அன்புள்ள ம.நவீன்,
கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் மலாயா பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன் அவர்கள் என்னைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டார்கள்.
மலாயா பல்கலைக் கழகமும் அறவாரியம் ஒன்றும் இணைந்து மலேசிய இலக்கியவாதிகளின் நூல்களை அச்சிட்டு வெளியீடு செய்யவுள்ளோம். நமது எழுத்தாளர்களின் நூல்கள் பரவலாக மக்களை (வாசகர்களை) சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசமாக இதனைச் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் முறையாக இவ்வாண்டு டிசம்பரில் (2011) ஓர் ஐந்து எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து வெளியிட உள்ளோம். சிறுகதைத் தொகுப்புக்கு உங்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தயவு செய்து உடனடியாக சிறுகதைகளை அனுப்பி வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்
என்னுடைய சிறுகதைத் தொகுப்பொன்றை 2012ல் வெளியிடும் நோக்கத்தில் நான் இருந்ததால் முனைவர் இராஜேந்திரன் அவர்களிடம் அதனைத் தெரிவித்து, அந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து, “எனக்கு பொருளாதாரப் பிரச்சனை இல்லை, எனது சொந்த செலவில் வெளியிடவே விரும்புகின்றேன்” எனத் தெரிவித்தேன்.
இந்நூல் பரவலாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசமாக வெளியீடு செய்யவிருப்பதால் தயவு செய்து மறுக்காதீர்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.
இலக்கிய உலகுக்கு இந்நூல்கள் இலவசமாக கொண்டு செல்லப்படுகிறது என்ற செய்தி என்னைக் கவர்ந்ததென்னவோ உண்மை. மலேசிய இலக்கிய உலகில் இதுவரையில் கேள்விப்படாத புதிய வார்த்தை இது. அதன் பின்னர் தான் எனது சிறுகதைகளை அனுப்பினேன்.
எனது நூலில் காணப்பட்ட அளவுக்கதிகமான எழுத்துப் பிழைகள், அதன் விளைவான கருத்துப் பிழைகள் குறித்து முனைவர் அவர்களிடம் உடனடியாக கேள்வி எழுப்பினேன். முனைவர் அவர்கள் நூல் அச்சிடும் போது எதிர் கொண்ட பிரச்சனைகள் குறித்து என்னிடம் விளக்கம் அளித்தார். அவ்விபரம் இங்கு தேவையில்லாதது
23-11-2012ஆம் ஆண்டில் வெளியீடு காணவிருந்த சக்தி அறவாரியத்தின் 10 நூல்களின் வெளியீட்டில் கலந்து கொள்வதற்கு இலக்கிய ஆர்வலர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதற்காக அனைத்து மாநிலங்களுக்குமாக 10 பேருந்துகள் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கெடா மாநிலத்திற்கு ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வந்தது.
இச்செய்தி வந்த மறுநாள் எழுத்தாளரும், கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் முன்னாள் செயலாளருமாகிய திரு.கே.பாலமுருகன் தொலை பேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.
மலேசியாவில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்திருக்கும் தமிழக இலக்கியவாதி சாரு நிவேதிதா அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு இயக்கம் ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். நானும் அதற்கு சம்மதித்து ஏற்பாடு செய்வதாக ஒப்புக் கொண்டேன்.
22-11-2012ல் மாலை மணி 6.30க்கு நிகழ்ச்சியை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பரவலாக செய்தி சென்றடைய பாலமுருகன் தமது முகநூலில் தெரிவிப்பதாகச் சொன்னார். நான் இயக்க சார்பாக வழக்கம் போல் தொலைபேசியில் தொடர்பு கொள்ள ஏற்பாடாகியது.
1
எங்களின் அவ்வுரையாடலின் போது சக்தி அறவாரியத்தின் நூல் வெளியீடு பற்றியும், கெடா மாநிலத்திற்கான பேருந்து ஏற்பாடு பற்றியும் தெரிவித்தேன். பாலமுருகன், சாரு நிவேதிதா இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சிப் பற்றியும் தமது முகநூலில் வெளியிடுவதாக தெரிவித்தார்.
அதற்கடுத்த நாள் தான் நீங்கள் என்னை அழைத்து பாலமுருகன் முகநூலில் எழுதியிருந்த நூல் வெளியீட்டிற்கான பேருந்து பயணம் பற்றி விளக்கம் கேட்டீர்கள். நானும் சொன்னேன். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் என்னை அழைத்து தனேந்திரன் ஹிண்ட்ராபை அழித்த துரோகி. அவர் தலைமையிலான புத்தக வெளியீட்டிற்கு நீங்கள் போகக் கூடாது, அதற்கான ஏற்பாடுகளையும் செய்யக் கூடாது. இல்லையென்றால் நான் கடுமையாக உங்களைப் பற்றி எழுதுவேன் என எச்சரிக்கை விடுத்தீர்கள்.
சொன்னபடியே 16-11-2012ல் வல்லினத்தில் ”ம.நவீன் பக்கம்” எனும் உங்களின் சொந்த எழுத்துகள் இடம்பெறும் பகுதியிலேயே எழுதி இருக்கிறீர்கள். அதனை நான் பிறகு தான் அறிய வந்தேன். காரணம், எனது அருமையான பொழுதுகளின் நகர்வுகள் எனக்கு மிக முக்கியமானவை. வெட்டிப் பொழுதுகளுக்கு அதில் இடமிருப்பதில்லை.
அதற்கு முன், எனக்கான உங்களின் கண்டன கணைகள் எய்யப்பட்ட செய்தியை கவனிக்காமல், 22-11-2012ல் நடைபெறவிருந்த சாரு நிவேதிதா உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் இறங்கியிருந்தேன். இலக்கியவாதிகள் சிலருக்கு தொலைபேசி வழி அழைப்பு விடுக்கப்பட்டது. இடையிடையே பாலமுருகனுடன் நிகழச்சி விபரம் பற்றி பேச தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது எனது அழைப்புகளுக்கு அவரிடமிருந்து பதில்லை.
ஆரம்பத்தில் 20-11-2012ல் கோலாலம்பூரில் நடைபெறும் சாரு நிவேதிதா இலக்கிய நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில், ஓய்வில்லாத சுழலில் பதில் சொல்ல அவகாசம் இல்லாமலிருக்கலாம் என சாதாரணமாக நினைத்தேன். 21-11-2012ல் சாரு நிவேதிதா அவர்களை சுங்கை பட்டாணிக்கு அழைத்து வருவதாகவும் மூன்று நாட்கள் அவர் இங்கு தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பாலமுருகன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 16-11-2012 முதல் 21-11- 2012ஆம் நாள் இரவு 9.00 மணிக்கு கூட எனது பல தொலைபேசி அழைப்புகளுக்கு பாலமுருகனிமிடருந்து பதில்லை. அதன் பின்னர் அவரின் முகநூலை பார்த்தபோது முந்தைய செய்திகள் இரண்டும் அழிக்கப் பட்டிருந்தன. மாறாக 21,22,23 ஆகிய மூன்று நாட்களும் என்னுடன்
தங்கியிருப்பார் (சாரு நிவேதிதா). ஆர்வமுள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்ற செய்தி மட்டும் பாலமுருகனின் முகநூலில் காணப்பட்டது.
செயலவை உறுப்பினர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு சூழ்நிலைப் பற்றித் தெரிவித்தேன். நவீனின் எச்சரிக்கையும், பாலமுருகனின் மௌனமும் ஒன்றுக் கொன்று தொடர்புடையது என்பதை செயலவை உறுப்பினர்கள் சிலர் சுட்டிக் காட்டினர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டு இறுதி வரையில் எந்த முன்னறிவிப்பும் தெரிவிக்காது (நிகழ்ச்சி நடக்க வாய்ப்பில்லை என ஒரே ஒரு வார்த்தை கூட) முன்னறிவிக்காது அப்படியே கைவிட்டு, இயக்கத்தை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டு பாலமுருகன் ஏன் மறைந்து கொண்டார் என்பதற்கான விடை, மர்மம் உங்கள் “நவீன்பக்கத்தை” படித்தபோது தெள்ளென புரிந்தது!
சக்தி அறவாரியத்தின்… உங்கள் பார்வையில் “சோரம் போன” அந்த இயக்கத்தின் நூல் வெளியீட்டிற்கு ஆள் பிடித்து அனுப்பும் இயக்கத்தின் மீதான திட்டமிட்ட பழி வாங்கும் படலமும், இயக்கத்தின் தோற்றத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் திட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் தாராளமாகவே மகிழ்ச்சி கொள்ளலாம். நாளைய மலேசியத் தமிழ் இலக்கியத்தை அடுத்தக் கட்ட நகர்ச்சிக்கு கொண்டு செல்லவிருக்கும், நேர்மையும், பிரச்சனைகளை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் வீரமும் தீரமுமிக்க இலக்கிய இளைஞர்களே! உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இனி என் மீது நீங்கள் சுமத்திய குற்றச் சாட்டுகள்….
வல்லினத்தில் ” நவீன் பக்கம் ” படித்த போது இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லி எனது அருமையான பொழுதில் சிறிதை வீண்டிக்க வேண்டுமா என பெரிதும் யோசிக்க வேண்டியிருந்தது.
2
ஆனாலும் பதில் சொல்லாமல் விடுத்தால், நான் பயந்து மிரண்டு எங்கேயோ போய் ஒளிந்து கொண்டதாக….” சரி! எழுதி விடுவோம்” என்று இறுதி முடிவெடுத்து எனது பொழுதை வீணடித்த வருத்தத்தில்….
” பல முக்கியமான ஆளுமைகள் அலங்கரித்த கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைமை பதவியில் இன்று இருக்கும் க.பாக்கியம் அவர்களுக்கு இந்த அரசியல் சூழல் தெரியாதா?” உங்கள் கேள்வி இது.
” பல முக்கியமான ஆளுமைகள் அலங்கரித்த ” என்று இன்று சந்தர்ப்பத்திற்கேற்ப வார்த்தயாடும் நீங்கள் அந்த ஆளுமைகளை அப்போது மதித்ததுண்டா? அவர்களை குறிவைத்த உங்களின் தாக்குதல்களை அவர்கள் மறந்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா? அந்த வரிசையில் இன்று நான்…! தாக்குவதையும் கேள்விகள் எழுப்புவதையும் தவிர்த்து இலக்கு வேறு ஏதேனும் உங்களுக்கு இல்லை என்பது மலேசிய இலக்கிய உலகம் அறிந்தது தானே நவீன்!
இத்தகைய இலக்கைக் கொண்டு தானே மிகப் பெரிய ஆளுமையாக உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்ள பெரிதும் முயன்று வருகிறீர்கள் என்பதும் பரவலாக இலக்கிய உலகில் நிலவி வரும் செய்தி தான்.
“இந்த அரசியல் சூழல் தெரியாதா?” என்ற உங்கள் கேள்விக்கு எனது பதில் “நான் கிணற்றுத் தவளை அல்ல…!” என்பது தான்.
நவீன்! என்னை நோக்கிய உங்களின் கேள்விகளில் ஒன்று.
“இப்போது பேருந்தை இலவசமாக அனுப்புகிறார்கள் என்பதற்காக கூட்டம் பிடித்துப் போகும் நீங்கள், நாளை எந்த மோசமான அரசியல் விழாவுக்கும் இதையே செய்வீர்களா…?”
நவீன்!
வாழ்க்கையில் ஒரு முறை ஒரே ஒரு முறை மட்டுமே ஓர் அரசியல் கூட்டத்திற்கு சில வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன். எங்கள் ஊர் சீனப்பள்ளி மண்டபத்தில் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியின் தலைமையில் நடந்த கூட்டம் தான் அது.
“மோசமான அரசியல் விழாவிற்கும் ஆள் சேர்த்து போவீர்களா” என்ற கேள்வி உண்மையில் எனக்குப் புரியவில்லை” மோசமான அரசியல் விழா” என்றால் என்ன?
அதற்கு (அரசியல் சாராத) எனக்கு ஏன் இலவச பேருந்து வழங்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் என்ன பைத்தியக்காரர்களா? அல்லது கோமாளிகளா? கூட்டம் சேர்த்து அழைத்து வர எனக்கு பேருந்து அனுப்புவதற்கு?
நவீன்! மோசமான அரசியல் கூட்டத்திற்கு ஆள் பிடித்து சென்ற அனுபவம் உங்களுக்கு இருக்கும் என நம்புகின்றேன். அதனால் தான்
மோசமான அரசியல் விழா….
ஆள் பிடித்து போதல்….
என உங்களால் பேச முடிந்திருக்கிறது என்றால் அத்தகைய விழாக்களில் என்ன ” மோசங்கள்” நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதில் நேரடி அனுபவம் இல்லாமல், என்னை நோக்கி அந்தக் கேள்வியை நீங்கள் வீசியிருக்க முடியாது.
உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள். நானும் கொஞ்சம் தெரிந்து கொள்கிறேன் உங்கள் தயவில்.
இங்கு நான் உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. நான் ஓர் இலக்கிய அமைப்பின் தலைவர். எனவே, எனக்குத் தெரிவிக்கப்படும் இலக்கிய முன்னெடுப்புகள் குறித்து இலக்கியம் சார்ந்தவர்களுக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் அறிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு.
3
இங்கே என் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை, ஒரு தலைவராக மட்டுமே சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியது எனது கடமை. முடிவெடுக்கும் பொறுப்பு அவரவர்களுடையது. ஏன் எங்களுக்கு அறிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய களத்திலும் நான் நிற்கிறேன். இப்போது உங்களுக்குப் புரியும் என நம்புகிறேன்.
மேலும் ஒன்று…. எனக்கு மட்டும் தானே உங்களின் இந்தக் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டது. மற்ற மாநில இலக்கிய அமைப்புகளுக்கு உங்களின் எதிர்ப்புக் குரல் ஒலியடங்கி போனது ஏன்?
” விழிப்புணர்வு அற்ற உங்களால் சமூகத்துக்கு ஏதும் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” இது உங்களின் தொடர் கேள்விகளில் ஒரு பகுதி.
இதற்கு பதில் சொல்லுமுன் என் கேள்வியையும் சற்று படித்துப் பாருங்களேன்!
நவீன்! சமூக அநீதிகளுக்கானப் போராட்டத்தில் ஒரு முறையாவது காவல் துறைப் படிகளை மிதித்திருக்கிறீர்களா? காவல் துறைப் படிகளைத் தாண்டி நான் ஒரு முறை அல்ல பல முறை சென்றிருக்கிறேன். பல மணி நேரம் விசாரணைக்கு உட்பட்டிருக்கிறேன்.
அது சரி நவீன்!
ஒரு முறையாவது ஓர் அநீதிக்கு எதிரான போராட்டத்தில் நீதிமன்ற படிகளில் உங்கள் கால்கள் தடம் பதித்திருக்கின்றனவா? என் கால்கள் தடம் பதித்திருக்கின்றன. ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல. தொடர்ந்து பல ஆண்டுகள்.
உங்களிடம் மற்றொரு கேள்வி!
இன்றைய தமிழ் சினிமாவில் தவறாமல் தொடர்ந்து காட்சிப்படுத்தும் “கேங்ஸ்டரிசம்”, கொலை மிரட்டல் போன்றவற்றை நீங்கள் நேருக்கு நேர் எதிர்கொண்டிருக்கிறீர்களா? நானும் என் குடும்பமும் ஒரு முறை அல்ல பலமுறை சந்தித்திருக்கிறோம். சமூக அநீதிகளுக்கானப் போராட்டத்தில் களம் இறங்கியது தான் காரணம்.
அடுத்து எனது விழிப்புணர்வு பற்றி கேள்வியெழுப்பியிருந்தீர்கள். ” உங்கள் பார்வையிலான” விழிப்புணர்வு நிச்சயமாக என்னிடம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
அதே வேளை… உங்கள் விழிப்புணர்வு பற்றியும் நான் யோசித்து பார்த்தேன். சரியாக இருக்குமா அல்லது தவறான சிந்தனையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
” துரோகம் எனக் கூறும் நீங்கள் இந்த ஓராண்டாக என்ன செய்தீர்கள்? இளைஞராகிய நாங்கள் களத்தில் இறங்கி இந்த வெளியீட்டை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா?” என நான் (உங்கள் தொலை பேசி அழைப்பில்) கேட்டதற்கு ” அப்போது நான் கடுங்கோபத்தில் இருந்தேன்”. டாக்டர் சண்முகசிவா அவர்கள் என்னை எழுத வேண்டாமென கேட்டுக் கொண்டார்கள் அதனால் தான் எழுதவில்லை என்றீர்கள்.
இது தொடர்பாக…..! கடுங் கோபத்தில் ஓராண்டாக (23-11-2011) கொதித்துக் கொதித்து அதன் விளைவாக கடுந் தூக்கத்தில் ஆழந்து போன நீங்கள் பாலமுருகனின் முகநூலில் அறவாரிய வெளியீடு (23-11-2012) பற்றி அறிந்தவுடன் திடீரென விழித்து எழுந்ததால் பட படத்த இதயத்துடன் யாரைத் தாக்குவது என்ற இலக்குக் கூடத் தெரியாமல், களத்தையும் சரியாக நிர்ணயிக்க முடியாமல் மனம் போன போக்கில் தட்டுத் தடுமாறி வில்லேந்தி (காகிதத்தில்) என்னை நோக்கி எறிந்து விட்டீர்களா?
சுய சிந்தனையில்லாத நீங்கள் (அடுத்தவரின் வழிகாட்டலில் அல்லது அனுமதியில் செயல்படும் நீங்கள்) மீண்டும் அடுத்த வருடம் வரை தூக்கத்தில் ஆழ்ந்து, மறுபடியும் விழித்தெழுந்து “ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி” என முதலில் உங்கள் கண்களில் படுபவர் யாரோ அவரை உங்களின் அம்பு குறி பார்க்கலாம். ஆண்மையின் வீரத்தில் விளைந்த சமர் இது! இதுதான்! இது மட்டுமே தான். அப்படித்தானே!
4
கடந்த வருடம் நடந்த சக்தி அறவாரிய புத்தக வெளியீட்டை விடுங்கள். முதல் நிகழ்ச்சி என்பதால் அது பற்றிய (சக்தி அறவாரியம்) விபரங்கள் சரிவர தெரியாமல் போயிருக்கலாம்.
புத்தக வெளியீட்டில் 23-11-2011ல் மிகத் தெளிவாக டத்தோ தனேந்திரன் தான் சக்தி அறவாரியத்தின் தலைவர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அடுத்தாண்டு (2012) மேலும் 10 எழுத்தாளர்களின் நூல்களை அச்சிட்டு மக்களிடம் இலவசமாக கொண்டு செல்வோம். இன்னும் எத்தனை நூல்கள் என்றாலும் அத்தனையையும் வெளியிட்டு இலக்கியப் பணி செய்வோம் என டத்தோ தனேந்திரன் அவர்கள் முழங்கியது மலேசிய இலக்கிய உலகை பரவலாக சென்றடைந்த செய்தி.
இதுவும் போகட்டும்….
தொடர்ந்து முனைவர் இராஜேந்திரன் அவர்கள் எழுத்தாளர்களிடமிருந்து எழுத்துப் படிவங்களைக் கேட்டு இந்த ஆண்டு ஆரம்ப முதல் (2012) அறிக்கை வெளியிட்டு வந்ததும் பரவலான செய்தி தான்.
இதுவும் ஓராண்டாக நடந்த கொண்டிருக்கும் விசயம் தான். இலக்கிய உலகம் அறிந்தது தான். நீங்களும் அறிந்தது தான். ஆனால் ஒரு முறையேனும் உங்கள் எதிர்க்குரல் ஒலிக்கவில்லையே. ஏன்? சக்தி அறவாரியத்தை நோக்கி ஒரே ஒரு கேள்வி கூட உங்களிடமிருந்து வெளிப்படவில்லையே ஏன்? உங்கள் அறப் போராட்டத்தை நீங்கள் உரிய காலத்தில் எடுத்து சொறணையில்லாத எழுத்தாளர்களை சற்று நிறுத்தி சிந்திக்க வைத்திருக்கலாம். ” சக்தி அறவாரியத்தை துரத்தியடித்திருக்கவேண்டும், தூக்கயெறிந்திருக்க வேண்டும்” என எழுத்தாளர்களை நோக்கி எறியப் பட்ட உங்கள் வீர வசனம் வெற்று வசனம் மட்டும் தானா…?
இப்போது உங்களைக் கேட்கிறேன்.
துரத்தியடிக்கவும், தூக்கியெறியவும் நீங்கள் எடுத்த கள போராட்டம், உங்கள் பங்கு என்ன என்பதை இலக்கிய உலகிற்கு தெளிவுபடுத்தலாமா? இத்தனை கேள்விகளையும் நீங்கள் மற்றவர்களை நோக்கி எய்யும் போது அக்கேள்விகள் உங்களையும் நோக்கித் திரும்பும் என்பதை மறந்து போனீர்களா….. நவீன்!
“நான் காகிகத்தில மட்டும் நிற்பவன். களம் எனக்குப் பழக்கமில்லாதது” என்கிறீர்களா? “அல்லது, களத்தில் இறங்க அஞ்சி எழுத்தாளர்களின் முதுக்குப் பின்னால் நின்று மட்டுமே எனக்கு கேள்வி எழுப்பி பழகிவிட்டது. அது பழக்க தோசம் நான் என்ன செய்வது” என்கிறீர்களா?
23-11-2012ல் நடைபெற்ற நூல் வெளியீட்டில் பல்கலைக் கழக நுழைவாயிலுக்கு முன் நின்று அந்தப் பத்து எழுத்தாளர்களுக்கும், சக்தி அறவாரியத்திற்கும், கலந்து கொண்ட இராண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்களுக்கும் உங்கள் கண்டனத்தை, எதிர்ப்பை நேருக்கு நேர் களம் நின்று கூட வேண்டாம். (அந்த அக்கினி பரிட்சை எல்லாம் பாவம்… நீங்கள் அறியாதது. அதையும் விட்டு விடுவோம்.) ஒரு அறிக்கை வழங்கி உங்களின் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாமே. சொறணையற்ற அந்த எழுத்தாளர்களுக்கு கொஞ்சமாவது உறைத்திருக்குமே!
உங்களின் மறுப்பறிக்கையின் வழி சோரம் போனதாக நீங்கள் குறிப்பிடும் சக்தி அறவாரியத்தை ஓட ஓட விரட்டியடித்திருக்கலாமே. அவர்கள் எந்தக் காலத்திலும் எழுத்தாளர் பக்கம் திரும்ப முடியாத அளவுக்கு உங்கள் கேள்விக் கணைகள் மூலம் அவர்களை துளைத்தெடுத்திருக்க வேண்டாமா நவீன்!
சரி அதுவும் போகட்டும்.
தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நூல் வெளியீடு தொடரும் என இரண்டாயித்துக்கும் மேற்பட்டவர்கள் முன்னிலையில் நம் நாட்டு பிரதமர் அவர்களையும் உடன் வைத்து சக்தி அறவாரியத்தின் தலைவர் மீண்டும் முழங்கினாராமே!
5
இப்போதாவது முழு விழிப்பு நிலையில், வீரியமுள்ள கோபத்துடன் காகிதக் களத்தை விட்டிறங்கி போராட்டக் களத்தில் நேருக்கு நேர் நில்லுங்கள். உங்களின் கண்டனத்தை பொது வெளியில் (பத்திரிகைகள் வழி) பிரகடனப்படுத்துங்கள்.
அனைத்து மலேசியத் தமிழிலக்கியவாதிகளுக்கும் சக்தி அறவாரியத்துக்கும் உரத்தக் குரலெழுப்பி உங்களின் மறுப்பை தெரிவியுங்கள்! உங்கள் பக்கத்தில் (நவீன் பக்கம்) நீங்கள் வெளியிட்ட செய்தி எத்தனை பேர்கள் படித்திருப்பார்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்.
அதனால் தான் சொல்லுகிறேன்! உங்கள் பக்கத்தை விட்டு வெளியே வந்து பத்திரிகைகளில் அனைத்து இலக்கியவாதிகளுக்கும் கொண்டு செல்லுங்கள். யாருக்குச் செய்தி போக வேண்டும் என்பது உங்கள் இலக்கோ அது அவர்களுக்குதானே முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக திரும்பத் திரும்ப சொல்லுகிறேன்.
“மீண்டும் மீண்டும் இந்த அசிங்கம் நிகழும் போது குரல் எழுப்பமால் இருக்க முடியவில்லை..” என குறிப்பிட்டிருந்தீர்கள்.
அந்தத் தொடர் அசிங்கத்தைக் கண்டிக்க அறச் சீற்றம் கொண்டு நீங்கள் கையில் எடுத்த அறப் போராட்டம் என்ன? அப்போராட்டம் எத்தனை இலக்கியவாதிகளைச் சென்றடைந்தது, விழிப்புணர்வை ஏற்படுத்தியது? எத்தனை பேரை நிகழ்ச்சிக்கு செல்லாமல் தடுத்தீர்கள் என்பதை இலக்கிய உலகமறிய ” உங்கள் பக்கம்” விட்டு வெளியில் வந்து பத்திரிகை வழி செய்தியை அறிவித்தீர்களா?
அல்லது அரசியல் சோரம் போனதாக நீங்கள் குறிப்பிடும் சக்தி அறவாரியம் மலேசிய இலக்கியத்தைக் கையில் எடுக்கக் கூடாது என அந்த அறவாரியத்திற்கு எதிராக ஒரு பத்துப் பேரையாவது அழைத்து மறியல் செய்தீர்களா அல்லது கண்டனம் தான் தெரிவித்தீர்களா நவீன்.
இது எதையுமே செய்யாமல், நான் கொதித்துப் போய் படபடத்துப் போனேன் என “உங்கள் பக்கத்தில்” திடீரென வெளிப்பட்டுள்ளீர்களே! முதலில் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா என்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
அரசிடமிருந்து பணம் பெற்று நூலை வெளியிட சக்தி அறவாரியம் போன்ற “இடைத் தரகர்கள், மண்டோர்கள்” எதற்கு? அவர்கள் நிழலில் கறை படிந்திருக்க இன்னமும் நாம் அதில் ஏன் நிற்க வேண்டும். “உன் அறவாரியத்திற்கு அரசாங்கம் பணம் கொடுத்திருக்கிறது. அதை எங்கள் செயல்பாட்டுக்குக் கொடு” என்றல்லவா கேட்க வேண்டும் என்பது உங்களின் கேள்வி.
சோரம் போனதாக நீங்கள் குறிப்பிடும் அந்த அறவாரியம் அரசாங்கத்திடமிருந்து பெற்ற மான்யத்தை நீங்கள் (கையேந்தி) கேட்க சொல்வது கூட “சோரத்திற்கு துணை போதல்” தான் என்பதை நீங்கள் அறியாமல் தான் சொல்லுகிறீர்களா? அல்லது அறிந்தே சொல்லுகிறீர்களா? அப்படியாயின் உங்கள் பார்வையில் “சோரம் போன” அந்த அறவாரியத்திற்கும் உங்களுக்குமான வேறுபாடு என்ன?
அதை விட இப்படி செய்யலாமே. சூடு சொறணையுள்ள, சோரம் போகாத, ஓராண்டாக கொதிக்கக் கொதிக்க கொதிப்பை அடைக்காத்த நீங்கள், தூய்மையும் வீரமும் பொங்கப் பொங்க கிளர்ந்தெழுந்து அரசாங்கத்திடமிருந்து நேரடியாக மான்யத்தை பெறும் முயற்சியில் நீங்கள் இறங்கலாமே நவீன்.
அந்த தகுதி உங்களைத் தவிர வேறு எந்த இலக்கியவாதிக்கும் நிச்சயமாக கிடையாது என்பேன் நான். யாராவது இதை மறுக்க முன் வந்தாலும் உங்கள் பக்கம் நான் நிற்பேன் பயப்படாதீர்கள். அத்துடன் புத்ரா ஜெயா நோக்கிய (இலக்கிய நூல்களை வெளியிட தூய்மையான மான்யம் பெற) உங்களின் புனித அறப் போராட்டத்திற்கு முதல் ஆளாக முன் வரிசையில் நான் நிற்பேன். நம்புங்கள் நவீன்.
உடனடியாக உங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான செயல்பாட்டை கையிலெடுங்கள். காத்திருக்கிறேன், முன் வரிசையில் முதல் ஆளாக நிற்பதற்கு.
6.
நவீன்! நீங்கள் என்ன மலேசிய இலக்கிய உலகின் பிதா மகனா அல்லது இலக்கிய உலகை தலையில் தாங்கி நிற்பவரா? இந்த இலக்கிய உலகின் வளர்ச்சிக்கான சாதனை எதுவும் புரிந்திருக்கிறீர்களா? மலேசியத் தமிழிலக்கிய உலகையும் அந்த உலகின் முன்னோடிகளையும் மதிக்காதவராயிற்று நீங்கள்.
அவர்களின் எழுத்துகளையும் பழமைவாத எழுத்துக்கள் என ஒதுக்கித் தள்ளி தீவிர எழுத்தாளர்களுக்கும், தீவிர விமர்சகர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் என ஒரு வட்டத்தை ஒதுக்கிக் கொண்டு தனித்துப் போனவராயிற்றே நீங்கள். நீங்கள் மதிக்காத பழமைவாத இலக்கியம் பற்றியும் இலக்கியவாதிகள் பற்றியும் திடீரென கரிசனம் கொள்வது ஏன்? நீங்கள் மதிக்காத இலக்கியமும் இலக்கியவாதிகளும் முன்னெடுக்கப்படுகிறார்கள் என்ற மன எரிச்சலின் வெளிப்பாடு தான் உங்களின் இந்தத் தாக்குதல் என்பதை எழுத்தாளர்கள் அறியமாட்டார்களா என்ன?.
“இந்த நிமிடம் சொற்களை அடுக்கி உங்கள் நியாயங்களைச் சொல்லாமல் நேர்மையின் முன் ஒரு தரம் ஒரே ஒரு தரம் நின்று அந்நிகழ்வுக்குச் செல்வது பற்றி மறு ஆய்வு செய்வீர்களா..?” உங்களின் வேண்டுகோள் இது…..
நவீன்…. நேர்மையின் பக்கம் ஒரே ஒரு முறை மட்டுமல்ல நேர்மை தான் என் உயிர் மூச்சு.
“சொற்களை அடுக்கி உங்கள் நியாயங்களைச் சொல்லாமல்….!” என்ற உங்கள் தொடர், சொற்களை அடுக்குவதற்கும் கொஞ்சம் தமிழறிவு வேண்டும். அந்தத் திறமை என்னிடம் இருப்பதாக ஒத்துக் கொண்டமைக்கு நன்றி. வசிட்டர் வாயால் பிரம்மரிசி என்று புகழ்ந்தது போல் இருக்கிறது.
கணினி உலகில் நுழைந்து இண்டு இடுக்குகளில் பயணித்து…பயணித்து தேடித்…தேடி பொறுக்கி எடுத்து அடுக்கப்பட்ட சொற்கள் அல்ல. சுயம். அனைத்துச் சொற்களும் சுயம். சுயத்தில் விளைந்த எனது சொல்லடுக்குகள்.
விடை பெறும் முன்… என்னுடைய இந்த பதிலறிக்கையை ஒரு சொல், ஒரே ஒரு சொல் கூட நீக்காமல் அப்படியே வல்லினத்தின் முகப்பில் வெளியிடும் தைரியம் உங்களுக்கு உண்டு தானே. உங்கள் கேள்வி, எனது விளக்கம் இரண்டையும் மலேசியப் பத்திரிக்கை உலகின் வழி இலக்கியவாதிகளை பரவலாகச் சென்றடைய ஏற்பாடு செய்வீர்கள் எனவும் நான் பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன்.
இதற்கான காரணம்… வல்லினத்தில் உங்களின் இந்த அறப்போராட்டத்தை நமது இலக்கியவாதிகள் அறிந்து கொள்வதற்காக வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பது தான். மேலும் 2013ம் ஆண்டில் சக்தி அறவாரியம்-
1. வெளியிடவிருக்கும் நூல்களுக்கு சொறணையுள்ள எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை
தரக்கூடாது.
2. மலேசியத் தமிழ் இலக்கியவாதிகள் (சொறணையுள்ளவர்கள்) அந்நூல் வெளியீட்டிற்கு செல்லக் கூடாது.
3. நமது எழுத்தாளர்களின் நூல்களை அச்சிட்டு வெளியிடும் செலவுக்கான மான்யத்தை நேரடியாக அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான முன்னெடுப்புகள் ஆகிய இந்த மூன்று முக்கிய.. மிக முக்கிய செயற்பாடுகளுக்காக உடனடியாக களமிறங்கி இலக்கியத்திற்கான உங்களின் புனித போராட்டத்தைக் கையிலெடுங்கள்.
நூல் வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன் படபடத்து சடசடத்து வெற்றுக் கூச்சல் போடுவதில் அர்த்தமில்லை. அது யார் காதிலும் விழப்போவதில்லை. எனவே ஓராண்டிற்கு முன்னதாகவே களமிறங்குகள். வாழ்த்துகள்.
மீண்டும் ஒரு வாய்ப்பில் சந்திப்போம். நன்றி.
க.பாக்கியம்
தலைவர்
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்