ஜகாட் : ஒரு பார்வை

12311134_1180392091990100_6175131264515351687_nநேற்று ‘ஜகாட்’ திரைப்படத்தின் சிறப்புப் திரையிடலுக்குப் போயிருந்தேன். இவ்வாறு நான் போகும் இரண்டாவது திரைப்படம் இது. முதல் படம் ‘வெண்ணிர இரவுகள்’. அதில் கதாநாயகி எழுதும் வலைப்பூவின் ‘குரங்கு – அணில்’ கதை தொடரை எழுதும் பணி எனது. ‘ஜகாட்’ திரைப்பட கதை உருவாக்கத்தில் நான் பங்கு பெற்றிருந்தேன். இயக்குனர் சஞ்சை கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்படத்தின் கதையை ஒரு சிறுகதையாக எழுதியபோதே முழுமையாக அதன் அசல் தன்மையை உள்வாங்க முடிந்தது. அதன் அரசியல் எனக்கு உவப்பானதாக இருந்தது. இன்றோடு மூன்றாவது முறை அப்படத்தைப் பார்க்கிறேன். இது செறிவு செய்யப்பட்ட இறுதி வடிவம். முந்தைய இரண்டு வடிவங்களைக் காட்டிலும் கூடுதல் விறுவிறுப்பு இணைந்துள்ளது.

நான் பெரிதாக உலகத் திரைப்படங்களைப் பார்க்கும் வெறியன் எல்லாம் இல்லை. Rashomon – Akira Kurosawa, The Pianist – Jane Campion, Rabbit Proof Fence – Phillip Noyce, Cinema Paradiso – Giuseppe Tornatore, City of God – Fernando Meirelles, Children of Heaven – Majid Majidi போன்ற சலிப்பை ஏற்படுத்தாத முப்பதுக்கும் குறையாத நல்ல திரைப்படங்களைப் பார்த்திருப்பேன். சில படங்களின் பெயர்கள் இலக்கியவாதிகள் மத்தியில் மீண்டும் மீண்டும் அடிப்படுவதால் பார்க்க வேண்டும் என்ற வேட்கையிலேயே பார்த்து முடித்துள்ளேன். Dreams என்ற Akira Kurosawa திரைப்படத்தைப் பார்க்க முயன்று தோற்றுள்ளேன். அதே சமயம் அவரது Seven Samurai என்ற நீளமான திரைப்படத்தை சலிக்காமல் பார்த்துள்ளேன். ஒரே இயக்குனரது படம்தான். ஆனால் எனக்கு உவப்பில்லாத படங்களுடன் நான் மல்லுக்கட்டுவதில்லை. தமிழில் ராம் எனக்குப் பிடித்தமான இயக்குனர். அவரது ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தைப் பலமுறை ரசித்ததுண்டு. ‘தங்க மீன்கள்’ திரைப்படம் ஒளிபரப்பினாலே தொலைக்காட்சியை அடைத்துவிடுவேன். அது என்ன விருது வாங்கினாலும் அடிப்படையில் என் ரசனையோடு ஒத்துப்போகாவிட்டால் நேரத்தை வீணடிப்பதில்லை.

இவ்வாறான ரசனை அடிப்படையில் நான் அறிந்துகொண்ட அடிப்படையான ஒரே விடயம் திரைப்படத்துக்கான ஒரு மொழி உள்ளது என்பதைதான். ஒரு திரைப்படத்தில் அந்த மொழி இல்லை என்றால் ஏதோ மேடை நாடகம் பார்ப்பது போல இருக்கும். இந்த ரசனையைக் கொண்டே என்னால் ஒரு திரைப்படத்துடன் முதல் கட்டத்தில் இணங்க முடிகிறது. அது பேசும் விசயமெல்லாம் இரண்டாவதுதான்.

பழமையான மேடை நாடகங்களில் காட்சிக்கு இரண்டாம் இடம்தான். கண்களை மூடிக்கொண்டாலும் முழுமையாகக் கதை விளங்கும். நடக்கும் ஒவ்வொன்றும் வசனங்கள் வழி விளக்கப்படும். சினிமாவுக்கென தனி அழகியல் இருக்கும்போதும் இதே உத்தியை மலேசியத்திரைப்படங்கள் (தமிழ்நாட்டுப்படங்களிலும் அதிகம் உண்டு. அவங்களைப் பத்தி பேச ஒன்றும் இல்லை.) பல காலமாகவே கடைப்பிடித்து வருகின்றன. கண்களை மூடிக்கொண்டாலும் கதை புரியுமே என அப்படியே தூங்கிப்போன கதையெல்லாம் உண்டு. ‘ஜகாட்’ திரைப்படத்தை முதல் முதலில் பார்த்தபோது எனக்கு பிடித்த அம்சம் காமிராவின் மூலம் கதைச்சொல்லல் முறைதான். சில காட்சிகளைத் தவறவிட்டால் எந்த வசனத்தைக் கொண்டும் நிரப்ப முடியாத நுட்பத்துடன் கையாண்டுள்ளார் இயக்குனர்.

வானொலியும் வாழ்வும்

இத்திரைப்படம் 90களில் நடக்கும் சூழலை அடிப்படையாகக் கொண்டது. 90களில் பெரும்பாலோர் வீடுகளில் வானொலி கேட்பது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் உணவகம், வாகனம், வீடு என எல்லா இடங்களிலும் வானொலியில் குரலே ஒலித்துக்கொண்டிருக்கும். ஜகாட் திரைப்படத்தில் வானொலி ஒரு துணைக்கதாபாத்திரமாகவே வருகிறது. சூழலுக்கு ஏற்ப அது இசைத்துக்கொண்டே இருக்கிறது. ஒரு காட்சியில் மலேசிய இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தப்போவதாகச் சொல்லும் சாமிவேலுவின் செய்தி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்க அப்பா தனது கால்சட்டைக்கு பிளாஸ்டிக் கயிறை இடைவாராக உபயோகிப்பது கூர்மையான அரசியல் விமர்சனம்.

கலைக்கும் பிரச்சாரத்துக்குமான இடைவெளி புரியவேண்டுமென்றால் இக்காட்சி ஒன்று போதுமானது. உண்மையில் இதை மட்டுமே கொஞ்சம் நீட்டி குறும்படமாகவே தயாரிக்கலாம்.

பெண்ணும் குடும்பமும்

ஜகாட் திரைப்படத்தில் மூன்று பெண்கள் வருகிறார்கள். ஒரு சிறுமியும் அவ்வப்போது வந்து போகிறாள். சீன மனைவியாக வரும் பெண், கணவனுடன் அமர்ந்து சரிசமமாகச் சாப்பிடுகிறாள். மலாய்க்காரப்பெண் உணவகத்தில் கணவன் குழந்தைகளுடன் விளையாடுகிறாள். அப்போயின் அம்மா 90களின் தமிழ்க்குடும்பங்களில் உள்ள அம்மாக்களின் பிரதிநிதியாகவே வருகிறார். அவருக்கு கருணை காட்டுவதும் அதன் அடிப்படையில் சமைப்பதும் இதர வேலைகள் செய்வதும்தான் கடமை. கணவன் இருக்கும் போது அவர் முன்னறைக்கே வருவதில்லை. தனது மைத்துனன் சிறையில் அடைக்கப்பட்டபோதுதான் அவர் கொஞ்சம் வெளிவருகிறார். அதுவும் கருணை வடிவமாக. இதுவும் சஞ்சை சமூகத்தின் மீது வைக்கும் விமர்சனம்தான். தமிழ் பெண்கள் கருணை உள்ளவர்களாக நம்பவைக்கப்பட்டு அதன் மூலம் அவர்களை இயக்கக்கூடிய விசையை ஆண்கள் இலகுவாக்கிவிடுகிறார்கள். வீரியம் மிக்கப் பெண்களைக் கருணைக்கடலாக மாற்றி; அப்படியே கலிமண் சிலையாக்கி மூலையில் கிடத்தும் உத்தி அது.

சீனர்களும் ஆதிக்கமும்

சீனர்களுக்கும் இந்தியர்களும் இன்றைக்கு வரை இருக்கின்ற இணக்கத்தையும் பிணக்கத்தையும் ஆழமாகவே இப்படம் பேசுகிறது.

குண்டர் கும்பல் கலாச்சாரத்தில் சீனர்கள் கைக்காட்டிய இடத்தில் பாயும் வேட்டை நாய்களாகத் தமிழர்கள் காலாகாலமாக இருந்து வருவது ஒரு புறம் என்றால் தமிழர்களை அழிக்க மற்றுமொரு தமிழனையே சீனர்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்துவதும் இன்றுவரை நடக்கும் இருண்ட உலகின் நிதர்சனம். பொதுவாகவே தமிழர்களிடம் ஓர் அடிமைப் பண்புண்டு. சீனர் தன்னைச் சரிக்கு சமமாக பார்ப்பதுபோல பாசாங்கு செய்தாலே ‘தௌக்கே தௌக்கே’ என உருகிவிடுவோம். இப்படம் மூன்று வேறுபட்ட சீனர்களைக் காட்டுகிறது.

  • முதலாவது (குண்டர் கும்பல் தலைவன்) – அன்பாகப் பேசி அதிகாரம் தருவதாக தன்வசம் தமிழர்களை இழுத்துக்கொள்பவன்.
  • இரண்டாமவன் (மற்றுமொரு குண்டர் கும்பல் தலைவன்)- தமிழர்களை வேட்டை நாய்போல பாவிப்பவன். ஒரு தமிழன் தன்னிடம் நேருக்கு நேர் பேசுவது இழிவென கருதுபவன்.
  • மூன்றாவது, அப்பாவின் முதலாளி.

மூவரும் முதலாளிகள். மூவரும் சீன சமூகத்தின் வெவ்வேறு முகங்கள்.

ஆசிரியர்களும் கற்றல் முறையும்

இப்படத்தில் மூன்று ஆசிரியர்கள் வருகிறார்கள்.

முதலாவது இந்தக் கல்வித்திட்டத்தின் மீது சலிப்படைந்த ஓவிய ஆசிரியர். அவரால் அப்போயைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவரிடம் உள்ள கசப்பு எதையுமே அணுசரித்துபோய்விடும் மனநிலையையே கொடுக்கிறது. அவரும் அவனை அணுசரித்தே போகச் சொல்கிறார்.

இரண்டாவது மாறு வேடப்போட்டிக்கு மாணவர்களைத் தயார் செய்யும் டீச்சர். அவரும் அப்போயை ஊக்கப்படுத்துபவராக உள்ளார். ஆனால் அது சொற்களின் அளவில் உள்ளது. அவன் மீதான அன்பு கேள்விகளூடே நிற்கிறது.

மூன்றாவது, கணித ஆசிரியர் கல்விக்கொள்கையைப் பிடிவாதமாகப் பின்பற்றுபவர். ஒருவிதத்தில் இவர் கதாப்பாத்திரமே படத்தை மொத்தச் சிக்கல்களுடன் தொடர்புப் படுத்துகிறது. வகுப்பில் கேள்விகள் கேட்க மாணவனைத் தடைவிதிக்கும், மனனத்தை மட்டுமே நிர்வகிக்கும், தண்டனைகளை மட்டுமே நம்பியிருக்கும் ஓர் அதிகார மையம் எவ்வாறான மாணவர்களை உற்பத்தி செய்கிறது எனக் காட்டும் கதாப்பாத்திரமே அவர்.

லும்பனிஸமும் மலேசியத் தமிழர்களும்

கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியச் சொல்லான ‘Lumpenproletariat’ என்பதை அறிமுகப்படுத்துகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட உழைப்புடன் தொடர்பற்ற, வர்க்க உணர்வை நோக்கி நகராத உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளை ஆரம்பத்தில் அவர் அவ்வாறு அழைத்தார். இவர்கள் உதிரி மனிதர்கள். ஒருவகையில் ‘ஜகாட்’ மலேசியாவில் முதல் லும்பன் தமிழ்த்திரைப்படம் எனலாம்.

அப்போயின் இரண்டு சித்தப்பாக்களும், குண்டர் கும்பலில் ஈடுபடுபவர்களும், போதைக்கு எப்போதும் அடிமையாகியுள்ள சித்தப்பாவின் நண்பனும், அவனுக்கு பரிசாக வழங்கப்படும் பாலியல் தொழிலாளியும், சாவு செய்தி சொல்பவரும் என லும்பர்களால் நிறைந்த காட்சியை சஞ்சை படமாக்கியுள்ளார். இதில் சித்தப்பா வரும் காட்சிகள் (போதையில் இருப்பவர்) கவித்துவமானவை. செந்தில் அப்பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். மௌனமும் வாழ்வின் மீதான தீராத சலிப்பும் என அவர் திரைகதைக்கு அழுத்தம் கொடுக்கிறார்.

படத்தின் பலம் – பலவீனங்கள்

செறிவு செய்யப்பட்ட இறுதி வடிவத்தில் சில பலவீனங்களைப் பார்க்க முடிந்தது.

அப்போய் (அர்வின் குமார்- தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவன்) மற்றும் குபேந்திரனிம் நடிப்பு நிறைவானது. அச்சு அசலாக 90களில் தொழிற்சாலையில் அமுக்கப்படுவதால் வீடுகளில் முழு அதிகார உணர்வுடன் உலாவும் அப்பாவையும் தன் அடையாளம் எங்குமே தெரியக்கூடாது என இருளுள் மறைந்துள்ள அம்மாவும் நிஜ வாழ்வில் பார்ப்பது போலவே வந்துபோகிறார்கள்.

சிறுவர்கள் சண்டைக்காட்சியில் இருக்கும் எதார்த்தமும் தீவிரமும் பெரியவர்களின் சண்டைக்காட்சியில் இல்லை. மிகத்திட்டமிட்டு கராத்தே பழகிய இருவர் சண்டைப் போடுவதாகவே அது அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது போன்ற சண்டைகளில் நெறி இருக்காது. அதில் அடிப்பதைவிட தள்ளுவது, இழுப்பது, அமுக்குவது போன்ற அம்சங்களே நிரம்பியிருக்கும். நேரடியான சண்டைகளைப் பார்த்து பார்த்து அலுத்துவிட்ட சூழலில் சண்டைக்காட்சி இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம் என்று தோன்றுகிறது. அதேபோல போதைப்பொருள் விநியோகிப்பாளனை (வடி) கதாநாயகன் அடிக்கும்போது கேட்கும் போலிஸ் சைரன் ஒலி தமிழ்ப்படங்களில் பார்த்துப் பார்த்து புளித்துப்போன காட்சி. அது அங்கு ஒரு குறியீடாக இருந்தாலும் காட்சியின் தீவிரத்தன்மையைச் சற்றே கெடுக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சியில் இரு இடைநிலைப்பள்ளி மாணவர்களோடு அப்போய் மோதும் காட்சி மிக மேலோட்டமாகக் காட்டப்பட்டுள்ளது. அதற்கு முன் இடம்பெற்ற மற்ற இரு சண்டைக்காட்சிகளும் மிக எதார்த்தமாக இருந்தன. அப்போய் பெரிய ரௌடியாக வரும் வாய்ப்புள்ளதை இருவரை அவன் அடிக்கும் காட்சியில் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஒருவன் இருவரை அதுவும் தன்னைவிட பலம் பொருந்தியவர்களை அடிப்பது மீண்டும் தமிழ்ப்பட சாயலையே நினைவூட்டியது. அந்த இருவரும் அதிகபடியாக சக்தியைப் பயன்படுத்தாமல் ஒருவிளையாட்டுபோல சண்டையிட்டதுபோல மனதில் காட்சி நிற்கவில்லை.

தன் மைத்துனனை ஜாமினில் எடுக்க அம்மா நகைகளைக் கொடுக்கும் காட்சியும் படத்தில் ஒட்டாமல் இருக்கிறது. பொதுவாக வீடுகளில் இருக்கும் அம்மா அப்படி தங்க நகைகளை அணிந்திருப்பதில்லை. அக்காட்சியில் அம்மா கையிலிருந்து நகைகளை கலட்டிக்கொடுக்கிறார். அவர்களின் பொருளாதார சூழல் குறித்த எவ்விதமான திட்டவட்டமான எண்ணத்தை திரைப்படம் முழுவதும் உருவாக்க முடியாமல் உள்ளது. அவர் வீட்டிற்கும் அப்போயின் தோற்றத்திற்கும் அம்மா வீட்டில் அணிந்துள்ள நகைகளுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது.

படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் சாவு செய்தி சொல்பவர். ஒருவகையில் 90களில் நாம் அனைவருமே நமது கம்பங்களில் பார்த்த பாத்திரம் அவர். மலேசியத்திரைப்படத்தில் முதன் முதலாக அவரை அறிமுகம் செய்த சஞ்சையைப் பாராட்டலாம். அவருக்கு அச்சமூகம் எவ்வாறான இடத்தைக் கொடுத்துள்ளது என கொஞ்சம் காட்டியிருந்தால் படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச்சென்றிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. அதுபோன்றவர்கள் ஜாதியின் அடிப்படையில் வீடுகளில் சேர்ப்பது இல்லை. அவர் சமூகத்தால் கைவிடப்பட்டவரா அல்லது சமூகத்திடம் தன்னை ஒதுக்கிக்கொண்டவரா என்பது தெளிவாக இல்லை. வீதியோரம் படுத்திருப்பதைக் காட்டுவது சமூகம் அவருக்குக் கொடுத்திருக்கும் அடையாளமும் ஆகாது. பொதுவாக கம்பங்களில் போதையில் இருப்பவர்களைக் காணும் சாதாரண காட்சி அது.

கணித ஆசிரியருக்கு கொடுத்துள்ள அழுத்தம் இதர இரு ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கலாம். இதர இரு ஆசிரியர்களும் ஓர் வருகையாளர்களாகவே வந்து போகிறார்கள். கதாப்பாத்திரமாக மனதில் நிற்கவில்லை.

வசனம் இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம். ஒருவிதத்தில் படத்தை மேலெடுத்துச் செல்லாமலும் வசனமே தடையாக உள்ளது. போதையில் இருக்கும் முதல் சித்தப்பா (பாலா) பேசும் வசனங்கள் சராசரி மனிதன் தனக்குள் தேடியெடுக்கும் சொற்களே. “உன் சித்தப்பன் செத்தப்பன் ஆயிட்டான்” என்பது வாழ்விலிருந்து எடுக்கும் சொற்கள். ஆனால் ‘பாதை கிடைத்தவரெல்லாம் பாதை அறிந்தவரல்ல’ என உயர்ந்த மொழியில் கவிதை போல வரும் பகுதி மட்டும் அவர் கதாபாத்திரத்துடன் ஒட்டாமல் இருக்கிறது. மொழி ஒரு படத்தின் ஆதாரம். அது கதாப்பாத்திரத்தை மீறிச்செல்லும் போது வசனம் நிர்க்கலாம் ஆனால் கதாப்பாத்திரம் நிர்ப்பதில்லை. இந்த நுட்பத்தைக் காமிராவில் சரியாக உபயோகித்துள்ளார்கள். ஒளிப்பதிவு கதையைத் துருத்திக்கொண்டு தெரியாதது ஆறுதல். அது கதையுடன் இணைந்தே பயணிக்கிறது. இறுதிக்காட்சியில்தான் தன் பணியைக் கச்சிதமாகச் செய்கிறது.

குண்டர் கும்பலில் உள்ளவர்களின் சொல்லாடல்களை எங்குமே இப்படத்தில் காணமுடியவில்லை. மூன்று பேர் அமர்ந்து சீனன் வீட்டில் பீர் குடிக்கும்போது நடக்கும் உரையாடல்களா அவை என நினைக்கும் அளவுக்கு ஒட்டாமல் இருக்கிறது. அதேபோல முக்கியப்பாத்திரமான மெக்சிகோவுக்கு கோபத்தைத் தவிர வேறு ஒரு உணர்ச்சியுமே இல்லாததுபோல காட்டுவது அவர் பாத்திரத்தைத் தட்டையாக்கிவிடுகிறது. வசனங்கள் மூலமாவது அவருக்கு பெண் குறித்த அபிப்பிராயங்களைச் சொல்ல வைத்திருக்கலாம். உண்மையில் ஒரு திரைப்படத்தில் வசனமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் படத்தைத் தூக்கி நிறுத்தும் கருவி. ஆசிரியர் மாணவர் பகுதியில் செறிவாக உள்ள வசனங்கள் இருண்ட பகுதியில் தத்தளிக்கிறது.

இறுதியாக

கல்விச்சூழலை விமர்சிப்பதாக இதுவரை தமிழில் சில படங்கள் வந்துள்ளன. இதில் ‘சாட்டை’ மற்றும் ‘தங்கமீன்’ திரைப்படங்கள் மீண்டும் ‘வெற்றி’ எனும் போதை குறித்தே பேசுகின்றன. கெட்டிக்காரன் என்பவன் ஏதோ ஒன்றில் வெற்றிப்பெறுபவன் எனும் பழைய சூத்திரத்தைப் புதிய அம்மியில் போட்டு அரைத்து கொடுத்திருக்கும் படங்கள் அவை. அமீர் கானின் ‘taare zameen par’ மற்றும் ‘3 idiots’ இரண்டும் முக்கியமான திரைப்படங்கள். மிக கவனமாகக் கல்விச்சூழலின் மீது விமர்சனத்தை வைப்பவை. அமீர் கான் போன்ற கலைஞர்களால்தான் அது சாத்தியமாகிறது. அதற்கு மிக முக்கியக்காரணம் அரசியல் தெளிவுதான்.

மலேசியாவில் உள்ள இந்திய இயக்குனர்களிடம் சுத்தமாக அரசியல் சிந்தனை இல்லை என்பதை அவர்கள் திரைப்படங்கள் மூலமே அறியலாம். சிலரிடம் பேசும்போது ம.இ.காவைத்தவிர வேறு அரசியல் பிரச்னையே தமிழர்கள் மத்தியில் இல்லாதது போல பேசுவார்கள். இத்தனை அறிவு வரட்சியான மலேசியக் கலை உலகிலிருந்துதான் சஞ்சை போன்ற இயக்குனர்கள் உதயமாகியுள்ளனர். தமிழகத்தில் கல்விச்சூழலை விமர்சிப்பதாக எடுக்கப்பட்ட ‘சாட்டை’ மற்றும் ‘தங்க மீன்’ திரைப்படங்களில் இல்லாத தெளிவை இப்படம் கொண்டுள்ளது. மலேசிய இந்தியச் சமுதாயம் எந்த நேரமும் பென்ஸில் பயணம் செய்வதுபோன்று பாவலா காட்டும் மலேசிய இயக்குனர்களுக்கு மத்தியில் ஓர் அசலான வாழ்வை சஞ்சை காட்ட முயன்றுள்ளார்.

நாம் ஒரு மலேசியத் திரைப்படமாக (மலேசியத் தமிழ்ப்படம் இல்லை. தமிழில் எடுக்கப்பட்டதால் அது தமிழ்ப்படம் ஆகாது.) ‘ஜகாட்’ திரைப்படத்தைச் சொல்லலாம். அது மலேசிய வாழ்வுக்குள் உள்ள இன்னொரு இருண்ட பகுதியைப் பேசுகிறது. அந்த இருண்டப் பகுதியின் வேர் எது என கைக்காட்டுகிறது. கல்வியும் குடும்பமும் உருவாக்கித்தரும் மிக பயங்கரமான ஓர் உலகை நாம் அறிந்துகொள்ளாதவரை எல்லா அரசியல் தலைவர்களும் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். கலை உண்மையை நோக்கிக் கைக்காட்ட வேண்டும். மலேசியாவில் தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ‘ஜகாட்’ அதை சரியாகச் செய்துள்ளதாகவே கருதுகிறேன்.

(Visited 450 times, 1 visits today)

3 thoughts on “ஜகாட் : ஒரு பார்வை

  1. அருமை…தோட்டங்களில் வசித்தவர்களுக்கு கண்டிப்பாக திரைபடஙளில் சொல்லாடல் ஒவ்வாமை ஏற்றுக்கொள்ள் முடியாது…கானாவின் நகைசுவை படங்களில் அது இருக்காது…(கதை லோஜிக் இல்லாவிட்டாலும்)….லும்ப்னீஸம் பெயர் தெரியாமல் பார்த்த அனுபவம்

  2. அருமையான விமர்சனம் மற்றும் ஆழமான் உற்றுநோக்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *