சிறுகதை : நொண்டி

இந்தக் கடலோரம் நடப்பது மட்டுமே சேதுவுக்கு அதிகம் பின் விளைவுகளை ஏற்படுத்தாது. திருமணமாகாத இந்த நாற்பதாவது வயதில் புதர்களுக்குள் முயங்கிக் கிடக்கும் இரு தேகங்களை நேர் காட்சியில் பார்ப்பதென்பதும் சூரிய குளியலுக்காகக் காத்திருக்கும் எண்ணெய் பிசுபிசுத்த பெண் உடல்களை கடப்பதென்பதும் அவரை தனது இரு காதலிகளையும் தொடர்புகொள்ளச் செய்யலாம். காதலிகள் அந்நேரத்தில் தனிமையில் இருந்தால் உரையாடல் மூலமாகவே உச்சத்தை அடைந்துவிடுவார். உடல் இருக்கும் நிலையில் நேரில் சந்திப்பது பெரும் அவமானத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை அவர்கள் தத்தம் கணவர்களோடு இருக்கும் பட்சத்தில் குறுந்தகவல்களில் அவர் பிறப்பை சந்தேகிக்கும் பொருட்டான வசைச்சொற்கள் நிறையும். இந்தக் கடற்கரையில் அத்தகைய காட்சிகளுக்கான வாய்ப்பெல்லாம் இல்லை. நொண்டியை மட்டும் ஏதாவது சுள்ளியை வீசி சமாளித்துவிட்டால் போதும். அது கௌவி விளையாடும் இடைவெளியில் நகர்ந்து விடலாம்.

நகரை விட்டு கடந்து, மூன்று பக்கங்களிலும் கடலும் ஒரு பக்கம் நதியும் சூழ இருக்கும் கேரித் தீவின் தென்பகுதியில் கடல்கரை அதன் அத்தனை குதூகலங்களையும் மழித்துவிட்டே காட்சியளிக்கும். இந்தோனீசியர்கள் கள்ளத்தோணியில் வந்திறங்க மட்டுமே அது பிரதான வாயிலாகப் பயன்படுவதாகக் கேள்விப்பட்டுள்ளார். மணல்பரப்புக்கு மறுபுறத்தில் சின்னச் சின்னக் கூடைகளில் மீன்கள் நிறைக்கப்பட்டிருக்கும். அத்தனையும் ஆற்று மீன்கள்.

அதை ஏன் கடலோரத்தில் விற்கிறார்கள் எனத் தெரியாது. ஆனால் அவர்கள்தான் அக்கடலுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருந்தனர். மீன்களை வாங்க எப்போதும் ஒரு கூட்டம் கூடியிருக்கும். சகதியில் முளைத்திருக்கும் காண்டா காட்டிலிருந்து பிடித்து வரப்படும் காண்டா நண்டுகளை வாங்கவும் வெளியூரிலிருந்து ஆட்கள் வருவார்கள். இங்குதான் விலை மலிவாம். காண்டா நண்டுகள் உயிரோடுதான் விற்கப்படும். ஒவ்வொரு முறையும் சாலையைக் கடந்து கடல் கரைக்குள் நுழையும் போதெல்லாம் சேது ஒரு எட்டு எட்டி நண்டுகளைப் பார்த்துவிட்டுதான் செல்வார். கண்ணங்கரேல் என சட்டென ஒரு கற்குவியல்போல காட்சியளித்து பின்னர் அக்கற்கள் அசையத் தொடங்கும். அவற்றில் இரண்டை எடுத்து தனது இரு காதலிகளின் முதுகுகளில் ஊற விட எப்படி இருக்கும் என ஒரு தரம் யோசித்தார். சுபத்திரா உடனே பிடித்துச் சமைத்துவிடுவாள். அவள் கையில் எது கிடைத்தாலும் உடனே சமைத்துப் பார்க்கத்தான் ஆசைப்படுவாள். ஒருமுறை எதையோ சமைத்து வைத்துச் சாப்பிட அழைத்தாள். சாப்பிட்டுவிட்டு சேது வாந்தி எடுத்தபோது அடுத்த முறை எலியை இன்னும் நன்றாக வேகவைக்க வேண்டும் எனக் குறிப்பெடுத்துக் கொண்டாள். உஷா அப்படியில்லை. எடுத்து அதன் கொடுக்கை உறுப்பில் விட்டு தனக்கே அறுவடை செய்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நினைத்தாலே அடிவயிறு கலங்கியது. அவளுக்கு எல்லாமே பதிலுக்குப் பதில்தான். ஒரு முறை ஊடலின்போது செல்லமாகக் கொடுத்த அறைக்கு கொடுத்தாளே திரும்ப இரண்டு. இப்போது நினைத்தாலும் தலை முதுகைப் பார்ப்பதுபோல் இருந்தது. உடல் ரொம்பவும்தான் பலவீனமாகி விட்டது.

பினாங்கில் வாழ்ந்த காலத்தில் பத்து ஃபிரிங்கியில் ஓடுவதுதான் எத்தனை உல்லாசமானது. அப்போதெல்லாம் சேதுவைக் கண்டால் ஒதுங்கிச் செல்லாத கால்கள் இல்லை. சிலர் மட்டும் சலாம் போட்டுச் செல்வார்கள். எப்போது எங்கிருந்து ஆயுதத்தை உருவுவார் எனத் தெரியாது. எதை உருவினாலும் எதை வெட்டினாலும் மறுநாள் இதே கடற்கரையில் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கப் போகிறார் என்பது அவர்கள் நம்பிக்கை. அதிகபட்சம் ஓர் இரவு மட்டும் சிறையில் சேது இருந்ததுண்டு. சம்பளம் கொடுப்பவர் அரசியலில் பெரும் புள்ளி. டத்தோஸ்ரீ பட்டமெல்லாம் பெற்றிருந்தார். சேது அவர் டத்தோவாக இருக்கும்போதே அறிமுகம் ஆகியிருந்ததால் இப்போதுவரை ‘டத்தோ’ என்றே அழைப்பார். டத்தோஸ்ரீ தொகுதியில் இல்லாத காலங்களில் சேதுதான் எல்லாம். எல்லா அரசு அலுவலகங்களிலும் அவர் குரலுக்கு மரியாதை இருந்தது. குத்து மதிப்பாகப் பேசத் தெரிந்த மலாய் மொழியில் தலைவரைத் தேடி வருபவர்களின் சிக்கல்களைத் தீர்த்திருக்கிறார். தலைவரால் முடியாததையும் உடல் பலத்தின் மூலம் அலட்சியம் கொப்பளிக்க அவரால் செய்து முடிக்க முடிந்துள்ளது. அவ்வாறு முடிக்கும் போதெல்லாம் தன்னைக் குறித்த பெருமிதத்தைக் குறையாமல் பாதுகாக்கவும் முடிந்துள்ளது. அதுவே அவருக்கு போதை. “பயங்காட்டுறதுல என்ன கியனோ போ…” என டத்தோஸ்ரீ கூட அவ்வப்போது கிண்டல் செய்தாலும் சேதுவைப்போல ஒருவர் தொகுதியில் இருப்பது தேவையானதாகவே இருந்தது.

கைகளில் நடுக்கம் இப்போதெல்லாம் கொஞ்சம் பகிரங்கமாகவே தெரிய ஆரம்பித்திருந்தது. முன்பெல்லாம் ஒரு கையில் மட்டும்தான் இந்த நடுக்கம் இருந்தது. ஏதாவது வேலை செய்தால் நடுக்கம் தெரியாது. ஓய்வாக விட்டால் அதிரத் தொடங்கும். அதுவும் சில சமயம்தான். இப்போது கை நடுக்கம் என்பது காலையில் எழுந்தவுடனேயே தொடங்கி விடுகிறது. உறங்கும்போது கைகள் நடுங்குகிறதா எனத் தெரியவில்லை. ஒருவேளை நடுங்கினால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பார்த்தார். வேடிக்கையாக இருந்தது. நொண்டி அவர் கைகளின் நடுக்கத்தை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு அது ஒரு விளையாட்டாகத் தோன்றியிருக்கலாம். எப்போதும் சேது சுள்ளியை எடுத்து வீசும் முன் இட வலம் என கைகளை ஆட்டுவார். இந்த நடுக்கம் கைகளைக் கலட்டி வீசுவதற்கு முன்பான சில்மிஷமோ என்ற உஷார் நிலையில் இருந்தது. இன்னும் கொஞ்சம் பொறுத்தால் அதிஉற்சாகமான நொண்டி கைகளைக் கௌவிப் பார்க்கக்கூடும் எனப் பயந்து சேது சுள்ளி ஒன்றை எடுத்து வீசினார். நொண்டி அதைக் கௌவி வர ஓடியது.

‘பர்கின்சன் டிஸிஸ்’ (parkinson’s disease) குறித்து டாக்டர் முதன்முறையாகக் கூறியபோது சீக்கிரம் செத்துடற நோயா என அலட்சியத்துடன்தான் கேட்டார். ஆனால் அப்போது அவர் சொன்ன செத்துடற என்பது ‘தெத்துதுத’ என்று ஒலித்தபோது மௌனமாகக் கீழே குனிந்து கொண்டார். அது டாக்டருக்கும் சரியான சந்தர்ப்பமாகி விட்டது. இந்நோய் கண்டவர்களின் பேச்சு சீரற்று இருக்கும் என்பதில் தொடங்கி மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற நோய் என்பதுவரை தாம் படித்ததையெல்லாம் ஒப்புவித்து ஒருதரம் சரிபார்த்துக் கொண்டார். கூன் வளைந்து, உடல் தளர்ந்துபோய் சக்தியற்றவராய் திரிவது குறித்தான கற்பனைகள் விரிந்த நொடி முதல் எப்போதும் அவர் பேச்சில் துள்ளும் அலட்சியம் விடுபட்டிருந்தது. தூங்குவதற்குச் சிரமப்பட்ட இரவுகளில் டாக்டர் சொன்ன நோய்கூறுகளோடு தன்னை கற்பனை செய்து பார்ப்பார். உடனே குளிக்க வேண்டும் போலத் தோன்றும். குளிப்பதன் மூலம் ஏதோ ஒன்றிலிருந்து விடுபட்டதாக மீண்டும் கற்பனை செய்துகொள்வார். கற்பனைகளும் கொஞ்ச நாட்கள் மட்டுமே சாத்தியமாயின. பத்து ஃபிரிங்கி கடல்கரையில் விலகிச் செல்லாத மனிதர்களும் கிண்டலான சிரிப்புகளும் எதிர்க்கும் குரல்களும் அவர் உடலில் மாற்றங்கள் விரைவாக நடைபெறுவதையும் கற்பனைக்கு இடமற்ற எதார்த்தம் ஆட்கொண்டிருப்பதையும் உணர வைத்தது. ஓடிக்கொண்டிருந்தவர் முதன்முதலாக நடக்க ஆரம்பித்த தினத்தின் இரவில் பெரும் குரலெடுத்து அழுதார். இதுவரை அவ்வூரில் தன்னால் பாதிக்கப்பட்டவர்களை ஒருதரம் நினைத்துப் பார்த்தார். கூட்டிக்கழித்துப் பார்த்தால் இருவருக்கு மட்டுமேதான் பெரும் பாவம் செய்துவிட்டதாகத் தெரிந்தது. இருவரின் இடது கைகளையும் ஆழமான வெட்டால் துண்டித்திருந்தார்.

அது நல்ல போதையில் வெட்டியது. மதுபானமெல்லாம் இல்லை. இது ஐஸ் வகையறா. தயாரித்து முடிக்கவே பல மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால் உழைப்புக்கு ஏற்ற ஊதியம். ஜிவ்வென இருந்தது. பல மணி நேரங்கள் மனமும் மூளையும் யாருக்கும் கட்டுப்படவில்லை. பயம் இல்லை. முக்கியமாக இரக்கம் முற்றிலுமாக வற்றியிருந்தது. வெட்டப்பட்ட இருவர் முகமும் நினைவில் இல்லை.

முதலாமவன் கறுப்புத் தோல். மற்றவன் வெள்ளைத் தோல் என மட்டும் மங்கலான அடையாளம். கறுப்பன் துண்டான கையை உடலில் தொங்கிக்கொண்டிருந்த மீத சதையுடன் ஊக்கில் இணைத்து போலிஸில் புகார் செய்த பின்னரே மருத்துவமனை கட்டிலில் சாய்ந்தானாம். நல்லவேளையாக கை இணைக்கப்பட்டு விட்டதாக ஜாமினில் விட்டபோது போலிஸ்காரர்தான் சொன்னார். வெள்ளைத் தோல்காரன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. அவன் புகார்கூடச் செய்யவில்லை. ஆனால் வெட்டுப்பட்டபோது துண்டான கையை எடுத்துக்கொண்டு அலறியபடி அவன் ஓடியது மட்டும் அப்படியே மனதில் பதிந்துள்ளது. மற்றதெல்லாம் மிரட்டல் மட்டுமே. ஒரு சிலரை அறைந்துள்ளார். ஆனால், ஊரில் அவர் பத்து பேரின் கரங்களை எடுத்ததாகவும் இரண்டு கொலைகள் செய்ததாகவும் அரசல் புரசலாகவும் பேசிக்கொண்டதை ‘இருக்கட்டும் அந்த பயம்’ என விட்டிருந்தார். அப்படி விட்டதுதான் தவறு போல. பாவ புண்ணியங்களை கணக்குப் போடும் முறையில் ஏதோ தவறு ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது.

யாரோ ஒருவனுடன் படுத்திருந்த அவரின் அம்மாவின் இரண்டு கண்களும் அவிந்துபோக வேண்டும் என வேண்டிக்கொண்டு தேங்காய் உடைத்த மறுநாள் அப்பா செத்துப்போனபோதே சாமி இல்லை எனப் பத்து வயதிலேயே அவர் முடிவெடுத்திருந்தார். ஆனால் இந்தப் பாவ புண்ணிய கணக்கு வழக்கு முறையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. பாவ புண்ணியங்களைப் பதிவு செய்வதில் ஏதோ கோளாறு நடப்பதாகத் தோன்றியது. அவர் தந்தையின் மரணத்திலிருந்தே இந்த நியாயமற்ற தண்டனையை அவர் அவதாணித்து வருகிறார். இப்போது அவர் விசயத்திலும் இது சரியாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நிகழும் மரணம் என்பது எவ்வகையிலும் நியாயமற்றது என்பது மட்டுமே அவரைக் கோவம் கொள்ளச் செய்தது. தேடி வருபவர்களுக்கு தான் செய்த உதவிகள் அனைத்தையும் பட்டியலிட்டால் இரண்டு கை வெட்டப்பட்டதெல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றியது. சுபத்திரா, உஷாவோடு தொடர்பு வைத்துள்ளது பாவமா என அவரால் முடிவெடுக்க முடியவில்லை. அப்படியே பாவமாக இருந்தாலும் அது அவர்கள் கணக்கில் வரவேண்டுமே தவிர தன் பட்டியலில் சேர்ப்பது முறையல்ல எனச் சொல்லிக்கொள்வார்.

கேரித் தீவில் இருந்த ஒரு புத்த பிக்குவிடம்தான் தன் பாவக் கணக்கில் பிழை உள்ளது குறித்து அவர் கடைசியாக முறையிட்டார். புத்த பிக்கு அவரை அமைதிப்படுத்தி அமரச் செய்தார். அவருக்கு ஒரு கதை சொன்னார். சேதுவுக்குக் கடுப்பாக இருந்தது. நினைத்த வேகத்தில் அமரவும் எழவும் முடியாத உடல் நிலையில் மெதுவான உடல் இயக்கத்தோடு எழுந்து நடந்த சேதுவை புத்த பிக்கு தடுக்கவில்லை.

பாவ புண்ணிய கணக்குகளில் எவ்வளவு அலட்சியங்கள் நடைபெறுகின்றது என நினைக்கும்போது வருத்தமாக இருக்கும். டத்தோஸ்ரீயை நாடிவரும் தொகுதி மக்களின் சிக்கலைத் தீர்க்க அரசு அலவலகங்களில் ஏறும்போதெல்லாம் அதிகாரிகளிடம் அவர் பார்க்கும் அலட்சியத்தின் காட்சி ஒரு தரம் மனதில் ஒளிபரப்பானது. அனுப்பிய கடிதங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, ஒரு கையொப்பத்துக்காக மாதக்கணக்கில் காக்க வைப்பது, தவறான தகவலை வழங்கிக் குழப்புவது, தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலில் உள்ள பெயரை இல்லை எனச் சொல்வது, அழைப்பை எடுக்காமல் புறக்கணிப்பது, தாமதமாக கடிதம் அனுப்புவது என எத்தனை எத்தனையோ அதிகாரிகளின் தவறுகளால் எளிய மக்கள் அவஸ்தைப்படுவதை அவர் பார்த்துள்ளார். அவ்வாறு தவறு செய்யும் அதிகாரியைக் கண்டுபிடித்தால் அவர் விட்டு வைத்ததில்லை. போடும் சத்தத்தில் இயக்குனரே வந்து மன்னிப்பெல்லாம் கேட்டதுண்டு. இப்போது பாவ புண்ணியக் கணக்கில் நிகழும் தவறுக்கு எந்த அதிகாரியிடம் முறையிடுவது எனத்தெரியவில்லை.

சூரியன் பின்னே இருந்தபடியால் அவரது நிழல் அவருக்கு முன்னே சென்றுகொண்டிருந்தது. சில சமயம் அவர் தன் நிழலைப் பின்தொடர்ந்து செல்வதாகவே தோன்றும். கூடவே நொண்டியின் நிழலும் வந்துகொண்டிருந்தது. நொண்டியின் நிழல் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முழுதும் கறுத்த உரோமங்களைக் கொண்ட நொண்டி அவருக்கு எப்போதுமே நடமாடும் நிழலாகத்தான் தெரியும். இன்று நிழலில் நிழலைப் பார்ப்பது விசித்திரமான அனுபவத்தைக் கொடுத்தது. நிழலில் நொண்டி தனக்கு ஈடான உயரத்தில் இருப்பதாகப் பட்டது. நிழலில் அவரது தலையைப் பார்க்கமுடியவில்லை. கூன் விழுந்த முதுகின் மேற்பரப்பிலிருந்து உடல் தொடங்குவதுபோல தோற்றம் கொடுத்தது. உடலைக் கொஞ்சம் நிமிர்த்த முயன்றார். நொந்தது. ஒரு சுள்ளியை எடுத்து வீசியதும் நொண்டி அதைக் கௌவி வர ஓடியது.

பந்திங்கில் இருந்த டத்தோவின் வீடொன்றில் தங்கிகொண்டு வீட்டையும் பாதுகாக்க வாய்ப்புக் கிடைத்த போது ஏழு மணிக்கெல்லாம் இறந்து விடும் அந்த நகரம் ஒருவகை மன நிம்மதியைக் கொடுத்தது. நிசப்தமும் இருட்டும் மரணத்தை நியாயப்படுத்த உதவின. செய்வதற்கும் அதிக வேலையில்லை. வீட்டைப் பார்த்துக் கொள்வதென்பது ஒரு வேலையே இல்லை. வீடு ஓடுவதில்லை. அதற்குப் பசிப்பதில்லை. மாலை நேரம் வாக்கிங் போக அழைப்பதில்லை. உடல் உறவுக்கு ஏங்குவதில்லை ஆனால் கழிவுகளை மட்டும் வெளியேற்றும் விசேச குணம் உண்டு. மனித மனத்தைப் போல வீட்டுக்குள்ளும் எங்கிருந்து ஒட்டடைகள் அண்டுகின்றன எனக் கண்டுபிடிப்பதே சிக்கல். கழிவுகளை அகற்றுவதும் சேதுவுக்கு பழக்கமானதுதான். கம்பத்தில் இருந்த பொதுக் கழிவறையில் தேங்கியுள்ள மலத்தொட்டியை நாளுக்கு இரண்டு முறை சுமந்து சென்று தோட்டக்காரனிடம் கொடுத்தால் எறுவுக்கான பணமாக இரண்டு ரிங்கிட் தருவான். தொட்டியைச் சுமந்து செல்லும்போது உள்ளே தழும்பும் மலம் வெளியில் சிந்திவிடுமோ என பயமாக இருக்கும். ஒரு கூட்டுக் கலவையில் அது கொடிய நெடியைப் பரப்பும். கொஞ்ச நாட்களில் அது பழகி மூக்கில் துணி கட்டாமல் வேலையை நகர்த்தும் அளவுக்கு சேது தேறியிருந்தார். அதோடு ஒப்பிடுகையில் தூசியைத் தட்டுவதையும், ஒட்டடையை அகற்றுவதையும் ஒரு வேலையாக மாற்றி மாதம் தவறாமல் கணிசமான தொகையையும் கொடுத்துவரும் டத்தோவை மனதில் கோயில் கட்டி கும்பிட்டு வந்தார். பக்கத்தில் அவருக்குச் சக்தியாக எந்த மனைவியை நிற்க வைப்பது என்பதில் அவருக்குக் குழப்பம் இருந்தாலும் கடவுளுக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும் பிரச்னை இல்லை என்பதால் முன்னுக்கு இருவரையும் பின்னுக்கு இருவரையும் கற்பனை செய்துகொள்வார்.

“வேகமாக ஓடி வந்தான் இளைஞன். அவனைக் கொல்ல பின்னே ஒருவன் துரத்தி வந்தான். ஒரு முச்சந்தி. அதன் நடுவில் ஒரு துப்பாக்கிக் கிடந்தது. உள்ளே ஒரே ஒரு புல்லட். எதிர்ப்புறம் உலகமே தேடிக்கொண்டிருக்கும் தீவிரவாதி அங்கே பேருந்துக்காகக் காத்திருக்கிறான். உலகமே தேடும் தீவிரவாதி ஏன் பேருந்துக்குக் காத்திருக்கிறான் எனக் கேட்காதே. இது கதை எதுவும் நடக்கும். கையில் துப்பாக்கியை எடுத்த இளைஞனுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் உண்டு. ஒன்று தன்னைப் பின் தொடரும் கொலைகாரனைக் கொல்ல வேண்டும் அல்லது தீவிரவாதியைக் கொல்ல வேண்டும். அவன் நின்ற இடம் சுட்டெரித்தது. வானம் பிளந்துகொண்டு அக்கினியைக் கக்கியது. பூமி நடுங்கியது. இரண்டே முடிவுதான் உண்டு. ஒன்று அவனுக்கானது மற்றது உலகுக்கானது. இரண்டுக்குமே ஒரே செயல். ஏதாவது முடிவெடுத்தே ஆக வேண்டும்….”

புத்த பிக்குவை இப்போது நினைத்தாலும் கடுப்பாகத்தான் இருந்தது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கதை கூறி அவர் தப்பித்துவிட்டதற்காக ஒருதரம் அவரைக் கெட்ட வார்த்தையில் திட்டினான். பின்னர் அதுவும் பாவக் கணக்கில் சேர்ந்து விடுமோ என்ற அச்சம் தோன்ற மறுநாள் அவருக்கு இரண்டு ரிங்கிட் கொடுத்து சமன் படுத்திவிடலாம் என முடிவெடுத்தான். அடிக்கடி நினைவுக்கு வரும் அந்தக் கதை எரிச்சலடையச் செய்தது. நல்லக் கதை என சேது ஒரு சுள்ளியை எடுத்து கடல் நோக்கி வீசினான். நொண்டி அதைக் கௌவி வர ஓடியது.

இன்னும் வெகுதூரம் இருந்தது. எப்போதோ யாரோ நட்டு வைத்த ஒற்றைக் கம்பு வரைதான் பயணம். அங்கிருந்து வெளியேறினால் மற்றுமொரு சாலை. உள்ளே நுழைந்தபோது குறுக்கிடும் தார் சாலைக்கும் இதற்கும் தொடர்பில்லை. நேராக நகரத்தினுள் செல்லும் நெடுஞ்சாலை; அதிக பரபரப்பானதும் கூட. இரு வளைவுகளுக்கு நடுவில் உள்ள ஐம்பது மீட்டர் இடைவெளி. கொஞ்சம் இறக்கமான பாதை என்பதால் மோட்டார் ஓட்டிகளுக்குக் கொண்டாட்டம். வேகத்தைக் குறைக்காமல் வளைந்து நெளிந்து அந்தச் சாலையில் புகையைக் குவித்து விடுவார்கள். நெடுஞ்சாலையைக் கடந்தால் பழக்கடை. நெடுஞ்சாலையைக் கடப்பது அவ்வளவு சுலபமல்ல. இடையில் இரும்பாலான ஒரு தடுப்பு இருக்கும். இரு புற சாலைகளையும் பிரிக்கும் தடுப்பு. அதை லாவகமாகத் தாண்டி அடுத்த சாலையைக் கடக்க வேண்டும். சற்று சவாலானது என்றாலும் வந்த பாதையில் திரும்பி போவதைவிட இது எளிது. நடைப் பயணத்தின்போது வந்த பாதையில் மீண்டும் நடப்பது பயணத்தின் சுவாரசியத்தைக் கெடுக்கும். மேலும் அவரின் உடல் வலு மீண்டும் சில கிலோ மீட்டரைக் கடக்க ஒத்துழைக்காது. இதுவே குறுக்குவழி.

பழக்கடையில் எப்போதும் குமட்டிப்பழ நீரை வாங்கிப் பருகிவிட்டு இரு பப்பாளித்துண்டுகளை வாங்கி கடித்துக்கொண்டே கொஞ்ச தூரம் நடந்தால் படிக்கட்டு வரும். சரியாக 42 படிக்கட்டுகள். இறங்கியவுடன் புற்கள் நிறைந்த சம தரை. அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து கால்களைப் பிடித்துவிட்டுக் கொள்வார். திடலுக்கு அடுத்து இருக்கும் குடியிருப்புப் பகுதியில்தான் அவர் காவல் காக்கும் வீடு இருப்பதால் மனம் சொல்லும் வரை வீட்டிற்குள் நுழைய அவசரப்படுவதில்லை. கைகளை இறுக்க மூடிப் பார்ப்பார். நேற்றைக்குவிட இன்று உடல் பலவீனம் அடையவில்லை எனத்தோன்றும். முன்பைவிட உடல் தேறிவிட்டதாகக் கூட இருக்கும். பாவ புண்ணிய கோப்புகள் மீண்டும் உயர் அதிகாரிகளால் சோதிக்கப்பட்டு சரிபடுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழும். அந்தச் சந்தேகம் அன்று முழுதும் வாழ்ந்ததற்கான திருப்தியைக் கொடுக்கும். தான் யாருடைய உயிரையும் இதுவரை எடுத்ததில்லை என்றும் அவையனைத்தும் வதந்திகள் எனவும் உரக்கச் சொல்வார்.

இன்றென்னவோ அதிக நேரம் நடந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. கொஞ்ச நேரம் உட்காரலாமா எனத் திரும்பியவுடன்தான் நொண்டியைப் பார்த்தார். இன்று அதனிடம் எந்த உத்தியும் வேலைக்கு ஆகவில்லை. ‘இவ்வளவு போதும் எம்பின்னால வராத… போடா ந’ எனக் கையை வீசினார். நொண்டி ஒரு அடி பின்னால் எடுத்து வைத்து மீண்டும் இரண்டு அடி அருகில் வந்து நின்றது. அதன் அதி உற்சாகம் ஒரு காலை இழந்தபின்னும் குறைவதாய் இல்லை. யாரோ மொக்கையாகிவிட்ட முன்புற இடது காலில் துணியைச் சுற்றிவிட்டிருந்தார்கள். அதில் அவ்வப்போது ஈ மொய்த்துப் பதற்றத்தில் பறந்துகொண்டிருந்தது.

நொண்டி நொண்டியானபோது சேது அங்குதான் இருந்தார். அதற்குமுன் வரை அதற்குப் பெயரில்லை. கடற்கரை பரப்பு அனைத்தும் தனக்கே சொந்தமானது போல அத்தனை உற்சாகமாய் ஓடிக்கொண்டிருக்கும். பசியுடன் அலைந்தோ சோர்ந்துபோய் படுத்திருந்தோ சேது இதுவரை அதைக் கண்டதில்லை. மீன், நண்டு வாங்க வரும் அனைவருமே அதன் உபசரிப்புக்கு ஏற்றவர்கள்தான். மோட்டாரில் வருபர்கள்தான் அதற்கு நெருக்கமானவர்கள். மோட்டார் வண்டி அதற்கு வினோத விலங்காகத் தெரிந்திருக்க வேண்டும். மோட்டாரை நகர விடாமல் சுற்றிச் சுற்றி வட்டம் அடிக்கும். அப்படி ஒருநாள் அதன் அதி உற்சாக விளையாட்டில் நகரும் மோட்டார் வண்டி சக்கர கம்பிகளுக்கு நடுவில் காலை விட்டதும் சக்கர சுழற்சியில் காலின் மூட்டுக்குக் கீழ்ப் பகுதி துண்டானது. அப்போதுதான் சேது அதன் உச்சமான குரலை கேட்டிருந்தார். அது மனிதக் குரல். கறுப்பனும் வெள்ளையனும் கூட இப்படித்தான் கரங்களை இழக்கும்போது கத்தினார்கள். உயிரின் வலி எல்லோருக்கும் ஒன்றுதான் போல. அதற்குப் பின்னர் அதன் பெயர் நொண்டியானது. காலை இழந்த சில நாட்களிலேயே நொண்டி பழைய உற்சாகத்துக்குத் திரும்பிவிட்டது. மோட்டார் சைக்கிள் மேல் அதற்கு இன்னமும் ஈர்ப்பு இருந்தது.

நொண்டி தன்னை தோழனாக ஏற்றுக்கொண்டதை சேதுவால் வெகு எளிதில் அறிய முடிந்தது. தொடக்கத்தில் அவர் நொண்டியின் தோழமையை ஏற்கவில்லை. அதன் அதி உற்சாகமான செயல்பாடுகளுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியாது என அறிந்திருந்தார். சில சமயம் அதைப் பார்த்து பொறாமையாகக்கூட இருக்கும். கால்கள் உடைந்தபின்தான் சேது அதனிடம் நட்புக்கரம் நீட்டினார். ஆனால் அதன் வேகம் குறையவில்லை. நீளம் குறைந்திருக்கும் நான்காவது காலைக் கொண்டே பழைய வேகத்தை அதனால் நிறைவு செய்ய முடிந்தது. சில தினங்களிலேயே அது தன் ஊனத்தை மறந்திருந்தது. சேதுவிடம் அதன் சேஷ்டைகளுக்கு கிடைக்கும் எதிர்வினைகள் அனைத்தும் அதை இன்னும் உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும் வழக்கமான தனது எல்லையை மீறி அது சேதுவைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.

நொண்டியின் எல்லையை சேது அறிவார். தனது சிறுநீர் தெளிப்பின் மூலம் அது தன் எல்லையை வகுத்திருந்தது. வளைந்து மணலை உரசும் தென்னமட்டைதான் வழக்கமாக அது சேதுவுடன் வரும் எல்லை. இன்று அது முன்னேறியிருந்தது. ஒருவித பாதுகாப்பின்மையின் பதற்றத்துடன்தான் அது இருந்தது. வழக்கமான எல்லைக்குள் என்றால் அது சேதுவை முந்திக்கொண்டு சென்றிருக்கும். இப்போது பின் தொடர்ந்து வந்தாலும் அதன் அதிஉற்சாகம் குறையவில்லை. அவ்வப்போது ஏதாவதொன்றை வாயில் கௌவி முன் ஒன்றரை கால்களை பூமியில் படுக்க வைத்து, மணலைக் கிளறி பின் அடுத்த ஒன்று கவனத்தை ஈர்த்தவுடன் இதை விட்டு அதை எடுத்து என ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது. சேதுவுக்கு அதன் தலையைத் தடவ ஆவல்தான். கொஞ்சலை ஏற்கும் நிதானமெல்லாம் அதனிடம் இருப்பதாகத் தோன்றவில்லை. தொட்ட அடுத்த நிமிடத்தில் வாயில் கௌவியுள்ள சுள்ளியைப் பறித்து சேது விளையாடுவதாக எண்ணி மணல் தெறிக்கப் புரளலாம். அல்லது வலிக்காத படி விரல்களை கௌவி எச்சில் செய்யலாம். எதுவாக இருந்தாலும் சேதுவால் இப்போதைக்கு அதைச் சமாளிக்க முடியாது. மிருதுவான தன் அன்பை ஏற்க முடியாத நொண்டியிடம் அவர் எதையும் செய்யத் தயாராக இல்லை. பயணத்தின் தூரம் கூடவும் நொண்டி தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு சந்தேகத்துடன் பம்பிச் செல்லத் தொடங்கியது. மெது நடையின்போதுதான் அது தன் கால் ஊனமானதை அறிந்தது போல மூன்று கால்களில் நடக்கும் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது.

சேது வழக்கமாக கடக்கும் சாலைக்கு வந்திருந்தார். எல்லோருக்கும் வீட்டுக்குள் சென்று அடைந்துவிடும் அவசரம் இருப்பதை அந்த மாலை வேலை வாகனங்களின் வேகம் வெவ்வேறு மொழிகளில் சொல்லிக்கொண்டிருந்தது. சேது திரும்பிப் பார்த்தார். நொண்டி அலாதி உற்சாகத்துடன் நின்றுகொண்டிருந்தது. அந்த ஐம்பது மீட்டர் இடைவெளியில் தோன்றி மறையும் மோட்டார் வண்டிகளைப் பார்த்து ஆவல் பொங்கக் குரைத்தது. சேது ஒரு சிறிய சுள்ளியை எடுத்து நொண்டியை நோக்கி வீசினார். அது அதன் உடலில் பட்டு எதிர் திசையில் விழுந்தவுடன் நொண்டிக்கு அச்சுள்ளி ஒரு விளையாட்டுப் பொருளாகி விட்டது. சற்று நேரம் அதைக் கடித்து விளையாடி மீண்டும் சேது பக்கத்தில் வந்து நின்றது. சிறிய குச்சியை எடுத்து வீசியதற்கே சேதுவுக்குச் சோர்ந்து விட்டது. மூச்சு வாங்கியது. மீண்டும் கீழே குனிந்து எதையாவது தேடினார். ஒரு கல் கிடைத்தது. வீசினார். நொண்டியின் மேல் பட்டதும் மணல் துகள்களாகச் சிதறியது. நீர் பட்டதுபோல நொண்டி உடலை முறுக்கி உதறியது. அதன் உற்சாகம் கூடியது. சேது சாலையைக் கடக்க முயன்றபோது அதே உற்சாகத்துடன் பின் தொடர்ந்தது.

சேதுவுக்கு சாலையைக் கடக்கத் தயக்கமாக இருந்தது. அதி உற்சாகமான நொண்டி நிச்சயம் எவ்வித ஜாக்கிரதை உணர்வும் இன்றி தன்னைப் பின் தொடரலாம். பரபரப்பான இந்தச் சாலையில் அதன் விளையாட்டு விபரீதமாகி ஏதேனும் ஒரு மோட்டார் வண்டியின் முன் பாய்ந்து மாய்ந்துபோகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சேது மீண்டும் ‘சூ…சூ…’ என சொல்லிப் பார்த்தார். ஒரு தரம் காதை விடைத்து வேடிக்கையாகப் பார்த்து பக்கத்தில் அமர்ந்து கொண்டது. சாலையில் வாகன வேகம் குறையவில்லை.

நொண்டி அமைதியாக அமர்ந்திருந்த நேரம் சேது மெல்ல முன்னோக்கி அடி எடுத்து வைத்தார். நொண்டியும் எழுந்து சாவகாசமாக அடியெடித்து வைத்தது. சேதுவுக்கு நிச்சயமாகத் தெரியும் அவரால் அதை தூக்கிக்கொண்டோ இழுத்துக்கொண்டோ ஓட முடியாது. அதற்கான பலம் அவரிடம் இல்லை. இதற்கு முன் தன்னால் கைகள் வெட்டப்பட்ட இருவரை ஒருதரம் நினைத்துக்கொண்டார். திரும்பிப் பார்த்தால் கடல். தன்னால் இதுவரை யாரும் சாகவில்லை… பாவ புண்ணியக் கணக்கு முறையில் கோளாறு என ஒலியெழுப்பாமல் ஒருதரம் கூறினார். மூச்சு வாங்கியது. பின்னர் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தார். அவ்வாறு பார்ப்பது அதுதான் முதன் முறை. நீண்டு விரிந்து கிடந்த பாதை பயமுறுத்தியது.

(Visited 129 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *