இருந்தது.  இத்தனைக்கும் அவர், வெய்யில் உச்சியில் வந்தபோதுதான் எழுந்தார். அவரது தலை விண் விண் என்றிருந்தது, மீண்டும் இரண்டொரு முறை கொட்டாவி விட்டார். ஒவ்வொரு தடவையும் அவர் கொட்டாவி விடும்போதும், அவரது வாய் அவருக்கே நாற்றம் அடித்தது. அவர் முன்னால் இருக்கும் வட்ட வடிவான கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்தபோது அவரது அடர்த்தியான ஒட்டிய புருவங்களின் கீழ் இருந்த கண்களில் மொத்தமாக பீழை படிந்திருப்பதை பார்த்தார். தனது தாடையை தடவினார். சற்றே நீண்ட தனது தாடையில் முரட்டுத்தனமான ரோமங்கள் அங்கும் இங்கும் வெளிப்பட்டிருப்பதை கைகளில் உணரமுடிந்தது.

“ரொம்ப ராங்கி … நீ ரொம்ப ராங்கி…” படுத்திருந்த அந்தப் பெண்ணின் குரல் கொஞ்சலாக கேட்டது.

எம். பி. குடு குடு திரும்பினார், அவளைப் பார்த்தார். அவளது மொத்தமான கறுத்த புருவங்களின் கீழ் இருந்த கண்கள் மூடியபடியே இருந்தன. அவளது இதழ்களில் புன்னகை பூத்திருந்தது. மீண்டும் அவள் உதடுகள் அசைந்தன. “முடியாது. நான் கேமரன்மலைக்கு உன்னுடன் வர மாட்டேன். ரொம்ப தூரம்.” கூடுதலாக அவள் குரல் குழைந்தது.

எம். பி.  குடு குடு புன்னகைத்தார். படுத்திருந்த அந்தப் பெண்னின் அருகில் செல்ல ஆசையாய் இருந்தாலும், ஏனோ தெரியவில்லை, அவளை சீண்ட மனம் வரவில்லை. அவர் மீண்டும் ஜன்னல் அருகே சென்றார், கீழே இசைப் பெட்டியிலிருந்து ஆர். அஸ்மியின் “ஹேய், மாத்தா கெராஞ்சாங்!” பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

என்னதான் அந்தப் பாடல் தன்னை ஏளனம் செய்வது போன்று இருந்தாலும் ரோமங்கள் பூத்த  தன் மார்பை அகல விரிக்கும் போது, மனதிற்கு இதமாகவே இருந்தது.  இப்படி செய்வதால் தனக்குள் பெரிதாக ஒரு சுகத்தை உணர்ந்தார். தான் யாரென்ற உண்மை நினைவுக்கு வர, அவரது மனம் குசுகுசுத்தது: “இப்போது நானொரு பாராளுமன்ற உறுப்பினர். ஆமாம், மனிதர்களின் மத்தியில் ஓர் உச்ச நிலை: ரப்பர் மற்றும் ஈயம் நிறைந்த நாட்டில் வாழும் மக்களின் விதியை மாற்ற அவர்களின் குரலாக நான்.”

திடீரென்று அவர் மூளையில், உடை கிழிந்த, செம்பட்டை தலையோடு, கண்களில் குழி விழுந்த பலவீனமான நூறு பேர் முன்னிலையில், மேடை மீது தான் நின்றிருப்பதாக படம் தோன்றியது.

“மெர்டேக்கா!” என்று கத்தினார்.

மக்கள் தங்களின் ஒல்லியான கை விரல்களை இறுக்கமாக மடக்கியவாரு தலைக்கு மேல் அலைபோல உயர்த்தி “மெர்டேக்கா!” என்று கோஷமிட்டனர்.

“சத்தம் போதவில்லை, தோழர்களே,” கரகரத்த குரலில் கூறினார். “முழு மனதோடு கோஷமிடுங்கள். ‘மெர்டேக்காஆஆஆ!” அதனூடே அவரின் உடலிலிருந்து ‘காற்றும்’ வெளியேறியது, இருந்தாலும் அவர் சௌகரியமாகவே காணப்பட்டார், காரணம் ‘மெர்டேக்கா’ ஆரவாரத்தில் அவர்கள் யாரும் அதை கேட்டிருக்க முடியாது.

அவர் சுமார் மூனேகால் மணி நேரம் அந்த சாய்வான மேடையில், நாட்டின் நிர்வாகத்தில் இருக்கும் ஓட்டைகளையும் மக்களை ஒடுக்கும் ஆட்சி முறைகளைப் பற்றியும் பேசினார். தன் இன மக்களை எவ்வாறு காலனித்துவர்கள் பல நூறு வருடங்களாக சாமர்த்தியமாக ஏமாற்றி ஏய்த்து வந்துள்ளனர் என்றும், அதனால்  மக்கள் எவ்வாறு பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் பலமுறை விளக்கினார்.

“நாம் அவ்வளவு தாழ்த்தப்பட்டுள்ளோம், தோழர்களே, மிகவும் தாழ்த்தப் பட்டுள்ளோம்!” ஆவேசமாக கத்தினார்.

அந்த நூறு பேரும் அப்படியே வாயடைத்துப் போய் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொணடனர்.

“ஆமாம், நாம் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்! ஆனால் நாம் எப்போதும் இப்படித்தான் அவர்களின் குதிரையாகவும் மாடாவாகவும் பணம் கொழிக்கும்  நம் நாட்டில் அடிபணிய வேண்டுமா?”

“கூடாது!” எல்லோரும் ஒரே சமயத்தில் கத்தினர்.

“ஆம் கூடாது, கூடாது, கூடாது, கூடாது!” மேலும் தன் குரலை  வேகமாக உயர்த்தினார். “அதனால்தான் சகோதரர்களே, நீங்கள் மிக கவனமாக உங்களின் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். காலனித்துவ சிந்தனை கொண்டவர்களை தேர்வு செய்து விடாதீர்கள்! தங்களுக்கு யார் உகந்தவர்கள் என தேர்வு செய்ய அத்தனை உரிமையும் உண்டு. ஆனால் … ஆனால் சகோதரர்களே, தாங்கள் என்னை தேர்வு செய்தால், நான் என்னால் முடிந்த மட்டும் சாகும் வரையில் போராடுவேன்! நான் உங்களது குரலாக, மூச்சாக, எலும்பும் சதையுமாக இருப்பேன்.”

ஆனால் எதிர்பாராத விதமாக முன்னால் நின்றிருந்த  ஒரு சிறுவன்: “எனக்கு அப்பாவாக இருக்க முடியமா?” என்று உரத்தக் குரலில் கேட்டான்.

எம். பி. குடு குடுவின் கண்கள் பிதுங்கின, அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.

அவர் தன் உரையை “மெர்டேக்கா,” என்று கூறி முடித்துக் கொண்டபோது, ஒல்லியான, உணர்வற்றவர் போன்று காணப்பட்ட அனைத்து மக்களும் ஒரு சேர உரத்த குரலில் உற்சாகமாக மெர்டேக்கா என்று கத்தியது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள், அங்கிருந்த குழந்தைகள் அதிர்ச்சியில் வீரிட்டு அழும் அளவுக்கு  சத்தமாக கத்தினர். எம். பி.  குடு குடுவின் நெற்றியிலிருந்து வியர்வைத் துளிர்த்து சிந்தியது. அவரது மனம் சந்தோசத்திலும் இன்னதென்று கூற முடியாத உணர்விலும் குழம்பிக் கொண்டிருந்தது.

கட்டில் அருகில் கிடந்த மேசை மீது இருந்த தொலைபேசி மணி பல தடவை அடித்ததில் அந்த கம்பீரமான காட்சி அவரின் மனத்திரையிலிருந்து மறைந்தது. எம். பி.  குடு குடு ரிசீவரை சத்தில்லாமல் எடுத்து, தன் கரகரத்த குரலில், “ஹலோ, யார்?” என்றார்.

“முஸ்பி-ஹைபோ,” என்று தூரத்தில் கேட்டது.

“ஓ, செனட்டர் ஹைப்போ!” எம். பி குடு குடு ஒரு நீண்ட சிரிப்பின்னூடே வாயிலிருந்து எச்சிலின் சாரலை ரிசீவரில் தெறிக்க விட்டார். “எங்கிருந்து அழைக்கிறீர்? என்ன விஷயம்?”

“தூலாங் பாங்சா (TULANG BANGSA) அலுவலகத்திலிருந்து,” மீண்டும் தூரத்திலிருந்து குரல்.

“ஹா? பத்திரிக்கை அலுவலகத்திலிருந்தா?”

தூரத்திலிருந்த குரல் ஆமோதித்தது.

“ஏ … ஏன்? அங்கு யாராவது நண்பர் இருக்கிறாரா?”

“இல்லை. பொய் குற்றச்சாட்டுக்கும் ஆட்களின் சவால்களுக்கும் பதில் சொல்ல வந்தேன். இந்தப் பத்திரிக்கை அலுவலகத்திலும் எனக்கு தெரிந்த ஒரு நிருபர் உள்ளார்.”

“ஓ, நல்லது, நல்லது. எ … எப்படி நான் இங்கிருக்கிறேன் என்று தெரியும்?”

“டாய்மான் கிரேக்கோ சொன்னான்.”

“ஓ.”

“நீ தனியாவா இருக்கே?”

“ஆம், ஆமாம்,” எம். பி.  குடு குடு தன் ஓரக் கண்ணால் கட்டிலில் படுத்திருந்த அழகிய பெண்ணைப் பார்த்தவாறு சொன்னார். “தனிமையா இருக்கு.”

“ஆ, தனிமையாக இருந்தால் ஏன் பெண்டாட்டியை விட்டு வரவேண்டும்?”

“மக்களின் விவகாரங்களுக்காகத்தான். மக்களின் விவகாரங்களுக்காக.”

“பெண்டாட்டியும் மக்கள்தான்,” செனட்டர் ஹாய்ப்போ சொன்னார். “ம்ம் … பிறகு நான் அங்கு வரலாமா?”

“ம்ம் … வரலாம். ஆனால் நானே வந்து உன்னைப் பார்க்கின்றேன். நானும் உன்னைப் பார்க்கத்தான் நினைத்தேன். எங்கே பார்க்கலாம்?”

“ம்ம் … ரெஸ்தோரன் மக்மூர் …”

“சரி. ரெஸ்தோரன் மக்மூர். எத்தனை மணிக்கு?”

“ஒரு மணிக்கு?”

“சரி, சரி, முடியும்.”

ரிசீவரை வைத்தவுடன் அவரின் உடல் நடுங்கியது. செனட்டர் முஸ்பி ஹாய்ப்போவிற்கு தான் இங்கிருப்பது தெரியும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மேலும் பலவீனமானார், மேசை அருகில் இருந்த நாற்காலியில் சாய்ந்தார். அவரது கண்கள் நாளிதழ்  தலைப்பு செய்தியின் எழுத்துகளில் பதிந்தது, “கொங்கோவில் கலவரம்!” அந்தச் செய்திக்கு கீழ் இடது புறத்தில் பெரிய அளவில் இசைத்தட்டு விளம்பரம் ஒன்று : “அயோயோ ஜம்போ காலிப்சோ.” (AYOYO JAMBO CALYPSO)

பிரபு

அவரது உடல் மிகவும் சோர்வாக இருந்தது. வெறும் சிங்கலெட் அணிந்திருந்த அவரது கை மற்றும் தோற்பட்டையில் படர்த்தாமரை உலக வரைபடம் போல் அங்காங்கு காட்சியளித்தன. எம். பி. குடு குடு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வானத்தின் மஞ்சல் கலந்த சிவப்பு வர்ணங்களிலான சாயுங்காலப் பொழுதை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தத் தொலைபேசி கம்பிகளில் இரண்டு மூன்று குருவிகள் இன்னமும் குதித்துக் கொண்டிருந்தன. அந்தக் குருவிகள் காணாமல் போன பிறகு, எம். பி. குடு குடுவின் கண்கள் அவரின் விடுதி அறையிலிருந்து சற்று தொலைவில் பளிச்சிடும் நியோன் விளக்கு விளம்பரப் பலகையை  நோக்கியது, அதில்: அடுஹாய் மாசாஜ் (ADUHAI MASSAGE) என்று எழுதியிருந்தது. அதனோடு ஒரு பெண், எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் ஒரு ஆண்மகனை மசாஜ் செய்யும் படமும் இடம்பெற்றிருந்தது.

எம். பி. குடு குடு அந்த விளம்பரப் பலகையையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தாலும் அவரது எண்ணங்கள், தேர்தல் காலத்து பணி சுமைகளை பற்றிய நினைவுக்கு திரும்பியது. அந்த நிகழ்வுகளும் சம்பவங்களும் இன்னும் அவர மனதில் புதியதாகவே காட்சியளித்தன. பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற அவரது விருப்பம் திடீரென்றும், தற்செயலாகவும் வந்ததை அவர் நினைவு கூர்ந்தார். மக்கள் தேர்தலுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கும்போது, எம். பி. குடு குடுவோ (அப்போது இன்னும்  எம். பி. ஆகவில்லை!)  “இளங்கலை இலக்கியக் குழு” ஏற்பாடு செய்த “தேசிய மொழியாக மலாய் மொழியின் பங்கு” என்ற பேச்சு போட்டிக்காக  மும்முரமாக பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவர் மனப்பாடம் செய்த அந்தச் சொற்பொழிவு, அவருடைய சொந்தக்காரப் பையன் எழுதித் தந்தது, அவன் முன்னாள் பல்கலைக்கழக மாணவன். முன்பு மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தான், இப்போது மும்முரமாக “ஓய்வில்” இருக்கின்றான்.

பேச்சுப் போட்டியில் கிடைத்த வெற்றியால், அவருக்கு வேட்பாளர் ஆகும் வாய்ப்பு கிட்டியது, ஏனென்றால் வேட்புமனு தாக்கலுக்கு இரண்டு வாரங்களுக்கு  முன்பே நிஜ வேட்பாளர் இறந்து விட்டார். அவருடன் இருந்தவர்கள் குடு குடுவை ஆதரித்தனர். அதற்கு காரணம் அவர்கள் பார்வையில் குடு குடு ஒருவர் மட்டுமே சிறப்பாக பாராளுமன்றத்தில் உரத்துப்பேசக்கூடியவர். அதனால் அந்த வேட்பாளர் இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, BERSAMDIPIK கட்சிக்கு சும்மா வால் பிடித்துக் கொண்டிருந்த இவரின் பெயரை வேட்பாளராக பரிந்துரைத்தனர். அந்த நாள் முதல் மூசா குடு குடுவின் பெயர் வானொலியில் உரக்க ஒலித்தது. அதன் பிறகு பத்திரிக்கைகளிலும் அவரின் பெயர் மிடுக்காக வந்தன.

எம். பி. குடு குடு தன் அற்புதமான எதிர்பாராத விதியை நினைத்து சிரித்தார். அவர் மீண்டும் அடுஹாய் மாசாஜ் விளம்பரப் பலகையில் மினுக்கும் நியொன் விளக்குகளைப் பார்த்தார், பிறகு மீண்டும் தனது அகண்ட திரை வண்ண நினைவுகளுக்குள் மூழ்கினார்.

இன்னமும் அவருக்கு, வாக்களிப்பு தினத்தன்று எப்படி உடல் நடுங்கியது என்று உணர முடிந்தது. அத்தருணத்தில் அவருக்கு எப்படியாவது வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது, வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. அந்தச் சமயத்தில்தான் அவரது உதட்டிலிருந்து சூராஹ் பாத்திஹாவும் யாசினும் மீண்டும் மீண்டும் பல தடவை உதித்தன. அதே சமயத்தில்தான் அவர் வாக்காளர்களிடம் சென்று கெஞ்சி அவர்களது கருணையை வேண்டினார், அதோடு வாக்குப் பெட்டியை எடுத்துச் செல்ல ஐந்து நிமிடங்களுக்கு முன், பல மாதங்களாக நோயில் கை நடுங்கிக் கொண்டிருந்த லீமாஹ் அஸ்மாரா பாட்டியை தனக்கு வாக்களிக்க இணங்க வைத்தார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் சமயத்தில் அவரது இதயம் வேகமாய் படபடத்தது. பயத்தாலும் வெட்கத்தாலும் ஒளிந்துகொண்டார். ஒரு கிணற்று பக்கத்தில் நின்று கொண்டு, கலங்கிய இதயத்தை சாந்தப்படுத்த நகங்களை கடித்துக் கொண்டிருந்தார். பிறகு தேர்தல் முடிவுகள் அறிவித்த போது, அவருக்கு 1960 வாக்குகளும் அவரது எதிரணியான கொங்காலிகொங் கட்சி வேட்பாளர் அஹ்மாட் தொங்காங் 1959 வாக்குகள் பெற்றார். எம். பி  குடு குடு சந்தோசத்தால் துள்ளிக் குதித்ததால் வழுக்கி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அவரது ஆதரவாளர்கள் அவரை அதிலிருந்து மீட்டு, தூக்கிக் கொண்டு அவரை கம்பம் முழுக்க ஊர்வலமாக சுற்றி “ Cik Mek Kena Godam Awang Kena Tumbuk … uwaa …uwaa …uwaa…” என்ற பாடலை அதிகாலை 2 மணி வரை பாடிக் கொண்டிருந்தனர்.

படபடக்கும் இதயத்தோடு தனது முதல் உரையைப் பேசினார் எம். பி.  குடு குடு. என்னதான் சிறந்த பேச்சாளராக இருந்தாலும், எதிர்பாராத வெற்றியால் – அவருக்கு  வித்தியாசமாக தோன்றியது – உடல் முழுவதும் உதறி, அதோடு நடுங்கும் குரலில் கத்தினார்: “மெர்டேக்கா!”

“தோழர்களே, எனது இந்த வெற்றி எதிர்பாராதது. இந்த வெற்றி உண்மையில் உங்களது வெற்றி,” மிகவும் நன்றியுணர்ச்சியுடன் கூறினார். “தோழர்களே, உங்களுக்கே தெரியும் எனக்கு 1960 வாக்குகள் கிடைத்தன, எதிரணிக்கு 1959 வாக்குகள் கிடைத்தன என்று, இதன் அர்த்தம், நான் ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றிப் பெற்றேன். அந்த ஒரு வாக்கு, லீமாஹ் அஸ்மாரா பாட்டியுடையது …” அவர் நிறுத்தினார். அந்த சமயத்தில் நோயில் நடுங்கிக்கொண்டிருந்த லீமாஹ் அஸ்மாரா பாட்டியை அவரது கண்கள் அலை அலையாய் இருக்கும் அந்தக் கூட்டத்தில் தேடின. “எங்கே லீமாஹ் பாட்டி?”

அவர் கேட்ட அதே நேரத்தில், தென்னை மரம் போன்று மெலிந்து, சுருள் சுருளான விரிந்த தலைமயிரோடு ஒரு பெண்மணி அழுதுகொண்டே ஓடி வந்து: “ உதவுங்கள், உதவுங்கள்…என் பாட்டி செத்துவிட்டாள். என் பாட்டி செத்துவிட்டாள் …,” அவளது அழுகை நீண்டது.

எம். பி.  குடு குடுவின் மனமும் உடலும் மீண்டும் பலவீனமானது.

மேசை மீதிருந்த தொலைபேசியின் மணி ஒலித்தது. எம். பி குடு குடு திடுக்கிட்டு எழுந்து தான் இன்னமும் விடுதி அறையில் இருப்பதை கண்டு கொண்டார். அந்த அறை இருட்டாக இருப்பதையும் அப்போதுதான் உணர்ந்தார். அறை விளக்கின் சுவிட்சைப் போட்ட பின் ரிசிவரை சோம்பலுடன் எடுத்தார்.

“ஹலோ? யாரது?”

“சாயினாஹ்.”

“ஓ, சாயினாஹ். இனிமையான குரல்!”

மெல்லிய குரலில்: “இனிமை? குரல் மட்டுமா?”

“நீ எப்போதும் இனிமைதான், அன்பே.”

“ராத்திரிக்கு எங்கும் போகலையா?”

“போ …போகனும், போகனும்.”

“எப்போ?”

“இ …இப்…இப்போ மணி என்ன?” எம். பி.  குடு குடு கேட்டுக் கொண்டே அவருடைய கை கடிகாரத்தை லாச்சியில் தேடினார்.

“ஏழரை,” சாயினாஹ் உடனே பதில் அளித்தாள்.

“ஏழரை? ஒ, ஆம். ம்ம்ம் … நாம் ஒன்பது மணிக்கு போகலாம், சரியா?”

“சரி …, சரி. நிச்சயம் வரனும், தெரியுமா?”

“சரி, சரி.”

“நீங்க நல்லவர்.”

“நீதான் மக்கள்; நான் மக்கள் மத்தியில் எப்போதும் நல்லவன்.”

மறு முனையிலிருந்து கொஞ்சலில் சிரிக்கும் குரலும், பின் அவர் அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் குரலும் கேட்டது.

“சரி, சரி. நான் வருகிறேன் அன்பே, நான் வருகிறேன்.”

எம். பி.  குடு குடு தன் தலைமுடியை வழித்து வாரிக்கொண்டிருக்கும் சமயம், இரண்டு மூன்று தடவை அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அவர் சற்று நேரம் பேசாமல் இருந்தார், பக்கத்து அறையை யாரோ தட்டுகிறார்கள் என்று நினைத்தார். தன் அறை கதவுதான் தட்டப்படுகின்றது என்று உறுதிபடுத்திய பின், விரைந்து சென்று திறந்தார். அவர் முன் கடல் நீலத்தில் முழுக்கை சட்டையும் பழுப்பு நிற காற்சட்டையும் கருநீல நிற ‘டை’யும் அணிந்த  இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

மீசையும் குறுந்தாடியுமாக இருந்த இளைஞன் அகல புன்னகைத்த போது அவனது நெற்றியில் சுருக்கம் ஏற்பட்டது. உடனே எம். பி.  குடு குடு அவனைக் கண்டுக கொண்டார்.

“உள்ளே வா, அஹ்மட் சாகோ,” புன்னகையுடன் வரவேற்றார்.

அஹ்மாட் சாகோ உள்ளே வந்தான் நெற்றியை இன்னும் சுருக்கிக் கொண்டு ஒளிரும் கண்களால் அறையை சுற்றி பார்வையிட்டான். தாடியை தடவியவாரே காற்சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டான்.

“உனக்கு யார் சொன்னது நான் இங்கு இருக்கேனென்று?”

“ஐயோ- பாக் சிக், இந்த நகரம் ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல. இந்த அறை அளவுதான். பாக் சிக், நீ எவ்வளவு தூரம் போனாலும் எனக்குத் தெரியும். “You cannot hide, uncle, you cannot hide!” அஹ்மாட் சாகோ  ஜன்னல் பக்கம் சென்றான். அவனது கண்கள்  பளீரென்று மினுக்கும் ‘அடுஹாய் மாசாஜ்’ விளம்பரப் பலகையை பார்த்தன.

“என்ன விசயம்?”

“ஒன்றும் இல்லை. டாய்மான் கிரேக்கோ தொலைபேசியில் அழைத்து பேசினார். பாக் சிக் நீங்கள் இங்கிருப்பதாக சொன்னார், so I have come to see you!” அஹ்மாட் சாகோ பதிலளித்தவாரே எம். பி. குடு குடு மீண்டும் தலை வாருவதை பார்த்தான்.

“ஓ. நான் என்னம்மோ ஏதோனு நினைத்தேன்!” எம். பி.  குடு குடு மனதிற்கு நிம்மதி ஏற்பட்டது.

“பாக் சிக், ஏன் நீங்கள் இங்கு இருப்பதாக எனக்கு தெரியப்படுத்தவில்லை?” அஹ்மாட் சாகோ கேட்டவாரே தன் தாடியை தடவினான்.

“நான் இங்கு ஒரு முக்கியமன வேலைக்காக வந்தேன், அதுவும் அவசரமாக. மக்கள் பிரதிநிதியாக இருப்பது எவ்வளவு வேளைப்பளு என்பது உனக்கு தெரியும்தானே,” என்று பதில் அளித்தார், அவர் இன்னமும் தன் முகத்தை கண்ணாடியில் சரிப்பார்த்துக் கொண்டிருந்தார். “ஆமாம், ஆமாம்,” என்றான் அஹ்மாட் சாகோ, அவன் மினுக்கும் விளம்பரப் பலகையையே பார்த்துக் கொண்டிருந்தான். “இப்போது BERSAMDIPIK கட்சி எப்படி உள்ளது, பாக் சிக்?”

“ஓ, மிகவும் நன்றாக உள்ளது. பலமாக, மேலும் வலுவாக உள்ளது!” என்றார் எம். பி. குடு குடு, வலது காலில் காலுரையை மாட்ட ஆரம்பித்தார்.

“ம்ம்ம் … நீ ஏன் அரசியல் கட்சியில் சேர மாட்டேன் என்கிறாய்? நீ விரைந்து முன்னுக்கு வரலாம்.”

அஹ்மாட் சாகோ விழுந்து விழுந்து சிரித்தான், அவனது தலையும் நெஞ்சுப் பகுதியும் பலமாக ஆடியது. “O, no uncle, no!” அவனது சிரிப்பு நீண்டுக் கொண்டே இருந்தது. “I don’t go for politicts. I like to be just a civil servant!”

எம். பி.  குடு குடுவும் சிரித்தார். அவர்களது சிரிப்பு சற்று குறைந்த பின், எம். பி. குடு குடு உடனே வேறு விசயத்திற்கு வந்தார், “உன் காடி எங்கே?”

“நீங்கள் என்னுடன் காடியில் வருகிறீர்களா, பாக் சிக்? நான் உங்களை அனுப்புகிறேன்.”

“வேண்டாம், வேண்டாம்.”

“அந்த ஒபேல் காடி இல்லை, பாக் சிக். நான் மாற்றி விட்டேன்,” கை விரலில் அணிந்திருந்த நீல மாணிக்க மோதிரத்தை தன் டாக்ரோன் காற்சட்டையில் துடைத்தவாரே சொன்னான், பின் அந்த மோதிரத்தை வாயால் ஊதினான்.

“என்ன காடி?”

“பொர்க்வார்ட், பாக் சிக், பொர்க்வார்ட்.”

“ அடேயப்பா!, நீ நல்லா வளமாத்தான்  இருக்கிறாய்.”
அஹ்மாட் சாகோ மீண்டும்  நெற்றியில் கை வைத்து விழுந்து விழுந்து சிரித்தான், நெற்றியில் சுருக்கம் விழுந்தது.

“நீங்கள் நிஜமாகவே எங்கே போகிறீர்கள், பாக் சிக்?”

“கூட்டத்திற்கு என்று சொன்னேன்தானே.”

“கூட்டத்திற்கா இவ்வளவு அழகாக?”

“ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு வெறும் சிங்கலட்டும் அரைகால் சிலுவாருமா  போட்டு போகனும், ஹா?”

“I suppose so,” என்றான் அஹ்மாட் சாகோ, புன்னகைத்தவாறு.
அஹ்மாட் சாகோ தன் இரு கைகளையும் தன் காற்சட்டை பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டு பௌல் அன்காவின் Something has Changed Me, பாடலை விசிலடித்தபடி நடந்தான்.

அறையை விட்டு வெளியாவதற்கு முன் எம். பி. குடு குடு மழை வரும் என்ற அச்சத்தால், ஜன்னலின் சாளர குருட்டைக் கீழே இறக்கி விட்டார். அதனை கீழே இறக்கும் வேளையில் மினுக்கும் அடுஹாய் மாசாஜ் விளம்பரப் பலகையில் அவர் பார்வை விழுந்தது.

“அடுஹாய்!” மெல்ல முனகிக்கொண்டார்.

எழுத்து: ஏ. சாமாட் சாயிட்
மொழிப் பெயர்ப்பு: எம். பிரபு, பெந்தோங்

Utusan Zaman, 24 Julai 1960

HATI MUDA BULAN MUDA  

Kumpulan Cerpen A. Samad Said 1954 -1992 (DBP 1993)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...