Life of Pi : இறுதி கையசைப்பு

 

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச்செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச்செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கையசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்ப்பார்க்கிறேன்
அவ்வளவு தானே
—  ஆத்மாநாம்

சின்ன வயதில் நிறைய சாமி படங்களைப் பார்த்திருக்கிறேன். கடவுளை நம்பாத ; பக்தியை அலட்சியம் செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரத்திடம் மற்றுமொருவர் தன் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்.  அந்த அற்புதங்களைக் கேட்டு இறுதியில் நாத்திகருக்கும் பக்தி வந்துவிடும். கடைசி காட்சியில் விபூதி அணிந்து ஏதாவது ஒரு கோவிலின் முன் தி.எம்.எஸ் குரலிலோ சீர்காழி கோவிந்தராஜன் குரலிலோ பக்திப் பாடல் பாடிக்கொண்டிருப்பார். ‘Life of Pi’ திரைப்படத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த நேர்க்கோட்டு கதை அம்சத்தில் பொருத்திவிடலாம். அது, அவ்வாறான மனநிலையைத்தான் மிக நேரடியாக பொழுதுபோக்கு ரசிகனுக்குக் கொடுக்கிறது. ஆனால் அந்தப் பார்வைதான் அப்படத்தின் மற்ற அனைத்து உன்னதங்களையும் மறக்கடிக்கவும் செய்கின்றது.

இரண்டாவது முறையாக இத்திரைப்படத்தைக் காணச் சென்ற போது காலி இடங்கள் குறைந்து காணப்பட்டன. ஒரு நாளைக்கு இரண்டு காட்சியாக இருந்தது நான்கு காட்சியாக மாறியிருந்தது. மெல்ல மெல்ல ‘Life of Pi’ தனக்கான ரசிகர்களை உள்ளிழுத்திருப்பதை அறிய முடிந்தது. நிறைய குழந்தைகள் உற்சாகத்தோடு வந்திருந்தனர். அஃது ஒரு விலங்குகள் உலாவும் படமென்றும், அஃது ஒரு கடலில் போராடும் சாகச இளைஞனின் கதை என்றும், அஃது ஒரு புலியின் கதை என்றும் அவர்களுக்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டிருக்கலாம்.  முதன் முறையாகப் பார்த்தபோதே இது வாழ்க்கையின் படம் எனதான் எனக்குத் தோன்றியது.

*  *  *

பாண்டிச்சேரியில் மிருகக்காட்சிசாலை ஒன்றை நடத்தி வரும் வணிகரான ‘Pi’ யின் அப்பா தொடர்ந்து அதை நடத்த முடியாத சூழலில் கனடாவுக்குச் சென்று வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ள முடிவெடுக்கிறார். தனது பராமரிப்பில் இருக்கும் அனைத்து விலங்குகளையும் கனடாவிலேயே விற்றுவிடும் தன் முடிவை ஓர் உணவு வேலையில் சொல்லும் போது ‘Pi’ மட்டும் எதிர்ப்புச் சொல்கிறான். அவன் காதலிக்கும் நர்த்தகி உட்பட பல நூறு விஷயங்கள் அவன் இந்தியாவில் ரசிக்க இருக்கின்றன. ஆனால் பயணம் முடிவாகிறது. விலங்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல் ஃபசிப்பிக் பெருங்கடலில் புயலால் மூழ்குகிறது. கடல் புயலின் அழகை தரிசிக்க கப்பலின் மேல் தளத்துக்கு வரும் ‘Pi’ அதன் ஆபத்தை மிக விரைவில் உணர்ந்து மீண்டும் தன் குடும்ப உறுப்பினர்களைத் தேடி கீழ் தளத்துக்குச் செல்லும் போது கடல் நீர் அவனுக்கு முன்பே அங்குக் காத்திருக்கிறது.   கப்பல்  மாலுமிகள் அவனைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு படகில் அவனை இறக்குகின்றனர். அதில் ஏற்கனவே ஒருவர் அமர்ந்திருக்கிறார். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் வேகத்தில் மேல் தளத்திலிருந்து படகை நோக்கி குதிக்கும் ஒரு வரிக்குதிரையால்  அவரும் நிலைதடுமாறி கடல் நீரில் விழுந்து மூழ்குகிறார். படகு இணைப்பிலிருந்து துண்டித்து அலையில் ஆக்ரோஷத்தோடு இணங்கி நகர்கிறது. தொலைவில் கப்பல் மூழ்குகிறது.

அந்தக் கடல்புயலில் ஓர் உருவம் மிதந்து வருவதை ‘Pi’ பார்க்கிறான். சட்டென உதவி வளையத்தை எடுத்து வீச அவ்வுருவம் நெருங்கும் போதுதான் அது Richard Parker என்பது தெரிகிறது. Richard Parker என்பது ஒரு வங்காளம் புலி. அதி வேகமாக அது படகில் ஏறுகிறது. ‘Pi’ பயந்துபோய் கடலில் குதிக்கிறான். இங்கிருந்து கதை வேறொரு தளத்தில் பயணிக்கிறது.

*   *   *

படத்தின் தொடக்கத்திலேயே Richard Parkerயை காட்டுகிறார்கள். அது அப்போது இளமை பருவத்தை அடைந்திருக்கவில்லை. ‘Pi’  யும் சிறுவனாக இருக்கிறான். இந்து , கிறிஸ்து, முஸ்லிம் என பலத்தரப்பட்ட மத பின்பற்றுதல்களால் அனைத்து உயிர்களிலும் ஆன்மா இருப்பதாகக் கூறுகிறான். ஒரு மாமிசத்துண்டை எடுத்துக்கொண்டு கூண்டில் இருக்கும் Richard Parkerயை அணுகும் போது அது மெல்ல அடி எடுத்து அவனை நெருக்கி வருகிறது. படம் மொத்தத்துக்குமே இந்தக் காட்சிதான் ஆதாரமாக நிற்க்கிறது. புலியின் கண்கள் காட்டப்படுகிறது. அதில் குரோதம் இல்லை. ஆனால் மாமிசத்தைப் பிடித்திருக்கும் அவன் கரம் நடுங்குகிறது. அருகில் வந்த Richard Parker மாமிசத்தை முகரும் தருணம் அவன் அப்பாவின் அபாயக்குரலால் புலி உறுமிக்கொண்டு ஓடுகிறது. ‘Pi’ தான் புலியின் கண்களில் நெருக்கத்தை உணர்ந்ததாகக் கூறுகிறான். அவன் அப்பா புலி என்பது என்ன என்று அவனுக்கு உணரவைக்க ஒரு ஆட்டைக் கட்டிப்போட்டு Richard Parker அதனை அடித்துக்கொல்லுவதைக் காட்டுகிறார். Richard Parker என்பது தன் பிறப்பின்  குணாதிசியங்கள் உள்ள ஒரு புலி என்பதை அவன் மனதில் ஆழப் பதிக்கிறார்.

சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட இந்தப் பயத்தால் கடலில் குதித்த ‘Pi’  மீண்டும் கடலின் அபாயம் அறிந்து படகில் ஏறியபோது அங்கு புலி இல்லை. படகு இரு பகுதிகளாக உள்ளது. ஒரு பகுதி எவ்வித மறைப்பும் இல்லாமல் இருக்க, அங்கு வரிக்குதிரை படுத்திருக்கிறது. மற்றுமொரு புறம் உணவு, நீர், பாதுகாப்பு அங்கி , துடுப்பு போன்றவை ஒரு நெகிழிப்போர்வையால் மூடப்பட்டுள்ளது. புயல் அடங்கியதும் நெகிழி போர்வைக்குள்ளிருந்து ஒரு கழுதைப் புலி வெளிவருகிறது. ‘Pi’ யை தாக்க முனைகிறது. அவனும் எதிர்க்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் வாழைப்பழத்தார் மூட்டையின் மேல் ஓர் ஓராங் ஊத்தான் மிதந்துவந்து படகில் ஏறிக்கொள்கிறது. இப்போது அப்படகில் துறுதுறுத்துக்கொண்டிருக்கும் எலியுடன் சேர்த்து ஐந்து உயிர்கள். கழுதைப்புலிதான், முதலில் தன் இயல்புக்குத் திரும்பிய அடையாளமாக வரிக்குதிரையைக் கொல்கிறது. அதை உண்டு தீர்ப்பதற்குள் ஓராங் ஊத்தானிடம் ஒரு பலத்த அறை வாங்கி அதையும் கொல்லும்போது ‘Pi’ துடித்து எழுக்கிறான். அவனால் அதன் இழப்பை ஏற்க இயலவில்லை.

சில காட்சிகளில் வந்தாலும் ஓராங் ஊத்தானின் கண்களில் அத்தனை சோகம்.  கடல் புயலில் தப்பி வந்த அதனிடம் “எங்கே உன் குழந்தைகள்?” என ‘Pi’ கேட்க அது கடலைப்பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிடும்போதும் கழுதைப் புலியை அறைந்தபின் கண்கள் சிவக்க இறுகிய மனநிலையுடன்’Pi’ யைப் பார்க்கும் போதும் எப்போது வேண்டுமானாலும் குபீரென வெடிக்கும் துக்கத்தின் அழுத்தம் திணித்த முகம். ‘Pi’  கழுதைப் புலியைக் கொல்ல கத்தியை உறுவும் போது நெகிழி போர்வைக்குள்ளிருந்து முரட்டு உறுமலுடம் அதன் மேல் பாய்ந்துகொல்கிறது வங்காளப் புலி. இப்போது விரிந்த கடல், ‘Pi’ , வங்காளப் புலி . அந்த இடத்திலிருந்து கதை வேறொரு திசையை நோக்கி நகர்கிறது.

*  *  *

படத்தின் தொடக்கத்தில் ‘Pi’ யின் வாழ்வை நூலாக எழுத அவனைச் சந்திக்க வரும் எழுத்தாளரிடம் தன் வாழ்வின் அனுபவங்களைப் ‘Pi’ பகிர்வதிலிருந்து படம் நகர்கிறது. அவனைச் சந்திக்க வருபவர் ஒரு நாஸ்திகர். ஒரு சமயம் ‘உன் கதையைக் கேட்டப்பின்பாவது கடவுள் நம்பிக்கை வருகிறதா எனப்பார்ப்போம்’ என்கிறார் கிண்டலாக. படத்தின் முன்பாதிவரை அந்த எழுத்தாளருக்குக் கதை சொல்லும் தொணியில் நகரும் படம், கடலில் மாட்டிக்கொண்டப்பின் தன் நிலைப்பற்றி ஒரு அச்சடித்த புத்தகத்தின் வெள்ளை இடைவெளிகளில் பென்சிலைக் கொண்டு எழுதும் தொணியில் தொடர்கிறது.

கழுதை நாயைப் பார்த்தவுடன் படகிலிருந்து தனித்து செல்ல தற்காலிக மிதவையை உருவாக்கத் தொடங்கும் ‘Pi’ , புலியைப் பார்த்ததும் அவ்வேளையை விரைந்து முடிக்கிறான். துடுப்புகளை இணைத்து, பாதுகாப்பு அங்கியை அதன் முனைகளில் புகுத்தி, அதன் மையத்தில் அமர்ந்துகொள்கிறான். அதில் புலிக்கும் அவனுக்கும் எவ்வித உறவும் இல்லை. தனக்கு வேண்டிய சைவ உணவுகள் ஏற்கனவே படகில் சேமிக்கப்பட்டிருந்ததால் அவற்றை தன் தற்காலிக மிதவையில் வைத்துக்கொண்டு புலியுடன் தொடர்ப்பற்றிருக்கிறான். அவன் மனதில் இருப்பது ஆட்டை கொன்ற புலியின் கொடூரக் கண்கள் மட்டுமே. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் புலிக்குப் பசிக்கும் என உணர்ந்த போது அதற்காக மீன் பிடிக்க முயல்கிறான். புலி அவன் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அதை பொருத்தவரையில் அவனும் அதுவும் தனித்தனி. அவனும் அவ்வாறே இயங்குகிறான். சட்டென தெளிந்த நீரில் நீந்தும் மீன் ஒன்றை பிடிக்க கடலில் பாய்கிறது புலி. ஒரு மீனைப் பிடிக்கிறது. தொடக்கத்தில் உயர்ந்த அலைகளில் உதவியில் படகினுள் நுழைந்த அதனால் நடுக்கடல் அமைதியில் படகில் ஏற இயலவில்லை. ஆனால் தொடர்ந்து முயல்கிறது.

இவ்வளவு நேரம் தன்னை படகிலிருந்து ஒதுக்கி வைத்தப் புலி படகில் ஏறுவதை விரும்பாத ‘Pi’ ஒரு கோடரியுடம் அதை தாக்கச் செல்கிறான். படகின் ஓரக்கயிற்றை நகங்களால் பிடித்தப்படி புலி அவனை இறுதி நம்பிக்கையுடன் பார்க்கிறது. அது உயிர்ப்பிச்சைக்கான பார்வை. ‘Pi’  தன் செயலை நொந்துகொண்டு புலி ஏற வசதி செய்வதுடன்  படம் வேறொரு பரிணாமத்திற்குச் செல்கிறது.

*  *  *

‘Pi’ இப்போது ‘Richard Parker’ எனும் புலிக்காக வேட்டையைத் தொடங்குகிறான். முதல் நாள் இரவில் ஒரு திமிங்கலத்தின் பாய்ச்சலில் மிதவையில் சேமித்துவைத்திருந்த உணவுகள் பறிபோயிருக்கின்றன. உயிர் வாழ உணவு வேண்டும். பிடிவாதமான தனது சைவ உணவு கொள்கையைத் தளர்த்துகிறான். ஒரு இராட்சத மீனைப் பிடித்து , துடிக்கும் அதனை அடக்க கோடரியின் துணையுடன் அடிக்கிறான். மீன் இறக்கும் முன் பல்வேறு வண்ணங்களில் மாறி பின்னர் மடிகிறது. ஒருவகையில் அந்தக் காட்சியைக் காண்பதற்கென்றே மீண்டும் மீண்டும் படத்தைப் பார்க்கலாம். ஒரு மரணம் கொடூரமாக நிகழ்கின்றது. மரண வேதனையில் ஒரு மீன் தன் இறுதி நிமிடங்களில் வண்ணங்களை உமிழ்கிறது. உண்மையில் மனிதனுக்கு வண்ணம் என்பதுதான் என்ன… அதன் அத்தனை குறியீடுகளையும் படிமங்ககளையும் காலம் காலமாக கவிஞர்கள் கொட்டி வைத்த கற்பனைகளையும் இந்த ஒரு காட்சி சிதைக்கிறது. வண்ணம் என்பது சட்டென மரணத்தின் அடையாளமாகின்றது.

மரணத்தில் வண்ணத்தை விரிக்கும் மீனைக் கண்டவுடன் ‘Pi’ அழுகிறான். கடவுளே தனக்கு உதவியதாக நன்றி சொல்கிறான். மீனிடம் மன்னிப்புக்கேட்கிறான். இரத்தக் கவிச்சுடன் அதன் தசைகளைத் துண்டு போட்டு புலியைப் பழகுவதிலிருந்து படம் அற்புதமான கனங்களுக்கு இட்டுச் செல்கிறது. தனித்து உணவு தேட முடியாத தனது சூழல் புலிக்குப் புரிந்தது போலவே தனித்து இயங்குவது சிரமமென்று ‘Pi’ உணர்கிறான். அங்கு இனி ஒரு சமரசம் தேவைப்படுகிறது. அவனுக்குத் தேவையானது படகில் ஒரு மூலை. புலிக்குத் தேவை பசிக்கு உணவு. ஓர் புள்ளியில் இருவரும் இணைகின்றனர்.

‘Pi’ அதற்கு நீரும் உணவும் கொடுத்துப் பழக்குகிறான். பறக்கும் மீன்கள், ஜெல்லி மீன்கள், இருள், குளிர் எனப் போகும் கடலின் அதிசயங்கள் மீண்டும் ஒரு கடல் புயலுக்குப் பின்னால் வேறொரு வாழ்வை இருவருக்கும் அறிமுகம் செய்கிறது.

*  *  *

கடும் புயல், மழைக்கு மறுநாள் ‘Pi’ மற்றும் ‘Richard Parker’ ஒவ்வொரு மூலையில் முடங்கி கிடக்கின்றனர். முதலில் ‘Pi’ எழுகிறான். ‘Richard Parkerயை முதன் முறையாகத்தொடுகிறான். அதன் நிலை கண்டு வருந்துகிறான். அதன் தலையைத் தன் மடியில் வைத்து அழுகிறான். இப்போது அவர்கள் தனியர்கள் அல்ல. ஒருவருக்காக மற்றவர் இருக்கிறார். ‘Pi’  ஒருவகையின் மரணத்தை எதிர்க்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிடுகிறான். அதை உரத்த குரலில் அறிவித்து மூர்ச்சையாகிறான். முகத்தில் நிழல் பட எழும் போது படகு ஒரு தீவை தொட்டு நிர்க்கிறது. ‘Pi’ க்கு புதிய உற்சாகம்.  ஓரமாக முளைந்துள்ள பாசிச்செடிகளை உண்கிறான். வேரைப்பிடுங்கி கடிக்கிறான். அது சைவப்பசி.

தீவினுள் இறங்கி நடக்கிறான். அங்கே ஒரு வகையான அணில்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவை குழுமி உள்ள இடத்தின் மத்தியில் குளம். ஆனந்தத்தில் குளிக்கிறான். அணில்கள் சுற்றி நின்று வேடிக்கைப்பார்க்கின்றன. ‘Richard Parker’ சாவகாசமாக வருகிறது. அதற்கு அங்கு நிறைய உணவுகள் உயிரோடு உலாவுகின்றன . ஆனால் இரவில் ‘Richard Parker’ பயந்துகொண்டு ஓடி படகில் ஏறிக்கொள்கிறது. கானகத்தில் சலசலப்பு. காலையில் அவன் குளித்த குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன.  அவன் படுத்திருக்கும் மரத்தில் பூத்துள்ள ஒரு பூவை திறந்துபார்க்கிறான். அதனுள் மனிதப் பல். அவனுக்குப் புரிந்துவிட்டது. அது மாமிசம் உண்ணும் காடு. இரவில் தண்ணீரும் அமிலமாகிவிடுகிறது. எப்போதோ யாரோ ஒருவன் அக்காட்டில் ஒதுங்கி இறந்தப்பின் இச்செடிகளால் திண்ணப்பட்டு பற்கள் சீரணிக்காமல் பூவில் தங்கியுள்ளதாகக் கதைக் கேட்க வந்த எழுத்தாளரிடம் கூறும்போது மீண்டும் படம் நிகழ்காலத்துக்குத் திரும்புகிறது. கடவுள் தன்னை கண்காணிப்பதை அப்போதுதான் உணர்ந்ததாக உவகை கொள்கிறார்.

தொடர் பயணத்துக்குத் தேவையான உணவுகளைச் சேமித்துக்கொண்டு படகில் ஏறும் போது ‘Richard Parker’ம் உடன் வந்து ஏறிக்கொள்கிறது. அது இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பதை ‘Pi’  உணர்கிறார். 227 நாள்கள் பயணத்துக்குப் பின்னர் படகு மெக்சிகோ பகுதியில் உள்ள கடல்கரையைத் தொடுகிறது. ‘Pi’  கீழே விழுந்து மணலில் படர்கிறான். ‘Richard Parker’ அவனைத் தாண்டி குதித்து ஓடுகிறது. எதிரில் கானகம். ‘Richard Parker’ ஒரு நிமிடம் அதன் பிரமாண்டத்தின் முன் நிர்க்கிறது. ‘Pi’   பிரிவின் இறுதி நிமிடத்துக்கான கணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். அது நிகழவில்லை. புலி கானகத்தினுள் நுழைகிறது தன் அத்தனை இயல்பையும் மீட்டுணர்ந்துகொண்டு.

*  *  *

Life of Pi எனும் இப்படம் இதே தலைப்பைக்கொண்ட நாவலை திரைக்கதையாக்கியுள்ளது. Yann Martel எனும் எழுத்தாளரால் எழுதப்பட்ட இந்நாவல் 2001ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் லண்டனில் உள்ள ஐந்து பதிப்பகங்கள் இந்த நாவலை பதிப்பிக்க முடியாதென Yann Martel லிடம் பதில் கூறி புறக்கணித்திருக்கிறது. Knopf Canada எனும் பதிப்பகம் இறுதியில் இந்நாவலைப் பதிப்பித்ததைத் தொடர்ந்து  லண்டன் பதிப்பில் வந்த இந்நாவல் ‘புக்கர்’ விருதினைப் பெற்றது.  அதைத்தொடர்ந்து 2003க்கான  Boeke Prize, 2004ல் South African novel விருது, மற்றும் 2001–2003க்கான ‘ Asian/Pacific American விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் காட்சிகளில் கொடூரங்களையும் உயிரின் வேதனைகளையும் காட்ட நிறையச் சந்தர்ப்பங்கள் இருந்தும் மிக நேர்த்தியாகவே சீன இயக்குனரான Ang Lee அதை தவிர்த்துள்ளார். முதல் பகுதியில் புலி ஆட்டை அடித்து கம்பிக்குப் பின்னாலிருந்து இழுக்கும் காட்சியில் ‘Pi’ யின் மிரண்ட முகம் மட்டுமே காட்டப்படுகிறது. வரிக்குதிரை, கழுதைப் புலியால் கொல்லப்படும் போது தொலைவிலிருந்து கருப்பு பிம்பங்கள் அசைவில் அதைக் காட்டிச் செல்கிறார். ஓராங் ஊத்தான் மரணம் படகின் கீழ்ப்பகுதியில் நடக்கிறது. மீனை கோடரியால் அடித்துக்கொல்லும் போது ‘Pi’ முகம் மட்டும் காட்டப்படுகிறது. தமிழ்ப்படங்களைப் போல இரத்தம் முகத்தில் தெரிக்கும் கொடூரமான எதார்த்தங்களை Ang Lee கலையம்சத்துடன் தவிர்த்துள்ளார். அவருக்கு கதையின் ஜீவனைக் காப்பதில்தான் கவனம் முழுக்கவும் குவிந்துள்ளது.

படம் தொடங்கி நடிகர்களின் பெயரைப் போடும் போதே படத்தின் சுவாரசியம் தொடங்கிவிடுகிறது. விலங்குகளின் பல்வேறு அசைவுகளுக்கேற்ப நடிகர்களின் பெயரும் ஊர்ந்து , நகர்ந்து , தவழ்ந்து செல்கிறது.  பாண்டிச்சேரியின் பின்னணியில் நகரும் திரைப்படத்தில் ‘வசந்த மாளிகை’ போஸ்ட்டர் கதை நடக்கும் காலத்தைச் சொல்கிறது.

வாழ்க்கை சொல்ல வருவதுதான் என்ன? என்ற மிகப்பழமையான கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் உள்ள மாறுபட்ட பதில்களில் ஒன்றாக ‘Life of Pi’  யும் இடம்பெறுகிறது. அன்பினாலும் கருணையினாலும் உருவானதாகக் கூற முடியாத ஓர் உறவை, வாழ்க்கை சட்டென திணித்துச் செல்கிறது. வாழ்க்கை முழுதும் பிரிந்தே இருக்க வேண்டிய வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட இரு உயிர்கள் ஒரு படகில் பயணிக்கின்றன. ஒருவேளை ‘Pi’ தனியனாக இருந்திருந்தால் வெகு எளிதில் மரணித்திருப்பான் ; மனப்பிறழ்வு ஏற்பட்டிருக்கலாம். தொடக்கத்தில் தன்னை தொடர்ந்து பிரக்ஞை உள்ளவனாய் ஆக்கிக்கொள்ள ஏதேதோ செயல்பாட்டில் இயங்குகிறான். டைரி போல ஒன்றை எழுதுகிறான். ஒரு பென்சில், ஒரு கத்தி, சின்னஞ்சிறிய இடம் தன் வாழ்வில் எவ்வளவு முக்கியமானதாகவும் அர்த்தம் உள்ளதாகவும் மாறிவிட்டதாக வியக்கிறான். அதை அனைத்தையும் மீறி புலியிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள தோன்றும் எச்சரிக்கை உணர்வு அவனை தன்னிலை உள்ளவனாக மாற்றுகிறது. ஒருவேளை புலி இல்லாத படகு அவனை சொகுசாக்கியிருக்கும். கைக்கு எட்டிய தூரத்தில் உணவும், பாதுகாப்புமே அவனை மரத்துப்போகச் செய்திருக்கும். ஆனால் புலி அவனை ஒவ்வொரு நிமிடமும் உணர்வுள்ளவனாக மாற்றுகிறது. சட்டென ஒரு சந்தர்ப்பத்தில் புலிதான் இந்த ஒட்டுமொத்த வாழ்வின் படிமமோ எனக்கூடத்தோன்றச் செய்கிறது.

படத்தின் இறுதியில் Pi தான் இன்னமும்  Richard Parker நினைத்து ஏங்குவதாகச் சொல்கிறார். ஜப்பானிய அரசு அதிகாரிகள் அவரிடம் விசாரிக்க வந்தபோது Pi அவர்கள் நம்பும் படியாக வேறொரு கதையைச் சொல்கிறார். அதில் வரிக்குதிரையை புத்த மதத்தைச் சேர்ந்த இளைஞன் என்றும், ஓராங் ஊத்தானை தனது தாய் என்றும், கழுதை புலியை சமையல் காரனென்றும் கூறி ஒரு கதையை உருவாக்குகிறான். அதில் சமையல்காரனைக் கொன்றது தான்தான் எனக்கூறி தன்னை புலியாக உருமாற்றிக்கொள்கிறான். வெவ்வேறாக இருந்த இரு சம்பந்தம் இல்லாத உயிரிகள் ஏதோ ஒரு காரணத்தில் ஒன்றாகிவிடுகின்றன. அது அன்பின் உந்துதலால் நிகழ்ந்ததல்ல. அவ்வாறு தோற்றம் கொடுக்கும் அது உயிர்வாழ்வதற்கான சந்தர்ப்பத்தினால் நிகழ்ந்தது. அன்பென்ற பெயரால் வாழ்க்கை முழுதும் விரிந்துள்ள உறவுகளுக்கான பிரதிநிதிகளான Pi எனும் இளைஞனும்  Richard Parke எனும் புலியும் திகழ்கிறார்கள்.

புலி என்பது புலிதான். கானகத்தைப் பார்த்தப் பின்பு அதனிடம் மேலும் நட்பை எதிர்ப்பார்க்க முடியாதுதான். அதற்குமேல் அதனிடம் மனிதனின் தேவை இல்லை. இன்னும் சொல்லப் போனால் அது  தன் வாழ்வில் இன்றியமையாததாக இருக்கும் உணவுக்கான இருப்பிடம் அதன் முன்  விரிந்துகிடக்கிறது. அது இனி அவனைத் திரும்பி பார்க்கக் கூட வேண்டியதில்லை. அந்த உறவின் பின்னல் துண்டிக்கப்பட்டுவிட்டது. அவனும் சில மீனவர்களால் காப்பாற்றப்படுகிறான். தேவைகளாலும் சந்தர்ப்பங்களாலும் பின்னி பின்னி விரிந்துள்ள உறவுகளில்  அன்பின் மதிப்பை மீண்டும் ஒருதரம் மறுபரிசீலனை செய்ய Life of Pi தூண்டுகிறது.

Pi , புலிக்கும் தனக்குமான உறவு அன்பின் பிடியில் இருப்பதாக நினைப்பதும், எழுத்தாளன் கடவுள் கிருபையால் Pi காப்பாற்றப்பட்டுள்ளதாக இறுதி முடிவுக்கு வருவதாகக் காட்டுவதும் வாழ்வில் மனிதன் தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கான கற்பனைகளாக எஞ்சி நிற்கிறது.

(Visited 110 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *