வேம்படியான் : கடிதங்கள் 2

வேம்படியான் சிறுகதை

வணக்கம். கதையைப் படித்துவிட்டேன். பிறருக்கு சிரிக்கச்சிரிக்க சொல்கிற கதையை துயரத்துடன் அசைபோட்டுப் பார்க்கும் தருணமே வாழ்வில் மிகப்பெரிய துரதிருஷ்டமான தருணம். அந்த பலவீனமான தருணம் இல்லாததை இருப்பது போலவும் இருப்பதை இல்லாததுபோலவும் மாற்றிவிடுகிறது. மீட்சி அடைய விரும்பாத மனம் ஒரு கட்டத்தில் அதிலேயே திளைக்கத் தொடங்கிவிடுகிறது. நல்ல கதை. வாழ்த்துகள்.

பாவண்ணன்

பேய் கதைகள் படிப்பது என்னமோ ஒரு வகை சுவாரஸ்யம் தான் நவீன் சார். கதை பிரசுரமான போதே படிக்க வேண்டுமென்று இருந்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். அதிகாலை 4 மணிக்கு வாசித்தேன். இரவு முழுவதும் தூக்கமில்லை. இரவு நேரத்தில் நடை செல்லும் பழக்கமிருக்கிறது. இரவு என்றால் பின்னிரவு 2 மணியளவில். உப்சி தஞ்சோங் மாலிம் கொஞ்சம் அடர் சூழ் காட்டு பகுதி தான். தூக்கம் வராமல், ஹாஸ்டல் கீழிறங்கி நடக்க தொடங்கினேன். நடந்து சென்றுக் கொண்டிருக்கும் பொழுது யாரோ பின் தொடர்வது போன்ற உணர்வு. பொதுவாக கொஞ்சம் துணிச்சல் மிக்கவன் நான். பேய் நம்பிக்கை எல்லாம் இருக்கிறது. ஆனால் அதன் மேல் பயமில்லை. யாரோ பின் தொடர்வதை உணர்ந்து சற்றே நின்று திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. அருகே ஆறு கூட பேரமைதியோடு ஓடிக் கொண்டிருந்தது. இருளில் ஆற்றை நோக்கிய பொழுது ஒரு பொருளும் விழிகளுக்கு துலங்கா இருட்டு. திரும்பி நடக்கலாம் என்று எத்தனித்த பொழுது ஆற்றில் எதுவோ அசையும் சத்தம். யாரோ நிற்பது போல பிம்பம். கொஞ்ச தூரம் நடந்து சென்று மீண்டும் திரும்பி பார்த்தேன். இருட்டுக்கு கண்கள் பழகி எல்லாம் தெரியத் தொடங்கியது. யாரோ அங்கே மீன் பிடித்து கொண்டிருப்பது போல் தோன்றியது. நெருங்கி சென்று பேசலாம் என்று எண்ணினேன். அப்பொழுது ஏனென்று அறியாமல் வேம்படியான் கதையின் அட்டை படம் நினைவில் தோன்றி, ஹாஸ்டல் வந்தடைந்து வாசிக்க ஆரம்பித்தேன். 

ஹாஸ்டலில் யாருமில்லை. நானொருவன் தான். எல்லாம் விடுமுறையால் அவரவர் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள். தனிமையில் தான் வாசிக்க வேண்டும். பேய் கதை அப்பொழுது தான் சூடு பிடிக்கும். அதனால்தான் கதையை இத்தனை நாள்  வாசிக்கவில்லை என்னவோ. வேம்படியான், பிளாக்காயன் என்ற பெயர்கள் எல்லாம் எனக்கு புதிதாய் தோன்றின. கதை சொல்லியாக தாத்தா. கதை கேட்கும் அம்மு. பயமூட்டும் பிளாக்காயன். அவனோடு சுற்றி திரியும் அந்த அழுக்கு சிறுவன். அடிவாங்கும் சிறுவனாக கதை சொல்லி, வெளிறிப் போகும் அவன் தம்பி என்று கதை படிக்கும் பொழுது கதை சொல்லிப் போல் நானும் சிறுவனாகி விட்ட உணர்வு. பேய் கதைகளுக்கு அப்படி ஒரு தன்மை இருக்கிறது. இன்று வரை எனக்கு மிக பிடித்தமான சினிமா என்றால் அது பேய் படங்கள் தான். இரவில் தனியே பேய் படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம். பெரும்பாலும் தனியாக தான் பார்ப்பேன். ஓரிரு முறை நண்பர்களோடு பார்த்ததுண்டு. படம் முடிந்து நான் நிம்மதியாய் தூங்குவதை அவர்கள் வித்தியாசமாய் பார்பதுண்டு. என்னை அவர்கள்  இவன் psychopathஆக இருப்பானோ என்று கூட பேசக் கேட்டிருக்கிறேன். இன்று வரை ஏனென்று தெரியவில்லை. அது போலவே பேய் கதைகள் வாசிப்பதிலும் ஆர்வம் அதிகம். சிறு வயதில் வாசித்த, Mr. Midnight மற்றும் Rusell Leeயின் Singapore True Ghost Stories எல்லாம் எண்ணிலடங்கா கற்பனைகளை என்னுள் வளர்திருக்கின்றன.

கதை சொல்லும் அந்த தாத்தாவை வாசிக்கும் பொழுது, என் சிறுவயது காலத்தை நினைவு கூர்ந்தேன். பள்ளி செல்வதற்கு, பள்ளி வேன் வரும் வரை காத்திருக்கும் பொழுது நண்பர்களிடம் எத்தனையோ பேய் கதைகள் சொல்லியிருக்கிறேன். அது எல்லாம் எங்கோ படித்தது தான். சில எனக்கு உண்மையில் நடந்திருக்கும். பல கதைகள் அள்ளி விட்டவை தான். அது எனக்கே நடந்தது போல் அவர்களிடம் சொல்லும் பொழுது அவர்கள் கண் விரிந்து வாய்ப் பிளந்து கேட்பதை இப்பொழுது நினைத்தால் அசடு வழிகிறது. பெரும்பாலும் நம்பியிருப்பார்கள். ஆனால் வேம்படியான் வாசிக்கும் பொழுது ஒரு கேள்வி தோன்றி சிந்திக்க வைத்தது. மிக முக்கியமான கேள்வி. நான் ஏன் அவ்வாறு இல்லாத ஒரு கதையை அவர்களிடம் நடந்தது போல் சொல்லிக் கொண்டிருந்தேன்? ஏன் அவர்களின் கவனத்தை என் பால் செலுத்திக் கொண்டிருந்தேன்? அது ஒரு வகை attention seeking என்பது போல் இப்பொழுது தோன்றியது. அந்த வயதில் அவ்வாறு ஒரு உணர்வு இருப்பது இயல்பு தான். ஆனால் அதை மீறிய ஒரு விசை என்னை உந்தி தள்ளியிருக்கிறது. எங்கோ நான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்றொரு மிதப்பு எனக்கு இருந்திருக்கிறது. அது மிதப்பு தானா, அல்லது அன்று ஆழ் மனதில் அனுபவித்த ஏக்கத்தின், தனிமையின் வெளி பிரதிபலிப்பா என்றொரு உளவியல் கேள்வி அது. சிலமுறை தனியே நின்று பேசியும்  இருக்கிறேன். பேய்கள் என் கண்களுக்கு புலப்படுகிறது என்றொரு ஆழமான நம்பிக்கை எனக்கு அப்பொழுது இருந்தது. அதை மற்றவர்களும் நம்பினார்கள். என்னுடன் தொடர்ந்து உரையாடல்களில் ஆன்மாக்களும் பேய்களும் இருந்துக் கொண்டிருகின்றன என்ற நம்பிக்கை, என்னுள்  அவ்வாறு பல கற்பனை கதைகளை உருவாக்கியிருக்கிறது.

கதையில் வரும் தாத்தா அப்படியே சிறு வயதில்  நான் தான். யாரும் இல்லாத பொழுது எனக்கே நான் கதை சொல்லி கொள்ளும் ஆள். அவர் உண்மையில் பேயோடு தான் பேசிக் கொண்டிருந்தாரா? அவருடைய சிறு வயதில் பார்த்த பிளாக்காயன் தொடங்கி, அவருடைய வீட்டில் திரியும் அழுக்கு சிறுவன், சொந்த தம்பி, பிறகு முதுமையில் சொந்த பேத்தி, எல்லாம் கற்பனையா, அப்படி ஒருவரும் இல்லையா? அம்மு இறந்து போனதால் அவர் அப்படி பேசிக் கொண்டிருப்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் சிறு வயதில் ஏன் அப்படி அவர் நடந்துக் கொண்டார்? எது அவரை அவ்வாறு சூட்சும உருவங்களை நினைக்க தூண்டியது? பிறகு அதுவே அவரின் கடைசி காலம் வரைக்கும் துரத்தி வந்திருக்கிறது. இது பேய் கதையையும் மீறி எனக்குள் உளவியல் பார்வையை சற்றே கூர் அடைய செய்திருக்கிறது. கதைச் சொல்லியாக என்னை உணர்கையில் ஏற்படும் எண்ணமாக கூட இது இருக்கலாம். எங்களை எது அப்படி உந்து தள்ளியது? தனிமையா, சிறு வயதிலே பெற்றோரிடமிருந்த விலக்கமா? அல்லது உண்மையில் அவை பேய்கள் தானா? இப்பொழுது சிரித்துக் கொள்கிறேன். ஆனால் அந்த கேள்வி இன்னமும் தொக்கி தான் நிற்கிறது.

கதை வாசித்து முடித்தவுடன், முன்பு பார்த்த அந்த ஆற்றின் கரையில் யார் தான் மீன் பிடித்திருப்பார்கள் என்றொரு எண்ணம் தோன்றி, செருப்பை மாட்டி மீண்டும் கீழிறங்கி வந்தேன். ஆறு இப்பொழுதும் பேரமைதியோடு சென்றுக் கொண்டிருந்தது. அந்த உருவம் அங்கே தான் நின்றுக் கொண்டிருந்தது. நெருங்கி சென்று பார்த்தேன். நான் நடந்து வருவதில் நிச்சயம் கால் தட ஒலி எழுந்திருக்கும். ஆனால் அந்த உருவம் திரும்பவே இல்லை. எட்டி நிற்கையில், வயதான உருவம் போலிருந்தது. அதையும் தாண்டி முன் செல்ல வில்லை. மெய்ப்பு உண்டாகியது. பிளாக்காயன் நினைவுக்கு வந்தார். அழுக்குச் சிறுவன் எங்கயாவது இருக்கிறானா பார் என்று மனம் சொல்ல கண்கள் அலைமோதியது. அவன் அங்கு இல்லை. மெல்ல புன்னகைத்துக் கொண்டேன். திரும்பி நடக்கையில், தூரத்தில் ஒரு சிறுவன் சிரிப்பது போன்ற ஒலி. மிக மிக தூரத்தில். கதையில் வந்த அழுக்கு சிறுவன் மிக அருகிலே தெரிவது போலிருந்தது. ஹாஸ்டல் வந்து, மெத்தையில் படுத்த பொழுது, ஓடி வந்ததால், நெற்றியில் வலிந்த வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டேன்.

சர்வின் செல்வா 

பிளாக்காயன் உயிரோடு  இருக்கும் போது இல்லாத அந்தக் கனிவு பார்வை, இறந்ததற்கு அப்புறம் தெரிவதும், மனுசனா இருக்கற வரைக்கும் இல்லைங்கறதும் பேயிக்கு இருக்குற அந்த கனிவு இன்னைக்கு கூடவே இருக்கற… பழகற உறவுகள் கிட்ட இல்லையேன்னு நினைக்கும் போது பேயை விட மனிதர்கள்கிட்டதான் பயம் அதிகமா இருக்கு.

பாவம் அந்த தாத்தாவை அவர் அப்பா இடைவாரில் எவ்வளவு வருடியிருக்கார். இருக்கற யாருகிட்டயும் சொல்ல முடியாத. அவர் கதயை இல்லாத அம்முகிட்ட இல்ல சொல்லி இருக்கார். எனக்கு இது ஒரு பேய் கதைன்னு பாக்கறதை விட உள பிறழ்வு பட்ட ஒருவரின் விரக்தியின் விளைவாகதான் பாக்க தோணுது. அருமை.

செந்தில்

(Visited 60 times, 1 visits today)