இந்தக் கடலோரம் நடப்பது மட்டுமே சேதுவுக்கு அதிகம் பின் விளைவுகளை ஏற்படுத்தாது. திருமணமாகாத இந்த நாற்பதாவது வயதில் புதர்களுக்குள் முயங்கிக் கிடக்கும் இரு தேகங்களை நேர் காட்சியில் பார்ப்பதென்பதும் சூரிய குளியலுக்காகக் காத்திருக்கும் எண்ணெய் பிசுபிசுத்த பெண் உடல்களை கடப்பதென்பதும் அவரை தனது இரு காதலிகளையும் தொடர்புகொள்ளச் செய்யலாம். காதலிகள் அந்நேரத்தில் தனிமையில் இருந்தால் உரையாடல் மூலமாகவே உச்சத்தை அடைந்துவிடுவார். உடல் இருக்கும் நிலையில் நேரில் சந்திப்பது பெரும் அவமானத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை அவர்கள் தத்தம் கணவர்களோடு இருக்கும் பட்சத்தில் குறுந்தகவல்களில் அவர் பிறப்பை சந்தேகிக்கும் பொருட்டான வசைச்சொற்கள் நிறையும். இந்தக் கடற்கரையில் அத்தகைய காட்சிகளுக்கான வாய்ப்பெல்லாம் இல்லை. நொண்டியை மட்டும் ஏதாவது சுள்ளியை வீசி சமாளித்துவிட்டால் போதும். அது கௌவி விளையாடும் இடைவெளியில் நகர்ந்து விடலாம்.
Continue reading
சிறுகதை
காசியும் கருப்பு நாயும்
தன் அருகில் வந்து நின்ற நாயை ஒருதரம் அந்நியமாய் பார்த்தார் காசி. நல்ல உயரம். வாலின் ஒரு பகுதி உரோமம் இழந்திருந்தது. உடலின் இன்னும் இதரப்பகுதிகளிலும் உரோமம் இல்லாமல் இருக்கலாம். அதன் கருமை நிறம் இருட்டில் எதையும் கணிப்பதற்குத் தடையாக இருந்தது. தமிழர்களின் வாடை அதற்கு ஏற்கனவே பரீட்சையமாகியிருக்க வேண்டும். மிக இயல்பாக அவர் பக்கத்தில் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் காலடியில் படுத்துக்கொண்டது. காசிக்கு நாயின் தோற்றம் ஒருவகையான அச்சத்தை ஏற்படுத்தியது. முழுவதும் கறுமை படர்ந்திருந்த அதன் ரோமங்களுக்கு மத்தியில் கண்கள் பளிச்சென வெள்ளை நிறத்தில் இருப்பது மிரட்டலை தருவது போல் உணர்ந்தார். அதன் கழுத்தில் நைந்து சிவப்பு வண்ணத்தை முற்றிலுமாக இழக்கத் தயாராகியிருந்த துண்டுத் துணி முன்பு யாரோ ஒருவரால் வளர்க்கப்பட்ட நாய் என்பதை அடையாளப்படுத்தியது.
Continue reading
சிறுகதை : கூலி
அடுத்து இரண்டு எட்டு வைத்தால் அண்ணன் இருக்கும் அறை தட்டுப்படலாம். அக்கா தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் ‘நான்காவது பிலோர் 4-பி’ என்று பதறத்துடன் குறிப்பெடுத்ததை மீண்டும் ஒருதரம் நினைத்து சரி பார்த்துக்கொண்டான். நிச்சயம் அவ்வறை அழுகை சூழ்ந்து இருக்கும். அம்மாதான் அதிகம் அழுதிருப்பாள். அம்மாவுக்கு அழுவதற்குப் பெரிய காரணங்கள் வேண்டாம். சாதாரணமாக மேசையின் கால்கள் உடைந்துவிட்டாலே அம்மேசையை அப்பா வாங்குவதற்கு உழைத்த உழைப்பையும் பிடித்த சிக்கனத்தையும் சொல்லி அன்று முழுதும் அழுது தீர்த்துவிடுவாள். அண்ணனுக்கு விபத்து நடந்தது நிச்சயம் அவளை நிலைகுழைய வைத்திருக்கும். அப்பா வேலையை விட்டு ரிட்டாயரான பிறகு அவளின் முழு நம்பிக்கையும் அண்ணன்மீதுதான் இருந்தது.
என் அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது
தலைப்பு : என் அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது.
காலம் : சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு
இடம் : கெடா மாநிலத்தில் உள்ள கம்போங் செட்டி கம்பத்தில்
நோக்கம் : ஒன்றும் இல்லை
சரியாக மதியம் 2:20-க்கு நீங்கள் ஐஸ்காரரை எங்கள் கம்பத்தில் பார்க்கலாம்.அவரது துல்லியமான வருகை என்னை எப்போதும் அதிசயிக்க வைக்கும்.ஒரு நாளாவது அவர் ஒரு நிமிடம் முந்தியோ அல்லது பிந்தியோ வரும்போது அவரிடம் ஏன் இந்தக் கால மாற்றம் என உரிமையோடு கேட்கலாம் என நினைத்து வைத்திருந்தேன்.அதற்கு எப்போதும் அவர் இடம் கொடுத்ததில்லை.ஓர் ‘ஆமை ஹெல்மட்’ அணிந்து கொண்டு இடது கையில் பிடித்திருக்கும் மணியை ஆட்டியபடி ஒய்யாரமாக எங்கள் கம்பத்தில் இருக்கும் எல்லா வீடுகளையும் 2:21 வருவதற்குள்ளாக கடந்தபடி சென்றுவிடுவார்.இந்தியர்கள் வசிக்கும் கம்பங்களில் எதுவுமே அதிகம் விற்பனையாகாது என்ற நம்பிக்கைக் கொண்ட சராசரி சீனராக இருந்ததால் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதையோ குழந்தை களை அன்பொழுக பார்ப்பதையோ அவர் விரும்புவதில்லை.
எனக்கு முன் இருந்தவனின் அறை
உடனடியாக அறையை மாற்றவேண்டும் என முடிவெடுத்திருந்த இந்த நாள் இரவில் ஏன் திடீரென விழிப்பு வந்தது என்று தெரியவில்லை. நான் இவ்வளவு நேரம் உறங்கிதான் இருந்தேனா எனக் கூட சந்தேகம் எழுகிறது. உறங்கியதற்கான எந்த அறிகுறியுமற்று மிகுந்த விழிப்பு நிலையில் என் மூளை இயங்கிக் கொண்டிருந்தது. சோர்வின் சுவடு தெரியாமல் நெடுநேரம் உழைத்த சுறுசுறுப்பின் பிரகாசமாய் சுற்றி நடப்பதை மனம் கவனித்துக் கொண்டிருந்தது. முகத்தில் எண்ணைப்பசை… மூக்கு இடுக்குகளில் பிசு பிசுப்பு…. கண்ணோரத்தில் ஊளை…. உதடுகளின் இட வலத்தில் காய்ந்து கெட்டியாயிருக்கும் வெள்ளைத் திரவம் என எதுவுமே அற்ற முதல் விழிப்பாகத் தோன்றியது. இரண்டு பேர் கால் கைகளை `பப்பரபே’ என விருத்துப் படுத்தவுடன் நிரைந்து விடும் இந்த வாடகை அறையில் இது போன்ற உறக்கமற்ற நிலை பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.
கார்ட்டூன் வரைபவனின் கதை
அப்போது நான் ஒன்றும் பேசவில்லை. சில நிமிட மௌனத்திற்குப் பின் தான் அப்பாவிடம் கூறினேன். ராஜா, அப்பாவின் தாய்மாமன். எல்லா மரணங்களும் கொடுக்கும் நிசப்தத்தை நாங்களும் கடைப்பிடித்தோம். அது அவரைப்பற்றி சில தருணங்களை அசை போடுவதற்கும் பெரிய ஓலத்திற்கான சக்தியைச் சேகரிப்பதற்கும் மரணத்தை ஏற்றுக்கொள்வதற்கும் தேவைப்பட்டது. அம்மா, அவர் விரும்பி சாப்பிடும் கீரை குழம்பு பற்றி பேச ஆரம்பித்து விட்டாள். அவர் ஐந்து வகையான கீரையை ஒன்றாகப் போட்டு கடைந்து சாப்பிட ஆசைப்பட்டதாகவும் இதுவரை தன்னால் மூன்று கீரை போட்டுதான் குழம்பு வைக்க முடிந்ததெனவும் வருந்தினாள். சில நிமிட தேம்புதலுக்குப்பின் அந்த இரண்டு கீரை கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களையும் கீரை கிடைக்காமல் செய்த இந்த நகர வாழ்வையும் நொந்துகொண்டாள். புலம்பல் நின்றபோது எட்டிப்பார்த்தேன். அன்றைக்கு வைத்த குழம்பை உள்ளங்கையில் சொட்டுவிட்டு உப்பு பார்த்தாள்.
Continue reading