வீட்டு நாய்களாகும் வீதி நாய்கள்

சில மாதங்களுக்கு முன் நண்பர்கள் வழியாகக் கைவிடப்பட்ட விலங்குகளின் நலன் மற்றும் பாதுகாப்புக் கழகம் (Persatuan Penyelamat dan Kebajikan Haiwan Terbiar) குறித்துக் கேள்விப்பட்டிருந்தேன். முதலில் அது என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

முதலாவது, இதுபோன்ற கழகங்கள் திடீரென முளைப்பது மனிதர்களின் கருணையைக் காசாக்குவதற்கு என்ற எண்ணம் எனக்குண்டு. தோற்றுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே விலங்குகளின் பரிதாப நிலையை காணொளியாகக் காட்டி, சமூக ஊடகங்களில் வசூல் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

இரண்டாவது, இதுபோன்ற அமைப்புகள், விலங்குகளுக்குப் போதுமான வசதிகளை ஏற்படுத்தும் திறனற்றிருக்கின்றன. அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தாலும் போதுமான பயிற்சியும் வசதியும் இல்லாததால் அவர்களைப் போலவே விலங்குகளையும் தவிப்பில் தள்ளி விட்டிருப்பார்கள். வேளா வேளைக்கு உணவு கிடைப்பதன்றி அவ்விலங்குகளின் வாழ்வில் வேறெந்த இன்பமும் இருப்பதில்லை.

இந்நிலையில்தான் நண்பர்கள் என்னை அந்த கழகம் இயங்கும் டெங்கில் பகுதிக்கு அழைத்தபோது பெரிய நம்பிக்கை இல்லாமல்தான் புறப்பட்டேன். சிங்கப்பூர் நண்பர்களுக்குச் சிறுகதை பட்டறை நடத்தியதில் கணிசமான தொகை கொஞ்சம் கையில் இருந்தால் அப்பகுதியில் புகழ்பெற்ற உணவகம் ஒன்றில் மதிய உணவு சாப்பிடலாம் என்பது கூடுதல் திட்டம். பயணத்தில் சமீபத்தில் சூடுபட்ட இறந்த கோப்பி என்ற நாய் குறித்து பேச்சு எழுந்தது.

கோப்பி

சிலர் அது குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

திரங்கானு மாநில குடியிருப்பில் சுற்றிக்கொண்டிருந்த ‘கோப்பி’ என்ற தெரு நாய் ஒன்று மாவாட்ட மன்ற அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் பல்வேறு தரப்பினர் அதற்கு கண்டனம் தெரிவித்தும் விலங்குகளைச் சுட்டுக்கொல்லும் சட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.  கோப்பி என்ற அந்த நாய் கடந்த மார்ச் மாதம் ஒரு கைவிடப்பட்ட பூனைக்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருக்கும் காணொலியின் வழியாக முன்னமே புகழ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வீதியில் சுற்றிக்கொண்டிருந்த அந்த நாயை ‘கோப்பி’ எனப் பெயரிட்டும் அழைக்கத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் அது சுடப்பட்டு சரிந்த உடலின் படம் பலரது கருணையை உயிர் பெற வைத்திருந்தது.

நண்பர்கள் அந்நாய் சுடப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார்கள். அதில் ஒருவர், ஓர் எழுத்தாளனாக இருந்தும் அதுவும் நாய்கள் குறித்து சில சிறுகதைகள் எழுதியிருந்தும் அச்செயலைக் கண்டிக்காத என்னைக் கடிந்துகொண்டார்.

நான் தொடர்ந்து அச்செய்தியை வாசித்தே வந்தேன். மாவட்ட மன்றத் தரப்பினர், வீதி நாய்களால் தங்களுக்குத் தொல்லை வருவதாகவும் அவற்றில் சில மூர்க்கமானவையாக இருப்பதால் தாங்கள் வீதிகளில் நடமாட அச்சம் கொள்வதாகவும் கூறி பொதுமக்களிடம் 62 புகார்கள் வந்துள்ளதாக கூறியுள்ளதைக் குறித்து நண்பர்களின் எண்ணத்தைக் கேட்டேன்.

“கோப்பி சுடப்பட்டு இறந்தது கண்டிக்கத்தக்கது. ஆனால், வீதி நாய்களால் மனிதர்களுக்குத் தொல்லையே இல்லை என யாராவது உறுதி செய்ய முடியுமா? நாளையே ஒரு குழந்தை தெருநாயால் கடித்து கொல்லப்பட்டாலோ அவற்றின் மூலம் உயிர்க்கொல்லும் புதிய தொற்று நோய் பரவினாலோ சமூக ஊடகங்களில் தீடீர் எனப் பொங்கும் இதே போராளிகள் தெருநாய்களைக் கொல்லச் சொல்லி  போராடுவார்கள்,” என்றேன்.

நண்பரில் ஒருவர் “அது சரிதான்” என்றார்.

”வாஞ்சை மிக்க ஒரு நாயின் குதூகலக் காணொளியும் அதன் திடீர் மரணமும் பலரின் பொங்குதலுக்கு வழியமைத்துள்ளது. கைவிடப்பட்ட விலங்குகள் அமைப்பு (SAFM)  மனிதாபிமானமற்ற அந்தச் செயலைச் சட்டபூர்வமான முறையில் அணுகுவது சரிதான். ஆனால், மார்ச் மாதம் சமூக ஊடகங்களில் பிரபலமான அந்த நாய் ஏன் அடுத்த ஐந்து மாதங்கள் யாருடைய பராமரிப்புக்குள்ளும் செல்லாமல் தெருவில் அனாதையாகவே திரிந்தது என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.” என்றேன்.

நண்பர் ஒருவரின் முகம் சம்பந்தமே இல்லாமல் மகிழ்ச்சியில் மலர்ந்தது. “உன் கேள்விக்கான பதில் உள்ள இருக்கு” என்றார். நாங்கள் கைவிடப்பட்ட விலங்குகளின் நலன் மற்றும் பாதுகாப்புக் கழகத்தை அடைந்திருந்தோம்.

கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலபரப்பில் அமைந்திருந்தது அந்த மையம். நாங்கள் உள்ளே நுழைந்ததும் நாய்களில் குரைப்புச் சத்தம் சூழ்ந்தது. பெரும்பாலான நாய்கள் கட்டிவைக்கப்படவில்லை. என் காரைப் பார்த்ததும் ஓடி வந்து ”வாடா மச்சான்” என வாலை ஆட்டின.

கொஞ்ச நேரத்தில் அம்மையத்தின் உரிமையாளர் தமிழ் வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் காவல்துறையில் பணிபுரிந்தவர். அங்குள்ள நாய்களுக்குப் பயிற்சி வழங்கும் பணியில் இருந்தவர் எனத் தெரிந்தது. இப்போது முழுமையாக இந்த மையத்தை நடத்தி வருகிறார்.

தமிழ்

“பொதுவாகவே தெருநாய்கள் ஆபத்தானவை என்றும் மனிதர்களின் சொல்லுக்கு இசையாதவை என்றும் நம்பிக்கை உண்டு. ஆனால் முறையான பயிற்சி கொடுத்தால் எல்லா நாய்களுமே வீட்டில் வளர்க்கக் கூடியவைதான். இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டு நாய்கள் இந்நாட்டின் சீதோஷண நிலையுடன் ஒத்துப்போக முடியாமல் தங்கள் தினசரிகளை சிரமப்பட்டே வாழ்ந்து முடிக்கின்றன. இவை அப்படியல்ல. இந்நாட்டுச் சூழலுடன் அவற்றால் பொருந்திப்போக முடியும்,” என்றார்.

நான் அவரிடம் பேசிக்கொண்டே அவ்விடத்தைப் பார்வையிட்டேன். நாய்களுக்குப் பயிற்சி கொடுக்க ஒரு பகுதி உருவாக்கப்பட்டிருந்தது. ஊழியர் ஒருவர் நாயை ஓட வைத்தும் தாவ வைத்தும் குதிக்கச் சொல்லியும் பயிற்சிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.

“என்னிடம் உள்ள குறைந்த வசதியைக் கொண்டே இவற்றை உருவாக்கியுள்ளேன். இந்தப் பயிற்சித் தளவாடங்கள் அனைத்தும் நாங்களே சுயமாக உருவாக்கியவை. செலவை குறைக்க இப்படிச் சுயமாகவே அனைத்தையும் உருவாக்கிக்கொள்கிறோம்.” என்றார்.

நாய்கள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படுவது அவற்றின் தோற்றத்தை வைத்தே தெரிந்தது. தமிழுடன் சேர்ந்து இருவர் அந்நாய்களைப் பராமரிக்கின்றனர்.

“சிமெண்டு தரையாக இருந்தால் ஒவ்வொரு நாளும் கழுவ வேண்டும். அதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, நீருக்கான செலவு. குறைந்தது 600 ரிங்கிட் தேவை. மற்றது, இரசாயணத்தை ஊற்றி கழுவுவது நாய்களின் தோலை பாதிக்கும். எனவே நாய்களை மண்ணிலேயே உலாவ விடுகிறேன்,” என்றார்.

அவ்விடத்தைப் பார்வையிட்டேன், சுற்றி மரங்கள் நடப்பட்டிருந்தன. அவை வளர்ந்து விட்டால் மேலும் அவ்விடம் எழிலாக இருக்குமெனத் தோன்றியது. கிட்டத்தட்ட நாற்பது நாய்கள் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருந்த பகுதிக்குச் சென்று அமர்ந்தேன். பயிற்சியளிக்கப்பட்டிருந்ததால் எல்லா நாய்களும் அன்புடன் வரவேற்றன. கொஞ்சிக் குழாவின. சில நாய்கள் பெரிய நீர்த்தொட்டிகளில் குதித்து நின்றுக்கொண்டிருந்தன.

“வெயிலுக்கு ஒதுங்க நிறைய கூடாரங்களை நாய்களுக்கு அமைத்துள்ளோம். ஆனால் நாய்களுக்கும் மூளை வாதம் வரும். உடல் உஷ்டமடைந்தால் அவை நீர்த்தொட்டிகளில் இறங்கி தங்களைக் குளுமைப்படுத்திக்கொள்ளும்” என்றார் தமிழ்.

ஒரு நாய் ஓடி வந்து மடியில் தலைவைத்து ”கொஞ்சம் கொஞ்சேன்” எனக் கெஞ்சியது.

“நாங்கள் இங்கு அனாதையாக விடப்படும் நாய்களை இங்கே எடுத்து வந்து அவற்றுக்குப் பயிற்சி வழங்குகிறோம். காயம் பட்ட நாய்களுக்கு மருந்துவம் செய்து குணப்படுத்துகிறோம். ஒரு நாயை வீட்டில் எவ்வித சிக்கலும் இன்றி வளர்க்கும் வகையில் தயார் செய்து தேவைப்படுவோருக்கு இலவசமாகவே கொடுக்கிறோம்.” என்றபோது அவரை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

“ஆனால் அப்போதும் யாருக்கும் இந்த நாய்கள் மீது ஆர்வம் வருவதில்லை. எல்லாருக்கும் சில ஆயிரங்கள் கொடுத்து வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதில்தான் ஆர்வம் உள்ளது. அவற்றின் சாகசங்களை ஊடகங்களில் பார்த்து வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால், எல்லாமே பயிற்சிதான். முறையான பயிற்சி கொடுத்தால் எல்லாமே சிறந்த நாய்கள்தான். நம்மீது எல்லையற்ற அன்பை பொழிபவைதான்,” என்றார்.

“நான் என் பத்து வயது முதல் தெருநாய்களை மட்டுமே வீட்டில் வளர்க்கிறேன்.” என்றேன்.

“தெரியும். அதுதான் நண்பர் உங்களை அழைத்து வருவதாகச் சொல்லவும் மகிழ்ச்சியடைந்தேன். பெரும்பாலும் நான் இந்த இடத்தை வெளிபடுத்துவதில்லை. வீதிகளில் திரியும் நாய்களை மட்டுமே நாங்கள் கொண்டுவந்து பராமரிக்கிறோம். ஆனால், சிலர் இப்படி ஓர் இடம் இருப்பதைத் தெரிந்துகொண்டு கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் தாங்கள் அதுவரை வீட்டில் வளர்த்த நாயை இங்கே வாசலில் கட்டிப்போட்டு சென்றுவிடுகிறார்கள். பல ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட வீட்டில் குறிப்பிட்ட உணவு பழக்கத்தில் வளரும் நாயை அப்படி விட்டுச் செல்லும்போது எங்களுக்கு அதைப் பயிற்றுவிப்பது சிரமமானது. அவை தன் எஜமானரை நினைத்து ஏங்கித் தவிக்கும். மேலும் சிலர் கடும் நோய்க்கண்ட நாய்களை விட்டுச் செல்வது உண்டு. அந்நோய் இங்குள்ள நாய்களுக்கும் தொற்றக்கூடும். எனவே கவனமாக இருக்கிறோம்.” என்றார்.

“ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?” என்றேன்.

“இரண்டு சிறந்த ஊழியர்கள் நம்மிடம் உள்ளனர். இடமும் வாடகைதான். கிட்டத்தட்ட 80 நாய்கள் நம்மிடம் உள்ளன. எனவே மாதம் 500 கிலோ அரிசியாவது எங்களுக்குத் தேவை. நாய்களும் மனிதர்களைப் போலத்தான். அவற்றிற்கு சரிவிகித உணவு தேவை. எனவே மாதம் தோறும் மாமிசம்,காய், முட்டை, மருந்து என 10,000 – 12,000 ரிங்கிட்டாவது தேவைப்படும்.” என்றார் சாதாரணமாக.

“எப்படிச் சமாளிக்கிறீர்கள்?” என்றேன் வியப்பாக.

“நான் அடிப்படையில் நான் பயிற்சியாளன். பலர் என்னிடம் தங்கள் விலை உயர்ந்த நாய்களைப் பயிற்சிக்கு விடுவார்கள். அவற்றிற்குப் பயிற்சியளிப்பதன் மூலமாக வரும் வருமானத்தை இந்த நாய்களுக்குச் செலவு செய்கிறேன்.” என்றார்.

“ராபின் ஹூட்” போல என்றபோது சிரித்தார்.

நாங்கள் பேசிக்கொண்டே பயிற்சிக்கு வந்துள்ள வெளிநாட்டு நாய்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். அங்கிருந்த ஒரு கிரேட் டேன் ரக நாய் தமிழ் கொடுத்த பயிற்சியால் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்து வந்தது. பத்துக்கும் மேற்பட்ட முரட்டு நாய்கள் என்னை முறைத்துப் பார்த்தன.

“ஒரு தெரு நாய்க்குச் சிரமப்பட்டு பயிற்சி கொடுக்கிறீர்கள். அதன் உடல் நலத்தைப் பாதுகாக்கிறீர்கள். ஏன் அவற்றை குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை செய்யக்கூடாது,” என்றேன்.

“இன்று மனிதர்கள், பிராண்டுகள் மீது ஆர்வம் செலுத்துகிறார்கள். அப்படி இருக்கும்போது எவ்வித பிராண்டும் இல்லாத இந்த நாய்களை எப்படிப் பணம் கொடுத்து வாங்குவார்கள். என்னைப் பொறுத்தவரையில் அவை யாரோ ஒருவரின் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும்; பணம் முக்கியமல்ல,” என்றார்.

பயிற்சியில்

“அப்படி எத்தனை நாய்கள் உள்ளன?” என்றேன்.

தயாராக உள்ள சில நாய்களைக் காட்டினார். அவையும் ஒரு சொல்லுக்கு அடங்கிச் செயல்படுபவையாக இருந்தன.

“எல்லா வீதி நாய்களையும் வீட்டில் வளர்க்க முடியாது. சில நாய்கள் தங்கள் சகோதரர்களுக்குள்ளாகவே புணர்ந்து குட்டிகளைப் போடும். அந்தக் குட்டிகள் சொல்லுக்கு அடங்காது. சில சமயம் அது போன்றவற்றால் ஆபத்தும் வரும். என்னைப் போன்றவர்களால் அதுபோன்ற நாய்களை அடையாளம் காண முடியும். எனவே அவற்றை யார் கேட்டாலும் நான் கொடுப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை நாய்களைப் போலவே மனிதனும் முக்கியம். இருவரும் ஒருவர் இருப்பால் இன்னொருவர் நிறைவடைய வேண்டும்.” என்றார்.

கையில் கொண்டுவந்திருந்த மொத்தப் பணத்தையும் அவ்வமைப்பிடம் கொடுத்துவிட்டு நண்பர்களுடன் வெளியேறினேன்.

“சாப்பாடு வாங்கி தறேன்னு கூட்டி வந்த,” என்றார் நண்பர் ஒருவர் ஏக்கமாக.

“நாம நாலு பேரும் வீட்டுல கூட சாப்பிடலாம். அந்த நாய்களுக்கு சாப்பாடு போட தமிழ் போன்ற சிலரின் கையில் எப்போதும் பணம் இருக்க வேண்டும்,” என்றேன்.

ஆம், வீதியில் திரிந்த நாய்களுக்கு முறையாகப் பயிற்சி வழங்கி, அவற்றை வீட்டுக்குத் தகுந்த நாய்களாக மாற்றுவது பெரும் பணி. அப்படி பயிற்சி வழங்கப்பட்ட நாய்களை இலவசமாகப் பிறருக்கு வழங்குதல் என்பது போற்றக்கூடிய சேவை. அப்படியான சேவை செய்பவர்கள் அதை இடைவிடாது தொடர சமூகமே பொறுப்பேற்க வேண்டும்.

இன்று தீபாவளி. நம்மால் இயன்ற நன்கொடை வழங்கி தமிழ் போன்றவர்கள் தங்கள் பணியைத் தொடர நாம் துணையிருக்கலாம். விரும்பம் இருந்தால் மாதம் தோறும் நாய்களின் உணவுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கலாம்.

உங்கள் பங்களிப்பை வழங்க:

MAYBANK – 562674267361 ( Persatuan Penyelamat dan Kebajikan Haiwan Terbiar )

தமிழின் தொடர்பு எண்: 0128808143

தொடர்புடைய பதிவுகள்

போப்பிக்கு அஞ்சலி

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப…

(Visited 296 times, 3 visits today)