ஆதிக்கும் ஆதியில் உலகில் இருந்தது என்னவென்று கேட்ட மாயாவிடம்
இருள் என்றேன்
அவள் வெளியே விரல்களை நீட்டி
அந்த இருளா என்றாள்.
வாகனங்களும் தெருவிளக்கும் நட்சத்திரங்களும்கூட இல்லாத
மாபெரும் ஆதி இருள்
அகப்படாது என்றேன்.
கதவையும் சன்னல்களை அடைத்து
இந்த இருளா என்றவள்
நான் பதில் சொல்லும் முன்பே
விளக்கின் விசைகளை அடைத்து
எஞ்சியிருந்த சின்னஞ்சிறிய தீபத்தையும் ஊதினாள்
அது அளவிட முடியாத
அடர்தியான இருள் என்றேன்
அருகில் வந்தவள்
இந்த இருளா என்றாள்
நான் அவள் முகத்தைத் தடவித்தேடி
மூடியிருந்த கண்களை அடைந்தேன்
ஆதி இருள்
இரு சிறு விழியளவு
அவளிடம்
அகப்பட்டிருந்தது.
***
அரைமூடி தேங்காய்க்குள் இருந்த
பொட்டலத்தைப் பிரித்து
தன் நெற்றியின் நடுவில்
அளவெடுத்து வைக்கச்சொன்ன மாயா
எஞ்சிய விபூதியை
தனது சிறிதினும் சிறிய விரலில்
எனக்கிட்ட போது
கடவுள் இருப்பதாக
அவளிடம் மட்டும் ஒப்புக்கொண்டேன்
***
கைகளும் கால்களும் தலையுமில்லாமல்
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன மாயா
மறுநாள் கழிவறை குளிவழியாக
இருளில் மூழ்கிப்போனாள்
பிறப்பின்
அபத்தம் அறிந்து
////கைகளும் கால்களும் தலையுமில்லாமல்
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன மாயா
மறுநாள் கழிவறை குளிவழியாக
இருளில் மூழ்கிப்போனாள்
பிறப்பின்
அபத்தம் அறிந்து////
வாசகனை அழ வைக்கிறீர்கள் நவீன். இவ்வரிகள் என்னை பலவீனப்படுத்துகின்றன…