நவீன்,
இரண்டு காரணங்களுக்காக இது குறிப்பிடத் தக்க சிறுகதை. ஒன்று பொருள் மயக்கம் வெளிப்பட்ட விதம், மற்றது திகில் அனுபவத்தை மீறி நிகழ்ந்த கண்டறிதல். நிஜம் கற்பனையும் எல்லைகளை அழித்துக் கொள்ளுதல் நம்முள் எங்கெங்கு நிகழ்கிறது எனப் பார்த்தால் ஆச்சரியப் படுவோம்.
கதை சொல்லியின் இளமை வதை மிக்கது, வீட்டிலும் வெளியிலும் அடியும் ரணமும் என பால்யம் கழிகிறது. ஒரு ஏக்க ஸ்ருஷ்டி தான் அவர் தம்பி. காக்கப் படாத அண்ணன் காக்கும் ஒரு தம்பி. ஒரு நிஜ இருப்பை போலவே அவன் வருகிறான். இது கதை சொல்லியின் கற்பிதம். பிளாக்காயன் மகன் மூளை வளர்ச்சி குன்றியவன். இது போன்ற நபர்களை திருவிழாவில் தொலைப்பது, தொலைவில் கொண்டு சென்று கைவிடுவது, கொன்று விடுவது என்பது நிகழ்வது தான். இந்த குற்ற உணர்வு பாறையாக அழுத்தும், அது பேயாக கண்முன் வந்து நிற்கும். கொல்லப் பட்ட பிளாக்காயன் மகன் நிஜ இருப்பாக வருகிறான் இது பிளாக்காயனின் குற்ற உணர்வு.
பிளாக்காயன் ஒரு கொடுங்கோலன். அவனால் அனுதினமும் கதைசொல்லி தாக்கப் படுகிறார். அவர் மறக்கவே விரும்புகிறார். ஆனாலும் அவன் முள்ளாக ஒரு நிஜ இருப்பாக வருகிறான் இது கதைசொல்லியின் அச்சம். கதைசொல்லியின் பேத்தி ஒரு இழந்த வசந்தம். அதை நீட்டிக்கவே கதைசொல்லி விரும்புகிறார், அவள் ஒரு நிஜ இருப்பாக வருகிறாள் இது கதைசொல்லியின் துக்கம்.
இந்த மாற்று மெய் நிகழ்வுகளில் ஒரு புதிர் உள்ளது, விளங்க இயலா மயக்கம் உள்ளது அதை இந்தக் கதை ஏந்தி உள்ளது. இதை விரித்துப் பார்த்தால் சமூக கூட்டுமனதின் வெளிப்பாடு தான் இந்த அமானுஷ்ய இருப்புகள். நமது கற்பிதம், குற்ற உணர்வு, அச்சம், துக்கம் என நினைவுகளில் இருந்து நமக்கு மீட்பில்லை. இந்த அருவமான சக்தியின் உருவ வெளிப்பாடுகள் கதைகளாக, தொன்மாமாக, நினைவுச் சின்னங்களாக நீடிக்கிறது. நாம் மறக்க விரும்பினாலும் இதன் பிடியில் இருந்து நமக்கு மீட்பில்லை.
வடிவமும் கைகூடிய கதை இது. நான்கு கதைகளுள் மூன்று கதை சொல்லலிலும், ஒன்று நிகழ்வாகவும் உள்ளது. இறுதியில் பேத்தியின் இருப்பு ஒரு திருப்பம் என்பதை மீறி நமது அகத்துள் செல்லும் பயணம் என ஆகிறது. இது ஒன்றினுள் ஒன்று சொருகப் பட்ட இரண்டு அடுக்கு சீன ஜாடி போல உள்ளது. அதாவது மூன்று கதைகள் ஒரு ஜாடி, முடிவில் பேத்தி வருவது அதை உள்ளிட்டு வைத்திருக்கும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இன்னொரு ஜாடி.
கிருஷ்ணன், ஈரோடு.
இக்கதை சில கதாமாந்தர்களைக் கொண்டு எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஒரு கதைக்குள் இன்னொரு கதையைக் கடத்தியுள்ளார். இக்கதையின் முகப்பைப் பார்த்தவுடன் இரவில் வாசிக்கக் கூடாது என்ற முடியுடன் அணுகினேன். கதையை வாசிக்கும் போது முகப்பின் காட்சியை நினைத்தால் புன்முறுவல் தோன்றியது. இக்கதையின் ஊடே பயணிக்கும் போது சிறுவர்களுக்கான உளவியலை தெளிவாகச் சித்தரித்துள்ளார். அடிவாங்கியே மரத்துப் போகும் கதைச்சொல்லியின் கதாபாத்திரம் சிறப்பாக உள்ளது. கதைச்சொல்லியுடன் பயணிக்கும் சிறுவர்களின் உலகை இக்கதையில் இயல்பாக இடம் பெற்றுள்ளது. பெரும்பாலான சிறுவர்கள் இரவு நேரத்தில் கதைக் கேட்கும் பழக்கம் உடையவராக உள்ளனர். இக்கதையில் அமுதரசியின் ஏக்கமும் அதுவாகவே உள்ளது. சிறுவர்களிடையே காணப்படும் குறும்புத்தனம் நகைக்கும் தன்மையை உடையனவாக இருக்கிறது. சான்றாக, ஆங்கில வகுப்பின் போது, சார் வெளியே மிதிவண்டியில் சென்றவுடன் சிறுவர்கள் விளையாட்டில் ஈடுபடும் தருணம். பிறகு அந்த விளையாட்டு சலித்த பின் பிளாக்காயன் வீட்டின் திரைச்சேலையைப் பயன்படுத்தி விளையாடும் காட்சியைப் படிக்கும் போது சிறுவர்களுக்கான இயல்பை உணர முடிகிறது.
பிளாக்காயனின் உடல் பெரு குறைந்த மகனின் ஏக்கம், கதைச்சொல்லியுடன் விளையாட முன் வரும் போது பல தருணங்களில் மனம் உடைபடுகிறது. தன் தந்தையின் மீது கொண்ட அதீத அன்பினால் அவரின் காலடியில் அமர்ந்திருக்கிறான். அவனின் எண்ணற்ற ஆசைகள் ஒரு போதும் நிறைவேறாமை உயிர் உடலை விட்டு தந்தையின் கையால் எடுக்கப்படுகிறது. இக்கதையில் பிளாக்காயனின் மகன் வருகை கதைச்சொல்லியின் தம்பிக்கு அச்சுறுத்தலை உண்டாக்குகிறது. அதே நேரத்தில் அவனின் தோற்றத்தால் பிளாக்காயன் வெறுப்படைகிறார்.
இக்கதையில் அச்சத்தை ஏற்படுத்தும் தருணமாகக் கருதப்படுவது பிளாக்காயன் இறப்புக்குப் பின் கதைச்சொல்லி அவரை ஒரு முறைக்கு இரு முறைக்கு அழைத்த பின் அவர் உரையாடும் தருணமாகும். கதைச்சொல்லியின் தலையைத் தன் மகன் வருடும் போன்ற காட்சிகளை வாசிக்கும் போது ஓர் ஐயம் எழுகிறது. கதைச்சொல்லி இறந்த பிளாக்காயன் மற்றும் அமுதரசியுடன் உரையாடும் கலத்தை வாசகனைச் சற்றுச் சிந்திக்க வைக்கிறது. கதைச்சொல்லித் தன் பேத்திக்காகக் கதைச் சொல்லும் வேளையில் இன்பத்தில் திலைத்திருக்கும் காட்சியை முழுமையாக உணர முடியாத வகையில் வாசிப்பவரின் எண்ணத்தை உடைத்தெறிகிரார் எழுத்தாளர். இறப்பைத் தழுவிய பேத்திக்காக உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வயதானவரின் ஏக்கத்தையும் காண இயல்கிறது. இறுதியாக, கதைச்சொல்லியின் சிறு வயதில் கண்ட அனுபவித்த துயரங்களும் வயதான பின் தன் பேத்தியுடன் வாழ்ந்த இன்பங்களும் மாறி மாறி வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.
புஷ்பவள்ளி. மலேசியா
வேம்படியான் கதையை வாசித்தேன் நவீன் . கதையில் எந்தவொரு கதை மாந்தர் புனைவு ,எவர் புனையப்படாதவர் என்பதை திரும்ப திரும்ப சிந்திக்க வைத்தது.
இந்த கதையை வாசித்தப்பின் மனைவி மற்றும் மகளிடம் உரையாடலின் பொழுது கூறினேன்.
தர்க்க அறிவு இப்படி இருக்க வாய்ப்பில்லை என்னும் நிலை வருவதற்கு முன்பாக கதையயை கேட்டு மெல்லிய திகில் உணர்வை அடைந்தார்கள், அப்போ அம்முவும் உண்மை இல்லையா என்று.
அதுவே இந்த கதையின் சிறப்பு என எண்ணுகிறேன். நன்றிகள் பல!
லங்கேஷ், சிங்கப்பூர்