ஓஷோவின் பிரபலமான ஒரு குட்டிக்கதை இன்று காலை நினைவுக்கு வந்தது.
ஒரு பெரும் பணக்காரன் தன்னிடம் உள்ள செல்வங்கள் அனைத்தையும் தங்கக்கட்டிகளாக மாற்றி ஒரு துறவியின் காலடியில் வைக்கிறான். துறவியிடம் அந்தத் தங்கங்களையெல்லாம் பெற்றுக்கொண்டு தான் இழந்திருக்கும் மகிழ்ச்சியை எப்படியாவது மீட்டுத் தரும்படி கேட்கிறான். துறவி சட்டென அந்த தங்கக்கட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அந்தத் துறவி போலியானவர் எனக் கருதிய பணக்காரரும் பின் தொடர்ந்து துரத்துகிறார். துறவி ஊர் முழுவதும் சுற்றி ஓடுகிறார்; மலை, நதிகளைக் கடந்து ஓடுகிறார். செல்வந்தரும் தன் வாழ்நாளெல்லாம் சம்பாதித்த பணம் ஒரே நிமிடத்தில் கொள்ளைப்போனதினால் விடாமல் துரத்துகிறார். இறுதியில் துறவி எங்கு அமர்ந்தாரோ அங்கேயே வந்து அமர்கிறார். பணக்காரரும் மூச்சிரைக்கத் துறவியின் முன் நிற்கிறார். துறவி புன்னகையுடன் அவரிடம் அந்தத் தங்கக் கட்டிகளைத் தருகிறார். ‘இப்போது உனக்கு எப்படி இருக்கிறது,’ எனக் கேட்கிறார்.
பணக்காரர் சொன்ன பதிலைத் தெரிந்துக்கொள்வதற்கு முன் இன்று இந்தக் கதை நினைவுக்கு வர 2015ன் உலக அழகி போட்டியின் இறுதி காட்சி காரணம் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
2015க்கான உலக அழகி போட்டி முடிவை இன்று காலையில் யூ டியூப்பில் பலமுறை பார்த்துக்கொண்டே இருந்தேன். சில தினங்களுக்கு முன் முகநூலில் பார்த்தது. லாஸ் வேகஸ் பகுதியில் நடைப்பெற்ற 65-வது உலக அழகிப் போட்டியின் முடிவு, விடுமுறையில் இருக்கும் எனக்கு இந்த மந்தமான காலையில் புதிய ரகசியங்களைச் சொல்லிக்கொண்டிருந்தது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார் ஸ்டீவ் ஹார்வே. அரங்கின் முன் கொலம்பியா, அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு அழகிகள் மூவரும் நின்றுக்கொண்டிருந்தனர். மூவரில் ஒருவர்தான் உலக அழகி. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சியின்படி எவ்வித உணர்ச்சிகளையும் அதிகம் காட்டாமல் அவர்கள் உற்சாகமான சிரிப்புடன் மட்டும் அரங்கை அலங்கரித்திருந்தனர். அமெரிக்க அழகி மூன்றாவது நிலையில் வெளியேற அரங்கின் மையத்தில் கொலம்பிய அழகியும் பிலிப்பைன்ஸ் அழகியும் கைகளைக் கோர்த்து நிற்கின்றனர். அரியட்னா குடியர்ரெஸ் (கொலம்பியா) இந்த ஆண்டிற்கான உலக அழகி என்று அறிவிக்கிறார் ஸ்டீவ் ஹார்வே .
உலக அழகி பட்டம் வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் விடுகிறார் அரியட்னா குடியர்ரெஸ். அவருக்கு 2014ஆம் ஆண்டிற்கான உலக அழகியான பவுலினா வேகா உலக அழகி கிரீடத்தையும் பட்டத்தையும் அணிவித்தார். அவரும் கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இருவரும் கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரியட்னா குடியர்ரெஸ் அரங்கை வலம் வந்து உற்சாகம் குன்றாமல் இருக்கும்போது ஸ்டீவ் ஹார்வே மீண்டும் அரங்கம் வந்து “என்னை மன்னித்துவிடுங்கள். நான் உலக அழகி பெயரை தவறுதலாக அறிவித்து விட்டேன்” என்றதும் அரங்கத்தில் கூச்சல். அவர் மீண்டும் உலக அழகையின் பெயரை அறிவித்தார். பியா அலோன்ஜோ பக்கத்தில் இருந்த அமெரிக்க அழகியிடம் நடப்பது என்ன என்பதுபோல நம்ப முடியாமல் கேட்கிறார்.
இறுதியில் 2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தட்டிச் செல்கிறார். கிரீடம் பட்டங்கள் இடம் மாறுகின்றன. விஜய் அல்லது சன் டிவி போல ஏமாற்றத்தின் சுவடுகளைப் பதிவு செய்கிறோம் என அரியட்னா குடியர்ரெஸ் முகம் குலோசப்பில் எல்லாம் காட்டப்படவில்லை. பியா அலோன்ஜோ அப்போது அவ்வளவு அழகியாக இருந்தார். சட்டென முதன் முதலாக ரயிலைப் பார்க்கும் குழந்தையின் முகம் அது.
ஐந்து நிமிடத்தில் நடந்து முடிந்த இந்தச் சம்பவங்களை நான் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். வென்றவருக்கு விளம்பர மாடலாக, சினிமா நடிகையாக மிகப்பெரிய வாய்ப்புகள் வரலாம். சில நாடுகளில் அரசின் கொள்கைகளைப் பிரசாரம் செய்யவும் உயரிய அங்கீகாரமெல்லாம் கொடுத்து உலக அழகிகளுக்கு அந்தந்த நாடுகள் மரியாதை செய்வதுண்டு. எல்லாமே இந்த ஐந்து நிமிடத்தில் தலைகீழ் ஆகிவிடுகிறது.
தனக்கு உலக அழகி பட்டம் இல்லை என தெரிந்த அந்த நிமிடம் அரியட்னா குடியர்ரெஸ் என்ன நினைத்திருப்பார்? அதற்கு சில வினாடிகளுக்கு முன் அவர் விட்ட கண்ணீருக்கும் அதன் பின் விட்ட கண்ணீருக்கும் என்ன வித்தியாசம் இருந்திருக்கும்? அந்த மகிழ்ச்சி அதற்கு முன் எங்கு இருந்து அவரிடம் வந்து சேர்ந்தது பின் எங்கே சென்று மறைந்தது? மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து வருவது மட்டுமா? அல்லது அது எப்போதுமே நாம் கண்டுக்கொள்ள முடியாத நமது இருளுக்குள் மறைந்தே உள்ளதா? அதற்கு முன்வரை சாமனியனாகத் தன்னை நிறுவி வைத்திருந்த பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் வெற்றிக்குப் பின் என்னவாகத் தன்னை உணர்கிறார். தான் அழகி என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்திருப்பாரா? அவர் அடைந்த மகிழ்ச்சி யாரிடமிருந்து கிடைக்கிறது. அப்படியானால் மகிழ்ச்சி ஒருவரிடமிருந்து வாங்கக்கூடியதா? அதன் விலை என்ன? இவ்வாரான கேள்விகள் துளைத்துக்கொண்டே இருந்தது.
ஸ்டீவ் ஹார்வே தான் செய்தது மனிதத் தவறு என்று கூறி மன்னிப்பும் கேட்டார். மனிதனால் தீர்மானிக்கப்பட்ட அரியட்னாவின் தற்காலிக வெற்றியில் தவறு உள்ளதை இன்னும் இன்னும் விரித்துப்பார்க்கிறேன். உலகின் எல்லா வெற்றி தோல்விகளும் மனிதனால் தீர்மானிக்கப்படுகின்றன. அனைத்துமே அர்த்தம் அற்றவையாக மனிதனின் தவறுகளாகவே படுகிறது.
முனிவரைச் சந்தித்த முன்னும் பின்னும் கூடுதலாகவோ குறைவாகவோ எதிலும் மாற்றம் பெறாத பணக்காரர் தங்கக்கட்டி கிடைத்தவுடன் அடைந்த மகிழ்ச்சின் காரணம்தான் என்ன? அதற்கு முன் அந்த மகிழ்ச்சி எங்கு இருந்தது?
அருமை……
படித்து முடித்து தொடர்ந்து சிந்திக்க வைக்கிறது….