இதை நான் படபடத்த மனதுடன்தான் எழுதுகிறேன். காரணம் இந்த உணர்வு ஒரு வருடமாகத் தேக்கிவைக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் இந்த அசிங்கம் நிகழும்போது குரல் எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு ‘சக்தி அறவாரியம்’ ஐந்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியீடு செய்தது. அந்த ஐவரில் நான் மதிக்கும் சிலரும் இருந்தனர். முதலில் எனக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே கொஞ்ச காலம் ஆனது. எழுத்தாளனுக்கு முதலில் அரசியல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அது இல்லாத பட்சத்தில் எதையும் எழுதி ஒன்றையும் கிழிக்கப்போவதில்லை. இந்த நிலையில்தான் ‘சக்தி அறவாரியத்தின்’ ஏற்பாட்டில் வெளியீடு கண்ட அந்த நூல்களையும் மதிப்பிட முடிகிறது.
அதன் பின்னணி
முதலில் சக்தி அறவாரியம் யாருடையது? மக்கள் சக்தியின் கட்சித் தலைவர் தனேந்திரன் என்பது அனைவரும் அறிந்ததுதான். சரி இப்போது தனேந்திரன் யார்? ஹிண்ட்ராப் எனும் அமைப்பும் அதனால் தொடங்கிய எழுச்சியும் உச்சத்தில் இருந்த சமயம் அது. அதன் தலைவர்கள் நால்வரும் சிறைக்குள் தள்ளப்பட்டனர். உதயகுமார் எழுதிய ‘நவம்பர் 25’ நூலின் அடிப்படையில் நவம்பர் 25க்கு ஒரு வாரத்திற்கு முன் தனேந்திரன் ஹிண்ட்ராபில் அறிமுகம் ஆகிறார். அவர்களோடு சில நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். சிறைக்குச் செல்லும் முன்பு தங்களுக்கு அடுத்து யாரும் இல்லாத நிலையில் குழப்பம் எழுகிறது. வேறு ஆள் இல்லாத நிலையில் தனேந்திரனிடம் தற்காலிகமாக பொறுப்பை ஒப்படைக்கின்றனர். அடுத்தடுத்து மக்கள் குழப்பம் அடைகின்றனர். முதலில் தனேந்திரன் ஹிண்ட்ராப் , அம்னோ அரசுக்கு ஆதரவாகிவிட்டது என்பது போல குழப்பம் ஏற்படுத்துகிறார். பின்னர் ‘மக்கள் சக்தி’ எனும் கட்சியைத் தோற்றுவித்து அதை ஆளும் கட்சியுடன் இணைக்கிறார். பாமர மக்கள் இன்னும் குழம்புகின்றனர். தங்களுக்காகக் குரல் எழுப்பிய ஒரு அமைப்பு சோரம் போய்விட்டதாக நம்பிக்கை இழக்கின்றனர். இவை எல்லாம் உதயகுமார் சிறையிலிருந்து மீண்டு வருவதற்குள் வெற்றிகரமாக நடந்து முடிகிறது. ஒரு மக்கள் எழுச்சி மொண்ணையான வரலாறு இது. (இதை எழுதும் முன் ஹிண்ட்ராப்பின் இன்றைய உதவி தலைவர் எஸ்.தியாகராஜனிடம் கேட்டு மறு உறுதி செய்துகொண்டேன். மேலும் பல தகவல்கள் எழுத்துபூர்வமாக உள்ளன.)
கடந்த ஆண்டின் கதை
இந்த நிலையில் ‘சக்தி அறவாரியத்தை’ தனேந்திரன் தோற்றுவிக்கிறார். பலருக்கு அரசிடம் இருந்து பணம் வாங்கி தருகிறார். அதன் உச்சமாக ஐந்து எழுத்தாளர்களின் நூலை பதிப்பித்து , ஆளுக்கு 2000 ரிங்கிட் கொடுத்து இலக்கிய நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்வில் துளியும் இலக்கியம் இல்லை. அது பாரிசான் அரசுக்கான ஆதரவு நிகழ்ச்சியாக மாறுகிறது. பணம் வாங்கி கொண்ட எழுத்தாளர்கள் அறச்சீற்றத்தோடு (அது அறச்சீற்றமா அரைச்சீற்றமா?) மேடையில் அமர்ந்திருக்கின்றனர். இந்நிலையில் நூல்களை வாங்கி பார்த்தேன். அச்சுப்பிழைகள், மோசமான கட்டமைப்பு. இதற்கு மலாயா பல்கலைக்கழகத்தின் சில மேதாவிகளும் உடந்தை.
இந்த ஆண்டின் கூத்து
இவ்வாண்டு மீண்டும் சுரணையுள்ள பத்து எழுத்தாளர்களின் நூல்கள் பதிப்பித்து வெளியிடப்படுகிறதாம். அதற்கு கெடா மாநில எழுத்தாளர் சங்கம் பேருந்து பிடித்து கோலாலம்பூர் வருகிறார்களாம். இது தொடர்பாக அதன் தலைமைத் துவத்திடம் சில கேள்விகளும் சந்தேகங்களும் உண்டு.
கேள்விகள் பின்வருமாறு :
1. பல முக்கியமான ஆளுமைகள் அலங்கரித்த கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைமை பதவியில் இன்று இருக்கும் கா.பாக்கியம் அவர்களுக்கு இந்த அரசியல் சூழல் தெரியாதா?
2. தெரிந்தும் உடன்படுகிறீர்கள் என்றால், மக்கள் எழுச்சி மொண்ணைப் படுத்தப்பட்டு குழப்பம் அடைந்ததில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
3. உடன் பாடு உண்டென்றால் உங்கள் எழுத்தின் தார்மீகன் என்ன?
4. இப்போது பேருந்தை இலவசமாக அனுப்புகிறார்கள் என்பதற்காகக் கூட்டம் பிடித்து போகும் நீங்கள் , நாளை எந்த மோசமான அரசியல் விழாவுக்கும் இதையே செய்வீர்களா?
5. நீங்கள் இதை செய்வது, முதல் வெளியீட்டில் உங்கள் நூலும் இடம்பெற்றதின் நன்றிக்கடனா?
6. உங்களுக்கு அதன் பின்னணி தெரியாமல் நடந்தது என்றால், உங்களுக்கு என்ன நடக்கிறது என்று அறிய முடியாமல் விழிப்புணர்வு அற்ற உங்களால் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய முடிகிறது என நம்புகிறீர்களா?
7. கடந்த ஆண்டு நடந்து முடிந்த உங்கள் நூல் வெளியீட்டில் உங்களுக்கு நிறைவு இருந்ததா?
8. நூல் கட்டமைப்பில் உங்களுக்கு நிறைவு இருந்ததா?
9. நடந்து முடிந்தது இலக்கிய நிகழ்வென்றும் , அங்கு பேசப்பட்டது இலக்கியம் என உங்களால் உறுதி கூற முடியுமா?
10. இந்த நிமிடமாவது , சொற்களை அடுக்கி உங்கள் நியாயங்களைச் சொல்லாமல், நேர்மையின் முன் ஒரு தரம் ஒரே ஒரு தரம் நின்று அந்நிகழ்வுக்குச் செல்வது பற்றி மறு ஆய்வு செய்வீர்களா?
முடிவாக
எனது இந்த வாதம் சில வகையில் திரிக்கப்படும் வாய்ப்பு உண்டு என்றபடியால் முன்னமே சில விளக்கங்கள் கொடுத்துவிடுகிறேன்.
‘அரசிடமிருந்து பணம் பெருவது தவறா?’ என்பது முதல் கேள்வியாக இருக்கலாம்.
நிச்சயமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசிடம் இருந்துதான் பணம் வாங்கப்பட வேண்டும். நான் சொல்வது பணத்தை பெற்றுக்கொடுக்க ஏன் இன்னும் இது போன்ற மண்டோர்கள் . எமது தேவையை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. அதற்கு ஏன் இடைத்தரகர். அந்நிகழ்வின் ஏன் அரசியல் பிரசாரம்?
அரசியல் தலைவர்களிடம் பணம் பெருவது தவறா?
அதுவும் தவறு இல்லைதான். அவர்களின் கடமை அதுவாக இருக்க அதைச் செய்கிறார்கள். உதாரணமாக ஒரு கோயில் நிர்மாணிப்புக்கு அரசிடமிருந்து டத்தோ பழனி பணம் பெற்றுத்தருகிறார் என்றார், அதை செய்யத்தானே அவரை அங்கு வைத்துள்ளோம். பணம் பெற்றுக்கொடுத்ததால் அவர் கோவில்களில் காவலர் ஆகிவிடுவாரா என்ன? அது போல ஒரு நூலை பதிப்பிக்க ஏன் இது போன்ற இடைத்தரகர்கள். அவர்கள் நிழலில் கறை படிந்திருக்க ஏன் இன்னமும் அதில் நாம் நிர்க்க வேண்டும். “உன் அறவாரியத்துக்கு அரசாங்கம் பணம் கொடுத்திருக்கிறது. அதை எங்கள் செயல்பாட்டுக்குக் கொடு” என்றல்லவா உரிமையோடு கேட்க வேண்டும். இடைத்தரகராக இருக்கும் நீ ஏன் என் நூலுக்குத் தலைமை தாங்க வேண்டும்? என்றல்லவா துரத்தியடிக்க வேண்டும். அல்லது இத்தனை பிசக்கு உள்ள உன் உதவியில் என் நூலோ இலக்கியமோ வளரத்தேவையில்லை என தூக்கியெறியவேண்டும்…என்கிறேன் அவ்வளவுதான்.
அப்படியானால், இதுபோன்ற நிகழ்வை முன்னெடுக்க தகுதி வேண்டும் என்கிறீர்களா?
யாரும் நடத்தலாம். ஆனால் அது முழுக்க இலக்கியம் பேசும் இடமாக இருக்குமா? ஆளுங்கட்சிக்கோ/ எதிர்க்கட்சிக்கோ அதன் தலைமைத்துவத்துக்கோ ஓட்டு பெற்றுத்தரும் தோரணையில் ஒரு வார்த்தை பேசாமல் நிகழ்வை நகர்ந்த இயலுமா? வெளியிடப்படும் நூலை ஒட்டி ஆழமான விமர்சனங்கள் இடம்பெரும் தளமாக அது இருக்குமா? நூலை ஒரு விளம்பரத்துக்காக அச்சேற்றி வெளியீடு செய்யாமல் தரமாக அச்சேற்ற இயலுமா? சடங்கான மாலை பொன்னாடைகளை போர்த்தி காலம் கடத்தாமல் முழுக்க அதை இலக்கிய நிகழ்வாக மாற்ற திரணி உண்டா?
எனக்கு இன்னும் நிறைய கேள்விகள் உண்டு. ஆனால் அதற்கான பதில்கள் உங்கள் மனசாட்சியின் ஆழத்தில் இருக்கலாம். பதிலை என்னிடம் கேட்காமல் உங்களிடம் கேட்டாலும் கிடைக்கும். எழுத்தாளர் நண்பர்களே. நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஒரே ஒரு தரம் இந்த நிகழ்வுக்குச் செல்வது குறித்து மீண்டும் யோசித்துப்பாருங்கள். அது போதும்!