காலியான சட்டைப்பையுடன்
குழந்தைகளை
வெளியில் அழைத்துச் செல்வது
சவாலானது.
குழந்தைகள் கண்ணில் படும் அத்தனையையும்
பார்வையிலிருந்து மறைக்க வேண்டும்
அவர்கள் கேட்கும் முன்பே
நொறுக்குத்தீனிகளின் தீங்கினை சொல்ல வேண்டும்
எதையும் இவை விலை மலிவானதென்றும்
தரமற்றதென்றும்
மட்டம் தட்ட தெரியவேண்டும்
இன்னொரு இடத்தில்
இதைவிட நல்லதாகக் கிடைக்கும் என
இல்லாத கடையை நோக்கி
நம்பிக்கையோடு செல்ல தெரிய வேண்டும்
நூறு வெள்ளிக்குச் சில்லரை இருக்கா எனக்கேட்டு
கடைக்காரரே நம்மை நிராகரிக்கச் செய்யவைக்கும்
திறன் வர வேண்டும்
காலியான சட்டைப்பையும்
குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்லும் போது
காலியான வாக்குறுதியுடன் அரசியல் நடத்தும்
கட்சி தலைவர்கள் போல மாறவேண்டும்.
மக்கள்
தலைவர்களை நம்புவதுபோல
குழந்தைகளையும் நம்மை
நம்பவைக்கச் செய்ய வேண்டும்.
(Visited 147 times, 1 visits today)
அரசியல் அப்பா, என்கிற தலைப்பு பொருந்தும்
குழந்தை வளர்ப்பும் அரசியலும் வெவ்வேறானவை.