
(செப்டம்பர் 15, 2024இல் சுங்கை கோப் பிரம்மவித்யாரணத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆற்றிய உரையின் முழு வடிவம்)
அனைவருக்கும் வணக்கம்,
சில ஆண்டுகளுக்கு முன்னர், நண்பர் ஒருவருடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது எதிரில் இருந்த காரின் கண்ணாடியில் ‘தமிழன் என்று சொல்லடா’ எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாசகத்துடன் பாரதியாரின் முறுக்கிய மீசையும் கொதிக்கும் கண்களும் கொண்ட படம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
நண்பருக்கு இலக்கியப் பின்புலம் இல்லை. ஆனால் அவர் கேட்ட கேள்வி ஒன்று சட்டென என்னைச் சிந்திக்க வைத்தது. அவர் கேட்டார், “தமிழர்கள் பாரதியாரை நினைவு வைத்திருப்பதுபோல இந்நாட்டில் வேறு இன இலக்கியவாதிகள் யாரேனும் பொதுமக்களால் நினைவுகொள்ளப்படுகின்றனரா?”
நானறிந்து அப்படி ஒரு மலாய், சீன கவிஞரின் உருவம் அவ்வின மக்களால் கொண்டாடப்பட்டு நான் பார்த்ததில்லை. அதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த ஒரு பெருங்கவிஞனை, பஞ்சம் பிழைக்க வந்த தமிழ்ச் சமூகத்தின் பரம்பரை இன்றும் ஒரு கருத்துருவாக்கத்தின் குறியீடாக வணங்கி நிற்பது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
நான் அதிர்ச்சி அடைய இரண்டாவது காரணம், அந்த வாசகம் பாரதியாருடையது இல்லை என்பதுதான். உண்மையில் அது நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்துடையது. அவர்தான் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லாடா’ என்றும் ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ போன்ற பாடல்களையும் இயற்றியவர். அப்படியிருக்க தமிழர், தமிழர் வீரம், தமிழ் மொழிப்பற்று போன்றவற்றை வெளிப்படுத்தும் வாசகங்களில் எப்படி பாரதியாரின் உருவம் இயல்பாக இணைந்து விடுகிறது என என்னை நானே கேட்டுக்கொண்டேன். நண்பர் சொல்வதுபோல பொதுமக்கள் பாரதியாரை என்னவாக அறிந்து வைத்துள்ளனர் எனும் குழப்பம் அப்போது எழுந்தது.
நண்பர்களே, இந்தக் கேள்வியிலிருந்தே என் உரையைத் தொடங்கலாம் என நினைக்கிறேன்.

பாரதியாரின் உருவம் என்பது தமிழ் மொழியின் கவர்ச்சியான குறியீடாக மாறியுள்ளது. பிரபலமான ‘அச்சமில்லை’ எனும் கவிதை மூலமாக ஒரு வீரனாகவும் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் வரியின் மூலமாக சமூக சீர்த்திருத்தவாதியாகவும் முறுக்கிய மீசை கூரிய பார்வையின் மூலமாக எதற்கும் துணிந்தவராகவும் பாரதியார் ஏதோ ஒரு வகையில் நினைவுக்கூரப்படுகிறார். சமூக ஊடகங்களில் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ எனும் வரி மிகப் பிரபலம். தங்களைத் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீட்டுக்கொள்ள, சின்னச் சின்ன வெற்றிப் படங்களுடன் இந்த வாசகங்களை இணைக்கும் பரிதாபத்திற்குரிய நண்பர்கள் அதிகம்.
பாரதியாரின் ஒரு கவிதையை வாசிக்காதவர்கள்கூட அவரை ஞானத்தின் அடையாளமாகவும் வீரத்தின் பிரதிநிதியாகவும் புரட்சியின் வீச்சாகவும் தத்தம் மனதில் நிறுத்தியுள்ளனர். எப்போதுமே அறிவார்த்தமான தரப்பொன்று ஒரு மொழியில் இடைவிடாது இயங்கும்போது அதன் வளமான சாரமொன்று பொதுமக்களை ஏதோ ஒரு வகையில் சென்றடைந்துகொண்டே உள்ளது. இப்படிப் பொதுமக்கள் மனத்தில் நிலைக்கும் ஆளுமைகள் குறித்த புனைவான கதைகளும் அதற்கு ஈடாக உருவாகிக்கொண்டே இருக்கும். நாளடைவில் அது ஒரு உபவரலாறாக அந்த ஆளுமையின் மீது ஒட்டி வைக்கப்படும். பின்னர் அது அவ்வாளுமையின் கவர்ச்சியான வாழ்க்கைத் தருணமாக நிலைநிறுத்தப்படும். பின்னர் இந்தக் கவர்ச்சிகள் மட்டுமே ஒன்றிணைந்து, அப்படியொருவன் வாழ்வது உலகில் அறிதினும் அரிய தருணம் என்று வர்ணிக்கப்படும். அதுபோன்ற ஆளுமைகள் வணங்கத்தக்கவர்கள் என்றும் அறிவிக்கப்படும். வணங்கப்படும் ஓர் ஆளுமையின் வாழ்க்கை மிக விரைவாகவே பின்பற்றப்படாமல் எங்கோ கண்ணுக்குத் தெரியாத உச்சிக்கு உயர்த்தப்பட்டு சிலிர்ப்புடன் பார்த்து பரவசப்பட மட்டுமே பயன்படும்.
இன்று பாரதியார் அப்படியான ஒரு திருவுருவாகவே மாறிவிட்டார். ஒருவகையில் அவர் இன்று வீடுகளில் மாட்டி வைக்கப்படும் கவர்ச்சியான உருவம். ஜாதியைப் பேணுபவர்களும் பெண்களை இரண்டாம் குடிகளாகக் கருதுபவர்களும் அதிகாரத்திடம் விலை போகிறவர்களும் என் வீடு, என் உடமை, என் வாழ்க்கை என வாழும் சுயநலமிகளும் எவ்விதக் கூச்ச உணர்வும் இன்றி பாரதியின் உருவத்தை தங்கள் வீடுகளிலும் வாகனங்களிலும் அலங்காரப் பொருளாக்கியுள்ளனர்.
உண்மையில் பாரதியின் உருவம் எப்படி இருந்தது? ரா.அ.பத்பநாபம் அவர்கள் தொகுத்த ‘பாரதியைப் பற்றி நண்பர்கள்’ எனும் நூலில் அதற்கான சில குறிப்புகள் கிடைக்கின்றன. வழுக்கைத் தலையை மறைக்கும் தலைப்பாகை, விசால நெற்றி, ஜொலிக்கும் கண்கள், மிக மெலிந்த உடலை பெருக்கிக்காட்டும் அங்கி, தாடி மீசை, சக்தி பாடல்களைப் பாடத் தொடங்கியபின் நெற்றியில் சிவப்புக் குங்குமம் இதுதான் பாரதி.
சாதாரணமாக வீட்டில் இருக்கும்போதுகூட சட்டையும் கோட்டும் கழுத்தில் மப்ளரும் தலையில் முண்டாசுமாக இருப்பார் பாரதி. அதற்கான காரணத்தை நண்பர்களிடம் கூறும்போது, தன் உடல் மெலிந்தது என்றும் அதை வெளியில் காட்ட தான் விரும்பவில்லை என்றும் சொல்வார்.
பாரதியின் உள்ளம் பிரம்மாண்டமானது. அந்த பிரம்மாண்டத்தை ஏந்தி நிற்கும் உடல் ஒன்று அவருக்குத் தேவைப்பட்டிருக்கலாம். எந்த நேரமும் சக்தி திரண்ட உடல் என அவர் நண்பர்கள் சிலர் கூறுவதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவரது நடை, அசைவுகள், மீசை திருத்துதல் எல்லாமே மிடுக்காக இருக்குமாம். திரும்பும்போது கழுத்தும் மடக்கும்போது கால் கைகளும் ஸ்பிரிங் தள்ளுவதுபோல மின் வேகத்தில் இருக்கும் என சு. சண்முகன் என்பவர் தன் நேரடி அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.
நண்பர்களே,
பாரதியாரை அறிவதற்கு சில நூல்கள் மேற்கோள் காட்டப்படுவதுண்டு. வ.ரா எழுதிய ‘மகாகவி பாரதியார்’, யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள்’, ரா. கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார்’, செல்லம்மாள் எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ போன்றவை அவற்றில் முதன்மையானவை. காரணம், இந்நூலை எழுதியவர்கள் பாரதியுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள். அவர் வாழ்வை நன்கு அறிந்தவர்கள். இத்தனை தரவுகள் நமக்கிருந்தும் பாரதியார் இல்லாமலாகி 103 ஆண்டுகள் கடப்பதற்குள் அவரைச் சுற்றி சுழலும் கற்பனையான கதைகள் ஆச்சரியத்தையும் வரலாறு என நாம் நம்பிக்கொண்டிருப்பவைகள் மீது அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன.
நண்பர்களே, பாரதியார் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவங்களில் பிரபலமான சிலவற்றை முதலில் ஆராயலாம் என நினைக்கிறேன். அதன் வழியாக ஏற்கெனவே நம் மனத்தில் பாரதியார் குறித்து எழுப்பப்பட்டுள்ள சித்திரம் மாற்றுருவம் அடையும் என்றால் அவரது ஆளுமையை நெருங்கிச் செல்ல அது துணை புரியலாம்.
முதலாவது பாரதி வறுமை நிலையில் கடைப்பிடித்த ஈகை குணம் பற்றியது.
வறுமையினால் பாரதியார் பசியில் வாடிக்கொண்டிருக்கும்போது அவர் மனைவி செல்லம்மாள் கொஞ்சமாய் அரிசியைச் சமையலுக்கு எங்கிருந்தோ இரவல் வாங்கி வருகிறாள். உலையில் இடுவதற்கு முன் அரிசியைப் பொறுக்கி முறத்தில் வைத்துவிட்டுச் சென்றவள் மீண்டும் வந்து பார்த்தபோது பாரதி தன் பசியைக்கூடப் பொருட்படுத்தாமல் அதைத் தின்ன வரும் குருவிகளுக்கு அந்த அரிசியைப் போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து பசியின் கொடுமையால் கலங்கி நிற்கிறாள். பாரதியோ தன்னுடைய பசியையும் பொருட்படுத்தாமல் பறவைகளின் பசியைப் போக்கினார் என்பதாகக் கதைகள் சொல்லப்படுவதுண்டு.
பொதுவாகவே நம்மவர்களுக்கு பசியில் வாடும் கலைஞர்களைப் பார்ப்பதில் அலாதி விருப்பம் உண்டு. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, நமது பிள்ளைகளை மறந்தும் கவிதை, கலை, தத்துவங்கள் பக்கம் செல்லாதே எனச் சொல்ல அது உதவியாக இருக்கும். அப்படிச் சென்றால் பாரதிபோல சோற்றுக்கே அல்லாட வேண்டும் எனச் சொல்ல அது வசதியானது. பாரதி என்னதான் மேதையாக இருந்தாலும் சோற்றுக்குக் கஷ்டப்பட்டான், பெரும் கவிஞனாக இருந்து என்ன செய்ய… வறுமையில் வாடினானே ஐயோ பாவம் எனச் சொல்லும் எத்தனையோ குரல்களை என்னைப் போலவே நீங்களும் கடந்திருக்கக்கூடும்.
அந்தக் குரலுக்குப் பின்னால் இருப்பது தாழ்வுணர்ச்சியின் அழுத்தம். அப்படிச் சொல்பவர்களால் பாரதியின் மேதமையைத் தாங்கிகொள்ள முடிவதில்லை அல்லது அவன் தன்னளவில் அடைந்துள்ள நிறைவை அறியும் அறிவு அவர்களுக்குக் கைகூடவில்லை எனலாம். சோற்றுக்காக மட்டுமே வாழ்ந்து, எளிய கதைகளைப் பேசி, சுயபச்சாதபங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, பிறரையும் வாடச் செய்து, முதுமையை எதிர்கொண்டு அதன் விளைவாக மரணத்தை தழுவும் எளிய வாழ்வை வாழ்ந்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும் பாரதி அச்சமூட்டுபவனாக இருக்கிறான் என்பதுதான் இரண்டாவது காரணம். எனவே, அவன் ஏதோ ஒன்றில் தோற்றுவிட்டதாக உலகியல் பணிகளில் இளைத்துவிட்டதாகப் பரிதாபக் குரல்கள்போல பாவனை காட்டும் ஒலிகள் எழுந்த வண்ணமே இருக்கின்றன.
பாரதி உண்மையில் சோற்றுக்குத் திண்டாடினானா?
இதே சம்பவத்தை யதுகிரி அம்மாள் தான் எழுதிய ‘பாரதி நினைவுகள்’ எனும் நூலில் சொல்கிறார். அதாவது பல ஆண்டுகளாக பாரதி குறித்து சொல்லப்பட்ட சுவாரசியமான இக்கதையின் உண்மைக்கு நெருக்கமான கோணமென இதைச் சொல்லலாம். யதுகிரி, பாரதியார் வீட்டில் மூன்றாவது குழந்தையாகக் கருதப்பட்டவர். பாரதியின் நெருக்கமான தோழரான ஶ்ரீநிவாஸாச்சரியாரின் மகள். பாரதியின் கவிதைகள் உருவான சூழல்களை அறிந்தவர். இந்த நூலின் முன்னுரையில் பாரதியைத் தான் சிறுமியாக அறிந்த தருணம் குறித்து சொல்வதே சுவாரசியமானது. யாதுகிரியின் பாரதி அந்தச் சிறுமிக்குத் தான் எழுதிய பாடல்களின் காகிதத்தைக் கொடுத்ததும் அது புயலில் அழிந்ததும் ஒரு துர்நிகழ்வு.
அவர் அந்நூலில் ‘விட்டு விடுதலையாகி’ எனும் கட்டுரையில் எழுதுகிறார், சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்ப வேண்டிய கட்டுரையை பாரதி அன்று அனுப்பவில்லை. கட்டுரை அனுப்பினால்தான் பணம் கிடைக்கும். எனவே செல்லம்மாள் மேசை மீது காகிதம், பேனா, மை புட்டி எல்லாவற்றையும் பாரதிக்காகத் தயார் செய்து வைக்கிறாள். பாரதி அன்று குளித்து, காப்பி குடித்துவிட்டு, வெற்றிலை பாக்கெல்லாம் போட்டுக்கொண்டபின் கட்டுரை எழுதுவார் என நம்பியிருக்கிறாள். ஆனால் பாரதியோ முறத்தில் இருந்த அரிசியில் ஒரு பங்கை குருவிகளுக்காக முற்றத்தில் இரைத்துவிட்டு பாடல் பாடிக்கொண்டிருக்கிறார். அரிசியில் கால் பங்கு இல்லை.
பாரதியோ செல்லம்மாவைப் பார்த்து, “வா செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன. நாமும் அதைப் போல் ஏன் இருக்கக்கூடாது? நீயும் சதா தொந்திரவு செய்கிறாய். நானும் எப்போதும் எரிந்து விழுகிறேன். நமக்கு இந்தக் குருவிகள் ஒற்றுமை கற்றுக் கொடுக்கின்றன. நாம் கவனியாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறோம். நம்மைக் காட்டிலும் மூடர்கள் உண்டா?” என்றார்.
செல்லம்மாவுக்கோ கோபம். அது அரிசி தீர்ந்ததால் அல்ல; மீண்டும் அரிசி பொறுக்க வேண்டுமே என்றுதான் எரிச்சல் அடைகிறாள். அதற்குப் பத்து நிமிடம் ஆகுமென கலங்குகிறாள்.
நண்பர்களே, இந்த வரிகள் மூலம் நம்மால் சிலவற்றை ஊகிக்க முடிகிறது. முழு அரிசியையும் குருவிகளுக்குப் போட பாரதி ஒன்றும் பைத்தியக்காரனில்லை. நமது மனம் அவனை அப்படி உருவகிக்க விரும்புகிறது. இரைத்த அரிசியை ஈடு செய்ய வீட்டில் இன்னமும் அரிசி உண்டு. ஆனால் அதில் கல் பொறுக்கி, தூசைப் புடைத்து சுத்தம் செய்து எடுக்க செல்லம்மாவுக்கு அவகாசம் இல்லை. எழுதினால் மட்டுமே பாரதிக்குப் பணம் வரும். மற்றபடி பாரதி சோற்றுக்கு அல்லாடவில்லை.
இப்படிச் சொல்வதன் மூலம் பாரதியின் ஈகை குணத்தில் ஏதோ குறை காண்பதாக நண்பர்கள் நினைக்கலாம். உண்மையில் இதுபோன்ற புனைவுகளைவிட உண்மையான நிகழ்வுகளே பாரதியின் கட்டற்ற அன்புக்கும் ஈகை குணத்திற்கும் சாட்சிகளாகின்றன.
யதுகிரி தன் நூலில் மேலும் ஓர் அனுபவத்தைச் சொல்கிறார். அவர் பாரதியுடன் கடலில் குளிக்கச் செல்கிறார். அப்போது வழியில் பாம்பாட்டி ஒருவன் பாம்பை வைத்து வித்தைக் காட்டுகிறான். அவர்களைக் கடந்து செல்லும் கூட்டத்தைக் கண்டதும் ‘குளிர் தாங்க முடியவில்லை’ என்றும் ‘இரண்டு நாட்களாக சோறு சாப்பிடவில்லை’ எனவும் இரைஞ்சுகிறான். பாரதி நேற்றுதான் புதிதாக வாங்கிக் கட்டிய அரை வேட்டியை அவனுக்குக் கொடுத்துவிட்டு மேல் வேட்டியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்கிறார். ஏன் அப்படிச் செய்தீர்கள்? குறைந்தபட்சம் கிழிந்த மேல் வேட்டியை அவனுக்குக் கொடுத்திருக்கலாமே என யதுகிரி கேட்டபோது, எனக்கு நாலு பேர் வேட்டி கொடுப்பார்கள் அவனுக்கு யார் கொடுப்பார்கள் எனக் கேட்கிறார்.
நண்பர்களே மீண்டும் பாரதியின் வறுமைக்கே வருவோம். பாரதியாரிடம் ரொக்கம் புழங்காமல் இருக்க சில அரசியல் காரணங்களும் இருக்கவே செய்தன. சுதேசமித்ரனில் எழுதுவதன் மூலம்தான் பாரதிக்குப் பணம் வந்துகொண்டிருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின் புதுவை பிரஞ்சு அரசு பாரதி மீது கெடுபிடிகள் காட்ட ஆரம்பித்தது. அவருக்கு வந்த தபால்கள் அஞ்சலகத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. மணியார்டர்கள் எரிக்கப்பட்டன. அப்போதுமே பாரதி மீது அன்பு கொண்டவர்கள் அவருக்கு இயன்ற அளவு பணம் கொடுத்து உதவியுள்ளனர். அதற்கு பிரதிபலனாக பாரதி தன் கவிதைகளை அவர்களுக்கு வாசித்துக் காட்டியுள்ளதை அவர் மனைவி செல்லம்மாவே எழுதுகிறார்.
நண்பர்களே, ரொக்கம் இல்லாத நெருக்கடி பாரதிக்கு இருந்தாலும் அவன் ஒருபோதும் வாடி நிற்கவில்லை என்பதையே நம்மால் இதுபோன்ற குறிப்புகள் வழியாக ஊகிக்க முடிகிறது.
இப்போது மீண்டும் சில கேள்விகள் எழலாம். என்ன இருந்தாலும் பாரதி தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லைதானே. அவள் பாரதியால் கஷ்டப்பட்டாள்தானே. கண்ணீர் விட்டாள்தானே. கடைசிவரை நிம்மதியற்ற வாழ்க்கைதானே அவளுக்கு எனும் குரல்கள் பாரதி குறித்துப் பேசும்போதெல்லாம் எப்போதும் ஒலிப்பதைப் பார்க்கிறேன்.
இங்கு இளைஞர்கள் கணிசமான அளவு இருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில உச்சங்களைத் தொடவேண்டுமென முடிவெடுத்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். வரலாற்றில் நிகழ்ந்த பெரிய ஆளுமை குறித்துப் பேசும்போதும் அவரின் எதிர்மறை குணத்தை மட்டும் ஒருவர் இழுத்து வந்து பேசுகிறாரேயானால் அவருடனான நட்பைத் துண்டிப்பதுதான் அவ்வழி.
காந்தி, விவேகானந்தர், அயோத்திதாச பண்டிதர், வள்ளலார் என நீங்கள் யாரைப் பற்றியும் முதல் வார்த்தை எடுத்து வைக்கும்போதே அவர் குறித்த எதிர்மறைத் தன்மை ஒன்றை முன்வைக்கும் ஒருவரின் ஆன்மா அத்தனை பலவீனமாக உள்ளது எனப் பொருள். ஆனால் அந்த மழுங்கிப்போன சிந்தனையை வெளிக்காட்டாமல் எதிர்மறைத் தன்மையைச் சொன்னதாலேயே தன்னை அறிவுஜீவியாக பாவனை செய்வார்கள். அவரிடமிருந்து நீங்கள் விலகிச் செல்வதுதான் உங்களை நீங்கள் மேன்மைப்படுத்திக்கொள்ளும் வழி.

பாரதியார் – செல்லம்மாவின் காதல் வாழ்க்கை இன்றைய நமது நிலையில் இருந்து ஆராயத் தக்கது அல்ல. பாரதியார் சரிதம் எனும் நூலில் செல்லம்மாள் தன் கணவனுடன் கைகோர்த்து நடந்த கதையைச் சொல்லும் இடம் சுவாரசியமானது. கணவனோடு கைகோர்த்துச் செல்ல அனுமதியில்லாத காலத்தில் பொதுவெளியில் உலாவச் செல்வதை தவிர்த்துவிட்டு எட்டயபுரத்து மகாராஜா மாந்தோட்டத்தில் உலாவ பாரதி அழைக்கிறார். அப்போது செல்லம்மாள் ஒரு வரி எழுதுகிறாள். ‘பாரதியார் எந்தக் காரியத்தைச் செய்யச் சொல்லி ஆக்ஞையிடுவாரோ அதன்படி தவறாது செய்ய வேண்டுமென்பது என் நோக்கம் – உறுதி… அவர் பேச்சுக்கு மறுபேச்சின்றி நானும் தோட்டம் பார்க்கப் புறப்பட்டேன்’ என்கிறார். அப்படி அவர்கள் உலாவச் செல்லும்போது ஊர் மக்கள் அவர்களைப் பைத்தியங்கள் என்பதை பொருட்படுத்தாமல் இருக்கிறார்.
செல்லம்மாள் ஒரு எளிய பெண். தன் கணவன் அசாதாரணமானவன் என்பதை அறிந்த பெண். சாஸ்திர சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்ட பெண், அந்தப் பெண் மீது எல்லா கட்டுப்பாடுகளையும் உடைக்கும் பாரதிக்குத் தீராத காதல் இருந்தது. காசியில் இருந்து எழுதிய கடிதத்தில் ‘காதலி செல்லம்மாளுக்கு’ என்றே விளிக்கிறார். மனைவியாக இருந்தாலும் அவள் காதலி. அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது ஐரோப்பா பயணம் செய்யக் கிடைத்த வாய்ப்பை தவிர்க்கும் அளவுக்குக் காதல். இருவருக்குள் பிணக்கு வரவில்லையா? வராமல் என்ன? பிணக்கு என்பதுகூட காதலில் இன்னொரு வடிவம்தானே.
பாரதி சொல்கிறார், “பணம் இருந்துவிட்டால் செல்லம்மா உலகையே ஆண்டு விடுவாள். அது இல்லாததால் என்னைக் கட்டுப்படுத்துகிறாள். என் செல்லம்மாள் என் பிராணன். என் செல்வம். எல்லாம் அவள்தான். அவள் பாக்கியலஷ்மி!”
நண்பர்களே, பாரதியின் காதல் என்பது கவிஞனின் காதல். கவிஞன் என்றால் அமைச்சர்கள் பின்னால் மானியம் கேட்டு அலைகிறார்களே அந்தக் கவிஞன் அல்ல. அரசியல்வாதிகளைப் புகழ்ந்து பாடி பரிசு பெறுகிறார்களே அந்தக் கவிஞன் அல்ல. நூல் வெளியீட்டுக்குத் தனவந்தர்களின் திகதி கேட்டு நிற்கிறார்களே அந்த கவிஞனும் அல்ல. பாரதி கவிஞன். தன்னைச் சுற்றியுள்ள அத்தனையிலும் மாற்றம் காண வேண்டும் என துடித்த கவிஞன். தன்னால் இந்த உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என நம்பிய கவிஞன்.
அந்தக் கவிஞன் யானை மிதித்து இறந்தான் என்பது பாரதி குறித்து சொல்லப்படும் இன்னொரு சுவாரசியமான கதை.
பாரதி யானை மிதித்துத்தான் இறந்தானா?
பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, சித்திர பாரதி என்ற நூலை வெளியிட்டுள்ளார். 1957ல் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர்.
அவர் வழங்கியுள்ள தகவல்படி பாரதியை யானை தாக்கிய சம்பவம் நடந்தது ஜூன் மாதத்தில். அதன் பின் பாரதி ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சுதேசமித்திரனில் வேலைக்குப் போய்வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் தேசிய வீதி பஜனை நடத்தியிருக்கிறார். பொதுக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியூர்ப் பயணமும் மேற்கொண்டுள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் பேசிவிட்டுத் திரும்பிவந்து, தமது ஈரோடு விஜயம் குறித்து ‘மித்திரனு’க்கு தாமே எழுதித் தந்துள்ளார்.
ஆகவே, பாரதியார் யானை அடித்து மரணமடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்று நாம் காணும் மிகப்பிரபலமான பாரதியின் புகைப்படம் யானை தாக்குதலுக்குப் பின்னர் எடுத்ததுதான். தன் நண்பர் பாரதிதாசன், பாரதியின் உடல்நிலை குறித்த கவலையில் இருக்க, தான் நலமாக இருப்பதை தன் நண்பருக்கு உறுதி செய்ய பாரதியார் எடுத்த படம் அது.

1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. விரைவில் அது ரத்தக் கடுப்பாக மாறியது. பாரதியார் அந்நோய்க்கு முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. அதன் விளைவாக மரணம் அடைந்தார்.
இன்னும் பாரதியார் பாதுகாக்கப்பட வேண்டிய கவிஞன் எனக் காந்தி சொன்னதாக உலாவும் கதைகளும் பாரதிக்கு பதினான்கு மொழி தெரியும் என்ற கற்பனைகளும் நிரம்பிய சூழலில்தான் நாம் அவனை நம்முடன் வாழ்ந்த சக மனிதனாக அணுக வேண்டியுள்ளது. ஆம்! கவிஞனுக்கே உரிய அலைக்கழிப்புடன் நித்தம் நித்தம் உயிராற்றலோடு இயங்கிய மனிதனவன்.
ஆனால் அதை எளிய மனிதர்கள் ஏற்றுக்கொண்டாலும் எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்வது அத்தனை சாத்தியமானதாக இருப்பதில்லை. காரணம், பாரதியும் உன்னைப்போல வாழ்ந்த அல்லது உன்னைவிட வறிய நிலையில் வாழ்ந்தவன்தானே எனச் சொல்லும்போது சக எழுத்தாளர்கள் கடும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிவிடக்கூடும். பாரதியை தூரமாக உயர்த்திப் பிடித்து வணங்கும் பிம்பமாக வைத்திருக்கும் வரைதான் அவரவர் மனசாட்சியிடம் இருந்து அவரவருக்குப் பாதுகாப்பு. ‘அவன் ஓர் அபூர்வப் பிறவி’ என்றும் ‘அவன் ஒரு சித்தன்’ என்றும் ‘அவன் ஒரு பித்தன்’ என்றும் எளிதாகத் தப்பிவிடலாம். அவன் உன்னைப்போல என்னைப்போல ஓர் எழுத்தாளன் எனும்போது இந்நாட்டில் பல எழுத்தாளர்கள் மனம் குறுக வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
ஆம்! பாரதியின் இருப்பு என்பது இன்று பல எழுத்தாளர்களுக்கும் அச்சமூட்டுவது. ஏன் அவன் இருப்பு அச்சமூட்டுகிறது?
மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவது, பாரதி நவீன காலத்தின் தன்மையை அறிந்து செயல்பட்டவன்.
நவீன காலகட்டம் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. மிக எளிதாக விளக்குவதென்றால், பாரம்பரிய நிலபிரபுத்துவ அமைப்பில் இருந்து முதாலாளித்துவ அமைப்பின் மாற்றத்தை நவீனத்துவக் காலம் எனலாம். நிலம் எனும் அதிகாரம் மன்னர்களிடமும் குறுநில மன்னர்களிடமும் இருந்தது. நாடு சுதந்திரம் கண்ட பின்னர் முதலாளித்துவ அமைப்புகள் ஓங்கி வளர்ந்தன. பாரம்பரிய நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்து வேறுபட்ட தொழில் நிறுவனங்கள் வளரத்தொடங்கின. விவசாயக் கூலியாக இருந்தவர்கள் தங்களை விடுவித்துக்கொண்டு தொழிற்சாலைகளை நோக்கிச் சென்றது, தரப்படுத்தப்பட்ட கல்வி முறை உருவானது, அச்சு ஊடகங்கள் வளர்ந்து வந்தது என நிகழ்ந்த ஒவ்வொரு மாற்றமுமே நவீனத்துவக் காலத்துக்கு வழிகோலின. எனவே இயல்பாக சமயம் சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விஞ்ஞான மனப்பாங்கு, தனிமனித சுதந்திரம், அரசியலில் ஜனநாயகக் கோட்பாடு, மக்களிடையே சமத்துவம், பெண்களுக்குச் சம உரிமை, கலைகளில் சமயச் சார்பின்மை, புதிய கலை வடிவங்களின் தோற்றம் போன்றவை முதலாளித்துவ சமூக அமைப்பு உருவாக்கிய நவீனத்துவம் சார்ந்த அம்சங்களாகும்.
அதாவது யாரும் திட்டமிட்டு இது நவீனத்துவக் காலம் என நகர்த்தவில்லை. காலமும் நிகழ்வுகளும் மனிதர்களின் மனநிலையில் மாற்றங்களை உருவாக்குகின்றன. பொதுவாகவே இதுபோன்ற மாற்றங்களை உடனடியாகப் பிரதிபலிப்பவர்கள் கலைஞர்கள்தான். அவர்கள் அறிவார்ந்த சமுதாயத்தின் கனிந்த துளி. நிலத்தை அறியும் ஆலமரம் தன் கனிகளால் அதன் உயிர்த்தன்மையைப் பிரதிபலிப்பதுபோல கலைஞனே ஒரு சூழலின் முதன்மைச் சாட்சியாக வெளிப்படுகிறான். அல்லது, அப்படி வெளிப்படுபவனே கலைஞனாகக் கருதப்படுகிறான்.
பாரதி அப்படி வெளிப்பட்டான்.
நவீன காலத்தின் தன்மைகளில் ஒன்று ஆட்சி மாற்றங்களை வரையறுப்பதிலும் தெரிவு செய்வதிலும் மக்களே முதன்மையானவர்கள் என்பதை அறிவது. அதாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரே தங்களுக்குச் சேவை செய்யக்கூடியவர். இந்த உண்மையை அறிந்தவனால் காசியில் இருந்து திரும்பிய பின்னர் மன்னனிடம் வேலை செய்ய முடியவில்லை. காசி நகரம் பாரதியை நவீன மனிதனாக மாற்றியமைத்தது. எட்டயபுர ஜமீனில் ராஜாவிடம் கவிதை பாடிக் காலம் கழித்தவனால் காசியில் இந்து திரும்பிய பின்னர் ஈராண்டுகளே எட்டயபுர மன்னனுடன் நட்புப் பாராட்ட முடிந்தது. பின்னர் அவரையே நையாண்டி செய்து கவிதை எழுதிவிட்டு வெளியேறுகிறான்.
நான் பாரதி காசியில் வாழ்ந்த வீட்டைத் தேடிச் சென்றிருக்கிறேன். அவரது தங்கையின் மகன் முனைவர் கே.வி. கிருஷ்ணன் அவர்களுடன் பேசியிருக்கிறேன். அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தால் அருகிலேயே கங்கை நதி. ஆஞ்சநேய படித்துறை அருகில் இப்படித்தான் பாரதி நின்றிருப்பார் என நின்றுபார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நொடியும் புதிதாய் புரண்டோடும் கங்கைதான் அவரையும் புதுமையை நோக்கித் தள்ளியதோ என வியந்திருக்கிறேன்.
பாரதி ஒவ்வொரு கணமும் புதுமையை நோக்கிச் சென்றவர். எனவேதான் அவருக்கு மரபு வழியில் வந்த கவிஞர்கள்போல மன்னரைப் புகழ்ந்து பாடி பணம் சம்பாதிக்க ஒம்பவில்லை. இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஏன் பாரதி இன்று பல எழுத்தாளர்களுக்கு சிக்கலான ஆளுமையாக இருக்கிறான் என. இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள் ஏன் அவரை அசாதரணனாக பல எழுத்தாளர்கள் விலக்கி வைக்க நினைக்கிறார்கள் என.
ஆம்! இனி மக்களை நோக்கி மட்டும்தான் எழுதப்போகிறேன் என பாரதி எடுத்த முடிவை, தன் சொற்கள் இனி ஒருபோதும் அதிகாரத்திற்குச் சாமரம் வீசாது என்ற தீவிரத்தை, வாசகன் தன் நூலை வாங்கி வாசிப்பதே பெருமை எனும் நிலைப்பாட்டை இன்றுவரை பல எழுத்தாளர்கள் கையில் எடுக்கவில்லை. இன்றும் மலேசியாவில் ஓர் எழுத்தாளர் தனது நூல் வெளியீட்டுக்கு முன்னர் அமைச்சர்களிடம் திகதி கேட்டு அதற்கொப்ப நிகழ்ச்சி நடத்துவதை நீங்கள் பார்க்கலாம். இன்றும் இலக்கிய மேடைகளில் அரசியல் தலைவர்களும் தனவந்தர்களும் போற்றிப் புகழப்படுவதை நீங்கள் கேட்கலாம். நூறு ஆண்டுகளுக்கு முன்பே நவீன காலத்தின் தன்மையை அறிந்து தன்னை அதற்கு தயார்ப்படுத்திக்கொண்ட பாரதி நவீன இலக்கியவாதிகளின் முன்னோடி. அவன் முன்னோடியாக இருப்பதென்பது அதிகாரத்திடம் கூழைக்கும்பிடு போடும் ஒவ்வொரு சமகாலப் படைப்பாளனுக்கும் அரூபமான அழுத்தங்களைக் கொடுக்கக்கூடியது. எனவேதான் பாரதியைப் புகழும் யாருமே அவன் நவீனத்துவக் காலத்தை அறிந்து செயல்பட்ட தீவிரத்திற்கு எதிராகவே இருந்தனர்.
இரண்டாவது காரணம் பாரதி புதுமையை இலக்கியச் சூழலில் மட்டும் காட்டவில்லை; தனது எழுத்திலும் அதை வெளிப்படுத்தினான். புதுமை என்பது என்ன? அதுவரை பழக்கத்தில் இருந்த நடைமுறைகளை ஒட்டி விமர்சனப் பார்வை அவனுக்கு இருந்தது. பாரதியாரின் கவிதைகள் போல கட்டுரைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கவிதை சுழித்தோடும் நதியென்றால் கட்டுரைகள் கடலைகள் போன்றவை. ஒவ்வொரு அலையும் புதியதுபோல பாரதியின் ஒவ்வொரு கட்டுரையும் புதியவற்றையே தேடிச் செல்கிறது. மூடபக்தி, பெண் விடுதலை, சாதியத்திலிருந்து விடுதலை என அக்காலகட்டத்தில் பலரும் பேசப் பயந்த, தயங்கியவற்றை பாரதி பேசினான். பாரதி இந்தச் சிந்தனையை அடைய அவனது உலகலாவிய பார்வையே காரணமாக இருந்தது. உலகம் முழுவதும் மாற்றங்கள் நிகழ்கின்றன. நாம் பெண்களை அடிமைகளாக நடத்தும் வரை நாம் பின்தங்கிய மக்களாகவே கருதப்படுவோம் என மீண்டும் மீண்டும் சொல்கிறான். ‘சியூ சின்’ எனும் சீன தேசத்துப் புரட்சியாளரான பெண்ணிய கவிஞரைப் பற்றி எழுதுகிறான். சீன அரச மரபை எதிர்த்ததால் தூக்கிலிடப்பட்ட அவளை எண்ணி உள்ளம் உடைகிறார், ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என தன் மகளுக்காகவே கவிதை புனைகிறார்.
பாரதி, எதெல்லாம் பழமையின் எச்சங்கள் என நினைத்தானோ, அவற்றைவிட்டு விடுதலையாகி ஒவ்வொரு நிமிடமும் புதிய மனிதனாகப் பரிணாமம் எடுக்கிறான். இந்தத் தன்மை எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒவ்வாதது. இன்று கொஞ்சம் ஆழ ஆராய்ந்தாலே நவீன புனைவுகள் எனச் சொல்லப்படுபவைகளில் ஆணாதிக்கச் சிந்தனையும் சாதியப் பிடிப்பும் இருப்பதைக் காணமுடிகிறது. இங்கு கல்லூரி மாணவர்கள் இருக்கிறீர்கள், உரைநடையில் நீங்கள் வாசிக்கும் எல்லாமே நவீன இலக்கியம் இல்லை. அது அந்த வடிவத்தை எடுத்துக்கொண்டது. அவ்வளவுதான். நீங்கள் அந்தப் பிரதியை வாசிக்க வேண்டும். அதில் ஏதேனும் புதிய சிந்தனை உள்ளதா என ஆராய வேண்டும். அப்படி ஒருவேளை ஆராயும்போது மலேசியாவில் எழுதப்படும் பல படைப்புகளில் அடிப்படைவாதமும் பிற்போக்குத்தனமும் மண்டிக்கிடப்பதை நீங்கள் எளிதாகவே அடையாளம் காணமுடியும். இப்படி எழுத்து நடையில் புதுமையும் சிந்தனையில் பழமையும் கொண்டிருப்பவர்களுக்கு பாரதியின் இருப்பு எத்தனை அச்சத்திற்குரியது என யோசித்துப் பாருங்கள்.
மூன்றாவது காரணம் தான் சொல்லும் கருத்துகளை பாரதி வாழ்ந்தும் காட்டினான்.
ரா. கனகலிங்கம் எழுதியுள்ள என் குருநாதர் பாரதியார் நூலில் பாரதியார் அடித்தட்டு மக்களோடு எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என பல தரவுகளை முன்வைக்கிறார்.
ரா. கனகலிங்கத்தை பாரதியின் வரலாற்றில் பிரிக்க முடியாது. என் குருநாதர் பாரதியார் நூலில் ‘உபநயனம் செய்வித்தார்’ எனும் பகுதியில் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த தனக்கு பாரதி பூணூல் அணிவித்த சடங்கை விரிவாக எழுதியுள்ளார் கனகலிங்கம். அப்போது உடன் இருந்தவர்களில் ஒருவர் வ.வே.சு. ஐயர். வ. வே.சு ஐயர்தான் குளத்தங்கரை அரசமரம் எனும் முதல் சிறுகதை எழுதியவர். ரா. கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த பாரதி ‘இன்று முதல் நீ பிராமணன்’ என்றும் ‘அப்படி ஆகிவிடலாமா? என யாராவது கேட்டால் என் குருநாதர் பாரதியைக் கேளுங்கள், அவர் உங்கள் ஐயத்தைத் தெளிவிப்பார்’ என்றும் கூறி அனுப்பியுள்ளார். ஆனால் பாரதியைப் பற்றி அறிந்த யாரும் அப்படி ஒரு கேள்வியை எழுப்பவில்லை. கனகலிங்கத்திற்கு பூணுலை அணிவித்த பாரதிதான் தன்னுடைய பூணுலைக் கழட்டியும் வைத்தான்.
ரா.அ.பத்பநாதன் தொகுத்துள்ள ‘பாரதியாரைப் பற்றி நண்பர்கள்’ நூல் முக்கியமான ஓர் ஆவணம். அதில் பலரும் சொல்வது, பாரதி எங்கும் அமர்ந்து யாருடனும் உண்பார் என்பதுதான். தன் மகள் ருதுஸ்நான விருந்தில் எல்லா சாதியினரையும் அழைந்து சமபந்தி நடத்தியதில் அவர் நண்பர்களே அருவருப்பு அடைந்ததை சுந்தரேச ஐயர் பதிவு செய்கிறார். பாரதிக்கு ஜாதி பேதம் இல்லை. எங்கும் எந்த சாதியுடனுடன் சரிசமமாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார் என இந்நூலில் பல இடங்களில் பதிவாகியுள்ளது. இன்று அது சாதாரணமாக இருந்தாலும் பாரதி வாழ்ந்த காலத்தில் அது அசாதாரணமானதுதான்.
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர் சொல்லுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங்கு ஊதேடா சங்கம்!
என சடங்குகள், ஆசாரங்கள், ஆகியவற்றை மதத்தில் இருந்து வேறுபடுத்தினான் அவன்.
மதத்தில் அறிவுக்குப் புறம்பான அம்சங்களை இவ்வாறு ஒதுக்கியதுபோல சமூக நீதிக்குப் புறம்பான அம்சங்களையும் நிராகரித்தவன் பாரதி.
சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு றொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் – அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம் என்கிறான்.
இப்படி இலக்கியவாதிக்கு உரிய அறத்தினாலும் இலக்கியத்தின் தரத்தினாலும் பாரதி சிறந்த எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகவும் எழுத்தை வைத்து பிழைப்பு நடத்துவோருக்கு தடைக்கல்லாகவும் நிலைக்கிறான்.
நண்பர்களே, பாரதி எனக்கு அறிமுகமானது அவரது விசித்திரமான தோற்றத்தினால்தான். அப்போது நான் சிறுவன். சிறுவர்களைக் கவரும் உருவம் பாரதியுடையது. அல்லது சிறுவர்களைக் கவரும் உருவமாக பாரதியார் பாட நூல்களில் வரையப்பட்டிருந்தார். தலையில் தலைப்பாகை, கறுப்பு நிற கோட், அழகிய முறுக்கிய மீசை இதுதான் எனக்கு அப்போது தெரிந்த பாரதி. ஒரு சிறுவனால் நினைத்தவுடன் யாருடைய துணையில்லாமலும் பாரதியாராக மாறிவிட முடியும். மையெடுத்து முறுக்கிய மீசை வரைந்துகொண்டு தலைப்பாகை சுற்றிக்கொண்டால் பாரதிதான்.
சிந்தித்துப் பாருங்கள்! நம்மால் நினைத்தவுடன் உடனடியாக வேறு ஒரு தமிழ் அறிஞனாக தோற்றம் காண முடியுமா? வள்ளுவனென்றால் குடுமி வைத்து மீசை தாடி வளர்க்க வேண்டும், ஔவை என்றால் வெண்சேலை உடுத்தி நரை முடிக்கு மாற வேண்டும். பாரதியாவது எவ்வளவு எளிது. அதனாலேயே அவன் குழந்தைகளுக்குப் பிடித்த உருவமாக இருந்தான்; இருக்கிறான்.
பாரதியின் உருவம் அறிமுகமான சில தினங்களிலேயே நானும் சிலமுறை பாரதியாராக மாறியுள்ளேன். மையை ஏன் வீணடித்தாய் என அம்மாவிடம் அடிவாங்கியும் இருக்கிறேன். ஆனால் பாரதியின் மீது எனக்கு தீராத ஈடுபாடு இருந்தது. அதற்கு எனது சுற்றம்தான் காரணம். என் பெற்றோர்கள் எப்போதும் படி படி எனச் சொல்லிக்கொண்டே இருந்தனர். என் ஆசிரியர்களும் அதையே கூறினர். நான் வாழ்ந்த இடம் அடர்காடுகள் சூழ்ந்த நிலம். எனவே பாம்புகளுக்கும் உடும்புகளுக்கும் லாலான் புலிகளுக்கும் அங்கே பஞ்சமில்லை. எனவே வீட்டைவிட்டு வெளியேறுவது ஆபத்தானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் நான் கட்டுப்படுத்தப்பட்ட காலங்கள் இருந்தன.
அப்பொழுதெல்லாம் சனிக்கிழமையானால் மாணவர் பூங்கா எனும் சிறுவர் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகும். அப்படி ஒரு காலையில் பாரதியின் பாடல் ஒன்று அந்நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.
‘ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ எனும் பாடல் பாரதியார் என்னை நோக்கி சொல்வதாகவே தோன்றியது. அப்போது அந்தக் குரல் பாரதியுடையது என்றே நான் நினைத்துக்கொண்டேன். அப்போது நான் அடைந்த மன எழுச்சியை இப்போது விவரிப்பது அத்தனை எளிதானதல்ல.
என்னை ஒரு கவிஞன் ஓடி விளையாடச் சொல்கிறான். யாருமே என்னிடம் சொல்லாத வரிகள் அவை. ஏன் இப்படி யாருக்குமே சொல்ல மனம் வரவில்லை என்றெல்லாம் எனக்குத் தோன்றத் தொடங்கியது.
நான் வீட்டை விட்டு வெளியே சென்று உலகை அறிய பாரதியே காரணமாய் இருந்தான். உலகை அறியத் தொடங்கிய காலத்தில் பாரதியைக் கைவிட வேண்டியிருந்தது. பின்னர் ஜெயகாந்தனை வாசிப்பது தொடர்ந்தது. ஜெயகாந்தன் பாரதியின் பக்தன் என்பதெல்லாம் அப்போது தெரியாது. ஆனால் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு நவீன இலக்கியத்தின் தன்மையை உணர்ந்தபோது மீண்டும் பாரதியிடமே வந்து சேரவேண்டியிருந்தது. அதன் விளைவாக இலக்கியச் செயல்பாடுகளில் பாரதியையே முன்னுதாரணமாக எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. பாரதியை இலக்கியச் செயல்பாட்டில் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதென்பது வீண் வம்புகளை விலைக்கு வாங்குவதுதான். சில சமயம் அது நம்மை நாமே ஆன்ம விசாரம் செய்துகொள்வதுபோலதான். காரணம், பாரதியே தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடி.
பாரதியாருக்கு முன் நவீன சிந்தனை என்பது தமிழில் இல்லையா எனும் கேள்வியையும் இங்கே கேட்டுக்கொள்ளலாம்.
பேராசியர் க. கைலாசபதி, க.நா.சுப்பிரமணியம் போன்றவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவான படைப்பாளிகள் பலரும் பழமையின் சார்பிலேயே நின்றார்கள் என்று எழுதி வைத்துள்ளதை கவனத்தில் கொண்டே அக்காலச்சூழலை கவனமுடன் அணுக வேண்டியுள்ளது. தமிழின் முதல் நாவலாசிரியரும் பெண்களின் கல்வி முன்னேற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி 1869ஆம் ஆண்டிலேயே ‘பெண்மதி மாலை’ என்ற பெயரில் நூல் எழுதியவருமான வேதநாயகம்பிள்ளை, ‘உடல் ஆற்றலிலும் அறிவிலும் நாட்டுச் செயல்களை நடப்பிக்கும் திறமையிலும், குடும்பப் பாதுகாப்பிலும் ஆண்களே தலைமை ஏற்கும் தகுதி கொண்டுள்ளதால் மாதர்கள் தெய்வத்துக்குப் படிந்து நடப்பதுபோல ஆடவர்களுக்கும் படிந்து நடக்க வேண்டும் என்கிறார். மேலும், அவர் எழுதியுள்ள இந்த வரி கவனிக்கத்தக்கது, ‘பெண்ணானவள் முன்னர் தீவினை செய்து ஆடவனையும் கெடுத்தவள் ஆதலால், அவள் மேல் ஆடவன் முறைமை செலுத்தவும், அந்த ஆட்சிக்கு அவள் உட்பட்டிருக்கவும், பிள்ளைப்பேறு முதலிய துன்பங்களை நுகரவும் தெய்வக் கட்டளை பெற்றுக் கொண்டவளாயிருப்பதால் அவள் எவ்வளவு படித்தாலும் ஆடவனுக்கு அடங்கி நடக்க வேண்டியவளே’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.
நண்பர்களே, வேதநாயகம்பிள்ளை அவர்களின் ஆளுமையைக் குறைத்து மதிப்பிட இவ்வரிகளை நான் குறிப்பிடவில்லை. நமது ஆரம்பகால நவீனத்துவம் என்பது பெரிதும் பழமையைச் சார்ந்தே இருந்துள்ளது. இதன் நீட்சியாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த இந்தியத் தேசிய விடுதலையின் போராட்ட உணர்வும் அதனால் எழுந்த அரசியல் பொருளாதார விடுதலை உணர்வும் பூரணமடைந்தது. இந்தக் காலத்தில்தான் பாரதி எல்லாவகையிலும் விடுதலையடைந்த கவியாக எழுந்து வந்தான்.
அதனால்தான் அவனால் புதிய முயற்சிகளில் ஈடுபட முடிந்தது. முன்னரே நான் சொன்னதுபோல விமர்சகர்களால் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என வ.வே.சு ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதையைச் சொல்வார்கள். ஆனால் அவருக்கு முன்னர் எழுபத்து ஐந்துக்கும் மேற்பட்ட புனைவுகளை உரைநடையில் எழுதியவன் பாரதி. வாய் மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியாக பாரதியின் சிறுகதைகள் அமைந்தன. பாரதி அந்த வடிவத்தை, அரசியல், சமூக விமர்சனங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டார். சிறுகதைகள் என்பது ஐரோப்பிய இலக்கிய வடிவம். எனவே அதன் அழகியலை ஆராயா ஐரோப்பிய இலக்கணங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டியிருந்தது. அவ்வகையில் உருவ அமைதியின்றி வடிவ பிரக்ஞையின்றி எழுதப்பட்ட பாரதியின் புனைகதைகள் சிறுகதை வரலாற்றில் கவனம் பெறவில்லை. 1905லேயே, அவர், ஷெல்லிதாஸ் என்ற பெயரில் சக்ரவர்த்தினியில் ‘துளஸீபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற புனைவை எழுதியிருந்தார். 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரதி புதுச்சேரியிலே வசித்தபோது, ‘ஆறில் ஒரு பங்கு ஓர் சிறிய கதை’ என்ற நூலைத் தன் சொந்த முயற்சியிலே மூன்றணா விலையுள்ள நூலாக வெளியிட்டார். அது 1911ஆம் ஆண்டு அரசு ஆணை ஒன்றின் மூலம் தடை செய்யப்பட்டது. இந்தக் காலகட்டத்திலெல்லாம் குளத்தங்கரை அரசமரம் சிறுகதை எழுதப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அவ்வகையில் உரைநடை இலக்கியத்திற்கு பாரதி ஒரு முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை.
பாரதி தமிழ் உரைநடை இலக்கியத்திற்கு மட்டும் முன்னோடியல்ல; இன்று நாம் சொல்லும் புதுக்கவிதைக்கும் அவனே முன்னோடி.
ஐரோப்பிய தேசங்களில் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் கவிதையியலின் புதிய பரிணாமம் பேசப்பட்டது. கவிதை என்பது இலக்கணத்தில் இருக்கிறதா? அது உணர்த்தும் அனுபவத்தில் இருக்கிறதா? என்ற விவாதங்கள் நடந்தன. இந்த விவாதம் வங்கத்துக்கு வந்தது. பின்னாளில் பாரதி வாரணாசிக்குக் கல்வி கற்கச் சென்றது அவர் மறுமலர்ச்சிக் கவிஞராக உருமாற ஒரு காரணமாக அமைந்தது. மறுமலர்ச்சிக் கவிஞர் என்பது உள்ளடக்கத்தில் மாற்றம் கண்ட கவிதைகளே அன்றி அது யாப்பையே அடிப்படையாகக்கொண்டிருந்தது. உள்ளடக்கத்தில் மாற்றம் கண்ட கவிதைகளையே பாரதி நவகவிதைகள் என்றார். மேலை கவிதையியலில் ஏற்பட்டுவந்த மாற்றத்தை பாரதி அறிந்திருந்தார். அதே சமயம் நவீனத்துவக் காலகட்ட மாற்றங்களையும் பாரதி உள்வாங்கியிருந்தார். நதிக்காகத்தான் கரையே தவிர கரைக்காக நதியில்லை என அக்காலத்தில் உணர்ந்த ஒரே தமிழ் கவிஞன் பாரதி.
வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் வழி பெற்ற கவிதையின் உள்ளடக்கம், மேலைக் கவிஞர்களின் கவிப்போக்கை நேர்முகமாகக் கண்ட அனுபவம், இவை இரண்டும் பாரதியாரை கவித்துவம் நோக்கி நகர வைத்தது. கவிதைக்குதான் இலக்கணம்; இலக்கணத்துக்குக் கவிதையல்ல என உணரத்தொடங்கினார். வால்ட் விட்மன் பாரதியின் முன்னோடி. அவர் பாதிப்பால் யாப்பற்ற ‘காட்சி’ கவிதையை எழுதினார். பாரதியார் அவற்றை வசன கவிதை என்றோ புதுக்கவிதை என்றோ எங்கும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
1930இல் பதிப்பிக்கப்பட்ட பாரதியார் கவிதைகளின் இரண்டாம் பதிப்பில்தான் ‘காட்சி’ கவிதைகள் இடம்பெற்றன. அதற்கு வசன கவிதை என்ற பெயரை வழங்கியது பதிப்பாசிரியராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாரதியார் விட்மன் பற்றி எழுதிய கட்டுரையில் ‘வசனமாகவே எழுதப்பட்ட கவிதை’ என்பதில் இருந்து அதைப் பெற்றிருக்கலாம். ஆனால் இதற்குத் தகுந்த தரவுகள் இல்லை. இவ்வகையில் தமிழில் யாப்பில் இருந்து விடுபட்ட நவீன பாணிக் கவிதை பாரதியிடமிருந்து தொடங்குகிறது.
நண்பர்களே, பாரதியாருக்கு பத்திரிகையாளர் எனும் முகம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பத்திரிகையாளனென்றால் இன்று தங்கள் சாதி மாநாடு கூட்டம் நடத்துகிறார்களே அந்த வகை பத்திரிகையாளர் அல்ல, தாங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களுக்காக வக்காலத்து எழுத்து எழுதி புரட்சியாளர்களாக மாற்றப்பட்டுள்ளார்களே அந்த வகை பத்திரிகையாளரும் அல்ல, மாதத்திற்கு ஒரு பத்திரிகைக்கு வேலை மாறி, பத்திரிகை கொள்கைகளுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறார்களே அப்படியான பத்திரிகையாளனும் அல்ல.
பாரதி பத்திரிகையாளன். மக்கள் விடுதலைக்காக எழுதிய பத்திரிகையாளன். எளிமையான முறையில் உயரிய கருத்துகளைச் சேர்க்க வேண்டுமென பத்திரிகை நடத்தியவன். அதனால்தான் அவனால் தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன்முறையாகக் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்த முடிந்தது. அந்தக் காலத்தில் அச்சு முறைக்கு அது மிகவும் சவாலானதுதான். ஆனால் பாரதி அதை நிறைவேற்றினான். அதுமட்டுமல்ல வாசகர்களின் வருமானத்திற்கு ஏற்ப பத்திரிகை சந்தாவை அவனைப்போல இன்றுவரை யாரும் அறிமுகப்படுத்தவில்லை.
நண்பர்களே உரையின் தொடக்கத்தில் பாரதியும் நம்மில் ஒருவன்தான் என்றேன்; அவனை வானில் எங்கோ உயர வைத்து வழிபடுவதுகூட அவனுக்குச் செய்யும் அநீதி என்றேன். ஆம்! பாரதி நம்மில் ஒருவன்தான், ஆனால் அவன் வாழ்ந்த வாழ்க்கை நம் வாழ்க்கையைப் போன்றது அல்ல. தான் இன்னும் நானூறு வருடங்களுக்குப் பின்னர் பிறக்க வேண்டியவர், முன்னால் தோன்றிவிட்டதாகச் சொல்கிறார். ஆனால் தன்னுடைய கருத்துகள் இன்னும் நானூறு வருடங்கள் கழித்து உலகம் ஒத்துக்கொள்ளும் என்றும் பாரதி பலமுறை சொல்லியதாக குவளை கிருஷ்ணமாச்சாரியார் எனும் பாரதியின் நெருங்கிய நண்பர் கூறுகிறார்.
பாரதி தன்னை நன்கு அறிந்து வைத்திருந்தார். சாதாரணமாக பிறந்து மடிந்துபோகும் எளிய மனிதன் தான் இல்லை என அவர் புரிந்துகொண்டதுதான் அவருக்கும் நமக்குமான வித்தியாசம். அதனால்தான் அவரால் நல்லதோர் வீணை செய்து அதை புழுதியில் எறியலாமா என பராசக்தியிடம் நெஞ்சுருகிக் கேட்க முடிந்தது. நம்மில் பலரால் அப்படிக் கேட்க முடிவதில்லை. நமது பிறப்பிற்கான அர்த்தம் நமக்கு தெரியாதவதை நம்மால் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ளவே முடியாது. அதுவரை இந்த உலகியல் வெற்றிகளும் திருமணம், குழந்தைப்பேறு முதலானவை நமது நிறைவாக நிலைக்கும்.
நண்பர்களே வரலாற்றில் வாழ்ந்த ஓர் பேராளுமை அதிகாரத்தால் ஒவ்வொருமுறையும் வீழ்த்தப்பட்டுக்கொண்டே இருந்தார். தான் கொண்ட எண்ணத்திலிருந்து நழுவாத ஒரு போராளியின் வீழ்ச்சி என்பதும் எழுச்சிதான்.
பாரதி தமிழர்கள் உள்ளளவும் வாழ்வான். எங்கெல்லாம் தூய சிந்தனைக்குத் தடை வருகிறதோ அங்கெல்லாம் அவன் தன் எழுத்துகளால் வாழ்க்கையால் சிந்தனையால் துணை நின்றுகொண்டே இருப்பான்.