அன்புள்ள அண்ணன் நவீனுக்கு,
பேய்க்கதைகள் விரும்பி படித்த காலக்கட்டம் ஒன்றிருந்தது. ஜேம்ஸ் லீயின் மிஸ்டர்.மிட்நைட் அத்தியாய வரிசை அதில் பிரதானம். திகிலுக்காகவும் மர்மம் வேண்டியும் புரட்டிய ஏடுகள் பெரும்பாலும் எதிர்ப்பார்த்ததை ஏமாற்றியதில்லை. காட்சி ஊடக வரிசையும் இதில் விதிவிலக்கன்று. நண்பர்களுடனான இரவரட்டையின் போதும் இத்தலைப்பு வந்துவிடுவதுண்டு. பக்கங்களுக்குள்ளிருந்தும் திரையொளிக்குள்ளிருந்தும் பேச்சொலிக்குள்ளிருந்தும் நகர்ந்து இடைமனவெளியில் அவற்றின் அந்தரங்கத் தொடர்ச்சியை பார்த்த, படித்த, கேட்ட மட்டில் உணராத நாளும் இல்லை.
புனைவு வாசிப்பின் அடுத்த படிநிலை அது கையாளும் பீடண வகை மாதிரிகள் அண்ணீர் சுரப்பினை ஏற்படுத்தும் அளவில் மட்டுமே போதாததாக இருப்பதை உணர்த்தி வருகிறது. திகிலும் மர்மமும் வசீகரமும் முதல் இணை கோடாக இருக்க, கதை தொடர்பான சிந்தனையதிர்வும் மீளியக்கி குறிப்பிட்ட தருணங்களை நெருங்கும் ஒளிப்படக்கருவித்தன்மையும் மற்றொரு இணை கோடாக இருக்க, புனைவுத்திறன் இவற்றிற்குத் துல்லியமான குறுக்குவெட்டி கோடு இழுப்பதிலே அதன் கோணமதிப்பு (புனைவின் வெற்றி) கூடி வருகிறது.
வேம்படியான் கதை திருப்பங்கள், திகில் போன்ற விருத்தாந்தங்களைக் கடந்து அது சுயத்தின் பற்று எல்லையோடு உரசிப்பார்க்கும் தருணம் முக்கியமானது. ஆம்ப்ரோஸ் பியர்ஸின் ‘The Boarded Window’ கதையில் மரணித்து விட்டதாக எண்ணி இறுதி சடங்கிற்காகக் கை கட்டப்பட்ட நிலையில் உள்ள மனைவியின் பல்லிடுக்குகளில் சிறுத்தையின் செவித்துண்டமொன்று காணக்கிடக்கும் இறுதி வரியுணர்த்தும் உயிரிச்சைக்கு நிகரானது கதைசொல்லி தாத்தாவின் மனவியக்கம்.
புறநெருக்கடிகளாலும் அழுத்தங்களினாலும் பாழ்படும் அகம் தன்னை மீட்டுக்கொள்ள இயல்பிலிருந்து விலகிய நடப்புகளை ஏற்கத் துவங்குகிறது. அது நிதர்சனமோ கற்பனையோ என்ற தர்க்கநிலைக்கு அப்பாற்பட்டு அது எதனால் முளைவிட்டது எனவும் அது எதனைச் சுற்றிப் படர்கிறது என்பதும் குவியமயம் பெறுதல் அவசியம். இறந்தவரின் முதல் திதியின் முன்னிரவிலிருந்து இதுவரை வீட்டினுள் நுழையாத குருவியினம் கூடடைந்த விதமாக அசையாது அமர்ந்த நிலையில் வீட்டிலுள்ளவர்களை அவதானிப்பதைப் போன்ற குழப்ப ஆறுதல்களை ஒத்ததே கதைசொல்லியான தாத்தா தன் சுயத்திற்கு ஏற்படும் இரணங்களை ஆற்றுப்படுத்த நுணுக்கமாகக் கலக்கும் பேய்மை பண்டுவம். கசந்து கசந்து நகரும் வாழ்வைக் கசப்பின்மையை எட்டும் வரம்பிற்குத் தாத்தா சென்றடைய முயல்கிறார். அதற்காக அவர் வேப்பங்கன்று நடுவதை விரும்பவில்லை. அவரே அனைத்திற்கும் வேப்பமரமாக இருக்க நினைக்கிறார்.
பி.கு: இந்தக் கதையை படித்து முடித்தவுடன் திருட்டுப் பயலே படத்தில் உள்ள நகைச்சுவை காட்சியொன்று நினைவிற்குச் சட்டென வந்தது. அதை வைத்து ஒரு மீம் செய்ய நினைத்ததன் விளைவாக…
ரேவின்
அன்பு நவீன். நலம் சூழ்க
வேம்படியான் சிறுகதையை வாசிக்க எடுத்து வைத்தேன். அலுவலில் தாமதமானது. இன்று ஜெயமோகன் தளத்தைப் பார்த்தவுடன் உடனே அங்கிருந்து உங்கள் கதைக்கு ஒரு ஜம்ப்.
எப்போதும் போல நல்ல சிறுகதை கொடுத்துவிட்டீர்கள். ஒரு வாசிப்பில் பேய்க்கதையாகவும் இன்னொரு சிறுகதையில் உளவியல் சிறுகதையாகவும் வாசித்தேன். காலம் முழுக்க கசப்பில் வாழும் தாத்தாவுக்கு இனிமையான அமுதவரசி ஒரு வரம். அவர் அவளைச் சாக விட மாட்டார். அவளை மட்டுமல்ல, தனது தம்பியை, பிளாகாயன் மகனை, பிளாகாயனை இன்னும் யாரையுமே அவர் சாக விடப்போவதில்லை.
காரணம் அவர்தான் வேம்படையான். அவர் மூதாதையர்கள் நட்டு வைத்த வேம்பின் தொடர்ச்சி. குலத்தின் எல்லா கசப்புகளையும் இனிப்பாக்க அவரது கனவுகளால் மட்டுமே முடியும்.
ராம்
மலேசியாவில் எழுத்தாளர் மு.அன்புச்செல்வன் அவர்களின் ‘விழித்திருக்கும் ஈயக்குட்டை’ சிறுகதை தொகுப்புக்கு பிறகு மர்மக்கதைகள் அல்லது அமானுஷ்ய கதைகள் வாசிக்கக் கிடைப்பது அரிதிலும் அரிது.
நம் மலேசியாவில் மூன்று இனங்களுக்கு இடையே அமானுஷ்ய கதைகள் நிறைந்து கிடைக்கின்றன. ஒவ்வொரு இனத்தவர்கள் இடையே ஆவிகள் அல்லது பேய் கதைகள் பல உள்ளன. மலாய்காரர்களின் ‘பொந்தியானாக்’ , ‘போச்சோங்’, சீனர்களின் ‘கூய்’ (Gui) மற்றும் தமிழர்களின் ‘மோகினி’ ‘பூச்சாண்டி’, ‘குட்டி சாத்தான் பற்றிய அமானுஷ்ய கதைகள்
உள்ளன. சிலர் இவர்களை வணங்குகிறார்கள் பலர் அச்சம் கொள்கிறார்கள்.இப்பட்டியலில் வேம்படியானும் இக்கதையின் மூலம் சேர்ந்துக்கொண்டார்.
திரு.ம.நவீனின் ‘வேம்படியான்’ சிறுகதை அவரின் மற்றுமொரு மர்மக்கதை. எமுத்தாளரின் மொழியறிவும் கதைச்சொல்லும் பாணியும் வாசகர்களை கதைக்குள் இழுத்துச் செல்கிறது.மேலும், எழுத்தாளரின் கன்னி,பூனியான்,பேய்ச்சியை வாசித்தவர்களுக்கு இப்படைப்பு ஓர் இனிப்பு.
தற்கால இலக்கியத்தில் சமூகவியல், உளவியல்,நவீனத்துவம்,பின்நவீனத்துவம் போன்ற தீவிர வாசிப்புக்கு இடையே மர்மக்கதை மற்றும் அமானுஷ்ய கதைகளும் வாசகர்களுக்கு ஓர் உயிர்ச்சத்தாகும்.
நலவேந்தன் வே.ம.அருச்சுணன்