இன்று (18.11.2024) வழக்கறிஞர் பசுபதி அவர்களின் பிறந்தநாள். பொதுவாக அவர் பிறந்தநாளின் போது அவர் குறித்த சில எண்ணங்களை எழுதுவது வழக்கம். வரலாற்று நாயகர்களை சமூகத்திற்கு நினைவூட்டுவது எழுத்தாளனின் கடமைதானே.
அப்படி ஒரு சம்பவத்தை நினைவுகூறலாம் என நினைக்கிறேன்.
‘கபாலி’ திரைக்கதையில் நான் ஓரளவு பங்கு வகித்திருந்தேன். நண்பர் இயக்குநர் ரஞ்சித் படப்பிடிப்புத் தளத்தை அடையாளம் காணவும் திரைக்கதையை முழுமை செய்யவும் மலேசியா வந்திருந்தபோது மை ஸ்கில்ஸ் அறவாரியத்தையும் பசுபதி அவர்களையும் அறிமுகம் செய்து வைத்தேன். பின்னர் முழுமையாகத் திரைக்கதை உருவானபோது தமிழகம் சென்று முழு திரைக்கதையையும் வாசித்துப்பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
வாசித்தவுடன் உற்சாகமானேன்.
கதையின் நாயகனான ரஜினிகாந்த் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தை நடத்துவதாகக் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்ததைத் தமிழகத்தில் இருந்தே பசுபதி அவர்களுக்கு அழைத்துச் சொன்னேன்.
பின்னர் மலேசியாவில் திரைப்பட இயக்கம் தொடங்கியபோது மை ஸ்கில்ஸ் குழுவினர் திரைப்பட குழுவினரைச் சந்திக்கும் ஓர் இனிய தருணம் உருவானது. அப்போது அத்திரைப்படத்தின் இயக்கம் பந்திங்கில் உள்ள கேரித்தீவில் நடந்துகொண்டிருந்தது. படப்பிடிப்பிற்காக அந்தத் தளத்தை நான் அறிமுகம் செய்து வைத்திருந்ததால் நானும் அங்குதான் இருந்தேன். தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தாலும் எந்த நடிகருடனும் உரையாடும் மனநிலை எழவில்லை.
பொதுவாகவே நடிகர்களிடம் ரசிகனாகச் சென்று அறிமுகப்படுத்திக்கொள்வதில் எனக்கு மனத்தடை உண்டு. முதலில் அவர்களிடம் என்ன பேசுவதென எனக்குத் தெரியாது. எதுவும் பேசாமல், ரசிகனாக மட்டுமே பணிந்து வணங்க நினைப்பது இளையராஜாவிடம் மட்டும்தான். எனக்கு இசை நுணுக்கங்கள் தெரியாது. ஆனால் இளையராஜா நாம் வாழும் காலத்தில் வாழுகின்ற மேதை என்பது தெரியும்.
திரைத்துறையைச் சார்ந்தவர்களில் நானாகத் தேடிச்சென்று சென்னையில் சந்தித்தவர் என்றால் இயக்குனர் ராம். அவர் வழியாக பாலுமகேந்திரா. நண்பர் சிவா பெரியண்ணனின் உதவி இயக்குநராகும் விருப்பத்தின் பொருட்டு மிஷ்கின், வெற்றி மாறன், நாசர் போன்றவர்களைச் சந்தித்துள்ளேன். எழுத்தாளன் எனும் ஒரு ஜீவராசியும் இந்த உலகில்தான் வாழ்கிறான்; அவனும் ஒரு கலைஞன் என அறிந்தவர்களிடம் அறிமுகம் செய்துக்கொண்டு உரையாடுவதே எனக்கு இலகுவாகிறது.
எனவே மூன்று நாட்கள் நடிகர் ரஜினிகாந்தை வெகு அருகில் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தாலும் அவரிடம் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஓய்வு நேரங்களில் அறையில் அவர் ‘அன்னா கரீனினா’ வாசித்துக்கொண்டிருக்கிறார் எனக் கேள்விப்பட்டபோது மட்டும் அந்நாவல் குறித்து அவரிடம் பேசத் தோன்றியது. ஆனால் படப்பிடிப்பு குழுவினருக்கு நான் எவ்வகையிலும் தொல்லையாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
மூன்றாவது நாள் வழக்கறிஞர் பசுபதி, செல்வமலர் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவதாக இருந்தது. அது மழைக்காலம் என்பதால் படப்பிடிப்புத் தளம் முழுவதும் சகதி. எனவே ரஜினிகாந்த் நடந்து செல்ல அலுமினிய பாலங்களை உருவாக்கியிருந்தார்கள்.
நான் பசுபதியின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தேன். பொதுவாகவே அவர் அருகில் இருக்கும்போது பதற்றம் இருக்கும். என் நினைவில் ஜெயமோகனிடமும் பசுபதியிடமும் அமர்ந்தபடி கைப்பேசியில் கூட பேசியவில்லை. பெயரைப் பார்த்தவுடன் கால்கள் தானாக எழுந்துகொள்ளும்.
பசுபதி, செல்வமலர், அவர் கணவர் ஆகியோர் வருவதை தூரத்தில் கண்டவுடன் பதற்றம் அதிகரித்துவிட்டது. சகதியால் சூழ்ந்திருந்த பகுதியைக் கடக்க அவர்கள் சிரமப்படுவது தெரிந்தது. உடனே ஓடிச்சென்று ரஜினிகாந்துக்காகப் பிரத்தியேகமாகப் போடப்பட்டிருந்த அலுமினியப் பாலத்தைத் தூக்கிக்கொண்டு அவர்கள் வரும் திசையை நோக்கி ஓடினேன். படப்பிடிப்புத் தளத்தில் சிறிய கலவர ஒலி. அது அங்கு பெரிய தவறு என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது.
ரஜினிகாந்த் அமைதியாக அமர்ந்து இருந்தார். அப்போதைக்கு அந்தப் பாலத்தின் பயன்பாடும் இல்லை. எனவே அதை எடுப்பது எனக்குத் தவறாகத் தோன்றவில்லை. நான் சென்று சேர்வதற்குள் அவர்கள் பாதிதூரம் வந்திருந்தனர். ஒரு சிறிய கால்வாயைக் கடக்க அப்பாலம் உதவியது.
மீண்டும் வந்து சேர்வதற்குள் என் கையில் இருந்து யாரோ அந்தப் பாலத்தைப் பிடுங்கிக்கொண்டுச் சென்றனர். அவர்களுக்கு உதவியதில் எனக்கு மன நிறைவாக இருந்தது. ரஞ்சித், அவர்களை அன்புடன் வரவேற்று ரஜினிகாந்திடம் அறிமுகப்படுத்தினார். திரைப்படத்தில் வரும் கல்லூரி இவர் நடத்துவதுதான் எனச்சொன்னார். ரஜினிகாந்த் அதை தனக்கே உரிய ஆச்சரியத்துடன் உள்வாங்கி வாழ்த்துக்கூறினார்.
புறப்படும் வரையில் நான் பசுபதியுடன்தான் இருந்தேன். படம் பிடிக்கும்போதும் பசுபதியின் பக்கம்தான் நின்றுக்கொண்டேன். நண்பர்கள் ரஜினியுடன் தனித்தனியாகப் படம் பிடித்துக்கொண்டபோதும் நான் அவ்வாய்ப்பைக் கேட்கவில்லை. பசுபதி புறப்பட்டபோதுதான் இயல்பான நிலைக்குத் திரும்பினேன். அவர் நடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
சமுதாயத்திற்காகப் பணியாற்ற தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுக்கும் ஒருவர் மீது இருக்கின்ற ஈர்ப்பும் மதிப்பும் எனக்கு பிறர் மீது அவ்வளவு எளிதாக ஏன் உருவாவதில்லை என்பதை நானே புரிந்துகொள்ள முயன்றேன். எளிய மக்களுக்காக ஏராளமான இலவச வழக்குகளை நடத்திய ஒரு வழக்கறிஞராக, சமுதாய போராளியாக, தமிழீழ மக்களின் நலனுக்கு அந்நிய தேசத்தில் இருந்து போராடியவராக, இதழாசிரியராக, நாட்டில் இன்றுவரை தொடரும் பல சமுதாயப் பணிகளைத் தொடக்கி வைத்தவராக, தமிழ்ப்பள்ளிகளின் நலனுக்கு உழைப்பவராக, மை ஸ்கில்ஸ் அறவாரியம் வழி கைவிடப்பட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வழிகாட்டுபவராகப் பசுபதியின் வாழ்நாள் அர்த்தபூர்வமானது. ஆனால், அவருக்கு இந்தச் சமுதாயம் வழங்கியுள்ள முக்கியத்துவம் குறைவோ எனத் தோன்றுவதுண்டு.
பசுபதி அதுகுறித்தெல்லாம் கவலைப்படாவர். செயல்களால் நிறைவைக் காண்பவர்.
சமுதாயப் பணி செய்ய வரும் இளைஞர்கள் பசுபதியிடம் கற்றுக்கொள்ள நிறையவே உள்ளது. அதில் முதன்மையானது எளிமை. அந்த எளிமையின் வழியாகவே யாரும் தன்னைச் சங்கடங்கள் மனத்தடைகள் இல்லாமல் சந்திக்கலாம் எனும் நிலையை அவர் உருவாக்கியுள்ளார். அவர் அறை எப்போதுமே முப்புறமும் கண்ணாடியால் சூழப்பட்டு, யாரும் தன் இருப்பைப் பார்க்கவும் தான் பிறரைப் பார்ப்பதற்கு ஏற்பவும் அமைக்கப்பட்டுள்ளது. சமூதாயப்பணி செய்ய வருபவர்கள் தன்னைச் சமுதாயத்திடமிருந்து ஒதுக்கி வைத்து ஒழிந்து வாழும் நிலையில் இந்த வெளிப்படைத் தன்மை அவர் மனதின் ஒரு குறியீடு.
பசுபதி அவர்கள் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து தன் தளத்தில் எழுதி வருகிறார். அதில் அவர் மறுபடி மறுபடி குறிப்பிடும் விடயம், நாம் சம்பாதிக்கும் தொகையில் ஒரு பகுதி பிறர் நலனுக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான். அண்மையில் மிக முக்கியக் கலைஞர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்தார். எந்த வருமானமும் இல்லாமல் எப்படிச் சமாளிக்கிறீர்கள் எனக்கேட்டேன். ”பசுபதி மாத மாதம் ஆயிரம் ரிங்கிட் அனுப்பி வைப்பார்,” என்றபோது திகைத்து நின்றுவிட்டேன். இப்படி எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் வழியாக பசுபதி தனிப்பட்ட முறையில் செய்யும் உதவிகளை நான் கேள்விப்படுவதுண்டு. தான் பிறரிடம் எதை செய்ய வலியுறுத்துகிறாரோ அதை தன் வாழ்நாளில் கடைப்பிடிப்பவராகப் பசுபதி இருக்கிறார். அது குறித்து வெளியில் ஒருபோதும் சொல்வதும் இல்லை. இது இளைஞர்கள் கற்க வேண்டிய மற்றுமொரு குணம்.
மூன்றாவது விசயம் ஒன்றுண்டு. பசுபதி அவர்களால் மனிதர்களை மிகச்சரியாகக் கணிக்க முடிகின்றது என்பது என் எண்ணம். பல ஆண்டுகளாக பல்வேறு குணங்கள் கொண்ட பல்லாயிரம் மனிதர்களுடன் பழகுவதால் உண்டாகும் திறன் அது. ஜெயமோகனிடம் இதைப் பார்த்துள்ளேன். ஆயிரக்கணக்கான மனிதர்களை ஓயாத இலக்கற்ற பயணங்களின் வழியாகச் சந்தித்து, புனைவுகளில் உருவாக்கி, வாசித்து, அவர்களின் ஆழுள்ளங்களை அறிந்து வைத்துள்ளதால் எதிர்க்கொள்ளும் எவரையும் ஒரு சில நிமிடங்களில் கணித்துவிடுவார். சொற்களைக் கடந்து அவரால் மனதை வாசிக்க முடியும் என்பதாலேயே சில சமயம் கடுமையான மனிதராகத் தெரியவும் செய்வார். பசுபதி அவர்களிடம் ஏதாவது உதவி கேட்கச் சென்று மறுக்கப்பட்ட நண்பர்கள் என்னிடம் ஏதோ ஒரு தருணத்தில் அதை புகாராகச் சொல்வதுண்டு. முழுமையாக அதைக் கேட்டப்பிறகு அவர் மறுத்தது சரிதான் எனத் தோன்றும்.
பசுபதி போன்றவர்கள் தாங்கள் எதிர்க்கொள்ளும் மனிதர்களைச் சொற்களின் வழியாக மட்டுமே அறிவதில்லை. அதைக் கடந்து புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வு அவர்களுக்கு உண்டு. அதன் வழியாகவே அவர்கள் மனிதர்களை மதிப்பிடுகிறார்கள். இந்தத் திறன் இல்லாத ஒருவர் தவறான இடங்களின் தங்கள் உழைப்பையும் சேவையையும் செலுத்தி இறுதியில் மன அழுத்தம் கொள்ளவே நேரும். அப்படி ஏமாந்த கசப்புடன் திரியும் மனிதர்களையும் நான் சந்தித்ததுண்டு. அந்தக் கசப்பு சமுதாயத்தின் மீது திரும்பி, ‘சமுதாயமே சரியில்லை’ என ஒட்டுமொத்தமாக வசைபாட ஆரம்பித்துவிடுவார்கள்.
இத்தனை ஆண்டுகால சமூகப் பணியில் பசுபதியிடமிருந்து ஒளிவிடுவது நேர்மறை அதிர்வுகள்தான். அவர் சமுதாயத்தை இன்னும் அதிகமாக நேசிக்கும் ஆன்மாவாகவே உருவாகி வருகிறார். தன்னிடம் உதவி நாடி வரும் யாரிடமும் பதிலுக்கு அவர்கள் சமுதாயத்திற்கு என்ன பங்களிப்பு வழங்க முடியும் எனக்கேட்கத் தவறுவதில்லை. உதவி என்பது ஓரிடத்தில் தேங்கி நின்றுவிடக்கூடாது; அது அஞ்சலோட்டம்போல கை மாறிக்கொண்டே இருக்க வேண்டும் எனும் எண்ணம் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு குணம்.
‘பசுபதி கோபக்காரர்’ என்பதை ஒரு புகாராக என்னிடம் சொல்லும் நண்பர்களிடம் நான் பதிலுக்குக் கேட்பது “வேறெப்படி இருக்க வேண்டும்?” என்பதுதான். கோபம் எனும் சக்தி ஆக்கச்தியாக மாறுவதை மட்டுமே நான் அவரிடம் உள்வாங்கிக்கொள்கிறேன்; அது அழிவின் பாதையைத் தேர்வு செய்வதில்லை. தன் குறித்து அவதூறு மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “அவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக சமுதாயத்திற்கு ஏதோ நன்மை செய்யத்தானே முயல்கிறார். அவர் இருப்பும் சமுதாயத்திற்குத் தேவைதானே. என்னைப் பற்றி தவறான எண்ணம் அவருக்கு உள்ளது; அதனால் என்ன?” என்றார். நேர்மறையான சிந்தனைகள்தான் அவரது புத்துணர்ச்சிக்குக் காரணம் என பல சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு.
நான் பசுபதி அவர்களை 2003இல் முதன்முறையாகச் சந்தித்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அவரைப் பல்வேறு காரணங்களுக்காகச் சந்தித்துள்ளேன். அவர் மேலும் மேலும் கனிந்த மனிதராக மாறி வருவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். தன்னால் இன்னொருவருக்கு நன்மை செய்து மட்டுமே வாழ முடியும் என்பதை அவர் எப்போதோ அறிந்து கொண்டிருப்பார். தான் பிறந்ததன் நோக்கம் அதுதான் என்பதை உணர்ந்திருப்பார். இன்னொருவருக்காக வாழ்வதனால் மட்டுமே தன் வாழ்வை அவரால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடிகிறது. அதனாலேயே அவர் முழுமை அடைகிறார். எனவே அவரால் அப்படியாகத்தான் வாழ முடியும்.
ரஜினிகாந்த் மலேசியா வந்தபோது கூட்டம் கூட்டமாக அவரைப் பார்க்கச் சென்றவர்கள் ஒரே ஒருமுறை மை ஸ்கில்ஸ் அறவாரியப் பணிகளை அறிந்துகொள்ள முயல தங்கள் நேரத்தை மட்டுமாவது கொடுக்கலாம். திரைப்படத்தில் கபாலி ஏழை மாணவர்களுக்கு கல்வி வசதி செய்துக்கொடுப்பதைக் கண்டு நெகிழ்பவர்கள் நிஜவாழ்க்கையில் அதை தன் வாழ்நாள் பணியாகச் செய்யும் பசுபதிக்கு ஏதேனும் ஒருவகையில் துணை இருக்கலாம். சமுதாயத்திற்காக வாழும் மனிதர்களை பொதுவாக சமுதாயமே அறிவதில்லை. அவர்களை அறிந்துகொள்ள முயலலாம். அவர்கள் பணிகளுக்கு ஏதாவது ஒருவகையில் துணையிருப்பதே அவர்களுக்கு வழங்கும் வாழ்த்து.
பசுபதி போன்றவர்களின் பிறந்தநாள் மேலும் அர்த்தம் கூடியதாக மாற வேண்டும். அதற்கான முயற்சி ஒன்றை அடுத்த வருடம் தொடங்க எனக்கு எண்ணம் உண்டு. பசுபதி சொல்வதுபோல நல்ல எண்ணங்களை எப்படியும் பிரபஞ்சம் நிறைவேற்றவே செய்யும்.
நிறைவேற்றத்தானே வேண்டும்.
தொடர்புடைய பதிவுகள்: