கேள்வி : ‘இலக்கிய ரௌடி’ என மாற்றுச் சிந்தனையுடையவர்களை அடையாளமிட்டு விளிப்பதாக நீங்கள் ஒருமுறை மலேசிய சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டில் உங்கள் உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியொரு அடையாளம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? அம்மாதிரியான ஓர் அடையாளத்தைக் கொடுத்தவர்களின் பிரச்சினை என்ன?
பதில் : நான் ‘லும்பன் பக்கங்கள்’ எனும் தலைப்பில் தொடர் எழுதியதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியச் சொல்லான Lumpenproletariat என்பதை முதலில் அறிமுகப்படுத்துகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட உழைப்புடன் தொடர்பற்ற, வர்க்க உணர்வை நோக்கி நகராத உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளை ஆரம்பத்தில் அவர் அவ்வாறு அழைத்தார். ரௌடிகளும் அதில் அடக்கம்தான். சமூக நன்னெறிகளை இறுக்கப் பிடிப்பவர்கள் அந்த அடையாளத்தால் வருந்தலாம். எனக்கு என்ன கவலை. பின்நவீனத்துவம் இந்த உதிரி மனிதர்களின் வாழ்வையும் பேசுகிறது. ஆனால், ‘ரௌடி’ எனும் அடையாளத்தை வசைச்சொல்லாகப் பயன்படுத்துபவர்கள் மேல்தான் எனக்குக் கோபமே. ‘மீடியகர்’ எழுத்தாளர்களுக்கு மத்தியில் தனது கருத்தை சமரசமின்றி நிருபுபவன் ‘ரௌடி’ என அழைக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. பல ஆண்டுகளாக கொட்டைப்போட்ட எழுத்தாளர்களாக இருந்தவர்களின் இலக்கியத் தரத்தையும் அரசியல் நிலைபாட்டையும் கேள்விக்குட்படுத்தும்போது பிரச்னையாகிறது. அவர்களிடம் அதற்கான பதில் இல்லை. கருத்துநிலையில் எதிர்வினையாற்ற வக்கற்றவர்கள் வசைப்பதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்…பாவம்.
கேள்வி: ரௌடிகள் என்பதற்கான கருத்துநிலைகள் மாறுப்பட்டே வருவதாகத் தோன்றுகிறது. உழைத்துப் பணம் பெறுவதன் மூலம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நிலையிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு, இருப்பவனிடமிருந்து வன்மையாகப் பறித்து பணம் குவிக்கும் செயல்களின் மூலம் குற்றவாளி அல்லது ரௌடி எனும் அடையாளம் பெறுபவர்களை உதிரி மனிதர்கள் எனச் சொல்லலாம். அவர்கள் அப்படி ஆனதற்கான விளிம்புநிலை வாழ்க்கையைப் பற்றி தொடர்ந்து விவாதிக்காமல், பாதுகாப்பு கருதி அவர்களை வசைப்பாடுகிறார்கள். புறக்கணிக்கிறார்கள். இல்லாமை, கிடைக்காமை, வறுமை, சுரண்டல் எனச் சமூகம் அவர்கள் மீது விதிக்கும் வன்முறைக்கு எதிராக அவர்கள் செய்யும் எதிர்வினையாகத் திருட்டு, வழிப்பறி, ஆள் கடத்தல், கொலை எனப் பல செயல்களைக் குறிப்பிடலாம். இது சமூக சூழல். ஆனால் ஓர் இலக்கியச் சூழலில் ஒருவன் ரௌடி என அழைக்கப்படுகிறான் என்றால், அவனை எப்படி உதிரி மனிதர்களிடமிருந்து வேறுப்படுத்திக் காட்டப்போகிறீர்கள்? ரௌடி எனும் சொல்லின் அடையாளத்திற்குப் பின்னணியிலுள்ள வரலாறும் புரிதல்களும் தெரியாதவர்கள்தான் ரௌடி என்பதை ஒரு வசையாக மாற்றி இலக்கியச் சூழலுக்குள் கொண்டு வருகிறார்களா?
பதில் : அண்மையில் தடை செய்ய வேண்டும் எனப் பல மலேசியத் தமிழர்களாலும் போராடப்பட்ட ‘இண்டர்லோக்’ எனும் மலாய் நாவலில் ‘பறையன்’ எனும் சொல் இருந்தது. அந்நாவலைத் தடைச்செய்யக்கோர அதுவே பிரதானக் காரணம். ‘பறையன்’ என்பது இங்கு வசையாகிவிட்டது. அதனாலேயே ‘பறையனாக இருப்பதில் என்ன பிரச்னை ‘ எனும் கட்டுரை எழுதினேன். அதுபோலவே கோபம் அடைந்தாலோ, அடுத்தவரைக் கேவலப்படுத்தவோ ‘பொம்பள’ அல்லது ‘பெட்டை’ எனும் சொற்களை வசையாக்குகின்றனர். இச்சொற்கள் எல்லாம் சமூகத்தில் உள்ள ஒரு பகுதியினரைத்தான் குறிக்கின்றது. ஆனால், திமிர் எடுத்த மேட்டுக்குடி புத்தியுள்ளவன் அதை வசைச் சொல்லாக மாற்றுகிறான். ‘ரௌடி’ எனத்திட்டுபவர்களுக்கும் இது பொருந்தும் .
இன்னும் இதை ஆழ பார்த்தால் உணவில் வந்து நிர்க்கும். சைவம் சாப்பிடுபவன் உயர்ந்தவன் போலவும் அசைவம் உண்பவன் தாழ்ந்தவன் போலவும் ஒரு தோற்றம் நிலவுகிறது. அதிலும் உணவுப்பழக்கத்தைக் கொண்டு திட்டும் போக்கும் உண்டு. ‘நீயென்னா மாடா திங்கிற’ என கேவலமாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படியானால் மாடு உண்பவர்கள் கேவலமா?
மலாய்க்காரர்களின் பிரதான உணவான மாடு எல்லா அரசு சந்திப்புகளிலும் இருக்கும். அதை நான் சுவைத்து உண்ணும் போது சக ஆசிரியர்கள் அடையும் அதிர்ச்சி அவர்கள் என்னிடமிருந்து கொஞ்சம் விளகவே வைக்கும். அவர்கள் என்னை விசித்திரமான விலங்காகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். சக மலாய்க்காரர்களும் ‘நீ எப்படி மாடு சாப்பிடலாம்’ என்பது போல கேட்பார்கள். உயிருக்கு ஆபத்தில்லாததால் சாப்பிடுகிறேன் என்பேன். உடல் நலம் கருதி மாமிசம் உண்ணாதவர்களை இங்கு விட்டுவிடுவோம். கோழி, ஆடு என எல்லாவற்றையும் ஒரு கட்டு கட்டிவிட்டு மாட்டிறைச்சி என்றால் ‘உவேக்’ என்பவர்களின் ஆழ் மனதில் உள்ள கறைக்கு என்னதான் பெயர்? இன்று மலேசியாவில் மான் இறைச்சி, முயல் இறைச்சி என எல்லாமுமே ‘சாத்தே’ வடிவில் கிடைக்கின்றன. ஒரு அனுபவத்திற்காக அதை உண்டு பார்ப்பவர்களையும் கண்டுள்ளேன். மருந்துக்கும் அவர்களுக்கு மாட்டிறைச்சி தீண்டத்தகாததுதான்.
இன்னொன்றையும் இங்கு நினைவு கூர்கிறேன். கடந்த ஆண்டு ஜொகூரில் ஓர் இலக்கிய மாநாடு நடந்தது. அதில் நான் பேச அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடன் பேசிய சக நண்பர்களான சிவா பெரியண்ணனும், பாலமுருகனும் கூட அதிகாரப்பூர்வ உடை உடுத்தாமல் சென்றிருந்தோம். கிழிந்த ஜீன்ஸை அப்போது நான் அணிந்திருந்ததாக ஞாபகம். பேசி முடித்து வந்தவுடன் எங்கள் உடை ஒழுங்கு பற்றி அதிகம் பேசப்பட்டது. அது பலரையும் அசூயை நிலைக்குத் தள்ளியது. ஓர் ஆசிரியராக நான் உடுத்தும் உடையை அறிந்துள்ளேன். ஆனால், ஓர் எழுத்தாளனுக்கு ஏற்ற உடைதான் எது? அப்படி பிரத்தியேகமாக இருக்கிறதா என்ன?
உணவில், சொல்லில், உடையில் நமது அடையாளத்தைப் புகுத்த விரும்பும் ஓர் ஆபத்தான கூட்டத்தோடு இருப்பதை நான் உணர்கிறேன். இவர்களுக்குப் பயந்து நாம் பதுங்கி வாழ முடியாது. இன்னும் இன்னும் அடையாளங்களைக் கலைத்துப்போட வேண்டும். நீ அவலமாக நினைக்கும் ஓர் அடையாளத்தைப் பூண்டு கொண்டு உனக்கு நிகராக நான் இலக்கியமும், அரசியலும், தத்துவமும் பேசுவேன் என்கிறேன். அதற்காகக் கிடைக்கும் அடையாளங்கள் குறித்து என்ன கவலை. இதற்கெல்லாம் வரலாறு படிக்க வேண்டியதில்லை பாலா. இன்னொரு இனக்குழுவின் அடையாளமும் பழக்க வழக்கமும் பகடிக்கு உகந்ததில்லை என்பது அடிப்படையான மனித பண்புதானே.
கேள்வி : இலக்கியத்துறையில் நீங்கள் முன்வைக்கும் மாற்றுச்சிந்தனையைப் பற்றி மேலும் விரிவாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது எங்கிருந்து தொடங்கி எப்படி விரிவாக்கம் பெறுகிறது?
பதில் : மலேசிய இலக்கியம் தினசரிகளையும் வார மாத இதழ்களையும் நம்பிக்கொண்டிருந்த ஒரு காலத்தில் நான் நண்பர்களோடு இணைந்து ‘காதல்’எனும் சிற்றிதழை ஆரம்பித்தேன். அதில் எவ்வகையான அசலான சிந்தனையும் வெளிப்பட்டிருக்காது. ஆனால், எடிட்டிங் என படைப்பிலக்கியத்தை நசுக்கி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் போலல்லாமல் படைப்பாளிக்கு முழு சுதந்திரம் கொடுத்தே இதழ் உருவானது. ‘காதல்’ இதழில் தொடக்கம் பல மூத்த, மரபான படைப்பாளிகளுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. நவீன இலக்கியம் தொடர்பாக அதில்தான் பேச ஆரம்பித்தோம். அதன் பின்னர் வல்லினம். அதன் மூலமே இலக்கியம், மொழி, கலை சேவை எனச் சொல்லிக்கொண்டு வணிகம் செய்பவர்களை அடையாளம் காட்ட முடிந்தது.
‘இதெல்லாம் இலக்கியத்திற்கு உதவாது’ எனும் குரல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தன. ஆனால், வைரமுத்துவைக் காட்டி இலக்கியப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த எழுத்தாளர் சங்கத்துக்கும் , ‘மலேசிய இலக்கியத்தை என் முதுக்கில் சுமந்து திரிகிறேன் பார்’ எனக் கூறிக்கொண்டு அரசியல்வாதிகள் முன் முதுகு வளைந்தவர்களுக்கும், ’50 வருசமா இலக்கியத்துல கொட்டை போடுறேன்ல’ என சாதனை பேசியவர்களின் போதாமைகளுக்கும் வல்லினம் தனது எதிர்வினையை குறையாதக் காத்திரத்தோடு வெளிப்படுத்தியப்படியே இருந்தது.
விளைவு, இவர்கள் அணிந்திருந்த முகமூடிகள் இப்போது நைந்து தொங்குகின்றன. விருதுக்கு ஆசைப்பட்டவர்களும், எல்லோருக்கும் நல்லப்பிள்ளையாக இருக்க நினைப்பவர்களும், இலக்கியப்பரீட்சயம் இல்லாதவர்களுமே இவர்கள் வெறுமையை நிறைக்கிறார்கள்.
சொற்கள் உண்டாக்கும் கிளர்ச்சியே இலக்கியம் என்றிருந்த சூழலில் சொற்களுக்குள்ளும் இலக்கியத்துக்குள்ளும் ஒளிந்திருந்த அரசியலை வல்லினம் மூலம் மலேசியாவில் பேச முடிந்தது. ‘தமிழக இலக்கியவாதிகளின் வால்கள்தான் நாங்கள்’ என வெட்கம் இல்லாமல் கூறிக்கொண்டிருந்த மூத்தப் படைப்பாளிகளிலிருந்து மலேசியத் தமிழனின் அசலான மனதுடன் சிந்திக்கும் பாங்கு இளம் தலைமுறையினரிடையே உருவானது. மிக முக்கியமாய் இலக்கியம் அதிகாரத்துடன் இணைந்து போவதுதான் நியாயம் என பாவனைக் காட்டிகொண்டிருந்தவர் மத்தியில் வல்லினம் பல்வேறு வடிவங்களில் ஊடுறுவியிருக்கும் அதிகாரத்துக்கு எதிராகவே தனது செயல்பாடுகளை முன்வைத்தது.
கேள்வி : ‘இதெல்லாம் இலக்கியத்திற்கு உதவாது’ எனச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இலக்கியச் சூழலுக்குள் வேறென்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் காலத்தில் இலக்கியம் எப்படி இருந்தது?
பதில் : ‘எண்ணை விலை ஏறிப்போச்சி’, ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என கவிதை எழுதுபவன், நடுத்தர வர்க்கத்தின் மதிப்பீடுகளை நாவலில் முன்வைப்பவன், நடப்பில் இருக்கின்ற சமூக, அரசியல் சூழலை முழுதுமாக ஒப்புக்கொண்டு சிறுகதை எழுதுபவன் , அதிகாரத்தின்முன் குனிந்துகொண்டு போராளியாக பவனி வருபவன் என எல்லோருமே இலக்கியவாதிகள்தான். அவர்கள் எழுத்துதான் மலேசிய இலக்கியத்தின் அடையாளம் என காட்ட முக்கிக் கொண்டிருந்தார்கள்.
கேள்வி: மலேசிய சூழலில் இலக்கியம் ஒரு மலிவான வெகுஜனத்திற்கான கலை என்ற நிலைபாடு இருப்பதினால்தானே அது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விலைப் பேசப்படுகிறது? அப்படியொரு பார்வையை முதலில் எப்படி அகற்றுவது என்பதைப் பற்றித்தானே நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்? வைரமுத்துவைக் கொண்டு வந்தவர்களை நோக்கி எதிர்வினையை முன்வைத்து என்ன ஆகப் போவதாக நினைக்கிறீர்கள்? மலேசிய இலக்கிய சூழலை வைரமுத்துவிற்கு மோதிரம் போடுவதன் மூலம்தான் கெடுத்தார்கள் என நினைக்கிறீர்களா? அல்லது முன்பே அப்படித்தான் இருந்ததா?
பதில் : 1946 ஐ ஓர் எல்லைக் கோடாகக் கொண்டு மலேசியாவின் இலக்கியப்போக்கைப் பார்வையிட்டால்கூட 60 வருடங்களைத் தாண்டிவிட்டது. இங்கிருந்து கவனித்தால் அதன் வளர்ச்சியும் தோய்வும் தெரியும். மலேசியத் தமிழ் இலக்கியத் தொடக்கம் ஆரோக்கியமானதாகவே இருந்திருக்கிறது.
1950களில் இந்த நாட்டில் ‘கதை வகுப்பு’ மூலம் எழுத்தாளர்களை உருவாக்கியவர்களான ‘நாராயணர்கள்’ – சுப.நாராயணன், பைரோஜிநாராயணனிலிருந்து எடுத்துக்கொள்ளல்லாம் ; அல்லது 1952-இல் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக சிங்கப்பூர் “தமிழ் முரசின்” எழுத்தாளர் பேரவையை எடுத்துக்கொள்ளலாம் ; 1953-இல் தமிழ் முரசின் “ரசனை வகுப்பை” கந்தசாமி வாத்தியாரே (சுப.நாராயணன்)நடத்தியதை எடுத்துக்கொள்ளலாம் ; 50-களின் மத்தியில் தமிழ் நாட்டு எழுத்தாளர் கு. அழகிரிசாமி ‘தமிழ் நேசன்’ நாளிதழுக்கு ஆசிரியராக வந்தமர்ந்து படைப்பிலக்கியத்தை ஊக்குவிப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டதிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம் ; எப்படிப் பார்த்தாலும் ஒரு சரியான வழிகாட்டலில்தான் மலேசிய இலக்கியம் நகர்ந்துள்ளது.
இந்தப் போக்கு பலவீனமானமடைந்ததை நான் 1970 களிலிருந்து காண்கிறேன். அப்போதுதான் இரா.தண்டாயுதம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையில் புத்திலக்கிய விரிவுரையாளராக வந்து சேர்கிறார். அதே போல இக்காலக்கட்டத்தில்தான் ‘வானம்பாடி’ என்ற இதழும் தமிழக வானம்பாடிகளைப் பின்பற்றி வெளிவருகிறது. நன்றாக கவனித்துப்பார்த்தால் இக்காலக்கட்டத்தில் மிக முக்கிய மையங்களாக இயங்கிய இவ்விரு பகுதியினருமே வெகுசன இலக்கியத்தைதான் முன்வைத்துள்ளனர். இரா.தண்டாயுதம் அவர்கள் மு.வரதராசனையும், அகிலனையும் கல்வி சூழலில் மையப்படுத்தினார் என்றால், வானம்பாடி (1977) இதழ் வைரமுத்துவையும் மேத்தாவையும் போற்றி துதித்தது. விளைவு, மலேசிய இலக்கியவாதிகளின் வாசிப்புதளம் மு.வ, அகிலன், நா.பா , வைரமுத்து, மேத்தா என சுருங்கி போனது. இன்றும் தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கு மு.வ முதல் வைரமுத்து வரை அறிமுகப்படுத்தப்படுகின்றனர். நவீன இலக்கியத்துக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. பல்கலைக்கழகமாவது கொஞ்சம் தேவலாம். ஆசிரியர் பயிற்சி கூடங்களில் பாரதியார், பாரதிதாசன் முடிந்து நேராக கண்ணதாசன், வைரமுத்து என வந்துவிடுவார்கள். இதைக் கற்று வெளியே வரும் ஆசிரியர்களின் இலக்கிய ரசனை எவ்வாறு இருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. ஆக, காலா காலமாக இலக்கிய ரசனையற்றவர்கள்தான் கல்விக்கூடங்களுக்கு இலக்கியம் தொடர்பான பாடத்திட்டம் வகுப்பவர்களாக உள்ளனர். அங்கிருந்து கற்று வெளியே வந்தால், ‘நீ கற்றதெல்லாம் சரிதான்’ என்பதுபோல இலக்கிய சங்கங்களும் அதையே வழிமொழிகின்றன. இந்த அபத்தமான நிலைதான் 2012 வரை தொடர்கிறதென்றால் அதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டாமா?
இதன் பரிணாம வளர்ச்சியாக பின்னாளில் வானம்பாடியில் இருந்தவர்களே மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைமை பீடங்களை நிறைக்க வைரமுத்து மலேசிய கவிஞர்களின் குலதெய்வமாகவே கொண்டாடப்பட்டார். அதன் தொடர்ச்சியாக எவ்வகையிலும் இலக்கியத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லாத ராஜேந்திரன் அவ்விடத்தை நிறைத்துள்ளார்.
இவர்கள் மலினமாக இயங்கி வந்த அதே காலக்கட்டத்தில்தான் , மலேசியாவில் ‘இலக்கிய சிந்தனை’ , ‘அகம்’ என்ற சிறு சிறு மாற்றுச்சிந்தனை கொண்ட குழுக்கள் உருவாகின. தலித்தியம், மார்க்ஸியம் சார்ந்த இலக்கியப் போக்குகள் ‘அகம்’ எனும் குழுவின் வழியே மலேசியாவில் முதன் முதலாகப் பேசப்பட்டுள்ளது. ஆக ஒன்றை இங்கே உறுதிபடுத்திக்கொள்வோம். மலேசியாவில் எல்லாக் காலத்திலும் மலிவான வெகுஜனத்திற்கான கலையாக மட்டுமே இலக்கியம் இருக்கவில்லை. குறிப்பிட்ட சிலர் தீவிரமாக இலக்கியத்தை முன்னெடுக்கவே செய்தனர். இலக்கியத்தை பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் போக்கு உலகம் எங்கும் உண்டு. நீங்கள் சொல்வதுபோல என்னால் அதையெல்லாம் தடுக்க முடியாது. மாறாக அவ்வாறான இலக்கிய எண்ணம் கொண்டவர்களின் இலக்கிய ரசனைப் போக்கைப் மாற்றலாம்.
ஆனால், அந்த மலிவான ரசனை மனம் வளரவே கூடாது என நினைத்து செயல்படுபவர்களை நோக்கியே என் எதிர்வினைகள் உண்டு. அந்த மலிவான ரசனையை வைத்துக்கொண்டுதான் எழுத்தாளர் சங்கம் போன்ற இயக்கத்தினர் தங்கள் வணிகத்தை வெற்றிகரமாக நடத்துகின்றனர். வைரமுத்து, பா.விஜய் போன்றவர்களை மீண்டும் மீண்டும் பெரிய இலக்கிய ஆளுமைகளாக ஊதிப் பெரிதாக்கி அவர்களைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை உருவாக்குவதில் மும்முறம் காட்டுகின்றனர். இந்த நாடகத்தை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது என் பொறுப்புகளில் ஒன்றாகவே கருதுகிறேன். மற்றபடி , இதை வைரமுத்துவுக்கு மோதிரம் போடும் சம்பவத்தோடு எளிது படுத்துவதெல்லாம் ஆழமற்ற இலக்கியப் பார்வை.
கேள்வி: எளிமைப்படுத்த முயலவில்லை, ஆனால் ஆகக் கடைசியாக மலேசிய இலக்கியத்தைக் வளர்க்கிறோம், காப்பாற்றுகிறோம் எனக் கூவும் மலேசியத் தமிழ் எழுத்தளர் சங்கம் வைரமுத்துவை அழைத்து மோதிரம் போடுகிறது. இதுதான் இலக்கியம் பலவீனமடைவதற்கு ஒட்டுமொத்த காரணமா என வினவினேன். உங்கள் பதிலிலிருந்து இலக்கியத்தின் பலத்திற்கும் பலவீனத்திற்கும் நெடிய வரலாறு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இலக்கியத்தை விலை பேசும் ஒரு கூட்டமும் சரி, அதில் கவர்ச்சியும் புகழும் இருக்கும் என நம்பும் இன்னொரு கூட்டமும் சரி, ஒவ்வொரு காலக்கட்டத்திலேயும் எந்தத் தடையும் இல்லாமல் இயங்கி வருகின்றன. ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்குவது போல போலித்தம் செய்யும் இது போன்ற முயற்சிகளின் பின்னணியை அல்லது சுயத்தைத் தோலுரித்துக் காட்டுவதையே வல்லினம் செய்து வருகிறது அல்லவா?
பதில்: அப்படியும் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. வெகுசன இலக்கியங்கியங்களின் ஆதிக்கம் தமிழ் சூழல் எங்கும் உள்ளதுதான். இன்று நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவால் வைரமுத்து ரகம் அல்ல என நினைக்கிறேன்; மாறாக, மனுஷ்ய புத்திரன் போன்றவர்கள்தான். கே.எஸ்.ரவிக்குமார் அல்ல இயக்குனர் பாலா போன்றவர்கள்தான். வைரமுத்துவின் இலக்கியத் தாக்கம் கொஞ்ச காலம் நீடிக்கும். பின்னர் காணாமல் போய்விடும். இதே நிலைதான் கே.எஸ்.ரவிக்குமார் திரைப்படங்களுக்கும். தீவிர இலக்கியத்தை, நல்ல கலைப்படைப்பை நாடும் ஒருவனை இவர்களது படைப்புகள் எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. வைரமுத்து அளவுக்கோ , அவரைவிடவோ தமிழ் இலக்கியச் சூழலில் செல்வாக்கு செலுத்தியவர்கள் அதிகம் பேர் உண்டு. இன்று அவர்களின் இடம் என்ன என்பதைக்கொண்டே நாம் இன்றைய ஜனரஞ்சக எழுத்தாளர்களின் நிலையை அணுமானித்துவிடலாம். ஆனால், மனுஷ்ய புத்திரனையும் பாலாவையும் எந்த இடத்தில் வைப்பீர்கள். அவர்கள் தங்கள் படைப்புகள் மூலமும் இயங்கும் தளம் மூலமும் எளிதில் தீவிரமான கலை இலக்கிய வெளிக்குள் நுழைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அதற்கு எதிரான எல்லா செயல்களையும் செய்துகொண்டே இருப்பார்கள்.
மனுஷ்ய புத்திரனின் இலக்கியச் செயல்பாட்டையோ அவரது கவிதைகளையோ அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது. அதே போல பாலாவையும் முழு முற்றாகப் புறக்கணிக்க முடியாதுதான். ஆனால், நாம் இவர்களின் அரசியலை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. வைரமுத்துவுக்கு ‘கவிபேரரசு’ பட்டம் கிடைத்ததும் அதை விமர்சித்து ‘என்றென்றும் வாழும் கோடையில் ‘ எழுதிய மனுஷ்ய புத்திரன், மரத்தடி இணையத்தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு கடுமையாக வைரமுத்துவை விமர்சித்த மனுஷ்ய புத்திரன்தான் இன்று பதாகைகள் மூலம் ‘கவிபேரரசு’ என விளித்து வைரமுத்துவுக்குத் தன் மேடைகளில் இடம் கொடுக்கிறார். ராயல்டி தராமல் சக எழுத்தாளர்களை ஏமாற்றுகிறார். உயிர்மை நூல்களுக்கு அதிகம் நூலக ஆர்டர் கிடைக்க, கனிமொழிக்கும் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கும் கட் அவுட் வைக்கிறார் . இலக்கியத்தில் மனுஷ்ய புத்திரன் வழி நுழையும் ஒரு இளம் தமிழ் எழுத்தாளனின் நிலை என்ன என்பதை யூகிக்க முடிகிறதா? அவனிடம் நிலையான ஒரு பிடிப்பு இருக்காது. வணிகம் ஒன்றுக்காக எதையும் விற்கத்துணிவான். இந்தக் குற்றச்சாட்டையெல்லாம் சமாளிக்க மனுஷ்ய புத்திரனிடம் சொற்களா இருக்காது… ‘இது ஒரு சூதாட்டம்’ என பேட்டி கொடுப்பார். அல்லது ‘நான் உயிர்மையை என் நண்பர்களுக்காக நடத்துகிறேன் இலக்கியம் வளர்க்க அல்ல’ என்பார். ஆனால், நேரடியாக அவரைச் சந்திக்கும் போது தமிழ் இலக்கியத்திற்காக உழைத்த களைப்பில் பேசுவார். தன்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பது போல கட்டுரை எழுதுவார் . ஆனால், சக எழுத்தாளர்களை பொரிந்து தள்ளுவார். ‘நேர்மை’ குறித்து தலையங்கள் எழுதுவார், ஆனால் சக எழுத்தாளர்களுக்கு ராயல்டி தராமல் ஏமாற்றுவார். நான் முன்பே சொன்னது போல அவரிடமும் அவரைப் போன்றவர்களிடமும் அதிகச் சொற்கள் உண்டு. அதை வைத்துக்கொண்டு திறம்பட தங்களை நியாயப்படுத்தி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பிழைப்பை ஓட்டி விடுவார்கள். சொற்கள் இருந்தால் எதையும் நியாயப்படுத்தலாம்தானே.
பாலாவின் திரைப்படங்கள் ஏதோ உலகத் திரைப்படங்களுக்கு நிகராக புகழப்படும் அவலம் தொடர்ந்து நிகழ்கிறது. அதன் உச்சமாக ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்கு தேசிய விருதுகிடைத்ததைச் சொல்லலாம். பாலாவுக்குப் பெண்கள் என்றால் கோமாளிகள். கல்லூரி படிக்கும் பெண்ணாக இருந்தாலும் காக்கிச் சட்டை உடுத்திய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு கோமாளிகள்தான். அதே போல திருநங்கைகளும். அது குறித்தெல்லாம் நம்மிடம் விமர்சனங்கள் எழுவதே இல்லை. கலை என்ற ஒற்றைச் சொல்லால் அனைத்தையும் மூடி வைத்துவிடுவோம். இவ்வாறு இன்னும் நிறைய பேரைச் சொல்லலாம்.
இந்த நிலைதான் மலேசியாவிலும். ஜனரஞ்சகமாகவே எழுதி வாசகனின் ருசிக்குத் தீனி போடுபவர்கள் குறித்து கூற ஒன்றும் இல்லை. ஆனால், தீவிர இலக்கியம் எனக் கூறிக்கொண்டு அதிகாரத்தின் முன் குனிந்து கொடுப்பவர்களை எப்படி விமர்சிக்காமல் போவது? இவர்களின் தீவிரத்தன்மை இலக்கியம் என்ற ஒன்றின் மூலம் பணம் சேர்ப்பதில் இருக்கும் போது அதை எடுத்தியம்புவது நமது கடமைகளில் ஒன்றெனவே கருதுகிறேன். ஆனால், அது மட்டுமே வல்லினத்தின் பிரதான நோக்கமல்ல.
கேள்வி : நம் நாட்டில் தீவிர இலக்கியத்திடம் வந்து சேர்வதற்கான தடைகள் யாவை?
பதில் : மேல் நிலை கல்லூரிகளில், தமிழை ஒரு பாடமாகப் படித்து வெளியேறும் மாணவர்கள் இந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 பேர் இருப்பார்கள். ஜனரஞ்சக இதழ்களும், எழுத்தாளர் சங்கங்களும் இவர்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன. இவர்களின் நோக்கம் இளைஞர் கூட்டத்தைச் சேர்ப்பது. அந்தக் கூட்டத்தைக் காட்டி ஏதோ சாதித்துவிட்டதாகப் படம் காட்டுவது. ஜனரஞ்சக இதழ்களின் நோக்கம் அவர்கள் மூலம் வாசக எண்ணிக்கையைப் பெருக்குவதுதான். அதற்காக இவ்விரு சாராரும் செய்யும் ஒரே காரியம் அவர்களை எழுத வைத்து ; அதை பிரசுரித்து நீ பெரிய இலக்கியவாதியாகிவிட்டாய் என நம்ப வைப்பது. முடிந்தால் அவர்களுக்கு ஏதாவது அங்கீகாரம் தருவது. இலக்கியத்தில் ஆர்வம் உள்ள இளைஞனும் ‘இவ்வளவுதானா இலக்கியம்’ என தன் தலையைச் சுற்றி ஒளி வட்டத்தை தானே வரைந்துவிடுவான். இதை நான் என் அனுபவத்திலிருந்தான் சொல்கிறேன். நான் மட்டுமல்ல, என் சமகாலத்துப் படைப்பாளிகள் பலரும் இந்த குட்டையிலிருந்து தப்பிய மட்டைகள்தான். ஏற்கனவே பலமுறை சொன்னதுபோல் இந்நாட்டில் இளம் தலைமுறைகள் தீவிர இலக்கியத்திற்கு முகம் காட்டாமல் எழுத்தாளர் சங்கமே பொழுதுபோக்கு எழுத்தாளர்களின் பதாகைகளை பெரிதாகப் பிடித்து மறைந்து நிர்க்கிறது. தீவிர இலக்கியத்தில் இயங்குவது சங்கத்தின் வியாபாரத்துக்கு ஆபத்து என்பதால் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்… கூட்டம் இருந்தால்தானே அவர்கள் வணிகம் நடக்கும். கூட்டம் எங்கே கூடும் என அவர்களுக்குத் தெரியாதா என்ன.
கேள்வி: பிரசுரிப்பதும் அவனை எழுத்தாளன் என நம்ப வைப்பதையும் பற்றி சொல்லியிருந்தீர்கள். ஓர் ஆரம்பநிலை எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கொடுப்பதும் அவனுக்குள் இருக்கும் ஆற்றலைச் சிறிதளவாவது அடையாளம் காட்டி அவனுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதும் போன்ற நடவடிக்கைகள் மாற்றத்தையே உண்டாக்காது என நினைக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் மிகவும் ஆபாசமான ஞாயிறு பதிப்புகளைப் பள்ளிகளில்கூட சேர்த்துக்கொள்ள முடியாதுதானே. பத்திரிகைகளால் எந்த நன்மையும் நடந்துவிடவில்லையா? அவர்களின் நடவடிக்கைகளில் உள்நோக்கம் இருப்பினும் அவர்கள் ஒரு புதிய படைப்பாளியை அடையாளம் காட்டுவதில் என்ன சிக்கல் உண்டு என்பதை விளக்கமாகச் சொல்லவும்.
பதில் : இலக்கியம் என்பதை நீங்கள் என்னவாகப் பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் கேள்வியும் எனது பதிலும் அமையுமென நினைக்கிறேன். இலக்கியம் என்பது ஒரு உள்ளொளி, அது ஒரு உன்னதமான காரியம், எழுத்தாளன் என்பவன் உன்னதமானவன் என சொல்லி கொண்டிருப்பவர்களிடமும், இலக்கியம் என்பது அங்கீகாரம் பெற்றுத்தருவது, மற்றவர்களிடமிருந்து நம்மை தனித்துக் காட்டுவது, என நம்புபவர்களிடமும் இந்தக் கேள்வி பொருத்தமாக இருக்கும். ஒருவகையில் இவ்விரண்டு முறைகளைதான் நானும் இலக்கியமாக நம்பினேன் என்பதை இங்கு வெட்கம் இல்லாமல் ஒப்புக்கொள்கிறேன்.
இலக்கியத்திற்கு கூட்டம் சேர்ப்பதுதான் நமது வேலையா என்ன? அவ்வாறு கூட்டம் சேர்ப்பதற்காக அங்கீகாரம் வழங்குவதும் , இளைஞர்களைக் கவர்வதிலும் என்ன பெரிதாக இலக்கிய மாற்றத்தைக் காணப்போகிறீர்கள்? நமது பணி சிந்தனை செய்பவர்களை உருவாக்குவதுதான். இருக்கின்ற அரசியல், சமூக, இலக்கிய கட்டமைப்புகளை கேள்வி எழுப்பும் வீரியமான இளைஞர்களை உருவாக்குவது. அவர்களே பின்னாலில் படைப்பாளிகளாக மாறுவார்கள். மாற்றுகருத்துகளே தான் கொண்டிருக்கும் உஷ்ணத்தால் கலையாக மாறும் வீரியம் கொண்டது. அந்த வீரியமே திரைப்படமாகவோ, ஓவியமாகவோ, நிழல்படமாகவோ, இலக்கியமாகவோ படைப்புகள் மலரும்.
‘நான் பத்திரிகையில் போட்டேன்; அதனால், அவன் எழுத்தாளனானான்’ என்பதெல்லாம் அதிகாரச் சொற்கள்தான். இப்போது அதனால் பலனென்ன? இதற்கு முன் பத்திரிகையில் வந்த கோடன கோடி எழுத்தாளர்களின் பெயர்களுக்கு என்ன அர்த்தம்? அவர்கள் எங்கே? ‘இதனால் ஒரே ஒரு நன்மைகூட இல்லையா?’ என கேட்கிறீர்கள். எப்போதும் இதுபோல கேட்கும் பல நண்பர்கள் என்னிடம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் பல்வேறு சூழல்களில் என்னிடம் இந்தக் கேள்வி வந்திருக்கிறது. ‘நடப்பு அரசாங்கத்தால் ஒரு நன்மைகூட இல்லையா?’, ‘எழுத்தாளர் சங்கத்தால் ஒரு நன்மைக்கூட இல்லையா?’, ‘வன்முறையால் ஒரு நன்மைக்கூட இல்லையா?’ என பல உள்ளன. இதற்கான பதில் ‘ஆம்’ என இருந்தால் இனி நாம் யாரையும் எதிர்க்காமல் இருந்துவிடலாமா? உலகில் எல்லாமே சரியாக நடக்கிறது என சமாதானமடைந்து கொள்ளலாமா? எல்லாவற்றிலும் ஒரு நன்மை இருக்கு என அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிவிடலாமா? முடியாதல்லவா. நன்மை என்பது ஒன்றல்ல. அது யாருக்கான நன்மை என்பது முதல் கேள்வி? அடையாளப் படுத்துவதுதான் நன்மை என்றால், அடையாளப்படுத்தப்படுவது அவ்வளவு அத்தியாவசியத் தேவையா என்றொரு கேள்வி உண்டு. இதற்கு முன் அடையாளப் படுத்தப்பட்டவர்களின் நிலை என்ன என்பது அடுத்தக் கேள்வி.
முன்பு என்னுடன் எப்போதும் இலக்கிய விவாதம் செய்யும் நண்பர் ஒருவர் கடைசியாக இந்த ‘ஒரு நன்மை’ கேள்வியைத்தான் கேட்பார். நான் ‘உண்டுதான்’ என்பதில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஒருமுறை, ‘நீங்கள் பேண்ட பீ கூடதான் எறுவாக மாறும் நன்மையைக் கொண்டுள்ளது. அதனால் வீட்டிற்கு நடுவிலா வைத்துக்கொள்வீர்கள்?’ எனக்கேட்டேன். அதோடு அவர் கேட்பதில்லை. இப்போதெல்லாம் எனக்கு இதுபோன்ற உவமைகள்தான் உதவுகின்றன.
கேள்வி: மாற்றுக்கருத்துக் கொண்டவனுடைய முழுமையான நிலைப்பாடு என்ன என்பதை மேலும் அறிந்துகொள்ளும் நோக்கிலேயே சில சமயங்களில் இது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன எனத் தோன்றுகிறது. இத்தனை வியாக்கியானம் செய்யும் ஒருவன், அவன் எதிர்க்கும் சக்தியின் செயல் நடவடிக்கைகள் சார்ந்து எத்தனை ஆழம் வரை சென்று மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்கிறான் என விவாதிப்பது முக்கியம். ‘ஒரு நன்மைக்கூட இல்லையா?’ எனும் கேள்வி அவனை அவனுடைய நிலையிலிருந்து தகர்ப்பதற்கோ அல்லது யாரையும் ஆதாரிப்பதற்கோ கேட்கப்படுவதாக இருக்காது. அப்படிக் கேட்பவர்கள் நீங்கள் சொல்வதைப் போல இருக்கக்கூடும். தனக்கென ஒரு எதிர்ப்புச் சக்தியைக் கண்டடைந்து அதனை எதிர்ப்பதாகப் பொதுவில் காட்டிக்கொண்டு, பிறகு அதே சக்தியிடம் விலை போகும் நிறைய பேர் தமிழ் இலக்கியச் சூழலிலும், அரசியல், பத்திரிகை சூழலிலும் இருக்கவே செய்கிறார்கள் அல்லவா? அவர்களின் மாற்றுக்கருத்துகளில் அல்லது எதிர்வினையில் நேர்மை இல்லாத சூழலில், அவன் எதிர்க்கும் ஒரு விசயத்தை நோக்கி அவனுடைய தார்மீகம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே கேட்டேன். நீங்கள் உங்கள் எதிர்வினையிலும் சரி மாற்றுக்கருத்துகளிலும் சரி பல காலமாக நேர்மையாக இருப்பதைப் பதிலிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
பதில்: நேர்மை என்பதைப் பற்றியும் பேச வேண்டிதான் உள்ளது. நான் எதை நம்பிச்செயல் படுகிறேனோ அதற்கு நேர்மையாக இருப்பதும் அதிலிருந்து நழுவ நேரும் போது அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதும் நேர்மைதான். இந்த வழுகல் என் வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளன. ஆனால், சட்டென விழித்துக்கொள்வேன். நண்பர்கள் உடனிருப்பது என்னை நான் சரிப்படுத்திக்கொள்ள உதவுகிறது.
நான் சாதியத்தை எதிர்ப்பவன் என்றால் அதற்கு முதலில் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தாலி என்பது சாதியை வழி வழியாகத் தாங்கி வரும் வடிவம்தான். முதலில் நான் அதிலிருந்து விடுபட வேண்டியுள்ளது. எவ்வித இந்து மத சடங்குகளைப் பின்பற்றாமல்தான் என் திருமணம் நடந்தது. என் பெயரும் மனைவி பெயரும் பொறிக்கப்பட்ட பதக்கத்தை அப்போது அணிவித்தேன். வீடு , வாகனங்கள் வாங்கிய சம்பவங்களில் எக்காரணம் கொண்டும் ஐயர்களை உள் நுழைத்ததில்லை. ஆனால் வாழ்வென்பது இன்னும் நீண்டது. அதில் ஒவ்வொரு தருணமும் இந்த மதமும் சடங்கும் என்னை விடாமல் துரத்தும் என்பதை அறிகிறேன். விடாமல் நான் கடைப்பிடிக்கும் கொள்கைகளால் என்னைச் சுற்றியுள்ள அன்பானவர்கள் பலரையும் நோகடிக்கலாம். என்னை எதிர்க்கொள்ள என்னைச் சுற்றியுள்ளவர்களைத் தயார் படுத்துவது போலவே , அவர்களை எதிர்க்கொள்ள நானும் தயாராக வேண்டியுள்ளது.
எனது இலக்கிய வாழ்வையும் நான் இதுவரை மறைத்து வைத்ததில்லை. ஜனரஞ்சக இலக்கியத்திலிருந்து தொடங்கியதுதான் என் கவிதை பயணம். படத்தைப் பார்த்து கவிதை எழுதுவது, திடீர் கவிதை சொல்வது போன்ற அத்தனை கோமாளி தனத்தையும் செய்துள்ளேன். சண்முகசிவாவின் வழியே நான் என்னை மறுகண்டுபிடிப்பு செய்தேன். இன்று நான் என் வாசிப்பின் பலம் கொண்டே நிர்க்கிறேன்.
அடுத்து ஓர் இதழாளனாகப் பதிப்பாளனாக என்னை கூர்ந்தே விமர்சித்து வருகிறேன். இதுவரை வல்லினம் பதிப்பித்த 7 புத்தகங்களின் எழுத்தாளர்களுக்கும் வெளியீட்டின் நிகழ்வின் போதே ராயல்டி வழங்கப்பட்டிருக்கிறது. வல்லினம் இதழாக வந்த போதோ அல்லது இணைய இதழாக வருகின்ற போதோ பணம் சம்பாதிக்கும் நோக்கில் எவ்வித விளம்பரங்களும் வந்ததில்லை. எந்த நிறுவனத்திடமும் எந்த அமைப்பிடமும் எனக்கென்று ஒரு ரிங்கிட் கூட பணத்தை எவ்வகையான பெயரிலும் பெற்றது கிடையாது. வல்லினத்தையும் என்னையும் சில அமைப்புகளும் அதிகாரங்களும் விலை பேசிய போதும் விருதுகளை முன் வைத்து விருந்தோம்பல் செய்த போதும் எதையும் ஏற்றுக்கொண்டது கிடையாது. அங்கீகாரம் என்ற பெயரில் என் தோளில் யார் விரித்த பொன்னாடையும் போர்த்தப்பட்டது கிடையாது. நான் போர்த்த பணிக்கப்பட்ட போதும் மறுத்தே வந்துள்ளேன். நான் எதை விரும்புகிறேனோ அதுவே நானாக இருக்கிறேன். நான் விரும்பாத எதுவும் என் மேல் திணிக்கப்படுவதை நான் விரும்புவதில்லை. யார் மனமாவது புண்படும் என்றும் என் வார்த்தைகளை வளைத்தது கிடையாது. என்னை உருவாக்கிய பலரையும் அவர்களுக்கான மரியாதையைக் கொடுத்துவிட்டு விமர்சிக்க தொடங்கிவிடுகிறேன். இதனால் நண்பர்கள் பலரை இழந்துள்ளேன். என் பேச்சில் ஆணவம் இருக்கலாம். ஒருவகையில் பார்த்தால், ஆணவம் இல்லாமல் போனாலும் நமது சுயத்தை இழந்துவிடும் ஆபத்துண்டு.
இதுதவிர தனி மனிதனாக என்னிடம் நிறைய குறைகள் உள்ளன. நான் கொஞ்சம் பதற்றமானவன். சீக்கிரம் கோபப்படக்கூடியவன். இடைநிலைப்பள்ளியில் படிக்கும் போதெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போதே கையை நீட்டிவிடுவேன். அந்தக் கனம் எப்போது நிகழ்ந்திருக்கும் என்று கூட தெரியாத அளவுக்கு வேகமும் கோபமும் கூடியிருக்கும். உடலை உறுதியாக்க அப்போதெல்லாம் நண்பர்களோடு கடுமையான பயிற்சி எடுப்பேன். இந்த உடல் பிறரை தாக்கவும் , தாக்குதலை தாங்கவும் மட்டுமே என நம்பிய காலங்கள் அவை. பல சமயங்களில் வன்முறையைக் கையில் எடுத்துள்ளேன். ஒரு இன வெறியனாகச் சுற்றிய காலத்தில் தமிழர்கள் குறித்து யார் பேசினாலும் அதற்கான தீர்வு எனக்கு வன்முறையாக மட்டுமே இருந்தது. மேலும் முற்றிலுமாக என்னால் ஆணாதிக்கத்தை அகற்ற முடியவில்லை. அதற்காக தொடர்ந்து முயல்கிறேன். தோல்வி கண்டால் மீண்டும் திருத்த முயல்கிறேன்.
அவ்வப்போது ஆணவமான பேச்சும் நுழைந்துகொள்ளும். பின்னர் தெரியாத விசயங்களை எண்ணி அடங்கி விடுவேன். நான் எதிர்வினையாற்றுவதும் விவாதம் செய்வதும் இந்த அடிப்படையான நேர்மையின் மேல் நின்றுக்கொண்டுதான்.
கேள்வி : இத்தனை வருட உங்களின் தொடர் எதிர்வினைகளின் மூலமும் ,இலக்கிய முன்னெடுப்புகளின் மூலமும் மலேசிய இலக்கியத்தில் என்னென்ன மாற்றங்களை உருவாக்க முடிந்தது?
பதில் : எதிர்வினைகளால் நாம் எதிர்ப்பவரின் நிலைப்பாட்டை மாற்ற முடியாது. அதிகாரத்தின் நாற்காலியைவிட அவர்களுக்கு மனம் வருமா என்ன? எனது நோக்கம் அவர்களை மாற்றுவதல்ல… நாம் யாரையும் மாற்றவும் முடியாது; அது என் வேலையும் அல்ல. ஆனால், இன்னும் இயங்கத்தொடங்காமல் வெளியில் நின்று வேடிக்கைப் பார்க்கும் ஒரு இளம் வாசகன் நாளை முழு கவனத்துடன் இலக்கியத்திற்குள் நுழைவான் எனும் நம்பிக்கை எனக்குண்டு. மலேசிய இலக்கியம் என்றாலே ஜனரஞ்சகத் தன்மை கொண்டதுதான் எனும் நிலை மாறி, இப்படி சேரும் சிறு குழு ஒன்று இலக்கியத்தின் தீவிரத்தன்மையை அறிந்து செயல்படுவது இப்போது பலரும் அறிந்த ஒன்றாகிறது. அது இன்னும் விரிவடையும்; தீவிரமடையும். நாளை மலேசிய இலக்கியத்தின் முகம் இந்த சிறு குழுவினரால் மட்டுமே தீர்மானிக்கப்படும்.
கேள்வி: வெளியில் நின்று வேடிக்கைப் பார்க்கும் ஓர் இளம் வாசகன் முதலில் நீங்கள் முன்வைக்கும் எதிர்வினையின் அசலான புரிதல் என்ன என்பதை அடைந்திருக்க வேண்டும் அல்லவா? உங்களைப் போல இலக்கியத்தைப் பார்க்கும் நிலையை அவன் முன்பே கொண்டிருக்க வேண்டும் அல்லவா? வெளியில் இருக்கும் வாசகன் ஒரு பெரும் ஜனரஞ்சக பரப்பில் சிக்கி சிதைந்து போயிருக்கும் இலக்கிய சூழலிலிருந்து வரக்கூடியவனாக இருந்தால் அவன் எப்படி முதலில் எதிர்வினையை உள்வாங்கிக்கொள்ளப் போகின்றான்? அப்படி இல்லாமல் சுயமாக உணர்ந்து தெரிந்துகொள்ளட்டும் என்றால் மிக மோசமான அந்த நீரோட்டத்தில் அவன் அடித்துச் செல்லப்படக்கூடும்தானே? முதலில் வெளியில் நின்று பார்க்கும் இளம் வாசகன் யாரைச் சொல்கிறீர்கள்? பத்திரிகையில் காதல் கவிதைகளை எழுதிவிட்டு வருபவனா அல்லது முகநூலில் வல்லினம் போன்ற இதழ்களிலுள்ள கட்டுரைகளைப் படித்துவிட்டு வருபவனையா? இவர்களில் யார் நீங்கள் சொல்லும் இளம் வாசகன்? எந்த வெளிக்குள்ளிருந்து பார்க்கிறான் எனக் கூறுங்கள். அந்த வெளி அவனுக்கு என்ன அனுபவத்தைக் கொடுக்கப்போகிறது?
பதில் : உங்கள் வாசகன் யார்? என நான் உங்களை நோக்கிக் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். அத்தகையதொரு பட்டியலை வைத்திருக்கிறீர்களா நீங்கள்? இருக்காது அல்லவா. முதலில் வாசகன் என்பவன் நாம் அடையாளமிட்டு வைத்திருப்பவன் அல்ல. இந்தக் கருத்தில் நீங்கள் ஒத்துப்போனால் நாம் அடுத்தப் பகுதிக்குச் செல்லலாம். வாசகனின் அசலான புரிதல் குறித்து கூறியுள்ளீர்கள். உங்கள் கதைகளை நீங்கள் எழுதும் அர்த்ததோடுதான் உங்கள் கதையைப் படிக்கும் எல்லா வாசகனும் புரிந்துகொள்வான் என கூற முடியுமா? முடியாது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால் மேற்கண்ட கேள்வி அர்த்தம் இல்லாமல் போகின்றது அல்லவா?
முதலில் எனது எதிர்வினைகளிலோ, கட்டுரைகளிலோ நான் கருத்தை திணிக்கவில்லை. ஒரு சூழலை வேறொரு கோணத்தில் நின்று பார்க்கிறேன். அப்படிப் பார்க்கும் போது பலரது கண்ணுக்கு தியாகமாகப் படுவது என் கண்களுக்கு நாடகமாகப் படுகிறது; பலரது கண்களுக்கு சேவையாகப் படுவது என் கண்களுக்கு வியாபாரமாகப் படுகிறது, பலரது கண்களை கூசச்செய்யும் பிரகாசத்தில் என் கண்கள் கவரப்படுவதே இல்லை; மாறாக அதனூடே சென்று வெளிச்சத்துக்குப் பின் உள்ள இருட்டைப் பற்றி பேசுகிறது. இப்படியும் பார்க்கலாம் என்கிறேன். அதன் பின் அதை யார் பின்பற்றினார் என்ற கணக்கெடுப்பெல்லாம் என்னிடம் இல்லை.
கேள்வி: மலேசிய இலக்கியச் சூழலில், எதிர்வினைகளைச் சுயேட்சையாக உருவாக்கி அதன்பால் கவனக் குவிப்பு செய்து உங்களுக்கான அடையாளத்தைத் தேடிக்கொள்வதாக உங்களைப் பற்றி விமர்சனங்கள் இருப்பதாக அறிகிறேன். அதை மறுக்கிறீர்களா?
பதில் : முதலில் எதிர்வினை என்பது என்ன? ஏற்கனவே இருக்கும் ஒன்றை ஒப்புவிப்பதா? இல்லையெனில், அது உருவாக்கப்படுவதுதானே. பொதுபுத்தியால், எல்லாம் சரியென தலையாட்டும் கூட்டத்துக்கு மத்தியில் புகுந்து ஒன்றின் போதாமைகளை, முரண்களை, அதிகாரத்தை, போலியை, ஏமாற்றுத்தனத்தைக் கண்டடைந்து எடுத்தியம்புவது. நீங்கள் சொல்வது போல மக்களின் கவனக்குவிப்பையும் கோறுவது. அதன் மூலம் அவர்களை மாற்றுச் சிந்தனைக்குத் தயார் படுத்துவது. உடன்படாதவர்களோடு நம் வலுவான கருத்துகளுடன் தொடர்ந்து உரையாடுவது; விவாதிப்பது. விவாதங்களின் மூலம் புதிய ஒன்றைக் கண்டடைவது. அவ்வாறு செய்பவன் என்ன அடையாளத்தைத் தேடிக்கொள்ள முடியும்? விமர்சகன் என்றா? வஞ்சகன் என்றா? கலகக்காரன் என்றா? எதுவாக இருந்தால் எனக்கென்ன? என் கவிதை தொகுப்பைப் படித்து பொம்பள பொறுக்கி என்றுக்கூடத்தான் சொன்னார்கள். நல்லதுதானே. இருந்துவிட்டுப் போகட்டும். எதற்காவது உதவும்.
கேள்வி : காதல், வல்லினம் போன்ற இதழ்களுக்கு பொறுப்பாசிரியராக இருந்த காலங்களில் உங்களால் படைப்பிலக்கியங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என உணர்ந்துள்ளீர்களா? அதனை எப்படி எதிர்க்கொண்டீர்கள்? இதை ஓர் இதழாசிரியராக இருக்கக்கூடியவனின் தியாகம் என விட்டுவிடலாமா அல்லது ஏதும் களைவதற்கான ஆலோசனைகள் உண்டா?
பதில் : அச்சு வடிவில் வந்தபோது அந்தச் சிக்கல் இருந்தது. பொருளாதார தேடல் வேறெதற்கும் இடம் கொடுக்காது. இது போன்ற சில சிக்கல்களிலிருந்து மீள வல்லினம் இணைய வடிவில் வந்தது. பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் இணையத்தில் இதழ் வரத்தொடங்கிய போது அதன் அழுத்தம் குறைந்ததே தவிர அகலவில்லை. தியாகம் என்பதெல்லாம் இல்லை. நமது நாட்டில் இருக்கின்ற இலக்கியவாதிகள்தான் தமிழுக்குத் தொன்றாற்றி தேய்ந்த களைப்பில் தியாக முகங்களை பொறுத்திக்கொள்கிறார்களே. அது போதாதா! இது எனது தேர்வு. என்னை யாரும் நீ இதழ் நடத்து என அடிக்கவில்லை. நாளையே படைப்பிலக்கியம் சார்ந்த அழுத்தம் ஏற்பட்டால், இதழை நடத்த நான் நம்பும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களால் முடியாத பட்சத்தில் நிறுத்திவிடலாம். மீண்டும் சாவகாசமாக இதழைத் தொடக்கிவிட்டால் போகிறது. அல்லது புதிதாக ஒருவன்/ ஒருத்தி வராமலா போவான்(ள்). எழுதுவது ஒரு இலக்கியச் செயல்பாடென்றால், பிறரை எழுத வைப்பதும் மற்றொரு இலக்கியச் செயல்பாடுதான். பொருளாதாரச் சிக்கல் இருந்தபோது வாசிக்கக்கூட நேரமும் மனமும் இருக்காது. இப்போது அதற்கு குறைவில்லை. நான் மகிழ்ச்சியாகவே எனது பணிகளைச் செய்கிறேன். என்ன… பொறுப்பற்றவர்களின் பதில்களால் அவ்வப்போது கோபம் அடைந்துவிடுவேன். ‘நான் கொஞ்சம் பொறுப்பில்லாதவன்’ என்று சொல்வது எழுத்தாளர்கள் மத்தியில் இப்போது ஃபேஷனாகிவிட்டது. எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் அவர்கள் கொடுக்கும் இடம் அதுதான்.
கேள்வி : தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கும் இதழ்களுக்கு இருக்க வேண்டிய அரசியல் நிலைபாடு என்ன? வல்லினத்தை அப்படித்தான் நடத்தினீர்களா?
பதில் : அவ்வாறெல்லாம் எனக்கு அறுதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், நான் ஒரு விசயத்தை ஆழமாக உணர்ந்து செயல்படுகிறேன். முதலாவது இந்நாட்டில் நான் ஒரு சிறுபான்மையினன். இந்நாட்டில் எனது சமூகம் ஒடுக்கப்படுகிறது…அவ்வகையில் நான் ஒரு தலித். ஏற்கனவே பிளவு பட்டிருக்கும் சமூகத்தை இன்னமும் சாதியினால் பிளவு படுத்தும் இந்து மதத்தின் எந்தச் சடங்குகளையும் அண்டாதவன். நீதியென்பதும் அறம் என்பதும் அதிகாரத்தின் பிடியில் இருப்பதை உணர்வதால் பொதுபுத்தி சார்ந்து இயங்குபவனும் அல்ல. இவ்வகையில் வல்லினமும் அதை பிரதிபளிக்க வேண்டும் என எண்ணுகிறேன். இதற்கு ஒவ்வாத விடயங்களைப் பிரசுரிப்பதும் இல்லை. இதற்குள் இணையாத இதழ்களில் எழுதுவதும் இல்லை.
கேள்வி : மௌனம் எனும் தற்காலக் கவிதைகளை முன்னெடுக்கும் மலேசியச் சிற்றிதழை நீங்கள் புறக்கணிப்பதும் இதன் அடிப்படியில்தானா?
பதில் : எல்லா அதிகார பலம் உள்ளவர்கள் தங்கள் மேட்டிமை கருத்துகளை பிரச்சாரம் செய்ய பெரிய பத்திரிகைகளை நடத்திக்கொண்டிருக்க, ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துப் பரப்பலுக்காக, அல்லது மாற்று கருத்து உள்ளவர்களின் சிந்தனையை வெளிபடுத்த உருவானவையே சிறுபத்திரிகைகள் என நான் புரிந்துகொள்கிறேன். ஒரு சிற்றிதழின் முதல் தன்மை அது யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. இவன் மனம் நோகும்; அவன் கோபித்துக்கொள்வான் என அஞ்ச வேண்டியதில்லை. இதழுக்குத் தேவை சுய அரசியல் சிந்தனை. அதில் யாருடனும் சமரசம் வேண்டியதில்லை. அந்த வகையில் ‘மௌனத்தில்’ எழுதுவதைக் காட்டிலும் மலேசியாவில் உள்ள பெரிய பத்திரிகைகளில் நான் எழுதிவிட்டு போய்விடுவேன். அவை வேடம் போடுவதில்லை. தங்கள் இயலாமையை பகிரங்கமாகவே காட்டிவிடுகின்றன. தங்கள் சார்பு நிலையை ஒப்புக்கொள்கின்றன. எனக்கு அது எளிதானது. வேடமில்லாத முகத்துடன் சங்கடம் இல்லாமல் உரையாடலாம்.
‘மௌனம்’ தன்னைச் சிற்றிதழாக அழைத்துக்கொள்கிறது. கவிதைக்காக முன்னெடுக்கப்படும் அவ்விதழில் தொடர்ச்சியாக நடந்த கோளாறுகளை பலரும் அறிவர். நேர்மையற்ற இலக்கியவாதிகளின் போலி முகங்களை வல்லினம் ஒவ்வொரு முறை கிழித்து எறியும் போதும் ‘மௌனம்’ ஆசிரியர் அவர்களுக்குச் ‘சிறப்பிதழ்’ உருவாக்குவார். அதன் மூலம் காயம் பட்ட மனதுக்கு மருந்து போடுவதாக அவரே ஒருதரம் சொன்னார். சிற்றிதழின் வேலை அதுதானா? கவிதை உணர்வுகளிலிருந்து கொப்பளிக்கிறது எனப் பேசிவிட்டு கவிதை போட்டி நடத்துவார். உணர்வுகள்தான் கவிதையாகின்றன என்றால் உணர்வுக்குப் போட்டி வைக்க முடியுமா? வெற்று வாய் சவடால்களும், தனிப்பட்ட தாக்குதல்களும் கொண்ட நேர்காணல்களை எவ்வித எடிட்டிங்கும் இல்லாமல் பிரசுரிப்பார். கேட்டால் கருத்துச் சுதந்திரமாம். அப்படியானால் பத்திரிகைச் சுதந்திரம் என்பதென்ன? ஏற்கனவே தமிழில் பரவலான வாசிப்பு உள்ளாகியிருக்கும் கவிதையை காப்பியடித்து எழுதினாலும் பிரசுரிப்பார். அத்தனை வாசிப்பு விசாலம் அவருக்கு. இப்படி ஒருவரை ஆசிரியராகக் கொண்ட இதழில் எழுதுவது சாத்தியமே அல்ல. போலிகளுக்கு எதிர்வினை ஆற்றாமல் இருந்தாலும் பரவாயில்லை; எல்லாவற்றையும் மறைத்து இவர்தான் இந்நாட்டின் கவிதைக்கு ஆதாரம் என்பதுபோல தூக்கிப்பிடித்து சுரண்டலோடு ஒத்துப்போபவர்களிடம் இலக்கியத்தில் இணையத் தயார் இல்லை.
கேள்வி : ‘முகவரி’ எனும் வெகுசன பத்திரிகையையும் நடத்தியுள்ளீர்கள். அந்தப் பத்திரிகையைத் தொடங்குவதற்கு என்ன காரணம்? வெகுசன இலக்கிய இரசனையை அக்காலக்கட்டத்தில் மாற்ற முடிந்ததா?
பதில் : முதலில் வெகுசனம் என்பது என்ன என்ற கருத்தில் நாம் உடன்பட வேண்டும். வணிக நோக்கத்துக்காக, மலிவான ரசனையை திணித்து அதன் மூலம் வாசகர் பரப்பை பெருக்கி பணம் சம்பாதிக்கும் ஒரு நிலையையும் அவ்வாறு சொல்கிறார்கள். ‘முகவரி’ அவ்வாறு உருவானதல்ல. ‘வெகுமக்களின் மாற்று இதழ்’ என்ற அடைமொழியுடந்தான் அது வெளிவந்தது. இலக்கியம் மட்டுமல்லாமல், அறிவியல், விளையாட்டு, சமகால அரசியல், சிறுவர் இலக்கியம் என எளிய வாசகர்களுக்காக உருவாக்கப்பட்ட இதழ் அது. மாதம் இருமுறை வெளிவந்தது. வந்த சில வாரங்களிலேயே சட்டென வாசகர் வரவேற்பை பெற்றது. இளைஞர்களை வாசிக்க வைக்க நாங்கள் மேற்கொண்ட சிறு முயற்சியே அது. தொலைக்காட்சியின் முன் கிடக்கும் இளம் தலைமுறையை முதலில் வாசிக்க வைக்க வேண்டும். புனைவல்லாதவைகளையே அதில் அதிகம் இணைத்தோம். சினிமா கிசு கிசுதான் இளைஞர்களின் தேவை எனும் நிலையை மாற்றி அவர்கள் உலகோடு இணங்கி அவ்விதழை வெளியிட்டோம். தவிர்க்க முடியாதக் காரணங்களால் அது நிறுத்தப்பட்டது.
கேள்வி : ‘முகவரி’ பத்திரிகை நடத்திய காலக்கட்டங்களில் உங்களுக்கு மேலும் சுமை கூடும்போது, உங்களின் படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்தி அதனைச் சீரமைக்கலாம் எனத் தோன்றியதுண்டா? எப்படி உங்களைச் சமாதானப்படுத்திக்கொண்டிர்கள்?
பதில் : சுற்றி முற்றி பார்த்தேன். நான் எழுதாததால் யாருமே சாகவில்லை. அப்படியானால் அது ஒரு அத்திவாசியத் தேவையில்லை என சமாதானமாக இருந்துவிட்டேன்.
கேள்வி : பத்திரிகையாளர் தமிழ்மணியிடமிருந்து அத்துறை சார்ந்து நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் யாவை?
பதில் : எனது முதல் இதழியல் அனுபவங்கள் ‘மன்னன்’ எனும் ஜனரங்க இதழில் பணியாற்றியபோதே தொடங்கிவிட்டது. முழுக்கவே அந்த இதழை உருவாக்கும் பணியைச் செய்திருக்கிறேன். எனவே என் இதழியல் அனுபவத்துக்கும் பத்திரிகையாளர் தமிழ்மணிக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், ‘காதல்’ இதழ் நடத்த எனக்கு அவர் வழங்கியச் சுதந்திரம் எப்போதும் நன்றிக்குரியது.
கேள்வி : அச்சு இதழாக இருந்த வல்லினம் பெரும்பான்மையாக மலேசியப் படைப்புகளுக்கே முக்கியத்துவம் அளித்ததாக உணர்கிறேன். ஆனால், இணைய இதழாக மாறியதிலிருந்து மலேசியப் படைப்புகள் குறைந்துவிட்டதே? குறிப்பாக மலேசியச் சிறுகதைகள் பிரசுரமாவதில்லை. இதை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறீர்கள்?
பதில் : முதலில் சிறுகதைகள் எழுதுபவர்கள் குறைவு. எழுதுபவர்களின் கதைகளையும் தரமில்லை என்றால் நீக்கிவிடுகிறோம். இந்நிலையில் சிறுகதைகளில் போதாமைகள் இருக்கவே செய்கின்றன. இருப்பவர்களை எழுது எழுது என கரப்பதைவிட புதிய இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் எண்ணம் உண்டு. பார்ப்போம்..
கேள்வி : மலேசியத் தமிழ்ப்பத்திரிகைகளின் போதாமைகள் என்ன? நேசன் கதை வகுப்பு, பவுன் பரிசு திட்டம் என இலக்கியம் சார்ந்து ஒரு காலக்கட்டத்தில் நிறைய முயற்சிகளைச் மேற்கொண்ட மலேசியத் தமிழ்ப்பத்திரிகைகள் இப்பொழுது சுருங்கி செயலிழந்துவிட்டதாக உணர்கிறேன்.
பதில் : இப்போதும் அதுபோன்ற முயற்சிகள் நடக்கலாம். அதனால் என்ன நடந்துவிடப்போகிறது என்பதே என் கேள்வி. அக்காலத்தில், இவ்வாறான வகுப்புகளிலெல்லாம் கலந்துகொண்ட எழுத்தாளர்களின் இன்றைய நிலைதான் என்ன? எவ்வகையில் அவர்களின் இலக்கிய முன்னெடுப்பு உள்ளது?. ஒருவன் தன் வாழ்நாளில் 50 கதைகள் எழுதினால் சில நல்ல சிறுகதைகள் உருவாகும். அதனால் இப்போது என்ன? நல்லக் கதையை எழுதிவிட்டு அமைச்சர் முன் நாக்கைத் தொங்கப் போட்டு நிற்கும் காட்சியை எத்தனை மேடைகளில் பார்த்திருக்கிறோம். நமக்குத் தேவை சிந்தனையாளர்கள். மாற்றுச்சிந்தனைக் கொண்டவர்கள். சமகால அரசியல் நிலையினை உணர்பவர்கள். அதற்கு எதிரான கலைகளை உருவாக்குபவர்கள். கலகம் செய்பவர்கள். தமிழ்ப்பத்திரிகையில் அது சாத்தியமா? தீவிரமான உரையாடல் கொண்ட குழு மத்தியில்தான் அது உதயமாகும். அவ்வாறானச் சிந்தனை இல்லாமல், எத்தனை பேர் அவ்வாறு சோரம் போவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
நான் அதிகம் மதிப்பு வைத்திருந்த எழுத்தாளர் சீ.முத்துசாமி. எங்களுக்குள் தனிப்பட்ட அதிருப்திகள் இருந்தாலும் இலக்கியம் குறித்த பார்வைகள் பெரும்பாலும் சமப்படும். அவரது சிறுகதைகள் மலேசியாவில் தனித்துவமானது. அவரோடு இன்னும் சிலரும், இண்ட்ராப் இயக்கத்தை மொண்ணையாக்கிய தனேந்திரன் , அரசாங்கப்பணத்தால் நடத்தும் அறவாரியத்தின் கீழ் தனது நூலினை பதிப்பித்து வெளியீடும் செய்து பணமும் பெற்றுக்கொண்டார்கள். தமிழர் மத்தியில் இருந்த எழுச்சியை ஒரு குழப்பமான நிலைக்கு இட்டுச்சென்ற தனேந்திரனிடம் சரணடைய சமுதாய எண்ணம் உள்ள எவனும் சம்மதிப்பானா? இந்த அடிப்படையான எச்சரிக்கை உணர்வில்லாமல் ஒருவன் இலக்கியத்தில் இயங்குவதெல்லாம் என்ன மாற்றத்தைச் சமுதாயத்தில் ஏற்படுத்தப்போகிறது. சீ.முத்துசாமி போன்ற ஆளுமைகள் அதிகாரத்தோடு இணங்குவதெல்லாம் எனது தோல்வியாகவும் கருதுகிறேன்… வருந்துகிறேன்.
கேள்வி: புனைவிற்கும் அ-புனைவிற்கும் நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் புரிதல் என்ன? ஒரு சிலர் புனைவிலேயே தன் சமூகத்தின் நிலையை தன் எதிர்ப்புணர்வை ஆவணப்படுத்துகிறார்கள். இது போன்றவர்கள் நேரடி தர்க்கத்திற்குள் வருவதில்லை. ஆனாலும், அவர்களும் ஏதோ ஒருவகையில் தன் அனுபவத்தின் வழி வாழ்வை அதன் போக்கில் இலக்கியத்தில் பதிக்கிறார்கள். இவர்கள் தன் வாழ்நாளில் எந்த விவாதங்களிலும் கலந்துகொள்ளவில்லை எவ்வித எதிர்வினையையும் முன்னெடுக்கவில்லை என்றாலும், அவர்களுடைய இருப்பை எப்படிக் கருதுகிறீர்கள்? அ-புனைவு போல, புனைவுகள் சமூகத்தில் கலகத்தை உருவாக்கும் சக்தியுடையவைத்தானே?
பதில் : எவ்வித எதிர்வினை வழங்காவிட்டாலும் எந்த விவாதத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் கூறிய அரசியல் உணர்வுடன் ஓர் எழுத்தாளன் இருந்தாலே போதுமானது. எனக்கு சட்டென சண்முகசிவா ஞாபகத்துக்கு வருகிறார். எனக்குத் தெரிந்து அவரது கட்டுரைகள் பொதுவான சமூக குறைபாடுகளை விமர்சிக்கின்றதே தவிர குறிப்பிட்ட ஓர் அமைப்பை இயக்கத்தை அதன் குறைபாடுகளை நேரடியாக விமர்சித்ததில்லை. ஆனால், எந்த நிமிடமும் அவர் தன்னை அவற்றிலிருந்து விலக்கியே வைத்திருப்பார். யாரை எங்கே நிருத்த வேண்டும் என அவருக்குத் தெரியும். அவ்வாறு இருப்பது சிரமமானது. ஆனால் அவர் அதை மிக லாவகமாகச் செய்கிறார். எந்த வலையிலும் அவரை சிக்க வைக்க முடியாது. ஆனால், அவர் தனது வலைக்குள் இருப்பதாக நம்பும் அமைப்புகள் ஏராளம் உள்ளன. ஆக, புனைவு, அ-புனைவெல்லாம் இருக்கட்டும். முதலில் எழுத்தாளன் தான் வாழ்வின் எங்கு சருக்குகிறான் என்பதில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
அரசியல்வாதிகளிடம் பணம் பெருவதை நான் தவறு என சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் நமது சமூகத்தை பிரதிநிதிப்பதாகச் சொல்லும் அவர்களின் கடமை அது. நிச்சயம் ஒவ்வொரு எழுத்தாளனும் தமது பொது செயல்பாடுகளுக்கு அரசிடமிருந்து பணம் பெறவே வேண்டும். அதை பெற்றுத்தரும் கடமை அங்கு வீற்றிருக்கும் அமைச்சர்களுக்கு உண்டு. ஆனால், கடமையைச் செய்ய ஏன் அவர்களை போற்றி புகழ்ந்து மாலை போட்டு குஜால் படுத்த வேண்டும். அவர்கள் அரசியல் பிரச்சாரம் செய்ய நாம் ஏன் மேடை அமைத்துத் தர வேண்டும்? ஒரு ஆசிரியரின் கடமை பாடம் போதிப்பதென்றால், அதற்காக அவருக்கு அணுதினமும் மாலை போட்டா மரியாதை செய்கிறோம். இல்லையே! யாரும் அவர்கள் சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துத் தர வேண்டாம். இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை பெற்றுக்கொடுத்தாலே போதும், அப்படி பகிரப்படாவிட்டால் போராடி பெற்றுக்கொடு. அதற்குதானே சம்பளம் வாங்கிக்கொண்டு அங்கு இருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் நமது நிகழ்ச்சிகளில் கலந்தும் கொள்ளலாம். அவர்களும் சமூகத்தில் ஒரு அங்கத்தினர்தானே. ஆனால், ஓர் இலக்கிய மேடையில் அவர்களின் இடம் என்ன என்பதுதான் என் கேள்வி? ஒரு எழுத்தாளனுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் இலக்கிய மேடைகளிலும் கிடைக்காவிட்டால் வேறு எங்குதான் கிடைக்கும்? காலம் முழுக்க ஒரு கொள்கைக்காக உழைப்பவன் அரசியல்வாதிகளின் மேடையில் எளிதில் புறக்கணிக்கப்படுவதை ஏராளம் பார்த்துள்ளேன். இலக்கிய புனிதம் குறித்து பேசும் ஜெயமோகனே தனது விஷ்ணுபுர விருது விழாவுக்கு இயக்குநர்களைத்தானே அழைக்கிறார். இறுதியாக பாவம் பாரதிராஜா. இலக்கிய அனுபவம் இல்லாததை தனது பேச்சிலேயே ஒப்புக்கொண்டார். ஜெயமோகன் அடிக்கடி சொல்லும் அசோகமித்திரன் போன்றவர்கள் மூலம் ஏன் அந்த விருது வழங்கப்படுவதில்லை. ஊடக கவனம் கிடைக்காது என்பது அதற்கு பதிலாக இருக்கலாம். அவ்வாறெனில் ஊடக கவனத்தை பெற எந்தச் சமரசத்தையும் செய்யலாமா? வள்ளுவர், தன் மனசாட்சிக்கு குற்றமில்லாமல் நடந்துகொள்வதுதான் அறம். மற்றவை அறமற்றவை ஆரவாரமானது என்பார். அந்த அறத்துடன் எழுத்தும் பேசும் எவ்வடிவமும் சலனத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்.
கேள்வி: மற்ற துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கும் இலக்கிய படைப்பாளர்களுக்கும் இடையே மலேசிய சூழலில் எந்த மாதிரியான வேறுபாடுகளை உங்களால் சுட்டிக்காட்ட முடியும்?
பதில் : நான் சமையலையும் ஒரு கலையென்றே மதிக்கிறேன். சாலையோரங்கள் கட்டுப்பாடற்று வளரும் செடிகளை தனது பெரிய கத்தரியில் கழித்து ஒரு பசுமை மெத்தைபோல உறு கொடுக்கும் எண்ணற்ற கலைஞர்களை நான் அறிவேன். அண்மையில்கூட பறவைகளுடனே தன் வாழ்வை கழிக்கும் ஓர் அறிய கலைஞனைக் கண்டு வந்தேன். இதை நான் சொல்லக் காரணம் கலை என்பதையும் கலைஞன் என்பவனையும் நான் இயல், இசை , நாடகத்தில் மட்டும் குவித்து பார்க்க விரும்பவில்லை என்பதனால்தான். இலக்கியம் மொழியினூடாக வெளிப்படும் ஒரு கலை வடிவம். எனவே அது வாசகனை சென்றடைவது மொழியினூடக மட்டுமே சாத்தியம். அது அதன் சவாலும் கூட. அதே வேலையில் இந்த மிகப்பெரிய சவாலைத் தாண்டி எத்தனையோ இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையும் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இது மலேசியாவில் நடக்காததே நமது போதாமை. மலேசிய இலக்கியங்கள் மலாய் மற்றும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டால்தான் அது பரவலான கவனத்துக்குச் செல்லும். எனவேதான் வல்லினம் பதிப்பில் வரும் இரு கவிதை நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்டோம். ஆங்கிலத்தில் அவற்றிற்கு உயிர்கொடுத்த சிங்கை இளங்கோவனை இவ்வேளையில் நினைத்துக்கொள்கிறேன்.
கேள்வி: 10 ஆண்டுகளுக்கு முன்பே மலாய்மொழியில் இளைஞர்களுக்கான நாவல்கள், இளைஞர்களுக்கான நூல்கள் அதிகமாக எழுதப்பட்டு பொதுமக்களின் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றிருந்தன. ஒருவகையில் மலாய் சூழலில் இளைஞர்கள் வாசிப்பதற்கான ஒரு களம் இருந்ததாகச் சொல்ல முடியும். இடைநிலைப்பள்ளியில் ‘Novel remaja’ எனச் சொல்லக்கூடிய இளையோர் நாவல்களை வாரம் ஒன்று என மாணவர்கள் வாசிப்பதைக் கவனித்துள்ளேன். ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு என் வயதை ஒத்த நூல் எனக்கு மலாய்மொழியிலேயே கிடைத்ததாகவும் உணர்கிறேன். மலாய் மர்ம நாவல்கள், தன்முணைப்பு நூல்கள் என நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். தமிழ் வாசிப்புச் சூழலில் இது போன்ற இளைஞர்களுக்கென அவர்களை நோக்கிய நூல்கள் எழுதப்பட்டுள்ளனவா? அப்படி இல்லையென்றால் அது சார்ந்த ஏதேனும் முயற்சிகளை முன்னெடுக்கத் திட்டமுண்டா?
பதில் : அத்தகைய முயற்சிகள் நடைபெறவில்லைதான். அதற்கு முக்கியக் காரணம் எழுத்தாளர்கள் இளைஞர்களின் வாழ்வை புரிந்துகொள்ள முயல்வதே இல்லை. அவர்கள் பார்வையில் ஓர் இளைஞன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிச் சித்தரிக்க முனைகின்றனரே தவிர ஒரு இளைஞனின் மொழி, சிந்தனை, வாழ்வை அறிவதில் எழுத்தாளர்களுக்கு அக்கறை இல்லைதான். எனது 17 வயதில் ஒரு இடைநிலைப்பள்ளி மாணவனின் வாழ்வை தொடராக எழுதினேன். என்னால் அவ்வாழ்வை அதற்கே உண்டான அபத்தங்களை அறிந்து எழுத முடிந்தது. அது பலராலும் விமர்சிக்கவும் பட்டது. ஆபாசக் கதை எனவும் முத்திரைக்குத்தப்பட்டது. பின்னர் அதுவே விரிவாக என் முதல் நாவலானது. 2 வருடம் கழித்து அதை வாசித்தபோது நூலாக்கும் ஆர்வம் எழவில்லை. இன்னும் அந்த வாழ்வு மனதில் நாவலாக இருக்கிறது. ஆனால் இன்றுள்ள இளைஞர்களின் மொழி உலகிலிருந்து நான் தள்ளி வந்துவிட்டேன். அவர்கள் மனம் கடந்த பத்தாண்டுகளில் அதிகம் மாறியுள்ளது. அவர்கள் உடை, பேசும் பாணி அனைத்திலும் மாற்றம் உள்ளது. அவர்கள் மனம் இயங்கும் விதத்தை முதலில் அறியவேண்டும் . அப்போது மட்டுமே அவர்களுக்கான இலக்கியம் சாத்தியம். இந்நிலையில் படைப்பிலக்கியம் அல்லாத இளைஞர்களுக்கான நூல்களை உருவாக்கும் திட்டம் தொடங்கியுள்ளது. விரைவில் அதுகுறித்து அறிவிப்பேன்.
கேள்வி: ஒரு மொழியின் மீதான பாண்டித்யம் அந்த மொழியில் எழுதப்பட்ட நூல்களை வாசிப்பதிலிருந்தே தொடங்குவதாகக் கருதப்படுகிறது. மலேசிய தமிழ் சூழலில் வாசிக்கக்கூடிய தரப்பினரையும் வாசிப்பைவிட்டுத் தூரமாகி போன தரப்பினரையும் நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?
பதில் : இதற்கு நான் இளைஞர்களின் மனநிலையைக் கொண்டே பதில் தருகிறேன். நான் பேசப்போகும் கல்லூரிகளில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு. ‘சார், இன்னிக்கு விசயங்கள் தெரிய எத்தனையோ சேனல்கள் இருக்கு. இதுல நான் எதுக்கு இலக்கியம் படிக்கனும்?’. நான் அவர்களின் ஒவ்வொருமுறையும் கூறும் பதில் இதுதான், ‘ஒரு நிகழ்ச்சியில் காடு குறித்து காட்டுகிறார்கள். நீங்கள் காட்டை தொலைக்காட்சியில் காண்கிறீர்கள். அதன் சூட்சுமங்களை அறிகிறீர்கள். ஆனால், ஒரு கதையில் நீங்கள் காடு குறித்து வாசிக்கும் போது உங்கள் மனதில் ஒரு காடு உருவாகிறது. அது உங்களுக்கான காடு. அந்தக் காட்டை நீங்கள் உருவாக்கினீர்கள். அதன் குளிர்ச்சியை நீங்கள்தான் உணரமுடியும். அது உங்கள் உணர்வுகளை இன்னும் நுட்பமாக்குகிறது.’ வாசிப்பு இல்லாத ஒரு இளைஞனிடம் இப்படித்தான் முதலில் கூறி புரியவைக்க வேண்டியுள்ளது.
வாசிப்பு இருக்கட்டும், கதைக்கூறும் பாட்டிகள் நம்மிடம் தொலைந்துவிட்டார்கள். எல்லா பாட்டிகளும் இப்போது சன் டிவி முன்தான் சீரியல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டிகளுக்கு இப்போதெல்லாம் கதைகள் தெரிவதில்லை. கதைகள் மூலம் பாட்டிகள் உருவாக்கிய உலகில் இப்போது எந்தப் பேரனும் பேத்தியும் இல்லை. ஒரு வரண்ட வாழ்வின் பிரதிகள் மட்டுமே இனி வரும் காலத்தில் உலாவும் போல.
கேள்வி: வணிக எழுத்துக்கு எப்பொழுதும் ஒரு தரம் இருப்பதாக உணர முடிகின்றதா? ரமனிசந்திரன், ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை ஒரு வணிக ‘கமர்சியல்’ முத்திரையைக் குத்துவதைவிட அதையெல்லாம் வெறும் மசாலாத்தனமானவை எனக் கருதலாமா? நாம் வணிக எழுத்தின் மிக மோசமான விலகலை ‘மசாலா’ எனப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டா?
பதில் : ‘மசாலா’ எனும் உவமை சுவாரசியமானது. எனக்கு அந்த உவமையைப் பயன்படுத்தப் பிடிக்கும். என் அப்பா ஒரு மசாலை தொழிற்சாலையில் வேலை செய்வதால் அதன் தன்மையை நான் அறிவேன். மசாலாவைப் போட்டுக் கறிவைப்பவர்களிடம் தனித்த ருசி வருவதில்லை. அதன் ருசியின் சான்றிதழ் எல்லாம் மசாகலா தூளுக்கே போகும். அங்கு சமைப்பவரின் கலைதிறனெல்லாம் செல்லுபடியாகாது. ஏனென்றால் சமைப்பவர் புதிதாக எதையும் சேர்க்கவேண்டியதில்லை. எல்லாமே மசாலையில் உள்ளதே. அது ரெடிமெட். இதை போட்டால் இது வரும் என்பது திட்டவட்டமானது. அது போலதான் வணிக எழுதுக்களும். வணிக எழுத்தில் நீங்கள் புதிய வாழ்வை அறிந்துகொள்ள ஒன்றும் இருக்காது. அது வாசகனின் தேவைக்குத் தீனிபோடும். அதன் முடிவு எப்படி இருக்கும் எனவும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். எளிய உதாரணம் என்றால் இப்போது போடும் சீரியல்களைச் சொல்லலாம். நீங்கள் இடையிலிருந்து இறுதியிதான் பார்த்தாலும் உங்களுக்கு கதை விளங்கிவிடும். ஆனால் அதைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டுவர். முடிவு தெரிந்தும் பதறுவர். கண்ணீர் வடிப்பர், ஆனால் அவர்கள் மனம் கதையின் மையப் பாத்திரத்துக்கு ஒன்றும் நேராது என முழுமையாக நம்பும். இவையெல்லாம் வெறும் மிகை உணர்ச்சிகள்தான். ஒரு வணிக இலக்கியம் அதைதான் செய்யும்.
நான் நீலப்படங்களைப் பார்த்ததுண்டு. அது எவ்வகையிலும் நமது காமத்தை நிவர்த்தி செய்வதில்லை. ஆனால் அதன் காட்சிகள் அத்தனையும் ஒரு கமர்சியல் நாடகம் எனத்தெரியும் போது அதில் எந்தச் சுவாரசியமும் இல்லாமல் போகின்றது. ஆனால், ஒரு நல்ல கலைப்படத்தின் காதல் வசனங்கள்கூட உங்கள் காமத்தின் ஆழத்தைத் தூண்டலாம்.
என்னைப் பொருத்தவரை ‘மசலா’, வணிக எழுத்து என்பதையெல்லாம் ஒன்றாகவே பார்க்கிறேன்.
கேள்வி: மலேசியாவில் ரெ.கார்த்திகேசுவின் நாவல்களை ஒரு வணிக நாவல் என கூறியிருக்கின்றீர்கள். இதுவரை வாசித்த மலேசியா நாவல்களில் வணிக எல்லையை மீறிய மலேசிய வாழ்வைப் பிரதிபலிக்கும் படைப்பு என எதையேனும் சொல்ல முடியுமா? வல்லினத்தில் தொடர்ந்து நாவல்கள் பற்றி விரிவாக எழுதிய பிறகு நீங்கள் பெற்ற அனுபவத்திலிருந்தும் சொல்லலாம்.
பதில் : நான் எழுதிய தொடர்களிலேயே அவை குறித்து அதிகம் பேசியுள்ளேன். லட்சியவாத நாவல்களின் தாக்கங்களிலிருந்து மீண்டு இன்று உங்களைப் போன்றவர்கள் வாழ்வின் இருண்டப் பகுதிகளையும் பேசத் தொடங்கியுள்ளது ஆரோக்கியமானது. ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள் வணிகத் தன்மை கொண்டவை எனச் சொன்னதில் இப்போது வரை மாற்றம் இல்லை. வாழ்வை எவ்வித கேள்வி எழுப்பாமல் அணுகும் அவர் முறை மேட்டுக்குடி சிந்தனைக்குரியது. அது எனக்கு உவப்பானதில்லை. என்னைக் கேட்டால்,நான் வாசித்த வரை மலேசிய நாவலின் புதியப் போக்கு உங்களின் நகர்ந்து கொண்டிருக்கும் வாசலிலிருந்து தொடங்குவதாகச் சொல்வேன்.
சந்திப்பு : யோ.கர்ணன், கே.பாலமுருகன்
நன்றி : எதுவரை