இலங்கையில் ஏழு நாட்கள்…6

 

கருணாகரனுடன்

கோட்டையிலிருந்து மீண்டும் தங்கும் விடுதி நோக்கி நடந்தோம். கோட்டைக்கு அருகில் விற்ற கொண்டை கடலையைச் சூடுபறக்க அம்மதியம் சாப்பிட்டது இனிமையான அனுபவம். கடலையை நம்மூர் போல காகிதத்தில் சுற்றிதான் கொடுக்கிறார்கள். ஆனால் அக்காகிதம் மாணவர்களின் நோட்டு புத்தகத்தினுடையவை. பல்வேறு பதார்த்தங்கள் இவ்வாறு நோட்டு புத்தகத்தின் காகிதத்தில் மடித்தே கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் அவை முகம் தெரியாத ஒரு மாணவனை கொண்டுவந்து நிறுத்தியது.  அனேகமான நேரங்களில் நான் ஒரு ஆசிரியர் மன நிலையில் இருப்பதில்லை, ஆனால் நோட்டு புத்தகங்களில் காணப்பட்ட மாணவர்களின் எழுத்துகளும் ஆசிரியரின் சிவப்பு மையும் அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பார்க்கும் ஆவலைத் தூண்டியது.

அவ்வெழுத்துகளை எழுதிய மாணவன் இப்போதும் மாணவனாக இருப்பானா என்பது சந்தேகம்தான். ஒரு போராளியாக மாறியிருக்கலாம்… எழுத்தாளனாகியிருக்கலாம்… வாழ்வின் துரத்தலில் ஏதாவது ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டிருக்கலாம்…அதனுடன் போராடிக்கொண்டிருக்கலாம்… இருக்கலாம்…இல்லாமலும் இருக்கலாம். போகிற போக்கில் நாம் காணும் எழுத்துகள் பெரும்பாலும் நம்மை ஒன்றும் செய்வதில்லை. அவை ஒரு வடிவமாகவே நமக்கு தெரிகிறது. குழந்தைகளின் எழுத்துகள் அவ்வாறில்லை. அதன் முறையற்ற அசைவுகள் சட்டென ஒரு பிஞ்சுக்கரத்தின் மென்மையை முகத்தில் அப்பச்செய்கிறது.

இலங்கை திரையரங்கில் ஏதாவது படம் பார்க்க வேண்டும் போல இருந்தது. யோ.கர்ணனிடம் கேட்டேன். ‘இங்க வந்து பார்க்கப்போறிங்கலா… மலேசியாவிலேயே இன்னும் வசதியாகப் பார்க்கலாமே’ என்றார். பின்னர் கால அவகாசம் இல்லாததையும் விளக்கினார். நண்பர்களிடம் பேசிவிட்டு இரவில் படம்பார்க்கச் செல்வதும் பாதுகாப்பில்லாதது. ஆனால் மனதில் எப்படியும் ஒரு திரையரைங்கையாவது எட்டிப்பார்த்துவிட வேண்டும் என தோன்றியது. திரையரங்கம் ஒரு சமூகத்தின் இன்னொரு மனதைக் காட்டுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இவ்வனுபவத்தை நான் சந்தித்ததுண்டு. சிறு நகரங்களில் உள்ள திரையரங்கில் படம் பார்ப்பதற்கும் சென்னை நகரத்தில் படம் பார்ப்பதற்கும் நிரைய வேறுபாடுகள் இருந்தன. மலேசியாவிலும் இதை காணலாம்.

விடுதியை அடைந்த சற்று நேரத்திற்கெல்லாம் கருணாகரன் வந்தார். ஈழத்தில் கவிதை செயல்பாட்டால் அறியப்பட்டவர்.  ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என அவரது நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன.

கருணாகரன்

இவர் ஆளுமை குறித்த எளிய அறிமுகத்தை யோ.கர்ணன் பின்வருமாறு விவரித்துள்ளார். ‘ஊடகவியலாளராகச் செயற்பட்டுவரும் கருணாகரன் எழுத்தாளர்@ விமர்சகர். முக்கியமாக அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் ஏராளம் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தொடர்ந்து அரசியற் பத்திகளையும் எழுதிவருகிறார். இதேபோலப் பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் மிகச் சாதாரண மனிதர்களையும் உள்ளடக்கிய நூற்றுக்கு மேற்பட்ட நேர்காணல்கள் இவரால் செய்யப்பட்டுள்ளன. ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராக நீண்டகாலம் செயற்பட்டிக்கும் இவர் தொலைக்காட்சியிற் பணியாற்றிய அனுபவமும் உள்ளவர். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட கருணாகரன், அந்தப் போராட்டத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் களத்தில் நின்றே நேரிற்பட்டறிந்த அனுபவத்தைக் கொண்டவர். அரசியல், இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியான அவதானிப்பையும் பங்கேற்பையும் கொண்டிருப்பவர் கருணாகரன்’

கருணாகரனின் பேச்சு பல இலங்கை இலக்கிய அறிமுகத்தை வழங்கியது. அவர் வாசிப்பில் முக்கியமாக எண்ணும் படைப்பிலக்கியங்கள் குறித்து விவரித்தார். தனது ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற கவிதை தொகுப்பினை வழங்கினார். பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பிற நண்பர்களும் வந்து சேர்ந்தனர். நிதானமாகப் பேச அறைக்குச் சென்றோம்.

– தொடரும்

(Visited 90 times, 1 visits today)

One thought on “இலங்கையில் ஏழு நாட்கள்…6

  1. நல்ல வாசிபனுபவமாக இருக்கிறது. ஆனால், பதிவுகளுக்கிடையிலான காலத்தைச் சுருக்கினால் நல்லது.

Leave a Reply to ப.மணிஜெகதீசன் from Kuala Lumpur, Kuala Lumpur, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *