சாகாத நாக்குகள் – 4 : கிளர்ந்த கொங்கை

imayamமுற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன்
நேற்றோ நாளையோ இல்லாத
இன்றானவன்
அறிதல் இல்லாத அவன் தொடுதலில்
கேள்விகளும் இல்லை
பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி, தந்தை பெயர்
பரிமாறிக்கொண்ட முத்தங்களில்
தகவல்கள் பொதிந்திருக்கவில்லை
                                                                                                                                                                                                           – லீனா மணிமேகலை

மனித நாகரீகம் தொடங்கிய காலத்தில் பெண்கள்தான் முதலில் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்று ஆண் மிருகங்களைவிட பெண் மிருகங்கள் வேட்டையில் சிறந்துவிளங்குவதை அறியலாம். தங்கள் குழந்தைகளைப் பாதுக்காக்க பெண்களே வேட்டையாடுவதில் முதன்மை வகித்தனர். இதைதான் தாய் வழி சமூகம் என்கின்றனர். தாய் வழி சமூகத்தில் பெண்ணே மையம். அவளுக்கு பல ஆண்கள் துணை இருப்பர்.

தொன்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளது மற்றுமொரு சான்று. உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வம் கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவர்களின் தெய்வமாகவும் வணங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம்வரை இவள்தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வன காளியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம்.

ஒருவகையில் கொற்றவை போன்றுதான் இன்று நம் பெண்களும் கடைசியில் ஒருவனுக்கு மனைவி என்ற அடையாளத்துடன் வாழ்வில் உன்னதம் கண்டுவிடுகிறார்கள்.

இன்று நாம் காண்பது தந்தைவழிச் சொத்துரிமை உள்ள சமூகம். இதில் தந்தை என்ற அடையாளம் சமூகநோக்கில் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தாகவேண்டும். அந்த அடிப்படையில்தான் பெண்ணுக்கான ஒழுக்கம் கட்டமைக்கப்பட்டது. அது பரிணாமம் அடைந்து கற்பு என்று ஆனது. இன்று ஆண்கள் கற்பு பற்றியும் பெண்களின் அடக்க ஒடுக்கம், ஒழுக்கம், மதிப்பீடு பற்றி பேசுவதெல்லாம் பெண் உடல்மீதான முற்றாதிக்கம் தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தினால்தான்.

இந்தத் தடைகளெல்லாம் இல்லாமல் சங்க இலக்கியங்களில் பெண் தன் உடலையும் அதன் மூலம் வெளிபடும் காமத்தையும் எவ்வாறு வெளிப்படுத்தினாள் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஅ வொல்லெனக் கூவு வென்கொல்

அலமர லசைவளி யலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே’ – உடல் சார்ந்த ஆற்றாமைகளை வலிமையுடையனும் தாபத்துடனும் வெளிப்படுத்தியுள்ள ஔவையின் பாடல் இது. இதேபோல ஆண்டாளின் பாடல்களும் ஏராளமாக உள்ளன.

இதே விடயத்தைக் கொஞ்சம் வரலாறு சார்ந்தும் பார்க்கலாம். இந்த வரலாற்று உண்மையை ஒரு புனைவின் அடிப்படையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற நூலை  ராகுல் சாங்கிருத்யாயன் எழுதியுள்ளார். தமிழில் கண. முத்தையா மொழிப்பெயர்த்துள்ளார். அதில் தாய் வழி சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு காட்சி வரும்.

ஒரு தாய் (தலைமை தாங்குபவள்) குழந்தையை ஈன்றெடுப்பாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் . தான் ஈன்ற மகன்களின் வலுவான ஒருவனை தேர்ந்தெடுத்து அவனுடன் தாய் உறவு கொள்வாள். அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும். இது பல்வேறு நிலைகளில் தொடரும். வரலாற்றில் ஒரு காலத்தில் இயல்பாக இருந்த விடயம் மற்றொரு சந்தர்ப்பத்தில் அபத்தமாகவும் அருவருப்பானதாகவும் மாறிவிடுகிறது. அருவருப்பு உணர்வை ஏற்படுத்துவது எது? இது தந்தை வழி சமூகம் ஆனப்பிறகு ஏற்பட்ட பழக்கத்தில் விளைவு . உறவுகளில் புனிதம் என்பது காலங்களுக்கு ஏற்ப மாறக்கூடியது.

தந்தைவழி சமூகமானப்பின்பும் ஆண் பெண் உறவுக்கான சிக்கல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பாலியல் சுதந்திரத்தை அறிய ஒரு மனமும் சமூகம் கட்டமைத்திருக்கும் ஒரு மனமும் என இரண்டிற்குமான ஊடாட்டத்தில் நகர்கிறது மனித வாழ்க்கை. இந்தச் சுவாரசியங்கள் எவ்வாறு கிராமங்களில் நாசுக்காக கையாளப்பட்டது என கி.ராஜநாராயணன் மறைவாய் சொன்ன கதைகளில் விவரிக்கும் சம்பவங்கள் ஒரு பூர்வக்குடியின் மனநிலையை மீண்டும் ஆராய்ந்துப் பார்க்கும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது.

அத்தொகுப்பில் சுவாரசியமான ஒரு கதை இருக்கும். வீட்டுக்கு வரும் கணவன் தன் மனைவி ஒருவனோடு நெருக்கமாக இருப்பதைப் பார்க்கிறான். அப்போது வந்தவனின் வாய் அந்தப்பெண்ணின் மார்பை சுவைத்துக்கொண்டிருந்தது. கணவனைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தவள் தன்னை தேள் கொட்டிவிட்டதாகவும் அதை உரிஞ்சி எடுக்கும் நிபுணத்துவம் கொண்ட அவன் வந்ததால் தான் உயிர் பிழைத்ததாகவும் அவள் கூறுகிறாள். வேறுவழியின்றி கணவனும் அவளை நம்புகிறான்.

ஒவ்வொரு காலத்திலும் பெண் தனக்கான பாலியல் சுதந்திரத்தை மீட்டுக்கொள்ள முயல்வதும் இறுக்கமாகிவிட்ட சமூகக் கட்டமைப்பால் அது இயலாமல் போவதுமாக தொடரும் வாழ்வை புனைவாக்கும் கலைஞர்கள் தமிழில் ஒருசிலர் உண்டு.

‘ஆழி சூழ் உலகு’ நாவலில் இதுபோன்ற கதாபாத்திரங்கள் எதார்த்தமாகவே வந்து போகின்றன. தன் தகப்பனுடன் உறவு கொண்டதால் ரோஸம்மாவை தன் தாய்க்குச் சமமாக நினைக்கிறான் வருவேல். ஆனால் அவனுக்கு ரோஸம்மாவிடம் உறவு ஏற்படுகிறது. இதனால் வருவேல் மன உளைச்சல் அடைவதுடன் அதிலிருந்து விடுப்பட முடியாமல் மீண்டும் மீண்டும் அவளுடன் உறவு கொள்கிறான். இந்தச் சிக்கலெல்லாம் அவனுக்குதான். ரோஸம்மா அவளுக்கே உரிய பாலியல் சுதந்திரத்துடன் நாவல் முழுவதும் செயல்படுவதாக ஆசிரியர் சித்தரித்திருப்பார். அதேபோல அதிகம் பேசாமல் ஒரு ஏமாளிப்போல நாவலில் வரும் மேரி (சூசையின் மனைவி) சுந்தரி டீச்சருக்கும் சூசையருக்கும் உள்ள இரகசிய உறவு தனக்குத் தெரிந்திருந்தாலும் எதுவும் தெரியாதது போலவே வந்து போகிறாள். இறுதியில் மீன் பிடிக்கச் சென்ற சூசையரின் நிலை அறியாமல் சுந்தரியைப் பார்த்து , “நம்மள விட்டுட்டு போயிருவாரா அக்கா…” என மேரி அழும்போதுதான் சுந்தரியோடு வாசகனும் அவள் வாழ்வைப் புரிந்து வைத்திருப்பதை உணரமுடிகிறது. பாலியல் சுதந்திரத்தை ஆணைவிட பெண்ணே எப்போதும் அறிந்தும் ஏற்றும் பின்பற்றியும் வருகிறாள்.

இமையத்தின் ‘எங் கதெ’ நாவலும் கண்டுப்பிடிக்கவே சாத்தியமற்ற பெண்ணின் இந்த மனநிலையைதான் ஆணின் கண்கொண்டு ஆராய்கிறது.

வேலை இல்லாத இளைஞன், அந்த ஊர் பள்ளிக்குக் குமாஸ்தாவாக வரும் அழகான இளம் விதவைப் பெண்ணை அடைய ஆசைப்படுவதில் தொடங்குகிறது கதை. இரு பெண் குழந்தைகளுக்குத் தாயான அப்பெண்ணின் மீதான ஆசை அவ்விருவருக்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. இத்தொடர்பு ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில், புதிதாக அந்த பெண்ணுக்கு மேலதிகாரியாக இருக்கும் ஒருவன் புதிய காதலனாக வருகிறார். இதனால் இவ்விருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகள், அதன் உளவியல் நெருடல்கள் என நாவல் விரிவாகி உச்சமான ஒரு தருணத்தில் குவிந்து முடிகிறது.

இந்த நாவல் தன்னிலையிலிருந்து எழுதப்படுகிறது. ஓர் ஆண் சொல்லும் கதையான இதில் பெண்ணின் மனநிலையை அவன் பார்வையிலிருந்தே நாம் அறிய வேண்டியவர்களாகிறோம். ஆனால் நவீன வாசகன் ஆசிரியர் சொல்வதைக் கடந்த ஒரு பெண்ணைக் கண்டடையக் கூடியவன்.

முழுமையாக நேர்மையில் ஊறியவனாகத் தன்னை தானே நம்பவைத்துக்கொண்டு ஒரு தியாகி முகத்துடன் நாவல் முழுவதும் வரும் இளைஞனின் போலி உணர்வுகள். அந்த உணர்வுகளின் உள்ளே மையமிட்டுள்ள ஆணவத்தைக் கசக்கி எரியும் பெண்ணின் பாவனையற்ற எதிர்வினை. இவ்விரண்டு உணர்வுநிலைக்குமான மோதல்கள். பெண் எப்போதுமே முகத்துக்கு முன் வீசி எறியத்துணியும் உண்மையை எதிர்க்கொள்ள சக்தியற்ற ஆணின் புலம்பல்கள். அவன் உணர்வை அவனே மீண்டும்மீண்டும் விழுங்கி உண்மையைக் கண்டடைய முனையும் மூர்க்கமான தருணங்கள் என நாவல் வாசகனை உலுக்கி எடுக்கிறது.

“ஒன் பணத்த புடுங்கிக்கிட்டனா? ஒன் சொத்த எழுதி வாங்கிக்கிட்டனா?என்னாத்த ஏமாந்திட்ட? மீறியும் ஏமாந்திட்டன்னு சொன்னின்னா வா. வந்து எனக்குத்தாலியக் கட்டு. புருசனா இரு. சம்பாரிச்சு போடு. நாளயிலிருந்து நான் வேலக்கிப்போவல. நானும் ஒனக்கு வப்பாட்டிங்கிற பேரோட சாவ விரும்பல” என மூர்க்கமான உண்மையுடன் பேசுபவளிடம், “நான் ஒன்ன கட்டிகிட்டா ஒனக்கு ஒம் புருசனோட பென்சன் நின்னுடும்ல” என மீண்டும் பொய்யான தியாகியாகிறான் ஆண்.

அவள் மீண்டும் உண்மையை வீசுகிறாள். “நின்னா மசுராச்சி. நீ தான் இருக்கியே. சம்பாரிச்சுப்போடு. ஆம்பள. .நானா வாணாங்கிறன்?” அந்த உண்மையின்முன் எந்த ஆணாலும் நிற்க முடியாது.

ஆணாதிக்க சமூகத்தில் பெண் தனக்கு மட்டுமே பாலியல் ரீதியாக சொந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆண்களின் எதிர்பார்ப்பையும் மீறி பெண் அவனைச்சாராமல் வாழும் சூழலில் ஆணுக்கு ஏற்படும் மன உளைச்சலும் இந்நாவல் முழுவதும் இமையத்தின் கூர்மையான வரிகளில் விரவி பரவியுள்ளது. அச்சம் தரக்கூடிய உண்மைகளை கருணையின்றி இந்நாவலில் இமையம் வீசி எறிகிறார். அவ்வுண்மைகள் வாசகன் நினைத்துப்பார்க்க விரும்பாத நுட்பமான உணர்வுகளை ரத்தக்கவிச்சியுடன் மேலிழுத்து வருகின்றன.

மாப்பஸானின் புகழ்ப்பெற்ற ‘நான் பைத்தியக்காரனா?’ என்ற சிறுகதையின் மூலமாகவும் வாசகன் அடைவது இந்த நுட்பமான உணர்வைதான். மிக சிறிய சிறுகதையாக இருந்தாலும் பல கோணங்களில் விவாதிக்கும் படியான உள் அடுக்குகளை இச்சிறுகதைக் கொண்டிருக்கிறது.

சிறுகதையில் தொடக்கமே இப்படி ஆரம்பிக்கிறது. “நான் பைத்தியக்காரனா? அல்லது பொறாமை பிடித்தவனா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கொடும் துன்பத்திலிருக்கிறேன். நான் செய்தது குற்றம்தான். ஆனால், நான் அனுபவிக்கும் கிறுக்குத்தனமான பொறாமை, காதலில் ஏமாற்றம், தாங்க முடியாத வலி இதெல்லாம் யாரையும் குற்றம் செய்யத் தூண்டாதா?” என அவன் புலம்புகிறான். இந்தக்கதையின் பாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லை. அவன் அவள், அது என்றே வருகிறது.

ஒருவன் அடங்காத காதலில் இருக்கிறான். அவன் காதலி அவனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கருதுகிறான். உண்மையில் அவன்தான் அவள் அழகில் கட்டுண்டு இருக்கிறான். பெண்மை என்ற உடல் அவனுக்குத் தோதானதாகவும் பெண்ணின் மனம் கொடிய மிருகம் போலவும் தோன்றுகிறது. அந்த மிருகத்தைக் கொல்லத்துடிக்கிறான். அவனுக்கு அவ்வாறு தோன்ற காரணம் அவன்மீது அவள் காட்டும் சலிப்புதான். அதை அவனால் தாங்க முடியவில்லை. தன்னைக்காட்டிலும் வேறொருவன் மீது அவளுக்கு ஆர்வம் வந்துவிட்டதாகத் தோன்றும் கனம் நெருப்பு தன்னுள் கனல்வதாக உணர்கிறான்.

ஆண்களின் மீதே வெறுப்பிருப்பதாக காட்டும் அவளிடம் அவன் புதிய உற்சாகத்தைப் பார்க்கிறான். அதற்கான காரணத்தைக் கண்டறிய முயல்கிறான். தன் பொறாமைக்கு மூலமாக இருக்கும் ஒன்றை ரகசியமாகத் தேடுகிறான். இறுதியில் அவன் அதை கண்டடைகிறான். ஆம் அது ஒரு குதிரை. அவள் ஒவ்வொரு நாளும் காலையில் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பித்துப்பிடித்தவள் மாதிரி குதிரை சவாரி செய்தாள்.

சூழலை சுதாகரித்து அவன் அவளுக்கு குதிரையிலிருந்து இறங்க உதவச்சென்றால் குதிரை முட்ட வருகிறது. அவள் குதிரைக்கு முத்தமிடுகிறாள். உதடையும் துடைத்துக்கொள்வதில்லை. அவன் பொறமை அதிகரிக்க ஒருநாள் அவள் சவாரி செய்துவரும் பாதையில் கயிரைக்கட்டி குதிரையை வீழ்த்துகிறான். காதலியை விழாமல் தாங்கி பிடிக்கிறான். பின்னர் மனிதனைச் சுடுவது போல குதிரையில் தலையில் தோட்டாவைப் பதித்து சாகடிக்கிறான். காதலி அவனை குதிரை சவுக்கால் அடித்து தொடர்ந்து தாக்கவர அவளையும் சுடுகிறான்.

கதையின் இறுதியில் வாசகர்களை நோக்கி கேட்கிறான்..

“சொல்லுங்கள், நான் பைத்தியக்காரனா?”

கதையில் மொத்த கதாபாத்திரங்களே மூன்றுதான். அதில் ஒன்று குதிரை. இந்தக் கதை ஒரு சம்பவத்தைதான் சொல்கிறது. ஒரு கொலை சம்பவம். ஆனால் இந்தக் கதையின் நோக்கம் கொலையைச் சொல்வதல்ல. அந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கும் உளவியலை பேசுவது.

மனித உறவுகளின் ஓயாதச் சிக்கல்களை பெரும்பாலான இலக்கியங்கள் காலந்தோறும் பேசிக்கொண்டே இருக்கின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவுக்கு மத்தியில் அன்பும் காதலும் எப்போதுமே கேள்விக்குட்படுத்தப்பட்டு அதன் அசல்தன்மை எல்லா இலக்கியங்களிலும் ஆராயப்பட்டே வருகிறது. இந்தக் கதையில் தன் காதலி தன்னால் மகிழ்ந்திருக்கும்போது அவளைக் குறித்து அவனுக்கு எவ்வித புகார்களும் இல்லை. அவள் அவனுக்கு சுவாரசியமானவளாக இருக்கிறாள். ஆனால், அவள் கவனம் விலகும்போது அவள் குறித்த அவனது சித்தரிப்புகள் மனப் பேதலிப்பாக மாறுகிறது. இந்த பேதலிப்புக்காரணம் அவளது வெறுப்பல்ல. அவனில்லாதபோது அவளடையும் மகிழ்ச்சியே.

ஒவ்வொரு ஆணும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, ஒரு பெண்ணின் சோகத்தை, கோவத்தை, வெறுப்பை என அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் நாம் அவள் நாமின்றி மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு எது காரணமாக இருக்கிறது? ஏன் அதனால் பதற்றமடைகிறோம்? ஆனால், அதை அழிக்க ஏன் அவ்வளவு சிரமம் எடுக்கிறோம். ஆண் மகிழ்ச்சி கொள்ளும் எத்தனையோ காரணங்களில் பெண்ணும் ஒன்று என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் பெண் மகிழ்ச்சியடையும் காரணங்களில் ஆணும் ஒன்று என்பது மட்டும் நமக்கு ஏன் கசக்கிறது?

தானில்லாமல் பெண் அடையும் மகிழ்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத ஓர் ஆணின் மனநிலையிலிருந்து இன்னும் ஆழமாக உடல் அரசியல் குறித்து பேசுகிறது சுரேந்திர வர்மா என்பவரால் 1978 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘சூரியனின் கடைசி கிரணம் முதல் சூரியனின் முதல் கிரணம் வரை’ என்கிற நாடகம்.

மல்ல நாட்டின் அரசன் ஒக்காக். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட அவன் குருகுலத்தில் தங்கி பயின்றவன். அரசனாக முடிசூட்டப்பட்டதற்குப் பிறகு அவனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. சீலவதி என்கிற ஏழைப்பெண் அவனுக்கு மணமுடிக்கப்படுகிறாள். அவன் உடல் காமத்தில் அசைவதில்லை என்ற உண்மையைக் கேட்டு சீலாவதி அவனது குறைபாட்டுடன் ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் அரசுக்கு வாரிசு தேவைப்படுகிறது. ராஜகுரு, முதன்மந்திரி, படைத்தளபதி ஆகியோர் மன்னனையும் அரசியையும் சந்தித்து அரசமரபை காப்பாற்ற வேண்டியதின் கடமையைச் சொல்கின்றனர்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அரசனால் இயலாத பட்சத்தில் அரசியானவள் மாற்றுக்கணவன் ஒருவனை தேர்ந்தெடுத்து வாரீசை பெற்றுத்தரும் வழக்கத்தை எடுத்துரைக்கின்றனர். ஊருக்கே தான் ஆண்மையற்றவன் எனத் தெரிந்ததால் ஒக்காக் தான் அவமானப்படுத்தப்படுவதாகச் சினமுறுகிறான்.

நாட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது. மல்ல நாட்டு ஆண்கள் அனைவரும் அரண்மனைக்கு வெளியே இருக்கும் திடலில் குவிக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவரையும் அரசிக்குப் பிடிக்கவில்லை. இறுதியில் பிரதோஷன் என்பவனுக்கு மாலை சூட்டி அவள் மாற்றுக்கணவனாக தெரிவு செய்கிறாள். அரசனுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்ததால் அவளால் துறக்கப்பட்ட காதலன்தான் அவன்.

இந்த நாடகம் சூரியனின் கடைசிக்கிரணம் மறையும்போது அரண்மனையை விட்டு அரசி தன் காதலனுடன் செல்வதிலிருந்து தொடங்குகிறது. அரண்மனைக்கு எதிரில் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் அவனுடன் தங்கி மறுநாளின் அதிகாலையில் சூரியனின் முதல்கிரணம் உதிக்கும்போது அரண்மனைக்குத் திரும்புகிறாள் அரசி.

சென்ற காரியம் சுபம்தானே என்று கேட்கிறார்கள் அரசியை வலுக்கட்டாயமாக அனுப்பியவர்கள். அரசியோ அவளுக்கு இன்னும் இருக்கும் இருவாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளப் போவதாகக் கூறுகிறாள். ஒருமாதம் பொறுத்து முடிவெடுக்கலாம் எனக்கூறும் மந்திரிசபையின் ஆலோசனையையும் அவள் ஏற்க மறுக்கிறாள். அரண்மனைவாசிகளிடம் அவள் பேசும் இறுதி வசனங்கள் சமூக ஒழுக்கம் ஒரு பெண்ணைக் கலாச்சாரம் என்ற பெயரால் உடல் ரீதியான தேவைகளைக் கட்டிப்போட்டு வைத்துள்ளதையும் அதை உடைக்கும் பொருட்டு அவள் தன்னை விடுவித்துக்கொள்வதாகவும் கூறுவது உஷ்ணம் தோய்ந்தவை.

மனித உடல்கள் அடிப்படை தேவைகளால் இயங்குபவை. பசி, தூக்கம் போன்றவற்றை பெண்ணுக்குச் சமமாக வழங்கப்பழங்கியுள்ள சமூகம் அவள் காமம் குறித்து பேசுவதற்கு அஞ்சுகிறது. குடும்ப அமைப்பில் பெண்ணின் புனிதங்கள் கட்டமைக்கப்பட்டு அது ஆணின் தேவைக்கு ஏற்ப இயங்கும் அம்சமாகவே நிருவப்பட்டுள்ளன. ஆனால் இலக்கியங்கள் மறைத்துவைக்கும் உண்மைகளை கிழித்துப்பார்க்கும் கூரிய நகம் கொண்டவை. அது உண்டாக்கும் வலியை பொறுத்துக்கொண்டே வாழ்வை சுகிக்க வேண்டியுள்ளது.

ஔவை, ஆண்டாள், லீனா மணிமேகலை போன்ற பெண்கவிகள் தொடங்கி மாப்பஸான், இமையம், சுரேந்திர வர்மா என படைப்பாளர்கள் பலரும் சமூக மனம் மூடிவைத்து பாதுகாக்கும் உண்மைகளை ஒவ்வொரு முறையும் தீண்டுகின்றனர். படைப்பின் மூலம் ஓயாமல் வலியெழுப்புகின்றனர். பெண் உடல் சமூகத்தில் ஆணுக்குச் சொந்தமான ஓர் கருவியாக மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. படைப்பாளன் அதை கேள்வி எழுப்புகிறான். இறுக்கமாகிப்போய்விட்ட சமூக எண்ணங்களை உலுக்கி உதிரவைக்க இலக்கியங்களால் முயல்கிறான். ஆச்சரியமாக காலம் தேசம் கடந்து பெண்ணுக்கான உடல் அரசியல் தீராத வேகத்தோடு இந்த முயற்சிகளால் நகர்ந்துகொண்டே இருக்கிறது.

(தலைப்பு: ஆண்டாள் பாடலில் உள்ள வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.)

.

(Visited 969 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *